நிலநடுக்கம் என்பது என்ன? -ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள் :


கரடுமுரடான மலைகளால் சூழப்பட்ட ஆப்கானிஸ்தான் பல்வேறு இயற்கை பேரிடர்களுக்கு உள்ளாகிறது. அங்கு, நிலநடுக்கங்கள் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துகின்றன. சராசரியாக, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 560 பேர் இந்த நிலநடுக்கங்களில் இறக்கின்றனர் மற்றும் இதனால் ஏற்படும் சேதங்கள் ஆண்டுதோறும் சுமார் $80 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. 1990 முதல் 5.0 ரிக்டர் அளவுக்கு மேல் குறைந்தது 355 நிலநடுக்கங்கள் ஆப்கானிஸ்தானைத் தாக்கியுள்ளதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.


ஆப்கானிஸ்தான் யூரேசிய கண்டத் தட்டின் (Eurasian tectonic plate) விளிம்பில் அமைந்துள்ளது. இது, இந்திய தட்டுடன் ஒரு எல்லை மீறல் மண்டலத்தைப் (transgression zone) பகிர்ந்து கொள்கிறது. அங்கு, இரண்டும் ஒன்றையொன்று சந்திக்கலாம் அல்லது கடந்து செல்லலாம். மேலும், அதன் தெற்கே உள்ள அரேபியத் தட்டும் இந்தப் பகுதியை பாதிக்கிறது. இவை அனைத்தும் சேர்ந்து, ஆப்கானிஸ்தானை உலகின் மிகவும் கண்டத்தட்டு நகர்வு தீவிரமாக உள்ள பகுதிகளில் (tectonically active areas) ஒன்றை உருவாக்குகிறது.


இந்திய தட்டானது, வடக்கு நோக்கிய நகர்வும் யூரேசிய தட்டுக்கு எதிரான அதன் உந்துதலும் பொதுவாக ஆப்கானிஸ்தானின் ஏராளமான நிலநடுக்கங்களுக்கு காரணமாகின்றன.


கிழக்கு மற்றும் வடகிழக்கு ஆப்கானிஸ்தான், குறிப்பாக உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுடனான அதன் எல்லைகளில் உள்ள பகுதிகள், குறிப்பாக நிலநடுக்கங்களுக்கு உள்ளாகின்றன.


ஆப்கானிஸ்தானின் மலைகளில் நிலநடுக்கங்கள் ஆபத்தானவையாக இருக்கிறது. அங்கு அவை பெரும்பாலும் நிலச்சரிவுகளை ஏற்படுத்துகின்றன. இது சேதத்தையும் உயிர் இழப்பையும் அதிகரிக்கிறது.


பொதுவாக நாடு எவ்வாறு மீள்தன்மையை உருவாக்க முடியும்? நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் புதிய கட்டமைப்புகளைக் கட்டமைக்கவும், இடிந்து விழும் வாய்ப்புகளைக் குறைக்க பழைய கட்டிடங்களை மறுசீரமைக்கவும் ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன.


சரியான நேரத்தில் எச்சரிக்கைகளுக்கு சிறந்த கண்காணிப்பு மற்றும் ஆரம்பகால எச்சரிக்கை அமைப்புகளும் உருவாக்கப்பட வேண்டும். அதேநேரத்தில், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களை இடமாற்றம் செய்ய புவிசார் மற்றும் தொலைநிலை உணர்திறன் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பிளவுக்கோடுகளை (fault lines) வரைபடமாக்க வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.


உங்களுக்குத் தெரியுமா? 


பூமியின் மேற்பரப்பின் கீழ், இயக்கம் காரணாமாக ஏற்படும் நிலத்தின் கடுமையான குலுக்கலே நிலநடுக்கம் ஆகும். பூமியின் இரண்டு தொகுதிகள் திடீரென ஒன்றையொன்று கடந்து செல்லும் போது நிலநடுக்கம் நிகழ்கிறது. இது நில அதிர்வு அலைகளின் வடிவத்தில் சேமிக்கப்பட்ட 'மீள் திரிபு' (elastic strain) ஆற்றலை வெளியிடுகிறது. இது பூமி முழுவதும் பரவி நில அதிர்வை ஏற்படுத்துகிறது.


பூமியின் வெளிப்புற அடுக்கு மேலோடு (crust) என்று அழைக்கப்படுகிறது. இது கண்டத்தட்டுகள் (tectonic plates) எனப்படும் பல பெரிய துண்டுகளாக உடைக்கப்பட்டுள்ளது. இந்த தட்டுகளின் விளிம்புகள் தட்டு எல்லைகள் (plate boundaries) என்று அழைக்கப்படுகின்றன. இந்த எல்லைகள் இரண்டு பாறைத் தொகுதிகளுக்கு இடையிலான விரிசல்களான பிளவுகளால் ஆனவை. கண்டத்தட்டுகள் எப்போதும் மெதுவாக நகரும். அவை ஒன்றையொன்று கடந்து சறுக்கி, சில சமயங்களில் மோதுகின்றன. தட்டுகளின் விளிம்புகள் கரடுமுரடாக இருப்பதால், அவை பெரும்பாலும் சிக்கிக் கொள்கின்றன. விளிம்புகள் சிக்கிக் கொண்டிருக்கும் அதே வேளையில், தட்டின் மீதமுள்ள பகுதி தொடர்ந்து நகர்கிறது.


ஒரு நிலநடுக்கமானது, ஒரு கண்டத்தட்டின் விளிம்புகள் திடீரென ஒரு பிளவு கோட்டில் நழுவும் அளவுக்கு நகரும்போது ஏற்படுகிறது. பூமியின் உள்ளே நிலநடுக்கம் தொடங்கும் புள்ளி குவியப்புள்ளி (hypocenter) என்று அழைக்கப்படுகிறது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (United States Geological Survey (USGS)) விளக்குகிறது. மேற்பரப்பில் அதற்கு நேர் மேலே உள்ள புள்ளி மையப்புள்ளி (epicenter) என்று அழைக்கப்படுகிறது.


உலகில் ஏழாவது அதிக பூகம்ப அபாயம் கொண்ட நாடாக தரவரிசைப்படுத்தப்பட்ட இந்தியா, நிலநடுக்கத்திற்கு எளிதில் பாதிக்கப்படக்கூடியது. இந்தியாவின் பூகம்ப பாதிப்பானது, பல கண்டத் தட்டுகளின் சங்கமத்தில் அதன் புவியியல் நிலை, அதன் சிக்கலான புவியியல் அமைப்பு, மற்றும் வேகமாக வளரும் மக்கள்தொகைக்கு ஏற்ப பரவலான ஒழுங்கற்ற கட்டுமான நடைமுறைகளுடன் தொடர்புடையதால் ஏற்படுகிறது.


இந்தியாவின் நிலப்பரப்பில் சுமார் 59 சதவீதம் மிதமானது முதல் கடுமையான நிலநடுக்கங்களுக்கு ஆளாகிறது என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority (NDMA)) கூறுகிறது. இந்த நிலநடுக்கங்கள் MSK அளவில் VII அல்லது அதற்கு மேல் தீவிரத்தை பதிவு செய்யும் திறன் கொண்டது.



Original article:

Share:

வாழ்நாள் சான்றிதழ் (Jeevan Pramaan) அல்லது டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ் என்றால் என்ன? -மனஸ் ஸ்ரீவாஸ்தவா

 ஓய்வூதியதாரர்களுக்கான வாழ்நாள் சான்றிதழ் 2025: இந்தியா முழுவதும் உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு ஒவ்வொரு நவம்பர் மாதமும் தங்கள் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் அல்லது ‘ஜீவன் பிரமாண்’ அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்த செயல்முறை எவ்வாறு டிஜிட்டல் மயமாக்கப்பட்டது?


தற்போதைய செய்தி :


நவம்பர் மாதம் ஓய்வூதியதாரர்களுக்கு மிக முக்கியமான மாதமாகும். ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் மாதத்தில் வாழ்நாள் சான்றிதழைப் (life certificate) பெறுவதற்காக ஏராளமான ஓய்வூதியதாரர்கள் வங்கிகள் அல்லது தபால் அலுவலகங்களில் வரிசையில் நிற்கின்றனர். வாழ்நாள் சான்றிதழ் என்பது ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் நிதி பாதுகாப்பிற்கு பங்களிக்கும் மற்றும் சிக்கல்களை தடுக்கும் மிக முக்கியமான படியாகும். இங்குதான் டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ் அல்லது வாழ்நாள் சான்றிதழ் முக்கியத்துவம் பெறுகிறது.


முக்கிய அம்சங்கள்:


1. வாழ்நாள் சான்றிதழ் (Jeevan Pramaan) என்பது ஓய்வூதியதாரர்களுக்கான உயிரிய அளவியல் (biometric) அடிப்படையிலான டிஜிட்டல் சேவையாகும். மத்திய அரசு, மாநில அரசு அல்லது வேறு எந்த அரசு நிறுவனத்தின் ஓய்வூதியதாரர்களும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


2. ஓய்வூதியதாரர்கள் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு அவர்களுக்குத் தேவைப்படும் முக்கிய தேவைகளில் ஒன்று, வங்கிகள், தபால் அலுவலகங்கள் போன்ற அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதிய வழங்கும் நிறுவனங்களுக்கு வாழ்நாள் சான்றிதழ்களை சமர்ப்பிப்பதாகும்.


3. இந்த வாழ்நாள் சான்றிதழைப் பெறுவதற்கு, ஓய்வூதியம் பெறும் நபர் ஓய்வூதிய வழங்கும் நிறுவனத்தின் முன் தனிப்பட்ட முறையில் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் அல்லது அவர்கள் முன்னர் பணியாற்றிய இடத்தில் வாழ்நாள் சான்றிதழை வழங்கி, அதை வழங்கும் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும்.


4. இது குறிப்பாக வயதானவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு அதிக சிரமத்தையும் தேவையற்ற பிரச்சனையையும் ஏற்படுத்துகிறது.


5. கூடுதலாக, ஓய்வு பெற்ற பிறகு அதிகளவிலான அரசு ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் இருப்பதற்கோ அல்லது பிற காரணங்களுக்காகவோ வேறு இடத்திற்கு இடம்பெயர்கின்றனர். இது நிர்வாக அமைப்பில் பெரிய சிக்கலை (logistical issue) உருவாக்குகிறது.


6. இந்த சவால்களை சமாளிக்க, இந்திய அரசு நவம்பர் 10, 2014 அன்று பணியாளர், பொது குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின்கீழ் வாழ்நாள் சான்றிதழ் (Jeevan Pramaan) அல்லது டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. முக அங்கீகாரம் (Face Authentication) 2021-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.


7. இந்தத் திட்டம் முழு வாழ்நாள் சான்றிதழ் செயல்முறையையும் டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் சிக்கல்களைத் தீர்க்கிறது. இது இந்த சான்றிதழ் பெறுவதற்கான செயல்முறையை எளிமைப்படுத்துவதையும் ஓய்வூதியதாரர்களுக்கு சிரமமற்றதாகவும் மிகவும் எளிதானதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


8. வாழ்நாள் சான்றிதழ் (டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் பெறுவதற்கு) ஓய்வூதியர் தனிப்பட்ட முறையில் ஓய்வூதியம் வழங்கும் அதிகாரியின் (Pension Disbursing Officer) முன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியதில்லை. டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழை (DLC) வங்கி அல்லது தபால் நிலையத்திற்கு நேரில் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. இது டிஜிட்டல் முறையில் அனுப்பப்பட்டு தானாகவே செயலாக்கப்படும். ஒவ்வொரு டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழுக்கும் ஒரு தனித்துவமான வாழ்நாள் சான்றிதழ் அடையாள அட்டை (Pramaan-Id) உள்ளது.


9. வாழ்நாள் சான்றிதழ்/வாழ்நாள் சான்றிதழ் அடையாளம், வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகாது. சான்றிதழின் செல்லுபடியாகும் காலம் ஓய்வூதிய ஒப்புதல் ஆணையத்தால் (Pension Sanctioning Authority) குறிப்பிடப்பட்ட விதிகளின்படி உள்ளது. செல்லுபடியாகும் காலம் முடிந்தவுடன் புதிய வாழ்நாள் சான்றிதழ், வாழ்நாள் சான்றிதழ் அடையாள அட்டையை பெற வேண்டும்.


10. ஓய்வூதியம் பெற அனுமதிக்கும் அதிகாரி (Pension Sanctioning Authority (PSA)) வாழ்நாள் சான்றிதழுடன் இணைக்கப்பட்டிருந்தால் அந்த ஓய்வூதியர் வாழ்நாள் சான்றிதழ் பெறுவதற்கு தகுதியுடையவர் ஆவார்.


11. மறுவேலைவாய்ப்பு பெற்ற அல்லது மறுமணம் செய்துகொண்ட ஓய்வூதியதாரர் வாழ்நாள் சான்றிதழ் அதாவது டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழைப் பெறத் தகுதியற்றவர் ஆவார். அவர் வழக்கமான முறையில் ஓய்வூதியம் பெற அனுமதிக்கும் அதிகாரியிடம் வாழ்நாள் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.


12. வாழ்நாள் சான்று அதாவது டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழை உருவாக்குவதற்கு/ பெறுவதற்கு ஆதார் எண் அல்லது ஒரு மெய்நிகர் அடையாள எண்  (Virtual ID) கட்டாயமாகும்.


13. வாழ்நாள் சான்றிதழ் அதாவது டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ் கட்டாயமானது அல்ல. ஆனால், ஏற்கனவே இருக்கும் வாழ்க்கை சான்றிதழ் சமர்ப்பிப்பு முறைகளுக்கு கூடுதல் வசதியாகும்.


14. டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ் செல்லுபடியாகும் சான்றிதழாகும். இது வருமான வரி சட்டத்தின் (IT Act) கீழ் உள்ளது.


15. மோசடி மற்றும் தவறான பயன்பாட்டைத் தடுக்க, ஓய்வூதிய வழங்கும் நிறுவனங்கள் (Pension Disbursing Agencies (PDAs)) ஓய்வூதியத் தொகையை வரவு வைப்பதற்கு முன் வாழ்க்கை சான்றிதழை சரிபார்க்க வேண்டும் என்று அரசு கட்டாயமாக்கியுள்ளது. நவம்பர் 1 முதல் நவம்பர் 30 வரை ஓய்வூதியதாரர்கள் வாழ்க்கை சான்றிதழ் செயல்முறையை இறுதி செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்க அக்டோபர் 1 முதல் நவம்பர் 30 வரை கூடுதல் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது. சான்றிதழைப் பெறுவது கட்டாயமாகும். ஆனால், அவர்கள் நேரில் வரவேண்டிய அவசியமில்லை.


மத்திய ஓய்வூதிய குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு மற்றும் UMANG செயலி


1. மத்திய ஓய்வூதிய குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு (Centralized Pension Grievances Redress And Monitoring System (CPENGRAMS)) என்பது ஒரு இணைய வழியில் கணினிமயமாக்கப்பட்ட அமைப்பாகும். இது ஓய்வூதியதாரர்களுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதோடு, குறைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்கும் திறம்பட கண்காணிப்பதற்கும் உருவாக்கப்பட்டது. ஓய்வூதியதாரர்கள் தங்கள் குறை தீர்க்கப்படுவதில் திருப்தி அடையவில்லை என்றால், அவர்கள் மேல்முறையீடு செய்யலாம்.


2. தபால், கட்டணமில்லா எண் மற்றும் UMANG செயலி மூலம் குறைகளை பதிவு செய்யலாம்.


3. புதிய தலைமுறை ஆட்சிக்கான ஒருங்கிணைந்த மொபைல் பயன்பாடு (Unified Mobile Application for New-age Governance (UMANG)), எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் டிஜிட்டல் இந்தியா முயற்சியாகும். இது UMANG செயலி, இணையதளம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட உதவி கூட்டாளர் மையங்கள் மூலம் பல அரசாங்க சேவைகளை அணுகக்கூடியதாக மாற்றுவதைக் குறிக்கிறது.


4. வாழ்நாள் சான்றிதழ் அல்லது டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழையும் UMANG செயலி  மூலம் உருவாக்கலாம்.



Original article:

Share:

இந்திய குடியரசின் செயல்பாட்டில் அரசுத் தலைமை வழக்கறிஞர் எங்கனம் முக்கியமானவராக இருக்கிறார்? –கண்ணன் கே

 அரசியலமைப்பு, இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரை (Attorney General of India (AGI)) ஒரு தனித்துவமான நிலையில் வைக்கிறது. நமது அரசியலமைப்பு தலைமை வழக்கறிஞரை அரசின் மூன்று அங்கங்களுடனும் தொடர்புகொள்ள உதவுகிறது - அவை நிர்வாகம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ஆகும். ஆனால், முதல் சட்ட அலுவலர் (First Law Officer) அரசாங்கத்தின் வழக்கறிஞராக மட்டுமல்லாமல், அரசியலமைப்பின் மாண்பை காப்பவராகவும், சட்டத்தின் ஆட்சியின் (rule of law) முதன்மை பாதுகாவலராகவும் செயல்படுவதில் என்ன மாதிரியான சவால்களை எதிர்கொள்கிறார்?


2021-ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (POCSO) பிரிவு 7-ன் கீழ் ஒரு குழந்தையுடனான உடல்ரீதியாக (“skin-to-skin”) தொடர்பு அல்ல, பாலியல் தாக்குதல் குற்றத்தை உருவாக்குவதற்கு மிக முக்கியமான அங்கம் “பாலியல் நோக்கம்” என்று தீர்ப்பளித்தது, மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வின் இரு தீர்ப்புகளை அது ரத்து செய்தது.


மிக முக்கியமாக, முன்னாள் இந்திய அரசுத் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததை அடுத்து இந்த தீர்ப்பு வந்தது. இது இந்திய அரசுத் தலைமை வழக்கறிஞர் தனது அரசியலமைப்பு உரிமைகளை எவ்வாறு பொது நலனை நிலைநிறுத்தவும், குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்யவும், அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இந்த தீர்ப்பு  எடுத்துக்காட்டுகிறது.


பிரிவு 76(3)-ன் கீழ், இந்திய அரசுத் தலைமை வழக்கறிஞர் தனது கடமைகளை நிறைவேற்றுவதில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் போன்ற அனைத்து நீதிமன்றங்களிலும் கருத்து தெரிவிக்கும் உரிமையை (right of audience) பெற்றுள்ளார். இதன் பொருள், இந்திய அரசுத் தலைமை வழக்கறிஞர் அதிகாரப்பூர்வமாக ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கும்போது எந்த நீதிமன்றமும் அவர்களது மனுவை நிராகரிக்க முடியாது. இது அரசின் சட்டநிலையை அனைத்து நீதிமன்றங்களிலும் எப்போதும் பிரதிநிதித்துவப்படுத்தவோ அல்லது தெளிவுபடுத்தவோ முடியும் என்பதை உறுதி செய்கிறது.


குறிப்பிடத்தக்க வகையில், இந்த விதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் அட்டர்னி ஜெனரலுக்கு அனைத்து நீதிமன்றங்களிலும் பேச்சுரிமை உள்ள பிரிட்டிஷ் மரபிலிருந்து பெறப்பட்டது. ஆனால் ‘தலைமை சட்ட ஆலோசகர்’ மற்றும் ‘முதல் சட்ட அதிகாரி’ என்று அடிக்கடி குறிப்பிடப்படும் அரசுத் தலைமை வழக்கறிஞரின் மற்ற உரிமைகள் மற்றும் கடமைகள் என்னவாகும்? அரசுத் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்படுவதற்கான தேவையான தகுதிகள் என்ன, மற்றும் அரசுத் தலைமை வழக்கறிஞருக்கு நிலையான கால அளவு உள்ளதா? அந்த கூற்றை ஆராய்வோம்.

அரசியலமைப்பு எவ்வாறு இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரை (Attorney General of India (AGI)) ஒரு தனித்துவமான நிலையில் வைக்கிறது?


இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் பதவி அரசியலமைப்பால் உருவாக்கப்பட்டது. 1950ஆம் ஆண்டு  அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதன் மூலம் நடைமுறைக்கு வந்தது. இது புதிதாக உருவான அரசாங்கத்திற்கு நிபுணத்துவ சட்ட ஆலோசனைக்கான அணுகலை உறுதி செய்தது. அவ்வாறு செய்வதன் மூலம், அரசியலமைப்பு இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரை ஒரு தனித்துவமான நிலையில் வைக்கிறது. அரசியலமைப்பு இந்திய அரசின் தலைமை வழக்கறிஞகருக்கு ஒரு தனித்துவமான அதிகாரத்தை வழங்குகிறது. இது அரசாங்கத்தின் மூன்று கிளைகளான நிர்வாகம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்ற அனுமதிக்கிறது.


பிரிவு 88-ன் கீழ், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் இரு சபைகளிலும், அவற்றின் கூட்டு கூட்டங்களிலும் மற்றும் அவர் உறுப்பினராக இருக்கும் எந்தவொரு நாடாளுமன்றக் குழுவிலும் (parliamentary committee), பேசும் மற்றும் நடவடிக்கைகளில் பங்கேற்கும் உரிமையைக் கொண்டுள்ளார். ஆனால், வாக்களிக்கும் உரிமை அவருக்கு வழங்கப்படவில்லை. அரசியலமைப்பு பிரிவு 105-ன் கீழ், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு நாடாளுமன்ற உறுப்பினருக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் பாதுகாப்புகளையும் (privileges and immunities) வழங்குகிறது.


இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அனைத்து செயல்பாடுகளிலும் முதன்மை வழக்கறிஞர் (Solicitor General) மற்றும் கூடுதல் வழக்கறிஞர்களால் உதவி பெறுகிறார். இருப்பினும். இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் பதவி மட்டுமே அரசியலமைப்பால் உருவாக்கப்பட்டது. பதவியில் இருக்கும் நீதிபதிகளுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிக்கும் நபர்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளுக்கு (contempt of court proceedings) அனுமதி வழங்குவதற்கான அல்லது மறுப்பதற்கான அதிகாரமும் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் மற்றும் முதன்மை வழக்கறிஞருக்கு வழங்கப்பட்டுள்ளது.


நீதிமன்றங்கள் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அனுமதியின்றி தாமாக முன்வந்து (suo motu) நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்கலாம் என்றாலும், ஒரு தனி நபர் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் எழுத்துப்பூர்வ அனுமதியுடன் மட்டுமே அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்க முடியும். இவ்வாறு, இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தேவையற்ற அவமதிப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான காவலராகச் செயல்படுகிறார். நீதித்துறை கண்ணியத்தைப் பேச்சுரிமை மற்றும் நியாயமான விமர்சன உரிமையுடன் சமநிலைப்படுத்துகிறார்.


செப்டம்பர் 30, 2022 அன்று கே.கே. வேணுகோபாலுக்குப் பிறகு வந்த இந்திய அரசின் தலைமை வழக்கறிஞராக R. வெங்கடரமணி, அக்டோபர் 1 முதல் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு மீண்டும் நியமிக்கப்பட்டார். நீதிமன்ற நடவடிக்கைகளின்போது இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணியை வீசியதாகக் கூறப்படும் ஒரு வழக்கறிஞர் மீது அவமதிப்பு நடவடிக்கையைத் தொடங்க ஒப்புதல் அளித்தார். மாற்றாக, சில பொதுநல வழக்குகளில் நடவடிக்கைகளைத் தொடங்க இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் நேரடியாக நீதிமன்றத்தை நாடலாம்.




ஆலோசனை மற்றும் பிரதிநிதித்துவ செயல்பாடுகள்


சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குவது அல்லது அனுமதி வழங்குவது தவிர, இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் மத்திய அரசுக்கு ஒரு முக்கியமான ஆலோசனை மற்றும் தேவையான பிரதிநித்துவதை வழங்குகிறார். ஆலோசனை திறனில், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் குடியரசுத் தலைவரால் தமக்கு குறிப்பிடப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட விவகாரங்களில் அரசுக்கு சட்ட ஆலோசனை வழங்குகிறார். இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் உள்ள அனைத்து வழக்குகளிலும், தேவைப்படும்போது உயர் நீதிமன்றங்களிலும் மத்திய அரசை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.


பிரிவு 143இன் கீழ் குடியரசுத் தலைவரால் செய்யப்படும் எந்தவொரு குறிப்பிலும் (குடியரசுத் தலைவரின் உச்ச நீதிமன்றத்துடன் கலந்தாலோசிக்கும் அதிகாரம்) இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அரசாங்கத்தின் கருத்துகளையும் உச்ச நீதிமன்றத்தில் முன்வைக்கிறார். அரசியலமைப்பின் பிரிவு 76 குடியரசுத் தலைவருக்கு இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரை நியமிக்க அதிகாரம் அளிக்கிறது. அவர் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்க தகுதியானவராக இருக்க வேண்டும். அதன்படி, இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் மற்றும் பின்வருவனவற்றைக் கொண்டிருக்க வேண்டும்:


1. குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியிருக்க வேண்டும் அல்லது


2. குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக இருந்திருக்க வேண்டும் அல்லது


3. குடியரசுத் தலைவரின் கருத்துப்படி ஒரு சிறந்த சட்ட அறிஞராக (eminent jurist) இருக்க வேண்டும்.


மிக உயர்ந்த நீதித்துறை தகுதிகளுக்கான இந்த தேவை பதவியின் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டுகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் 65 வயதில் ஓய்வு பெறுகிறார்கள் என்றாலும், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஓய்வு பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட வயது எதுவும் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


மேலும், மத்திய அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர், குடியரசுத் தலைவர் விரும்பும் வரை பணியாற்றுவார். நிலையான பதவிக்காலம் இல்லை மேலும், குடியரசுத் தலைவர் அவரது ஊதியத்தையும் (remuneration) தீர்மானிக்கிறார்.


அரசியலமைப்பு எவ்வாறு இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் பாரபட்சமற்ற தன்மையை உறுதிசெய்கிறது?


இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் குறிப்பிடத்தக்க மதிப்பையும் சலுகைகளையும் அனுபவித்தாலும், அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் பாரபட்சமற்றத் தன்மையை உறுதிசெய்யவும், நலன்சார் முரண்பாடுகளைத் தவிர்க்கவும் சில வரம்புகளை வைத்துள்ளனர். இருப்பினும், கடந்த காலங்களில், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் எப்போதும் முற்றிலும் நடுநிலையாகத் தோன்றாமல் போகலாம் என்ற கவலைகளை உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ளது.


மேலும், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு பின்வருவன அனுமதிக்கப்படவில்லை:


1. இந்திய அரசுக்கு எதிராக சட்ட ஆலோசனையோ, வழக்காற்றலைக் கையாள்வதோ செய்ய முடியாது.


2. ஒரு வழக்கில் இந்திய அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அல்லது ஆலோசனை வழங்கி வந்தால், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அந்த வழக்கில் வேறு ஒருவருக்கு ஆலோசனை வழங்கவோ அல்லது பிரதிநிதித்துவப்படுத்தவோ முடியாது.


3. மேலும், இந்திய அரசாங்கத்தின் அனுமதியின்றி குற்றவியல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் பாதுகாக்க முடியாது.


4. இந்திய அரசாங்கத்தின் முன் அனுமதியின்றி எந்த நிறுவனத்திலும் இயக்குநராக நியமனம் செய்யப்படுவதை இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஏற்றுக்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இருப்பினும், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஒரு முழுநேர அரசு ஊழியர் அல்ல என்பதை நினைவில் கொள்வது முக்கியம். எனவே இந்த கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அவரால் தனியார் சட்டப் பயிற்சியில் ஈடுபட முடியும். இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் மத்திய அமைச்சரவையின் உறுப்பினர் அல்ல. மேலும், சட்ட விவகாரங்களின் அரசியல் மற்றும் நிர்வாக அம்சங்கள் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரால் அல்ல, சட்டம் மற்றும் நீதி அமைச்சரால் கையாளப்படுகின்றன. இந்த அமைப்பு இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் நடுநிலையைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டது.


இந்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கான சவால்கள்


இருப்பினும், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு பல்வேறு சமாளிக்க வேண்டிய சவால்கள் உள்ளன. இந்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு மிகவும் குறிப்பிடத்தக்க சவால்களில் ஒன்று, நிர்வாகத்திற்கான விசுவாசத்திற்கும் அரசியலமைப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் நிலைநிறுத்தும் கடமைக்கும் இடையே சரியான சமநிலையை ஏற்படுத்துவதாகும். இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டாலும், அமைச்சரவை ராஜினாமா செய்யும்போது அல்லது புதிய அரசாங்கம் பதவியேற்கும்போது இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர்  ராஜினாமா செய்கிறார் என்ற தொடர்ச்சியான மரபு உள்ளது.


மேலும், நிலையான பதவிக்காலம் இல்லாதது இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் சுதந்திரத்திற்கு ஒரு அச்சுறுத்தலாக அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. ஏனெனில், இது சில சமயங்களில் அவரை அரசாங்க செல்வாக்கிற்கு ஆளாக்கும். இருப்பினும், நியமன நேரத்தில் நிலையான காலத்தைக் குறிப்பிடும் சமீபத்திய நடைமுறை - உதாரணமாக, R. வெங்கடரமணியின் ஆரம்ப மூன்று ஆண்டு காலம் (2022-2025), மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது - ஒரு முற்போக்கான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.


இந்த வரம்புகள் மற்றும் சவால்கள் இருந்தபோதிலும், இந்திய குடியரசின் செயல்பாட்டில் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முக்கியப் பங்கு வகிக்கிறார். இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அலுவலகம், அரசாங்கம் அரசியலமைப்பையும் சட்டத்தையும் பின்பற்றுவதை உறுதிசெய்து, அதன் அரசியலமைப்பு ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கிறது. அரசாங்கத்தின் உயர் சட்ட பிரதிநிதியாக  இருக்கும் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் அரசாங்கத்தின் குரலாக செயல்படுகிறார்.


மேலும், நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்பதன் மூலம், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் நிர்வாகத்திற்கும் சட்டமன்றத்திற்கும் இடையே ஒரு பாலமாக செயல்படுகிறார் மற்றும் நிபுணத்துவ சட்ட நுண்ணறிவுகளை வழங்குகிறார். இறுதியில், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் நிர்வாக கொள்கை மற்றும் நீதித்துறை மறுஆய்வின் (judicial review) மற்றொரு வழியில் நிற்கிறார். மத்திய அரசாங்கத்தின் வழக்கறிஞராக மட்டுமல்லாமல், அரசாங்கத்தின் அரசியலமைப்பு மாண்பை பாதுகாப்பவராகவும், உச்சநீதிமன்றத்தில் சட்டத்தின் ஆட்சியின் முதன்மை பாதுகாவலராகவும் பணியாற்றி வருகிறார்.


கண்ணன். K, ஹைதராபாத்தில் உள்ள பொருளாதார மற்றும் சமூக ஆய்வுகள் மையத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.



Original article:

Share:

இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்திய கடற்படையின் கண்காணிப்பு மற்றும் தகவல்தொடர்பை GSAT-7R வலுப்படுத்தும். -சௌரப் திரிவேதி

 புவி ஒத்திசைவு செயற்கைக்கோள் (Geosynchronous Satellite (GSAT)) -7R என்பது இந்தியாவின் முதல் இராணுவ செயற்கைக்கோளான GSAT-7 "ருக்மிணி"யின் அடுத்த பதிப்பாகும். இது 2013-ஆம் ஆண்டில் ஏவப்பட்டது. ருக்மிணி அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் நிகழ்நேர தரவு இணைப்புகளை (real-time data links) வழங்குவதன்மூலம் கடற்படை தொடர்பை மேம்படுத்தியது. புதிய GSAT-7R செயற்கைக்கோள் தகவல் தொடர்பு திறன்களை மேம்படுத்துகிறது.


நவம்பர் 2, 2025 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து LVM3-M5 ராக்கெட்டில் இந்தியாவின் CMS-03 (GSAT-7R) செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள் இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பை பெரிதும் வலுப்படுத்தும் மற்றும் தொழில்நுட்பத்தில் சுயசார்பு (self-reliance) பெறும் நாட்டின் இலக்கை ஆதரிக்கும்.


இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (Indian Space Research Organisation (ISRO)) உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கிய 4,400 கிலோ எடையுள்ள பன்முக அலைவரிசை தகவல்தொடர்பு செயற்கைக்கோள் (multi-band communication satellite,), இந்திய மண்ணிலிருந்து புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் (Geosynchronous Transfer Orbit (GTO)) ஏவப்பட்ட மிகப்பெரிய தகவல்தொடர்பு செயற்கைக்கோள் ஆகும். இந்த செயற்கைகோள் ஆனது இந்தியக் கடற்படை தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தவும், கடலில் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தவும், இந்தியப் பெருங்கடல் பகுதி முழுவதும் அதன் கண்காணிப்பை வலுப்படுத்தவும் உதவும்.


பாதுகாப்பான தகவல் தொடர்பு பரவல்


2013ஆம் ஆண்டு ஏவப்பட்ட இந்தியாவின் முதல் இராணுவ செயற்கைக்கோளான GSAT-7 "ருக்மிணி"யின் அடுத்த பதிப்பாகும். அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் முழுவதும் நிகழ்நேர தரவு இணைப்புகளை வழங்குவதன் மூலம் ருக்மினி கடற்படை தகவல் தொடர்பு திறன்களை மேம்படுத்துகிறது. அதே வேளையில், GSAT-7R, கடற்படைக் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானங்கள் மற்றும் கடற்படை செயல்பாட்டு மையங்கள் (Maritime Operations Centres (MOCs)) இடையே தடையற்ற குரல், தரவு மற்றும் வீடியோ தொடர்புகளை செயல்படுத்துகிறது. செயற்கைக்கோளின் மேம்பட்ட பயன்திறன் அமைப்பு உயர் திறன் கொண்ட, பாதுகாப்பான மற்றும் குறுக்கீடு இல்லாத தகவல்தொடர்புகளை (Jam-resistant communication) உறுதி செய்கிறது — பிணைய-மையப்படுத்தப்பட்ட போர் மற்றும் இராணுவம் மற்றும் விமானப்படையுடனான கூட்டு நடவடிக்கைகளுக்கு இன்றியமையாதது.


15 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட GSAT-7R, இந்தியக் கடற்கரையிலிருந்து 2,000 கி.மீ வரை பாதுகாப்பான தகவல் தொடர்பை விரிவுபடுத்துகிறது. இது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பரந்த பகுதிகளை உள்ளடக்கியது. இந்த பரந்த பாதுகாப்புடன், இந்திய கடற்படை முக்கியமான கடல் வழிகள், குறுகிய பாதைகள் மற்றும் கடலில் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை சிறப்பாகக் கண்காணிக்க அனுமதிக்கும். இது கடற்கொள்ளை எதிர்ப்பு, நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு மற்றும் மனிதாபிமான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கடற்படை சொத்துக்களுக்கு இடையே தொடர்ச்சியான ஒருங்கிணைப்பை ஆதரிக்கும். நிகழ்நேர சூழ்நிலை புதுப்பிப்புகள் மற்றும் விரைவான எதிர்வினை திறன்களை உறுதி செய்யும்.


மேலும், GSAT-7R, கடற்கரை கண்காணிப்பு ரேடார்கள், உளவு விமானங்கள் (reconnaissance aircraft) மற்றும் ஆளில்லா அமைப்புகள் போன்ற கண்காணிப்புத் தளங்களுடன் விண்வெளி அடிப்படையிலான தகவல்தொடர்புகளை ஒருங்கிணைப்பதன் மூலம் கடல்சார் கள விழிப்புணர்வை (maritime domain awareness (MDA)) மேம்படுத்தும். இந்த அமைப்புகள் இணைந்து செயல்படுவதால், கடற்படை பரபரப்பான கடல் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்கவும், எந்தவொரு அச்சுறுத்தல்களுக்கும் விரைவாக பதிலளிக்கவும் உதவும். இது இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தும்.


 GSAT-7R செயற்கைகோளை ஏவுவது, இந்தியா பாதுகாப்பு விண்வெளி தொழில்நுட்பத்தில் அதிக தன்னம்பிக்கை அடைந்து வருவதைக் காட்டுகிறது என்றும், தற்சார்பு இந்தியா (Aatmanirbhar Bharat) என்ற தொலைநோக்குப் பார்வையை ஆதரிக்கிறது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். வலுவான மற்றும் உள்நாட்டு செயற்கைக்கோள் தொடர்பு உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதன் மூலம், கடற்படை வெளிநாட்டு அமைப்புகளிலிருந்து தன்னிச்சையாக செயல்பட முடியும். இது ராஜதந்திர நடவடிக்கைகளில் ரகசியத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது.


அளப்பரிய முன்னேற்றம்  (Quantum leap)


சுருக்கமாக, GSAT-7R இந்தியாவின் கடல்சார் தகவல் தொடர்பு மற்றும் கண்காணிப்பு கட்டமைப்பில் ஒரு பெரிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது, இது இந்தியக் கடற்படை இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் முழுவதும் அதிக எச்சரிக்கையுடன் இணைக்கப்பட்ட மற்றும் தொழில்நுட்பரீதியாக மேம்பட்ட இருப்பைப் பராமரிக்க அதிகாரம் அளிக்கிறது.


கடற்படையின் செயற்கைக்கோள்கள், உணரிகள் (Sensors), ரேடார்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் மற்றும் கண்காணிப்பு விமானங்கள் ஆகியவை தகவல் மேலாண்மை மற்றும் பகுப்பாய்வு மையத்திற்கு (Information Management and Analysis Centre (IMAC) நிகழ்நேரத் தரவை அனுப்புகின்றன. இது இப்போது தேசிய கடல்சார் கள விழிப்புணர்வு (National Maritime Domain Awareness (NMDA)) தளமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. கடற்படைத் தளபதிகளுக்கான ஒருங்கிணைந்த தெளிவான ஒட்டுமொத்த பார்வையை உருவாக்க தேசிய கடல்சார் கள விழிப்புணர்வு பல ஆதாரங்களில் இருந்து தகவல்களை ஒருங்கிணைக்கும். செயற்கை நுண்ணறிவால்-இயக்கப்பட்ட பகுப்பாய்வுகளைப் பயன்படுத்தி, இது சூழ்நிலை விழிப்புணர்வை மற்றும் கண்காணிப்பை மேம்படுத்தும், விரைவாக முடிவெடுப்பதை ஆதரிக்கும். சட்டவிரோத மீன்பிடித்தல், கடத்தல், கடற்கொள்ளை மற்றும் கடல்சார் பயங்கரவாதம் போன்ற அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து அதை எதிர்கொள்ளவும், இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தவும், இந்தியக் கடல்சார் பகுதிகள் முழுவதும் அதன் ராஜதந்திர நலன்களைப் பாதுகாக்கவும் இந்த அமைப்பு உதவும்.



Original article:

Share:

கடந்த 50 ஆண்டுகளாக செயற்கை மழை உருவாக்கம் குறித்த தமிழ்நாட்டின் முயற்சிகள். -டி. ராமகிருஷ்ணன்

 1993-ஆம் ஆண்டில், சென்னை மீண்டும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால் தவித்துக் கொண்டிருந்தபோது, மேக விதைப்புக்கான ​​சோதனைகள் செய்யப்பட்டன. ஆனால், எந்தவொரு பகுதியும் இயல்பைவிட 20 சதவீதத்துக்கும் அதிகமான மழையைப் பெறவில்லை என்ற ஒருமித்த கருத்து அதற்குள் அறிவியல் சமூகத்தினரிடையே  உருவாகியிருந்தது.


கடந்த அக்டோபர் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மேக விதைப்பு சோதனைகள் மூலம் மழையைத் தூண்ட டெல்லி அரசு முயற்சி மேற்கொண்டது. இந்த நடவடிக்கையானது கடந்த 50 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இதேபோன்ற செயல்பாடுகளின் நினைவுகளை மீண்டும் எழுப்பியுள்ளது.


தற்போதைய நிகழ்வில் நடந்தது போலவே, அப்போதும் கூட இந்த முயற்சிக்கு ஒரு மிதமான வரவேற்பே கிடைத்தது. தற்போதைய மற்றும் கடந்தகால சோதனைகளுக்கு இடையிலான அடிப்படை வேறுபாடு என்னவென்றால், தென் மாநிலம் (தமிழ்நாடு) அதன் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்ய தண்ணீர் மிகவும் தேவைப்பட்டது. மேலும், மாசுபாட்டைக் கையாளும் சிக்கலைத் தீர்க்க டெல்லி அரசு இந்தச் சோதனைகளில் தனது அதிர்ஷ்டத்தை முயற்சித்து பார்த்தது.


மேக விதைப்பு எனும் கட்டுக்கதை


1970-ஆம் ஆண்டு  ஜனவரி மாதத்தில், இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (India Meteorological Department (IMD)) தலைமை இயக்குநராக (அந்த நேரத்தில் 'ஆய்வகங்களின் தலைமை இயக்குநர்' என்று அழைக்கப்பட்டது) இருந்த பி. கோடீஸ்வரம், செயற்கையாக மழையைப் பொழிவிப்பதற்கான சோதனைகளைப் பற்றி தன் முதல் குறிப்பை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் அப்போதைய  தமிழ்நாடு அரசுடன் கலந்தாலோசனை நடத்தவிருந்தார். 1975-ஆம் ஆண்டில் பத்ம பூஷண் விருது பெற்றவரும், 1971-1975 ஆம் ஆண்டு காலகட்டத்தில் உலக வானிலை அமைப்பின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியரும் என்கிற பெருமையையும் பெற்றார். கடந்த 10 ஆண்டுகளில் டெல்லி, ஆக்ரா மற்றும் ஜெய்ப்பூர் பகுதிகளில் தரையில் உள்ள மின்னியற்றிகளில் (generators) இருந்து உப்பைச் செலுத்தி மேகங்களை விதைத்ததன் மூலம் செயற்கை மழைக்கான சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார்.


முன்னதாக, 1968-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதியிட்ட 'தி இந்து' நாளிதழில் வெளியான ஒரு அறிக்கையில், ஒன்றிய உணவு மற்றும் வேளாண்மை அமைச்சகமானது (Union Ministry of Food and Agriculture) அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் (Council of Scientific and Industrial Research (CSIR)) , மற்றும் இந்திய வானிலை ஆய்வுத் துறை (India Meteorological Department (IMD)) ஆகியவற்றுடன் கலந்தாலோசித்தது. பொருத்தமான ஒரு பகுதியில் விமானங்களைப் பயன்படுத்தி தீவிர அளவில் சோதனைகளை நடத்துவதற்காக ஒரு ஐந்தாண்டுத் திட்டத்தை உருவாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிக்கையின்படி, இந்தச் சோதனைகள் இலக்கு வைக்கப்பட்ட பகுதிகளான மூணாறு (கேரளா) மற்றும் திருச்சியில் (தமிழ்நாடு) மழைப்பொழிவின் அளவை சுமார் 20 சதவீதம் அளவிற்கு அதிகரித்துக் காட்டியுள்ளன.


1970ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் தமிழ்நாட்டிற்கு மழைப்பொழிவு சாதகமாக இல்லாததால், செயற்கை மழை என்ற கருத்தாக்கத்தில் அரசாங்கம் மிகுந்த ஆர்வம் காட்டியது. இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (Indian Institute of Tropical Meteorology (IITM)) ஜூலை 1973ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்களுக்கு திருவள்ளூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சோதனைகளை நடத்தியது. ஆனால், "'போதுமான அளவிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாததாலும் சில நடைமுறைச் சிக்கல்களினாலும்' மேகங்கள் விதைக்கப்பட்டதால்தான் மழை பெய்ததாக எந்த திட்டவட்டமான முடிவுக்கு வர முடியவில்லை என்று கோடீஸ்வரம் பதிவு செய்ததாக ‘தி இந்து' நாளிதழ் மே மாதம் 11 ஆம் தேதி  1974-ஆம் ஆண்டு செய்தி வெளியிட்டது.


இதற்கிடையில், சென்னை மற்றும் நீலகிரியில் பருவமழை மேகங்களிலிருந்து மழையைப் பொழிய வைக்கும் திட்டத்தை மேற்கொள்ள மும்பையில் உள்ள ஒரு கனடிய நிறுவனத்திடம் (Canadian firm) தமிழக அரசின் வேண்டுகோளின் பேரில் ஒன்றிய அரசு கேட்டுக்கொண்டது. ஏப்ரல் 30, 1975-ஆம் ஆண்டு ‘தி இந்து’ நாளிதழுக்கு இது குறித்த விவரங்களை அளித்த அப்போதைய தமிழக தலைமைச்செயலாளர் பி. சபாநாயகம் கூறுகையில், இத்திட்டத்தின் மொத்தச் செலவு ₹1 கோடி என்றும், அதில் ₹80 லட்சம் அந்நியச் செலாவணி என்றும் மதிப்பிட்டுக் கூறினார்.


மேக விதைப்பு மழையை அதிகரித்ததாக அறிக்கை கண்டறிந்துள்ளது


சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சென்னையின் நீர் ஆதாரங்களின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் நீர்நிலைப் பகுதிகளில் செயற்கை பரிசோதனைகள் விரைவில் தொடங்கும் என்ற செய்தி வெளியானது. இந்த நடவடிக்கை ஜூலை 12-ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கி நவம்பர் நடுப்பகுதி வரை தொடரும். ஒரு களப்பொறியாளர் (ground engineer), ஒரு விமானி மற்றும் ஒரு வானிலை ஆய்வாளர் அடங்கிய மூன்று பேர் கொண்ட அமெரிக்கக் குழு, “தரையில் உள்ள ரேடார் கருவிகளின் உதவியுடன் மழை பெய்யும் மேகங்களைக் கண்டறிந்து, அவற்றுக்குள் இரசாயனங்களை விதைத்து, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யச் செய்யும்” என்று ஜூலை 8, 1975-ஆம் ஆண்டு தி இந்து நாளிதழில் அறிக்கை வெளியானது. அமெரிக்கர்கள் தங்கள் நாட்டிலும் ஆப்பிரிக்காவிலும் இதேபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தின் செலவு ₹12 லட்சமாகக் குறைக்கப்பட்டது, இதில் ₹ 10 லட்சம் அந்நிய செலாவணிக்கானது என்றும் இதற்கான அனுமதியை ஒன்றிய அரசு வழங்கியிருந்தது.


நடவடிக்கைகள் தொடங்கப்பட்டபிறகு, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்தது. உதாரணமாக, ஜூலை 21-ஆம் தேதி பூண்டியில் 3.7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மாநில வேளாண்மைத் துறையின் அப்போதைய சிறப்புச் செயலாளரான கே. சொக்கலிங்கம், பூண்டிக்கும் செங்குன்றத்திற்கும் இடையிலான பகுதியிலும் மழை பெய்ததாகக் கூறினார். ஜூலை 29-ஆம் தேதி முதற்கட்ட நடவடிக்கைகளை முடித்த பிறகு, அமெரிக்கக் குழுவின் பொறியாளர் உறுப்பினரான பிரெட் கிளார்க், மேகவிதைப்பு காரணமாக சுமார் 20 சதவீதம் கூடுதல் மழைப்பொழிவு ஏற்பட்டதாகக் கூறினார். பூண்டியில் உள்ள சத்தியமூர்த்தி சாகருக்குப் (நீர்த்தேக்கம்) பிறகு நீர்வரத்து அதிகம் இருந்ததாக சிறப்புச் செயலாளர் சொக்கலிங்கம் தெரிவித்தார்.


ஒரு வாரம் கழித்து புனேவில் செய்தியாளர்களுடனான சந்திப்பில், இந்திய வானிலை ஆய்வுத் துறையின் பொது இயக்குநர் ஒய்.பி. ராவ், 'மேகங்களுக்குள் ஒரே ஒரு முறை பறந்த உடனேயே செயற்கை மழை உருவாக்கும் முயற்சி வெற்றி பெற்றது' என்ற கூற்றுகளை மறுத்தார். 1975-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 அன்று தி இந்துவில் ஒரு தலையங்கத்தில், "ராவின் பார்வையில், அத்தகைய உடனடி மதிப்பீடு சாத்தியமில்லை, மேலும் சோதனை குறித்த எந்தவொரு தீர்ப்பையும் அறிவிப்பதற்கு முன்பு அறிவியல் சோதனைகள் மிக நீண்ட காலத்திற்கு மேற்கொள்ளப்பட வேண்டும். எனினும், சென்னையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் உள்ள முக்கியப் பிரச்சினை, எப்படியாவது தண்ணீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு இடத்திற்கு நிவாரணம் வழங்குவதைப் பற்றியதுதான்," என்று கூறியது.


1976-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்களின் அரசாங்கம் கலைக்கப்படுவதற்குச்  சரியாகப் பதினைந்து நாட்களுக்கு முன், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மதுரை, இராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய ஒருங்கிணைந்த மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனது குறித்து விளக்கினார். இந்த மாவட்டங்களில் மேக விதைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஒரு அமெரிக்க நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து மாநில அரசு ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தார்.


மீண்டும், 1980-ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில், மாநிலத்தை, குறிப்பாக சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை கடும் வறட்சி தாக்கியது. அந்த நேரத்தில், எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் முதலமைச்சராகவும், சொக்கலிங்கம் என்பவர் தலைமைச் செயலாளராகவும் இருந்தனர். ஜூலை 1983-ஆம் ஆண்டு தாமஸ் ஹென்டர்சன் தலைமையிலான நான்குபேர் கொண்ட அமெரிக்கக் குழுவால் மேகவிதைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பூண்டியில் "மிதமான மழை" பதிவானது. இந்தச் சோதனைகள் அக்டோபர் மாதம் வரை தொடர்ந்தன. சோதனை முடிந்த பிறகு, இந்த நடவடிக்கைக்காக மாநில அரசுக்கு ₹26 லட்சம் செலவானதாக, நவம்பர் 18, 1983 அன்று வெளியான இந்து நாளிதழுக்கு அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. எட்டு மாதங்களுக்குப் பிறகு, நகரின் நீர்த்தேக்கங்களில் மேக விதைப்பு நடவடிக்கைகளுக்கென்று அரசாங்கம், தொகை ₹62 லட்சத்தை ஒதுக்கியது. நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால், மழை தெய்வங்களின் அருளை வேண்டி, அதிகாரிகள் ஒரு விசேஷ முயற்சியாக வயலின் மேதை குன்னக்குடி வைத்தியநாதனின் உதவியை நாடினர். அவர் செம்மரக் குளம் கரையில், மழையை வரவழைக்கும் சக்தி கொண்டதாகக் கருதப்படும் [முத்துஸ்வாமி தீட்சிதர் இயற்றியதாகக் கூறப்படும்] 'அம்ருதவர்ஷினி' ராகத்தை இசைத்ததாகக் கூறப்படுகிறது. 


1983-ஆம் ஆண்டில் மாநில அரசு ஒரு விமானத்தை வாங்கியது, இந்த நடவடிக்கை தலைமைத் தணிக்கையாளரின் (Comptroller and Auditor General (CAG)) விமர்சனத்திற்கு உள்ளானது. அவரது அறிக்கை 1987 நவம்பரில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மாநில அரசு வழக்கமான டெண்டர் நடைமுறையை பின்பற்றவில்லை என்பது மட்டுமின்றி, அந்தப் பயன்படுத்தப்பட்ட விமானத்தை ஆய்வு செய்த ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) பரிந்துரைத்த விலையைவிட மிக அதிக விலையையும் கொடுத்தது என்றும் தி ஹிந்து நாளிதழ் 1987-ஆம் ஆண்டு நவம்பர் 10 அன்று செய்தி வெளியிட்டது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, வெளியான மற்றொரு அறிக்கையில் அந்த விமானம் உதிரிபாகங்கள் இல்லாததால் சில காலம் பயன்படுத்தப்படாமல் இருந்தது என்றும் அதை பழுதுபார்க்க சுமார் ₹13 லட்சம் செலவானது, இறுதியாக அதை விற்றுவிட வேண்டியிருந்தது என்றும் விமர்சிக்கப்பட்டிருந்தது. 


1993-ஆம் ஆண்டில், சென்னை மீண்டும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால் தவித்துக் கொண்டிருந்தபோது, மேக விதைப்புக்கான ​​சோதனைகள் செய்யப்பட்டன. ஆனால், எந்தவொரு பகுதியும் இயல்பைவிட 20 சதவீதத்துக்கும் அதிகமான மழையைப் பெறவில்லை என்ற ஒருமித்த கருத்து, அதற்குள் அறிவியல் சமூகத்தினரிடையே உருவாகியிருந்தது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா இது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் "சாதகமான சூழ்நிலைகள்" இல்லாததால் அதிகாரிகள் அவரது முடிவைச் செயல்படுத்தவில்லை.


மேக விதைப்பு: விலை உயர்ந்தது, ஆனால் எந்த உத்தரவாதமும் இல்லை


கிருஷ்ணா நீர் மற்றும் வீராணம் ஏரியை சென்னை நீர் விநியோகத்திற்கான ஆதாரங்களாகச் சேர்த்தது, கடல்நீரை நன்னீராக்கும் பல ஆலைகளுடன் இணைத்தது போன்ற நடவடிக்கைகள், நகரின் நீர் விநியோக நிலையை கடந்தகாலத்தைவிட மிகவும் சிறப்பாக ஆக்கியுள்ளது. குடிநீர் பற்றாக்குறையைச் சமாளிக்க இந்தத் திட்டங்கள் போதுமானதாக உள்ளதால் மேகவிதைப்பு சார்ந்த நடவடிக்கைகளைத் தற்போதைக்கு மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.



Original article:

Share:

நாடு தழுவிய சிறப்பு தீவிர திருத்தம்: வாக்காளர் பட்டியலில் இரட்டைப் பதிவுகளைச் சரிபார்க்க வேண்டியதன் அவசியம் -ராஜீவ் குமார்

 இந்தியாவின் தேர்தல் செயல்முறைகளின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில், நாடு தழுவிய சிறப்பு தீவிரத் திருத்தத்தின் வெற்றியானது, இரட்டைப் பதிவுகளை நீக்கி, ஒவ்வொரு வாக்கும் எண்ணப்படுவதை உறுதி செய்வதையும், தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகத் திறனை மேம்படுத்துவதையும் சார்ந்துள்ளது.


அரசியல் கட்சிகளிடமிருந்தும் இறுதியில் உச்சநீதிமன்றத்திலிருந்தும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட பீகாரில் வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் (Special Intensive Revision (SIR)) பயிற்சி நடந்து முடிந்தபிறகு, இந்தியத் தேர்தல் ஆணையம் இப்போது நாடு தழுவிய சிறப்பு தீவிரத் திருத்தத்தை அறிவித்துள்ளது. இது சிறப்பு தீவிர திருத்தம் 2.0 என குறிப்பிடப்படுகிறது. இந்த முறையானது மக்களுக்கு ஏற்ற மற்றும் நடைமுறை ரீதியாக வலுவான முயற்சியாகக் கருதப்படுகிறது.


ஏறக்குறைய, நூறு கோடி வாக்காளர் பதிவுகளுடன், டிஜிட்டல் அணுகுமுறை என்பது தவிர்க்க முடியாதது மட்டுமல்ல, மிகவும் முக்கியமானதுமாகும். வாக்காளர் பட்டியல் இனி ஒரு நிலையான, மாநில வாரியான பதிவாக இல்லாமல் இது இந்தியாவின் தேர்தல்களின் நேர்மையை துல்லியமாக வரையறுக்கும் தேசிய தரவுத்தளமாகும். இருப்பினும், நீதிமன்றங்கள் கவனமாக இருந்தாலும், ஒரு வாக்காளர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பதிவு செய்யப்படுவது தொடர்பான பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது.


வீடுகளை மாற்றும் எண்ணற்ற குடிமக்களைப் பாதிக்கும் இந்தப் பிரச்சினை, மோசடி பற்றியது அல்ல, மாறாக அமைப்பின் நடைமுறைத் தவறுகளைப் பற்றியது. பீகார் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய இரண்டு மாநில வாக்காளர் பட்டியலிலும் பெயர் உள்ள ஒரு வாக்காளரான பிரசாந்த் கிஷோர் சம்பந்தப்பட்ட சமீபத்திய வழக்கு, இந்தக் குறைபாட்டை விளக்குகிறது. மேற்கு வங்கத்தில் சிறப்பு தீவீர திருத்தம் இன்னும் தொடங்கப்படாத நிலையில், இத்தகைய இரட்டைப் பதிவு விவகாரம் பீகாரில் பட்டியலிடப்பட்டுள்ள எந்த வாக்காளரும் வேறு எங்கும் பதிவு செய்யப்படவில்லை என்பதை உறுதிசெய்யும் திட்டத்தின் முக்கிய நோக்கத்தை தோற்கடிக்கிறது. இது செயல்முறையின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறது மற்றும் வாக்காளர் தரவுத்தளத்தின் மீதான நம்பிக்கையைக் குறைக்கிறது.


போலியான பதிவுகளை நிர்வகித்தல்


மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (Representation of the People Act (RP)), 1950-ன் கீழ், போலியான பதிவுகள் (duplicate entries) தொழில்நுட்பரீதியாக ஒரு மீறலாக அமைகின்றன. இருப்பினும், அத்தகைய குறைபாடுகள் அரிதாகவே நிகழ்கின்றன. சட்டத்தை மதிக்கும் பல குடிமக்கள், வெறுமனே வசிப்பிடத்தை மாற்றுவதன் மூலம், தற்செயலாக தங்கள் தவறு எதுவும் இல்லாமல் இந்தச் சட்டத்தை மீறியவர்களாக ஆகிவிடுகிறார்கள். சிறப்பு தீவிர திருத்தம் 2.0 என்பது வலுவானதாகவும், நம்பகமானதாகவும், பிழையற்றதாகவும் மாற்ற தேர்தல் ஆணையத்தின் டிஜிட்டல் கட்டமைப்பிற்குள் ஒரு முறையான, தொழில்நுட்பம் சார்ந்த திருத்த வழிமுறையின் அவசரத் தேவையை இது வலியுறுத்துகிறது.


வாக்காளர் பட்டியல்களின் உண்மைத்தன்மையைப் பராமரிப்பதற்கும், போலிகள் ஏற்படுவதைத் தடுப்பதற்கும் 1950-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் சட்டம், விதிமுறையை வகுத்துள்ளது. சட்டப்பிரிவு 22(b)-ன் கீழ், ஒரு வாக்காளர் அதே தொகுதிக்குள் வசிக்கும் இடத்தை மாற்றினால், தேர்தல் பதிவு அதிகாரி (Electoral Registration Officer (ERO)) அந்தப் பதிவை பட்டியலின் பொருத்தமான பகுதிக்கு மாற்ற வேண்டும். ஒரு வாக்காளர் வேறு தொகுதிக்குச் செல்லும்போது, ​​பிரிவு 23(2)-ன்  புதிய பட்டியலில் சேர்ப்பதை நிர்வகிக்கிறது. விண்ணப்பதாரர் பதிவு செய்ய உரிமை உள்ளவர் என்று தேர்தல் பதிவு அதிகாரி திருப்தி அடைந்தால், புதிய பட்டியலில் விண்ணப்பதாரரின் பெயரைச் சேர்க்க உத்தரவிடவேண்டும் என்று அது கட்டளையிடுகிறது. விண்ணப்பதாரர் ஏற்கனவே மற்றொரு தொகுதியின் பட்டியலில் பதிவு செய்யப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட தேர்தல் பதிவு அதிகாரி அந்தத் தொகுதியின் அதிகாரிக்குத் தெரிவிக்க வேண்டும். பின்னர், அவர் அந்த பட்டியலிலிருந்து விண்ணப்பதாரரின் பெயரை நீக்க வேண்டும் என்றும் இந்தப் பிரிவு வழிமுறைகளைக்  கூறுகிறது.


ஒவ்வொரு வாக்காளரின் பதிவின் தனித்தன்மையை உறுதிப்படுத்த, பிரிவுகள் 17 மற்றும் 18-ம் பல பதிவுகளை வெளிப்படையாகத் தடை செய்கின்றன. எந்த நபரும் ஒன்றுக்கும் மேற்பட்டத் தொகுதியில் பட்டியலிடப்படக்கூடாது. அதே தொகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பதிவு செய்யப்படக்கூடாது. இந்த விதிமீறல்கள் தேர்தல் சட்டத்தின்கீழ் குற்றமாகக் கருதப்படும். பெரும்பாலும், வாக்காளர் புதிய வசிப்பிடத்தில் பெயரைச் சேர்க்கும்போது, முந்தைய இடத்தில் உள்ள பெயரை ஒரே நேரத்தில் நீக்காமல் விடுவதால், இம்மாதிரியான போலிப் பதிவுகள் ஏற்படுகின்றன.


சுருக்கமாகச் சொன்னால், இந்தச் சட்டம் தேர்தல் பதிவு அதிகாரிகள்மீது முதன்மைப் பொறுப்பை வைக்கிறது. பெயர் மாற்றம், சேர்த்தல், நீக்குதல் ஆகியவை துல்லியமாகவும், உடனடியாகவும், ஒரே நேரத்தில் நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும். இந்தச் செயல்முறை போலிப்  பதிவுகளைத் தடுப்பதற்கும், தேசிய தேர்தல் தரவுத்தளத்தின் நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டை உறுதி செய்வதற்கும் மிகவும் முக்கியமான ஒன்றாக அமைகிறது


படிவம் 8-ல் வசிப்பிட மாற்றம் மற்றும் வாக்காளர் விவரங்களைத் திருத்துவது தொடர்பான மேற்கண்ட விதிகளை தேர்தல் ஆணையம் ஒருங்கிணைத்துள்ளது. இந்தப் படிவம் பதிவுகளை மாற்றுதல் அல்லது திருத்துதல் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படுகிறது. முகவரி மாற்றக் கோரிக்கை நான்கு வகைகளின் கீழ் வரலாம்: 


(I) தொகுதி அல்லது வாக்குச் சாவடியில் மாற்றம் இல்லை.

(II) தொகுதியில் மாற்றம் இல்லை, ஆனால் வாக்குச் சாவடியில் மாற்றம்.

(III) ஒரே மாநிலத்திற்குள் தொகுதியில் மாற்றம்.

(IV) தொகுதி மற்றும் மாநிலம் இரண்டிலும் மாற்றம். 


இரட்டைப் பதிவுகளுக்கான மிகவும் பொதுவான காரணம், ஒரு வாக்காளர் வேறொரு மாநிலத்திற்கு இடம்பெயர்ந்த வகை IV  நிகழ்வுகளில்தான் எழுகிறது. புதிய பதிவு அதே வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (Electors Photo Identity Card (EPIC)) எண்ணைத் தக்க வைத்துக் கொள்ளலாம் அல்லது புதிய ஒன்றை உருவாக்கலாம். உதாரணமாக, பீகார் வாக்காளரின் (பிரசாந்த் கிஷோர்) இரட்டைப் பதிவு வெவ்வேறு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்களைக் கொண்டிருந்தன. அதேசமயம், இரண்டு பதிவுகளும் ஒரே வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்களைப் பகிர்ந்து கொண்ட பல நிகழ்வுகளையும் ஆசிரியர் பகிர்ந்து கொண்டுள்ளார்.  


இதுபோன்ற சூழ்நிலைகளில், பழைய பதிவை நீக்கத் தவறியதற்கு  தேர்தல் பதிவு அதிகாரியே முழுப்பொறுப்பு என்று கூறப்படுகிறது. தேசிய வாக்காளர் பட்டியலில் போலிப் பதிவுகள் இருப்பதைத் தடுக்க அவர்களின் உடனடி ஒருங்கிணைப்பு அவசியம். மற்றொரு போலிப் பதிவு ஏற்படுவதற்கான காரணம், வாக்காளர் வேறு இடத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருப்பதைத் தெரிவிக்காமல், புதிய சேர்க்கைக்கான படிவத்தைப் பயன்படுத்தும்போது ஏற்படுகிறது. ஒரு தவறான அறிவிப்பு சட்ட மீறலாகும், மேலும் சரிபார்ப்புக்கு பொறுப்பான வாக்காளர் மற்றும் அதிகாரிகள் இருவரும் இங்குப் பொறுப்புணர்வைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.


செயல்முறையை விளக்குதல் 


இந்தியாவின் வாக்காளர் பட்டியலின் முதுகெலும்பு என்று தேர்தல் ஆணைய இணைய வலையமைப்பு (Election Commission Internet Network (ECINet)) அறியப்படுகிறது. இது புனேவில் உள்ள மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (Centre for Development of Advanced Computing (C-DAC)) நிர்வகிக்கும் நாடு தழுவிய முழுமையான டிஜிட்டல் அமைப்பாகும். ஏறக்குறைய, நூறு கோடி வாக்காளர்களின் பதிவுகளுடன், ECINet என்பது உலகின் மிகப்பெரிய நிலையற்ற தரவுத்தளங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு வாக்காளரும் ஒரு தனித்துவமான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்ணால் அடையாளம் காணப்படுகின்றனர். இது ஒரு நபருக்கு ஒரே ஒரு உறுதிப்படுத்தப்பட்ட பதிவு மட்டுமே இருக்கும். தேர்தல் ஆணைய இணைய வலையமைப்பானது (Election Commission Internet Network (ECINet)) போலிப் பதிவுகளைக் கண்டறிந்து அங்கீகரிக்கப்பட்ட சரிபார்ப்பு மூலம் திருத்தங்களை எளிதாக்குகிறது. மேலும், முழுக் கண்காணிப்புக்காக வாக்காளரின் புதுப்பிப்பு வரலாற்றையும் சேர்க்கும் வகையில் இதை விரிவுபடுத்த வேண்டும்.


போலிப் பதிவுகளைத் திறம்படக் கண்டறிய உதவும் வலுவான தேடல் மற்றும் சரிபார்ப்பு பயன்பாட்டு நிரலாக்க இடைமுகத்தை (Application Programming Interface (API)) உருவாக்கியதற்காக தேர்தல் ஆணையத்தையும் மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்தையும் பாராட்ட வேண்டும் என்று கருத்து தெரிவிக்கின்றனர். எந்தவொரு இரட்டைப் பதிவும் சரிபார்ப்பின்போது மதிப்பாய்வு மற்றும் நீக்குதலுக்கான எச்சரிக்கையைத் தரவேண்டும். அத்தகைய கருவிகள் கிடைப்பதன் மூலம் போலிப் பதிவுகள் உள்ளீடிற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணி காகித அடிப்படையிலோ அல்லது காகிதமில்லாததாகவோ இருந்தாலும், உண்மையான சவால் என்பது தரவுத்தளத்தின் துல்லியத்திலும் நிர்வாகத்தின் விரைவான பதிலிலும் உள்ளது. டிஜிட்டல் அமைப்பில், போலிப் பதிவுகளைக் கண்டறிதலும் நீக்குதலும் உடனடியாக நடக்க வேண்டும். 


இறுதியில், நகல் உள்ளீடுகளின் பெரும்பாலான வழக்குகள், ஒரே அல்லது வேறுபட்ட வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்தாலும், பழைய பதிவுகளை நீக்கத் தவறியதால் ஏற்படுகின்றன. இந்த தொடர்ச்சியான சிக்கல், தொழில்நுட்பக் குறைபாட்டை பிரதிபலிக்கவில்லை, மாறாக நிர்வாகக் குறைபாடு — தேர்தல் இயந்திரத்திற்குள் சரியான நேரத்தில் ஒருங்கிணைப்பு மற்றும் பொறுப்புக்கூறல் இல்லாததால் ஏற்படும் தோல்வி.


முன்னோக்கி செல்லும் வழி


வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணி 2.0 என்பது மற்றொரு அதிகாரத்துவ சடங்காக மாறிவிடக்கூடாது. இந்தியாவால், நடைமுறை செயலற்ற தன்மையில் மூழ்கிய மற்றொரு பயிற்சியை ஏற்றுக்கொள்ள முடியாது. இடைவெளிகள் நிர்வாக ரீதியானவையே தவிர தொழில்நுட்ப ரீதியானவை அல்ல. தேர்தல் ஆணைய இணைய வலையமைப்பானது (Election Commission Internet Network (ECINet)) ஏற்கனவே அதீத திறனைக் கொண்டுள்ளது. மேலும், சரிபார்ப்புக்கென்று  நம்பகமான, அகில இந்திய தரவுத்தளமாகிய ஆதார் தகவல்களுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் இது  மேம்படுத்தப்பட வேண்டும்.


வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணி 2.0 தொடங்குவதற்கு முன், தேர்தல் தரவுகள் சுத்தம் செய்யப்பட வேண்டும், தேவைப்படும் மற்றும் போலிப் பதிவுகள்  குறிக்கப்பட்டு முற்றிலும் நீக்கப்படவேண்டும். தொழில்நுட்பத்தின் சரியான பயன்பாட்டால், இது ஒரு நம்பிக்கைப் புரட்சியாக மாற முடியும். வெளிப்படைத்தன்மை, சரிபார்ப்பு மற்றும் ஒருமைப்பாடு ஆகியவை அமைப்பு ரீதியாக கட்டமைக்கப்படும் ஒரு புரட்சி என்று அறியப்படுகிறது. மென்பொருள் தலைமையிலான சரிபார்ப்பு, டிஜிட்டல் தணிக்கை பாதைகள் மற்றும் நிகழ்நேர திருத்தங்கள் ஆகியவற்றில் கவனம் தீர்க்கமாக மாற வேண்டும். தேர்தல் ஆணைய இணைய வலையமைப்பானது  (Election Commission Internet Network (ECINet)) ஒரு நம்பகமான பொதுப் பயன்பாடாகச் செயல்படவேண்டும். உள்ளுணர்வு கொண்டதாக, குறைபாடுகள் இல்லாத மற்றும் பதிலளிக்கக்கூடியதாக அமைய வேண்டும். நீண்ட வரிசைகள் மற்றும் பதிலளிக்கப்படாத புகார்களுக்குப் பதிலாக  நிகழ்நேர பிரச்சனைகளுக்கான தீர்வு வழிமுறைகள் தேவை என்பன போன்ற கோரிக்கைகள்  வலியுறுத்தப்படுகின்றன.


ஒரு வெளிப்படையான, சுய-திருத்தப் பின்னூட்ட அமைப்பு செயல்பாட்டில் இருக்கும்போது, எதிர்கால வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தங்கள் தேவையற்றவையாகிவிடும். வாக்காளர் பட்டியல்கள் எப்போதும் துல்லியமான, புதுப்பிக்கப்பட்ட மற்றும் சரிபார்க்கக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தியா ‘வெறும் சடங்காக சரிபார்த்தல்’ என்பதிலிருந்து ‘வடிவமைப்பு மூலம் சரிபார்த்தல்’  என்ற நிலை நோக்கி நகர முடியும்.


ராஜீவ் குமார், IIT Kharagpur, IIT Kanpur, BITS Pilani, and JNU-வின் முன்னாள் கணினி அறிவியல் பேராசிரியரும், DRDO மற்றும் DSTயின் முன்னாள் விஞ்ஞானியுமாவார்.



Original article:

Share: