கிகாலி திருத்தம் என்பது என்ன? - பிரியா குமாரி சுக்லா

 புவி வெப்பமயமாதலுக்குக் காரணமான ஹைட்ரோபுளோரோகார்பன் (Hydrofluorocarbons (HFCs)) உற்பத்தியைப் படிப்படியாகக் குறைப்பதற்கான சர்வதேச ஒப்பந்தங்களுக்கு ஏற்ப, இந்திய அரசு ஒரு முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, 2027-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதிக்குப் பிறகு, புதியதாகவோ அல்லது கூடுதலாகவோ ஹைட்ரோபுளோரோகார்பன் (HFC) உற்பத்தியைத் தொடங்குவதற்கான 'சுற்றுச்சூழல் அனுமதிகளை' வழங்க வேண்டாம் என்று அனைத்து மாநில மற்றும் ஒன்றிய அரசு அதிகாரிகளுக்கும் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.


முக்கிய அம்சங்கள்:


• விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவுக்கு முன்னதாக விண்ணப்பிப்பவர்கள், தங்களுடைய தொழிற்சாலை முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்து, டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி, 2027-ஆம் ஆண்டு அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ உற்பத்தியைத் தொடங்கிவிடும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் ஒரு உறுதிமொழிப் பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.


• இது தொடர்பாக, சுற்றுச்சூழல் அமைச்சகம் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதியன்று ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. இந்த வழிகாட்டுதல் மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையங்களுக்கும் (State Level Environment Impact Assessment Authorities (SEIAA)) மற்றும் ஒன்றிய அளவிலான நிபுணர் மதிப்பீட்டுக் குழுக்களுக்கும் (Expert Appraisal Committees (EAC)) அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


• ஒன்றிய அமைச்சகத்தின் குறிப்பாணைப்படி, ஓசோன் படலத்தைச் சிதைக்கும் பொருட்கள் தொடர்பான (Ozone Depleting Substances Rules, 2000) 2000-ஆம் ஆண்டு விதிகளில் திருத்தம் செய்வது போன்ற முறையான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மூலம், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வாயுக்களைக் குறைக்கும் இலக்குகள் செயல்படுத்தப்படும் என்கின்றனர். இது கிகாலி திருத்தத்தின்கீழ் (Kigali Amendment) உள்ள ஹைட்ரோபுளோரோகார்பன் (HFC) குறைப்பு கால அட்டவணைக்கு ஏற்ப அமையும் என்றும் கூறப்படுகிறது. மேலும், ஜனவரி மாதம் 1-ஆம் தேதி, 2028 என்ற 'கட்டுப்பாட்டுத் தேதிக்கு' பிறகு, கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாடுகளுக்காக ஹைட்ரோபுளோரோகார்பன் உற்பத்தித் திறனைப் புதிதாக உருவாக்குவதையோ அல்லது விரிவாக்கம் செய்வதையோ தடை செய்யவும், ஹைட்ரோபுளோரோகார்பன் உற்பத்தியை அனுமதிப்பதற்கான ஒரு பொருத்தமான கட்டமைப்பை உருவாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


உங்களுக்குத் தெரியுமா?


• 1989-ஆம் ஆண்டின் மான்ட்ரியல் ஒப்பந்தம் (Montreal Protocol) என்பது வளிமண்டலத்தின் மேல் பகுதியில் உள்ள ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது. இது ஆரம்பத்தில் பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கருவியாகக் கருதப்படவில்லை. குளிரூட்டும் வசதி மற்றும் குளிர்சாதனப் பெட்டி (Refrigeration) தொழிற்சாலைகளில் முன்பெல்லாம் பயன்படுத்தப்பட்டு வந்த குளோரோபுளோரோ கார்பன்கள் (Chlorofluorocarbons (CFCs)) உள்ளிட்ட சில வேதிப்பொருட்கள், வளிமண்டலத்தின் மேலடுக்கில் உள்ள ஓசோன் படலத்தைச் சேதப்படுத்துவது கண்டறியப்பட்டது. (அதனைத் தடுக்கவே இந்த ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டது).


• மான்ட்ரியல் ஒப்பந்தம், குளோரோபுளோரோகார்பன்கள் (CFCs) மற்றும் ஓசோன் படலத்தைச் சிதைக்கும் பிற வேதிப்பொருட்களை முழுமையாகப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று ஆணையிட்டது. கடந்த முப்பது ஆண்டுகளில் இந்த இலக்கை அந்த ஒப்பந்தம் வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.


• குளோரோபுளோரோகார்பன்கள் (CFCs) படிப்படியாகப் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டன. முதலில் சில இடங்களில் அவற்றுக்குப் பதிலாக ஹைட்ரோ-குளோரோ-புளோரோ-கார்பன்கள் (Hydrochlorofluorocarbons (HCFCs)) பயன்படுத்தப்பட்டன; இறுதியில் ஓசோன் படலத்திற்கு மிகக்குறைந்த பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும் ஹைட்ரோ-புளோரோ-கார்பன்கள் (HFCs - Hydrofluorocarbons) பயன்பாட்டிற்கு வந்தன. இந்த ஹைட்ரோ-புளோரோ-கார்பன்களிலிருந்து  ஹைட்ரோபுளோரோகார்பன்  (HFCs) பயன்பாட்டிற்கு  மாறும் செயல்முறை, குறிப்பாக வளர்ந்துவரும் நாடுகளில் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.


• இந்தியா 1989-ஆம் ஆண்டின் மான்ட்ரியல் ஒப்பந்தத்தில் (Montreal Protocol) ஒரு அங்கமாக உள்ளது. இந்த ஒப்பந்தம், குளோரோபுளோரோ கார்பன்களின் (CFCs) பயன்பாட்டைப் படிப்படியாகக் குறைத்து, 2010-ஆம் ஆண்டிற்குள் முழுமையாகத் தடை செய்வதன் மூலம் ஓசோன் படலம் பாதிக்கப்படுவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டது. மேலும், 2021-ஆம் ஆண்டில் இந்தியா கிகாலி திருத்தத்திற்கும் (Kigali Amendment) ஒப்புதல் அளித்தது. இது 2016-ஆம் ஆண்டு ருவாண்டாவின் கிகாலி நகரில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. குளோரோபுளோரோ கார்பன் (CFC) வாயுக்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டுவரும் ஹைட்ரோபுளோரோ கார்பன்களின் (HFCs) பயன்பாட்டையும் படிப்படியாகக் குறைப்பதை இந்தத் திருத்தம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


• ஜனவரி மாதம் 1-ஆம் தேதி, 2028-ஆம் ஆண்டு முதல் ஹைட்ரோபுளோரோகார்பன் (HFCs) பயன்பாட்டைக் குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இதன் அடிப்படையில், 2032-ஆம் ஆண்டிற்குள் 10 சதவீதமும், 2047-ஆம் ஆண்டிற்குள் 85 சதவீதம் வரையிலும் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 2028-ஆம் ஆண்டு முதல் இந்தத் தயாரிப்புக் கட்டுப்பாடு அமலுக்கு வருவதால், சர்வதேச வாக்குறுதிகளை நிறைவேற்ற ஹைட்ரோபுளோரோகார்பன் (HFC) உற்பத்தியைக் கட்டுப்படுத்தி படிப்படியாகக் குறைக்கும் ஒரு வலுவான கட்டமைப்பு அவசியம் என்று அரசு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி, 2027-ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிய ஹைட்ரோபுளோரோகார்பன் (HFC) உற்பத்தி ஆலைகளுக்கு அனுமதி அளிக்கப்படாது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.


Original article : What was the Kigali Amendment? -Priya Kumari Shukla

Share: