இந்தியாவின் தேர்தல் செயல்முறைகளின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில், நாடு தழுவிய சிறப்பு தீவிரத் திருத்தத்தின் வெற்றியானது, இரட்டைப் பதிவுகளை நீக்கி, ஒவ்வொரு வாக்கும் எண்ணப்படுவதை உறுதி செய்வதையும், தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகத் திறனை மேம்படுத்துவதையும் சார்ந்துள்ளது.
அரசியல் கட்சிகளிடமிருந்தும் இறுதியில் உச்சநீதிமன்றத்திலிருந்தும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட பீகாரில் வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் (Special Intensive Revision (SIR)) பயிற்சி நடந்து முடிந்தபிறகு, இந்தியத் தேர்தல் ஆணையம் இப்போது நாடு தழுவிய சிறப்பு தீவிரத் திருத்தத்தை அறிவித்துள்ளது. இது சிறப்பு தீவிர திருத்தம் 2.0 என குறிப்பிடப்படுகிறது. இந்த முறையானது மக்களுக்கு ஏற்ற மற்றும் நடைமுறை ரீதியாக வலுவான முயற்சியாகக் கருதப்படுகிறது.
ஏறக்குறைய, நூறு கோடி வாக்காளர் பதிவுகளுடன், டிஜிட்டல் அணுகுமுறை என்பது தவிர்க்க முடியாதது மட்டுமல்ல, மிகவும் முக்கியமானதுமாகும். வாக்காளர் பட்டியல் இனி ஒரு நிலையான, மாநில வாரியான பதிவாக இல்லாமல் இது இந்தியாவின் தேர்தல்களின் நேர்மையை துல்லியமாக வரையறுக்கும் தேசிய தரவுத்தளமாகும். இருப்பினும், நீதிமன்றங்கள் கவனமாக இருந்தாலும், ஒரு வாக்காளர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பதிவு செய்யப்படுவது தொடர்பான பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது.
வீடுகளை மாற்றும் எண்ணற்ற குடிமக்களைப் பாதிக்கும் இந்தப் பிரச்சினை, மோசடி பற்றியது அல்ல, மாறாக அமைப்பின் நடைமுறைத் தவறுகளைப் பற்றியது. பீகார் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய இரண்டு மாநில வாக்காளர் பட்டியலிலும் பெயர் உள்ள ஒரு வாக்காளரான பிரசாந்த் கிஷோர் சம்பந்தப்பட்ட சமீபத்திய வழக்கு, இந்தக் குறைபாட்டை விளக்குகிறது. மேற்கு வங்கத்தில் சிறப்பு தீவீர திருத்தம் இன்னும் தொடங்கப்படாத நிலையில், இத்தகைய இரட்டைப் பதிவு விவகாரம் பீகாரில் பட்டியலிடப்பட்டுள்ள எந்த வாக்காளரும் வேறு எங்கும் பதிவு செய்யப்படவில்லை என்பதை உறுதிசெய்யும் திட்டத்தின் முக்கிய நோக்கத்தை தோற்கடிக்கிறது. இது செயல்முறையின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறது மற்றும் வாக்காளர் தரவுத்தளத்தின் மீதான நம்பிக்கையைக் குறைக்கிறது.
போலியான பதிவுகளை நிர்வகித்தல்
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (Representation of the People Act (RP)), 1950-ன் கீழ், போலியான பதிவுகள் (duplicate entries) தொழில்நுட்பரீதியாக ஒரு மீறலாக அமைகின்றன. இருப்பினும், அத்தகைய குறைபாடுகள் அரிதாகவே நிகழ்கின்றன. சட்டத்தை மதிக்கும் பல குடிமக்கள், வெறுமனே வசிப்பிடத்தை மாற்றுவதன் மூலம், தற்செயலாக தங்கள் தவறு எதுவும் இல்லாமல் இந்தச் சட்டத்தை மீறியவர்களாக ஆகிவிடுகிறார்கள். சிறப்பு தீவிர திருத்தம் 2.0 என்பது வலுவானதாகவும், நம்பகமானதாகவும், பிழையற்றதாகவும் மாற்ற தேர்தல் ஆணையத்தின் டிஜிட்டல் கட்டமைப்பிற்குள் ஒரு முறையான, தொழில்நுட்பம் சார்ந்த திருத்த வழிமுறையின் அவசரத் தேவையை இது வலியுறுத்துகிறது.
வாக்காளர் பட்டியல்களின் உண்மைத்தன்மையைப் பராமரிப்பதற்கும், போலிகள் ஏற்படுவதைத் தடுப்பதற்கும் 1950-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் சட்டம், விதிமுறையை வகுத்துள்ளது. சட்டப்பிரிவு 22(b)-ன் கீழ், ஒரு வாக்காளர் அதே தொகுதிக்குள் வசிக்கும் இடத்தை மாற்றினால், தேர்தல் பதிவு அதிகாரி (Electoral Registration Officer (ERO)) அந்தப் பதிவை பட்டியலின் பொருத்தமான பகுதிக்கு மாற்ற வேண்டும். ஒரு வாக்காளர் வேறு தொகுதிக்குச் செல்லும்போது, பிரிவு 23(2)-ன் புதிய பட்டியலில் சேர்ப்பதை நிர்வகிக்கிறது. விண்ணப்பதாரர் பதிவு செய்ய உரிமை உள்ளவர் என்று தேர்தல் பதிவு அதிகாரி திருப்தி அடைந்தால், புதிய பட்டியலில் விண்ணப்பதாரரின் பெயரைச் சேர்க்க உத்தரவிடவேண்டும் என்று அது கட்டளையிடுகிறது. விண்ணப்பதாரர் ஏற்கனவே மற்றொரு தொகுதியின் பட்டியலில் பதிவு செய்யப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட தேர்தல் பதிவு அதிகாரி அந்தத் தொகுதியின் அதிகாரிக்குத் தெரிவிக்க வேண்டும். பின்னர், அவர் அந்த பட்டியலிலிருந்து விண்ணப்பதாரரின் பெயரை நீக்க வேண்டும் என்றும் இந்தப் பிரிவு வழிமுறைகளைக் கூறுகிறது.
ஒவ்வொரு வாக்காளரின் பதிவின் தனித்தன்மையை உறுதிப்படுத்த, பிரிவுகள் 17 மற்றும் 18-ம் பல பதிவுகளை வெளிப்படையாகத் தடை செய்கின்றன. எந்த நபரும் ஒன்றுக்கும் மேற்பட்டத் தொகுதியில் பட்டியலிடப்படக்கூடாது. அதே தொகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பதிவு செய்யப்படக்கூடாது. இந்த விதிமீறல்கள் தேர்தல் சட்டத்தின்கீழ் குற்றமாகக் கருதப்படும். பெரும்பாலும், வாக்காளர் புதிய வசிப்பிடத்தில் பெயரைச் சேர்க்கும்போது, முந்தைய இடத்தில் உள்ள பெயரை ஒரே நேரத்தில் நீக்காமல் விடுவதால், இம்மாதிரியான போலிப் பதிவுகள் ஏற்படுகின்றன.
சுருக்கமாகச் சொன்னால், இந்தச் சட்டம் தேர்தல் பதிவு அதிகாரிகள்மீது முதன்மைப் பொறுப்பை வைக்கிறது. பெயர் மாற்றம், சேர்த்தல், நீக்குதல் ஆகியவை துல்லியமாகவும், உடனடியாகவும், ஒரே நேரத்தில் நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும். இந்தச் செயல்முறை போலிப் பதிவுகளைத் தடுப்பதற்கும், தேசிய தேர்தல் தரவுத்தளத்தின் நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டை உறுதி செய்வதற்கும் மிகவும் முக்கியமான ஒன்றாக அமைகிறது
படிவம் 8-ல் வசிப்பிட மாற்றம் மற்றும் வாக்காளர் விவரங்களைத் திருத்துவது தொடர்பான மேற்கண்ட விதிகளை தேர்தல் ஆணையம் ஒருங்கிணைத்துள்ளது. இந்தப் படிவம் பதிவுகளை மாற்றுதல் அல்லது திருத்துதல் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படுகிறது. முகவரி மாற்றக் கோரிக்கை நான்கு வகைகளின் கீழ் வரலாம்:
(I) தொகுதி அல்லது வாக்குச் சாவடியில் மாற்றம் இல்லை.
(II) தொகுதியில் மாற்றம் இல்லை, ஆனால் வாக்குச் சாவடியில் மாற்றம்.
(III) ஒரே மாநிலத்திற்குள் தொகுதியில் மாற்றம்.
(IV) தொகுதி மற்றும் மாநிலம் இரண்டிலும் மாற்றம்.
இரட்டைப் பதிவுகளுக்கான மிகவும் பொதுவான காரணம், ஒரு வாக்காளர் வேறொரு மாநிலத்திற்கு இடம்பெயர்ந்த வகை IV நிகழ்வுகளில்தான் எழுகிறது. புதிய பதிவு அதே வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (Electors Photo Identity Card (EPIC)) எண்ணைத் தக்க வைத்துக் கொள்ளலாம் அல்லது புதிய ஒன்றை உருவாக்கலாம். உதாரணமாக, பீகார் வாக்காளரின் (பிரசாந்த் கிஷோர்) இரட்டைப் பதிவு வெவ்வேறு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்களைக் கொண்டிருந்தன. அதேசமயம், இரண்டு பதிவுகளும் ஒரே வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்களைப் பகிர்ந்து கொண்ட பல நிகழ்வுகளையும் ஆசிரியர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதுபோன்ற சூழ்நிலைகளில், பழைய பதிவை நீக்கத் தவறியதற்கு தேர்தல் பதிவு அதிகாரியே முழுப்பொறுப்பு என்று கூறப்படுகிறது. தேசிய வாக்காளர் பட்டியலில் போலிப் பதிவுகள் இருப்பதைத் தடுக்க அவர்களின் உடனடி ஒருங்கிணைப்பு அவசியம். மற்றொரு போலிப் பதிவு ஏற்படுவதற்கான காரணம், வாக்காளர் வேறு இடத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருப்பதைத் தெரிவிக்காமல், புதிய சேர்க்கைக்கான படிவத்தைப் பயன்படுத்தும்போது ஏற்படுகிறது. ஒரு தவறான அறிவிப்பு சட்ட மீறலாகும், மேலும் சரிபார்ப்புக்கு பொறுப்பான வாக்காளர் மற்றும் அதிகாரிகள் இருவரும் இங்குப் பொறுப்புணர்வைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
செயல்முறையை விளக்குதல்
இந்தியாவின் வாக்காளர் பட்டியலின் முதுகெலும்பு என்று தேர்தல் ஆணைய இணைய வலையமைப்பு (Election Commission Internet Network (ECINet)) அறியப்படுகிறது. இது புனேவில் உள்ள மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (Centre for Development of Advanced Computing (C-DAC)) நிர்வகிக்கும் நாடு தழுவிய முழுமையான டிஜிட்டல் அமைப்பாகும். ஏறக்குறைய, நூறு கோடி வாக்காளர்களின் பதிவுகளுடன், ECINet என்பது உலகின் மிகப்பெரிய நிலையற்ற தரவுத்தளங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு வாக்காளரும் ஒரு தனித்துவமான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்ணால் அடையாளம் காணப்படுகின்றனர். இது ஒரு நபருக்கு ஒரே ஒரு உறுதிப்படுத்தப்பட்ட பதிவு மட்டுமே இருக்கும். தேர்தல் ஆணைய இணைய வலையமைப்பானது (Election Commission Internet Network (ECINet)) போலிப் பதிவுகளைக் கண்டறிந்து அங்கீகரிக்கப்பட்ட சரிபார்ப்பு மூலம் திருத்தங்களை எளிதாக்குகிறது. மேலும், முழுக் கண்காணிப்புக்காக வாக்காளரின் புதுப்பிப்பு வரலாற்றையும் சேர்க்கும் வகையில் இதை விரிவுபடுத்த வேண்டும்.
போலிப் பதிவுகளைத் திறம்படக் கண்டறிய உதவும் வலுவான தேடல் மற்றும் சரிபார்ப்பு பயன்பாட்டு நிரலாக்க இடைமுகத்தை (Application Programming Interface (API)) உருவாக்கியதற்காக தேர்தல் ஆணையத்தையும் மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்தையும் பாராட்ட வேண்டும் என்று கருத்து தெரிவிக்கின்றனர். எந்தவொரு இரட்டைப் பதிவும் சரிபார்ப்பின்போது மதிப்பாய்வு மற்றும் நீக்குதலுக்கான எச்சரிக்கையைத் தரவேண்டும். அத்தகைய கருவிகள் கிடைப்பதன் மூலம் போலிப் பதிவுகள் உள்ளீடிற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணி காகித அடிப்படையிலோ அல்லது காகிதமில்லாததாகவோ இருந்தாலும், உண்மையான சவால் என்பது தரவுத்தளத்தின் துல்லியத்திலும் நிர்வாகத்தின் விரைவான பதிலிலும் உள்ளது. டிஜிட்டல் அமைப்பில், போலிப் பதிவுகளைக் கண்டறிதலும் நீக்குதலும் உடனடியாக நடக்க வேண்டும்.
இறுதியில், நகல் உள்ளீடுகளின் பெரும்பாலான வழக்குகள், ஒரே அல்லது வேறுபட்ட வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்தாலும், பழைய பதிவுகளை நீக்கத் தவறியதால் ஏற்படுகின்றன. இந்த தொடர்ச்சியான சிக்கல், தொழில்நுட்பக் குறைபாட்டை பிரதிபலிக்கவில்லை, மாறாக நிர்வாகக் குறைபாடு — தேர்தல் இயந்திரத்திற்குள் சரியான நேரத்தில் ஒருங்கிணைப்பு மற்றும் பொறுப்புக்கூறல் இல்லாததால் ஏற்படும் தோல்வி.
முன்னோக்கி செல்லும் வழி
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணி 2.0 என்பது மற்றொரு அதிகாரத்துவ சடங்காக மாறிவிடக்கூடாது. இந்தியாவால், நடைமுறை செயலற்ற தன்மையில் மூழ்கிய மற்றொரு பயிற்சியை ஏற்றுக்கொள்ள முடியாது. இடைவெளிகள் நிர்வாக ரீதியானவையே தவிர தொழில்நுட்ப ரீதியானவை அல்ல. தேர்தல் ஆணைய இணைய வலையமைப்பானது (Election Commission Internet Network (ECINet)) ஏற்கனவே அதீத திறனைக் கொண்டுள்ளது. மேலும், சரிபார்ப்புக்கென்று நம்பகமான, அகில இந்திய தரவுத்தளமாகிய ஆதார் தகவல்களுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் இது மேம்படுத்தப்பட வேண்டும்.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணி 2.0 தொடங்குவதற்கு முன், தேர்தல் தரவுகள் சுத்தம் செய்யப்பட வேண்டும், தேவைப்படும் மற்றும் போலிப் பதிவுகள் குறிக்கப்பட்டு முற்றிலும் நீக்கப்படவேண்டும். தொழில்நுட்பத்தின் சரியான பயன்பாட்டால், இது ஒரு நம்பிக்கைப் புரட்சியாக மாற முடியும். வெளிப்படைத்தன்மை, சரிபார்ப்பு மற்றும் ஒருமைப்பாடு ஆகியவை அமைப்பு ரீதியாக கட்டமைக்கப்படும் ஒரு புரட்சி என்று அறியப்படுகிறது. மென்பொருள் தலைமையிலான சரிபார்ப்பு, டிஜிட்டல் தணிக்கை பாதைகள் மற்றும் நிகழ்நேர திருத்தங்கள் ஆகியவற்றில் கவனம் தீர்க்கமாக மாற வேண்டும். தேர்தல் ஆணைய இணைய வலையமைப்பானது (Election Commission Internet Network (ECINet)) ஒரு நம்பகமான பொதுப் பயன்பாடாகச் செயல்படவேண்டும். உள்ளுணர்வு கொண்டதாக, குறைபாடுகள் இல்லாத மற்றும் பதிலளிக்கக்கூடியதாக அமைய வேண்டும். நீண்ட வரிசைகள் மற்றும் பதிலளிக்கப்படாத புகார்களுக்குப் பதிலாக நிகழ்நேர பிரச்சனைகளுக்கான தீர்வு வழிமுறைகள் தேவை என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகின்றன.
ஒரு வெளிப்படையான, சுய-திருத்தப் பின்னூட்ட அமைப்பு செயல்பாட்டில் இருக்கும்போது, எதிர்கால வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தங்கள் தேவையற்றவையாகிவிடும். வாக்காளர் பட்டியல்கள் எப்போதும் துல்லியமான, புதுப்பிக்கப்பட்ட மற்றும் சரிபார்க்கக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தியா ‘வெறும் சடங்காக சரிபார்த்தல்’ என்பதிலிருந்து ‘வடிவமைப்பு மூலம் சரிபார்த்தல்’ என்ற நிலை நோக்கி நகர முடியும்.
ராஜீவ் குமார், IIT Kharagpur, IIT Kanpur, BITS Pilani, and JNU-வின் முன்னாள் கணினி அறிவியல் பேராசிரியரும், DRDO மற்றும் DSTயின் முன்னாள் விஞ்ஞானியுமாவார்.