முக்கிய அம்சங்கள்:
• ஒரு நாட்டின் பொருளாதார நெருக்கடியின்போது, அந்த நாட்டின் பண மதிப்பு மட்டுமே அனைத்துப் பாதிப்புகளையும் தாங்கும் ஒரு "அதிர்வு தாங்கியாக" இருக்க வேண்டும் என்று வணிகவாத சிந்தனை கொண்ட சிலர் நம்புகின்றனர். மற்றவர்களோ, ஒரு நாட்டின் பண மதிப்பை வேண்டுமென்றே குறைப்பதன் மூலம், ஏற்றுமதியை அதிகரித்து உலகளாவிய சந்தைப் போட்டியாளர்களை வீழ்த்தலாம் என்றும், இது வளமான பொருளாதாரத்தை அடைய ஒரு சுலபமான வழி என்றும் கருதுகின்றனர்.
• வரலாறும் பொருளாதாரக் கோட்பாடுகளும் உணர்த்துவது என்னவென்றால், ஒரு நாட்டின் நாணய மதிப்பு வீழ்ச்சியடைவது என்பது தற்காலிகமான ஒன்றாக இல்லாமல் நீண்டகாலத்திற்குத் தொடரும்போது, அதனால் எதிர்பார்க்கப்பட்ட பலன்கள் கிடைக்காமல் போய்விடும். ஏற்றுமதிக்கான அந்த "போட்டித்திறன்" விரைவாகக் குறைந்து, இறுதியில் பணவீக்கத்தையும் நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கைகளில் நஷ்டத்தையுமே மிச்சம் விட்டுச் செல்லும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
• பணமதிப்பு வீழ்ச்சியின் ஈர்ப்பு அதன் எளிமையில் அடங்கியுள்ளது. இது ஒரு நாட்டின் பொருட்களை வெளிநாட்டினருக்கு மலிவானதாக மாற்றுகிறது. இருப்பினும், இது பெரும்பாலும் ஒரு 'ஃபாஸ்டியன் பேரத்தைப்' (Faustian bargain) போன்றது. அதாவது, ஒரு தற்காலிக லாபத்திற்காகப் பின்னாளில் பெரும் இழப்பைச் சந்திக்கும் ஒப்பந்தம் ஆகும். பல வளர்ந்து வரும் மற்றும் வளர்ந்த நாடுகளின் உண்மை நிலை என்னவென்றால், நாணய மதிப்பு வீழ்ச்சியடைவது ஏற்றுமதியில் பெரிய வளர்ச்சியைத் தருவதில்லை. மாறாக, அது மக்களின் வாங்கும் சக்தியையும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் கடுமையாகப் பாதிக்கிறது.
• அடிப்படைப் பொருளாதாரக் காரணிகளைவிட, ஒரு நாட்டின் பணமதிப்பு ஏன் மிக வேகமாகவும் அதிகமாகவும் வீழ்ச்சியடைகிறது என்பதைப் புரிந்துகொள்ள, ரூடி டார்ன்புஷ் என்பவரின் "Overshooting Model" ஒரு விளக்கத்தை அளிக்கிறது. பொருட்களின் விலைகள் மெதுவாகவே மாறும் (மந்தமானவை), ஆனால் நிதிச்சந்தைகள் மிக வேகமாக மாற்றங்களுக்கு ஏற்ப மாறும் நீர்மத்தன்மை கொண்டவை என்றும் விளக்கமளித்துள்ளார். இதன் காரணமாக, பொருளாதாரச் சமநிலையைப் பேணுவதற்காக, குறுகியகாலத்தில் அந்நியச் செலாவணி மாற்று விகிதங்கள் மிகக் கடுமையான மாற்றங்களுக்கு உள்ளாகின்றன.
• ஒரு மத்திய வங்கி தனது நிதிக் கொள்கையை விரிவாக்க முறைக்கு மாற்றும்போது, அந்த நாட்டின் நாணய மதிப்பு நேரடியாக அதன் புதிய நீண்டகால விலையை அடைந்துவிடாது என்கின்றனர். அது முதலில் அந்த அளவைவிட மிகக் கடுமையாகக் கீழே சரிந்து, பிறகு மெதுவாக மீண்டும் உயரும். ஏற்கனவே முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறைவாக உள்ள ஒரு நாட்டில், இத்தகைய மாற்றம் அந்த நாட்டைவிட்டு மூலதனம் வெளியேறுவதற்கு வழிவகுக்கும் என்றும் இது ஒரு தீய சுழற்சியாக மாறிப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்கின்றனர்.
• இந்தப் போராட்டம் முண்டெல்-பிளெமிங் மாதிரி (Mundell-Fleming Model) மூலம் விளக்கப்படுகிறது. இது "சாத்தியமற்ற மும்மை நிலை" (Impossible Trinity) என்று அழைக்கப்படுகிறது. ஒரு நாடு ஒரே நேரத்தில் இந்த மூன்றையும் கொண்டிருக்க முடியாது என்பதை விளக்குகிறது. நிலையான மாற்று விகிதம், தடையற்ற மூலதனப் புழக்கம், மற்றும் ஒரு சுதந்திரமான பணவியல் கொள்கை ஆகியனவாகும். தற்போது நிலவுவதைப் போல நாட்டின் நாணய மதிப்பு வீழ்ச்சியடையும்போது, சந்தை விசைக்கு எதிராக அதிகாரிகள் செயல்பட முயன்றால் அவர்கள் ஒரு இக்கட்டான சூழலில் சிக்கிக் கொள்வார்கள். நாணய மதிப்பைப் பாதுகாக்க வட்டி விகிதங்களை உயர்த்தினால், அது உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சியை மெதுவாக்கும் என்றும் ஒருவேளை நாணய மதிப்பைக் குறைய அனுமதித்தால், அது பணவீக்கத்திற்கு வழிவகுக்கும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.
உங்களுக்குத் தெரியுமா?
• இந்தியப் பொருளாதாரமும் ரூபாயின் மதிப்பும் இதற்கு முன்பே கடுமையான நாணய நெருக்கடிகளைச் சந்தித்துள்ளன. குறிப்பாக, 2008–09-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் ஏற்பட்ட உலகளாவிய நிதி நெருக்கடி (Global Financial Crisis) மற்றும் 2013-ஆம் ஆண்டில் நடந்த 'Taper Tantrum' ஆகிய நிகழ்வுகளை உதாரணமாகச் சொல்லலாம். இவ்வளவு பெரிய சவால்களையும் கடந்து இந்தியா முன்பைவிட வலிமையாக மீண்டு வந்துள்ளது. உலகளாவிய நிதி நெருக்கடிக்கு பிறகு, பல நாடுகள் தங்களது பொருளாதார மீட்சியை வேகப்படுத்துவதற்காக, தங்கள் நாட்டு நாணயத்தின் மதிப்பைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
• 2026-ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியா தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக பணப்பரிமாற்ற நிலுவையில் (Balance of Payments (BoP)) பற்றாக்குறையைப் பதிவு செய்துள்ளது. 2026-ஆம் நிதியாண்டிலும் இது தொடர வாய்ப்புள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரே ஒரு முறை மட்டுமே வெளிநாட்டு வரிசை முதலீடுகள் (Foreign Portfolio Investment (FPI)) சாதகமாக இருந்தன. மேலும், 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நிகர அந்நிய நேரடி முதலீட்டு (Net Foreign Direct Investment) வரத்து எதிர்மறையாகவே உள்ளது. இதன் விளைவாக, நடப்புக் கணக்கு பற்றாக்குறை (Current Account Deficit (CAD)) குறைவாக இருந்தபோதிலும், அதைச் சமாளிப்பதற்கான நிதி கிடைப்பது கடினமாகி வருகிறது. இது இந்திய ரூபாயின் மதிப்பின்மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
• நிதியியல்ரீதியான நடவடிக்கைகள் (எண்ணெய் விலை நிர்ணயத்தில் மாற்றங்கள் மற்றும் மானியச் சீர்திருத்தங்கள் போன்றவை) மற்றும் பரந்த அளவிலான கொள்கை மாற்றங்கள் (எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துதல், மின் விநியோகத்தை சீரமைத்தல், மின்சாரம் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை சரக்கு மற்றும் சேவை வரி வரம்பிற்குள் கொண்டு வருதல் போன்றவை) தற்போது அவசியமாகத் தேவைப்படுகின்றன.
• லாபத்தை மீண்டும் தாய்நாட்டிற்கு கொண்டு செல்லும் போக்கு (Profit Repatriation) அதிகரிப்பதாலும், அதன் விளைவாக நிகர நேரடி அந்நிய முதலீடு குறைவதாலும், இந்தியா புதிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல், ஏற்கனவே இருக்கும் முதலீட்டாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்குத் தொழில் தொடங்குவதை எளிதாக்குதல், நிலையான கொள்கைகளை உறுதிப்படுத்துதல், கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குதல் மற்றும் முதலீட்டாளர்களுக்கு நீண்டகால நம்பிக்கையை ஏற்படுத்துதல் ஆகியவை அவசியமாகிறது.
Original Link: What is Currency depreciation?