மனித மூலதனம் ஏன் வளர்ச்சியின் ஆதாரமாக இருக்க வேண்டும்? -புஷ்பேந்திர சிங் மற்றும் அர்ச்சனா சிங்

மக்கள்தொகை பலன் (demographic dividend) என்பது நிரந்தர நன்மை அளிக்கும் காரணி அல்ல. மாறாக, இது காலத்தால் வரையறுக்கப்பட்ட ஒரு வாய்ப்பாகும். உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், தரமான வேலைவாய்ப்பை விரிவுபடுத்தவும், வளர்ச்சியை அதிகரித்து மனித மூலதனத்தை ஆழப்படுத்தவும் இந்தப் பலன்களைப் பயன்படுத்த இந்தியா தயராக இருக்கிறதா?


பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 27-28 தேதிகளில் புது டெல்லியில் நடைபெற்ற தலைமைச் செயலாளர்களின் 5-வது தேசிய மாநாட்டிற்குத் தலைமை தாங்கியபோது, ​​'வளர்ந்த இந்தியாவிற்க்கான மனித வளம்' (Human Capital for Viksit Bharat) என்ற கருப்பொருள் தேர்வு செய்யப்பட்டது வெறும் அடையாளமாகவோ அல்லது சொல்லளவிலோ இருக்கவில்லை. இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி பேரியல் பொருளாதார வேகத்தால் மட்டும் தீர்மானிக்கப்படாமல், அதன் மக்களைச் சார்ந்தே இருக்கும் என்பதை கொள்கை வகுப்பாளர்கள் இப்போது உணர்ந்துள்ளனர். அவர்கள் எவ்வளவு சீக்கிரம் கற்றுக்கொள்கிறார்கள், எவ்வளவு சிறப்பாகக் கல்வி கற்கிறார்கள், எவ்வளவு உற்பத்தித்திறனுடன் பணியாற்றுகிறார்கள் மற்றும் தங்கள் வாழ்நாள் முழுவதும் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அது அமையும்.


இந்தியா தனது சுதந்திரத்தின் நூற்றாண்டை நெருங்கிவரும் வேளையில், வளர்ந்த இந்தியா@2047 என்ற யோசனை ஒரு அடிப்படை கேள்வியை எழுப்புகிறது: இந்தியா தனது மக்கள்தொகை பலனை நிலையான வளர்ச்சி மற்றும் பரந்த செழிப்பாக மாற்ற முடியுமா? மனித மூலதனம் (human capital) வளர்ச்சியின் ஒரு பின்தங்கிய சிந்தனையாக இல்லாமல், அதன் அடித்தளமாக மாறுகிறதா என்பதைப் பொறுத்தே இந்த கேள்விக்கான பதில் அமையும்.


நீண்டகால வளர்ச்சிக்கு மனித மூலதனம்


இயந்திரங்களோ சந்தைகளோ மட்டுமல்லாமல், மனிதர்கள் தான் நீண்டகால வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருக்கிறார்கள் என்ற கருத்து புதியதல்ல. 1992-ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்ற Gary Becker, நீண்டகால வளர்ச்சி என்பது அதிக மக்கள் அல்லது பணத்தால் வருவதில்லை. மாறாக, உற்பத்தித்திறனால்தான் வருகிறது என்று கூறினார். தொழிலாளர்கள் கல்வி கற்றவர்களாகவும், திறமையானவர்களாகவும், ஆரோக்கியமானவர்களாகவும் இருந்து, புதிய வேலைகளுக்கும் தொழில்களுக்கும் தங்களை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டவர்களாக இருக்கும்போது உற்பத்தித்திறன் அதிகரிக்கிறது.


இந்தியாவின் கொள்கை இந்த நுண்ணறிவின் அடிப்படையிலேயே வழிநடத்தப்படுகிறது. நிதி ஆயோக்கின் ‘உலகளாவிய தலைமைத்துவத்தை நோக்கிய இந்தியாவின் பாதை: வளர்ந்த இந்தியா @2047-க்கான ராஜதந்திரத் தேவைகள்’ (Strategic Imperatives for Viksit Bharat @2047) என்ற ஆய்வறிக்கை, மனித மூலதனத்தை – அதாவது மக்களின் அறிவு, திறன்கள், ஆரோக்கியம் மற்றும் தகவமைத்துக்கொள்ளும் திறன் ஆகியவற்றை நீண்டகால வளர்ச்சிக்கு முக்கிய உந்துசக்திகளாகக் கருதுகிறது. இந்தியா இலட்சிய இலக்குகளைக் கொண்டிருப்பதால் இது முக்கியமானதாகிறது.


India's demographic dividend

வளர்ந்த இந்தியா @2047-ன் தொலைநோக்குப் பார்வை, இந்தியாவை 30 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சராசரி வருமானம் இன்றைய நிலைகளிலிருந்து 7 மடங்கு உயரும். அந்த வகையான மாற்றம் படிப்படியாக அதிகரிப்பதில்லை. அது கட்டமைப்பு ரீதியாக அதிகரிக்கும். உயர்-நடுத்தர வருமான நிலையை அடைய, இந்தியாவின் உற்பத்தித்திறன் கடந்த காலத்தைவிட மிக வேகமாக அதிகரிக்க வேண்டும். மேலும், உற்பத்தித்திறன் பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்க வேண்டும்.


உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் வலையமைப்புகள் மக்கள் சிறப்பாகப் பணியாற்ற உதவக்கூடும். ஆனால், அவை மட்டும் தானாகவே மக்களை அதிக உற்பத்தித்திறன் கொண்டவர்களாக மாற்றிவிடாது. தொழிலாளர்கள் கல்வி அறிவு பெற்றவர்களாகவும், திறமையானவர்களாகவும், ஆரோக்கியமானவர்களாகவும் இருக்கும்போது மட்டுமே அது சாத்தியமாகும். மக்களின் மீது முதலீடு செய்யாமல், வளர்ச்சி என்பது காகிதத்தில் உள்ள ஒரு எண்ணாகவே நின்றுவிடும். அவ்வாறு முதலீடு செய்தால், வளர்ச்சி என்பது மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் உண்மையில் அனுபவிக்கும் ஒன்றாக மாறும்.


வளர்ச்சியை அதிகரிக்க மக்கள்தொகை அமைப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.


மக்களுக்கும் உற்பத்தித்திறனுக்கும் இடையிலான இந்த இணைப்புதான் இந்தியாவின் மக்கள்தொகை தருணத்தை மிகவும் முக்கியமானதாக ஆக்குகிறது. இந்தியா இன்று ஒரு முக்கியமான மக்கள்தொகை கட்டத்தில் உள்ளது. அதன் 1.44 பில்லியன் மக்களில் 62.5 சதவீதம் பேர் வேலை செய்யும் வயதில் (15-59 வயது) உள்ளனர். மேலும், இந்த விகிதம் 2041-ஆம் ஆண்டில் உச்சத்தை அடைந்து, பின்னர் குறையத் தொடங்கும். இந்த பரந்த உழைக்கும் வயது மக்கள்தொகையே இந்தியாவின் ‘மக்கள்தொகை பலனுக்கு’ (demographic dividend) அடித்தளமாக அமைகிறது.


ஆனால், இந்தியாவின் மக்கள்தொகை போக்குகள் வேகமாக மாறி வருகின்றன. பொருளாதார ஆய்வறிக்கையின்படி, ஒரு பெண்ணுக்குப் பிறக்கும் சராசரி குழந்தைகளின் (total fertility rate (TFR)) எண்ணிக்கை 1980-களில் 4.5-ஆக இருந்தது. அது 2025-ல் 1.9 ஆகக் குறைந்துள்ளது. இது 2.1 என்ற மாற்று விகிதத்திற்குக் (replacement level) கீழே உள்ளது. குழந்தைகளின் மக்கள் தொகை ஏற்கனவே உச்சத்தை எட்டிவிட்டது. வேறுவிதமாகக் கூறினால், இந்தியாவின் எதிர்காலப் பணியாளர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே பிறந்துவிட்டனர்.


இதற்கு ஒரு தெளிவான அர்த்தம் உண்டு. இந்தியாவின் மக்கள்தொகை நன்மை என்றென்றும் நீடிக்காது. 2030-களின் பிற்பகுதியிலும் 2040-களின் முற்பகுதியிலும் உழைக்கும் வயதுடைய மக்களின் எண்ணிக்கை உச்சத்தை அடையும்போது, ​​அதிக எண்ணிக்கையிலான மக்கள் வயதடைந்து, ஆதரவு அவர்களுக்கு ஆதரவு தேவைப்படும். இந்த நேரத்தை இந்தியா உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், நல்ல வேலைகளை உருவாக்கவும், மக்களிடம் முதலீடு செய்யவும் பயன்படுத்தினால், வளர்ச்சி அதிகரிக்கும். அவ்வாறு செய்யாவிட்டால், அது வேலையின்மை, முறைசாரா வேலைகள் மற்றும் நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கும்.

பள்ளிப் படிப்பிலிருந்து வேலைக்குச் செல்லும் மாற்றங்கள் மீது கவனம் ஏன் திரும்புகிறது?


ஆனால், ஒரு இளம் மக்கள்தொகை மட்டும் இருப்பதனால் வளர்ச்சி ஏற்பட்டுவிடாது. அது அழுத்தத்தையும் வாய்ப்புகளையும் மட்டுமே உருவாக்கும். குழந்தைகளுக்கு நல்ல கல்வி, பயிற்சி மற்றும் ஆரம்பகாலப் பணி அனுபவம் கிடைத்தால் மட்டுமே, இந்தியாவின் மக்கள்தொகை நன்மை ஒரு உண்மையான பொருளாதார பலமாக மாறும்.

கல்விக்கான அணுகலை விரிவுபடுத்துவதில் இந்தியா முக்கிய முன்னேற்றங்களை அடைந்துள்ளது. இருப்பினும், ஏறக்குறைய அனைவருக்கும் பள்ளிக் கல்வி உறுதி செய்யப்பட்டிருந்தபோதிலும், எதிர்பார்க்கப்படும் பள்ளிக் கல்வி ஆண்டுகள் 13.4 ஆண்டுகளாகவே உள்ளன. இது பல நடுத்தர வருமானப் பொருளாதாரங்களில் காணப்படும் 15-16 ஆண்டுகளைவிடக் குறைவான அளவாகும். கற்றல் விளைவுகள், குறிப்பாக அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவில், சீரற்ற நிலையில் உள்ளன. பயனுள்ள பள்ளிக் கல்வியின் ஒவ்வொரு கூடுதல் ஆண்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 0.3-0.4 சதவீதம் உயர்த்துகிறது. ஆனால், அது கற்றலின் தரம் மேம்படும்போது மட்டுமே ஏற்படக்கூடும் என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. பலவீனமான அடிப்படைகள் (Weak foundations), பிற்காலக் கல்வி மற்றும் பயிற்சிகளின் பலன்களைக் கடுமையாகக் குறைக்கின்றன.


மேலும், திறன் உருவாக்கம் என்பது மிகவும் தடையாகவே உள்ளது. 15-29 வயதுக்குட்பட்ட இந்தியர்களில் 5 சதவீதம் பேர் மட்டுமே முறையான தொழிற்பயிற்சி பெற்றுள்ளனர். அதே சமயம் 60%-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் திறமையான தொழிலாளர்களைக் கண்டுபிடிப்பதில் சிரமப்படுவதாகத் தெரிவிக்கின்றன. இந்த இடைவெளிதான், உற்பத்தித்திறனில் அதற்கேற்ற உயர்வு இல்லாமல் வேலைவாய்ப்பு ஏன் வளர்ந்துள்ளது என்பதை விளக்குகிறது. திறன்கள் இல்லாத மக்கள்தொகை வளர்ச்சி எந்தப் பலனையும் அளிக்காது. அது குறைந்த தரமான வேலைகளுக்கான போட்டியை மட்டுமே அதிகரிக்கிறது.

தேசிய கல்விக் கொள்கை (National Education Policy (NEP)) பிரச்சனையானது வெறும் பள்ளியில் சேர்வது மட்டுமல்ல, திறன்களின் பற்றாக்குறைதான் என்பதை அங்கீகரித்தது. இது அடிப்படைக் கல்வி, தொழிற்கல்வி, பயிற்சிப் பணிகள் மற்றும் மாணவர்கள் பள்ளியிலிருந்து பணிக்குச் செல்ல உதவுவதில் கவனம் செலுத்துகிறது. இந்தத் திசை சரியானதுதான். ஆனால், முன்னேற்றம் மெதுவாக உள்ளது. தொழிற்கல்வித் திட்டங்கள் சீரற்றதாகவும், பலவீனமான தொடர்பைக் கொண்டவையாகவும் உள்ளன. மேலும், பயிற்சிப் பணிகளின் எண்ணிக்கையும்  குறைவாகவே உள்ளது.


எனவே, இந்தியாவின் கல்விச் சவாலானது இப்போது பள்ளி வருகை பற்றியது மட்டுமல்ல, கற்றல் மற்றும் திறன்கள் பற்றியது தான். அது குழந்தைகள் என்ன கற்கிறார்கள், அவர்களால் என்ன செய்ய முடியும் மற்றும் அந்தக் கற்றலை எவ்வளவு விரைவாக ஆக்கப்பூர்வமான வேலையாக மாற்ற முடிகிறது என்பதைப் பற்றியது. விரைவான முன்னேற்றம் இல்லையென்றால், மக்கள்தொகை பலன் என்பது ஒரு வாக்குறுதியாகவே நின்றுவிடும். உண்மையான மாற்றமாக மாறாது.


இந்தியாவின் வேலைவாய்ப்பு நிலை


இந்தியாவின் சமீபத்திய வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்கள் நம்பிக்கையளிப்பதாக உள்ளன. காலமுறை தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பின் (Periodic Labour Force Survey (PLFS)) தரவுகளின்படி, 2017-18 மற்றும் 2023-24-ஆம் ஆண்டிற்கு இடையில், மொத்த வேலைவாய்ப்பு 47.5 கோடியிலிருந்து 64.33 கோடியாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், வேலையின்மை விகிதம் 6.0 சதவீதத்திலிருந்து 3.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. இளைஞர்களிடையே வேலையின்மையும் குறைந்துள்ளது. பெண் தொழிலாளர் பங்கேற்பு 23.3%-லிருந்து 41.7%-ஆக உயர்ந்துள்ளது. இது வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கியதாக மாறி வருவதைக் காட்டுகிறது.


2017-ஆம் ஆண்டு முதல் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (Employees’ Provident Fund Organisation (EPFO)) 7.7 கோடி நிகர உறுப்பினர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டிருப்பது, இந்தியாவின் வேலைவாய்ப்புச் சந்தையில் முறைப்படுத்தல் ஏற்படுவதற்கான ஒரு முக்கியக் குறியீடாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. இந்தத் மாற்றங்கள் முக்கியமானவை. பல குடும்பங்களுக்கு, எந்த வகையான வேலையாக இருந்தாலும் அதுவே நிலைத்தன்மை மற்றும் வாழ்வாதாரத்தைக் குறிக்கிறது. ஆனால், இந்த எண்களை மட்டும் வைத்துப் பார்க்கும்போது, ​​இந்தியா தனது மக்கள்தொகை நன்மையை நீண்டகால வளர்ச்சிக்கு மாற்றுகிறது என்பதை நிரூபிக்கவில்லை.


உற்று நோக்கினால், புதிதாக உருவாக்கப்படும் பெரும்பாலான வேலைகள் சுயதொழில் அல்லது தற்காலிக வேலைகள் என்பது தெரியவருகிறது. குறிப்பாக, ஊரகப் பகுதிகளில் இந்த நிலை காணப்படுகிறது. சிறந்த மாற்று வழிகள் இல்லாததால் மக்கள் இந்த வேலைகளை ஏற்கின்றனர். வேளாண்மை, கட்டுமானம் மற்றும் சிறு வர்த்தகம் போன்ற துறைகளில், வருமானம் குறைவாகவும் நிலையற்றதாகவும் இருந்தாலும் கூட, வேலையின்மை விகிதம் குறையக்கூடும். இத்தகைய சூழ்நிலைகளில், வேலையின்மை குறைவது என்பது சிறந்த வேலை வாய்ப்புகள் கிடைப்பதைக் குறிக்காமல், எந்த விலையைக் கொடுத்தாவது வேலை செய்ய வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டுகிறது.


மக்கள் திறமைகளுடன் பணிபுரியும்போது மக்கள்தொகை ஈவுத்தொகை ஈட்டப்படுகிறது.


மேலும், பொது வேலைவாய்ப்புத் திட்டங்கள் (VB-G RAM G) நெருக்கடியான காலங்களில் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கின்றன. ஆனால், அவை உற்பத்தித்திறனை அதிகரிக்கவில்லை. மேலும், திறமையான, அதிக ஊதியம் பெறும் வேளாண்மை அல்லாத வேலைகளுக்கு மாற்றாகவும் அமையாது.


மேலும், பெண்களின் பங்கேற்பில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பையும் கவனமாகப் பார்க்க வேண்டும். பல பெண்கள் பணியிடத்தில் நுழைந்துள்ளனர். பெரும்பாலும் முறைசாரா அல்லது ஊதியம் இல்லாத குடும்பப் பணிகளிலேயே ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பான, வழக்கமான மற்றும் நியாயமான ஊதியம் பெறும் வேலைகளுக்கான அணுகல் இல்லாத நிலையில், அதிக பங்கேற்பு என்பது தானாகவே அதிகாரமளிப்பு அல்லது பொருளாதாரப் பாதுகாப்பாக மாறிவிடுவதில்லை.


இந்த வேறுபாடு முக்கியமானது. ஏனெனில், இந்தியாவிடம் எப்பொழுதும் ஒரு இளம் தொழிலாளர் சக்தி இருக்காது. உழைக்கும் வயதுடைய மக்கள்தொகை 2040-ஆம் ஆண்டுக்கு முன்பே உச்சத்தை எட்டும். அடுத்த பத்தாண்டுகளில் இந்தியா என்ன செய்கிறதோ, அதுவே வயதடைந்து வரும் எதிர்காலத்தில் அது கொண்டிருக்கும் பொருளாதாரத்தின் தன்மையை வடிவமைக்கும்


அதிக மக்கள் வேலை செய்யும்போது மக்கள்தொகை பலன் கிடைப்பதில்லை. மாறாக மக்கள் திறமையுடனும், கண்ணியத்துடனும், நிலைத்தன்மையுடனும் வேலை செய்ய முடிந்தால் மட்டுமே அது சாத்தியமாகிறது. மேலும், தொழிலாளர் சட்டச் சீர்திருத்தங்கள் பாதுகாப்பின்மையைக் குறைத்து, பணியிட மாற்றத்தை மேம்படுத்தினால் மட்டுமே மனித மூலதன உருவாக்கத்திற்கு ஆதரவளிக்க முடியும். இல்லையெனில், நெகிழ்வான வேலைவாய்ப்புகள் மக்களுக்குத் திறன்களைப் பெற உதவுவதற்குப் பதிலாக, திறன் மேம்பாட்டிற்கே மாற்றாக அமைந்துவிடக்கூடும்.



நேரம் ஏன் முக்கியமானது?


வரலாறு ஒரு எளிய பாடத்தை வழங்குகிறது. 1960-களின் முற்பகுதியில், தென் கொரியாவின் வருமான நிலை இந்தியாவிலிருந்து பெரிய அளவில் வேறுபடவில்லை. அது தற்செயலாக வளர்ச்சி அடையவில்லை. தனது இளம் மக்கள்தொகை குறையத் தொடங்குவதற்கு முன்பு, தென் கொரியா உயர்நிலைப் பள்ளிகள், வேலைப் பயிற்சி, சுகாதாரம் ஆகியவற்றில் அதிகளவில் முதலீடு செய்ததுடன், கல்வியை தொழில்துறையுடன் இணைத்தது.


1980-களுக்குள், அதன் தொழிலாளர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் இடைநிலைக் கல்வியை முடித்திருந்தனர். வயதடையத் தொடங்கியபோது, ​​நிலையான ஊதியங்களையும் வாழ்க்கைத்தரத்தையும் ஆதரிக்கும் உற்பத்தித்திறன் ஏற்கெனவே அதிகமாக இருந்தது. இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம், அப்படியே பின்பற்றுவது அல்ல, மாறாக சரியான வரிசைமுறையைக் கடைப்பிடிப்பதுதான். மனித மூலதனத்தில் முதலீடு முதலில் வந்தது, அதைத் தொடர்ந்து அதிக வருமானம் கிடைத்தது. தென்கொரியா முதலில் மக்களின் மீது முதலீடு செய்தது. அதன் பிறகு தான் செல்வந்த நாடாக மாறியது. கல்வி, திறன்கள் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு அது செல்வம் சேரும் வரை காத்திருக்கவில்லை. இது செல்வந்தராகுவதற்குத் தேவையான மனிதத் திறன்களையும் கல்வியையும் வளர்க்கிறது.


சுருக்கமாகச் சொன்னால், சிறந்த வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமும், கல்வியை வேலைவாய்ப்புடன் இணைப்பதன் மூலமும், திறன்கள், கற்றல் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் முதலீடு செய்வதன் மூலமும் இந்தியா தனது இளம் மக்களை ஒரு உண்மையான மக்கள்தொகை பலனாக மாற்ற முடியும். இந்தியாவின் மக்கள்தொகை மாற்றங்கள் சாதகமாக உள்ளன. ஆனால், இப்போது எடுக்கப்படும் உறுதியான நடவடிக்கைகள் மட்டுமே இந்த வாய்ப்பை அதிக வருமானம் மற்றும் அனைவருக்குமான வளர்ச்சியாக மாற்றும். உண்மையான வளர்ச்சி என்பது வெறும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை மட்டும் குறிப்பதில்லை. மக்களுக்கு கண்ணியம், பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்திற்கான நம்பிக்கையை வழங்கும் வேலைகளின் மூலம் அனுபவிக்கப்பட வேண்டும்.


 Original Article : Why human capital needs to be the anchor of growth. -Pushpendra Singh and Archana Singh

Share: