இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு, வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றமில்லாமல் 5.25% என்ற அளவிலேயே ஏன் வைத்துள்ளது? - பிரியா குமாரி சுக்லா

 இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) பணவியல் கொள்கைக் குழு (Monetary Policy Committee (MPC)), கடந்த புதன்கிழமை அன்று தனது முக்கிய வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தை எவ்வித மாற்றமும் இன்றி 5.25 சதவீதம் என்ற அளவிலேயே நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.


முக்கிய அம்சங்கள்:


• மேற்கு ஆசியா போரினால் ஏற்பட்டுள்ள பொருளாதார அபாயங்கள், விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகிய இரண்டிலுமே நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்காவும் ஈரானும் இரண்டு வார கால போர்நிறுத்தத்திற்குச் சம்மதித்த போதிலும், இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, மிகவும் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளபட்ட நடவடிக்கை என்பதை உணர்த்துகிறது.


• ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், தற்போதைய போர்நிறுத்த நடவடிக்கை பணவியல் கொள்கை முடிவில் (Monetary Policy Decision) ஓரளவிற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது என்றும், அதன் முழுமையான தாக்கம் குறித்துப் பின்னரே தெரியவரும் என்றும் தெரிவித்துள்ளார்.


• ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மூடியதைத் தொடர்ந்து, இந்தப் போரினால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததுடன் எரிசக்தி விநியோகமும் பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக, உற்பத்திச் செலவுகள் அதிகரித்தன, விநியோகச் சங்கிலியில் நெருக்கடி ஏற்பட்டது மற்றும் பல்வேறு தொழில்துறைகளில் மூலப்பொருட்களின் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.


• ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டிருந்தாலும், வளைகுடா நாடுகளில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகளின் நிலை குறித்து இன்னும் சிக்கல்கள் நீடிப்பதாகக் கூறப்படுகிறது.


• இந்திய ரிசர்வ் வங்கி (RBI), தனது பொருளாதார வளர்ச்சி மற்றும் விலைவாசி உயர்வு தொடர்பான கணிப்புகளில் பயன்படுத்திய சில முன்முடிவுகளை தற்போது மாற்றியமைத்துள்ளது.


• பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் கடன் வாங்கியவர்களுக்கு, வட்டி விகிதத்தை 5.25 சதவீதம் என்ற அளவிலேயே வைத்திருப்பது ஒரு ஆதரவை வழங்குகிறது. இந்திய ரிசர்வ் வங்கி, தனது ரெப்போ விகிதத்தை (Repo Rate) மாற்றாமல் அப்படியே வைத்திருக்கும்போது, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் பொதுவாகக் குறுகியகாலத்திற்கு அதிகரிக்க வாய்ப்பில்லை என்கின்றனர். இதன் விளைவாக, வீடு, வாகனம், தனிநபர் தேவைகள் மற்றும் சிறு முதல் பெரு நிறுவனங்கள் வரை வாங்கிய கடன்களுக்கான மாதாந்திரத் தவணை தொகையில் மாற்றமிருக்காது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். அதேபோல், வங்கிகளில் வரவு வைக்கப்பட்டுள்ள சேமிப்புத் தொகைகளுக்கான வட்டி விகிதங்களும் தற்போதைக்கு மாறாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





உங்களுக்குத் தெரியுமா?


• பணவியல் கொள்கை (Monetary Policy) என்பது முக்கியமாக ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் பணப்புழக்கம் மற்றும் அதன் வட்டி விகிதங்கள் ஆகியவற்றை நிர்வகிப்பதாகும். இந்திய ரிசர்வ் வங்கியின்கீழ் இயங்கும் பணவியல் கொள்கைக் குழு (MPC) இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூடி நாட்டின் பொருளாதார நிலையை ஆய்வு செய்கிறது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், பணவீக்கத்தை ஒரு நிலையான அளவில் வைத்திருக்கவும், இந்த அமைப்பு 'ரெப்போ விகிதத்தை' (Repo Rate) மாற்றியமைக்கலாம். 'ரெப்போ விகிதம்' என்பது வணிக வங்கிகளுக்குத் தேவைப்படும் கடனுக்காக ரிசர்வ் வங்கி வசூலிக்கும் வட்டி விகிதம் ஆகும்.


• ரெப்போ விகிதம்: ரெப்போ விகிதம் என்பது பணப்புழக்கச் சீரமைப்பு வசதியின்கீழ் (Liquidity Adjustment Facility (LAF)), அரசு மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்டப் பத்திரங்களை அடமானமாகப் பெற்றுக்கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமாகும்.


• விளிம்புநிலை நிரந்தர வசதி விகிதம்: வங்கிகள் தங்களின் பண நெருக்கடியைச் சமாளிக்க இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து (RBI) ஒரே இரவில் அவசரமாகக் கடன் பெறும் வசதியாகும். வங்கிகள் தங்களிடம் உள்ள சட்டப்பூர்வ பணப்புழக்க விகித (Statutory Liquidity Ratio (SLR)) இருப்பில் ஒரு பகுதியை (2% வரை) பிணையாக வைத்து இந்தத் தொகையைப் பெறலாம் என்கின்றனர். இது வங்கி அமைப்பில் எதிர்பாராத பணத் தட்டுப்பாடு ஏற்படும்போது ஒரு பாதுகாப்பு அம்சமாகச் செயல்படுகிறது. இந்த விளிம்புநிலை நிரந்தர வசதி வட்டி விகிதமானது, வழக்கமான ரெப்போ (Repo) விகிதத்தைவிட 25 அடிப்படைப் புள்ளிகள் (0.25%) கூடுதலாக, அதாவது ஒரு அபராத வட்டியாகவே நிர்ணயிக்கப்படுகிறது.


• தலைகீழ் ரெப்போ விகிதம்: வங்கிகளிடம் இருக்கும் உபரி பணத்தை (Liquidity) இந்திய ரிசர்வ் வங்கி பெற்றுக்கொள்ளும்போது, அதற்குப் பதிலாக வங்கிகளுக்கு வழங்கும் வட்டி விகிதம் ஆகும். இதற்கு ஈடாக, தகுதியுள்ள அரசுப் பத்திரங்கள் பிணையாகப் பயன்படுத்தப்படுகின்றன. நிலையான வைப்பு வசதி (Standing Deposit Facility) அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்த நிலையான வட்டி விகிதத்திலான 'தலைகீழ் ரெப்போ' நடவடிக்கைகள், ரிசர்வ் வங்கியின் விருப்பப்படி, தேவைப்படும் குறிப்பிட்ட நோக்கங்களுக்காக மட்டுமே நடத்தப்படும் என்கின்றனர்.


Original article : Why RBI Monetary Policy Committee (MPC) left the repo rate, unchanged at 5.25%? -Priya Kumari Shukla

Share: