கடந்த 50 ஆண்டுகளாக செயற்கை மழை உருவாக்கம் குறித்த தமிழ்நாட்டின் முயற்சிகள். -டி. ராமகிருஷ்ணன்

 1993-ஆம் ஆண்டில், சென்னை மீண்டும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால் தவித்துக் கொண்டிருந்தபோது, மேக விதைப்புக்கான ​​சோதனைகள் செய்யப்பட்டன. ஆனால், எந்தவொரு பகுதியும் இயல்பைவிட 20 சதவீதத்துக்கும் அதிகமான மழையைப் பெறவில்லை என்ற ஒருமித்த கருத்து அதற்குள் அறிவியல் சமூகத்தினரிடையே  உருவாகியிருந்தது.


கடந்த அக்டோபர் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மேக விதைப்பு சோதனைகள் மூலம் மழையைத் தூண்ட டெல்லி அரசு முயற்சி மேற்கொண்டது. இந்த நடவடிக்கையானது கடந்த 50 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இதேபோன்ற செயல்பாடுகளின் நினைவுகளை மீண்டும் எழுப்பியுள்ளது.


தற்போதைய நிகழ்வில் நடந்தது போலவே, அப்போதும் கூட இந்த முயற்சிக்கு ஒரு மிதமான வரவேற்பே கிடைத்தது. தற்போதைய மற்றும் கடந்தகால சோதனைகளுக்கு இடையிலான அடிப்படை வேறுபாடு என்னவென்றால், தென் மாநிலம் (தமிழ்நாடு) அதன் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்ய தண்ணீர் மிகவும் தேவைப்பட்டது. மேலும், மாசுபாட்டைக் கையாளும் சிக்கலைத் தீர்க்க டெல்லி அரசு இந்தச் சோதனைகளில் தனது அதிர்ஷ்டத்தை முயற்சித்து பார்த்தது.


மேக விதைப்பு எனும் கட்டுக்கதை


1970-ஆம் ஆண்டு  ஜனவரி மாதத்தில், இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (India Meteorological Department (IMD)) தலைமை இயக்குநராக (அந்த நேரத்தில் 'ஆய்வகங்களின் தலைமை இயக்குநர்' என்று அழைக்கப்பட்டது) இருந்த பி. கோடீஸ்வரம், செயற்கையாக மழையைப் பொழிவிப்பதற்கான சோதனைகளைப் பற்றி தன் முதல் குறிப்பை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் அப்போதைய  தமிழ்நாடு அரசுடன் கலந்தாலோசனை நடத்தவிருந்தார். 1975-ஆம் ஆண்டில் பத்ம பூஷண் விருது பெற்றவரும், 1971-1975 ஆம் ஆண்டு காலகட்டத்தில் உலக வானிலை அமைப்பின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியரும் என்கிற பெருமையையும் பெற்றார். கடந்த 10 ஆண்டுகளில் டெல்லி, ஆக்ரா மற்றும் ஜெய்ப்பூர் பகுதிகளில் தரையில் உள்ள மின்னியற்றிகளில் (generators) இருந்து உப்பைச் செலுத்தி மேகங்களை விதைத்ததன் மூலம் செயற்கை மழைக்கான சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார்.


முன்னதாக, 1968-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதியிட்ட 'தி இந்து' நாளிதழில் வெளியான ஒரு அறிக்கையில், ஒன்றிய உணவு மற்றும் வேளாண்மை அமைச்சகமானது (Union Ministry of Food and Agriculture) அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் (Council of Scientific and Industrial Research (CSIR)) , மற்றும் இந்திய வானிலை ஆய்வுத் துறை (India Meteorological Department (IMD)) ஆகியவற்றுடன் கலந்தாலோசித்தது. பொருத்தமான ஒரு பகுதியில் விமானங்களைப் பயன்படுத்தி தீவிர அளவில் சோதனைகளை நடத்துவதற்காக ஒரு ஐந்தாண்டுத் திட்டத்தை உருவாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிக்கையின்படி, இந்தச் சோதனைகள் இலக்கு வைக்கப்பட்ட பகுதிகளான மூணாறு (கேரளா) மற்றும் திருச்சியில் (தமிழ்நாடு) மழைப்பொழிவின் அளவை சுமார் 20 சதவீதம் அளவிற்கு அதிகரித்துக் காட்டியுள்ளன.


1970ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் தமிழ்நாட்டிற்கு மழைப்பொழிவு சாதகமாக இல்லாததால், செயற்கை மழை என்ற கருத்தாக்கத்தில் அரசாங்கம் மிகுந்த ஆர்வம் காட்டியது. இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (Indian Institute of Tropical Meteorology (IITM)) ஜூலை 1973ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்களுக்கு திருவள்ளூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சோதனைகளை நடத்தியது. ஆனால், "'போதுமான அளவிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாததாலும் சில நடைமுறைச் சிக்கல்களினாலும்' மேகங்கள் விதைக்கப்பட்டதால்தான் மழை பெய்ததாக எந்த திட்டவட்டமான முடிவுக்கு வர முடியவில்லை என்று கோடீஸ்வரம் பதிவு செய்ததாக ‘தி இந்து' நாளிதழ் மே மாதம் 11 ஆம் தேதி  1974-ஆம் ஆண்டு செய்தி வெளியிட்டது.


இதற்கிடையில், சென்னை மற்றும் நீலகிரியில் பருவமழை மேகங்களிலிருந்து மழையைப் பொழிய வைக்கும் திட்டத்தை மேற்கொள்ள மும்பையில் உள்ள ஒரு கனடிய நிறுவனத்திடம் (Canadian firm) தமிழக அரசின் வேண்டுகோளின் பேரில் ஒன்றிய அரசு கேட்டுக்கொண்டது. ஏப்ரல் 30, 1975-ஆம் ஆண்டு ‘தி இந்து’ நாளிதழுக்கு இது குறித்த விவரங்களை அளித்த அப்போதைய தமிழக தலைமைச்செயலாளர் பி. சபாநாயகம் கூறுகையில், இத்திட்டத்தின் மொத்தச் செலவு ₹1 கோடி என்றும், அதில் ₹80 லட்சம் அந்நியச் செலாவணி என்றும் மதிப்பிட்டுக் கூறினார்.


மேக விதைப்பு மழையை அதிகரித்ததாக அறிக்கை கண்டறிந்துள்ளது


சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சென்னையின் நீர் ஆதாரங்களின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் நீர்நிலைப் பகுதிகளில் செயற்கை பரிசோதனைகள் விரைவில் தொடங்கும் என்ற செய்தி வெளியானது. இந்த நடவடிக்கை ஜூலை 12-ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கி நவம்பர் நடுப்பகுதி வரை தொடரும். ஒரு களப்பொறியாளர் (ground engineer), ஒரு விமானி மற்றும் ஒரு வானிலை ஆய்வாளர் அடங்கிய மூன்று பேர் கொண்ட அமெரிக்கக் குழு, “தரையில் உள்ள ரேடார் கருவிகளின் உதவியுடன் மழை பெய்யும் மேகங்களைக் கண்டறிந்து, அவற்றுக்குள் இரசாயனங்களை விதைத்து, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யச் செய்யும்” என்று ஜூலை 8, 1975-ஆம் ஆண்டு தி இந்து நாளிதழில் அறிக்கை வெளியானது. அமெரிக்கர்கள் தங்கள் நாட்டிலும் ஆப்பிரிக்காவிலும் இதேபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தின் செலவு ₹12 லட்சமாகக் குறைக்கப்பட்டது, இதில் ₹ 10 லட்சம் அந்நிய செலாவணிக்கானது என்றும் இதற்கான அனுமதியை ஒன்றிய அரசு வழங்கியிருந்தது.


நடவடிக்கைகள் தொடங்கப்பட்டபிறகு, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்தது. உதாரணமாக, ஜூலை 21-ஆம் தேதி பூண்டியில் 3.7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மாநில வேளாண்மைத் துறையின் அப்போதைய சிறப்புச் செயலாளரான கே. சொக்கலிங்கம், பூண்டிக்கும் செங்குன்றத்திற்கும் இடையிலான பகுதியிலும் மழை பெய்ததாகக் கூறினார். ஜூலை 29-ஆம் தேதி முதற்கட்ட நடவடிக்கைகளை முடித்த பிறகு, அமெரிக்கக் குழுவின் பொறியாளர் உறுப்பினரான பிரெட் கிளார்க், மேகவிதைப்பு காரணமாக சுமார் 20 சதவீதம் கூடுதல் மழைப்பொழிவு ஏற்பட்டதாகக் கூறினார். பூண்டியில் உள்ள சத்தியமூர்த்தி சாகருக்குப் (நீர்த்தேக்கம்) பிறகு நீர்வரத்து அதிகம் இருந்ததாக சிறப்புச் செயலாளர் சொக்கலிங்கம் தெரிவித்தார்.


ஒரு வாரம் கழித்து புனேவில் செய்தியாளர்களுடனான சந்திப்பில், இந்திய வானிலை ஆய்வுத் துறையின் பொது இயக்குநர் ஒய்.பி. ராவ், 'மேகங்களுக்குள் ஒரே ஒரு முறை பறந்த உடனேயே செயற்கை மழை உருவாக்கும் முயற்சி வெற்றி பெற்றது' என்ற கூற்றுகளை மறுத்தார். 1975-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 அன்று தி இந்துவில் ஒரு தலையங்கத்தில், "ராவின் பார்வையில், அத்தகைய உடனடி மதிப்பீடு சாத்தியமில்லை, மேலும் சோதனை குறித்த எந்தவொரு தீர்ப்பையும் அறிவிப்பதற்கு முன்பு அறிவியல் சோதனைகள் மிக நீண்ட காலத்திற்கு மேற்கொள்ளப்பட வேண்டும். எனினும், சென்னையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் உள்ள முக்கியப் பிரச்சினை, எப்படியாவது தண்ணீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு இடத்திற்கு நிவாரணம் வழங்குவதைப் பற்றியதுதான்," என்று கூறியது.


1976-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்களின் அரசாங்கம் கலைக்கப்படுவதற்குச்  சரியாகப் பதினைந்து நாட்களுக்கு முன், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மதுரை, இராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய ஒருங்கிணைந்த மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனது குறித்து விளக்கினார். இந்த மாவட்டங்களில் மேக விதைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஒரு அமெரிக்க நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து மாநில அரசு ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தார்.


மீண்டும், 1980-ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில், மாநிலத்தை, குறிப்பாக சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை கடும் வறட்சி தாக்கியது. அந்த நேரத்தில், எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் முதலமைச்சராகவும், சொக்கலிங்கம் என்பவர் தலைமைச் செயலாளராகவும் இருந்தனர். ஜூலை 1983-ஆம் ஆண்டு தாமஸ் ஹென்டர்சன் தலைமையிலான நான்குபேர் கொண்ட அமெரிக்கக் குழுவால் மேகவிதைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பூண்டியில் "மிதமான மழை" பதிவானது. இந்தச் சோதனைகள் அக்டோபர் மாதம் வரை தொடர்ந்தன. சோதனை முடிந்த பிறகு, இந்த நடவடிக்கைக்காக மாநில அரசுக்கு ₹26 லட்சம் செலவானதாக, நவம்பர் 18, 1983 அன்று வெளியான இந்து நாளிதழுக்கு அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. எட்டு மாதங்களுக்குப் பிறகு, நகரின் நீர்த்தேக்கங்களில் மேக விதைப்பு நடவடிக்கைகளுக்கென்று அரசாங்கம், தொகை ₹62 லட்சத்தை ஒதுக்கியது. நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால், மழை தெய்வங்களின் அருளை வேண்டி, அதிகாரிகள் ஒரு விசேஷ முயற்சியாக வயலின் மேதை குன்னக்குடி வைத்தியநாதனின் உதவியை நாடினர். அவர் செம்மரக் குளம் கரையில், மழையை வரவழைக்கும் சக்தி கொண்டதாகக் கருதப்படும் [முத்துஸ்வாமி தீட்சிதர் இயற்றியதாகக் கூறப்படும்] 'அம்ருதவர்ஷினி' ராகத்தை இசைத்ததாகக் கூறப்படுகிறது. 


1983-ஆம் ஆண்டில் மாநில அரசு ஒரு விமானத்தை வாங்கியது, இந்த நடவடிக்கை தலைமைத் தணிக்கையாளரின் (Comptroller and Auditor General (CAG)) விமர்சனத்திற்கு உள்ளானது. அவரது அறிக்கை 1987 நவம்பரில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மாநில அரசு வழக்கமான டெண்டர் நடைமுறையை பின்பற்றவில்லை என்பது மட்டுமின்றி, அந்தப் பயன்படுத்தப்பட்ட விமானத்தை ஆய்வு செய்த ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) பரிந்துரைத்த விலையைவிட மிக அதிக விலையையும் கொடுத்தது என்றும் தி ஹிந்து நாளிதழ் 1987-ஆம் ஆண்டு நவம்பர் 10 அன்று செய்தி வெளியிட்டது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, வெளியான மற்றொரு அறிக்கையில் அந்த விமானம் உதிரிபாகங்கள் இல்லாததால் சில காலம் பயன்படுத்தப்படாமல் இருந்தது என்றும் அதை பழுதுபார்க்க சுமார் ₹13 லட்சம் செலவானது, இறுதியாக அதை விற்றுவிட வேண்டியிருந்தது என்றும் விமர்சிக்கப்பட்டிருந்தது. 


1993-ஆம் ஆண்டில், சென்னை மீண்டும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால் தவித்துக் கொண்டிருந்தபோது, மேக விதைப்புக்கான ​​சோதனைகள் செய்யப்பட்டன. ஆனால், எந்தவொரு பகுதியும் இயல்பைவிட 20 சதவீதத்துக்கும் அதிகமான மழையைப் பெறவில்லை என்ற ஒருமித்த கருத்து, அதற்குள் அறிவியல் சமூகத்தினரிடையே உருவாகியிருந்தது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா இது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் "சாதகமான சூழ்நிலைகள்" இல்லாததால் அதிகாரிகள் அவரது முடிவைச் செயல்படுத்தவில்லை.


மேக விதைப்பு: விலை உயர்ந்தது, ஆனால் எந்த உத்தரவாதமும் இல்லை


கிருஷ்ணா நீர் மற்றும் வீராணம் ஏரியை சென்னை நீர் விநியோகத்திற்கான ஆதாரங்களாகச் சேர்த்தது, கடல்நீரை நன்னீராக்கும் பல ஆலைகளுடன் இணைத்தது போன்ற நடவடிக்கைகள், நகரின் நீர் விநியோக நிலையை கடந்தகாலத்தைவிட மிகவும் சிறப்பாக ஆக்கியுள்ளது. குடிநீர் பற்றாக்குறையைச் சமாளிக்க இந்தத் திட்டங்கள் போதுமானதாக உள்ளதால் மேகவிதைப்பு சார்ந்த நடவடிக்கைகளைத் தற்போதைக்கு மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.



Original article:

Share: