செய்தி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தரநிலைகள் ஆணையத்தின் (NBDSA) பங்கு மற்றும் பணிகள் என்னென்ன? -ரோஷ்னி யாதவ், குஷ்பூ குமாரி

 சமீபத்தில் ‘Financial Times’ இதழில் வெளியான ஒரு கட்டுரையில், ஊடக ஜாம்பவான் ரூபர்ட் முர்டாக்கின் மகன் ஜேம்ஸ் முர்டாக், 'அனைத்தையும் கேபிள் செய்தி ஊடகங்களைப் போல மாற்றுவது' (the cable newsification of everything) என்று அவர் குறிப்பிட்டதை விமர்சித்துள்ளார். இது போன்ற கருத்துக்கள், ஃபாக்ஸ் (Fox), சிஎன்என் (CNN) அல்லது எம்எஸ்என்பிசி (MSNBC) போன்ற செய்தி ஊடகங்களைத் தாண்டி உலகளவில் நிலவும் ஒரு பெரிய சிக்கலை விவரிப்பதாக சசி தரூர் குறிப்பிடுகிறார். 


முக்கிய அம்சங்கள்:


— கேபிள் செய்திகளின் நோக்கங்களான—மோதல், ஆத்திரம் மற்றும் பரபரப்பு செய்திகள் தற்போது ஒட்டுமொத்த தகவல் தொடர்பு அமைப்பிலும் பரவி, மக்களின் நம்பிக்கையை வலுவிழக்கச் செய்து, மக்களிடையே பிரிவினையை ஊக்குவிப்பதாக முர்டாக் எழுதியுள்ளார். துரதிர்ஷ்டவசமாக, இந்த விளக்கம் இந்தியாவிற்கு நன்கு பொருந்துகிறது. இங்கு தொலைக்காட்சி விவாதங்கள் ஒவ்வொரு இரவும் மல்யுத்தப் போட்டிகளைப் போல மாறிவிட்டன.


— கேபிள் செய்திகள் இப்போது மக்களுக்குத் தகவல்களைத் தருவதைவிட, அவர்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றன என்று முர்டாக் முக்கியமான வாதத்தை முன்வைக்கிறார். இது இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் தெளிவாகத் தெரிகிறது. இடைவிடாத 'முக்கிய செய்திகள்' (breaking news) அறிவிப்புகள், 'இந்த நாடு அறிய விரும்புகிறது' என்று செய்தி வாசிப்பாளர்கள் ஆவேசமாகக் கத்துவது மற்றும் சிக்கலான விஷயங்களைக்கூட வெறும் சத்தமான விவாதங்களாகச் சுருக்குவது என இந்த நடைமுறை நீடிக்கிறது. இந்தத் பாணி தற்போது அரசியல், வணிகம் மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளிலும் பரவியுள்ளது என்றும் குறிப்பிடுகிறார். 


— இந்தியாவில், இந்த அணுகுமுறை மிகுந்த உற்சாகத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இங்குள்ள முதன்மை நேர விவாதங்கள் (Primetime debates), அறிவுபூர்வமான கலந்துரையாடல்களாக இல்லாமல், வார்த்தைகளால் மல்லுக்கட்டும் 'மல்யுத்தப் போட்டிகளைப்' போலவே இருக்கின்றன. அங்கு உண்மைகளைவிட சத்தமாகப் பேசுவதற்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது; செய்தித் தொகுப்பாளர்கள் நடுநிலையான நெறியாளர்களாகச் செயல்படாமல், ஒரு சர்க்கஸ் கூடாரத்தின் பொறுப்பாளர்களைப் போலவே நடந்துகொள்கிறார்கள் என்றும் வேதனை தெரிவிக்கின்றனர். 


— இந்தத் தகவல் பரவல் தொலைக்காட்சியுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. சமூக ஊடகங்கள் இத்தகைய காட்சிகளை வாட்ஸ்அப் (WhatsApp) மற்றும் ட்விட்டரில் (Twitter) வேகமாகப் பரவக்கூடிய குறுகிய வீடியோக்களாக மாற்றி, இன்னும் பெரிதாக்குகின்றன. இது ஒரு சுழற்சியை உருவாக்குகிறது. தொலைக்காட்சி வாயிலாக உணர்ச்சிகளைத் தூண்டுகிறது மேலும் சமூக ஊடகங்கள் அதனைப் பலப்படுத்துகின்றன. அரசியல்வாதிகள் அதற்கு எதிர்வினை ஆற்றுகிறார்கள். இது அந்தச் சுழற்சியைத் தொடரச் செய்கிறது.


— தற்போது கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், துல்லியமான செய்திகளுக்கும் உண்மைத்தன்மை சரிபார்ப்புக்கும் பெயர்பெற்ற முன்னணி அச்சு ஊடகங்கள் (செய்தித்தாள்கள்) கூட தற்போது நெருக்கடிக்குள்ளாகியுள்ளன. காலையில் செய்தித்தாள் வாசகர்களைச் சென்றடைவதற்கு முன்பே, மக்கள் முந்தைய இரவு தொலைக்காட்சியில் அந்தச் செய்திகளைப் பார்த்திருப்பார்கள் என்பது ஆசிரியர்களும் அறிவார்கள்.


— பல ஆண்டுகளாக, இந்தியாவின் அச்சு ஊடகங்கள் தொலைக்காட்சியின் மேலோட்டமான செய்தி வழங்கும் முறைக்கு ஒரு மாற்றாகவும், அதைச் சரிசெய்யும் கருவியாகவும் தங்களைக் கருதின. அவசரமானதொலைக்காட்சி விவாதங்களுக்குப் பிறகு, செய்தித்தாள்கள் செய்திகளின் பின்னணி, ஆழமான விவரங்கள் மற்றும் நிதானத்தை வழங்கின; இது வாசகர்களுக்குச் செய்திகளைச் சிந்திப்பதற்கான ஒரு அமைதியான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தது.


— எல்லா விஷயங்களும் அவசரமானதாகவும் மோதல் போக்கைக் கொண்டதாகவும் முன்வைக்கப்படும்போது, நேயர்கள் அதன் மீது அவநம்பிக்கை கொண்டு ஆர்வத்தை இழக்கிறார்கள். அச்சு ஊடகங்களும் இதே பாணியைப் பின்பற்றத் தொடங்கினால், பொதுமக்களால் இந்தத் தொடர்ச்சியான தகவல் இரைச்சலில் இருந்து தப்பிக்கவே முடியாது என்று முர்டாக் எச்சரித்துள்ளார். 


— இதன் விளைவுகள் மிகவும் தீவிரமானவையாக அமையும் என்கின்றனர். முதலாவதாக, பத்திரிகை மீதான நம்பிக்கை குறைகிறது. முதலாவதாக, பத்திரிகை மீதான நம்பிக்கை சிதைகிறது. ஒவ்வொரு செய்தியும் ஒரு நெருக்கடியாக முன்வைக்கப்படும்போது, ​​ஒவ்வொரு தலைப்பும் கவனத்தை ஈர்க்கும் போது, ​​வாசகர்கள் செய்தி ஊடகங்களின் மீதான நம்பகத்தன்மையை இழக்கின்றனர்.


— இரண்டாவதாக, மக்களிடையே பிரிவினை அதிகரிக்கிறது. ஆக்ரோஷமான உணர்ச்சிகளைத் தூண்டும் பத்திரிகைத்துறை, தீவிரமான கருத்துக்களை ஊக்குவிக்கிறது. நிதானமான கருத்துக்களைப் புறக்கணிக்கிறது மேலும், சமரசத்திற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது.


— மூன்றாவதாக, ஜனநாயகம் பலவீனம் அடைகிறது. உண்மையான செய்திகளுக்குப் பதிலாக, பரபரப்பான செய்திகளை மட்டுமே பார்க்கும் பொதுமக்களால் கொள்கைகள், நிர்வாகம் அல்லது சமூகப் பொறுப்புகளில் ஆக்கப்பூர்வமாக ஈடுபட முடியாது என்றும் எச்சரிக்கின்றனர். 

— இந்தியாவில் ஏற்கனவே அரசு நிறுவனங்கள் அழுத்தத்தில் இருக்கும் நிலையில், பத்திரிகை துறை மீதான இந்த நம்பிக்கையிழப்பு மிகவும் ஆபத்தானது. மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிடுவதைவிட அவர்களுக்குத் தகவல் அளிப்பதாகவும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்குப் பணிந்து போவதைவிட அவர்களைக் கேள்வி கேட்பதாகவும், வெறும் விளம்பரங்களை விட உண்மையைத் தேடுவதாகவும் இருக்கக்கூடிய பத்திரிகைத்துறையே ஒரு ஜனநாயக நாட்டிற்கு அவசியமானதாகும்.


— அப்படியானால், என்ன செய்ய வேண்டும்? இதற்குத் தீர்வு தொலைக்காட்சி அல்லது சமூக ஊடகங்களைக் கைவிடுவது அல்ல, மாறாக அந்தத் தளங்களில் இதழியலின் அடிப்படை விழுமியங்களை மீண்டும் நிலைநிறுத்துவதே ஆகும். நமக்குக் கூச்சல் போடும் தொகுப்பாளர்களைவிட, விவாதங்களை வழிநடத்துபவர்கள் தேவை. குழப்பத்தை விளைவிக்கும் விவாதங்களைவிட, பிரச்சினைகளைத் தெளிவுபடுத்தும் விவாதங்கள் தேவை மற்றும் முந்தைய இரவு தொலைக்காட்சியில் நடந்த வாதங்களையே அப்படியே நகலெடுக்காத செய்தித்தாள்கள் தேவை. ஒரு செய்தி அதிக அளவில் பகிரப்படுவதைவிட அதன் 'உண்மைத்தன்மைக்கு' ஆசிரியர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். செய்தியாளர்கள் மோதல்களைவிட அதன் சமூகச் சூழலில் கவனம் செலுத்த வேண்டும்.


— தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் போன்ற நவீன தகவல் தொடர்பு கருவிகள் நம் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டன. அவை பொது நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, மக்களின் உணர்வுகளைத் தூண்டுவதற்காக அல்ல என்கின்றனர். இந்திய ஒளிபரப்பாளர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் வெறும் மோதலாக மாற்றாமல், அதற்குப் பதிலாக புலனாய்வுச் செய்திகள், விளக்கமான தகவல்கள் மற்றும் ஆழமான விவாதங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. 


— ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்த தேசியவாத பத்திரிகைகள் முதல், அவசரநிலை (Emergency) காலத்தை எதிர்த்து நின்ற செய்தித்தாள்கள் வரை, இந்திய ஊடகங்கள் முக்கியமான தருணங்களில் எழுச்சியுடன் செயல்பட்டுள்ளன. அந்த உணர்வு இப்போது பலவீனமடைந்துள்ளது போலத் தெரிகிறது, அந்த உணர்வுகள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

— பத்திரிகைத்துறை மீண்டும் ஒருமுறை சமூகத்தின் ஒரு கண்காணிப்பாளராகவும், நம்பகத்தன்மையுடனும் செயல்பட வேண்டும். அது தொடர் செய்திகளின் எண்ணிக்கையைவிட தெளிவான தகவல்களுக்கும், மக்களின் உணர்ச்சியைவிட செய்தியின் நடுநிலைமைக்கும், மோதல்களைவிடச் சமூகச் சூழல்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இது போன்ற பத்திரிகைத்துறை நடைமுறைகளையே ஒரு ஜனநாயக நாடு சார்ந்திருக்கிறது.


— ஜனநாயகம் அதிக இரைச்சலுடன் இருக்கும் ஒரு நாட்டில், பத்திரிகைத்துறை அந்த இரைச்சலுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும். மக்களுக்குத் தெளிவான தகவல்களை வழங்கி, அவர்களை வலுப்படுத்தும் ஊடகங்களே நமக்குத் தேவை என்றும் வெறும் கூச்சலிடும் அல்லது மக்களை திசைதிருப்பும் ஊடகங்கள் அல்ல என்றும் வாதிடுகின்றனர். சுருக்கமாகச் சொன்னால், நமக்குத் தரமான பத்திரிகைத் துறை சார்ந்த நெறிமுறைகளில் மாற்றம் தேவைப்படுகிறது.


— தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் தனியார் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் செய்தி சேனல்களுக்கான ஒரு சுதந்திரமான சுய-ஒழுங்குமுறை அமைப்பு வெளியிட்ட உத்தரவுகளில், கிட்டத்தட்ட 60% உத்தரவுகள் மத நல்லிணக்கத்திற்கு எதிரான நிகழ்ச்சிகளுக்கு எதிராகவே வழங்கப்பட்டுள்ளன.


— இந்த உத்தரவுகளை செய்தி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தர நிர்ணய ஆணையம் (News Broadcasting & Digital Standards Authority (NBDSA)) வழங்கியுள்ளது. இது தனியார் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் செய்தி நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் செய்தி ஒளிபரப்பாளர்கள் மற்றும் டிஜிட்டல் சங்கத்தால் (News Broadcasters & Digital Association (NBDA)) அமைக்கப்பட்ட அமைப்பாகும்.


— ஜனவரி மாதம் 1-ஆம் தேதி 2023-ஆம் ஆண்டு முதல் டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி 2025-ஆம் ஆண்டு வரை, செய்தி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தர நிர்ணய ஆணையம் (NBDSA) மொத்தம் 54 உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இதில் 32 வழக்குகளில், நில ஆக்கிரமிப்பு, பெண்களின் பாதுகாப்பு, உணவு சுகாதாரம் போன்ற விவகாரங்களுடன் "ஜிஹாத்" என்ற வார்த்தையைச் சேர்த்து மதரீதியான தவறான பிம்பங்களை உருவாக்கியதற்காகத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

— செய்தி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தர நிர்ணய ஆணையம் (NBDSA) பெரும்பாலும் சர்ச்சைக்குரிய காணொளிகளைப் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்க மட்டுமே உத்தரவிட்டுள்ளது. ₹25 லட்சம் வரை அபராதம் விதிக்கும் அதிகாரம் இருந்தும், அதை மிக அரிதாகவே பயன்படுத்தியுள்ளது. மேலும், ஒரு புகார் அளிக்கப்பட்டதிலிருந்து இறுதி உத்தரவு வருவதற்குச் சராசரியாக 11 முதல் 12 மாதங்கள் ஆகின்றன. இந்தத் தாமதத்தினால், அந்தத் தவறான செய்திகள் நீண்டகாலம் இணையத்தில் அப்படியே இருக்கின்றன.


— 2023-ஆம் ஆண்டுக்குப் பிந்தைய தரவுகளை ஆய்வு செய்ததில், இந்தச் சுயக்கட்டுப்பாட்டு அமைப்பு விதிமீறல்களை கண்டறிந்தபோதிலும், கடுமையான தண்டனைகளை வழங்குவதில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், நீண்டகால தாமதமும் இந்த அமைப்பின் செயல்பாட்டை வலுவிழக்கச் செய்கிறது.


— மொத்தமுள்ள 54 வழக்குகளில், 43 வழக்குகளில் விதிமீறல்கள் நடந்திருப்பதை செய்தி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தர நிர்ணய ஆணையம் (NBDSA) கண்டறிந்துள்ளது. இதில் சமூக நல்லிணக்கம் தொடர்பான 39 வழக்குகளில் 32 வழக்குகள் அடங்கும். மீதமுள்ள 11 வழக்குகளில் தண்டனை ஏதும் விதிக்கப்படவில்லை. ஏனெனில், அவற்றில் விதிமீறல்கள் ஏதும் காணப்படவில்லை, என்றும் விதிமீறல் மிகச் சிறிய அளவில் இருந்தது என்றும் ஏற்கனவே திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும்  கூறப்படுகிறது. இந்த விவகாரங்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.


உங்களுக்குத் தெரியுமா?


— செய்தி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தர நிர்ணய ஆணையம் (NBDSA) என்பது செய்தி ஒளிபரப்பாளர்கள் மற்றும் டிஜிட்டல் சங்கம் (NBDA) அமைப்பால் உருவாக்கப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இந்த அமைப்பு தனியார் தொலைக்காட்சி செய்திகள், நடப்பு நிகழ்வுகள் மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பாளர்களின் பிரதிநிதியாகச் செயல்படுகிறது. இது இந்தியாவில் உள்ள செய்தி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பாளர்களின் ஒருங்கிணைந்த குரலாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது.


— இந்த அமைப்பிற்கு தலைமை தாங்குபவர் ஒரு சிறந்த சட்ட நிபுணராக இருக்க வேண்டும். அத்துடன், செய்தி ஆசிரியர்கள் மற்றும் சட்டம், கல்வி, இலக்கியம், பொது நிர்வாகம் போன்ற துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களும் இதில் உறுப்பினர்களாக இருப்பார்கள். இவர்கள் வாரியத்தின் பெரும்பான்மை முடிவின்படி நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.


— இந்த ஆணையத்தின் தலைவராக தற்போது ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி உள்ளார். இதில் மேலும் எட்டு உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் நான்கு பேர் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும் அல்லது இந்திய வெளியுறவுப் பணி அதிகாரிகளான சுயேச்சை உறுப்பினர்கள்; மற்ற நான்கு பேர் தொலைக்காட்சி செய்தி ஊடகங்களின் ஆசிரியர் உறுப்பினர்கள் ஆவர். இந்த ஆணையம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூடி, அனைத்து முடிவுகளும் ஒருமனதாக எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.


— செய்தி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தர நிர்ணய ஆணைய அமைப்பு புகார்களைத் தீர்க்க இரண்டு கட்ட வழிமுறைகளைப் பின்பற்றுகிறது: முதலில், புகார் அளிக்க விரும்பும் நபர் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனத்திடம் 15 நாட்களுக்குள் தனது புகாரைச் சமர்ப்பிக்க வேண்டும். அங்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால், அடுத்த 15 நாட்களுக்குள் செய்தி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தர நிர்ணய ஆணைய அதிகார அமைப்பிடம் மேல்முறையீடு செய்யலாம். இந்த அமைப்பு தானாகவே முன்வந்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கொண்டது என்றாலும், கடந்த மூன்று ஆண்டுகளில் வழங்கப்பட்ட அனைத்து உத்தரவுகளும் தனிநபர்களின் புகார்கள் மூலமே வந்துள்ளன. ஒரு கூட்டத்தில் எத்தனை வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்பது, நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் அவற்றின் தன்மையைப் பொறுத்தது என்கின்றனர்.


Original Article : What is the role and function of the News Broadcasting & Digital Standards Authority (NBDSA)? -Roshni Yadav , Khushboo Kumari

Share: