அக்டோபர் 31-ம் தேதி, தேசிய ஒற்றுமை தினத்தை (National Unity Day) முன்னிட்டு, நவீன இந்தியாவை வடிவமைப்பதில் சர்தார் வல்லபாய் படேலின் பங்களிப்பைப் பிரதிபலிப்போம். மேலும், அவரது எழுச்சியூட்டும் சில மேற்கோள்களைச் சரிபார்க்கத் தவறாதீர்கள்.
சர்தார் படேல் என்று பொதுவாக அழைக்கப்படும் வல்லபாய் ஜாவர்பாய் படேல் இந்தியாவின் முதல் துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சராக இருந்தார். அவர் ஒரு பாரிஸ்டர் மற்றும் ஒரு அரசியல்வாதி ஆவார். இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக, ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து இந்தியாவின் விடுதலைக்கான போராட்டத்தில் படேல் முக்கிய பங்கு வகித்தார்.
படேல் அக்டோபர் 31, 1875-ம் ஆண்டில் பிறந்து, குஜராத்தில் வளர்ந்தார். ஒரு வழக்கறிஞராக, கெடா, பர்தோலி மற்றும் போர்சாத் ஆகிய இடங்களில் வன்முறையற்ற குடிமை ஒத்துழையாமை இயக்கங்களின் போது பல விவசாயிகளை விடுவிக்க உதவினார். இந்தப் பணி அவரை குஜராத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக நிலைநிறுத்தியது. பின்னர், அவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தையும் ஊக்குவித்தார் மற்றும் இன்றும் அவர் ஒரு உத்வேகமான நபராகத் தொடர்கிறார்.
சர்தார் வல்லபாய் படேல் - 'இந்தியாவின் இரும்பு மனிதர்'
இந்தியாவை ஒருங்கிணைக்க சர்தார் படேலின் பங்களிப்பு
சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக, சர்தார் வல்லபாய் படேல் நாட்டை ஒருங்கிணைத்து வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இந்தியா சுதந்திரம் பெற்றபோது, 1947-ம் ஆண்டின் இந்திய சுதந்திரச் சட்டத்தின் (Indian Independence Act) கீழ் இந்திய சமஸ்தானங்களை சுதந்திரமாக அறிவித்ததன் மூலம் ஆங்கிலேயர்கள் ஒரு சவாலை முன்வைத்தனர். இந்தச் சட்டம் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் அதிகாரத்தை நிறுவியது. இது, இறுதியில் பாகிஸ்தானை உருவாக்க வழிவகுத்தது.
"மாநிலங்களின் பிரச்சனை மிகவும் கடினமானது, உங்களால் மட்டுமே அதை தீர்க்க முடியும்" என்று தேசத்தந்தை மகாத்மா காந்தி, இந்தியாவில் சமஸ்தானங்களின் ஒருங்கிணைப்பு பிரச்சனையை எதிர்கொண்டபோது சர்தார் வல்லபாய் படேலிடம் கூறினார்.
சுதேச சமஸ்தானங்களின் பிரச்சினை சிக்கலானதாகவும், தீர்வு காண்பதற்கு சவாலானதாகவும் இருந்தது. இளவரசர்கள் பெரும்பாலும் பயனற்றவர்களாகவும், திறனற்றவையாகவும் இருக்க, ஒருபுறம் பிரிட்டிஷாரால் பெருமளவில் செல்லம் கொடுக்கப்பட்டதோடு, மறுபுறம் தங்களுடைய சொந்த அரசியல் ஆதாயங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். இதில், எதிர்பாராத விதமாக ஆங்கிலேயர்கள் வெளியேறுவதாக அறிவித்தபோது, பல இளவரசர்கள் தங்கள் சுதந்திரத்தை அறிவிக்க இது சரியான நேரம் என்று கருதினர். மற்றவர்கள் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போராட்டத்தில் சிக்கிக்கொண்டனர்.
இருப்பினும், தனது இராஜதந்திர முயற்சிகள் மூலம், படேல் சுதேச மாநிலங்களை இணைப்பதைப் பாதுகாத்தார். இந்த பிராந்தியங்களை நாட்டின் அரசியலமைப்பு கட்டமைப்புடன் சீரமைத்தார்.
"1947-ம் ஆண்டு காலத்தில், படேல் தொடர்ச்சியான மதிய உணவு விருந்துகளை நடத்தினார். அங்கு இந்தியாவின் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் காங்கிரசுக்கு உதவுமாறு வலியுறுத்தினார்" என்று வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா தனது “காந்திக்குப் பின் இந்தியா” (India after Gandhi) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
படேல் சூழ்நிலையைப் பொறுத்து வெவ்வேறு நாடுகளை இணைப்பதற்கான அணுகுமுறைகளைப் பயன்படுத்தினார். சில சந்தர்ப்பங்களில், அவர் நட்புரீதியாக ஆலோசனைகளை வழங்கினார். மற்றவற்றில், அவர் ஆட்சியாளர்களை நியாயமானவர்களாக இருக்க வற்புறுத்தினார். ஹைதராபாத் விஷயத்தில் கூட பலத்தை பயன்படுத்தினார். அவரது அரசியல் நுண்ணறிவு மற்றும் நடைமுறை திறன்கள் மிகவும் மதிக்கப்பட்டன. இந்த குணங்கள் 500-க்கும் மேற்பட்ட சுதேச அரசு பிரதேசங்களை இந்திய ஒன்றியத்தில் இணைப்பதில் முக்கியத்துவம் பெற்றவை. இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பின் போது, படேல் இந்திய இராணுவத்தின் உண்மையான உச்ச தளபதியாக செயல்பட்டார்.
நிர்வாகத்தில் சர்தார் படேலின் பங்களிப்பு
இந்தியாவை ஒருங்கிணைக்கும் மகத்தான பணியுடன், இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் படேல், அகில இந்திய சேவைகள் எனப்படும் நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார். நவீன அனைத்திந்திய சேவை அமைப்பை (modern all-India services system) நிறுவுவதில் அவர் முக்கிய தலைவராக இருந்தார். இதன் காரணமாக, அவர் "இந்திய அரசு ஊழியர்களின் ஆதரவாளன்" (patron saint of India’s civil servants) என்று நினைவுகூரப்படுகிறார்.
“நமது அதிகாரத்துவம் அல்லது ராணுவ நிறுவனங்கள் மற்றும் அவற்றின் நடைமுறைகள் எதுவாக இருந்தாலும் சரி, நமது ஆட்சியின் தொடர்ச்சிக்காக அவர் வலுவாக நின்றது சர்தார் படேலின் பெருமையாகும்” என்று வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கூறினார்.
படேலின் 143-வது பிறந்தநாளில், ஒற்றுமை சிலை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த சிலை உலகிலேயே மிக உயரமானது. இது சர்தார் சரோவர் அணையிலிருந்து 3.2 கிமீ கீழ்நோக்கி நர்மதா நதியில் சாது தீவில் உள்ளது. பத்மபூஷன் விருது பெற்ற சிற்பி ராம் வி.சுதர் என்பவரால் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அரசு நடத்தும் சர்தார் சரோவர் நர்மதா நிகம் லிமிடெட் நிறுவனத்துடன் (Sardar Sarovar Narmada Nigam Ltd) இணைந்து லார்சன் அண்ட் டூப்ரோ (Larsen and Toubro) நிறுவனத்தால் கட்டப்பட்டது. படேல் பாரம்பரியமான வேட்டி மற்றும் சால்வை அணிந்து நர்மதா நதிக்கு மேலே நிற்பதை இந்த சிலை சித்தரிக்கிறது. அதன் உயரமான 182 மீட்டர் குஜராத்தில் உள்ள மொத்த சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையைப் பொருத்து தேர்வு செய்யப்பட்டது.
அரசியலமைப்பில் சர்தார் படேலின் பங்களிப்பு
அரசியல் நிர்ணய சபையின் (Constituent Assembly) அடிப்படை உரிமைகள், சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினர் மற்றும் விலக்கப்பட்ட பகுதிகள் பற்றிய ஆலோசனைக் குழுவின் தலைவராக, அரசியலமைப்பின் முக்கிய பிரிவுகளை வடிவமைப்பதில் படேல் முக்கிய பங்கு வகித்தார். இந்த பிரிவுகள் அடிப்படை மற்றும் சிறுபான்மை உரிமைகள் மீது கவனம் செலுத்தியது. உரிமைகளும் கடமைகளும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்று அவர் வலியுறுத்தினார்.
ஜூலை 12, 1991 அன்று, குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கடராமன், சர்தார் வல்லபாய் படேலுக்கு மறைவுக்குப் பின் பாரத ரத்னா விருதை வழங்கினார். இந்த விருது அவரது பேரன் விபின் தயாபாய் படேலுக்கு டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் வழங்கப்பட்டது.
நாம் வாழும் சமூகம் நம் முன்னோர்களுக்குக் கடன்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். தனிநபர்கள் வளரவும், அவர்களின் திறனை அடையவும், நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கவும் அனுமதிக்கும் கட்டமைப்பை உருவாக்க அவர்கள் கடுமையாக உழைத்தனர். சர்தார் படேலின் சில மேற்கோள்கள் நம் தேசத்தைப் பற்றிய அவரது கருத்துக்களை பிரதிபலிக்கின்றன.
பண்பைக் கட்டியெழுப்ப இரண்டு வழிகள் உள்ளன: ஒன்று ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடும் வலிமையை வளர்ப்பது. மற்றொன்று, இந்தப் போராட்டத்தால் வரும் கஷ்டங்களைத் தாங்கிக் கொள்வது. பொதுவாக, இந்த இரு வழிகள் தைரியத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது.
இளைஞர்கள் மற்றும் பெண்கள் வலுவான குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு தேசத்தின் மகத்துவம் அதன் மக்களின் தன்மையை பிரதிபலிக்கிறது. அந்த குணம் சுயநலத்தால் கறைபட்டால், மக்கள் செழிக்கவோ, பெரிய காரியங்களை சாதிக்கவோ முடியாது. சுயநலம் வாழ்க்கையில் அதன் இடத்தைப் பெற்றிருந்தாலும், ஒவ்வொருவரும் தங்கள் சொந்த தேவைகளையும் தங்கள் குடும்பத்தின் தேவைகளையும் கவனித்துக் கொள்ள வேண்டும், அது மட்டுமே வாழ்க்கையின் மையமாக இருக்க முடியாது.