கருத்தரிப்புக்கு முந்தைய மற்றும் பிறப்புக்கு முந்தைய பாலினக் கண்டறிதல் தொழில்நுட்பத் தடைச் சட்டத்தின்கீழ் (Pre-Conception and Pre-Natal Diagnostic Techniques Act (PCPNDT Act)) தாக்கல் செய்யப்பட்ட ஒரு மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தபோது, உச்சநீதிமன்றம் இந்தச் சட்டத்தின் வரலாற்றுப் பின்னணியை உற்று நோக்கியது. இந்தச் சட்டம், கருத்தரிப்பதற்கு முன்போ அல்லது கருத்தரித்த பின்புக்கோ பாலினத்தைத் தேர்ந்தெடுப்பதைத் தடை செய்கிறது. மேலும், பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிவதற்காக மகப்பேறுக்கு முந்தைய கண்டறியும் தொழில்நுட்பங்களைப் (Pre-natal diagnostic techniques) பயன்படுத்துவதைத் தடுக்கிறது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், தனக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை ஜூன் மாதம் 11-ஆம் தேதி நிராகரித்தது. இந்த வழக்கு, கருத்தரிப்புக்கு முந்தைய மற்றும் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைத் தீர்மானிப்பதைத் தடுக்கும் சட்டத்தின்கீழ் (PCPNDT Act, 1994) பதிவு செய்யப்பட்டது. இந்தச் சட்டத்தின் வரலாறு மற்றும் இந்தியாவில் பல பகுதிகளில் நிலவும் பாலின விகிதக் குறைபாடு போன்ற முக்கியப் பிரச்சினைகளை நீதிமன்றம் ஆய்வு செய்தது. புள்ளிவிவரங்களின்படி, பாலின விகிதத்தை மேம்படுத்துவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், இன்னும் முழுமையடையாமலும், அனைத்து இடங்களிலும் சமமாக இல்லாமலும் இருப்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
பெண் சிசுக்கொலையை ஒழிப்பதற்கான ஒரு சிறப்புச் சட்டம்.
1981 மற்றும் 1991-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், இந்தியாவின் குழந்தைகள் பாலின விகிதம் (Child sex ratio) 962-லிருந்து 945-ஆகக் குறைந்தது. ஏறத்தாழ இதே காலகட்டத்தில்தான், ‘Ultrasound’ எனப்படும் ஸ்கேன் தொழில்நுட்பம் பரவலாகக் கிடைக்கத் தொடங்கியது. பிறப்பதற்கு முன்பே குழந்தையின் பாலினத்தைக் கண்டறிய இந்தத் தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, கருத்தரிப்புக்கு முந்தைய மற்றும் பிறப்புக்கு முந்தைய பாலினக் கண்டறிதல் தொழில்நுட்பத் தடைச் சட்டம் (PCPNDT Act) நிறைவேற்றப்பட்டது. பிறக்கப்போகும் குழந்தை பெண் குழந்தை என்பதை அறிந்து, குடும்பத்தினர் அல்லது சமூகத்தின் வற்புறுத்தல் காரணமாகப் பெண் சிசுக்கொலை (Sex-selective abortion) செய்வதைத் தடுப்பதற்காக, பிறப்புக்கு முந்தைய பாலின நிர்ணயத்தை இந்தச் சட்டம் சட்டவிரோதமாக்கியது.
பல நாடுகள் பிறப்பதற்கு முன்பே குழந்தையின் பாலினத்தை அறிந்துகொள்ள அனுமதிக்கின்றன, ஆனால் பாலினத்தின் அடிப்படையிலான கருக்கலைப்பை மட்டுமே தடை செய்கின்றன. மாறாக, இந்தியச் சட்டம் இவை இரண்டையுமே தடை செய்கிறது.
கருத்தரிப்பதற்கு முன்பும் சரி, பின்பும் சரி பாலினத்தைத் தேர்ந்தெடுப்பதை இந்தச் சட்டம் தடை செய்கிறது. இந்த ஸ்கேன் பரிசோதனைகள் (Prenatal diagnostic techniques) குழந்தையின் மரபணு குறைபாடுகள் அல்லது வளர்சிதை மாற்றக் கோளாறுகளைக் கண்டறிவதற்காக மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிய இவற்றைப் பயன்படுத்தக் கூடாது. கர்ப்பகால ஸ்கேன் செய்யும் ‘Ultrasound’ கிளினிக்குகளுக்குக் கட்டாயப் பதிவு உட்பட பல விதிமுறைகளை இந்தச் சட்டம் முதன்முதலாக அறிமுகப்படுத்தியது. மருத்துவமனைகள் சட்டத்தை மீறினால், அவற்றின் உரிமம் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்யப்படலாம்.
இந்தச் சட்டத்தில் குற்றவியல் தண்டனைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டத்தை மீறும் எந்தவொரு தனிநபரோ, அமைப்போ ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கர்ப்ப காலம் முழுவதும் ‘Ultrasound’ ஸ்கேன் பரிசோதனைகள் செய்யப்படுவதால், அவற்றைப் பற்றிய ஆவணங்களைப் பராமரிப்பதில் இந்தச் சட்டம் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. மருத்துவமனை மற்றும் நோயறிதல் மையங்கள் தங்களின் ஆவணங்களைத் துல்லியமாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, நோயாளியின் மருத்துவ வரலாறு மற்றும் பிற விவரங்களைப் பதிவு செய்யும் கட்டாயமான "F" படிவத்தை (F Form) முறையாகப் பராமரிக்க வேண்டும்.
இந்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையிலும், 2002 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்ட போதிலும், விதிமீறல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. குறிப்பாக ஹரியானா மற்றும் பஞ்சாப் போன்ற பல மாநிலங்கள், சட்டவிரோத பாலின நிர்ணயத்தைத் (Sex determination) தடுக்க விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் கொள்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளன. பிறக்காத குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்தியதாகவும், பெண் சிசுக்கொலைக்கு உதவியதாகவும் கூறி சுகாதார அதிகாரிகள், மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் ஸ்கேன் மைய ஊழியர்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மகாராஷ்டிர மருத்துவர் மீதான வழக்கு
மகாராஷ்டிராவின் நாந்தேட் (Nanded) பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ரமேஷ் போலே, 2017-ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தின் அவுரங்காபாத் கிளையை அணுகினார். கருத்தரிப்புக்கு முந்தைய மற்றும் பிறப்புக்கு முந்தைய பாலினக் கண்டறிதல் தொழில்நுட்பத் தடைச் சட்டத்தின்கீழ் (PCPNDT) தனக்கு அழைப்பாணை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அவர் இந்த வழக்கைத் தொடர்ந்தார்.
மருத்துவர் போலே ஒரு ‘Sonography’ ஸ்கேனிங் மையத்தை நடத்தி வந்தார். பெயர் குறிப்பிடாத நபர் அளித்த புகாரின் அடிப்படையில், நாந்தேடு மாவட்ட அரசு தலைமை மருத்துவர் அந்த மையத்தில் சோதனை நடத்தினார். அந்தச் சோதனையில், "படிவம் F" (Form F) பதிவேட்டைத் தவிர வேறு எந்த ஆவணங்களும் காட்டப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக, ஏழு ஆவணங்களில் கர்ப்பிணிப் பெண்களின் கையொப்பம் மற்றும் உறுதிமொழி பெறப்படவில்லை என்றும், ஒன்பது ஆவணங்களில் ஸ்கேன் செய்த மருத்துவரின் கையொப்பம் இல்லை என்றும் கண்டறியப்பட்டது.
மருத்துவமனையில் இன்னும் சில முறைகேடுகளும் நடந்திருப்பதாகக் கூறிய அரசு தலைமை மருத்துவர், அதுகுறித்து விளக்கம் கேட்டு அழைப்பாணைஅனுப்பினார். அதன் அடிப்படையில், அந்தப் பொறுப்பதிகாரி முன் ஆஜரான டாக்டர் போலே (Bole), படிவங்களைப் பூர்த்தி செய்யும் பணி மருத்துவமனை ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. சில நேரங்களில் வேலைப்பளு மற்றும் அதிகக் கூட்டம் காரணமாக, சில கையெழுத்துகளையோ அல்லது விபரங்களையோ அவர்கள் எழுதாமல் விட்டிருக்கலாம் என்று விளக்கமளித்தார்.
மேலும், இது ஒரு சிறிய தவறுதானே தவிர, பாலின நிர்ணயம் (Sex determination) செய்யும் சட்டவிரோத கும்பலுடன் தமக்கு ஏதேனும் தொடர்பு இருக்கிறது என்பதை நிரூபிக்க இது ஆதாரமாகாது என்றும் போலே கூறினார். மாநில அரசின் விதிகளின்படி தேவையான அனைத்து ஆவணங்களும் உரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், எந்த ஒரு விபரத்தையும் மறைக்கும் நோக்கம் தமக்கு இல்லை என்றும் வாதிட்டார்.
ஆனால், உயர்நீதிமன்றம் அவரது மனுவை நிராகரித்துவிட்டது. ஆவணங்களைப் பராமரிப்பதில் எந்தவொரு பிழையோ அல்லது தவறோ நடப்பதற்கு இந்த கருத்தரிப்புக்கு முந்தைய மற்றும் பிறப்புக்கு முந்தைய பாலினக் கண்டறிதல் தொழில்நுட்பத் தடைச் சட்டம் (PCPNDT Act) இடம் தரவில்லை என்று நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியது. மேலும், குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மையும் முறைகேடுகள் நடந்த விதமும் நீதிமன்ற விசாரணையின்போதுதான் தெரியவரும் என்றும் குறிப்பிட்டது. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அந்த மருத்துவர் உச்சநீதிமன்றத்தை நாடினார். ஆனால் அங்கும் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
உச்சநீதிமன்றம் கூறியது என்ன?
உச்சநீதிமன்றம் இந்தச் சட்டம் தொடர்பான முந்தைய தீர்ப்புகளைக் சுட்டிக்காட்டியது. குறிப்பாக, 'பஞ்சாப் தன்னார்வ சுகாதார சங்கம் vs இந்திய ஒன்றியம்' (Voluntary Health Association of Punjab vs Union of India) என்ற வழக்கைக் குறிப்பிட்டது. அதில், பெண் சிசுக்கொலை பல சமூகப் பிரச்சினைகளை உருவாக்குவதாகவும், இது தவறான சமூக அணுகுமுறைகள், சுயநலமான பாரம்பரியங்கள் மற்றும் சமூக நெறிமுறைகள் குறித்த பார்வைகளிலிருந்தே உருவாகிறது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
1991, 2001 மற்றும் 2011-ஆம் ஆண்டுகளின் மக்கள்தொகை கணக்கெடுப்புத் தரவுகள், தேசிய அளவிலான குழந்தைகள் பாலின விகிதம் (Child sex ratio) 1,000 சிறுவர்களுக்கு 945 சிறுமிகள் என்றிருந்த நிலை மாறி, 927-ஆகக் குறைந்து, பின்னர் 919-ஆக மேலும் வீழ்ச்சியடைந்ததைக் காட்டுவதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்தத் தீவிரமான பாலின சமநிலையின்மையே, பாலினத் தேர்வு தடைச் சட்டத்தை (PCPNDT) மிகக் கடுமையாக அமல்படுத்துவதற்குக் காரணமாய் அமைந்தது என்றும் நீதிமன்றம் கூறியது. சமீபத்தில் இந்த விகிதம் பிறப்பின் போது 1,000 சிறுவர்களுக்கு 929 சிறுமிகள் என ஓரளவிற்கு உயர்ந்திருந்தாலும், இது ஒரு பகுதி முன்னேற்றம்தானே தவிர, உண்மையான சமத்துவத்திற்குமான அறிகுறி அல்ல என்று நீதிமன்றம் விவரித்துள்ளது. மேலும், பல மாநிலங்களில் பிறப்பின்போது இருக்கும் பாலின விகிதம் இன்னும் தேசிய சராசரியைவிடக் குறைவாகவே இருப்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
பெண் சிசுக்கொலையைத் தடுக்கவும், பெண்களுக்கு அதிகாரமளிக்கவும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் (Beti Bachao Beti Padhao (BBBP)) மற்றும் பிரதமரின் மகப்பேறு நலத் திட்டம் (Pradhan Mantri Matru Vandana Yojana (PMMVY)) உள்ளிட்ட 10 திட்டங்களை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. ஆணாதிக்கச் சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக ஆழமாக வேரூன்றியுள்ள பாகுபாடுகளை அகற்ற இத்தகைய திட்டங்கள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட நீதிமன்றம், இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் இன்னும் செய்ய வேண்டியவை நிறைய உள்ளன என்பதையும் ஒப்புக்கொண்டது.
நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, கருத்தரிப்புக்கு முந்தைய மற்றும் பிறப்புக்கு முந்தைய பாலினக் கண்டறிதல் தொழில்நுட்பத் தடைச் சட்டம் (PCPNDT) போன்ற நலச் சட்டங்களைக் கடுமையாக அமல்படுத்துவது இப்போதும் அவசியமானது என்று கூறியது. சமூகத்தின் மனநிலையில் ஒரு விரிவான மாற்றம் ஏற்படும் வரை இத்தகைய முயற்சிகள் தொடர வேண்டும் என்றும், "பெண்கள் இயல்பாகவே பலவீனமானவர்கள்" என்ற எண்ணம் மாறி, உண்மையான சமத்துவம் நிலவும்போது மட்டுமே இதுபோன்ற சட்ட நடவடிக்கைகள் தேவையற்றதாக மாறும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
original article : Falling child sex ratio, systemic bias: Why India banned checking a baby’s sex in the womb. -Sadaf Modak