புதிய திட்டம் பயனுள்ள சொத்துக்களை உருவாக்குவதற்கோ அல்லது தேவையற்ற பண இழப்புகளைத் தடுப்பதற்கோ வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது. இது உள்ளூர் திட்டமிடலில் உள்ள நெகிழ்வுத்தன்மையையும் குறைக்கிறது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MNREGA)) (2005), கிராமப்புற ஏழைகளுக்கு ஒரு சட்டபூர்வமான மற்றும் உரிமை சார்ந்த பாதுகாப்பை வழங்குகிறது. திறன் சாரா உடலுழைப்பு வேலை செய்ய முன்வரும் வயதுவந்த உறுப்பினர்களைக் கொண்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்கள் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பை உறுதி செய்வதன் மூலம், வாழ்வாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துவதே இந்தச் சட்டத்தின் நோக்கமாகக் கூறப்படுகிறது. இந்த நேரடி வருமான உதவி, ஏழைப் பயனாளிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதோடு, வறுமை காரணமாக அவர்கள் பிழைப்புத் தேடி வெளியூர்களுக்கு இடம்பெயர்வதையும் குறைக்கிறது.
இந்தத் திட்டம் பெண்களின் வேலைவாய்ப்பு மற்றும் சமூகச் சேர்க்கையை அதிகரிக்க உதவுகிறது, ஏனெனில் இதில் மூன்றில் ஒரு பங்கு பணியாளர்கள் பெண்களாக இருக்க வேண்டும். பல மாநிலங்களில், பெண்களின் பங்களிப்பு இதைவிட அதிகமாகவே உள்ளது. பணிகளைத் தேர்வு செய்யும் அதிகாரம் உள்ளூர் அளவிலேயே இருப்பதாலும், எளிய நடைமுறை மற்றும் தேவைப்படுபவர்களுக்கு வேலை என்ற அணுகுமுறையாலும், இது ஆதிதிராவிடர் (Scheduled Castes (SC)), பழங்குடியினர் (Scheduled Tribes (ST)) மற்றும் இதர நலிந்த பிரிவினருக்குப் பயனளிக்கிறது. வேறு வேலை வாய்ப்புகள் குறைவாக உள்ள சூழலில், அதிகமான மக்களை இந்தத் திட்டம் பொருளாதார பங்களிப்பில் ஈடுபடுத்தி வருகிறது.
வயது வரம்பு
2024–25-ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்தத் திட்டத்தின்கீழ் பணிபுரியும் தொழிலாளர்களின் வயது வாரியான பங்கீடு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அவை, 61–80 வயது வரம்பு: இந்தத் திட்டத்தில் 15.5% தொழிலாளர்கள் 61 முதல் 80 வயதுக்குட்பட்டவர்கள். பொதுவாக இந்த வயதினர் ஊதியத்துடன் கூடிய வேலையில் இருப்பது அரிது என்றும் 51–60 வயது வரம்பு: மேலும் 22.6% தொழிலாளர்கள் 51 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் 18–30 வயது வரம்பு: ஆனால், 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை வெறும் 9% மட்டுமே என்றும் கூறப்படுகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட' (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MNREGA)) தொழிலாளர்களில் கிட்டத்தட்ட 70% பேர் 41 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் என்றும் இவர்களின் பொருளாதார பங்கேற்பு குறையும்பட்சத்தில், கணிசமான அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.
தொழிலாளர்களின் வயது வரம்பு, அந்தந்த மாநிலங்களில் உள்ள வேலைவாய்ப்பு சூழலையும் வேலைக்கான தேவையையும் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. அருணாச்சல பிரதேசம் (25.1%), பீகார் (21.2%) மற்றும் ஜார்க்கண்ட் (23.6%) ஆகிய மாநிலங்களில் இளம் தொழிலாளர்களின் (18-30 வயது) பங்களிப்பு அதிகமாக உள்ளது; இதில் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் முக்கிய வாழ்வாதாரங்களாக உள்ளன. இதற்கு நேர்மாறாக, ஆந்திரப் பிரதேசம், கோவா, கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் முதிய தொழிலாளர்களின் (61-80 வயது) விகிதம் அதிகமாக உள்ளது. இந்த மாநிலங்களில் மக்களின் சராசரி ஆயுட்காலம் தேசிய சராசரியைவிட அதிகமாக இருப்பதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதும், நிலையான சொத்துக்களை உருவாக்குவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். மொத்தச் செலவில் கட்டுமானப் பொருட்கள் மற்றும் திறன் வாய்ந்த தொழிலாளர்களின் ஊதியம் 40 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற விதி, மறைமுகமாக மனித உழைப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இந்தச் சட்டத்தின்கீழ், மாவட்ட, ஒன்றிய மற்றும் கிராம அளவிலான ஊராட்சிகள் திட்டமிடல் மற்றும் செயல்படுத்துதலுக்குப் பொறுப்பாகின்றன. இந்த விதியானது இத்திட்டத்திற்கு ஒரு வலுவான உள்ளூர் தன்மையை வழங்குகிறது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MNREGA) வடிவமைப்பைக் கருத்தில் கொள்ளும்போது, இத்திட்டத்தை 'விக்சித் பாரத் கிராம பஞ்சாயத்துத் திட்டங்கள்' (Viksit Bharat Gram Panchayat Plans) மற்றும் பிரதம மந்திரி கதி சக்தி திட்டம் (PM Gati Shakti) போன்ற விரிவான திட்டங்களோடு இணைக்கும்போது, அதில் பணியாற்றும் தொழிலாளர்களின் தகுதி மற்றும் பின்னணி மிக முக்கியமான ஒன்றாகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (MNREGA) பணியாற்றும் பெரும் பகுதியினருக்கு, நவீன உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார மேம்பாடு சார்ந்த பணிகளில் ஈடுபடுவதற்கான போதிய திறன் இல்லாமல் இருக்கலாம். இது அத்திட்டத்தின்கீழ் தற்போது நடைபெறும் வேலைகளிலேயே பிரதிபலிக்கிறது. அதாவது பெரும்பாலும் நீர் பாதுகாப்பு, வறட்சி தடுப்பு நடவடிக்கைகள், காடு வளர்ப்பு, நுண் பாசனம், நீர் நிலைகளைச் சீரமைத்தல் மற்றும் நில மேம்பாடு போன்ற பணிகளே இதில் முக்கியமாக மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், இந்தச் சட்டத்தில் உள்ள வரம்புகள் காரணமாக, பெரிய அளவிலான மற்றும் நீண்டகாலம் நிலைக்கக்கூடிய சொத்துக்களை உருவாக்குவதற்கான சாத்தியங்கள் இத்திட்டத்தில் குறைவாகவே உள்ளன.
முக்கியக் குறிக்கோள்
புதிய திட்டத்தின்கீழ், விக்சித் பாரத் – கிராமப்புற வேலைவாய்ப்பு & வாழ்வாதார உத்தரவாத திட்டம் (Viksit Bharat–GRAM G) சட்டம் 2025-ன் முக்கிய நோக்கம், கிராமப்புற மேம்பாட்டை 'விக்சித் பாரத்-2047' (வளர்ச்சியடைந்த இந்தியா-2047) என்ற தேசிய தொலைநோக்குப் பார்வையுடன் ஒருங்கிணைப்பதாகும். இது வாழ்வாதாரப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், பரவலான பங்கேற்பை உறுதி செய்யவும், ஆண்டுக்கு 125 நாட்கள் கூடுதல் சட்டப்பூர்வ ஊதிய வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை வழங்க முன்மொழிகிறது. இத்திட்டம் விக்சித் கிராம பஞ்சாயத்து திட்டங்கள் மற்றும் பிரதம மந்திரி கதி சக்தி திட்டம் (PM Gati Shakti) ஆகியவற்றுடன் இணைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், இது புவிசார் அமைப்புகள் (Geospatial systems), டிஜிட்டல் பொதுக் உள்கட்டமைப்பு மற்றும் மாவட்ட மற்றும் மாநில அளவிலான திட்டமிடல் வழிமுறைகளால் ஆதரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் 'விக்சித் கிராம பஞ்சாயத்து' (Viksit Gram Panchayat) திட்டங்களின் கீழ் குறிப்பிட்ட சில பணிகளை உள்ளடக்கி, அவற்றை 'விக்சித் பாரத் தேசிய ஊரகக் கட்டமைப்புத் தொகுப்புடன்' (Viksit Bharat National Rural Infrastructure Stack) இணைக்கிறது. நீர் தொடர்பான பணிகளின் மூலம் தண்ணீர் தேவையை உறுதி செய்தல், கிராமப்புறங்களுக்கான முக்கியக் கட்டுமானப் பணிகள், மக்களின் வருமானம் மற்றும் பிழைப்பிற்கு உதவும் கட்டுமானங்கள், அதீத வானிலை மாற்றங்கள் மற்றும் இயற்கைச் சீற்றங்களைச் சமாளிப்பதற்கான சிறப்பான பணிகள் ஆகியன முக்கியப் பகுதிகளாகும். இவற்றுடன் மத்திய அரசு அறிவிக்கும் பிற பொதுப் பணிகள், கிராமப்புற பொதுச் சொத்துகளைப் பராமரித்தல் மற்றும் தனிநபர் பயனாளிகளுக்கான திட்டங்களையும் உள்ளடக்கியது. உதாரணமாக, ஏழைகளுக்கான வீட்டு வசதித் திட்டம் (PM Awaas Yojana) மற்றும் கழிப்பறை வசதி மற்றும் தூய்மைப் பணிகள் ஆகியனவாகும்.
சிக்கல்கள் மற்றும் கேள்விகள்
புதிய சட்டத்தின்கீழ் விரிவுபடுத்தப்பட்டுள்ள பணிகளின் நோக்கம், பயனுள்ள சொத்துக்களை உருவாக்குவதும் அவற்றை பராமரிப்பதும் ஆகும். இது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் (MGNREGA) இருந்த 'தேவைக்கேற்ப வேலை' மற்றும் 'திறந்தநிலை உரிமை' சார்ந்த அணுகுமுறையிலிருந்து மாறுபடுகிறது. இந்த புதிய பணிகளில் பலவற்றிற்குத் திறன் கொண்ட அல்லது பாதியளவு திறன் கொண்ட (semi-skilled) தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள். மேலும், இந்தப் பணிகளின் தன்மையை இனி உள்ளூர் அளவில் தீர்மானிக்க முடியாது. தற்போதைய திட்டத்தின்கீழ், 2024–25-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட மொத்த தொழிலாளர்களில், திறன் கொண்ட மற்றும் பாதியளவு திறன் கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 4 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்ததாகக் கூறப்படுகிறது.
பெரும்பாலான திறன் சாரா பெண் தொழிலாளர்களுக்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (MNREGA) பங்கேற்பது என்பது அவர்களது குடும்ப வாழ்வாதாரத்திற்கான ஒரு வழியாக இருந்தது. ஜனவரி மாதம் 6-ஆம் தேதி 'Business Line' இதழில் பட்டாச்சார்யா குறிப்பிடுகையில், பழைய திட்டத்தைப் போலல்லாமல், புதிய திட்டம் முறையான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்புடன் கூடிய ஒரு திட்டமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். இதில் உத்திகள் வகுத்தல், பொறியியல், வடிவமைப்பு மற்றும் மேற்பார்வை ஆகியவை அடங்கும் என்பதால், இது செயல்திறனை மேம்படுத்தக்கூடும் என்றும் குறிப்பிட்டார். இருப்பினும், இத்தகைய ஒரு கட்டமைப்பிற்குள், அடிமட்ட நிலையில் உள்ள திறன் சாரா அல்லது குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்களின் பங்களிப்பை உறுதி செய்வது அல்லது இந்தத் திட்டத்தை உள்ளூர் பஞ்சாயத்துகளின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிகவும் கடினமாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. மேலும், விவசாயக் காலங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் வேலை நாட்களை அதிகரிப்பதும் சவாலானதாக இருக்கும். ஏனெனில், முந்தைய அனுபவங்களின்படி, வேலை நாட்களை அதிகரிப்பது என்பது குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கான முக்கிய முன்னுரிமையாகத் தெரியவில்லை என்பதையும் தெளிவுபடுத்துகின்றனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் சமூகத் தணிக்கைகள் (Social Audits) பெரும்பாலும் சில முக்கியப் பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டுகின்றன. அவை: இல்லாத தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குதல், வருகைப் பதிவேட்டில், போலிப் பெயர்களைப் பயன்படுத்திப் பணத்தைத் திசைதிருப்புதல், எந்த வேலையும் நடந்ததற்கான அடையாளம் இல்லாமை, வேலை செய்யாமலேயே நிதியைப் பயன்படுத்துதல், தரம் குறைந்த சொத்துக்களை உருவாக்குதல், மனித உழைப்பிற்குப் பதிலாக இயந்திரங்களைப் பயன்படுத்துதல் மற்றும் தனிப்பட்ட லாபத்திற்காகப் பொது வேலைகளைச் செய்தல் போன்றவை ஆகும். இத்தகைய பிரச்சனைகள் பொது நிதியுதவி பெறும் பல திட்டங்களைப் பாதிக்கின்றன. இந்தத் திட்டத்தின் மொத்த வரவு-செலவுத் திட்டத்துடன் ஒப்பிடும்போது, இதில் முறைகேடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் தொகை மிக அதிகம் இல்லை என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சமீபத்திய ஆண்டுகளில், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதை
நோக்கமாகக் கொண்ட டிஜிட்டல் நிர்வாகச் சீர்திருத்தங்களை அரசு முன்னிலைப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
புதிய திட்டமானது, நிகழ்நேரத் தரவு சேகரிப்பு (Real-time data), கண்காணிப்பு, டிஜிட்டல் திட்டமிடல் மற்றும் பணப்பட்டுவாடா முறைகள் மூலம் தற்போதுள்ள அமைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், அதே தொழில்நுட்பமும் அதே களப்பணியாளர்களுமே தொடரப்போகும் நிலையில், ஊழல் அல்லது முறைகேடுகளைத் தடுப்பதில் இந்த புதிய கட்டமைப்பு எவ்வாறு கூடுதல் பயனுள்ளதாக இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. முந்தைய முறைகளுடன் ஒப்பிடும்போது, பொதுவான டிஜிட்டல் விதிகள் தன்னிச்சையான முடிவுகளைக் குறைக்குமா என்பதை ஆதாரங்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்க முடியும். அதே சமயம், தரப்படுத்தப்பட்ட டிஜிட்டல் செயல்பாடுகளால் களஅதிகாரிகளின் முடிவெடுக்கும் அதிகாரம் குறைவது குறித்த விவகாரங்கள் நீடிக்கின்றன. மேலும், டிஜிட்டல் தேவைகள் (ஸ்மார்ட்போன்கள், இணைய வசதி மற்றும் பயோமெட்ரிக் அல்லது செயலி வழியிலான வருகைப் பதிவு போன்றவை) கட்டாயமாக்கப்படுவதால், விளிம்புநிலை மக்கள் இத்திட்டத்திலிருந்து ஒதுக்கப்படும் அபாயம் உள்ளது. இது தவிர, அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான சிக்கல்கள் மற்றும் இந்தத் திட்டத்தின் அடிப்படை உரிமைகள் சார்ந்த தன்மை பலவீனமடைவது குறித்தும் அச்சங்கள் எழுந்துள்ளன.
புதிய சட்டத்தின்கீழ், உருவாக்கப்பட்ட அனைத்து சொத்துக்களும் ஒருங்கிணைந்த தேசிய வளர்ச்சி அணுகுமுறையை உறுதி செய்வதற்காக 'விக்சித் பாரத் தேசிய ஊரகக் கட்டமைப்புத் தொகுப்பில்' (Viksit Bharat National Rural Infrastructure Stack) ஒன்றிணைக்கப்படுகின்றன. திட்டமிடலானது, உள்ளூர் மட்டத்தில் தயாரிக்கப்பட்டு 'பிரதம மந்திரி கதி சக்தி திட்டம்' (PM Gati Shakti) போன்ற தேசிய அமைப்புகளுடன் இணைக்கப்பட்ட 'விக்சித் கிராம பஞ்சாயத்து திட்டங்கள்' மூலம் பரவலாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், புதிய சட்டத்தின்கீழ் தொழில்நுட்பத்தின் மீதான இந்த அதிகப்படியான சார்ந்து இருத்தல், 'தேவைக்கேற்ப வேலை' (Work on demand) எனும் உத்தரவாதத்தை நடைமுறையில் பலவீனப்படுத்துகிறது.
கிராம பஞ்சாயத்துகளை வலுப்படுத்துவது முக்கிய நோக்கமாகக் கூறப்பட்டாலும், புதிய முறை உண்மையில் மத்திய அரசு உருவாக்கிய மென்பொருளை முழுமையாக சார்ந்திருக்கும் நிலையை உருவாக்குகிறது. அதிகார அமைப்புகளில் இருந்து கீழ்நோக்கிய ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு முறைகளால் உள்ளூர் அளவில் திட்டமிடும் சுதந்திரம் குறைகிறது. பல கிராம பஞ்சாயத்துகளில், பயிற்சி பெற்ற ஊழியர்கள் இல்லை, நிலையான மின்சார வசதிகள் செய்யப்படவில்லை, இணைய வசதிகளும் சீராக இயங்குவதில்லை. இதனால், பணிச்சுமையும் அதிகமாகி, வேலைகள் தாமதமாகவும் தவறுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. தொழில்நுட்பம் மூலம் நிதி பரிமாற்றம் செய்தாலும் ஊதிய தாமதம் தவிர்க்கப்படுமா என்பது குறித்தும் மத்திய – மாநில – உள்ளூர் அரசுகளுக்கு இடையே பொறுப்பு தெளிவாக இல்லாமல் இருப்பதும் ஒரு தவறு நடக்கும்பட்சத்தில் யார் பொறுப்பேற்பது என்பது குறித்த தெளிவான அமைப்புகளும் வரையறுக்கப்படவில்லை.
மோகனன், தேசிய புள்ளியியல் ஆணையத்தின் முன்னாள் தற்காலிகத் தலைவர் ஆவார், மற்றும் குண்டு IORA சுற்றுச்சூழல் தீர்வுகள் நிறுவனத்தில் மூத்த ஆய்வாளர் ஆவார்.
Original Article : Will VB-G Ram G score over MGNREGS? -PC Mohanan, Amitabh Kundu