இந்தியா 2047-ஆம் ஆண்டிற்குள் ஒரு வளர்ந்த நாடாக உருவெடுப்பதை இலக்காகக் கொண்டுள்ள நிலையில், இந்திய இரயில்வே துறை வெறும் சாதாரணப் போக்குவரத்து சேவையாக மட்டும் இல்லாமல், வேகம், தரம் மற்றும் ஒருங்கிணைந்த கட்டமைப்பு கொண்ட ஒரு நவீன அமைப்பாக மாறி வருகிறது. வந்தே பாரத் இரயில்கள், அதிவேக இரயில் பாதைகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கான மேம்படுத்தப்பட்ட இரயில் போக்குவரத்துத் தொடர்பு போன்ற திட்டங்கள், இந்திய இரயில்வே துறை ஒரு புதிய நவீனமயமாக்கல் என்கிற நிலையை அடைந்துள்ளதைக் காட்டுகின்றன.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் தேச ஒற்றுமையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, பிரதம மந்திரி கதி சக்தி தேசிய பெருந்திட்டத்தின்கீழ் (PM Gati Shakti National Master Plan) இந்திய இரயில்வே விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 2025–26-ஆம் நிதியாண்டில், ₹1.53 லட்சம் கோடி மதிப்பிலான 100 இரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டங்கள் புதிய பாதைகளை அமைத்தல், தண்டவாளங்களை இரட்டிப்பாக்குதல், பல வழிப்பாதைகளை உருவாக்குதல் மற்றும் இதர பணிகளை உள்ளடக்கி, 6,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான சாதனை அளவிலான விரிவாக்கத்தைக் கொண்டுள்ளன. இந்திய ரயில்வேயை பாதுகாப்பு, வேகம் மற்றும் சேவை ஆகியவற்றில் சர்வதேசத் தரத்திற்கு உயர்த்துவதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு பெரிய முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த விரிவாக்கம் அமைந்துள்ளது.
இந்தச் சூழலில், இந்திய ரயில்வே துறையின் பரிணாம வளர்ச்சி, முக்கியமான உட்கட்டமைப்பு மேம்பாடுகள் மற்றும் அதன் எதிர்காலத் திட்டங்கள் ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்வோம்.
இந்திய ரயில்வே துறையின் பரிணாம வளர்ச்சி
ஆங்கிலேயர் ஆட்சியால் இந்தியாவிற்கு கிடைத்த மிகச்சிறந்த பங்களிப்பாகக் கருதப்படும் இந்திய இரயில்வே, ஒன்றரை நூற்றாண்டிற்கும் மேலாக "நாட்டின் போக்குவரத்து உயிர்நாடியாக" விளங்கி வருகிறது. இது இந்தியாவை சமூகரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் ஒரு ஒருங்கிணைந்த நாடாக மாற்றியுள்ளது.
இந்தியாவின் முதல் பயணிகள் இரயில் 1853-ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி போரி பந்தர் (Bori Bunder) முதல் தானே (Thane) வரை 34 கி.மீ தூரம் இயக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரையிலான அதன் வளர்ச்சியை மூன்று முக்கியக் கட்டங்களாகப் பிரிக்கலாம்:
சுதந்திரத்திற்கு முந்தைய காலம் (1853–1947): இக்காலக்கட்டம் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் ரயில்வேயின் அடிப்படை கட்டமைப்பை உருவாக்கியது. இந்திய வளங்களை காலனித்துவ ஆட்சியாளர்கள் சுரண்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட இந்த ரயில்வே வலைப்பின்னல், பின்னாளில் தேசிய உணர்வு வளர மிக முக்கியமானதாக மாறியது. இது சுதந்திரப் போராட்டத்திற்காக மக்களைத் திரட்டும் ஒரு ஊடகமாகச் செயல்பட்டதுடன், மகாத்மா காந்தி போன்ற தலைவர்கள் நாடு முழுவதும் பயணம் செய்து மக்களைச் சந்திக்கவும் வழிவகை செய்தது.
சுதந்திரத்திற்குப் பிந்தைய விரிவாக்கக் காலம் (1947-2014): சுதந்திரத்திற்குப் பிறகு, இந்திய ரயில்வே ஒரு தொடர்ச்சியான வளர்ச்சிப் பாதையில் பயணித்தது. இதில் முக்கியமாக குறைந்த கட்டணம் மற்றும் அனைவருக்கும் கிடைக்கும் வசதி ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. நாட்டின் தொலைதூரப் பகுதிகளையும் இணைக்கும் வகையில் ரயில்வே பாதைகள் விரிவாக்கப்பட்டது. இது சமூக-பொருளாதார ஒருங்கிணைப்பிற்கு உறுதுணையாக இருந்ததுடன், நாட்டின் பெரிய நகரங்களை அனைவரும் எளிதாகச் சென்றடைய வேண்டும் என்ற சமூகக் கடமையையும் நிறைவேற்றியது.
இருப்பினும், காலப்போக்கில், ரயில்களில் அதிகப்படியான போக்குவரத்து, நெரிசல் மிகுந்த தண்டவாளங்கள், பழமையான உட்கட்டமைப்பு மற்றும் இந்திய இரயில்வேக்கும் உலகளாவிய தரத்திற்கும் இடையே அதிகரித்து வரும் இடைவெளி ஆகியவை நவீனமயமாக்கலை ஒரு அவசியமான தேவையாக மாற்றிவிட்டன.
மாற்றத்தின் காலம் (2014 முதல் தற்போது வரை): கடந்த பத்தாண்டுகளில், தரமான போக்குவரத்து வசதிகளை வழங்குவதில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இது வெறும் தண்டவாள விரிவாக்கத்தோடு நின்றுவிடாமல், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பயணிகளின் வசதி ஆகியவற்றிற்கும் முக்கியத்துவம் அளிப்பதாக அமைந்துள்ளது.
இந்தக் காலகட்டத்தில் 'தண்டவாளப் பிரிப்பு' என்ற உத்தி பயன்படுத்தப்படுகிறது. அதாவது, மெதுவாகச் செல்லும் சரக்கு ரயில்களை அதற்கென ஒதுக்கப்பட்ட தனிப் பாதைகளுக்குத் திருப்பிவிடுவதன் மூலம், பயணிகள் ரயில்கள் விரைவாகச் செல்ல வழிவகை செய்யப்படுகிறது. மேலும், பழைய ரயில்களை மாற்றுவது மற்றும் 'வந்தே பாரத்' போன்ற அதிநவீன ரயில்களை அறிமுகப்படுத்துவது போன்றவையும் அடங்கும்.
மற்ற முக்கிய முன்னேற்றங்கள்
2017-ஆம் ஆண்டில், விவேக் தேப்ராய் தலைமையிலான நிதி ஆயோக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், பல ஆண்டுகளாகத் தனியாகத் தாக்கல் செய்யப்பட்டு வந்த ரயில்வே நிதிநிலை அறிக்கையை அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது. அதற்குப் பதிலாக, ரயில்வே நிதிநிலை அறிக்கையைப் பொது நிதிநிலைத் திட்டத்துடன் ஒன்றாக இணைத்தது.
– நெடுஞ்சாலைகள், இரயில்வே மற்றும் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆகியவற்றிற்கு இடையே ஒரு ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டமிடலை எளிதாக்குவதே இந்த இணைப்பின் நோக்கமாகும்.
– இந்த நடவடிக்கையானது, மானியங்கள் போன்ற வருவாய் செலவினங்களிலிருந்து, மூலதனச் செலவினங்களுக்கு மாறுவதைக் குறிக்கிறது. இதன் மூலம், இந்திய இரயில்வேயை ஒரு நீண்டகாலச் சொத்தாகக் கருதி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பல மடங்கு பெருக்கும் அதன் ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது.
வந்தே பாரத் முதல் அமிர்த பாரத் வரை
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில்கள், இந்திய இரயில்வேயின் நவீனமயமாக்கல் நடவடிக்கைகளில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். 2019-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இவை, நவீன வசதிகளுடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிவேக குளிர்சாதன இரயில்கள் ஆகும். இதில் பயணிகளுக்கான உயர்தர வசதிகள் மற்றும் 'Kavach' (தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு) போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த இரயில்கள் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் இயங்கக்கூடியவை ஆகும்.
பகல் நேர பயணங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் (Vande Bharat) ரயில்கள், தற்போது தரமான இரவு நேரப் பயணங்களுக்காக 'Sleeper' (படுக்கை வசதி) ரயில்களாகவும் தொடங்கப்பட்டுள்ளன. விமானப் பயணத்திற்கு நிகரான ஒரு உயர்தர மாற்றாக இதனை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். முதல் வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயில், ஜனவரி மாதம் 2026-ஆம் ஆண்டில் மேற்குவங்கத்தின் மால்டா பகுதியில் உள்ள ஹவுராவிலிருந்து கௌஹாத்திக்குத் தொடங்கி வைக்கப்பட்டது.
2022-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டம் (Amrit Bharat Station Scheme (ABSS)) என்பது ரயில்வே துறையின் மற்றொரு குறிப்பிடத்தக்க நவீனமயமாக்கல் நடவடிக்கையாகும். ஒரு பயணியின் பயணம் தொடங்கும் இடமான ரயில் நிலையத்திலிருந்தே நவீனமயமாக்கல் தொடங்க வேண்டும் என்ற கருத்தை இது பிரதிபலிக்கிறது. உட்கட்டமைப்பு வசதிகளில் உள்ள குறைகளை நீக்குவதற்காக, குறிப்பாக இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள 1300-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை மேம்படுத்துவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்கவும், அந்தப் பகுதியின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் கொண்டு வரப்பட்ட ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ (One Station One Product) விற்பனை அங்காடிகள், இப்போது அம்ருத் பாரத் நிலையத் திட்டத்துடன் (ABSS) இணைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் நிலையங்களை நகரின் முக்கிய மையங்களாக மாற்றுவது, 'போக்குவரத்து சார்ந்த வளர்ச்சி' (TOD) என்ற கொள்கையைச் செயல்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகும். இதன் மூலம், இந்தியாவில் போக்குவரத்து மையங்களைச் சுற்றி காணப்படும் நகர்ப்புறச் சிதைவைத் தடுத்து, நகரப் புதுப்பிப்பை வேகப்படுத்துவதே நோக்கமாக உள்ளது.
அதிவேக ரயில் திட்டம்
இரயில்கள் மற்றும் இரயில் நிலையங்களைத் தவிர, நவீனமயமாக்கல் திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சம் 'புல்லட் இரயில்' (Bullet Train) திட்டம் மற்றும் 2026-27-ஆம் ஆண்டுக்கான ஒன்றிய நிதிநிலைத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட ஏழு புதிய அதிவேக இரயில் வழித்தடங்கள் ஆகும். அந்த வழித்தடங்கள் பின்வருமாறு:
1. மும்பை-புனே
2. புனே-ஹைதராபாத்
3. ஹைதராபாத்-பெங்களூரு
4. ஹைதராபாத்-சென்னை
5. சென்னை-பெங்களூரு
6. டெல்லி-வாரணாசி
7. வாரணாசி-சிலிகுரி
முக்கியமான பொருளாதார, தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப மையங்களுக்கு இடையேயான பயணநேரத்தைக் கணிசமாகக் குறைப்பதற்காக, சுமார் 4000 கி.மீ தூரத்தை உள்ளடக்கிய 'வைர நாற்கரப் பாதை' (Diamond Quadrilateral) எனும் அதிவேக இரயில் திட்டத்தை அரசு இலக்காகக் கொண்டுள்ளது. நாட்டின் முக்கிய நகரங்களையும் வளர்ச்சி மையங்களையும் இணைக்கும் இந்தத் திட்டத்திற்கான திட்டமிடல் பணிகள் 2014-15-ஆம் ஆண்டுக்கான இரயில்வே நிதிநிலைத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டன.
சுமார் ₹1,08,000 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும் மும்பை-அகமதாபாத் அதிவேக இரயில் (Mumbai-Ahmedabad High Speed Rail (MAHSR)) திட்டம், இந்தியாவின் இந்த தொலைநோக்குப் பார்வையின் மையப்புள்ளியாக உள்ளது. ஜப்பான் அரசின் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டுவரும் இந்தத் திட்டம், இந்தியாவின் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் ‘Slab Track System’ எனப்படும் நவீன தண்டவாள முறை, மேம்பட்ட நில அதிர்வு கண்காணிப்பு மற்றும் பிரத்யேக கான்கிரீட் மேம்பாலங்கள் போன்ற உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
இந்தத் திட்டங்கள், வணிகரீதியான தொடர்புகளுக்கு சாதாரண ரயில்களின் வேகம் இனி போதுமானதாக இருக்காது என்பதை உணர்ந்து உருவாக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் முக்கிய நகரங்களை மணிக்கு 300 கி.மீ-க்கும் அதிகமான வேகத்தில் இணைப்பதன் மூலம், ஜப்பானின் 'ஷின்கான்சென்' (Shinkansen) புல்லட் ரயில் திட்டத்தைப் போல, இது பொருளாதார வளர்ச்சியில் பல மடங்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அதிவேக ரயில் திட்டமானது, நவீன காலத்தில் நேரமானது பணத்தைப் போலவே எவ்வளவு மதிப்புமிக்கது என்பதை அங்கீகரிக்கிறது. அதிவேக ரயில் என்பது வசதி படைத்தவர்களுக்கான ஆடம்பரம் மட்டுமல்ல; அது ஒரு முக்கியமான பொருளாதாரக் கருவியாகும்.
வடகிழக்கு மாநிலங்களின் தலைநகரங்களை இணைத்தல்
நவீனமயமாக்கலின் மற்றொரு முக்கிய அம்சம் பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதாகும். குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களின் தலைநகரங்களை ரயில், சாலை மற்றும் வான்வழிப் பாதைகள் வழியாகத் தேசிய வலையமைப்புகளுடன் இணைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஐசாலை (Aizawl) இணைக்கும் புதிய பைரபி-சைராங் (Bairabi-Sairang) ரயில் பாதை மற்றும் இம்பால், கோஹிமா ஆகிய இடங்களுக்கு நடைபெற்று வரும் ரயில் விரிவாக்கப் பணிகள், 'மலைப்பகுதி பொறியியல்' தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ஒரு புதிய ஒருங்கிணைப்பைக் குறிக்கின்றன.
வடகிழக்கு பிராந்தியத்தின் மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் நிலநடுக்க அபாயங்களைச் சமாளிக்க, இந்தத் திட்டம் நீண்ட சுரங்கப்பாதைகள் மற்றும் உயரமான தூண்களைக் கொண்ட பாலங்களை அதிகளவில் பயன்படுத்துகிறது. வடகிழக்கு மாநிலங்களின் தலைநகரங்களில் நான்காவதாக ஐசால் (Aizawl) இரயில்வேயுடன் இணைக்கப்பட்டுள்ளது. இம்பால், கோஹிமா மற்றும் காங்டாக் ஆகிய நகரங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இணைக்கப்பட உள்ளன. ஷில்லாங்கை இணைப்பதற்கான பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தப் போக்குவரத்து வசதியால் சரக்கு போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை மிகவும் எளிதாகவும், மலிவாகவும் மாறும் என்றும் இது அந்தப் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு பெரியளவில் உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் தீவையும் இந்தியாவின் பிரதான நிலப்பகுதியையும் இணைக்கும் வகையில், பாக் ஜலசந்தியின் குறுக்கே 2.07 கி.மீ தூரத்திற்கு கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் பாலம், இந்தியாவின் முதல் செங்குத்தாக உயரும் கடல் பாலம் (Vertical Lift Sea Bridge) ஆகும். கடினமான நிலப்பரப்புகளை இணைக்கும் இந்தியாவின் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை இந்தத் திட்டம் உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது.
இதுவரை இணைப்பு வசதி இல்லாத பகுதிகளுக்கு ரயில் சேவையை வழங்கும் இந்த நடவடிக்கைகள், வெறும் ரயில்வே விரிவாக்கம் மட்டுமல்ல என்றும் இவை நாட்டின் கடைக்கோடி எல்லைப் பகுதிகளையும் நாட்டின் பொருளாதாரத்தோடு இணைப்பதற்கான முக்கியமான முயற்சிகளாகும். இதன்மூலம் நவீனமயமாக்கப்பட்ட ரயில்வே அமைப்பின் நன்மைகள் அனைத்து மக்களுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது. மேலும், போக்குவரத்து இணைப்பு வசதி இல்லாத காரணத்தினால் எந்தவொரு பகுதியும் வளர்ச்சியில் பின்தங்கிவிடக் கூடாது என்பதையும் இந்தத் திட்டம் உறுதி செய்கிறது.
பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகிய இரண்டிற்கும் இடையே சமநிலை தேவை
இருப்பினும், பயணிகள் ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதில் தற்போதைய தண்டவாள அமைப்பில் சில சிக்கல்கள் உள்ளன. பயணிகள் ரயில்களும் சரக்கு ரயில்களும் ஒரே தண்டவாளத்தைப் பகிர்ந்து கொள்வதால் அங்கு மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறைந்த அளவிலான பாதையை இரண்டு வகை ரயில்களும் பயன்படுத்துவதால், இரண்டுமே தாமதமாகின்றன.
இரயில் போக்குவரத்தைப் சர்வதேசத் தரத்திற்கு உயர்த்துவதற்கு இரயில் நிலையங்களை மேம்படுத்துவதும், இரயில்களில் வசதிகளைப் பெருக்குவதும் அவசியமானதுதான். இருப்பினும், நேரம் என்பது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் இந்த நவீன காலத்தில், வேகம் குறைவாக இருப்பதை வெறும் வசதிகளைக் கொண்டு மட்டும் ஈடுசெய்துவிட முடியாது. வந்தே பாரத் மற்றும் வரவிருக்கும் அதிவேக இரயில் பாதைகள் போன்ற முயற்சிகளும், ஒட்டுமொத்த நவீனமயமாக்கல் திட்டங்களும் வெற்றிபெற வேண்டுமானால், பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகிய இரண்டிற்கும் இடையே ஒரு திறமையான சமநிலையை உருவாக்குவது அவசியமாகிறது.
இந்த மாற்றத்திற்கான சரியான வழி என்பது, இவ்விரண்டு போக்குவரத்து சேவைகளையும் அவற்றின் செயல்பாட்டிற்கு ஏற்ப தனித்தனியாகப் பிரிப்பதில் தான் உள்ளது. பயணிகள் விரைவாகப் பயணம் செய்வதற்குப் பாதையைச் சீரமைக்க, அதிக எடையுள்ள சரக்கு போக்குவரத்தை பிரத்யேக சரக்கு வழித்தடங்களுக்கு (Dedicated Freight Corridors) மாற்ற வேண்டும். இவ்வாறு அமைப்பைப் பிரிப்பதன் மூலம், பயணிகள் இரயிலின் வேகம் மற்றும் சரக்கு போக்குவரத்தின் திறன் ஆகிய இரண்டையுமே எவ்விதப் பாதிப்பும் இன்றி உறுதி செய்ய முடியும்.
Original Link: How India is modernising railways, the ‘transport lifeline of the nation’