ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, உமிழ்வை வெகுவாகக் குறைப்பதாக உலக நாடுகள் உறுதியளித்தன. தற்போது இந்த இலக்கு தோல்வியடைந்துள்ளது. இதன் விளைவாக, புவி வெப்பமடைதலை 1.5 டிகிரிக்கு கீழ் வைத்திருக்க வேண்டும் என்ற லட்சிய இலக்கு தூக்கி எறியப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் வருடாந்திர காலநிலை மாற்ற மாநாட்டிற்கு முன்னதாக இது நடப்பதால், கடந்த சில நாட்களாக பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பதிவுசெய்து பல மதிப்பீடுகள் மற்றும் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
உலகளாவிய உமிழ்வு இன்னும் அதிகரித்து வருகிறது. மேலும், வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுக்களின் செறிவு 2023-ஆம் ஆண்டில் புதிய சாதனை அளவைத் தொட்டது. சில சாத்தியக்கூறுகள் இன்னும் விவாதிக்கப்பட்டு வருகின்றன என்றாலும், தொழில்துறைக்கு முந்தைய காலங்களிலிருந்து 1.5 டிகிரி செல்சியஸுக்குள் உலகளாவிய வெப்பநிலை உயர்வைத் தடுக்க நிலையான இலக்குகள் இல்லை. 2030-ஆம் ஆண்டு உமிழ்வு குறைப்பு இலக்குகள் ஒரு பரந்த வித்தியாசத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் இரண்டு வாரங்களில், அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் இந்த ஆண்டு காலநிலை மாநாட்டிற்காக நாடுகள் ஒன்றுகூடுகின்றன. உச்சிமாநாட்டின் போது, நிகழ்ச்சி நிரலில் மிக முக்கியமான விஷயம், நிதி தொடர்பான புதிய ஒப்பந்தத்தை இறுதி செய்வதாகும். இது வரும் ஆண்டுகளில் அதிக லட்சியமான காலநிலை நடவடிக்கைகளை செயல்படுத்தும்.
நிதி விஷயங்கள் எப்போதுமே காலநிலை பேச்சுவார்த்தைகளின் கடினமான பகுதியாகும். இது பெரும்பாலான சூழ்நிலைகளில் ஒரு முட்டுக்கட்டைக்கு வழிவகுக்கிறது. இந்த ஆண்டு, காலநிலை நடவடிக்கைக்கான அனைத்து வகையான தேவைகளுக்கும் நிதி ஆதாரங்களை ஒதுக்க வேண்டிய ஒரு விரிவான ஒப்பந்தத்தை இறுதி செய்வதை நாடுகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.
போதுமான நிதி இல்லாதது மிகவும் லட்சிய காலநிலை நடவடிக்கைக்கு மிகப்பெரிய தடைகளில் ஒன்றாகும். எனவே, வரும் ஆண்டுகளில் பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கு நாடுகள் அதிக முயற்சிகளை மேற்கொள்வதற்கான நம்பிக்கை பாகு மாநாட்டின் வெற்றியை பெரிதும் சார்ந்துள்ளது.
கட்டுக்கடங்காத உமிழ்வு அதிகரிப்பு
நாடுகள் தங்கள் உமிழ்வைக் குறைக்கும் முயற்சிகளைத் தொடங்கி 20 ஆண்டுகளுக்குப் பிறகும், பாரிஸ் ஒப்பந்தம் முடிந்து ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகும், உலகளாவிய உமிழ்வு இன்னும் அதிகரித்து வருகிறது. ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் வருடாந்திர வெளியீடான இந்த ஆண்டின் உமிழ்வு இடைவெளி அறிக்கை (Emissions Gap Report), 2023-ஆம் ஆண்டில் உமிழ்வு 57.1 பில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடை எட்டியது. இது 2022-ஆம் ஆண்டின் அளவை விட 1.3 சதவீதம் அதிகம். சரியான உமிழ்வு தரவு கணக்கிட பல ஆண்டுகள் ஆகும் என்பதால், இந்த எண்ணிக்கையில் பிற்காலத்தில் சில திருத்தங்கள் இருக்கலாம். ஆனால், கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார இடையூறு காரணமாக 2020-ஆம் ஆண்டைத் தவிர ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய உமிழ்வு அதிகரித்துள்ளது.
பாரிஸ் ஒப்பந்தத்தின் படி, தொழில்துறைக்கு முந்தைய நிலைகளுடன் ஒப்பிடும்போது வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியஸுக்குக் கீழே - 1.5 டிகிரி செல்சியஸுக்குள் வைத்திருக்க வேண்டும். இந்த இலக்குகளை அடைய, உலகளாவிய உமிழ்வு (global emissions) 2025-ஆம் ஆண்டுக்குள் உச்சத்தில் இருக்க வேண்டும். அதன் பிறகு சீராக குறையத் தொடங்கும். இது 2019-ஆம் ஆண்டை விட குறைந்தது 43 சதவீதத்திற்கும் கீழ் குறையும்.
மாசு இல்ல எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்துவதற்கான தற்போதைய போக்குகள் தொடர்ந்தால், மீத்தேன் போன்ற கார்பன்-டை-ஆக்சைடு அல்லாத உமிழ்வைக் குறைக்க சில கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், "2024-ஆம் ஆண்டில் உமிழ்வு குறைய 70 சதவீதம் வாய்ப்பு உள்ளது" என்று உமிழ்வு இடைவெளி அறிக்கை ( Emissions Gap Report ) கூறியுள்ளது.
"இது நடைமுறைக்கு வந்தால், 2023-ஆம் ஆண்டு உலகளாவிய பசுமை இல்ல வாயு (GHG) உமிழ்வுகள் மிக உயர்ந்த நிலையை அடையும் ஆண்டாக இருக்கும் என்று அறிக்கை தெரிவிக்கிறது. இதை உறுதிப்படுத்த பல ஆண்டுகளாக நிலையான உமிழ்வு குறைவதை நாம் பார்க்க வேண்டும். 2025-ஆம் ஆண்டுக்கு முன்னர் உச்சத்தை அடைவது சாத்தியமாகும். ஆனால், ஆற்றல் மாற்றம் விரைவுபடுத்துதல், புதைபடிவ எரிபொருள் வழங்கல் மற்றும் தேவையைக் கட்டுப்படுத்துவது ஆகியவற்றைப் பொறுத்தது" என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
வெப்பமயமாதலில் விரைவான நிவாரணம் இல்லை
ஆனால், எதிர்காலத்தில் உமிழ்வு உச்சத்தில் இருந்தாலும், அதன் பிறகு குறையத் தொடங்கினாலும், புவி வெப்பமடைதல் பிரச்சினை உடனடியாக நீங்கப் போவதில்லை. பூமியின் வெப்பமயமாதல் விளைவு, உமிழப்படும் பசுமை இல்ல வாயுக்களின் அளவினால் ஏற்படவில்லை. மாறாக, சுற்றுச்சூழலில் அவை குவிந்துள்ள இருப்பினால் ஏற்படுகிறது. இந்த வாயுக்கள் உடனடியாக விலகாது. உதாரணமாக, முக்கிய மாசுபடுத்தியான கார்பன்-டை-ஆக்சைடு சிதைவதற்கு முன்பு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வளிமண்டலத்தில் இருக்கும். இதன் விளைவாக, வருடாந்திர உமிழ்வுகள் குறையத் தொடங்கிய பிறகும், அவற்றின் செறிவுகள் பல ஆண்டுகளுக்கு தொடர்ந்து அதிகரிக்கும்.
2023-ஆம் ஆண்டில் பசுமை இல்ல வாயுக்களின் செறிவு புதிய உச்சங்களைத் தொட்டதாக உலக வானிலை அமைப்பு (World Meteorological Organisation (WMO)) கடந்த வாரம் அறிவித்தது. கார்பன்-டை-ஆக்சைடு செறிவுகள் இப்போது மில்லியனுக்கு 420 பகுதிகளை எட்டியுள்ளன. இது தொழில்துறைக்கு முந்தைய நிலைகளில் 150 சதவீதத்திற்கும் அதிகமாகும். மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு போன்ற பிற வாயுக்களின் செறிவுகளும் சாதனை மட்டங்களில் உள்ளன.
2023-ஆம் ஆண்டில் கார்பன்-டை-ஆக்சைடு செறிவின் அதிகரிப்பு 2022-ஆம் ஆண்டை விட அதிகமாக இருந்தது. இருப்பினும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இன்னும் குறைவாக இருந்தது.
இலக்குகளை தவறவிடுதல்
பசுமை இல்ல வாயுக்களின் அதிகரித்து வரும் செறிவு, உலகளாவிய வெப்பநிலை அதிகரிக்க வழிவகுத்தது. கடந்த ஆண்டு தொழில்துறைக்கு முந்தைய காலத்தைவிட 1.45 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருந்தது. 2014-2023 ஆண்டு காலகட்டங்களில் சராசரியாக உலகளாவிய வெப்பநிலை, தொழில்துறைக்கு முந்தைய காலங்களை விட 1.2 டிகிரி செல்சியஸ் அதிகமாக உள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் சராசரி ஆண்டு வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் இலக்கை மீறுவது கிட்டத்தட்ட உறுதியானது என்று உலக வானிலை அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் சராசரி வெப்பநிலை முக்கியமான இலக்கை மீறும். இந்த நிகழ்வைத் தடுக்க, காலநிலை மாற்றம் குறித்த அறிவியல் அறிவை மேம்படுத்தும் ஐக்கிய நாடுகளின் அமைப்பான காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கு இடையிலான குழு (Intergovernmental Panel on Climate Change (IPCC)), 2030-ஆம் ஆண்டில் 2019-ஆம் ஆண்டு அளவை விட உலகளாவிய உமிழ்வில் குறைந்தது 43 சதவீதம் குறைக்க பரிந்துரைத்தது. இது 2050-ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய நிகர பூஜ்ஜிய (global net-zero) நிலையை அடைவதற்கான பாதையில் முதல் மைல்கல்லாக இருக்கும்.
2030-ஆம் ஆண்டு நிர்ணயித்த இலக்கை அடையாது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. நாடுகள் எடுக்கும் அல்லது எடுக்க திட்டமிட்டுள்ள அனைத்து காலநிலை நடவடிக்கைகளும் 2030-ஆம் ஆண்டளவில் உமிழ்வை சிறிதளவு மட்டுமே குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டின் (United Nations Framework Convention on Climate Change (UNFCCC)) செயலகத்தின் புதிய மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 2030-ஆம் ஆண்டில் உலகளாவிய உமிழ்வு 2019-ஆம் ஆண்டு இருந்த நிலைகளைவிட 2.6 சதவீதம் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. இது தேவையான 43 சதவீத உமிழ்வு குறைப்பிற்கு அருகில்கூட இல்லை.
இருப்பினும், கடந்த ஆண்டு மதிப்பீட்டு கணிப்புகளை விட இது இன்னும் ஓரளவு முன்னேற்றமாகும். அந்த மதிப்பீடு 2030-ஆம் ஆண்டு உமிழ்வு 2019-ஆம் ஆண்டு உமிழ்வு நிலைகளை விட சுமார் 2 சதவீதம் குறைவாக இருந்தது. இந்த சிறிய முன்னேற்றம் ஒரு சில நாடுகளால் உறுதியளிக்கப்பட்ட சில புதிய காலநிலை நடவடிக்கைகளின் விளைவாகும். இந்த நடவடிக்கைகளில் சிலவற்றில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை விடவும் சிறப்பாக உள்ளது.
2030-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் செய்யப்பட்ட குறைந்தபட்ச முன்னேற்றம், பிந்தைய கட்டத்தில் ஆழமான பாதிப்புகளைச் சரி செய்யும் பணியை உலக நாடுகளுக்கு விட்டுவிடும். இந்த அணுகுமுறை புதியது அல்ல. உலகம் இதுவரை காலநிலை மாற்றத்தை இந்த பாதையில் கையாண்டு வந்த நிலையில், இப்போது அதை மிகக் குறைவாகவே செய்கிறது. மேலும், எதிர்கால தேவைக்கான பெரும்பாலான முயற்சிகளை ஒத்திவைத்துள்ளது.