இந்தச் சட்டத் திருத்தங்கள், கையெழுத்திடப்பட்டு ஏறக்குறைய 20ஆண்டுகளை கடந்த பிறகு, இந்திய-அமெரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தின் வணிக ஆற்றலைப் பயன்படுத்திக்கொள்ள உதவும் ஒரு சீர்திருத்த முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
நாட்டின் அணுசக்தித் துறையை நிர்வகிக்கும் சில முக்கிய சட்டங்களை சீரமைப்பதற்காகத் தயாரிக்கப்பட்டு வரும் முக்கியத் திருத்தங்களில் ஒன்றான 2025ஆம் ஆண்டு அணுசக்தி மசோதாவிற்கு (Atomic Energy Bill) ஒன்றிய அரசு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. வெள்ளிக்கிழமை அன்று அமைச்சரவை அளித்த இந்த ஒப்புதல், நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரின் கடைசி வாரத்தில் சட்டத் திருத்தங்களை தாக்கல் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்தத் திருத்தங்கள், இந்தியாவில் அணுமின் நிலையச் செயல்பாடுகளில் தனியார் நிறுவனங்கள் நுழைவதற்கு வழிவகுக்கும் வகையில், 1962 ஆம் ஆண்டு அணுசக்திச் சட்டத்தில் (Atomic Energy Act) மாற்றங்களைச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இதன் விளைவாக, வரவிருக்கும் அணுமின் திட்டங்களில் தனியார் நிறுவனங்கள் 49% வரை பங்குகளை வைத்திருக்க முடியும். இந்த நடவடிக்கை, உலகளாவிய நிதி நிறுவனங்களுடன் இணைந்து வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தத் திட்டங்களில் பங்கு முதலீடு செய்வதற்கு வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை, அணுசக்தித் துறை இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட துறைகளில் ஒன்றாக இருந்து வருகிறது.
இந்தச் சட்டத் திருத்தங்கள், கையெழுத்திடப்பட்டு ஏறக்குறைய 20ஆண்டுகளை கடந்த பிறகு, இந்திய-அமெரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தின் வணிக ஆற்றலைப் பயன்படுத்த உதவும் ஒரு சீர்திருத்த முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. புது டெல்லி இந்த நடவடிக்கையை அமெரிக்கா உடனான ஒரு பரந்த வர்த்தகம் மற்றும் முதலீட்டு முயற்சியின் ஒரு பகுதியாக சேர்க்க விரும்புகிறது. இது தற்போது பேச்சுவார்த்தையில் உள்ள ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு வழிவகுக்கக்கூடும்.
அணுசக்தியை விரிவுபடுத்துதல்
அங்கீகரிக்கப்பட்ட அணுசக்தி மசோதா (2025) இந்தியாவின் மாற்றத்திற்கான அணுசக்தியின் நிலையான பயன்பாடு மற்றும் மேம்பாடு (Sustainable Harnessing and Advancement of Nuclear Energy for Transforming India (SHANTI)) மசோதா, இந்தியாவின் தற்போதைய 8 ஜிகாவாட்டிற்கும் குறைவான நிறுவப்பட்ட அணுசக்தித் திறனிலிருந்து, 2047ஆம் ஆண்டிற்குள் படிப்படியாக 100 ஜிகாவாட் மின்சார அணுசக்தித் திறனைச் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ள நிலையில் வந்துள்ளது. அமெரிக்கா 100 ஜிகாவாட் என்ற அதிகபட்ச செயல்பாட்டு அணுசக்தித் திறனைக் கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து பிரான்ஸ் (65 ஜிகாவாட்) மற்றும் சீனாவில் (58 ஜிகாவாட்) உள்ளன.
அணுசக்தித் திறனை அதிகரிப்பதற்காக, இந்திய அரசாங்கம் 20,000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் சிறிய மட்டு உலைகளின் (Small Modular Reactors (SMR)) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக ஒரு அணுசக்தி இயக்கத்தை அமைப்பதாகவும் அறிவித்திருந்தது. 2033ஆம் ஆண்டுக்குள் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட குறைந்தது 5 சிறிய மட்டு உலைகளைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. தனியார் பங்கேற்பைத் தவிர, அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட சட்டத் திருத்தங்கள், அணு கனிமங்களை ஆய்வு செய்தல், எரிபொருள் தயாரிப்பு, உபகரண உற்பத்தி மற்றும் ஆலை செயல்பாடுகளின் அம்சங்கள் போன்ற முக்கிய அணுசக்தி நடவடிக்கைகளை உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சிறிய மட்டு உலைகளின் மேம்பாடு போன்ற சிவில் பயன்பாட்டிற்கான அணுசக்தி தொழில்நுட்பங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிலும் தனியார் துறையை ஈடுபடுத்தும்.
இந்தத் திருத்தங்கள் கொண்டுவரப்படுவதற்கு முன்பு, ஒரு மூத்த அரசு அதிகாரி Indian Express நாளிதழிடம், அணுசக்தி ஒத்துழைப்புகளுக்காக இந்தியா வெளிநாடுகளை நாடும் இந்த நடவடிக்கை இரண்டு தெளிவான கொள்கைகளால் வெளிப்படுகிறது என்று குறிப்பிட்டார்: அதன் படி, நிலக்கரிக்கு மாற்றாகவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் உள்ள இடைவெளிகளை குறைப்பதற்காகவும் நம்பகமான எரிசக்தி ஆதாரங்களுக்கான தேவை அதிகமாக உள்ளது. மேலும், அணுசக்தி ஒத்துழைப்புகளுக்கான வெளிநாட்டுத் தொடர்புகள், தொழில்நுட்பத் தேவையை விட மூலதனத் தேவையின் காரணமாகவே அதிகம் தேவைப்படுகின்றன.
இந்தியாவின் தற்போதைய அணுசக்தி தொழில்நுட்பம் அழுத்தப்பட்ட கனநீர் உலை (Pressurised Heavy Water Reactor (PHWR)) தொழில்நுட்பம் சில விரிவாக்கச் சிக்கல்களைக் கொண்டுள்ளது என்ற புரிதல் இருந்தபோதிலும் இது நிகழ்கிறது. மேற்கு ஆசிய நாடுகளின் இறையாண்மை நிதிகள் உட்பட வெளிநாட்டு நிதிகள், இந்தியாவின் அணுசக்தித் திறனை அதிகரிப்பதற்கான இலக்குகளுக்குப் பகுதி நிதியுதவி அளிப்பதற்கும், சிறிய மட்டு உலைகளின் உற்பத்தி மதிப்புச் சங்கிலியில் நுழைவதற்கும் ஆரம்பக்கட்ட ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார். எதிர்காலத்தில் அணுசக்தியை குறைந்த விலையிலும் போட்டித்தன்மையுடனும் வைத்திருக்க, சிறிய மட்டு அணு உலைகள் (SMRs) ஒரு முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகின்றன.
ஒருமித்த அரசியல் கருத்தை உருவாக்குவதற்கான அடிப்படைப் பணிகள் நேரம் எடுத்தன. அதன் விளைவாக இந்தத் திருத்தங்கள் முந்தைய இலக்கான மழைக்காலக் கூட்டத்தொடரிலிருந்து குளிர்காலக் கூட்டத்தொடருக்குத் தள்ளி வைக்கப்பட்டன. எதிர்பார்க்கப்படும் மற்றொரு திருத்தம், இந்தியாவின் அணுசக்திப் பொறுப்புச் சட்டமான 'அணுசக்தி சேதங்களுக்கான சிவில் பொறுப்புச் சட்டம், 2010' ஆம் ஆண்டில் (Civil Liability for Nuclear Damage Act (CLNDA)) உள்ள விதிகளைத் தளர்த்துவதாகும். இந்தச் சட்டம், அணுசக்தி விபத்தால் ஏற்படும் சேதங்களுக்குப் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான ஒரு வழிமுறையை உருவாக்குவதையும், பொறுப்பை ஒதுக்குவதையும், இழப்பீட்டிற்கான நடைமுறைகளைக் குறிப்பிடுவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் மற்றும் பிரெஞ்சு அணுசக்தி நிறுவனமான EDF (முன்னர் அரேவா) போன்ற வெளிநாட்டு உபகரண விற்பனையாளர்களால் இது ஒரு தடையாகக் குறிப்பிடப்பட்டது. இந்தச் சட்டம், 'இயக்குநரின் இழப்பீடு கோரும் உரிமை' எனப்படும் ஒரு விதிமுறையின் மூலம், அணுமின் நிலைய இயக்குநர்களின் பொறுப்பை விநியோகஸ்தர்கள் மீது சுமத்த அனுமதிக்கிறது. ஒரு அணுமின் நிலையத்தின் இயக்குநர் பொதுவாக அரசுக்குச் சொந்தமான இந்திய அணுசக்தி கழகம் (Nuclear Power Corp of India Ltd (NPCIL)) போன்ற ஒரு நிறுவனமாக இருக்கும். அதே சமயம், விநியோகஸ்தர்களில் வெளிநாட்டு உலை தயாரிப்பாளர்களும், L&T அல்லது Walchandnagar இண்டஸ்ட்ரீஸ் போன்ற உள்நாட்டு உபகரண விநியோகஸ்தர்களும் அடங்குவர். ஒரு அணுமின் திட்டத்தின் அணு உலை மற்றும் வழக்கமான பாகங்கள் இரண்டிலும் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு விற்பனையாளர்கள், அணு விபத்து ஏற்பட்டால் எதிர்காலத்தில் பொறுப்புகளை ஏற்க நேரிடும் என்ற அச்சத்தின் காரணமாக, இந்தியாவின் அணுசக்தித் துறையில் முதலீடு செய்வதில் உள்ள கவலைகளுக்கு, இயக்குநர்களின் 'இழப்பீடு கோரும் உரிமை' (right of recourse) என்ற இந்த குறிப்பிட்ட விதியை ஒரு காரணமாகக் குறிப்பிட்டுள்ளனர். ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் பொறுப்புகளைக் கட்டுப்படுத்துவது மற்றும் பாதுகாப்புக்காக அரசு ஆதரவு நிதியை உருவாக்குவது போன்றவை முக்கியமான தீர்வுகளாக இருக்கும்.
புதிய திருத்தங்கள், இரண்டு உள்நாட்டுச் சட்டங்களையும் உலகளாவிய சட்ட விதிகளுடன் சீரமைத்து, முதலீட்டாளர்களின் நீண்டகால கவலைகளைத் தீர்த்து, இந்தியாவின் சிவில் அணுசக்தித் துறையைத் விரிவுப்படுத்துவதற்கான களத்தை அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
அடிப்படை சுமை தொடர்பான கவலைகள்
கடந்த பத்தாண்டுகளில், இந்தியா புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பயன்பாட்டை வேகமாக அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்த வளர்ச்சி மின் கட்டமைப்பு மேலாளர்களுக்குச் சில சவால்களை ஏற்படுத்தியுள்ளது. ஆற்றல் சேமிப்பு அமைப்புகளின் வளர்ச்சியை விட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் விரிவாக்கம் வேகமாக நிகழ்ந்துள்ளதால், மின் கட்டமைப்பு அதிக நிலையற்றதாக மாறி வருகிறது. சூரியன் பிரகாசிக்காதபோதும் அல்லது காற்று வீசாதபோதும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படாததால், பசுமை ஆற்றல் வானிலை நிலைகளைச் சார்ந்துள்ளது என்பதே இதற்கு முக்கியக் காரணம்.
கோடை மாதங்களில் மாலை நேரங்களில், சூரிய மின் உற்பத்தி குறையும்போதும், தேவை அதிகமாக இருக்கும் போதும், மின்கட்டமைப்புக்கு முக்கியமான அடிப்படை மின் ஆதரவை வழங்கும் அனல் மின் உற்பத்தியைக் குறைப்பது இந்தச் சிக்கலை தீவிரப்படுத்துகிறது.
இது மின் கட்டமைப்பு மேலாளர்களுக்கு ஒரு கடினமான சூழ்நிலையை உருவாக்குகிறது. அவர்களுக்கு அடிப்படை மின் சுமைத் திறன் விரைவாக அதிகரிக்க வேண்டியுள்ளது. நிலக்கரி ஒரு பொருத்தமான தேர்வு இல்லாததால், அணுசக்தி மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது என்று அந்த அரசு அதிகாரி கூறினார். சூரிய மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் எல்லா நேரங்களிலும் மின்சாரத்தை உற்பத்தி செய்வதில்லை. இதற்கு மாறாக, அனல் மின் நிலையங்கள் மற்றும் அணுமின் நிலையங்கள் போன்ற அடிப்படை மின் சுமை ஆதாரங்கள், குறைந்தபட்ச மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகத் தொடர்ச்சியாக இயங்குகின்றன.
சிறிய மட்டு உலைகளில் ஏற்பட்ட முன்னேற்றம்
சிவில் அணுசக்தித் துறையில், புது டெல்லி இப்போது சிறிய மட்டு உலைகளை (SMRs) ஒரு நம்பிக்கைக்குரிய தொழில்நுட்பமாக முன்னிறுத்தி வருகிறது. இந்த மேம்பட்ட அணு உலைகள், பெரும்பாலான பாரம்பரிய அணுமின் நிலையங்களின் உற்பத்தித் திறனில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே கொண்டிருந்தாலும், அதிக அளவு குறைந்த கார்பன் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடியவை. தொழில்துறை கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதில் இது உதவும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்தத் தொழில்நுட்பத்தைப் பரப்புவதில் இந்தியா ஒரு தலைமைப் பாத்திரத்தை வகிக்கும் என்ற நாட்டின் திறனைத் தீவிரமாக முன்னிறுத்தி வருகிறது. இவை அடிப்படைச் சுமை மின்சாரத்தை வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, தரவு மையங்கள் போன்ற குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கு இது அவசியமாகிறது. இது மின் கட்டமைப்பு இயக்குநர்களுக்கு ஓரளவிற்கு நெகிழ்வுத்தன்மையை வழங்கும். குறிப்பாக, புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களை மின் கட்டமைப்புடன் இணைக்க வேண்டிய கட்டாயம், புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியின் நிலையற்ற தன்மையை சமநிலைப்படுத்த, அதிக அடிப்படை மின்சார உற்பத்தியை இணைக்க வேண்டிய சவாலையும் கொண்டுவருகிறது. இந்த விவகாரத்தில் அனல் மின் உற்பத்தி முக்கியமாகக் கருதப்பட்டாலும், அணுசக்தி சுற்றுச்சூழலுக்கு உகந்த, கார்பன் உமிழ்வற்ற அடிப்படை மின்சார உற்பத்தித் தேர்வை வழங்குகிறது.
இந்தியாவின் அணுசக்தித் திட்டம் சிறிய வகை அணு உலைகளை உருவாக்கும் அனுபவத்தைக் கொண்டுள்ளது. இருப்பினும், இது முக்கியமாக கனநீரையும் இயற்கை யுரேனியத்தையும் பயன்படுத்தும் அழுத்தப்பட்ட கனநீர் உலை (Pressurised Heavy Water Reactor (PHWR)) தொழில்நுட்பத்தை சார்ந்துள்ளது. இந்தத் தொழில்நுட்பம் இப்போது உலகளாவிய போக்குகளுடன் ஒத்துப் போகாத ஒன்றாக மாறி வருகிறது. உலகெங்கிலும், அழுத்தப்பட்ட நீர் உலைகள் (PWRs) என்றும் அழைக்கப்படும் இலகு நீர் உலைகளே (light water reactors (LWRs)) மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வகையாகும். அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் இலகு நீர் உலைகள் (LWR) தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ளன. இந்த உலைகள், அணு உலையை குளிர்விப்பதற்கும் நியூட்ரான்களின் வேகத்தைக் குறைப்பதற்கும் கனநீருக்குப் பதிலாக சாதாரண நீரைப் பயன்படுத்துகின்றன.
குஜராத், மத்தியப் பிரதேசம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய ஆறு மாநிலங்களில் சுமார் 16 இடங்கள் தற்காலிகமாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த சிறிய மட்டு அணு உலைகள் (BSMR) NPCIL-இன் மேற்பார்வையின் கீழ் கட்டப்பட்டு இயக்கப்படும். இந்த அரசுக்குச் சொந்தமான நிறுவனம், செயல்பாடுகள் மற்றும் சொத்துக்களின் மீதான உரிமையைக் கட்டுக்குள் வைத்திருக்கும். இருப்பினும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஏலதாரர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தைத் தங்களின் சொந்தப் பயன்பாட்டிற்காகப் பயன்படுத்திக்கொள்ளும் உரிமையைப் பெறுவார்கள்.
விரிவான விதிமுறைகளின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஏலதாரர் அனைத்து மூலதனச் செலவுகள் உட்பட, திட்டத்திற்கு முழுமையாக நிதியளிக்க வேண்டும். திட்டத்திற்கு முந்தைய பணிகள் முதல் இறுதிப் பயன்பாட்டு நீக்கம் வரை, திட்டத்தின் முழு ஆயுட்காலத்திலும் NPCIL மேற்கொள்ளும் ஒவ்வொரு செலவிற்கும் அவர்கள் திருப்பிச் செலுத்த வேண்டும். இதற்குப் பதிலாக, பெட்ரோ கெமிக்கல் ஆலைகள், சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், சிமென்ட் தொழிற்சாலைகள் மற்றும் எஃகு ஆலைகள் போன்ற பெரிய தொழில்துறை அலகுகளை நடத்தும் தனியார் நிறுவனங்கள், தங்களின் சொந்தப் பயன்பாட்டிற்காக நீண்ட கால மற்றும் நம்பகமான மின்சார விநியோகத்தைப் பெறும்.
மேலும், NPCIL-இன் முன்மொழிவில் உள்ள உரிமை, கட்டணங்கள் மற்றும் செயல்பாட்டுச் சிக்கல்கள் குறித்து சில ஏலதாரர்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சிக்கல்கள் திட்டங்களின் நீண்ட கால நிதி நிலைத்தன்மையை பாதிக்கக்கூடும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
இந்திய அணுசக்தித் துறையின் கீழ் செயல்படும் பாபா அணு ஆராய்ச்சி மையம் மூலம் இந்தியா குறைந்தபட்சம் மூன்று சிறிய மட்டு அணு உலை (SMR) முன்மாதிரிகளை உருவாக்கி வருகிறது. இந்த முன்மாதிரிகள் பரவலாக மூன்று அணு உலை வகைகளின் கீழ் வருகின்றன. அவற்றில் 200 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட பாரத் சிறிய மட்டு அணு உலை, 220 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட பாரத் சிறிய அணு உலை மற்றும் 55 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட ஒரு சிறிய மட்டு அணு உலை ஆகியவை அடங்கும்.
இவற்றில், பாரத் சிறிய அணு உலை அழுத்தப்பட்ட கனநீர் அணு உலை (pressurised heavy water reactor (PHWR)) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. இதற்கு மாறாக, பாரத் சிறிய மட்டு அணு உலை மற்றும் 55 மெகாவாட் சிறிய மட்டு அணு உலை ஆகியவை இலகு நீர் அணு உலைகளாகத் திட்டமிடப்பட்டுள்ளன. தற்போது, ரஷ்யா கூடங்குளத்தில் இலகு நீர் அணு உலை அடிப்படையிலான அணுசக்தித் திட்டங்களை உருவாக்கி வருகிறது; அவற்றில் சில ஏற்கனவே மின்சாரத்தை உற்பத்தி செய்து மின்கட்டமைப்புக்கு வழங்கி வருகின்றன. இந்தியாவில் NPCIL-ஆல் இயக்கப்படும் பெரும்பாலான அணுசக்தி அலகுகள் அழுத்தப்பட்ட கனநீர் (PHWR) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டவை.
இந்த சிறிய மட்டு உலைகளுக்கான கருத்தியல் மற்றும் விரிவான வடிவமைப்புகள் மேம்பட்ட நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. தங்களிடம் உள்ள உள்நாட்டு நிபுணத்துவம் மற்றும் உருவாக்கப்பட்டு வரும் தொழில்நுட்பங்களின் அடிப்படையில், இந்த நிலையில் எந்தவொரு வெளிநாட்டு ஒத்துழைப்பும் திட்டமிடப்படவில்லை என்று அணுசக்தித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தொழில்நுட்பத்தை நிரூபிக்கும் வகையில், SMR-55 மற்றும் BSMR 200 MWe ஆகியவற்றின் முன்னோடி அலகுகளை அணுசக்தித் துறையின் தளங்களில் அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது. இந்த செயல் விளக்க உலைகள், திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்ட 60 முதல் 72 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
Original lnik:
Cabinet clears key amendment to open up n-power: Why this is vital for govt’s baseload energy, SMR and reforms push.