குறைந்துவரும் குழந்தை பாலின விகிதம், அமைப்புரீதியான பாலினப் பாகுபாடு: கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிவதை இந்தியா ஏன் தடை செய்தது? -சதாஃப் மோடக்

 கருத்தரிப்புக்கு முந்தைய மற்றும் பிறப்புக்கு முந்தைய பாலினக் கண்டறிதல் தொழில்நுட்பத் தடைச் சட்டத்தின்கீழ் (Pre-Conception and Pre-Natal Diagnostic Techniques Act (PCPNDT Act)) தாக்கல் செய்யப்பட்ட ஒரு மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தபோது, உச்சநீதிமன்றம் இந்தச் சட்டத்தின் வரலாற்றுப் பின்னணியை உற்று நோக்கியது. இந்தச் சட்டம், கருத்தரிப்பதற்கு முன்போ அல்லது கருத்தரித்த பின்புக்கோ பாலினத்தைத் தேர்ந்தெடுப்பதைத் தடை செய்கிறது.      மேலும், பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிவதற்காக மகப்பேறுக்கு முந்தைய கண்டறியும் தொழில்நுட்பங்களைப் (Pre-natal diagnostic techniques) பயன்படுத்துவதைத் தடுக்கிறது.



மகாராஷ்டிராவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், தனக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை ஜூன் மாதம் 11-ஆம் தேதி  நிராகரித்தது. இந்த வழக்கு, கருத்தரிப்புக்கு முந்தைய மற்றும் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைத் தீர்மானிப்பதைத் தடுக்கும் சட்டத்தின்கீழ் (PCPNDT Act, 1994) பதிவு செய்யப்பட்டது. இந்தச் சட்டத்தின் வரலாறு மற்றும் இந்தியாவில் பல பகுதிகளில் நிலவும் பாலின விகிதக் குறைபாடு போன்ற முக்கியப் பிரச்சினைகளை நீதிமன்றம் ஆய்வு செய்தது. புள்ளிவிவரங்களின்படி, பாலின விகிதத்தை மேம்படுத்துவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், இன்னும் முழுமையடையாமலும், அனைத்து இடங்களிலும் சமமாக இல்லாமலும் இருப்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.


பெண் சிசுக்கொலையை ஒழிப்பதற்கான ஒரு சிறப்புச் சட்டம்.


1981 மற்றும் 1991-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், இந்தியாவின் குழந்தைகள் பாலின விகிதம் (Child sex ratio) 962-லிருந்து 945-ஆகக் குறைந்தது. ஏறத்தாழ இதே காலகட்டத்தில்தான், ‘Ultrasound’ எனப்படும் ஸ்கேன் தொழில்நுட்பம் பரவலாகக் கிடைக்கத் தொடங்கியது. பிறப்பதற்கு முன்பே குழந்தையின் பாலினத்தைக் கண்டறிய இந்தத் தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, கருத்தரிப்புக்கு முந்தைய மற்றும் பிறப்புக்கு முந்தைய பாலினக் கண்டறிதல் தொழில்நுட்பத் தடைச் சட்டம் (PCPNDT Act) நிறைவேற்றப்பட்டது. பிறக்கப்போகும் குழந்தை பெண் குழந்தை என்பதை அறிந்து, குடும்பத்தினர் அல்லது சமூகத்தின் வற்புறுத்தல் காரணமாகப் பெண் சிசுக்கொலை (Sex-selective abortion) செய்வதைத் தடுப்பதற்காக, பிறப்புக்கு முந்தைய பாலின நிர்ணயத்தை இந்தச் சட்டம் சட்டவிரோதமாக்கியது.


பல நாடுகள் பிறப்பதற்கு முன்பே குழந்தையின் பாலினத்தை அறிந்துகொள்ள அனுமதிக்கின்றன, ஆனால் பாலினத்தின் அடிப்படையிலான கருக்கலைப்பை மட்டுமே தடை செய்கின்றன. மாறாக, இந்தியச் சட்டம் இவை இரண்டையுமே தடை செய்கிறது.




கருத்தரிப்பதற்கு முன்பும் சரி, பின்பும் சரி பாலினத்தைத் தேர்ந்தெடுப்பதை இந்தச் சட்டம் தடை செய்கிறது. இந்த ஸ்கேன் பரிசோதனைகள் (Prenatal diagnostic techniques) குழந்தையின் மரபணு குறைபாடுகள் அல்லது வளர்சிதை மாற்றக் கோளாறுகளைக் கண்டறிவதற்காக மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.           கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிய இவற்றைப் பயன்படுத்தக் கூடாது. கர்ப்பகால ஸ்கேன் செய்யும் ‘Ultrasound’ கிளினிக்குகளுக்குக் கட்டாயப் பதிவு உட்பட பல விதிமுறைகளை இந்தச் சட்டம் முதன்முதலாக அறிமுகப்படுத்தியது. மருத்துவமனைகள் சட்டத்தை மீறினால், அவற்றின் உரிமம் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்யப்படலாம்.


இந்தச் சட்டத்தில் குற்றவியல் தண்டனைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டத்தை மீறும் எந்தவொரு தனிநபரோ, அமைப்போ ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.


கர்ப்ப காலம் முழுவதும் ‘Ultrasound’ ஸ்கேன் பரிசோதனைகள் செய்யப்படுவதால், அவற்றைப் பற்றிய ஆவணங்களைப் பராமரிப்பதில் இந்தச் சட்டம் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. மருத்துவமனை மற்றும் நோயறிதல் மையங்கள் தங்களின் ஆவணங்களைத் துல்லியமாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, நோயாளியின் மருத்துவ வரலாறு மற்றும் பிற விவரங்களைப் பதிவு செய்யும் கட்டாயமான "F" படிவத்தை (F Form) முறையாகப் பராமரிக்க வேண்டும்.


இந்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையிலும், 2002 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்ட போதிலும், விதிமீறல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. குறிப்பாக ஹரியானா மற்றும் பஞ்சாப் போன்ற பல மாநிலங்கள், சட்டவிரோத பாலின நிர்ணயத்தைத் (Sex determination) தடுக்க விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் கொள்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளன. பிறக்காத குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்தியதாகவும், பெண் சிசுக்கொலைக்கு உதவியதாகவும் கூறி சுகாதார அதிகாரிகள், மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் ஸ்கேன் மைய ஊழியர்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.



மகாராஷ்டிர மருத்துவர் மீதான வழக்கு


மகாராஷ்டிராவின் நாந்தேட் (Nanded) பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ரமேஷ் போலே, 2017-ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தின் அவுரங்காபாத் கிளையை அணுகினார். கருத்தரிப்புக்கு முந்தைய மற்றும் பிறப்புக்கு முந்தைய பாலினக் கண்டறிதல் தொழில்நுட்பத் தடைச் சட்டத்தின்கீழ்  (PCPNDT) தனக்கு அழைப்பாணை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அவர் இந்த வழக்கைத் தொடர்ந்தார்.


மருத்துவர் போலே ஒரு ‘Sonography’ ஸ்கேனிங் மையத்தை நடத்தி வந்தார். பெயர் குறிப்பிடாத நபர் அளித்த புகாரின் அடிப்படையில், நாந்தேடு மாவட்ட அரசு தலைமை மருத்துவர் அந்த மையத்தில் சோதனை நடத்தினார். அந்தச் சோதனையில், "படிவம் F" (Form F) பதிவேட்டைத் தவிர வேறு எந்த ஆவணங்களும் காட்டப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக, ஏழு ஆவணங்களில் கர்ப்பிணிப் பெண்களின் கையொப்பம் மற்றும் உறுதிமொழி பெறப்படவில்லை என்றும், ஒன்பது ஆவணங்களில் ஸ்கேன் செய்த மருத்துவரின் கையொப்பம் இல்லை என்றும் கண்டறியப்பட்டது.


மருத்துவமனையில் இன்னும் சில முறைகேடுகளும் நடந்திருப்பதாகக் கூறிய அரசு தலைமை மருத்துவர், அதுகுறித்து விளக்கம் கேட்டு அழைப்பாணைஅனுப்பினார். அதன் அடிப்படையில், அந்தப் பொறுப்பதிகாரி முன் ஆஜரான டாக்டர் போலே (Bole), படிவங்களைப் பூர்த்தி செய்யும் பணி மருத்துவமனை ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. சில நேரங்களில் வேலைப்பளு மற்றும் அதிகக் கூட்டம் காரணமாக, சில கையெழுத்துகளையோ அல்லது விபரங்களையோ அவர்கள் எழுதாமல் விட்டிருக்கலாம் என்று விளக்கமளித்தார்.


மேலும், இது ஒரு சிறிய தவறுதானே தவிர, பாலின நிர்ணயம் (Sex determination) செய்யும் சட்டவிரோத கும்பலுடன் தமக்கு ஏதேனும் தொடர்பு இருக்கிறது என்பதை நிரூபிக்க இது ஆதாரமாகாது என்றும் போலே கூறினார். மாநில அரசின் விதிகளின்படி தேவையான அனைத்து ஆவணங்களும் உரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், எந்த ஒரு விபரத்தையும் மறைக்கும் நோக்கம் தமக்கு இல்லை என்றும் வாதிட்டார்.

ஆனால், உயர்நீதிமன்றம் அவரது மனுவை நிராகரித்துவிட்டது. ஆவணங்களைப் பராமரிப்பதில் எந்தவொரு பிழையோ அல்லது தவறோ நடப்பதற்கு இந்த கருத்தரிப்புக்கு முந்தைய மற்றும் பிறப்புக்கு முந்தைய பாலினக் கண்டறிதல் தொழில்நுட்பத் தடைச் சட்டம்  (PCPNDT Act) இடம் தரவில்லை என்று நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியது. மேலும், குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மையும் முறைகேடுகள் நடந்த விதமும் நீதிமன்ற விசாரணையின்போதுதான் தெரியவரும் என்றும் குறிப்பிட்டது. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அந்த மருத்துவர் உச்சநீதிமன்றத்தை நாடினார். ஆனால் அங்கும் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.


உச்சநீதிமன்றம் கூறியது என்ன?


உச்சநீதிமன்றம் இந்தச் சட்டம் தொடர்பான முந்தைய தீர்ப்புகளைக் சுட்டிக்காட்டியது. குறிப்பாக, 'பஞ்சாப் தன்னார்வ சுகாதார சங்கம் vs இந்திய ஒன்றியம்' (Voluntary Health Association of Punjab vs Union of India) என்ற வழக்கைக் குறிப்பிட்டது. அதில், பெண் சிசுக்கொலை பல சமூகப் பிரச்சினைகளை உருவாக்குவதாகவும், இது தவறான சமூக அணுகுமுறைகள், சுயநலமான பாரம்பரியங்கள் மற்றும் சமூக நெறிமுறைகள் குறித்த பார்வைகளிலிருந்தே உருவாகிறது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.


1991, 2001 மற்றும் 2011-ஆம் ஆண்டுகளின் மக்கள்தொகை கணக்கெடுப்புத் தரவுகள், தேசிய அளவிலான குழந்தைகள் பாலின விகிதம் (Child sex ratio) 1,000 சிறுவர்களுக்கு 945 சிறுமிகள் என்றிருந்த நிலை மாறி, 927-ஆகக் குறைந்து, பின்னர் 919-ஆக மேலும் வீழ்ச்சியடைந்ததைக் காட்டுவதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.       இந்தத் தீவிரமான பாலின சமநிலையின்மையே, பாலினத் தேர்வு தடைச் சட்டத்தை (PCPNDT) மிகக் கடுமையாக அமல்படுத்துவதற்குக் காரணமாய் அமைந்தது என்றும் நீதிமன்றம் கூறியது. சமீபத்தில் இந்த விகிதம் பிறப்பின் போது 1,000 சிறுவர்களுக்கு 929 சிறுமிகள் என ஓரளவிற்கு உயர்ந்திருந்தாலும், இது ஒரு பகுதி முன்னேற்றம்தானே தவிர, உண்மையான சமத்துவத்திற்குமான அறிகுறி அல்ல என்று நீதிமன்றம் விவரித்துள்ளது. மேலும், பல மாநிலங்களில் பிறப்பின்போது இருக்கும் பாலின விகிதம் இன்னும் தேசிய சராசரியைவிடக் குறைவாகவே இருப்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

பெண் சிசுக்கொலையைத் தடுக்கவும், பெண்களுக்கு அதிகாரமளிக்கவும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் (Beti Bachao Beti Padhao (BBBP)) மற்றும் பிரதமரின் மகப்பேறு நலத் திட்டம் (Pradhan Mantri Matru Vandana Yojana (PMMVY)) உள்ளிட்ட 10 திட்டங்களை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.           ஆணாதிக்கச் சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக ஆழமாக வேரூன்றியுள்ள பாகுபாடுகளை அகற்ற இத்தகைய திட்டங்கள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட நீதிமன்றம், இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் இன்னும் செய்ய வேண்டியவை நிறைய உள்ளன என்பதையும் ஒப்புக்கொண்டது.


நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, கருத்தரிப்புக்கு முந்தைய மற்றும் பிறப்புக்கு முந்தைய பாலினக் கண்டறிதல் தொழில்நுட்பத் தடைச் சட்டம் (PCPNDT) போன்ற நலச் சட்டங்களைக் கடுமையாக அமல்படுத்துவது இப்போதும் அவசியமானது என்று கூறியது. சமூகத்தின் மனநிலையில் ஒரு விரிவான மாற்றம் ஏற்படும் வரை இத்தகைய முயற்சிகள் தொடர வேண்டும் என்றும், "பெண்கள் இயல்பாகவே பலவீனமானவர்கள்" என்ற எண்ணம் மாறி, உண்மையான சமத்துவம் நிலவும்போது மட்டுமே இதுபோன்ற சட்ட நடவடிக்கைகள் தேவையற்றதாக மாறும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.


original article : Falling child sex ratio, systemic bias: Why India banned checking a baby’s sex in the womb. -Sadaf Modak

Share:

நமது வறண்ட நகரங்கள் ஒவ்வொரு துளி நீரையும் கணக்கில்கொண்டு, நீரை மறுசுழற்சி செய்ய வேண்டும். -பரமேஸ்வரன் ஐயர், அருணாபா கோஷ் மற்றும் நிதின் பாசி

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், நீர் மறுசுழற்சித் திட்டங்களை நிர்வகிப்பதற்கும், அவற்றை ஒரு வணிக வாய்ப்பாக மாற்றுவதற்கும் ஏதுவாக,     சிறப்புச் செயல்பாட்டு முகமைகளை (Special Purpose Vehicles (SPV)) உருவாக்குவதற்குத் தேவையான நிறுவனச் சீர்திருத்தங்கள் அவசியமாகும்.


மத்தியப் பிரதேசத்தில் உள்ள நரசிங்கப்பூர் (Narsinghpur), குஜராத்தில் உள்ள அகமதாபாத் (Ahmedabad) மற்றும் ராஜஸ்தானில் உள்ள பார்மர் (Barmer) ஆகிய இடங்களுக்கு இடையே உள்ள பொதுவான விஷயம் என்ன? இந்த நகரங்களில்      மே மாதத்தின் முதல் வாரத்திலேயே பகல் நேரத்தின் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. இந்த கடுமையான வெப்பநிலை காரணமாக, நீர் ஆவியாகும் வீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் வீடுகளுக்கான தண்ணீர் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல சிறிய நகரங்கள் மற்றும் பேரூராட்சிகளில், கோடைக் காலத்தில் தனியார் தண்ணீர் விநியோகிக்கும் வாகனங்களை நம்பியிருப்பது ஒரு வழக்கமான விஷயமாக மாறிவிட்டது. டெல்லி போன்ற பெருநகரங்கள் மிகத் தொலைதூர இடங்களிலிருந்து தண்ணீரைக் கொண்டு வருகின்றன. இதனால் செலவுகள் அதிகரிப்பதோடு, ஆற்று நீர் உற்பத்தியாகும் (Upper riparian regions) பகுதிகளில் தங்கி வாழும் பிற பிராந்தியங்களைச் சார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது.


இந்தியாவில் ஒரு நபருக்கான ஆண்டுத் தண்ணீர் இருப்பு (Annual per capita water availability) சுமார் 1,500 கன மீட்டர் (1,500 m3) அளவாக உள்ளது.                  இது 2050-ஆம் ஆண்டிற்குள் 1,200 கன மீட்டருக்கும் (1,200 m3) கீழே குறைய வாய்ப்புள்ளது. இது நம்மை மிகக் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை அளவான 1,000 கன மீட்டருக்கும் கீழே குறையும் என்கின்றனர். இவ்வாறு தண்ணீர் கிடைக்கும் அளவு குறைந்து வருவதுடன், கோடைகாலம் மற்றும் அதிகரித்து வரும் வெப்ப அலைகளால் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையும் சேர்ந்து, நாம் இன்னும் தீவிரமாக நீர் மேலாண்மை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. வழக்கமான நடவடிக்கைகளிலிருந்து மாறுபட்டு நகரங்கள் என்ன செய்ய முடியும்? என்பதுதான் தற்போதைய முக்கிய கேள்வியாக உள்ளது.


பெரிய அளவில் சாத்தியக்கூறுகள் இருந்தும் இன்னும் முழுமையாகப் பயன்படுத்தப்படாத ஒரு முக்கியமான தீர்வு, சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை மீண்டும் பயன்படுத்துவதாகும். குறிப்பாக குடிநீராக இல்லாமல், தோட்டக்கலை பயிர்களுக்கு நீர் பாய்ச்சுதல், நிலத்தை அழகுபடுத்துதல், கட்டுமானப் பணிகள், பொது வசதிகள், ஜவுளி உற்பத்தி, ஏரிகளை மீட்டெடுத்தல் மற்றும் மனிதர்களுடன் நேரடித் தொடர்பு இல்லாத பிற பயன்பாடுகளுக்கு இதனைப் பயன்படுத்தலாம். எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் மேலாண்மைக் குழு (Council on Energy, Environment and Water (CEEW)) மேற்கொண்ட ஆய்வின்படி, இந்தத் திட்டம் 2047-ஆம் ஆண்டிற்குள் 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கி, கூடுதலாக ஒரு லட்சம் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.      மேலும், தண்ணீரைச் சுழற்சி முறையில் பயன்படுத்தும் 'சுழற்சி நீர் பொருளாதாரத்தை' (Circular water economy) ஊக்குவிப்பதன் மூலம் தண்ணீர் தட்டுப்பாட்டையும் குறைக்க முடியும். உதாரணமாக, தானே (Thane) நகரம் தனது சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைப் பயன்படுத்துவதை அதிகரிப்பதன் மூலம், ஒரு நாளைக்குத் தேவைப்படும் 53 மில்லியன் லிட்டர் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க முடியும் என்பதை நடைமுறையில் நிரூபித்துள்ளது. இந்த நன்மைகளைப் பெற நான்கு முக்கியமான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் உதவும் என்கின்றனர்.


முதலாவதாக, நீர் மறுபயன்பாட்டுக் கொள்கைகளுக்கு ஆதரவாக, அந்தந்த நகரங்களுக்கு ஏற்ற பிரத்யேக மறுபயன்பாட்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். இந்தியாவில் தற்போது சுமார் 14 மாநிலங்கள் நீர் மறுபயன்பாட்டுக் கொள்கைகளைக் கொண்டுள்ளன. காலநிலைக்கேற்ப மாறும் நீர் பற்றாக்குறை அபாயங்களைக் கண்டறிந்து, இத்தகைய கொள்கைகளை சமீபத்தில் அறிமுகப்படுத்திய மாநிலங்களில் உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகியவையும் அடங்கும். இது ஒரு நல்ல தொடக்கமாக இருந்தாலும்,                       நீர்ப் பற்றாக்குறை மற்றும் நீரின் தரம் சார்ந்த சிக்கல்களைச் சமாளிக்க, நகரங்கள் தங்களுக்கு என்று தெளிவான இலக்குகளுடன் கூடிய தனித்தனி மறுபயன்பாட்டுத் திட்டங்களை உருவாக்க வேண்டும். இந்தத் திட்டங்கள், தண்ணீரை எதற்கெல்லாம் மீண்டும் பயன்படுத்தலாம், அதற்குத் தேவையான நீரின் தரநிலைகள் என்ன, அதற்கான வருவாய் வழிகள் மற்றும் அதை எவ்வாறு செயல்படுத்துவது ஆகியவற்றைத் தெளிவாகக் கண்டறிய வேண்டும். ஒவ்வொரு நகரத்தின் தேவைகளும் வெவ்வேறாக இருப்பதால், தண்ணீரை மறுபடி பயன்படுத்துவதற்கான முன்னுரிமைகளும் மாறுபடுகின்றன.


இரண்டாவதாக, கழிவுநீரை மறுசுழற்சி செய்யும் திட்டங்களில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்க வேண்டும். இந்திய நகரங்களில் தேவைப்படும் கழிவுநீர் சுத்திகரிப்புத் திறனில் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே தற்போது உள்ளது.      மேலும் 2021-ஆம் ஆண்டில், மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவான கழிவுநீரே உண்மையில் சுத்திகரிக்கப்பட்டது. கழிவுநீரைச் சுத்திகரிப்பு நிலையங்களுக்குக் கொண்டு செல்வதற்கான போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, திறமையான ஊழியர்களின் பற்றாக்குறை, போதிய மின்சாரம் கிடைக்காமை மற்றும் நிலையங்களைப் பராமரிக்கத் தேவையான நிதி இல்லாமை போன்ற சவால்களே இதற்குக் காரணமாகும். இதன் விளைவாக, சுத்திகரிக்கப்பட்ட நீரில் மிகச் சிறிய அளவே மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. எனவே, கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் மறுசுழற்சி கட்டமைப்பை மேம்படுத்த அரசாங்க நிதியுடன் தனியார் முதலீடும் அவசியமாகும். இதற்குப் பல்வேறு கலப்பு-நிதி மாதிரிகளைப் (Blended-finance models) பயன்படுத்தலாம். உதாரணமாக, தூய கங்கைக்கான தேசியத் திட்டம் (National Mission for Clean Ganga (NMCG)) பின்பற்றும் 'கலப்பு வருடாந்திர மாதிரி' (Hybrid Annuity Model (HAM)) முறையில், நிதி சார்ந்த அபாயங்கள் அரசாங்கத்திற்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையே பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.


மூன்றாவதாக, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இன்னும் திறம்பட செயல்பட வேண்டும். பல்வேறு நகரங்களில் உள்ள பல சுத்திகரிப்பு நிலையங்கள், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (Central Pollution Control Board (CPCB)) நிர்ணயித்துள்ள கழிவுநீர் வெளியேற்றத் தரநிலைகளைப் பூர்த்தி செய்வதில்லை.                          போதிய பராமரிப்பின்மை ஒருபுறமிருக்க, வீடுகளில் இருந்து வரும் கழிவுநீருடன், அனுமதியற்ற சிறிய தொழிற்சாலைகளின் கழிவுகளும் கலப்பது இந்த நிலையங்களின் செயல்பாட்டைப் பாதிக்கிறது. ஏனெனில், பெரும்பாலான சுத்திகரிப்பு நிலையங்கள் நுண்ணுயிரிகளை (Microorganisms) நம்பியிருக்கும் உயிரியல் செயல்முறைகளையே பயன்படுத்துகின்றன. தொழிற்துறைக் கழிவுகளில் உள்ள கன உலோகங்களும் நச்சுப் பொருட்களும் இந்த நுண்ணுயிரிகளைக் கொன்றுவிடுகின்றன அல்லது அவற்றைச் செயலற்றதாக்குகின்றன. தொழிற்சாலைகளுக்காக இந்தியாவில் 'பூஜ்ஜிய திரவக் கழிவு வெளியேற்றம்' (Zero Liquid Discharge (ZLD)) கொள்கை இருந்தபோதிலும், பல சிறிய நிறுவனங்கள் இந்த விதிகளை மீறி, சுத்திகரிப்பு செய்யப்படாத தொழிற்சாலை கழிவுகளை வீடுகளின் கழிவுநீர் செல்லும் சாக்கடைகளில் கலக்கவிடுகின்றன. இதைக் கட்டுப்படுத்த, கங்கை நதிப் படுகையில் உள்ள நகரங்களைப் போலவே, உள்ளூர் அரசாங்கங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இத்தகைய விதிமீறல்களைக் கண்டறிந்து சட்டவிதிமுறைகளைப் பின்பற்றச் செய்யலாம். மேலும், நிறுவனங்கள் இந்த 'பூஜ்ஜிய திரவக் கழிவு வெளியேற்றம்' (ZLD) விதிமுறைகளைப் பின்பற்றுவதை ஊக்குவிக்க சலுகைகளையும் வழங்கலாம்.    இதற்கு உதாரணமாய், இத்தகைய அமைப்புகளை நிறுவுவதற்கு நிதியுதவி வழங்கும் குஜராத் மாநில நகரங்களை ஒரு சிறந்த முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளலாம்.


நான்காவதாக, தண்ணீரை ஒருமுறை பயன்படுத்திவிட்டு வீணாக்குவதற்குப் பதிலாக, பயன்படுத்திய நீரையே மீண்டும் மீண்டும் அதிக அளவில் மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் முறையை நோக்கி மாறுவதற்கு, இந்தியா ஒரு தேசிய சுழற்சி நீர் திட்டத்தை (National circular water mission) தொடங்க வேண்டும். இதற்குத் தொழில்நுட்பம், கட்டமைப்பு, நிதி மற்றும் மக்களின் நடத்தை சார்ந்த சீர்திருத்தங்கள் தேவைப்படும். தொழில்நுட்பச் சீர்திருத்தங்கள், வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புறங்களை ஒட்டிய புறநகர்ப் பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். கட்டமைப்புச் சீர்திருத்தங்கள், உள்ளூர் நகர்ப்புற அமைப்புகள், நீர் மறுசுழற்சித் திட்டங்களை நிர்வகிப்பதற்கும், அவற்றை வணிக வாய்ப்புகளாக மாற்றுவதற்கும் ஏதுவாக சிறப்புச் செயல்பாட்டு முகமைகளை உருவாக்க அனுமதிக்க வேண்டும். நிதிச் சீர்திருத்தங்கள், சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை மீண்டும் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதோடு, நல்ல குடிநீரை ஒரு மதிப்புமிக்க சொத்தாகக் கருத வேண்டும். தூய்மையான குடிநீருக்கு சந்தை அடிப்படையிலான விலையை நிர்ணயிப்பது நீர் வீணாக்கப்படுவதைக் குறைத்து செயல்திறனை மேம்படுத்தும் என்றாலும், பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய பிரிவினரைப் பாதுகாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மானியங்கள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும். தண்ணீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதை ஒரு கூட்டுப் பொறுப்பாக மாற்றும் மக்களின் அன்றாட பழக்கவழக்க மாற்றங்களும் இதற்கு இணையாக முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். பொதுமக்களின் இந்த அணுகுமுறை மாற்றத்தின் மூலம், சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் என்பது நகர்ப்புற வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக மாறக்கூடும். 'தண்ணீர், இயற்கை, முன்னேற்றம்' (Water, Nature, Progress) என்ற ஆய்வு மற்றும் இந்தியாவின் பொருளாதாரக் கணக்கெடுப்பு 2025-26 (Economic Survey of India 2025–26) ஆகியவை இந்தியாவில் இத்தகையதொரு மறுபயன்பாடு நீர் திட்டத்திற்கான செயல்திட்டத்தை வகுத்துள்ளன.


2047-ஆம் ஆண்டிற்குள் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக (Viksit Bharat 2047) உருவெடுக்கும் பயணம், அது தனது நீர் ஆதாரங்களை எவ்வளவு வலிமையாகவும் மீள்தன்மையுடனும் கட்டமைக்கிறது என்பதைப் பொறுத்தே அமையும் என்கின்றனர். பயன்படுத்திய நீரை மீண்டும் சுழற்சி முறையில் பயன்படுத்தும் "சுழற்சி நீர் பொருளாதாரம்" (Circular water economy), குடிநீர் ஆதாரங்கள் மீதான அழுத்தத்தைக் குறைப்பதோடு, நீரின் தரத்தை மேம்படுத்தி, அனைவருக்கும் தடையற்ற குடிநீர் பாதுகாப்பை உறுதி செய்யும். இந்தியாவிற்குத் தேவையான வலுவான அரசியல் தலைமை, அர்ப்பணிப்பு மற்றும் வெற்றிகரமான முன்மாதிரிகள் ஏற்கனவே நம்மிடம் உள்ளன. தற்போது நமக்குத் தேவைப்படுவது என்னவென்றால், பெரிய அளவிலான, விரைவான மற்றும் அவசரமான நடவடிக்கைகளே ஆகும்.


பரமேஸ்வரன் ஐயர், உலக வங்கியில் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக உள்ளார். கோஷ், எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் மேலாண்மை (CEEW) அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஆவார்.                  நிதின் பாசி, எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் மேலாண்மை அமைப்பின் ஆய்வாளர் ஆவார்.


original article : Our parched cities need to make every drop count, recycle water. -Parameswaran Iyer, Arunabha Ghosh and Nitin Bassi

Share:

ஜி7 உச்சிமாநாட்டில், உலகளாவிய கொள்கை கட்டமைப்புகளை வடிவமைக்க இந்தியா உதவ வேண்டும். -அஜய் மல்ஹோத்ரா

இன்று, உலக அளவில் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளுடனும் மற்றும் வளர்ந்துவரும் நாடுகளுடனும் ஒரே நேரத்தில் சுமுகமான உறவை மேற்கொண்டு, அதே சமயம் இருதரப்பிலுமே தனது செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ளும் திறன் ஒரு சில நாடுகளுக்கு மட்டுமே வசதியாக உள்ளது.


பிரான்ஸ் நாட்டின் அழைப்பை ஏற்று, பொருளாதார பலம், தொழில்நுட்பத் தலைமை மற்றும் உலகளாவிய வளர்ச்சி ஆகியவற்றைத் தீர்மானிக்கும் முக்கியப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க, ஏவியன்-லெஸ்-பெய்ன்ஸ் (Evian-les-Bains) நகரில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டில் (G7 Summit) உலகத் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார்.


1970-கள் காலகட்டத்தில் இருந்தது போல, இந்த ஜி7 கூட்டமைப்பு இப்போது அவ்வளவு சக்திவாய்ந்ததாக இல்லை. வளர்ந்து வரும் புதிய பொருளாதார நாடுகளின் எழுச்சியும், 2008-ஆம் ஆண்டில் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியும் உலகளாவிய அதிகார சமநிலையை மாற்றிவிட்டன.             இருப்பினும், உலகளாவிய தரநிலைகளை நிர்ணயிப்பதிலும், நிதிச் செயல்பாடுகளை முறைப்படுத்துவதிலும் இந்த அமைப்பு இன்னும் முக்கியப் பங்கு வகிக்கிறது.  ஆனால், தற்போதைய சூழலில் இந்த நாடுகளுக்கு இடையே ஒற்றுமை சற்றுக் குறைவாகவே உள்ளது. வர்த்தகம், காலநிலை நிதி (Climate finance), தொழில்துறை மானியங்கள், எரிசக்திக் கொள்கை மற்றும் ரஷ்யாவுடனான உறவு ஆகியவற்றில் உள்ள கருத்து வேறுபாடுகள், குறிப்பாக அமெரிக்காவிற்கும் மற்ற உறுப்பு நாடுகளுக்கும் இடையே தெளிவாகத் தெரிகின்றன. இந்த ஏவியன் உச்சிமாநாடு,      ஜி7 நாடுகளுக்கு இடையேயான கூட்டு ஒருங்கிணைப்பையும் அதேநேரத்தில் பல பேச்சுவார்த்தைகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். மேலும், குறிப்பிட்ட சில விவகாரங்களின் அடிப்படையில் இந்தியா பிற நாடுகளுடன் புதிய கூட்டணிகளை உருவாக்குவதற்கான கூடுதல் வாய்ப்புகளைத் தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


குறிப்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு பெரும் கவனத்தைப் பெறும் என்றும் கூறப்படுகிறது. உலகத் தலைவர்கள் மேற்கு ஆசியா மற்றும் உக்ரைனில் நடக்கும் மோதல்கள் குறித்து விவாதித்தாலும், பிரான்ஸ் நாடு உலகளாவிய பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மற்றும் ஒருங்கிணைப்பற்ற உலகப் பொருளாதாரத்தின் ஆபத்துகளை இந்த நிகழ்ச்சி நிரலின் மையப் புள்ளியாக வைத்துள்ளது. இந்த விவாதங்கள் பொருளாதாரப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு (AI), எரிசக்தி மாற்றம், காலநிலை நிதி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என்றும் கூறப்படுகிறது.


உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாகவும், வளர்ந்துவரும் எரிசக்தி சந்தையாகவும், தொழில்நுட்ப மையமாகவும் விளங்கும் இந்தியா, இந்த விவாதங்களால் பாதிக்கப்படக்கூடிய நாடாகவும் இருக்கிறது. அதேநேரத்தில் இந்த விவாதங்களில் மிக முக்கியமான பங்கு வகிக்கும் நாடாகவும் மாறி வருகிறது. மேலும், இது பல வளர்ந்து வரும் மற்றும் வளரும் நாடுகளின் பொதுவான கவலைகளையும் இந்த மாநாட்டில் பிரதிபலிக்கும் என்கின்றனர்.


இந்தியாவும் ஜி7 நாடுகளும் முக்கியமான கனிமங்கள் (Critical minerals) சார்ந்த விஷயங்களில் பொதுவான நலன்களைக் கொண்டுள்ளன. எரிசக்தி மாற்றம் மற்றும் மேம்பட்ட உற்பத்தித் துறைகளுக்குத் தேவையான லித்தியம், கோபால்ட், நிக்கல் மற்றும் அரிய மண் தனிமங்களின் (Rare earth elements) விநியோகத்தைப் பாதுகாப்பது மிக அவசியமானதாகும். தூய்மையான எரிசக்தி மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்பங்களுக்காக சீனா மீதான விநியோகச் சார்பைக் குறைப்பதற்கான       ஜி7 நாடுகளின் முயற்சிகளுக்கு இந்தியாவின் முயற்சிகள் ஆதரவளிக்கின்றன. இந்தியாவின் மிகப்பெரிய சந்தை மற்றும் வளர்ந்து வரும் கனிமச் சுத்திகரிப்புத் திறன் ஆகியவை, புதிய கனிம விநியோகக் கட்டமைப்புகளில் இந்தியாவை ஒரு முக்கியமான நாடாக மாற்றுகின்றன.


செயற்கை நுண்ணறிவு (AI) என்பது நிர்வாகம், தரநிலைகள், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் தலைமைத்துவம் சார்ந்த பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. அதுமட்டுமின்றி, தரவு மையங்களும் (Data centres) மேம்பட்ட கணினி செயல்பாடுகளும் மின்சாரத் தேவையை அதிகரிப்பதால், இது ஒரு எரிசக்தி சார்ந்த கவலையாகவும் மாறி வருகிறது. டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (Digital Public Infrastructure (DPI)) துறையில் இந்தியாவின் அனுபவம், இது குறித்த உலகளாவிய விவாதங்களை வடிவமைப்பதில் இந்தியாவிற்கு ஒரு வலுவான இடத்தை அளிக்கிறது.


எரிசக்தி பாதுகாப்பு என்பது மற்றொரு முக்கியமான விஷயம் ஆகும். தூய்மையான எரிசக்தி நோக்கிய மாற்றமானது உலகம் முழுவதும் முதலீட்டு முறைகளையும் தொழில் கொள்கைகளையும் மாற்றி வருகிறது.                  இருப்பினும், பொருளாதார வளர்ச்சிக்கு இப்போதும் பெட்ரோலிய எரிபொருட்களே ஆதாரமாக உள்ளன. இந்தியா இந்த நடைமுறை உண்மைகளையே பிரதிபலிக்கிறது. புவிசார் அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், விலை மலிவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே இந்தியா தனது எரிபொருள் சார்ந்த முடிவுகளை எடுக்கிறது. அதேநேரத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியையும் மிக வேகமாக விரிவுபடுத்தி வருகிறது. எரிசக்தியைப் பெருமளவில் பயன்படுத்தும் ஒரு நாடாக, தனது சொந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்த விஷயத்தில் அதிகாரத்துடன் தனது கருத்துகளை இந்தியா முன்வைக்க முடியும் என்கின்றனர்.


பொருளாதாரப் பாதுகாப்பைப் பொறுத்தவரை, இந்தியாவின் முக்கிய நோக்கம் வாய்ப்புகளைக் குறைப்பது அல்ல; மாறாக புதிய வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் மூலம் ஒரு வலுவான மற்றும் மீள்திறன் மிக்க பொருளாதாரத்தை உருவாக்குவதாகும். மற்றவர்களைத் தவிர்ப்பதன் மூலம் பெறப்படும் பாதுகாப்பு, எதைத் தவிர்க்க வேண்டும் என்று நினைத்ததோ, அதே பிரிவினையையும் பிளவையும் உருவாக்கிவிடும். இன்று பல வளர்ந்த நாடுகள், மற்ற நாடுகள் யாருடன் வர்த்தகம் செய்ய வேண்டும், எந்த விலைக்குச் செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வர்த்தகக் கட்டுப்பாடுகள், பொருளாதாரத் தடைகள் மற்றும் பொருளாதார அழுத்தங்களை அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றன.                   இது, அவர்கள் வெளியில் பேசும் 'தடையற்ற வர்த்தகக் கொள்கைகளுக்கும்', ஆனால் நடைமுறையில் அவர்கள் பின்பற்றும் 'சந்தையை சீர்குலைக்கும் கொள்கைகளுக்கும்' இடையே உள்ள பெரிய முரண்பாட்டை வெளிக்காட்டுகிறது.


வளர்ச்சியைப் பொறுத்தவரை, வளரும் நாடுகள் என்கிற பட்டியலில் உள்ள பல நாடுகள் கடுமையான கடன் சுமையையும், நிதிப் பற்றாக்குறையையும் எதிர்கொள்கின்றன. எனவே, சர்வதேச வளர்ச்சி வங்கிகளில் (Multilateral Development Banks (MDBs)) சீர்திருத்தங்களைக் கொண்டு வருவது தற்போதைய அவசரமான தேவையாக உள்ளது.


காலநிலை நிதி தொடர்பாக, வளர்ந்த நாடுகள் 2024-ஆம் ஆண்டு             பாகு (Baku) நகரில் நடந்த மாநாட்டில், 2035-ஆம் ஆண்டிற்குள் ஆண்டுதோறும் குறைந்தது 300 பில்லியன் டாலர்களைத் திரட்ட ஒப்புக்கொண்டன. இருப்பினும், இந்தத் தொகை தேவைப்படுவதைவிட மிகவும் குறைவாகவே உள்ளது.            மேலும், இந்த நிதியின் பெரும்பகுதி இலவச நிதியுதவியாக வராமல், கடன்களாகவே வழங்கப்படுகிறது. வளரும் நாடுகள் காலநிலை மாற்றத்திற்கான நடவடிக்கைகளில் அக்கறை இல்லாமல் இல்லை. அதைச் செயல்படுத்துவதற்குத் தேவையான ஆதாரங்களும் வசதிகளும்தான் அவர்களிடம் இல்லை. காலநிலை நிதி என்பது நீண்டகாலமாகவே, "பொதுவான ஆனால் வேறுபட்ட பொறுப்புகள் மற்றும் அவரவர் திறன்கள்" (Common but Differentiated Responsibilities and Respective Capabilities (CBDR-RC)) என்ற கொள்கையின் அடிப்படையில்தான் அமைந்துள்ளது. இந்தியா தனது அத்தியாவசிய வளர்ச்சித் தேவைகளையும் காலநிலை இலக்குகளையும் எவ்வாறு சமநிலையில் கையாள்கிறது என்ற தனது சொந்த அனுபவத்தைப் பிற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும் அதேவேளையில், இந்த சர்வதேசக் கொள்கை நிலைப்பாட்டையும் உறுதியாக ஆதரிக்க வேண்டும்.


ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) 'கார்பன் எல்லை வரி' (Carbon Border Adjustment Mechanism (CBAM)) என்பது இதனுடன் தொடர்புடைய மற்றொரு கவலையாகும். இந்தத் திட்டம், எஃகு, அலுமினியம், சிமெண்ட் மற்றும் உரங்கள் போன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் போது வெளியேறும் கார்பன் உமிழ்வுகளின் அடிப்படையில், அவற்றின் இறக்குமதிக்கு வரி விதிக்கிறது.                                    கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதுதான் இதன் நோக்கம் என்று கூறப்பட்டாலும், இது இந்தியாவைப் போன்ற வளரும் நாடுகளைத்தான் கடுமையாகப் பாதிக்கிறது. ஏனெனில், இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகள் பசுமைத் தொழில்நுட்பத்திற்கு விரைவாக மாறுவதற்குத் தேவையான நிதியும், தொழில்நுட்பமும் இல்லாததால், அவை இன்னும் நிலக்கரியையே பயன்படுத்தி வருகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கொள்கை என்ற பெயரில் முன்வைக்கப்படும் இந்த ‘கார்பன் எல்லை வரி' (CBAM) என்பது உண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஒரு வர்த்தகத் தடையாகும். எந்த வளரும் நாடுகளுக்கு நிதியுதவி செய்வதாக வளர்ந்த நாடுகள் வாக்குறுதி அளித்தனவோ, அதே நாடுகளின் மீது வரி விதிப்பதன் மூலம் காலநிலை மாற்றத்திற்கான தீர்வை நோக்கி முன்னேறிவிட முடியாது. சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பசுமை மாற்றத்திற்கான நிதியை முதலில் தராமல் நிறுத்திவிட்டு, பிறகு அந்த மாற்றத்தைச் செய்ய வசதியற்ற ஏழை மற்றும் வளரும் நாடுகளின் மீது வரி விதிப்பது என்பது முற்றிலும் அநீதியான ஒரு செயலாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.


தொழில்நுட்பம், விநியோகச் சங்கிலிகள் மற்றும் முக்கியமான கனிமங்கள் (Critical minerals) குறித்து எவியான் (Evian) நகரில் விவாதிக்கப்படும் தரநிலைகளும் கூட்டணிகளும் உலகளாவிய பொருளாதாரச் சூழலை மாற்றியமைக்கக் கூடியவை ஆகும். இந்த விவாதங்கள் உலகம் முழுவதும் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே, இவற்றில் இந்தியா பங்கெடுப்பது அதன் சொந்த நலன்களுக்கு மிகவும் அவசியமானது. இந்தியா தனது சொந்த நாட்டில் பிரிக்ஸ் (BRICS) மாநாட்டை நடத்துவதற்கு சில மாதங்களுக்கு முன்பாக, இந்த ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்பது, அது எந்தவொரு ஒரு குறிப்பிட்ட நாடுகலின் கூட்டணியிலும் சேராமல், பலதரப்பட்ட உலக நாடுகளுடனும் நட்புறவை பாதுகாக்கும் கொள்கையைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்துகிறது.


எவியான் மாநாட்டில் இந்தியா வெறும் பங்கேற்பாளராக மட்டும் இல்லாமல், அங்கு எடுக்கப்படும் முடிவுகளை வடிவமைக்கும் ஒரு முக்கிய நாடாகப் பங்கேற்க வேண்டும். வளர்ந்த நாடுகளுடனும், வளர்ந்து வரும் நாடுகளுடனும் ஒரே நேரத்தில் இணக்கமாகவும் செல்வாக்குடனும் பழகும் திறன் உலகின் மிகச் சில நாடுகளுக்கே உள்ளது. அதில் இந்தியாவும் ஒன்று. இன்றைய விவாதங்களே நாளைய உலக விதிகளாக மாறும் என்பதால், அந்த விதிகளை யாரோ உருவாக்கி, பிறகு இந்தியா ஏற்றுக்கொள்வதைவிட, அவற்றை உருவாக்கும் நாடாக பங்கெடுப்பதுதான் இந்தியாவிற்குச் சாதகமான பலன்களை வழங்கும் என்கின்றனர்.

அஜய் மல்ஹோத்ரா, ஒரு முன்னாள் தூதரக அதிகாரி ஆவார்.

 

original article : At G7 summit, India should help shape global frameworks. -Ajai Malhotra

Share:

இந்தியாவின் மிகப் பழமையான இரண்டு சட்டமன்றங்களுக்குள், சீர்திருத்தங்களின் மரபு. - சக்ஷு ராய்

 தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், நாட்டின் மிகவும் பழமையான மாநிலச் சட்டமன்ற வரவு-செலவுத் திட்டக் கூட்டத்தொடர்களில் பங்கேற்கும்போது, ​​"அமைதி மற்றும் சிறந்த நிர்வாகத்திற்கான" சட்டங்களை இயற்றுதல் என்ற அமைப்புகளின் அடிப்படை நோக்கத்தையே தங்கள் மக்கள் பிரதிநிதிகள் கடைப்பிடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மாநில மக்கள் எதிர்பார்ப்பார்கள்.


ஜூன் மாதத்தின் 3-வது வாரத்தில், மேற்குவங்கம் மற்றும் தமிழ்நாடு சட்டமன்றங்கள் வரவு-செலவுத் திட்டக் கூட்டத்தொடருக்காகக் கூடுகின்றன. புதிய அரசாங்கங்கள், தேர்தலின்போது அளித்த தேர்தல் வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றுகின்றன என்பதைப் பார்ப்பதற்காக, பொதுமக்களும் அரசியல் பார்வையாளர்களும் இந்தச் சட்டமன்ற நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனிப்பார்கள்.


இரு மாநிலங்களிலும், சட்டமன்ற உறுப்பினர்களில் ஏறக்குறைய பாதிப் பேர் முதல் முறை சட்டமன்ற உறுப்பினர்களாவர். ஒரு நூற்றாண்டுகால வரலாற்றைக் கொண்ட சட்டமன்ற அமைப்புகளின் புனிதமான அவைகளுக்குள் அவர்கள் அடியெடுத்து வைக்கப் போகிறார்கள்.


இந்தியாவில் உள்ள நவீன சட்டமன்ற அமைப்புகளின் தொடக்கத்தை பம்பாய், கல்கத்தா மற்றும் மெட்ராஸ் ஆகிய மாகாண நகரங்களில் காணலாம். இந்த நகரங்களில்தான் கிழக்கிந்தியக் கம்பெனி (East India Company) தனது வணிகம், நிர்வாகம் மற்றும் சட்ட உருவாக்கப் பணிகளை மேற்கொண்டது. இப்பணிகள், கம்பெனியின் சில அதிகாரிகள் அடங்கிய சிறிய குழுவால் அறைகள் அல்லது   மாளிகைகளில் கூடி நடத்தப்பட்டன. காலப்போக்கில், பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இந்தியாவில் ஆர்வம் காட்டத் தொடங்கியது.


கல்கத்தா பிரிட்டிஷ் நிர்வாகத்தின் தலைமையிடமாக மாறியது. அதன் தலைமைப் பொறுப்பில் கவர்னர் ஜெனரல் இருந்தார். அவருக்கு நான்கு பேர் கொண்ட குழு ஆலோசனை வழங்கியது. பின்னர், ஒரு சட்ட உறுப்பினர் இந்தக் குழுவில் இணைந்தார். பிரிட்டிஷ் அரசாங்கம் மாகாண சபைகளையும் அமைத்தது. ஆனால், 1919-ஆம் ஆண்டு சீர்திருத்தங்களுக்குப் பின்னரே நவீன தேசிய மற்றும் மாகாண சட்டமன்றங்கள் உருவாக்கப்பட்டன. பின்னர், 1921-ல், கன்னாட் பிரபு (Duke of Connaught) புலிகளை வேட்டையாடுவதற்கும், இந்த சீர்திருத்தங்களின்கீழ் அமைக்கப்பட்ட சட்டமன்றங்களைத் தொடங்கி வைப்பதற்கும் வந்தார். அவர் மெட்ராஸ் மற்றும் கல்கத்தாவில் மாகாண சட்டமன்றங்களையும், இறுதியாக டெல்லியில் தேசிய சட்டமன்றத்தையும் தொடங்கி வைத்தார்.


சட்டமன்றங்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் நடத்தும் ஆழமான மற்றும் தீவிரமான விவாதங்களால் சிறப்பிக்கப்படுகின்றன. மேலும், அந்த விவாதங்கள் நடைபெறும் கட்டிடங்களின் மூலமும் அடையாளம் காணப்படுகின்றன. தமிழ்நாடு சட்டமன்றம் சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டைக்குள் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தில் கூடுகிறது. இந்த இடத்தின் தனித்துவம், சட்டமன்றமும் நிர்வாகத் துறையும் ஒரே வளாகத்திற்குள் செயல்பட்டு வருவதாகும்.


கோட்டைக்குள், சட்டமன்றக் கட்டிடத்திற்கு அருகில், நாட்டின் மிகப் பழமையான ஆங்கிலிகன் தேவாலயமான புனித மேரி தேவாலயம் அமைந்துள்ளது. எலிஹு யேல், இவரது புத்தகங்கள் மற்றும் பொருட்களின் நன்கொடையால் யேல் கல்லூரிக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது மற்றும் கிழக்கிந்திய கம்பெனியை ஒரு வர்த்தக நிறுவனத்திலிருந்து ஒரு ஏகாதிபத்திய சக்தியாக மாற்றிய "நிலைத்தன்மையற்ற சமூக விரோத ஆளுமை கொண்டவர்" (unstable sociopath) என்று அழைக்கப்பட்ட ராபர்ட் கிளைவ் ஆகியோரின் திருமணங்கள் இங்கு நடைபெற்றன.


1921-ல், மேற்குவங்க சட்டசபை முதன்முதலில் கல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற டவுன் ஹாலில் கூடியது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அது தற்போது பிதான் பவன் (Bidhan Bhavan) என்று அழைக்கப்படும்,  பிரம்மாண்டமான கட்டிடத்திற்கு மாறியது. சட்டசபை எல்லைக்குள் பல பழ மரங்கள், ஒரு நூலகம், ஒரு அருங்காட்சியகம், நூற்றாண்டு பழமையான தீ எச்சரிக்கை பெட்டி மற்றும் ஒரு கோயில் ஆகியவை அமைந்துள்ளன.


மேற்குவங்க சட்டமன்றத்தில், அவையின் அதிகாரத்தைக் குறிக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம் போன்ற செங்கோல் ஒன்று உள்ளது. அது இன்றும் பயன்பாட்டில் உள்ளது. சட்டமன்ற கூட்டத்தொடரில் இருக்கும் போது சபாநாயகருக்கு முன்னால் அது வைக்கப்படும். அந்தக் கட்டிடத்தில் உள்ள ஒரு ஓவியம், சுதந்திரத்திற்கு முந்தைய ஒரு காட்சியைச் சித்தரிக்கிறது. அதில், காலணியின்றி  சீருடை அணிந்த இந்தியர்கள், காலணிகள் அணிந்திருந்த பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு முன்னால் அதிகாரச் சின்னமான ‘சூலாயுதம்’ (Mace) ஏந்திச் செல்வது காட்டப்பட்டுள்ளது. திரிபுரா சட்டமன்றத்திலும் ஒரு ‘சூலாயுதம்’ உள்ளது. 2019-ஆம் ஆண்டு, ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் அடையாளமாக அந்த சூலாயுதத்தை எடுத்துக்கொண்டு ஓடிச் சென்றார்.


தொழில்நுட்பப் புதுமைகளைப் உருவாக்குவதில் மேற்குவங்க சட்டமன்றம் எப்போதும் முன்னணியில் இருந்து வந்துள்ளது. சுதந்திரம் அடைந்த பிறகு, மேற்குவங்கச் சட்டமன்றம் தனது விவாதங்களைப் ஒலிப்பதிவு செய்யத் தொடங்கியது. சட்டமன்ற நடவடிக்கைகளில் இயந்திர வாக்குப்பதிவு (Machine Voting) முறையை முதன்முறையாக அறிமுகப்படுத்திய மாநிலம்  மேற்குவங்கம் ஆகும். சில ஆரம்பகால சிக்கல்கள் இருந்தபோதிலும், மேற்குவங்க சட்டமன்றத்தில் இந்த முறை வெற்றிகரமாக செயல்பட்டது. வெற்றியைத் தொடர்ந்து, இந்த தொழில்நுட்பம் இந்திய நாடாளுமன்றத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசின் செயல்பாடுகளுக்கு பொறுப்புணர்வையும் கண்காணிப்பையும் உறுதி செய்வதற்காக, பல்வேறு துறைகள் தொடர்பான முழுமையான பொருள்-வாரியான குழுக்கள் (Subject Committees) அமைப்பை முதன்முறையாக நடைமுறைப்படுத்தியதும் மேற்குவங்க சட்டமன்றமே ஆகும். பின்னர், இந்த அமைப்பு இந்திய நாடாளுமன்றத்தாலும் பின்பற்றப்பட்டது.


நாட்டின் சட்டமியற்றும் கட்டமைப்பிற்கான புதுமைகளைப் உருவாக்குவதிலும் தமிழ்நாடு சட்டமன்றம் எந்தவகையிலும் பின்தங்கியிருக்கவில்லை. 1921-ஆம் ஆண்டில், அப்போதைய மதராஸ் சட்டமன்றம் பெண்களுக்கு சிலருக்கு தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை வழங்கியது நாட்டின் முதல் சட்டமன்றமாக தமிழ்நாடு இருந்தது. மேலும், 1927-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு, டாக்டர் S. முத்துலட்சுமி ரெட்டி அவர்களை சட்டமன்ற மேலவைக்கு நியமித்தது.

1960-களில், பொது வாழ்வில் நேர்மையையும் வெளிப்படைத்தன்மையையும் உறுதிப்படுத்தும் நோக்கில், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் சொத்துகள் மற்றும் கடன்கள் பற்றிய விவரங்களை அறிவிக்க வேண்டும் என்ற விவாதத்தை தீவிரமாக முன்னெடுத்த முதல் சட்டமன்றமாகவும் தமிழ்நாடு சட்டமன்றம் இருந்தது. சட்டமன்றத்தில் அரசியல் மோதல்கள் காரணமாக அவை நடவடிக்கைகளின் பதிவுகள் மாற்றப்பட்ட சம்பவங்கள் ஏற்பட்டபோது, அவற்றின் துல்லியத்தைப் பாதுகாக்கும் வகையில் ஒரு சிறப்பு விதியை தமிழ்நாடு சட்டமன்றம் ஏற்றுக்கொண்டது. அந்த விதியின்படி, ஒருமுறை வெளியிடப்பட்ட சட்டமன்ற நடவடிக்கைகளின் பதிவுகளை சபாநாயகர் (Speaker) அல்லது சட்டமன்றமேகூட பின்னர் மாற்றவோ நீக்கவோ முடியாது. மேலும், மாநில ஆளுநரின் பங்கு குறித்து விவாதிப்பதற்காக, தனது நடைமுறை விதிகளை இரண்டு வெவ்வேறு சூழல்களில் தற்காலிகமாக நிறுத்தி வைத்து விவாதம் நடத்திய ஒரே சட்டமன்றமாக தமிழ்நாடு சட்டமன்றம் இருந்து வருகிறது.தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், நாட்டின் பழமையான மாநிலச் சட்டமன்றங்களில் ஒன்றான தங்கள் மாநில சட்டமன்றங்களில் வரவு-செலவுத் திட்ட கூட்டத்தொடருக்காகக் கூடும்போது, ​​"அமைதி மற்றும் நல்லாட்சிக்கான” (peace and good government) சட்டங்களை இயற்றுதல் என்ற அமைப்புகளின் அடிப்படை நோக்கத்தையே தங்கள் மக்கள் பிரதிநிதிகள் கடைப்பிடிக்க வேண்டும் என்று மாநில மக்கள் எதிர்பார்ப்பார்கள்.


இந்தக் கட்டுரையின் ஆசிரியர், சட்டமன்ற (Legislative) பார்வையில் பல்வேறு பிரச்சினைகளை ஆய்வு செய்து எழுதுபவர் ஆவார். அவர் தற்போதுPRS சட்டமன்ற ஆராய்ச்சி அமைப்பில் பணியாற்றி வருகிறார்.


original article : Inside two of India’s oldest legislatures, a legacy of reforms. -Chakshu Roy

Share:

ஹரப்பாவின் சமூக மற்றும் கலாச்சார வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கு 'நடனமாடும் பெண்' (Dancing Girl) சிலையானது எவ்வாறு உதவுகிறது? - பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


• புகழ்பெற்ற வெண்கலச் சிலை தொடர்பான முந்தைய விவாதத்தின்போது, ​​அது நிர்வாணமாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதாகக் கூறி தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றத்தில் இடம்பெற்றிருந்த சில உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். ஆனால், அரசில் இடம்பெற்றுள்ள நிபுணர்களில் ஒருவர்  எதிர்ப்பை  ஏற்கவில்லை. இறுதியாக அவரது கருத்தே ஏற்கப்பட்டது. இது போன்ற சூழ்நிலை இருந்தபோதிலும், தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


• தற்போது திருத்தப்பட்ட அந்தப் புகைப்படம், 9-ஆம் வகுப்பிற்கான புதிய கலைக் கல்விப் பாடப்புத்தகமான 'மதுரிமா'வின் (Madhurima) முதல் அத்தியாயமான "கலைகளின் வரலாறு" (History of Arts) என்பதில் இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்தில், அந்தச் சிலையினுடைய தோள்பட்டையிலிருந்து கீழ்நோக்கிய உடல் பகுதி நிழலால் மறைக்கப்பட்டுள்ளது. இதனால், உண்மையான சிலையின் புகைப்படங்களில் தெளிவாகக் காணப்படும் உடல் அமைப்புகள் மறைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, அந்தச் சிற்பம் ஆடை அணிந்திருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது.


• இந்தச் சித்தரிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில் “நடனமாடும் பெண்” சிலை, குறைந்தபட்சம் கடந்த 25 ஆண்டுகளாக NCERT பாடப்புத்தகங்களில் இடம்பெற்று வருகிறது. மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி  ஆட்சிக் காலத்தில், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கல்வி அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷி பொறுப்பில் இருந்த காலத்திலும் இந்தச் சிலை பாடப்புத்தகங்களில் இடம்பெற்றிருந்தது. இந்தப் பத்திரிகை மேற்கொண்ட முந்தைய பதிப்புகளை ஆய்வு செய்ததில், அந்தச் சிறிய உருவம் நீண்ட காலமாகப் பள்ளிப் பாடப்புத்தகங்களில் இடம்பெற்று வந்தாலும், அதன் உட்புறப்பகுதி இதற்கு முன் ஒருபோதும் மறைக்கப்பட்டிருக்கவில்லை என்பது தெரிய வருகிறது.

• திருத்தப்பட்ட அந்தப் படம், தேசியக் கல்விக் கொள்கை (National Education Policy (NEP)) மற்றும் தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு (National Curriculum Framework (NCF)) ஆகியவற்றின் கீழ், கலைகளை முதன்மைக் கல்வியுடன் ஒருங்கிணைப்பதற்காக 1 முதல் 10-ஆம் வகுப்புகள் வரை அறிமுகப்படுத்தப்பட்ட தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றத்தின் கலைக் கல்வித் தொடரின் ஒரு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இதுவரை 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


• தொல்லியல் ஆய்வாளர்கள் நீண்ட காலமாகவே இந்தச் சிறிய சிலையை, அந்த நாகரிகத்தின் மேம்பட்ட உலோகவியல் அறிவுக்குச் சான்றாகக் கருதி வருகின்றனர். இதன் உண்மையான வடிவம் புது டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.


• தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றத்தின் புதிய 6-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகங்களுக்கான உருவாக்கக் குழுவிற்குத் தலைமை தாங்கிய வரலாற்றாசிரியர் மைக்கேல் டானினோ, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஒரு தகவலை வெளியிட்டார். அதன்படி, சிந்து சமவெளி நாகரிகம் குறித்த பாடத்தின் முதல் பக்கத்தில் "நடன மங்கை" சிலையை இடம்பெறச் செய்வதற்கு தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றம் எதிர்ப்பு தெரிவித்தது. ஏனெனில், அந்தச் சிலை ஆடையின்றி இருப்பதால் அது "சர்ச்சைக்குரியதாக" மாறக்கூடும் என்று அவர்கள் கருதினர்.


• நடனமாடும் பெண் சிலை அந்த வயது மாணவர்களின் வயதுக்கு ஏற்ற சிலை இல்லை என்றால், அந்தச் சிலையின் உண்மையான வடிவம் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதால், அந்த வயதில் இருக்கும் குழந்தைகளை தேசிய அருங்காட்சியகத்திற்கும் அனுமதிக்கக் கூடாது என்று டானினோ கூறியிருந்தார். இந்த ஆலோசனையை அவர் ஆரம்பத்தில் எதிர்த்தாலும், இறுதியாக படத்தின் அளவைக் குறைத்து, அதை அத்தியாயத்தின் தொடக்கப் பக்கத்தில் இருந்து உள்ளே இருக்கும் ஒரு பக்கத்திற்கு மாற்ற அவர் ஒப்புக்கொண்டார். இருப்பினும், அந்தப் படம் பாடப்புத்தகத்தில்  இன்னும் இடம்பெற்றுள்ளது.


• சிலையின் வடிவபகுதிப் மறைக்கப்பட்டதற்கும் நிர்வாணம் குறித்த கவலைகளுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்று கேட்கப்பட்டபோது, ​​NCERT இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானி இல்லை 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' இதழிடம், இதற்குப் பின்னணியில் குறிப்பிட்ட காரணம் ஏதுமில்லை என்று நான் நினைக்கிறேன் என்று கூறினார். 6-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், ஹரப்பா நாகரிகம் தொடர்பான பல கண்டுபிடிப்புகளுடன் 'நடன மங்கை' சிலையும் இடம்பெற்றுள்ளது. ஏனெனில், அதுவும் அத்தகைய கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். கலைப் பாடப்புத்தகங்களைப் பொறுத்தவரை, அது தொடர்பான பாடப்புத்தக உருவாக்கக் குழு (Textbook Development Team) (TDT)) உறுப்பினர்களை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்."


உங்களுக்குத் தெரியுமா?


• சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு. 3300–1300; அதன் முதிர்ந்த கட்டம் கி.மு. 2600–1900), ஹரப்பா–மொகஞ்சோதாரோ (Harappa-Mohenjodaro Civilisation) நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது. இது 1924-ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் வரை நீண்டகாலம் மறக்கப்பட்டிருந்தது. 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே இந்நாகரிகத்தின் தளங்களும் பொருட்களும் அறியப்பட்டிருந்தாலும், 1920-களில்தான் அவை சரியாக கணக்கீடு செய்யப்பட்டு, மெசபடோமியா மற்றும் எகிப்து போன்ற பழமையான நாகரிகங்களுக்கு இணையான முழுமையான நாகரிகமாக அங்கீகரிக்கப்பட்டன.


• இது ஒரு பழமையான நாகரிகம் என்று ஆரம்பத்தில் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, அதுவரை அறியப்பட்டிருந்த இரண்டு முக்கிய இடங்களான ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோவில் தொடர்ச்சியான அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அது போன்ற ஒரு அகழ்வாராய்ச்சியின்போது, ​​1926-ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஏர்னஸ்ட் மெக்கே என்பவரால் 'நடனமாடும் மங்கை' சிலை கண்டுபிடிக்கப்பட்டது.


• இந்தியப் பிரிவினைக்குப் பிறகு மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா ஆகியவை பாகிஸ்தான் எல்லைக்குள் அமைந்திருந்தாலும், ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 'நடனமாடும் பெண்' (Dancing Girl) சிலை இந்தியாவிலேயே  வைக்கப்பட்டது. இன்று, இந்தச்சிலை இந்தியாவின் தேசிய அருங்காட்சியகத்தில் 'HR-5721/195' என்ற அடையாள எண்ணுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சிந்து சமவெளி நாகரிகக் காட்சிக்கூடத்தில் உள்ள மிக முக்கியமான மற்றும் பார்வையாளர்களை வெகுவாகக் கவரும் ஒரு பொருளாக இது  இருந்து வருகிறது.


• பல ஆண்டுகளாக, தொல்லியல் ஆய்வாளர்களுக்கும் வரலாற்றாசிரியர்களுக்கும் இந்தச்சிலை அதிக ஈர்ப்பை அளித்து வருகிறது. குறிப்பாக, அந்தப் பெண் நிற்கும் தோரணையும் அதன் அர்த்தமும் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன.


வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர் தனது 'The Penguin History of Early India: From Origins to AD 1300' (2002) என்ற நூலில், இந்தச்சிலை "இளம் மற்றும் துடிப்பான பெண்ணின் கவரும் வகையில் தோற்றத்தை" கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், வரலாற்றாசிரியர் ஏ.எல். பாஷம் தனது புகழ்பெற்ற 'The Wonder that was India' (1954) என்ற நூலில், "மற்ற பழமையான நாகரிகங்களின் கலைப்படைப்புகளில் இல்லாத வகையில், இந்தப் பெண் துடிப்பான மற்றும் துணிச்சலான ஒரு தோற்றத்தைக் கொண்டுள்ளார் என்று எழுதியுள்ளார்.


• 1944 முதல் 1948 வரை இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் (Archaeological Survey of India (ASI)) இயக்குநராகப் பணியாற்றிய மோர்டிமர் வீலர், இந்தச் சிறிய சிலையைத் தனக்குப் மிகவும் பிடித்தமானதாகக் குறிப்பிட்டார். அவர், “தன்னைப் பற்றியும் உலகத்தைப் பற்றியும் முழு நம்பிக்கையுடன் நிற்கும் ஒரு பெண். உலகில் அந்த பெண்ணைப் போன்ற வேறு எதுவும் இல்லை என்று நான் நினைக்கிறேன் என்று எழுதியுள்ளார். 1902 முதல் 1928 வரை இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைமை இயக்குநராக இருந்து, ஹரப்பா மற்றும் மொகஞ்சோதாரோவில் நடைபெற்ற ஆரம்பகால அகழாய்வுகளை மேற்பார்வையிட்ட John Marshall, அந்தச் சிற்பத்தைப் பற்றி இது ஒரு இளம் பெண்ணின் உருவம். அந்தப் பெண் ஒரு கையை இடுப்பில் வைத்துக் கொண்டு, சற்றுத் துணிச்சலான தோரணையில்  நிற்பதாகவும் இசையின் தாளத்துக்கு ஏற்ப தனது கால்கள் மற்றும் பாதங்களால் தாளமிட்டு ஆடுவதைப் போல, அந்தப் பெண்ணினது கால்கள் முன்னோக்கி அமைந்துள்ளதாக  விவரித்தார்.


• இந்த வெண்கலச் சிலையிலிருந்து ஹரப்பா மக்களின் கலைத்திறன் மற்றும் உலோகவியல் தொழில்நுட்பத்தின் மேம்பட்ட நிலையை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. உலோகக் கலவை மற்றும் 'இழந்த மெழுகு வார்ப்பு முறை' (lost-wax casting) முறை ஆகியவற்றில் அந்த நாகரிகத்திற்கு இருந்த அறிவுக்கு இச்சிலை ஒரு சான்றாகும். "நடனமாடும் பெண்" சிலை, சிந்து சமவெளி நாகரிக மக்களின் உலோகக் கலவை மற்றும் இழந்த மெழுகு வார்ப்பு முறை பற்றிய மேம்பட்ட சான்றாக விளங்குகிறது. இழந்த மெழுகு வார்ப்பு முறை என்பது, முதலில் உருவாக்கப்பட்ட ஒரு சிற்பத்தின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு அதே வடிவத்தில் மற்றொரு உலோகச் சிற்பத்தை உருவாக்கும் ஒரு சிக்கலான தொழில்நுட்பமாகும். இந்த முறையின் மூலம் மிக நுணுக்கமான மற்றும் உயர்தர உலோகக் கலைப்பொருட்களை உருவாக்க முடியும்.


• மேலும், 'நடனமாடும் பெண்' போன்ற ஒரு சிலை இருப்பதிலிருந்தே ஹரப்பா சமூகத்தில் உயர்தரக் கலைத்திறன் இருந்ததை அறிய முடிகிறது. கலை மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே இருந்திருக்கலாம். ஆனால், அதன் நுட்பமும் மேம்பாடும் ஒரு சமூகத்தின் முன்னேற்ற நிலையை வெளிப்படுத்துகின்றன. மேலோட்டமாகப் பார்க்கையில், அந்த நடனமாடும் சிறுமி ஒரு பயன்பாட்டு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட பொருள் அல்ல. கலைஞர்கள், முற்றிலும் குறியீட்டு மற்றும் அழகியல் மதிப்பு கொண்ட ஒரு கலைப்படைப்பை உருவாக்குவதற்காக அதிக நேரத்தைச் செலவிட்டுள்ளனர்.


original article : How does the Dancing Girl figurine contribute to the understanding of Harappan social and cultural life? -Priya Kumari Shukla

Share:

இந்தூர் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டது பிரிக்ஸ் (BRICS) அமைப்பு : இதில் மேற்கொண்ட 4 முன்னுரிமைகள் மற்றும் 4 புதிய முயற்சிகள் என்ன? - ரோஷ்னி யாதவ்

 தற்போதைய நிகழ்வு :


அனைத்து விவாதங்களிலும் விவசாயிகளே மையமாக உள்ளனர் என்று வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் குறிப்பிட்ட நிலையில், ஜூன் 15 ஞாயிற்றுக்கிழமை அன்று ‘பிரிக்ஸ் இந்தூர் பிரகடனம்’ (BRICS Indore Declaration) ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கிடையில், டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் நகரமயமாக்கல் மன்றம் (BRICS Urbanisation Forum) ஜூன் 12 அன்று நிறைவடைந்தது. செய்தியாளர் சந்திப்பில் பேசிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால், 'பிரிக்ஸ் நகர்ப்புற ஆராய்ச்சி மற்றும் அறிவு வலையமைப்பை' (BRICS Urban Research and Knowledge Network) அமைப்பதற்கான இந்தியாவின் முன்மொழிவை BRICS நாடுகள் ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார்.


முக்கிய அம்சங்கள்:


1. இந்தூரில் நடைபெற்ற பிரிக்ஸ் வேளாண் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அளவிலான கூட்டங்களில் 'பிரிக்ஸ் இந்தூர் பிரகடனம்' (BRICS Indore Declaration) ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. உணவுப் பாதுகாப்பு, விவசாயிகளின் நலன், பருவநிலை மாற்றத்தைத் தாங்கும் திறன் கொண்ட விவசாயம், விவசாய வர்த்தகம் மற்றும் டிஜிட்டல் விவசாயம் ஆகியவற்றிற்குப் புதிய வழியை வழங்குவதே இதன் நோக்கமாகும்.


2. மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், இப்பிரகடனத்தின் முக்கிய அம்சம் விவசாயிதான் என்று கூறினார். விவசாயியை மையமாகக் கொண்டு உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து, வாழ்வாதாரம், விவசாய வர்த்தகம், புத்தாக்கம், முதலீடு, பருவநிலை மாற்றத்தைத் தாங்கும் திறன் கொண்ட விவசாயம் மற்றும் நிலையான விவசாய மேம்பாடு ஆகியவற்றை முன்னெடுப்பதற்கான கூட்டு உறுதிப்பாடு இப்பிரகடனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


3. 'இந்தூர் பிரகடனத்தின்' கவனம் விவசாயியின் மீதே உள்ளது என்று வேளாண் அமைச்சர் தெரிவித்தார். விவசாயியை மையமாகக் கொண்டு உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து, வாழ்வாதாரம், விவசாய வர்த்தகம், புத்தாக்கம், முதலீடு, பருவநிலை மாற்றத்தைத் தாங்கும் திறன் கொண்ட விவசாயம் மற்றும் நிலையான விவசாய மேம்பாடு ஆகியவற்றை முன்னெடுப்பதற்கான கூட்டு உறுதிப்பாட்டை இப்பிரகடனம் பதிவு செய்கிறது.


4. நான்கு முக்கிய முன்னுரிமைகள் : புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள இப்பிரகடனம், விவசாயிகள், உணவுப் பாதுகாப்பு, பருவநிலை மற்றும் தொழில்நுட்பம் ஆகிய நான்கு முக்கிய முன்னுரிமைகளில் கவனம் செலுத்துகிறது.


உங்களுக்குத் தெரியுமா?


   பிரிக்ஸ் (BRICS) நாடுகள் உலகின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதியைத் தன்னுள் கொண்டுள்ளன. உலகளாவிய விவசாய நிலத்தில் சுமார் 42 சதவீதத்தைக் கொண்டுள்ளன மற்றும் உலக தானிய உற்பத்தியில் கிட்டத்தட்ட 42 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன.


5. நான்கு நிறுவனரீதியான முன்னெடுப்புகள் : மேற்கூறிய நடவடிக்கைகளைத் தவிர, நான்கு நிறுவனரீதியான முன்னெடுப்புகளும் முன்மொழியப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு,


(i) வேளாண்-சூழலியல் மற்றும் மீளுருவாக்க வேளாண்மைக்கான சிறப்பு மையங்கள் (Centres of Excellence on Agro-Ecology and Regenerative Agriculture): வேளாண்-சூழலியல் மற்றும் மீளுருவாக்கம் சார்ந்த வேளாண்மைக்கான சிறப்பு மையங்களின் 'பிரிக்ஸ்' (BRICS) வலையமைப்பை நிறுவுவது, இயற்கை, அங்கக (organic) மற்றும் மீளுருவாக்க வேளாண் நடைமுறைகள் குறித்த கூட்டு ஆராய்ச்சி, அனுபவப் பகிர்வு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான ஒரு தளத்தை உருவாக்கும். இதன் மூலம், உறுப்பு நாடுகள் ஒன்றையொன்று சிறந்த நடைமுறைகளைக் கற்றுக்கொள்வதோடு, பருவநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய மற்றும் நிலையான வேளாண் அமைப்புகளை ஊக்குவிக்கும் என்று சௌஹான் கூறினார்.


குறிப்பாக, இந்தியாவில், மோதிபுரத்தில் உள்ள 'இந்திய வேளாண்மை அமைப்புகள் ஆராய்ச்சி நிறுவனம்' (Indian Institute of Farming Systems Research), இந்த வலைப்பின்னலின் கீழ் இயற்கை விவசாயத்திற்கான 'சிறப்பு மையமாக' (Centre of Excellence) முக்கியப் பங்கை வகிக்கிறது. இது கூட்டு ஆராய்ச்சி, அறிவுப் பகிர்வு மற்றும் பயிற்சி ஆகியவற்றில் பங்களிப்புகளை வழங்கும்.


(ii) டிஜிட்டல் விவசாயத்திற்கான பிரிக்ஸ் வலைப்பின்னல் (BRICS Network on Digital Agriculture) : இரண்டாவது முக்கிய முன்னெடுப்பு 'டிஜிட்டல் விவசாயத்திற்கான பிரிக்ஸ் வலைப்பின்னல்' ஆகும். இது செயற்கை நுண்ணறிவு, புவிசார் தொழில்நுட்பம், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மற்றும் தரவு சார்ந்த விவசாயத் தீர்வுகள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பிற்குப் புதிய நிலையை வழங்கும். இந்தியாவில் உள்ள ஐஐடி டெல்லி (IIT Delhi) இந்த வலைப்பின்னலை ஒருங்கிணைக்கும்.


(iii) விதை அமைப்புகளில் விவசாயிகளின் உரிமைகளுக்கான உலகளாவிய மன்றம் (Global Forum on Farmers’ Rights in Seed Systems) : மூன்றாவது அறிவிப்பு 'விதை அமைப்புகளில் விவசாயிகளின் உரிமைகளுக்கான உலகளாவிய மன்றத்தை' அமைப்பது தொடர்பானது. இது விவசாயிகளின் விதை உரிமைகள், உள்நாட்டு விதைகளின் பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரிய அறிவு ஆகியவற்றைப் பாதுகாக்கும்.


(iv) பிரிக்ஸ் அக்ரி-என் (BRICS AgriN - வேளாண் உள்ளீடுகள், மரபணு வளங்கள் மற்றும் தகவல் வலைப்பின்னல்) : நான்காவது முன்னெடுப்பு 'பிரிக்ஸ் அக்ரி-என்' ஆகும். இது வேளாண் உள்ளீடுகள், விதைகள் மற்றும் மரபணு வளங்கள் ஆகிய துறைகளில் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும்.


பல்வேறு நாடுகளில் கிடைக்கும் சிறந்த ரகங்கள், மரபணு வளங்கள் மற்றும் உள்ளீடுகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்ளவும், நடைமுறைக்கு ஏற்ற தீர்வுகளை உருவாக்கவும் ஏதுவாக, இந்த வலைப்பின்னல் தகவல் பரிமாற்றம், திறன் மேம்பாடு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை ஆகியவற்றை ஊக்குவிக்கும் என்று சௌஹான் கூறினார்.


பிரிக்ஸ் நகர்ப்புற ஆராய்ச்சி மற்றும் அறிவு வலையமைப்பு (BRICS Urban Research and Knowledge Network)


1. டெல்லியில் பிரிக்ஸ் நகரமயமாக்கல் மன்றம் (BRICS Urbanisation Forum) நிறைவடைந்தது. 'பிரிக்ஸ் நகர்ப்புற ஆராய்ச்சி மற்றும் அறிவு வலைப்பின்னலை' அமைப்பதற்கான இந்தியாவின் முன்மொழிவை பிரிக்ஸ் நாடுகள் ஏற்றுக்கொண்டதாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் தெரிவித்தார்.


2. பிரிக்ஸ் நாடுகளுக்குள் நகர்ப்புற ஒத்துழைப்பிற்கான நடைமுறை மற்றும் நிலையான வழிமுறையை வழங்குவதற்காக, ஒரு தலைமைப் பொறுப்பு (Chairship) மற்றும் நிறுவனரீதியான இணைப்பைக் கொண்ட தளமாக இந்த வலைப்பின்னல் வடிவமைக்கப்பட்டுள்ளது.


3. இது முறையான அறிவுப் பகிர்வு மற்றும் பரஸ்பர கற்றலை ஆதரிக்கும். அதே வேளையில் நடைமுறைத் தீர்வுகள், நகர அளவிலான அனுபவங்கள் மற்றும் செயல்பாட்டுப் பாடங்கள் ஆகியவற்றைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் கொள்கைக்கும் அமலாக்கத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க உதவும்.


4. இணையம் சார்ந்த (virtual), குறைந்த செலவு மற்றும் நெகிழ்வான மாதிரியின் மூலம் செயல்படும் இந்த வலைப்பின்னலை, ஒவ்வொரு ஆண்டும் பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பை வகிக்கும் நாட்டின் முதன்மை நிறுவனம் ஒருங்கிணைக்கும். இதன் செயல்பாடுகள் மற்றும் முடிவுகள் அடுத்த தலைமைப் பொறுப்பை ஏற்பவர்களிடம் ஒப்படைக்கப்படும்.



பிரிக்ஸ்  மற்றும் புதிய மேம்பாட்டு வங்கி (New Development Bank)


1. பிரிக்ஸ் (BRICS) என்பது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பைக் குறிக்கிறது. இவை மேற்கத்திய நாடுகள் சாராத பெரிய பொருளாதாரங்களைக் கொண்ட ஆரம்பகால ஐந்து உறுப்பினர்களாகும். 2025-ல், இந்தோனேசியா அதிகாரப்பூர்வமாக முழு உறுப்பினராக இதில் இணைந்தது. இதனால் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்தது. எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் இக்கூட்டமைப்பின் ஒரு பகுதியாக உள்ளன. இக்கூட்டமைப்பு தற்போது உலகின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதியையும், உலகப் பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட கால்பகுதியையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. சவுதி அரேபியாவும் இதில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


2. 'BRIC' (பிரிக்) என்ற சுருக்கப்பெயர் முதன்முதலில் 2001-ம் ஆண்டில் கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs) நிறுவனத்தால் ’உலகிற்குச் சிறந்த பொருளாதார 'பிரிக்' நாடுகள் தேவை’ (The World Needs Better Economic BRICs) என்ற தலைப்பிலான அதன் உலகளாவிய பொருளாதார ஆய்வறிக்கையில் பயன்படுத்தப்பட்டது. அடுத்த 50 ஆண்டுகளில் பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகியவை உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாகத் திகழும் என்று அந்த அறிக்கை கணித்திருந்தது.


3. 2006-ம் ஆண்டில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெற்ற G8 அவுட்ரீச் (Outreach) உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் தலைவர்கள் சந்தித்ததைத் தொடர்ந்து, 'பிரிக்' (BRIC) ஒரு முறையான கூட்டமைப்பாகத் தொடங்கியது. 2006-ல் நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் (UNGA) கூட்டத்தின்போது நடைபெற்ற 'பிரிக்' (BRIC) வெளியுறவு அமைச்சர்களின் முதல் கூட்டத்தில் இந்த அமைப்பு முறைப்படுத்தப்பட்டது.


4. முதல் பிரிக் உச்சிமாநாடு 2009-ல் ரஷ்யாவின் யெகாடெரின்பர்க் (Yekaterinburg) நகரில் நடைபெற்றது. 2010-ல் நியூயார்க்கில் நடைபெற்ற பிரிக் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் தென்னாப்பிரிக்காவை இதில் இணைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 2011-ல் சீனாவின் சான்யா (Sanya) நகரில் நடைபெற்ற 3-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் தென்னாப்பிரிக்கா பங்கேற்றது.


5. புதிய மேம்பாட்டு வங்கி (New Development Bank(NDB)) என்பது பிரிக்ஸ் நாடுகளால் நிறுவப்பட்ட ஒரு பன்முக மேம்பாட்டு வங்கியாகும். புதிய மேம்பாட்டு வங்கியை (NDB) நிறுவுவதற்கான யோசனை முதன்முதலில் 2012-ல் இந்தியாவில் உள்ள புது தில்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டின்போது முன்வைக்கப்பட்டது. இதனை நிறுவுவதற்கான ஒப்பந்தம் ஜூலை 15, 2014 அன்று கையெழுத்தானது. பின்னர் ஃபோர்டலேசாவில் (Fortaleza) நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது, ​​ஜூலை 21, 2015 அன்று இவ்வங்கி செயல்பாட்டுக்கு வந்தது. இது 'ஃபோர்டலேசா பிரகடனம்' (Fortaleza Declaration) என்று அழைக்கப்படுகிறது.


original article : BRICS adopts Indore Declaration: What are 4 priorities and 4 new initiatives? -Roshni Yadav

Share:

இல்லத்தரசிகள் (Homemakers) தேசத்தை உருவாக்குபவர்கள் : ஊதியம் பெறாத வீட்டு வேலைகளின் பொருளாதார மதிப்பை உச்சநீதிமன்றம் எவ்வாறு அங்கீகரித்தது? - அமால் ஷேக்

 இல்லத்தரசிகள் (homemakers) செய்யும் பணிக்கான முக்கியத்துவத்தை நீதிமன்றங்கள் கோட்பாட்டளவில் அங்கீகரித்திருந்தாலும், அதற்கான பண மதிப்பை நிர்ணயிப்பதில் பல ஆண்டுகளாகச் சிரமங்களை எதிர்கொண்டு வந்துள்ளன. தனது, சமீபத்திய உத்தரவில் உச்சநீதிமன்றம் இந்த இடைவெளியைச் சரிசெய்ய முயன்றுள்ளது. இது குறித்த முக்கிய விவரங்கள் கீழே கூறிப்பிட்டுள்ளது.


2001-ல் ஹரியானாவில் நடந்த சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையை, ஒரு தீர்ப்பாயம் முதலில் ரூ. 2.42 லட்சம் என நிர்ணயித்திருந்தது. கடந்த வாரம், உச்சநீதிமன்றம் அந்தத் தொகையை ரூ. 62.77 லட்சமாக உயர்த்தியது. இந்த வித்தியாசமானது, இல்லத்தரசிகள் மேற்கொள்ளும் ஊதியம் பெறாத வீட்டு வேலைகளின் பொருளாதார மதிப்பை அங்கீகரிப்பதில் இழப்பீடு தொடர்பான சட்டங்கள் கொண்டுள்ள தோல்வி எனும் ஆழமான சிக்கலை வெளிப்படுத்துவதாக நீதிமன்றம் கூறியது.


உச்சநீதிமன்றம் "வீட்டுப் பராமரிப்பு இழப்பு" (loss of domestic care) என்ற புதிய வகை இழப்பீட்டு முறையை உச்சநீதிமன்றம் அறிமுகப்படுத்தியது. நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் என். கோதிஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, இல்லத்தரசிகள் வெறும் பராமரிப்பாளர்கள் மட்டுமல்ல, மாறாக "பொருளாதாரரீதியான பங்களிப்பாளர்கள்" (economic entities) என்றும், குடும்பத்திற்கு அவர்கள் அளிக்கும் பங்களிப்பு நீதிமன்றங்களால் தொடர்ந்து குறைவாகவே மதிப்பிடப்பட்டு வந்துள்ளது என்றும் கூறியது. "பொதுவாக, 'இல்லத்தரசிகள்' உண்மையில் 'தேசத்தை உருவாக்குபவர்கள்' என்றும், அவர்கள் அவ்வாறே அங்கீகரிக்கப்பட வேண்டும்" என்று நீதிமன்றம் தெரிவித்தது.


இழப்பீட்டுச் சட்டம் எவ்வாறு செயல்படுகிறது?


சாலை விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழக்கும்போது, ​​1988-ம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டத்தின் (Motor Vehicles Act) கீழ் அவரது குடும்பத்தினர் இழப்பீடு கோர வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை பெரும்பாலும் கணிதரீதியானது. முதலில், நீதிமன்றம் உயிரிழந்தவரின் வருமானத்தைக் கணக்கில் கொள்கிறது, அதிலிருந்து தனிப்பட்ட செலவுகளுக்கான ஒரு பகுதி கழிக்கப்படுகிறது. அதன்பிறகு, எதிர்கால வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு ஒரு குறிப்பிட்ட சதவீதம் கூட்டப்படுகிறது. இறுதியாகக் கிடைக்கும் அந்தத் தொகை, உயிரிழந்தவரின் வயதைப் பொறுத்து அமையும் ஒரு குறிப்பிட்ட எண்ணால் பெருக்கப்படுகிறது. இந்தக் கணக்கீட்டின் தொடக்கத்தில் பயன்படுத்தப்படும் வருமானத்தின் அளவு மிக முக்கியமானது. ஏனெனில், இறுதி இழப்பீட்டுத் தொகையை இதுவே பெருமளவில் தீர்மானிக்கிறது.


சம்பளம் பெறும் நபருக்கு, ஊதியச் சீட்டுகள் (payslips) மற்றும் வருமான வரித் தாக்கல் விவரங்கள் உள்ளன. ஆனால் வீட்டுப் பராமரிப்பாளரைப் பொறுத்தவரை, அத்தகைய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதை நிவர்த்தி செய்ய, சட்டத்தின் தீர்வாக, "கருத்தியல் வருமானம்" (notional income) என்ற கருத்தை உருவாக்கியது. இது, வீட்டு வேலைக்கு ஊதியம் வழங்கப்படாவிட்டாலும் அதற்கு மதிப்பு உண்டு என்பதை அங்கீகரிக்கும் வகையில், உயிரிழந்தவருக்கு நீதிமன்றங்கள் கற்பிக்கும் ஒரு வருமான மதிப்பீடு இதுவாகும்.




2026-ம் ஆண்டு உத்தரவுக்கு முன் இல்லத்தரசிகளை நீதிமன்றங்கள் எவ்வாறு மதிப்பிட்டன?


உச்சநீதிமன்றத்தின் முன் உள்ள இந்தக் கேள்வி முற்றிலும் புதியது அல்ல. இல்லத்தரசிகள் செய்யும் பணிக்கான பண மதிப்பை எவ்வாறு நிர்ணயிப்பது என்பது குறித்து பல ஆண்டுகளாக நீதிமன்றங்கள் விவாதித்து வந்துள்ளன. ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான 'லதா வாத்வா vs பீகார் மாநிலம்-2001' (Lata Wadhwa vs State of Bihar) வழக்கில், இழப்பீடு வழங்கும் போது இல்லத்தரசிகளின் சேவைகளைப் புறக்கணிக்க முடியாது என்பதை உச்சநீதிமன்றம் அங்கீகரித்தது. 34 முதல் 59 வயதுக்குட்பட்ட இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ. 3,000 என்ற 'கருதுகோள் வருமானத்தை' (notional income) நீதிமன்றம் அங்கீகரித்தது.


அதே காலகட்டத்தில், மோட்டார் வாகனச் சட்டத்தின்கீழ், வருமானம் ஈட்டாத ஒரு நபரின் ஆண்டு வருமானம் ரூ.15,000 இருப்பதாகக் கருதப்பட்டது. இந்த அளவீடுகள் நாடு முழுவதும் இழப்பீட்டைக் கணக்கிடுவதற்கான ஒரு தொடக்கப் புள்ளியாக அமைந்தன.


இருப்பினும், இல்லத்தரசியின் பணிகளை இத்தகைய தொகைகள் உண்மையாகவே பிரதிபலிக்கின்றனவா என்ற கேள்வி நீதிமன்றங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வந்தது. 'அருண் குமார் அகர்வால் மற்றும் பிறர் vs நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்-2010' (Arun Kumar Agarwal and Anr vs National Insurance Co. Ltd) வழக்கில், ஒரு மனைவியின் மற்றும் தாயின் பங்களிப்பு என்பது சமையல் அல்லது வீட்டைச் சுத்தம் செய்வது போன்ற பணிகளைத் தாண்டிப் பரந்துபட்டது என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. இல்லத்தரசி வீட்டை நிர்வகித்தல், குழந்தைகளைப் பராமரித்தல், அவர்களின் வளர்ச்சிப் பருவத்தில் வழிகாட்டுதல் மற்றும் குடும்பத்தின் பிற உறுப்பினர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பைப் பெற உதவுதல் போன்ற பணிகளைச் செய்கிறார். இச்சேவைகளை "ஈடு இணையற்றவை" என்று வர்ணித்த நீதிமன்றம், இவற்றை ஊதியம் பெறும் வீட்டுப் பணியாளரின் பணிகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது தவறு என்றும் எச்சரித்தது.


'நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் vs பிரணய் சேத்தி-2017' (National Insurance Co. Ltd vs Pranay Sethi) வழக்கின் மூலம் இழப்பீட்டைக் கணக்கிடும் முறை மேலும் சீராக்கப்பட்டது. இவ்வழக்கில், அரசியலமைப்புச் சட்ட அமர்வு ஒன்று, எதிர்கால வருமான வாய்ப்புகள் (future prospects) மற்றும் துணை இழப்பு (loss of consortium), இறுதிச் சடங்குச் செலவுகள், சொத்து இழப்பு போன்றவற்றின்கீழ் நிலையான தொகைகளைச் சேர்ப்பதற்கான விதிகளை வகுத்தது. இந்தத் தீர்ப்பு நாடு முழுவதும் இழப்பீடு வழங்குவதில் அதிக சீரான தன்மையை உறுதிசெய்தது.


இருப்பினும், இத்தகைய உத்தரவுகளுக்குப் பிறகும், நீதிமன்றங்கள் 'கருதுகோள் வருமான' (notional income) அளவீடுகளையே தொடர்ந்து நம்பியிருந்தன. வீட்டுப் பணிகளின் மதிப்பு கொள்கையளவில் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், ஒரு இல்லத்தரசி தினமும் குடும்பத்திற்கு அளிக்கும் பொருளாதாரப் பங்களிப்பைக் கணக்கிடுவதற்கான தெளிவான வழிமுறை எதுவும் இருக்கவில்லை. இந்த இடைவெளியையே உச்சநீதிமன்றம் தனது 2026-ம் ஆண்டு உத்தரவின் மூலம் சரிசெய்ய முயன்றது.


இல்லத்தரசிகள் ஏன் இந்தச் சட்டக் கட்டமைப்பிற்குள் முழுமையாகப் பொருந்தவில்லை?


இதில் உள்ள சிக்கல், கணக்கிடப்படும் வருமானத் தொகை குறைவாக இருப்பது மட்டுமல்ல, ஒரு இல்லத்தரசி உண்மையில் அளிக்கும் பங்களிப்பை 'கருதுகோள் வருமானம்' (notional income) என்ற அளவீடு முழுமையாகப் பிரதிபலிக்க முடியாது என்பதே முக்கியப் பிரச்சினையாகும்.


தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் 2019-ம் ஆண்டு 'நேரப் பயன்பாட்டுக் கணக்கெடுப்பை' (Time Use Survey) உச்சநீதிமன்றம் இதைச் சுட்டிக்காட்டியது. இக்கணக்கெடுப்பின்படி, 15 முதல் 59 வயதுக்குட்பட்ட பெண்கள் ஊதியம் பெறாத வீட்டு வேலைகளில் தினமும் 7 மணி நேரத்திற்கும் மேலாகச் செலவிடுகின்றனர் (ஆண்கள் 3 மணி நேரத்திற்கும் குறைவாகவே செலவிடுகின்றனர்). மேலும், பெண்களின் ஊதியம் பெறாத பராமரிப்புப் பணிகள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 15 முதல் 17% பங்களிப்பை அளிக்கின்றன. இருப்பினும், ஊதியம் பெறாத பணிகள் உற்பத்திசார் பொருளாதார நடவடிக்கையாகக் கணக்கிடப்படாததால், இந்தப் பங்களிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) புள்ளிவிவரங்களில் இடம்பெறுவதில்லை.


ஒரு இல்லத்தரசி உயிரிழக்கும்போது ஏற்படும் மூன்று வகையான இழப்புகளை நீதிமன்றம் அடையாளம் கண்டுள்ளது. அவை,


  • குடும்பத்தை நிர்வகிக்கும் பணி,


  • குழந்தைகளுக்குத் திறன்கள், மொழி மற்றும் விழுமியங்களை அன்றாடம் கற்றுக்கொடுக்கும் 'முதல் ஆசிரியர்' என்ற நிலையில் ஏற்படும் இழப்பு (இதை வேறு எந்த ஊதியம் பெறும் ஏற்பாட்டாலும் ஈடுசெய்ய முடியாது) மற்றும்


  • வருமானம் ஈட்டும் துணைவர் தனது வேலையில் கவனம் செலுத்த உதவிய வீட்டுச் சூழல் அல்லது கட்டமைப்பு சார்ந்த இழப்பு.


இவை இல்லத்தரசியின் பங்களிப்பை "முழுமையாகப் பொருளாதாரரீதியானதுமல்ல, அதே சமயம் முழுமையாகப் பொருளாதாரம் சாராததுமல்ல" என்ற நிலைக்குக் கொண்டுவருவதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.


இத்தகைய இழப்பை அங்கீகரிக்கச் சட்டத்தில் மற்றொரு வழிமுறையும் உள்ளது. அதுதான் 'குடும்பத் துணை இழப்புக்கான இழப்பீடு' (loss of consortium) ஆகும். 'பிரணய் சேத்தி' (Pranay Sethi) வழக்கின் தீர்ப்பின்படி, இது ஒரு சார்ந்திருப்பவருக்கு (dependent) 40,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்தீர்ப்பு, துணைவர் இழப்பு, சொத்து இழப்பு மற்றும் இறுதிச் சடங்குச் செலவுகள் போன்ற வழக்கமான இழப்பீடுகளை நிர்ணயிப்பதன் மூலம் இழப்பீட்டுச் சட்டத்தை முறைப்படுத்தியது.


ஆனால், தற்போதைய உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, 'குடும்பத் துணை இழப்புக்கான இழப்பீடு' (loss of consortium) என்பது "அன்பு, ஆறுதல், தேறுதல், தோழமை, சமூக உறவு, உதவி மற்றும் பாதுகாப்பு" ஆகியவற்றின் இழப்பையே ஈடுசெய்கிறது. இது வீட்டு நிர்வாகத்தின் உறுதியான பொருளாதார மதிப்பைவிட, உணர்வுப்பூர்வமான இழப்பையே குறிப்பதாக அமைகிறது.

'கருதுகோள் வருமானம்' (notional income) கணக்கில் கொள்ளும் விஷயங்களுக்கும், 'குடும்பத் துணை இழப்புக்கான இழப்பீடு' ஈடுசெய்யும் விஷயங்களுக்கும் இடையிலான அந்த இடைவெளியில்தான், இல்லத்தரசியின் உண்மையான பங்களிப்பு கவனிக்கப்படாமல் விடுபட்டுப் போயிருந்தது. 


நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?


உச்சநீதிமன்றம் "வீட்டுப் பராமரிப்பு இழப்பு" (loss of domestic care) என்ற பெயரில் ஒரு புதிய இழப்பீட்டு வகையை உருவாக்கியது. இதற்கான அடிப்படை மதிப்பு ரூ. 30,000 என நிர்ணயிக்கப்பட்டது. வீட்டுப் பணிகளை மேற்கொள்ளும் ஒருவரை, பராமரிப்பு வழங்குபவராகவும் அதே சமயம் பொருளாதாரரீதியாகப் பங்களிப்பவராகவும் நீதிமன்றம் வரையறுத்தது.


பின்வரும் மூன்று நிபந்தனைகளும் பூர்த்தியாகும் சூழலில் இந்த இழப்பீட்டு வகை பொருந்தும். அவை,


  • வீட்டு நிர்வாகத்தில் அந்த நபர் (வீட்டுப் பணிகளை மேற்கொள்பவர்) பங்களித்திருத்தல்,


  • குடும்பத்திலுள்ள குழந்தைகள் அவரது தாய்மைக்குரிய பராமரிப்பு மற்றும் வழிகாட்டுதலை இழந்திருத்தல், மற்றும்


  • வாழ்க்கைத் துணை அல்லது பெற்றோர் அவரது ஆதரவை இழந்திருத்தல்.


இந்த மூன்று நிபந்தனைகளும் பூர்த்தியாகும்போது, ​​மாதத்திற்கு ரூ. 30,000 என்பது அடிப்படை வருமானமாகக் கருதப்படுகிறது. இதுவே கணக்கீட்டின் தொடக்கப் புள்ளியாக அமைகிறது (முன்பு பயன்படுத்தப்பட்ட கருதுகோள் வருமானத்திற்கு மாற்றாக இது உள்ளது). இதனுடன் வருங்கால வாய்ப்புகள் (prospects) சேர்க்கப்பட்டு, 'பெருக்கி' (multiplier) இதற்கான காரணி பயன்படுத்தப்படுகிறது. 'பெருக்கி' என்பது, இறந்தவர் குடும்பத்திற்குத் தொடர்ந்து எத்தனை ஆண்டுகள் பங்களித்திருப்பார் என்பதை மதிப்பிட நீதிமன்றங்களால் பயன்படுத்தப்படும் வயது சார்ந்த ஒரு எண்ணாகும். வீட்டுப் பணிகளை மேற்கொண்ட அந்த நபர் ஊதியம் பெறும் வேலையிலும் ஈடுபட்டிருந்தால், அவரது உண்மையான வருமானத்துடன் இந்த ரூ. 30,000 தொகையும் கூட்டப்படும்.


'பிரணய் சேத்தி' (Pranay Sethi) வழக்கில் 'கன்சார்டியம்' (consortium - குடும்ப உறவு மற்றும் துணையின் இழப்பு) இழப்பீட்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட அதே கால அட்டவணையின்படி, இந்தத் தொகையும் ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒருமுறை 10% உயர்த்தப்படும்.


'கன்சார்டியம்' இழப்பீட்டிலிருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது என்பது குறித்து நீதிமன்றம் குறிப்பிடுகையில், "கன்சார்டியம் என்பது இழப்பின் உணர்வுப்பூர்வமான அம்சங்களை மட்டுமே பெரும்பாலும் கையாள்கிறது. வீட்டுப் பணிகளை மேற்கொள்பவரின் பொருளாதாரரீதியான பங்களிப்பிற்கு அதில் கவனம் செலுத்தப்படுவதில்லை" என்று கூறியது. 'வீட்டுப் பராமரிப்புப் பணி இழப்பு' (loss of domestic care) என்பது அந்த மற்றொரு அம்சத்தை (பொருளாதாரப் பங்களிப்பை) ஈடுசெய்கிறது.


இவ்வழக்கில், இறந்த வீட்டுப் பராமரிப்பாளர் 35 வயதுடையவர். தீர்ப்பில் வகுக்கப்பட்ட புதிய வழிமுறையைப் பயன்படுத்தி, குடும்பத்தினர் சார்ந்திருந்த வருமான இழப்பிற்கான (loss of dependency) இழப்பீட்டை உச்சநீதிமன்றம் ரூ. 60.48 லட்சமாகக் கணக்கிட்டது. கன்சார்டியம் (consortium), சொத்து இழப்பு மற்றும் இறுதிச் சடங்கு செலவுகள் போன்ற அங்கீகரிக்கப்பட்ட பிறவற்றின்கீழ் உள்ள தொகைகளைச் சேர்த்த பிறகு, மொத்த இழப்பீட்டுத் தொகை ரூ. 62.77 லட்சமாக அமைந்தது.


வழக்குகள் நிலுவையில் இருத்தல்


இந்த வழக்கு 25 ஆண்டுகளாகத் தாமதமானது குறித்தும் அந்த உத்தரவு குறிப்பிட்டது. பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டு வழக்கு ஏறக்குறைய இருபதாண்டுகளாக நிலுவையில் இருந்தது. நீதிமன்ற ஆவணங்கள் தீ விபத்தில் சேதமடைந்து அவற்றை மீண்டும் உருவாக்க வேண்டியிருந்ததும் இதற்கொரு காரணமாக அமைந்தது.


இத்தகைய நீண்ட கால நிலுவை என்பது ஒரு தனிப்பட்ட நிகழ்வா அல்லது ஒரு பரவலான போக்கின் பகுதியா என்பதை ஆராய இந்தத் தாமதம் நீதிமன்றத்தைத் தூண்டியது. 120-க்கும் மேற்பட்ட வாகன விபத்து தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை ஆய்வு செய்ததில், உயர்நீதிமன்ற நிலையில் சராசரி நிலுவைக் காலம் சுமார் 8 ஆண்டுகளாக இருப்பது தெரியவந்தது.


"ஒருவரின் குடும்பத்தில் முக்கிய அங்கமாகத் திகழ்ந்த ஒருவரை இழந்ததால் ஏற்பட்ட இழப்பை ஒருபோதும் முழுமையாக ஈடுசெய்ய முடியாது என்றாலும், 'நியாயமான மற்றும் சரியான' இழப்பீடு என்பது, அந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடைபெறாத ஒரு நிலைக்குப் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டு செல்லும் வகையிலான தொகையை அவர்களுக்கு வழங்குவதையே குறிக்கிறது," என்று நீதிமன்றம் கூறியது. "காரணம் எதுவாக இருந்தாலும், இதற்கு இருபது ஆண்டுகள் ஆகும்போது, ​​அதனால் ஏற்படும் துயரம் மேலும் அதிகரிக்கிறது."


வாகன விபத்து தொடர்பான மிக நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு முன்னுரிமை அளித்து அவற்றின் பட்டியலைத் தயாரிக்குமாறும், தேவைப்படும் இடங்களில் அதற்கென ஒதுக்கப்பட்ட சிறப்பு அமர்வுகளை (dedicated benches) விரிவுபடுத்துமாறும் அனைத்து உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், தீர்ப்பாயங்கள் இயன்றவரை விரைவான நடைமுறைகளைக் (summary procedure) கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தியது.


original article : Homemakers are nation builders: How Supreme Court recognised economic value of unpaid domestic labour? -Amaal Sheikh

Share: