ஒடிசாவின் உண்மையான சவால் புயலுக்குப் பிறகு தொடங்குகிறது.
அக்டோபர் 28, 2025 அன்று மோந்தா புயல் கிழக்கு கடற்கரையை தாக்கியபோது, ஒடிசா மற்றும் அதன் அண்டை மாநிலங்களின் வயல்வெளிகளைச் சேதமாக்கியது, கிராமங்களை வெள்ளத்தில் மூழ்கடித்தது, ஆயிரக்கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்தப் புயல், பழக்கமான ஒரு கொடூர வடிவத்தை மீண்டும் காட்டியது. ஆந்திராவின் காக்கிநாடா அருகே மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே மணிக்கு 100-110 கிமீ வேகத்தில் புயல் கரையைக் கடந்தது. தெற்கு ஒடிசாவின் கஞ்சம், ராயகடா மற்றும் கோராபுட் மாவட்டங்கள் மற்றும் தெலுங்கானாவின் சில பகுதிகள் வழியாக நுழைந்து, பின்னர் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகப் பலவீனமடைந்தது.
ஆரம்பகட்ட அறிக்கைகள் மூலம் இப்பகுதி முழுவதும் பயிர் மற்றும் தோட்டக்கலைகளில் பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிய வருகிறது. ஆயிரக்கணக்கானோரை உடனடியாக வெளியேற்றிய ஒடிசாவின் துரித நடவடிக்கை அம்மாநிலத்தின் தயார்நிலையை மீண்டும் ஒருமுறை நிரூபித்தது. ஆனால், இப்போது புயலுக்குப் பிறகு மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்கிற பெரிய சவால் ஒடிசா அரசின் முன்னால் உள்ளது.
வெப்பமண்டல புயல்களால் ஒடிசா மாநிலத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் கட்டமைப்பு ரீதியானது. அதன் 575 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரை, உலகின் அதிக புயல் தாக்கும் ஆறு பகுதிகளில் ஒன்றாகும். கடந்த நூற்றாண்டில், கிட்டத்தட்ட 260 புயல்கள் மாநிலத்தைத் தாக்கியுள்ளன. 1999-ஆம் ஆண்டு பேரழிவை ஏற்படுத்திய சூப்பர் புயலிலிருந்து 2013-ல் பைலின் (Phailin), 2018-ல் டிட்லி (Titli), 2019-ஆம் ஆண்டில் ஃபானி (Fani) மற்றும் 2021-ஆம் ஆண்டில் யாஸ் (Yaas) புயல் வரை ஒடிசாவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன
ஃபைலின் புயலால் மட்டும் கிட்டத்தட்ட ₹9,000 கோடி மதிப்பிலான இழப்புகளை ஏற்பட்டது. இதில் கால்நடைகள் மற்றும் விவசாயம் மூலம் கால் பங்கிற்கும் (நான்கில் ஒரு பங்கிற்கும்) அதிகமான இழப்பு ஏற்பட்டது. இறப்புகளைக் கணக்கிடுவது மட்டும் இந்தப் பேரழிவுகளின் பெரிய மற்றும் நீடித்த செலவுகளைத் தவறவிடுகிறது.
உடனடிப் பொருளாதார அதிர்ச்சி விரைவானது மற்றும் பேரழிவை ஏற்படுத்தக்கூடியது. மொந்தா புயலினால் ஏற்பட்ட அழிவு என்பது விளிம்புநிலை விவசாயிகளுக்கு கடுமையான வருமான இழப்புகள், வர்த்தகர்களுக்கு பணப்புழக்க நெருக்கடிகள் மற்றும் அருகிலுள்ள நகரங்களில் விநியோகத்தில் தடங்கல்களை ஏற்படுத்தியுள்ளது. ஃபானி புயலுக்குப் பிறகு, ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் (United Nations Development Programme (UNDP)) தலைமையிலான மதிப்பீட்டின்படி விவசாயம், கால்நடைகள் மற்றும் மீன்வளத்திற்கு சுமார் ₹3,000 கோடி அளவிற்குச் சேதம் ஏற்பட்டதாகவும், கிட்டத்தட்ட ஏழுகோடி கிராமப்புற வேலை நாட்கள் இழப்பால் சுமார் ₹2,700 கோடி மதிப்பிலான ஊதிய இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. புயல் ஓய்ந்த பிறகும் பொருளாதார வலி நீண்டகாலம் நீடிக்கிறது. விவசாயிகள் இன்னும் கடன்களை திருப்பிச் செலுத்த வேண்டும், விதைகள் மற்றும் உரங்களை வாங்க வேண்டும், அடுத்த பருவம் தொடங்குவதற்கு முன்பு நீர்ப்பாசனத்தை மீட்டெடுக்க வேண்டும். மீனவர்கள் காப்பீட்டு உரிமைகோரல் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே வலைகள், படகுகள் மற்றும் குளிர்ப்பதன பெட்டிகளை (iceboxes) மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இந்த வெளிப்படையான விளைவுகளுக்கு அப்பால், இரண்டாம் நிலை மந்தநிலை பெரும்பாலும் அதிக அழிவை உண்டாக்குகிறது. புயல் பாதித்த மாவட்டங்களில், முறைசாரா வணிகங்கள் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளன. வங்கிகளில் கடன் பெறுவதும் கடினமாகிறது. பொதுச் செலவுகள் வளர்ச்சித் திட்டங்களிலிருந்து மறுகட்டமைப்புக்குத் திருப்பிவிடப்படுகின்றன. இதனால், சுகாதாரம், கல்வி மற்றும் உள்கட்டமைப்பில் முன்னேற்றம் தாமதமாகிறது. பெரிய புயல்களால் ஒடிசா மாநிலம் பாதிக்கப்பட்ட ஆண்டுகளில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் பல சதவீத புள்ளிகள் சரிவைச் சந்திக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர்.
கடந்த இருபது ஆண்டுகளாக, ஒடிசா பேரிடர் மேலாண்மையில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. ஒடிசா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (Odisha State Disaster Management Authority (OSDMA)) புயல் முகாம்களை விரிவுபடுத்தியுள்ளது. முன்கூட்டிய எச்சரிக்கை வழங்கும் அமைப்புகளை வலுப்படுத்தியுள்ளது மற்றும் பெருமளவிலான மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை நிறுவனமயமாக்கியுள்ளது. இதன் விளைவுகள் குறிப்பிடத்தக்கவை : 1999-ஆம் ஆண்டு ஏற்பட்ட சூப்பர்-புயலால் கிட்டத்தட்ட 10,000 பேர் பலியானார்கள்; ஃபைலின் புயலின்போது பலி எண்ணிக்கை 50-க்கும் குறைவாகவே இருந்தது; மற்றும் 2021-ஆம் ஆண்டு யாஸ் புயலின்போது இரண்டு பேர் மட்டுமே இறந்தனர். இருப்பினும், உயிர்களைக் காப்பதில் அடைந்துள்ள இந்த முன்னேற்றம் மக்கள் வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பதில் பிரதிபலிக்கவில்லை. மறுசீரமைப்பு இன்னும் சாலைகள், வீட்டுவசதி மற்றும் மின்சாரம் போன்ற புலப்படும் உள்கட்டமைப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் அழுத்தங்கள் நெருக்கடியை ஆழப்படுத்துகின்றன. உவர்நீர் ஊடுருவலும் அலைகளும் வளமான மண்ணையும் ஈரநிலங்களையும் தரமிறக்கி, சிறு விவசாயிகள் மற்றும் மீனவர்களின் இயற்கை வளங்களை அரிக்கின்றன. கடல் மட்டம் உயருதல் உப்புத்தன்மை கொண்ட வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துகிறது. விளைச்சலைக் குறைக்கிறது மற்றும் விவசாயிகளை குறைந்த லாபகரமான பயிர்கள் அல்லது இடம்பெயர்வை நோக்கித் தள்ளுகிறது. பள்ளிப்படிப்பு சீர்குலைவு, குடும்பப் பிரிவினை மற்றும் கிராமப்புற சமூகங்களை பலவீனப்படுத்துதல் போன்ற சமூகச் செலவுகளை இந்த மாற்றங்கள் ஏற்படுத்துகின்றன.
ஒடிசாவின் அடுத்தகட்ட மீட்சியானது, உயிர்களுடன் சேர்ந்து வாழ்வாதாரத்திற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். பயிர் மற்றும் மீன்வளக் காப்பீட்டிற்கு விரைவான, எளிமையான கோரிக்கைகள் தேவைப்படுகிறது. இதன்மூலம் வேளாண்மக்கள் விரைவாக மீண்டும் பயிரிடவோ அல்லது மறுகட்டமைக்கவோ முடியும். அவசரகால கடன் மற்றும் குறுகிய கால கடன் தவணை ஒத்திவைப்புகள் (loan moratoria) அவர்கள் மீதான அழுத்தத்தைத் தவிர்க்க உதவும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை (Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS)) நீட்டித்து, கரைகள் மற்றும் குளங்களை மறுகட்டமைப்பதன் மூலம் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் இழந்த சொத்துக்களை மீட்டெடுக்கவும் முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இயற்கை சார்ந்த பாதுகாப்பும் முக்கியமானது. சதுப்புநிலங்கள், ஈரநிலங்கள் மற்றும் அலைத்தடுப்பு அமைப்புகள் அலை ஆற்றலை 90% வரை குறைத்து, சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதார பாதுகாப்பை வழங்குகின்றன. ஒடிசாவில் ஐ.நா ஆதரவுடன் செயல்படுத்தப்படும் சதுப்புநில மறுசீரமைப்பு பருவநிலை-சார்ந்த மீன்வளர்ப்பு, சேற்று-நண்டு வளர்ப்பு முதல் அரிசி உற்பத்தியை அதிகரிப்பது போன்ற திட்டங்கள், தகவமைப்பு எவ்வாறு வருமானத்தை நிலைநிறுத்த முடியும் என்பதைக் காட்டுகின்றன.
நிதி அமைப்புகளும் மாற்றியமைக்கப்பட வேண்டும். அவசரகால நிதி, பிராந்திய காப்பீட்டுத் தொகுப்புகள், நெகிழ்வான மத்திய இடமாற்றங்கள் மற்றும் கூட்டாண்மைகள் ஆகியவற்றின் கலவையானது, வளங்களை நேரடியாகச் சிறு விவசாயிகள் மற்றும் கடலோர சமூகங்களுக்குச் செலுத்த வேண்டும் என்பது போன்ற பொருளாதார ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
ஆசிரியர், (Institute of Chartered Financial Analysts of India (ICFAI)) சமூக அறிவியல் பள்ளி, உயர் கல்விக்கான அறக்கட்டளை அமைப்பில் பொருளாதாரம் கற்பித்து வருகிறார்.