நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், நீர் மறுசுழற்சித் திட்டங்களை நிர்வகிப்பதற்கும், அவற்றை ஒரு வணிக வாய்ப்பாக மாற்றுவதற்கும் ஏதுவாக, சிறப்புச் செயல்பாட்டு முகமைகளை (Special Purpose Vehicles (SPV)) உருவாக்குவதற்குத் தேவையான நிறுவனச் சீர்திருத்தங்கள் அவசியமாகும்.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள நரசிங்கப்பூர் (Narsinghpur), குஜராத்தில் உள்ள அகமதாபாத் (Ahmedabad) மற்றும் ராஜஸ்தானில் உள்ள பார்மர் (Barmer) ஆகிய இடங்களுக்கு இடையே உள்ள பொதுவான விஷயம் என்ன? இந்த நகரங்களில் மே மாதத்தின் முதல் வாரத்திலேயே பகல் நேரத்தின் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. இந்த கடுமையான வெப்பநிலை காரணமாக, நீர் ஆவியாகும் வீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் வீடுகளுக்கான தண்ணீர் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல சிறிய நகரங்கள் மற்றும் பேரூராட்சிகளில், கோடைக் காலத்தில் தனியார் தண்ணீர் விநியோகிக்கும் வாகனங்களை நம்பியிருப்பது ஒரு வழக்கமான விஷயமாக மாறிவிட்டது. டெல்லி போன்ற பெருநகரங்கள் மிகத் தொலைதூர இடங்களிலிருந்து தண்ணீரைக் கொண்டு வருகின்றன. இதனால் செலவுகள் அதிகரிப்பதோடு, ஆற்று நீர் உற்பத்தியாகும் (Upper riparian regions) பகுதிகளில் தங்கி வாழும் பிற பிராந்தியங்களைச் சார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது.
இந்தியாவில் ஒரு நபருக்கான ஆண்டுத் தண்ணீர் இருப்பு (Annual per capita water availability) சுமார் 1,500 கன மீட்டர் (1,500 m3) அளவாக உள்ளது. இது 2050-ஆம் ஆண்டிற்குள் 1,200 கன மீட்டருக்கும் (1,200 m3) கீழே குறைய வாய்ப்புள்ளது. இது நம்மை மிகக் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை அளவான 1,000 கன மீட்டருக்கும் கீழே குறையும் என்கின்றனர். இவ்வாறு தண்ணீர் கிடைக்கும் அளவு குறைந்து வருவதுடன், கோடைகாலம் மற்றும் அதிகரித்து வரும் வெப்ப அலைகளால் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையும் சேர்ந்து, நாம் இன்னும் தீவிரமாக நீர் மேலாண்மை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. வழக்கமான நடவடிக்கைகளிலிருந்து மாறுபட்டு நகரங்கள் என்ன செய்ய முடியும்? என்பதுதான் தற்போதைய முக்கிய கேள்வியாக உள்ளது.
பெரிய அளவில் சாத்தியக்கூறுகள் இருந்தும் இன்னும் முழுமையாகப் பயன்படுத்தப்படாத ஒரு முக்கியமான தீர்வு, சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை மீண்டும் பயன்படுத்துவதாகும். குறிப்பாக குடிநீராக இல்லாமல், தோட்டக்கலை பயிர்களுக்கு நீர் பாய்ச்சுதல், நிலத்தை அழகுபடுத்துதல், கட்டுமானப் பணிகள், பொது வசதிகள், ஜவுளி உற்பத்தி, ஏரிகளை மீட்டெடுத்தல் மற்றும் மனிதர்களுடன் நேரடித் தொடர்பு இல்லாத பிற பயன்பாடுகளுக்கு இதனைப் பயன்படுத்தலாம். எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் மேலாண்மைக் குழு (Council on Energy, Environment and Water (CEEW)) மேற்கொண்ட ஆய்வின்படி, இந்தத் திட்டம் 2047-ஆம் ஆண்டிற்குள் 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கி, கூடுதலாக ஒரு லட்சம் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், தண்ணீரைச் சுழற்சி முறையில் பயன்படுத்தும் 'சுழற்சி நீர் பொருளாதாரத்தை' (Circular water economy) ஊக்குவிப்பதன் மூலம் தண்ணீர் தட்டுப்பாட்டையும் குறைக்க முடியும். உதாரணமாக, தானே (Thane) நகரம் தனது சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைப் பயன்படுத்துவதை அதிகரிப்பதன் மூலம், ஒரு நாளைக்குத் தேவைப்படும் 53 மில்லியன் லிட்டர் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க முடியும் என்பதை நடைமுறையில் நிரூபித்துள்ளது. இந்த நன்மைகளைப் பெற நான்கு முக்கியமான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் உதவும் என்கின்றனர்.
முதலாவதாக, நீர் மறுபயன்பாட்டுக் கொள்கைகளுக்கு ஆதரவாக, அந்தந்த நகரங்களுக்கு ஏற்ற பிரத்யேக மறுபயன்பாட்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். இந்தியாவில் தற்போது சுமார் 14 மாநிலங்கள் நீர் மறுபயன்பாட்டுக் கொள்கைகளைக் கொண்டுள்ளன. காலநிலைக்கேற்ப மாறும் நீர் பற்றாக்குறை அபாயங்களைக் கண்டறிந்து, இத்தகைய கொள்கைகளை சமீபத்தில் அறிமுகப்படுத்திய மாநிலங்களில் உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகியவையும் அடங்கும். இது ஒரு நல்ல தொடக்கமாக இருந்தாலும், நீர்ப் பற்றாக்குறை மற்றும் நீரின் தரம் சார்ந்த சிக்கல்களைச் சமாளிக்க, நகரங்கள் தங்களுக்கு என்று தெளிவான இலக்குகளுடன் கூடிய தனித்தனி மறுபயன்பாட்டுத் திட்டங்களை உருவாக்க வேண்டும். இந்தத் திட்டங்கள், தண்ணீரை எதற்கெல்லாம் மீண்டும் பயன்படுத்தலாம், அதற்குத் தேவையான நீரின் தரநிலைகள் என்ன, அதற்கான வருவாய் வழிகள் மற்றும் அதை எவ்வாறு செயல்படுத்துவது ஆகியவற்றைத் தெளிவாகக் கண்டறிய வேண்டும். ஒவ்வொரு நகரத்தின் தேவைகளும் வெவ்வேறாக இருப்பதால், தண்ணீரை மறுபடி பயன்படுத்துவதற்கான முன்னுரிமைகளும் மாறுபடுகின்றன.
இரண்டாவதாக, கழிவுநீரை மறுசுழற்சி செய்யும் திட்டங்களில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்க வேண்டும். இந்திய நகரங்களில் தேவைப்படும் கழிவுநீர் சுத்திகரிப்புத் திறனில் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே தற்போது உள்ளது. மேலும் 2021-ஆம் ஆண்டில், மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவான கழிவுநீரே உண்மையில் சுத்திகரிக்கப்பட்டது. கழிவுநீரைச் சுத்திகரிப்பு நிலையங்களுக்குக் கொண்டு செல்வதற்கான போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, திறமையான ஊழியர்களின் பற்றாக்குறை, போதிய மின்சாரம் கிடைக்காமை மற்றும் நிலையங்களைப் பராமரிக்கத் தேவையான நிதி இல்லாமை போன்ற சவால்களே இதற்குக் காரணமாகும். இதன் விளைவாக, சுத்திகரிக்கப்பட்ட நீரில் மிகச் சிறிய அளவே மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. எனவே, கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் மறுசுழற்சி கட்டமைப்பை மேம்படுத்த அரசாங்க நிதியுடன் தனியார் முதலீடும் அவசியமாகும். இதற்குப் பல்வேறு கலப்பு-நிதி மாதிரிகளைப் (Blended-finance models) பயன்படுத்தலாம். உதாரணமாக, தூய கங்கைக்கான தேசியத் திட்டம் (National Mission for Clean Ganga (NMCG)) பின்பற்றும் 'கலப்பு வருடாந்திர மாதிரி' (Hybrid Annuity Model (HAM)) முறையில், நிதி சார்ந்த அபாயங்கள் அரசாங்கத்திற்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையே பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
மூன்றாவதாக, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இன்னும் திறம்பட செயல்பட வேண்டும். பல்வேறு நகரங்களில் உள்ள பல சுத்திகரிப்பு நிலையங்கள், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (Central Pollution Control Board (CPCB)) நிர்ணயித்துள்ள கழிவுநீர் வெளியேற்றத் தரநிலைகளைப் பூர்த்தி செய்வதில்லை. போதிய பராமரிப்பின்மை ஒருபுறமிருக்க, வீடுகளில் இருந்து வரும் கழிவுநீருடன், அனுமதியற்ற சிறிய தொழிற்சாலைகளின் கழிவுகளும் கலப்பது இந்த நிலையங்களின் செயல்பாட்டைப் பாதிக்கிறது. ஏனெனில், பெரும்பாலான சுத்திகரிப்பு நிலையங்கள் நுண்ணுயிரிகளை (Microorganisms) நம்பியிருக்கும் உயிரியல் செயல்முறைகளையே பயன்படுத்துகின்றன. தொழிற்துறைக் கழிவுகளில் உள்ள கன உலோகங்களும் நச்சுப் பொருட்களும் இந்த நுண்ணுயிரிகளைக் கொன்றுவிடுகின்றன அல்லது அவற்றைச் செயலற்றதாக்குகின்றன. தொழிற்சாலைகளுக்காக இந்தியாவில் 'பூஜ்ஜிய திரவக் கழிவு வெளியேற்றம்' (Zero Liquid Discharge (ZLD)) கொள்கை இருந்தபோதிலும், பல சிறிய நிறுவனங்கள் இந்த விதிகளை மீறி, சுத்திகரிப்பு செய்யப்படாத தொழிற்சாலை கழிவுகளை வீடுகளின் கழிவுநீர் செல்லும் சாக்கடைகளில் கலக்கவிடுகின்றன. இதைக் கட்டுப்படுத்த, கங்கை நதிப் படுகையில் உள்ள நகரங்களைப் போலவே, உள்ளூர் அரசாங்கங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இத்தகைய விதிமீறல்களைக் கண்டறிந்து சட்டவிதிமுறைகளைப் பின்பற்றச் செய்யலாம். மேலும், நிறுவனங்கள் இந்த 'பூஜ்ஜிய திரவக் கழிவு வெளியேற்றம்' (ZLD) விதிமுறைகளைப் பின்பற்றுவதை ஊக்குவிக்க சலுகைகளையும் வழங்கலாம். இதற்கு உதாரணமாய், இத்தகைய அமைப்புகளை நிறுவுவதற்கு நிதியுதவி வழங்கும் குஜராத் மாநில நகரங்களை ஒரு சிறந்த முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளலாம்.
நான்காவதாக, தண்ணீரை ஒருமுறை பயன்படுத்திவிட்டு வீணாக்குவதற்குப் பதிலாக, பயன்படுத்திய நீரையே மீண்டும் மீண்டும் அதிக அளவில் மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் முறையை நோக்கி மாறுவதற்கு, இந்தியா ஒரு தேசிய சுழற்சி நீர் திட்டத்தை (National circular water mission) தொடங்க வேண்டும். இதற்குத் தொழில்நுட்பம், கட்டமைப்பு, நிதி மற்றும் மக்களின் நடத்தை சார்ந்த சீர்திருத்தங்கள் தேவைப்படும். தொழில்நுட்பச் சீர்திருத்தங்கள், வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புறங்களை ஒட்டிய புறநகர்ப் பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். கட்டமைப்புச் சீர்திருத்தங்கள், உள்ளூர் நகர்ப்புற அமைப்புகள், நீர் மறுசுழற்சித் திட்டங்களை நிர்வகிப்பதற்கும், அவற்றை வணிக வாய்ப்புகளாக மாற்றுவதற்கும் ஏதுவாக சிறப்புச் செயல்பாட்டு முகமைகளை உருவாக்க அனுமதிக்க வேண்டும். நிதிச் சீர்திருத்தங்கள், சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை மீண்டும் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதோடு, நல்ல குடிநீரை ஒரு மதிப்புமிக்க சொத்தாகக் கருத வேண்டும். தூய்மையான குடிநீருக்கு சந்தை அடிப்படையிலான விலையை நிர்ணயிப்பது நீர் வீணாக்கப்படுவதைக் குறைத்து செயல்திறனை மேம்படுத்தும் என்றாலும், பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய பிரிவினரைப் பாதுகாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மானியங்கள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும். தண்ணீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதை ஒரு கூட்டுப் பொறுப்பாக மாற்றும் மக்களின் அன்றாட பழக்கவழக்க மாற்றங்களும் இதற்கு இணையாக முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். பொதுமக்களின் இந்த அணுகுமுறை மாற்றத்தின் மூலம், சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் என்பது நகர்ப்புற வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக மாறக்கூடும். 'தண்ணீர், இயற்கை, முன்னேற்றம்' (Water, Nature, Progress) என்ற ஆய்வு மற்றும் இந்தியாவின் பொருளாதாரக் கணக்கெடுப்பு 2025-26 (Economic Survey of India 2025–26) ஆகியவை இந்தியாவில் இத்தகையதொரு மறுபயன்பாடு நீர் திட்டத்திற்கான செயல்திட்டத்தை வகுத்துள்ளன.
2047-ஆம் ஆண்டிற்குள் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக (Viksit Bharat 2047) உருவெடுக்கும் பயணம், அது தனது நீர் ஆதாரங்களை எவ்வளவு வலிமையாகவும் மீள்தன்மையுடனும் கட்டமைக்கிறது என்பதைப் பொறுத்தே அமையும் என்கின்றனர். பயன்படுத்திய நீரை மீண்டும் சுழற்சி முறையில் பயன்படுத்தும் "சுழற்சி நீர் பொருளாதாரம்" (Circular water economy), குடிநீர் ஆதாரங்கள் மீதான அழுத்தத்தைக் குறைப்பதோடு, நீரின் தரத்தை மேம்படுத்தி, அனைவருக்கும் தடையற்ற குடிநீர் பாதுகாப்பை உறுதி செய்யும். இந்தியாவிற்குத் தேவையான வலுவான அரசியல் தலைமை, அர்ப்பணிப்பு மற்றும் வெற்றிகரமான முன்மாதிரிகள் ஏற்கனவே நம்மிடம் உள்ளன. தற்போது நமக்குத் தேவைப்படுவது என்னவென்றால், பெரிய அளவிலான, விரைவான மற்றும் அவசரமான நடவடிக்கைகளே ஆகும்.
பரமேஸ்வரன் ஐயர், உலக வங்கியில் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக உள்ளார். கோஷ், எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் மேலாண்மை (CEEW) அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஆவார். நிதின் பாசி, எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் மேலாண்மை அமைப்பின் ஆய்வாளர் ஆவார்.
original article : Our parched cities need to make every drop count, recycle water. -Parameswaran Iyer, Arunabha Ghosh and Nitin Bassi