அரசியலமைப்பு, இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரை (Attorney General of India (AGI)) ஒரு தனித்துவமான நிலையில் வைக்கிறது. நமது அரசியலமைப்பு தலைமை வழக்கறிஞரை அரசின் மூன்று அங்கங்களுடனும் தொடர்புகொள்ள உதவுகிறது - அவை நிர்வாகம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ஆகும். ஆனால், முதல் சட்ட அலுவலர் (First Law Officer) அரசாங்கத்தின் வழக்கறிஞராக மட்டுமல்லாமல், அரசியலமைப்பின் மாண்பை காப்பவராகவும், சட்டத்தின் ஆட்சியின் (rule of law) முதன்மை பாதுகாவலராகவும் செயல்படுவதில் என்ன மாதிரியான சவால்களை எதிர்கொள்கிறார்?
2021-ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (POCSO) பிரிவு 7-ன் கீழ் ஒரு குழந்தையுடனான உடல்ரீதியாக (“skin-to-skin”) தொடர்பு அல்ல, பாலியல் தாக்குதல் குற்றத்தை உருவாக்குவதற்கு மிக முக்கியமான அங்கம் “பாலியல் நோக்கம்” என்று தீர்ப்பளித்தது, மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வின் இரு தீர்ப்புகளை அது ரத்து செய்தது.
மிக முக்கியமாக, முன்னாள் இந்திய அரசுத் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததை அடுத்து இந்த தீர்ப்பு வந்தது. இது இந்திய அரசுத் தலைமை வழக்கறிஞர் தனது அரசியலமைப்பு உரிமைகளை எவ்வாறு பொது நலனை நிலைநிறுத்தவும், குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்யவும், அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இந்த தீர்ப்பு எடுத்துக்காட்டுகிறது.
பிரிவு 76(3)-ன் கீழ், இந்திய அரசுத் தலைமை வழக்கறிஞர் தனது கடமைகளை நிறைவேற்றுவதில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் போன்ற அனைத்து நீதிமன்றங்களிலும் கருத்து தெரிவிக்கும் உரிமையை (right of audience) பெற்றுள்ளார். இதன் பொருள், இந்திய அரசுத் தலைமை வழக்கறிஞர் அதிகாரப்பூர்வமாக ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கும்போது எந்த நீதிமன்றமும் அவர்களது மனுவை நிராகரிக்க முடியாது. இது அரசின் சட்டநிலையை அனைத்து நீதிமன்றங்களிலும் எப்போதும் பிரதிநிதித்துவப்படுத்தவோ அல்லது தெளிவுபடுத்தவோ முடியும் என்பதை உறுதி செய்கிறது.
குறிப்பிடத்தக்க வகையில், இந்த விதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் அட்டர்னி ஜெனரலுக்கு அனைத்து நீதிமன்றங்களிலும் பேச்சுரிமை உள்ள பிரிட்டிஷ் மரபிலிருந்து பெறப்பட்டது. ஆனால் ‘தலைமை சட்ட ஆலோசகர்’ மற்றும் ‘முதல் சட்ட அதிகாரி’ என்று அடிக்கடி குறிப்பிடப்படும் அரசுத் தலைமை வழக்கறிஞரின் மற்ற உரிமைகள் மற்றும் கடமைகள் என்னவாகும்? அரசுத் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்படுவதற்கான தேவையான தகுதிகள் என்ன, மற்றும் அரசுத் தலைமை வழக்கறிஞருக்கு நிலையான கால அளவு உள்ளதா? அந்த கூற்றை ஆராய்வோம்.
அரசியலமைப்பு எவ்வாறு இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரை (Attorney General of India (AGI)) ஒரு தனித்துவமான நிலையில் வைக்கிறது?
இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் பதவி அரசியலமைப்பால் உருவாக்கப்பட்டது. 1950ஆம் ஆண்டு அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதன் மூலம் நடைமுறைக்கு வந்தது. இது புதிதாக உருவான அரசாங்கத்திற்கு நிபுணத்துவ சட்ட ஆலோசனைக்கான அணுகலை உறுதி செய்தது. அவ்வாறு செய்வதன் மூலம், அரசியலமைப்பு இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரை ஒரு தனித்துவமான நிலையில் வைக்கிறது. அரசியலமைப்பு இந்திய அரசின் தலைமை வழக்கறிஞகருக்கு ஒரு தனித்துவமான அதிகாரத்தை வழங்குகிறது. இது அரசாங்கத்தின் மூன்று கிளைகளான நிர்வாகம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்ற அனுமதிக்கிறது.
பிரிவு 88-ன் கீழ், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் இரு சபைகளிலும், அவற்றின் கூட்டு கூட்டங்களிலும் மற்றும் அவர் உறுப்பினராக இருக்கும் எந்தவொரு நாடாளுமன்றக் குழுவிலும் (parliamentary committee), பேசும் மற்றும் நடவடிக்கைகளில் பங்கேற்கும் உரிமையைக் கொண்டுள்ளார். ஆனால், வாக்களிக்கும் உரிமை அவருக்கு வழங்கப்படவில்லை. அரசியலமைப்பு பிரிவு 105-ன் கீழ், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு நாடாளுமன்ற உறுப்பினருக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் பாதுகாப்புகளையும் (privileges and immunities) வழங்குகிறது.
இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அனைத்து செயல்பாடுகளிலும் முதன்மை வழக்கறிஞர் (Solicitor General) மற்றும் கூடுதல் வழக்கறிஞர்களால் உதவி பெறுகிறார். இருப்பினும். இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் பதவி மட்டுமே அரசியலமைப்பால் உருவாக்கப்பட்டது. பதவியில் இருக்கும் நீதிபதிகளுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிக்கும் நபர்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளுக்கு (contempt of court proceedings) அனுமதி வழங்குவதற்கான அல்லது மறுப்பதற்கான அதிகாரமும் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் மற்றும் முதன்மை வழக்கறிஞருக்கு வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்றங்கள் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அனுமதியின்றி தாமாக முன்வந்து (suo motu) நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்கலாம் என்றாலும், ஒரு தனி நபர் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் எழுத்துப்பூர்வ அனுமதியுடன் மட்டுமே அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்க முடியும். இவ்வாறு, இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தேவையற்ற அவமதிப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான காவலராகச் செயல்படுகிறார். நீதித்துறை கண்ணியத்தைப் பேச்சுரிமை மற்றும் நியாயமான விமர்சன உரிமையுடன் சமநிலைப்படுத்துகிறார்.
செப்டம்பர் 30, 2022 அன்று கே.கே. வேணுகோபாலுக்குப் பிறகு வந்த இந்திய அரசின் தலைமை வழக்கறிஞராக R. வெங்கடரமணி, அக்டோபர் 1 முதல் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு மீண்டும் நியமிக்கப்பட்டார். நீதிமன்ற நடவடிக்கைகளின்போது இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணியை வீசியதாகக் கூறப்படும் ஒரு வழக்கறிஞர் மீது அவமதிப்பு நடவடிக்கையைத் தொடங்க ஒப்புதல் அளித்தார். மாற்றாக, சில பொதுநல வழக்குகளில் நடவடிக்கைகளைத் தொடங்க இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் நேரடியாக நீதிமன்றத்தை நாடலாம்.
ஆலோசனை மற்றும் பிரதிநிதித்துவ செயல்பாடுகள்
சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குவது அல்லது அனுமதி வழங்குவது தவிர, இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் மத்திய அரசுக்கு ஒரு முக்கியமான ஆலோசனை மற்றும் தேவையான பிரதிநித்துவதை வழங்குகிறார். ஆலோசனை திறனில், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் குடியரசுத் தலைவரால் தமக்கு குறிப்பிடப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட விவகாரங்களில் அரசுக்கு சட்ட ஆலோசனை வழங்குகிறார். இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் உள்ள அனைத்து வழக்குகளிலும், தேவைப்படும்போது உயர் நீதிமன்றங்களிலும் மத்திய அரசை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
பிரிவு 143இன் கீழ் குடியரசுத் தலைவரால் செய்யப்படும் எந்தவொரு குறிப்பிலும் (குடியரசுத் தலைவரின் உச்ச நீதிமன்றத்துடன் கலந்தாலோசிக்கும் அதிகாரம்) இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அரசாங்கத்தின் கருத்துகளையும் உச்ச நீதிமன்றத்தில் முன்வைக்கிறார். அரசியலமைப்பின் பிரிவு 76 குடியரசுத் தலைவருக்கு இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரை நியமிக்க அதிகாரம் அளிக்கிறது. அவர் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்க தகுதியானவராக இருக்க வேண்டும். அதன்படி, இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் மற்றும் பின்வருவனவற்றைக் கொண்டிருக்க வேண்டும்:
1. குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியிருக்க வேண்டும் அல்லது
2. குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக இருந்திருக்க வேண்டும் அல்லது
3. குடியரசுத் தலைவரின் கருத்துப்படி ஒரு சிறந்த சட்ட அறிஞராக (eminent jurist) இருக்க வேண்டும்.
மிக உயர்ந்த நீதித்துறை தகுதிகளுக்கான இந்த தேவை பதவியின் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டுகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் 65 வயதில் ஓய்வு பெறுகிறார்கள் என்றாலும், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஓய்வு பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட வயது எதுவும் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும், மத்திய அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர், குடியரசுத் தலைவர் விரும்பும் வரை பணியாற்றுவார். நிலையான பதவிக்காலம் இல்லை மேலும், குடியரசுத் தலைவர் அவரது ஊதியத்தையும் (remuneration) தீர்மானிக்கிறார்.
அரசியலமைப்பு எவ்வாறு இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் பாரபட்சமற்ற தன்மையை உறுதிசெய்கிறது?
இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் குறிப்பிடத்தக்க மதிப்பையும் சலுகைகளையும் அனுபவித்தாலும், அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் பாரபட்சமற்றத் தன்மையை உறுதிசெய்யவும், நலன்சார் முரண்பாடுகளைத் தவிர்க்கவும் சில வரம்புகளை வைத்துள்ளனர். இருப்பினும், கடந்த காலங்களில், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் எப்போதும் முற்றிலும் நடுநிலையாகத் தோன்றாமல் போகலாம் என்ற கவலைகளை உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ளது.
மேலும், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு பின்வருவன அனுமதிக்கப்படவில்லை:
1. இந்திய அரசுக்கு எதிராக சட்ட ஆலோசனையோ, வழக்காற்றலைக் கையாள்வதோ செய்ய முடியாது.
2. ஒரு வழக்கில் இந்திய அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அல்லது ஆலோசனை வழங்கி வந்தால், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அந்த வழக்கில் வேறு ஒருவருக்கு ஆலோசனை வழங்கவோ அல்லது பிரதிநிதித்துவப்படுத்தவோ முடியாது.
3. மேலும், இந்திய அரசாங்கத்தின் அனுமதியின்றி குற்றவியல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் பாதுகாக்க முடியாது.
4. இந்திய அரசாங்கத்தின் முன் அனுமதியின்றி எந்த நிறுவனத்திலும் இயக்குநராக நியமனம் செய்யப்படுவதை இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஏற்றுக்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஒரு முழுநேர அரசு ஊழியர் அல்ல என்பதை நினைவில் கொள்வது முக்கியம். எனவே இந்த கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அவரால் தனியார் சட்டப் பயிற்சியில் ஈடுபட முடியும். இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் மத்திய அமைச்சரவையின் உறுப்பினர் அல்ல. மேலும், சட்ட விவகாரங்களின் அரசியல் மற்றும் நிர்வாக அம்சங்கள் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரால் அல்ல, சட்டம் மற்றும் நீதி அமைச்சரால் கையாளப்படுகின்றன. இந்த அமைப்பு இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் நடுநிலையைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டது.
இந்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கான சவால்கள்
இருப்பினும், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு பல்வேறு சமாளிக்க வேண்டிய சவால்கள் உள்ளன. இந்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு மிகவும் குறிப்பிடத்தக்க சவால்களில் ஒன்று, நிர்வாகத்திற்கான விசுவாசத்திற்கும் அரசியலமைப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் நிலைநிறுத்தும் கடமைக்கும் இடையே சரியான சமநிலையை ஏற்படுத்துவதாகும். இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டாலும், அமைச்சரவை ராஜினாமா செய்யும்போது அல்லது புதிய அரசாங்கம் பதவியேற்கும்போது இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ராஜினாமா செய்கிறார் என்ற தொடர்ச்சியான மரபு உள்ளது.
மேலும், நிலையான பதவிக்காலம் இல்லாதது இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் சுதந்திரத்திற்கு ஒரு அச்சுறுத்தலாக அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. ஏனெனில், இது சில சமயங்களில் அவரை அரசாங்க செல்வாக்கிற்கு ஆளாக்கும். இருப்பினும், நியமன நேரத்தில் நிலையான காலத்தைக் குறிப்பிடும் சமீபத்திய நடைமுறை - உதாரணமாக, R. வெங்கடரமணியின் ஆரம்ப மூன்று ஆண்டு காலம் (2022-2025), மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது - ஒரு முற்போக்கான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
இந்த வரம்புகள் மற்றும் சவால்கள் இருந்தபோதிலும், இந்திய குடியரசின் செயல்பாட்டில் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முக்கியப் பங்கு வகிக்கிறார். இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அலுவலகம், அரசாங்கம் அரசியலமைப்பையும் சட்டத்தையும் பின்பற்றுவதை உறுதிசெய்து, அதன் அரசியலமைப்பு ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கிறது. அரசாங்கத்தின் உயர் சட்ட பிரதிநிதியாக இருக்கும் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் அரசாங்கத்தின் குரலாக செயல்படுகிறார்.
மேலும், நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்பதன் மூலம், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் நிர்வாகத்திற்கும் சட்டமன்றத்திற்கும் இடையே ஒரு பாலமாக செயல்படுகிறார் மற்றும் நிபுணத்துவ சட்ட நுண்ணறிவுகளை வழங்குகிறார். இறுதியில், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் நிர்வாக கொள்கை மற்றும் நீதித்துறை மறுஆய்வின் (judicial review) மற்றொரு வழியில் நிற்கிறார். மத்திய அரசாங்கத்தின் வழக்கறிஞராக மட்டுமல்லாமல், அரசாங்கத்தின் அரசியலமைப்பு மாண்பை பாதுகாப்பவராகவும், உச்சநீதிமன்றத்தில் சட்டத்தின் ஆட்சியின் முதன்மை பாதுகாவலராகவும் பணியாற்றி வருகிறார்.
கண்ணன். K, ஹைதராபாத்தில் உள்ள பொருளாதார மற்றும் சமூக ஆய்வுகள் மையத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.