இல்லத்தரசிகள் (homemakers) செய்யும் பணிக்கான முக்கியத்துவத்தை நீதிமன்றங்கள் கோட்பாட்டளவில் அங்கீகரித்திருந்தாலும், அதற்கான பண மதிப்பை நிர்ணயிப்பதில் பல ஆண்டுகளாகச் சிரமங்களை எதிர்கொண்டு வந்துள்ளன. தனது, சமீபத்திய உத்தரவில் உச்சநீதிமன்றம் இந்த இடைவெளியைச் சரிசெய்ய முயன்றுள்ளது. இது குறித்த முக்கிய விவரங்கள் கீழே கூறிப்பிட்டுள்ளது.
2001-ல் ஹரியானாவில் நடந்த சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையை, ஒரு தீர்ப்பாயம் முதலில் ரூ. 2.42 லட்சம் என நிர்ணயித்திருந்தது. கடந்த வாரம், உச்சநீதிமன்றம் அந்தத் தொகையை ரூ. 62.77 லட்சமாக உயர்த்தியது. இந்த வித்தியாசமானது, இல்லத்தரசிகள் மேற்கொள்ளும் ஊதியம் பெறாத வீட்டு வேலைகளின் பொருளாதார மதிப்பை அங்கீகரிப்பதில் இழப்பீடு தொடர்பான சட்டங்கள் கொண்டுள்ள தோல்வி எனும் ஆழமான சிக்கலை வெளிப்படுத்துவதாக நீதிமன்றம் கூறியது.
உச்சநீதிமன்றம் "வீட்டுப் பராமரிப்பு இழப்பு" (loss of domestic care) என்ற புதிய வகை இழப்பீட்டு முறையை உச்சநீதிமன்றம் அறிமுகப்படுத்தியது. நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் என். கோதிஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, இல்லத்தரசிகள் வெறும் பராமரிப்பாளர்கள் மட்டுமல்ல, மாறாக "பொருளாதாரரீதியான பங்களிப்பாளர்கள்" (economic entities) என்றும், குடும்பத்திற்கு அவர்கள் அளிக்கும் பங்களிப்பு நீதிமன்றங்களால் தொடர்ந்து குறைவாகவே மதிப்பிடப்பட்டு வந்துள்ளது என்றும் கூறியது. "பொதுவாக, 'இல்லத்தரசிகள்' உண்மையில் 'தேசத்தை உருவாக்குபவர்கள்' என்றும், அவர்கள் அவ்வாறே அங்கீகரிக்கப்பட வேண்டும்" என்று நீதிமன்றம் தெரிவித்தது.
இழப்பீட்டுச் சட்டம் எவ்வாறு செயல்படுகிறது?
சாலை விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழக்கும்போது, 1988-ம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டத்தின் (Motor Vehicles Act) கீழ் அவரது குடும்பத்தினர் இழப்பீடு கோர வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை பெரும்பாலும் கணிதரீதியானது. முதலில், நீதிமன்றம் உயிரிழந்தவரின் வருமானத்தைக் கணக்கில் கொள்கிறது, அதிலிருந்து தனிப்பட்ட செலவுகளுக்கான ஒரு பகுதி கழிக்கப்படுகிறது. அதன்பிறகு, எதிர்கால வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு ஒரு குறிப்பிட்ட சதவீதம் கூட்டப்படுகிறது. இறுதியாகக் கிடைக்கும் அந்தத் தொகை, உயிரிழந்தவரின் வயதைப் பொறுத்து அமையும் ஒரு குறிப்பிட்ட எண்ணால் பெருக்கப்படுகிறது. இந்தக் கணக்கீட்டின் தொடக்கத்தில் பயன்படுத்தப்படும் வருமானத்தின் அளவு மிக முக்கியமானது. ஏனெனில், இறுதி இழப்பீட்டுத் தொகையை இதுவே பெருமளவில் தீர்மானிக்கிறது.
சம்பளம் பெறும் நபருக்கு, ஊதியச் சீட்டுகள் (payslips) மற்றும் வருமான வரித் தாக்கல் விவரங்கள் உள்ளன. ஆனால் வீட்டுப் பராமரிப்பாளரைப் பொறுத்தவரை, அத்தகைய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதை நிவர்த்தி செய்ய, சட்டத்தின் தீர்வாக, "கருத்தியல் வருமானம்" (notional income) என்ற கருத்தை உருவாக்கியது. இது, வீட்டு வேலைக்கு ஊதியம் வழங்கப்படாவிட்டாலும் அதற்கு மதிப்பு உண்டு என்பதை அங்கீகரிக்கும் வகையில், உயிரிழந்தவருக்கு நீதிமன்றங்கள் கற்பிக்கும் ஒரு வருமான மதிப்பீடு இதுவாகும்.
2026-ம் ஆண்டு உத்தரவுக்கு முன் இல்லத்தரசிகளை நீதிமன்றங்கள் எவ்வாறு மதிப்பிட்டன?
உச்சநீதிமன்றத்தின் முன் உள்ள இந்தக் கேள்வி முற்றிலும் புதியது அல்ல. இல்லத்தரசிகள் செய்யும் பணிக்கான பண மதிப்பை எவ்வாறு நிர்ணயிப்பது என்பது குறித்து பல ஆண்டுகளாக நீதிமன்றங்கள் விவாதித்து வந்துள்ளன. ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான 'லதா வாத்வா vs பீகார் மாநிலம்-2001' (Lata Wadhwa vs State of Bihar) வழக்கில், இழப்பீடு வழங்கும் போது இல்லத்தரசிகளின் சேவைகளைப் புறக்கணிக்க முடியாது என்பதை உச்சநீதிமன்றம் அங்கீகரித்தது. 34 முதல் 59 வயதுக்குட்பட்ட இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ. 3,000 என்ற 'கருதுகோள் வருமானத்தை' (notional income) நீதிமன்றம் அங்கீகரித்தது.
அதே காலகட்டத்தில், மோட்டார் வாகனச் சட்டத்தின்கீழ், வருமானம் ஈட்டாத ஒரு நபரின் ஆண்டு வருமானம் ரூ.15,000 இருப்பதாகக் கருதப்பட்டது. இந்த அளவீடுகள் நாடு முழுவதும் இழப்பீட்டைக் கணக்கிடுவதற்கான ஒரு தொடக்கப் புள்ளியாக அமைந்தன.
இருப்பினும், இல்லத்தரசியின் பணிகளை இத்தகைய தொகைகள் உண்மையாகவே பிரதிபலிக்கின்றனவா என்ற கேள்வி நீதிமன்றங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வந்தது. 'அருண் குமார் அகர்வால் மற்றும் பிறர் vs நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்-2010' (Arun Kumar Agarwal and Anr vs National Insurance Co. Ltd) வழக்கில், ஒரு மனைவியின் மற்றும் தாயின் பங்களிப்பு என்பது சமையல் அல்லது வீட்டைச் சுத்தம் செய்வது போன்ற பணிகளைத் தாண்டிப் பரந்துபட்டது என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. இல்லத்தரசி வீட்டை நிர்வகித்தல், குழந்தைகளைப் பராமரித்தல், அவர்களின் வளர்ச்சிப் பருவத்தில் வழிகாட்டுதல் மற்றும் குடும்பத்தின் பிற உறுப்பினர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பைப் பெற உதவுதல் போன்ற பணிகளைச் செய்கிறார். இச்சேவைகளை "ஈடு இணையற்றவை" என்று வர்ணித்த நீதிமன்றம், இவற்றை ஊதியம் பெறும் வீட்டுப் பணியாளரின் பணிகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது தவறு என்றும் எச்சரித்தது.
'நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் vs பிரணய் சேத்தி-2017' (National Insurance Co. Ltd vs Pranay Sethi) வழக்கின் மூலம் இழப்பீட்டைக் கணக்கிடும் முறை மேலும் சீராக்கப்பட்டது. இவ்வழக்கில், அரசியலமைப்புச் சட்ட அமர்வு ஒன்று, எதிர்கால வருமான வாய்ப்புகள் (future prospects) மற்றும் துணை இழப்பு (loss of consortium), இறுதிச் சடங்குச் செலவுகள், சொத்து இழப்பு போன்றவற்றின்கீழ் நிலையான தொகைகளைச் சேர்ப்பதற்கான விதிகளை வகுத்தது. இந்தத் தீர்ப்பு நாடு முழுவதும் இழப்பீடு வழங்குவதில் அதிக சீரான தன்மையை உறுதிசெய்தது.
இருப்பினும், இத்தகைய உத்தரவுகளுக்குப் பிறகும், நீதிமன்றங்கள் 'கருதுகோள் வருமான' (notional income) அளவீடுகளையே தொடர்ந்து நம்பியிருந்தன. வீட்டுப் பணிகளின் மதிப்பு கொள்கையளவில் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், ஒரு இல்லத்தரசி தினமும் குடும்பத்திற்கு அளிக்கும் பொருளாதாரப் பங்களிப்பைக் கணக்கிடுவதற்கான தெளிவான வழிமுறை எதுவும் இருக்கவில்லை. இந்த இடைவெளியையே உச்சநீதிமன்றம் தனது 2026-ம் ஆண்டு உத்தரவின் மூலம் சரிசெய்ய முயன்றது.
இல்லத்தரசிகள் ஏன் இந்தச் சட்டக் கட்டமைப்பிற்குள் முழுமையாகப் பொருந்தவில்லை?
இதில் உள்ள சிக்கல், கணக்கிடப்படும் வருமானத் தொகை குறைவாக இருப்பது மட்டுமல்ல, ஒரு இல்லத்தரசி உண்மையில் அளிக்கும் பங்களிப்பை 'கருதுகோள் வருமானம்' (notional income) என்ற அளவீடு முழுமையாகப் பிரதிபலிக்க முடியாது என்பதே முக்கியப் பிரச்சினையாகும்.
தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் 2019-ம் ஆண்டு 'நேரப் பயன்பாட்டுக் கணக்கெடுப்பை' (Time Use Survey) உச்சநீதிமன்றம் இதைச் சுட்டிக்காட்டியது. இக்கணக்கெடுப்பின்படி, 15 முதல் 59 வயதுக்குட்பட்ட பெண்கள் ஊதியம் பெறாத வீட்டு வேலைகளில் தினமும் 7 மணி நேரத்திற்கும் மேலாகச் செலவிடுகின்றனர் (ஆண்கள் 3 மணி நேரத்திற்கும் குறைவாகவே செலவிடுகின்றனர்). மேலும், பெண்களின் ஊதியம் பெறாத பராமரிப்புப் பணிகள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 15 முதல் 17% பங்களிப்பை அளிக்கின்றன. இருப்பினும், ஊதியம் பெறாத பணிகள் உற்பத்திசார் பொருளாதார நடவடிக்கையாகக் கணக்கிடப்படாததால், இந்தப் பங்களிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) புள்ளிவிவரங்களில் இடம்பெறுவதில்லை.
ஒரு இல்லத்தரசி உயிரிழக்கும்போது ஏற்படும் மூன்று வகையான இழப்புகளை நீதிமன்றம் அடையாளம் கண்டுள்ளது. அவை,
குடும்பத்தை நிர்வகிக்கும் பணி,
குழந்தைகளுக்குத் திறன்கள், மொழி மற்றும் விழுமியங்களை அன்றாடம் கற்றுக்கொடுக்கும் 'முதல் ஆசிரியர்' என்ற நிலையில் ஏற்படும் இழப்பு (இதை வேறு எந்த ஊதியம் பெறும் ஏற்பாட்டாலும் ஈடுசெய்ய முடியாது) மற்றும்
வருமானம் ஈட்டும் துணைவர் தனது வேலையில் கவனம் செலுத்த உதவிய வீட்டுச் சூழல் அல்லது கட்டமைப்பு சார்ந்த இழப்பு.
இவை இல்லத்தரசியின் பங்களிப்பை "முழுமையாகப் பொருளாதாரரீதியானதுமல்ல, அதே சமயம் முழுமையாகப் பொருளாதாரம் சாராததுமல்ல" என்ற நிலைக்குக் கொண்டுவருவதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
இத்தகைய இழப்பை அங்கீகரிக்கச் சட்டத்தில் மற்றொரு வழிமுறையும் உள்ளது. அதுதான் 'குடும்பத் துணை இழப்புக்கான இழப்பீடு' (loss of consortium) ஆகும். 'பிரணய் சேத்தி' (Pranay Sethi) வழக்கின் தீர்ப்பின்படி, இது ஒரு சார்ந்திருப்பவருக்கு (dependent) 40,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்தீர்ப்பு, துணைவர் இழப்பு, சொத்து இழப்பு மற்றும் இறுதிச் சடங்குச் செலவுகள் போன்ற வழக்கமான இழப்பீடுகளை நிர்ணயிப்பதன் மூலம் இழப்பீட்டுச் சட்டத்தை முறைப்படுத்தியது.
ஆனால், தற்போதைய உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, 'குடும்பத் துணை இழப்புக்கான இழப்பீடு' (loss of consortium) என்பது "அன்பு, ஆறுதல், தேறுதல், தோழமை, சமூக உறவு, உதவி மற்றும் பாதுகாப்பு" ஆகியவற்றின் இழப்பையே ஈடுசெய்கிறது. இது வீட்டு நிர்வாகத்தின் உறுதியான பொருளாதார மதிப்பைவிட, உணர்வுப்பூர்வமான இழப்பையே குறிப்பதாக அமைகிறது.
'கருதுகோள் வருமானம்' (notional income) கணக்கில் கொள்ளும் விஷயங்களுக்கும், 'குடும்பத் துணை இழப்புக்கான இழப்பீடு' ஈடுசெய்யும் விஷயங்களுக்கும் இடையிலான அந்த இடைவெளியில்தான், இல்லத்தரசியின் உண்மையான பங்களிப்பு கவனிக்கப்படாமல் விடுபட்டுப் போயிருந்தது.
நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?
உச்சநீதிமன்றம் "வீட்டுப் பராமரிப்பு இழப்பு" (loss of domestic care) என்ற பெயரில் ஒரு புதிய இழப்பீட்டு வகையை உருவாக்கியது. இதற்கான அடிப்படை மதிப்பு ரூ. 30,000 என நிர்ணயிக்கப்பட்டது. வீட்டுப் பணிகளை மேற்கொள்ளும் ஒருவரை, பராமரிப்பு வழங்குபவராகவும் அதே சமயம் பொருளாதாரரீதியாகப் பங்களிப்பவராகவும் நீதிமன்றம் வரையறுத்தது.
பின்வரும் மூன்று நிபந்தனைகளும் பூர்த்தியாகும் சூழலில் இந்த இழப்பீட்டு வகை பொருந்தும். அவை,
வீட்டு நிர்வாகத்தில் அந்த நபர் (வீட்டுப் பணிகளை மேற்கொள்பவர்) பங்களித்திருத்தல்,
குடும்பத்திலுள்ள குழந்தைகள் அவரது தாய்மைக்குரிய பராமரிப்பு மற்றும் வழிகாட்டுதலை இழந்திருத்தல், மற்றும்
வாழ்க்கைத் துணை அல்லது பெற்றோர் அவரது ஆதரவை இழந்திருத்தல்.
இந்த மூன்று நிபந்தனைகளும் பூர்த்தியாகும்போது, மாதத்திற்கு ரூ. 30,000 என்பது அடிப்படை வருமானமாகக் கருதப்படுகிறது. இதுவே கணக்கீட்டின் தொடக்கப் புள்ளியாக அமைகிறது (முன்பு பயன்படுத்தப்பட்ட கருதுகோள் வருமானத்திற்கு மாற்றாக இது உள்ளது). இதனுடன் வருங்கால வாய்ப்புகள் (prospects) சேர்க்கப்பட்டு, 'பெருக்கி' (multiplier) இதற்கான காரணி பயன்படுத்தப்படுகிறது. 'பெருக்கி' என்பது, இறந்தவர் குடும்பத்திற்குத் தொடர்ந்து எத்தனை ஆண்டுகள் பங்களித்திருப்பார் என்பதை மதிப்பிட நீதிமன்றங்களால் பயன்படுத்தப்படும் வயது சார்ந்த ஒரு எண்ணாகும். வீட்டுப் பணிகளை மேற்கொண்ட அந்த நபர் ஊதியம் பெறும் வேலையிலும் ஈடுபட்டிருந்தால், அவரது உண்மையான வருமானத்துடன் இந்த ரூ. 30,000 தொகையும் கூட்டப்படும்.
'பிரணய் சேத்தி' (Pranay Sethi) வழக்கில் 'கன்சார்டியம்' (consortium - குடும்ப உறவு மற்றும் துணையின் இழப்பு) இழப்பீட்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட அதே கால அட்டவணையின்படி, இந்தத் தொகையும் ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒருமுறை 10% உயர்த்தப்படும்.
'கன்சார்டியம்' இழப்பீட்டிலிருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது என்பது குறித்து நீதிமன்றம் குறிப்பிடுகையில், "கன்சார்டியம் என்பது இழப்பின் உணர்வுப்பூர்வமான அம்சங்களை மட்டுமே பெரும்பாலும் கையாள்கிறது. வீட்டுப் பணிகளை மேற்கொள்பவரின் பொருளாதாரரீதியான பங்களிப்பிற்கு அதில் கவனம் செலுத்தப்படுவதில்லை" என்று கூறியது. 'வீட்டுப் பராமரிப்புப் பணி இழப்பு' (loss of domestic care) என்பது அந்த மற்றொரு அம்சத்தை (பொருளாதாரப் பங்களிப்பை) ஈடுசெய்கிறது.
இவ்வழக்கில், இறந்த வீட்டுப் பராமரிப்பாளர் 35 வயதுடையவர். தீர்ப்பில் வகுக்கப்பட்ட புதிய வழிமுறையைப் பயன்படுத்தி, குடும்பத்தினர் சார்ந்திருந்த வருமான இழப்பிற்கான (loss of dependency) இழப்பீட்டை உச்சநீதிமன்றம் ரூ. 60.48 லட்சமாகக் கணக்கிட்டது. கன்சார்டியம் (consortium), சொத்து இழப்பு மற்றும் இறுதிச் சடங்கு செலவுகள் போன்ற அங்கீகரிக்கப்பட்ட பிறவற்றின்கீழ் உள்ள தொகைகளைச் சேர்த்த பிறகு, மொத்த இழப்பீட்டுத் தொகை ரூ. 62.77 லட்சமாக அமைந்தது.
வழக்குகள் நிலுவையில் இருத்தல்
இந்த வழக்கு 25 ஆண்டுகளாகத் தாமதமானது குறித்தும் அந்த உத்தரவு குறிப்பிட்டது. பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டு வழக்கு ஏறக்குறைய இருபதாண்டுகளாக நிலுவையில் இருந்தது. நீதிமன்ற ஆவணங்கள் தீ விபத்தில் சேதமடைந்து அவற்றை மீண்டும் உருவாக்க வேண்டியிருந்ததும் இதற்கொரு காரணமாக அமைந்தது.
இத்தகைய நீண்ட கால நிலுவை என்பது ஒரு தனிப்பட்ட நிகழ்வா அல்லது ஒரு பரவலான போக்கின் பகுதியா என்பதை ஆராய இந்தத் தாமதம் நீதிமன்றத்தைத் தூண்டியது. 120-க்கும் மேற்பட்ட வாகன விபத்து தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை ஆய்வு செய்ததில், உயர்நீதிமன்ற நிலையில் சராசரி நிலுவைக் காலம் சுமார் 8 ஆண்டுகளாக இருப்பது தெரியவந்தது.
"ஒருவரின் குடும்பத்தில் முக்கிய அங்கமாகத் திகழ்ந்த ஒருவரை இழந்ததால் ஏற்பட்ட இழப்பை ஒருபோதும் முழுமையாக ஈடுசெய்ய முடியாது என்றாலும், 'நியாயமான மற்றும் சரியான' இழப்பீடு என்பது, அந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடைபெறாத ஒரு நிலைக்குப் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டு செல்லும் வகையிலான தொகையை அவர்களுக்கு வழங்குவதையே குறிக்கிறது," என்று நீதிமன்றம் கூறியது. "காரணம் எதுவாக இருந்தாலும், இதற்கு இருபது ஆண்டுகள் ஆகும்போது, அதனால் ஏற்படும் துயரம் மேலும் அதிகரிக்கிறது."
வாகன விபத்து தொடர்பான மிக நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு முன்னுரிமை அளித்து அவற்றின் பட்டியலைத் தயாரிக்குமாறும், தேவைப்படும் இடங்களில் அதற்கென ஒதுக்கப்பட்ட சிறப்பு அமர்வுகளை (dedicated benches) விரிவுபடுத்துமாறும் அனைத்து உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், தீர்ப்பாயங்கள் இயன்றவரை விரைவான நடைமுறைகளைக் (summary procedure) கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தியது.
original article : Homemakers are nation builders: How Supreme Court recognised economic value of unpaid domestic labour? -Amaal Sheikh