ஒரு பில்லியன் டன் உணவு வீணடிக்கப்படுவதும், ஒரு பில்லியன் மக்கள் பசியால் வாடுவதும் பொதுவாக இது ஒரு முரண்பாடு மட்டுமல்ல, அது திறமையின்மைக்கும் அக்கறையின்மைக்கும் எதிரான ஒரு குற்றச்சாட்டாக உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 30 அன்று, உலகம் சர்வதேச கழிவின்மை தினத்தைக் (International Day of Zero Waste) கடைபிடிக்கிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் ‘உணவு வீணாவது (food waste)’ ஆகும். இது காலத்திற்கு ஏற்றது மட்டுமல்லாமல், நம் காலத்தின் மிகவும் வேதனையான முரண்பாடுகளில் ஒன்றான, கோடிக்கணக்கான மக்கள் பசியுடன் உறங்கச் செல்லும்போதும், உலகம் முழுவதும் ஊட்டச்சத்துக் குறைபாடு நிலவும்போதும் மலைபோல் குவிந்து கிடக்கும் உணவு வீணாவதற்கு உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் ஒரு அவசர அழைப்பாக கருதப்படுகிறது. இந்தியாவில், வீணடிக்கப்படும் இந்த உணவானது, விடியலுக்கு முன்பே எழுந்து பயிர்களைப் பராமரிக்கும் விவசாயிகளின் விளைபொருளும், இந்தத் தொழிலாளர்களில் பலரால் தங்களுக்கு முறையான உணவுகூட வாங்கமுடியாத தொழிலாளியின் கடின உழைப்பும் ஆகும். அவர் விளைபொருட்களைப் பண்ணைகளிலிருந்து சந்தைகளுக்கு விளைபொருளை கொண்டுசெல்ல கையாளப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் (United Nations Environment Programme(UNEP)) 2024-ம் ஆண்டுக்கான உணவு விரயக் குறியீட்டு அறிக்கையின்படி (Food Waste Index Report), உலகமானது 1.05 பில்லியன் டன் உணவை வீணடித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. இதில், அறுவடைக்குப் பிந்தைய சேமிப்புக் கிடங்குகளின் போதாமை மற்றும் வீடுகளின் பங்களிப்பு 60%-ஆகவும், உணவுச் சேவைகளின் பங்களிப்பு 28%-ஆகவும், சில்லறை வர்த்தகத்தின் பங்களிப்பு 12%-ஆகவும் உள்ளது. இந்தப் பிரச்சனை தனிநபர்களின் செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்டு, இந்த உணவு இழப்பின் அளவானது, விநியோகச் சங்கிலிகளில் புதைந்துள்ள அமைப்புரீதியான திறமையின்மைகள், கொள்கையில் ஏற்படும் தோல்விகள் மற்றும் பெரும்பாலும் செழிப்பாக இருப்பதற்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய விலையாக உணவை வீணாக்குவதை மக்கள் இயல்பான ஒன்றாகப் பார்க்க வைத்துவிட்டன.
இருப்பினும், செழிப்பு என்பது அனைவருக்கும் சமமாக இருப்பதில்லை. சுமார் 783 மில்லியன் மக்கள் இன்னும் பசியை எதிர்கொள்கின்றனர். மேலும், 3.1 பில்லியனுக்கும் அதிகமானோர் ஆரோக்கியமான உணவை வாங்க இயலாத நிலையில் உள்ளனர். அறுவடைக்குப் பிந்தைய பயிர் இழப்பு மற்றும் உணவு வீணாவதை நாம் கட்டாயம் கவனிக்க வேண்டும். ஒரு பில்லியன் டன் உணவு வீணாவதும், ஒரு பில்லியன் பசியால் வாடும் வயிறுகளும் ஒருங்கே இருப்பது ஒரு முரண்பாடு மட்டுமல்ல. இது திறமையின்மையையும், அக்கறையின்மையையும் சுட்டிக்காட்டுகிறது.
உலகளாவிய சூழலில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், மிகவும் சங்கடமானதாகவும் உள்ளது. ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்ட (UNEP) அறிக்கையின்படி, ஆண்டுக்கு ₹1.55 லட்சம் கோடி மதிப்புள்ள, அறுவடைக்குப் பிந்தைய 78 முதல் 80 மில்லியன் டன் பயிர்களும் உணவும் வீணாக்கப்படுவதால், வீணான உணவின் மதிப்பில் இந்தியா உலகளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆண்டுக்கு சுமார் 108 மில்லியன் டன் உணவை வீணடிக்கும் சீனாவிற்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. அதேநேரத்தில், அமெரிக்கா ஆண்டுக்கு 24.7 மில்லியன் டன் உணவை வீணாக்குகிறது. இது 'பூஜ்ஜியக் கழிவு' (zero waste) எனும் நெறிமுறையான 'மொட்டைனை' (Mottainai) கலாச்சாரத்திற்காக நீண்டகாலமாகப் போற்றப்படும் ஜப்பான், ஆண்டுக்கு வெறும் 5.2 மில்லியன் டன் உணவுக் கழிவுகளை மட்டுமே உருவாக்குகிறது.
தனிநபர் நிலைமையும் பல உண்மைகளை வெளிப்படுத்துகிறது. இந்தியாவில் தனிநபர் வீட்டு உணவு வீணாவது ஆண்டுக்கு 55 கிலோவாக உள்ளது. இது அமெரிக்காவில் 73 கிலோவாகவும், ஜெர்மனியில் 75 கிலோவாகவும் இருப்பதைவிடக் குறைவு. இருப்பினும், இந்தியாவின் நிலைமையை தனித்துவமான அளவில் சோகமாக்குவது என்னவென்றால், உலகளாவிய பசி குறியீட்டில் (Global Hunger Index) 125 நாடுகளில் இந்தியா 111-வது இடத்தில் உள்ளது. மேலும், சுமார் 194 மில்லியன் மக்களுக்குப் போதுமான உணவு கிடைப்பதில்லை. உணவு வீணாவது ஒரு புள்ளிவிவரம் மட்டுமல்ல, அது கோடிக்கணக்கான மக்களுக்குக் கிடைக்காத உணவைக் குறிக்கிறது.
பஞ்சாப் மாநிலம் கோடிக்கணக்கான மக்களுக்கு உணவளிக்கப் போதுமான உணவை உற்பத்தி செய்கிறது. இருப்பினும், இந்த உணவின் பெரும் பகுதி மக்களின் தட்டுகளைச் சென்றடைவதற்கு முன்பே வீணாகிறது. உற்பத்தியைப் பாதிக்கும் தீவிர வானிலை நிகழ்வுகள் மற்றும் சேமிப்பு, விநியோகத்தில் உள்ள அபாயகரமான அளவிலான திறமையின்மைகள் ஆகியவற்றால், மாநிலத்தில் உணவு இழப்பும் வீணாவதும் ஒரு முக்கியப் பிரச்சினையாக உள்ளது. பஞ்சாபில் பழங்கள் மற்றும் காய்கறிகளின் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகள், அவை உண்ணப்படுவதற்கு முன்பே சுமார் 20%-ஆக உள்ளன. 2019 மற்றும் 2024-க்கு இடையில், பஞ்சாபில் உள்ள இந்திய உணவுக் கழகத்தின் (Food Corporation of India (FCI)) சேமிப்புக் கிடங்குகளில் மட்டும் 8,200 டன்களுக்கும் அதிகமான உணவு தானியங்கள் வீணாவது, இந்தியாவிலேயே மிக அதிகமானதாகக் குறிப்ப்பிடுகிறது.
பஞ்சாபில் வேளாண் மேம்பாட்டுக்கான பணிக்குழு குறித்த நிதி ஆயோக்கின் அறிக்கையின்படி, அறுவடைக்குப் பிந்தைய கையாளுதலில் பல சிக்கல்கள் உள்ளன. போதுமான மூடிய சேமிப்புக் கிடங்கு வசதிகள் இல்லாமை, குளிரூட்டப்பட்ட விநியோகச் சங்கிலி உள்கட்டமைப்பில் போதுமான முதலீடின்மை, சரியான நேரத்தில் இயந்திரமயமாக்கலுக்கான ஆதரவு இல்லாமை மற்றும் தரம் பிரித்தல், தரப்படுத்துதல், அறிவியல்பூர்வமான தொகுப்பு முறைகள் ஆகியவற்றின் பற்றாக்குறை ஆகும். இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் பெரும் தடைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
உணவு வீணாவது என்பது வெறும் மனித துயரம் மட்டுமல்ல, அது ஒரு சூழலியல் பிரச்சனை ஆகும். உணவு இழப்பு மற்றும் வீணாவது, உலகளாவிய வருடாந்திர பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் 8-10% பங்களிக்கிறது. உணவு வீணாவதை ஒரு நாடாகக் கருதினால், அது சீனா மற்றும் அமெரிக்காவிற்குப் பிறகு பசுமை இல்ல வாயுக்களை அதிகம் வெளியிடும் மூன்றாவது நாடாக இருக்கும். குப்பைக் கிடங்குகளில் உணவு மக்கும்போது, மீத்தேன் வாயு வெளியிடப்படுகிறது. இது CO₂-ஐவிட பல மடங்கு அதிக வெப்பமாக்கும் ஆற்றல் கொண்ட ஒரு பசுமை இல்ல வாயு ஆகும்.
நாம் வீணடிக்கும் உணவு, பசியால் வாடும் மக்களுக்கு உணவளிக்கக்கூடியது. வீணாகும் ஒவ்வொரு வாய் அரிசியும் நீர், நிலம், எரிபொருள் மற்றும் விவசாயிகளின் கடின உழைப்பு ஆகியவற்றின் இழப்பாகும். ஒரு கிலோகிராம் அரிசி உற்பத்தி செய்ய சுமார் 5,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அந்த அரிசி வீணாகும்போது, தண்ணீரும் வீணாகிறது. குறிப்பாக, நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வரும் பஞ்சாபில் இது மிகவும் தீவிரமான பிரச்சனையாக உள்ளது. இந்தச் சூழ்நிலையில், உணவு இழப்பு மற்றும் வீணாவதை தேசிய காலநிலைத் திட்டங்களில் சேர்ப்பது அவசரத் தேவையாகும்.
உணவு இழப்பைக் குறைப்பது என்பது அறுவடைக்குப் பிறகு பயிர்களைக் கையாள்வது அல்லது மீதமுள்ள உணவை நிர்வகிப்பது மட்டுமல்ல. அது, பொறுப்பான சேமிப்பு மற்றும் நுகர்வு மூலம் உணவை நாம் மதிக்கும் மற்றும் போற்றும் விதத்தை மறுபரிசீலனை செய்வதாகும்.
உணவு வீணாவதை முடிவுக்குக் கொண்டுவர, மனித மாண்பை மையமாகக் கொண்டு, அமைப்புகள், ஊக்கங்கள் மற்றும் விழுமியங்களை மறுசீரமைக்க வேண்டியது அவசியம். இதற்கான நம்பகமான, மனிதாபிமானமான மற்றும் நீடித்த ஐந்து வழிகள் உள்ளன. அவை,
1. குளிர்பதனச் சங்கிலியை உருவாக்கி இழப்புகளைக் குறைக்கவும் : அமெரிக்கா 65% மற்றும் சீனா 23% பதப்படுத்துவதோடு ஒப்பிடுகையில், இந்தியா தனது விளைபொருட்களில் சுமார் 8%-ஐ மட்டுமே பதப்படுத்துகிறது. குறிப்பாக பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஒரு தேசிய குளிர்பதனச் சங்கிலித் திட்டமானது, ஒரு விருப்ப முதலீடாகக் கருதப்படாமல், உணவுப் பாதுகாப்பு உள்கட்டமைப்பாகக் கருதப்பட வேண்டும்.
2. உணவு வீணாக்குதலுக்கு எதிராகச் சட்டம் இயற்றுங்கள், பகிர்வதற்குச் சட்டம் இயற்றுங்கள் : பல ஐரோப்பிய நாடுகள், விற்கப்படாத ஆனால் உண்ணக்கூடிய உணவைப் பல்பொருள் அங்காடிகள் அழிப்பதைச் சட்டவிரோதமாக்கியுள்ளன. அதற்குப் பதிலாக, அதனை உணவு வங்கிகளுக்கு நன்கொடையாக வழங்குவதைக் கட்டாயமாக்கியுள்ளன. இந்தியாவில், உபரி உணவை மறுவிநியோகம் செய்ய ஒரு தேசியச் சட்டம் இயற்ற கவனம் செலுத்த வேண்டும். அச்சட்டத்தின் ஆதரவுடன், உணவு வீணாக்குவதற்குப் பதிலாக, நன்கொடை வழங்கும் வணிக நிறுவனங்களுக்கும் அமைப்புகளுக்கும் வரிச் சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.
3. ஆரம்பத்திலேயே விவசாயிக்கு அதிகாரம் அளித்தல் : அறுவடைக்குப் பிந்தைய இழப்பு பண்ணை மட்டத்திலிருந்தே தொடங்குகிறது. விவசாய-உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு இயந்திரமயமாக்கப்பட்ட உலர்த்தும் கருவிகள், காற்றுப்புகாத சேமிப்புப் பைகள் மற்றும் நகரும் குளிர்பதன நிலையங்கள் வழங்கப்பட வேண்டும். கொறித்துண்ணிகளின் சேதம் மற்றும் பூச்சித் தொல்லைக்கு ஆளாகக்கூடிய, நுண்துளைகள் கொண்ட சணல் சாக்குகளில் தானியங்களைச் சேமிக்கக் கோரும் சணல் பொதிப் பொருட்கள் சட்டம் (Packaging Materials Act), நவீன காற்றுப்புகாத தீர்வுகளை அனுமதிக்கும் வகையில் அவசரமாக மறுஆய்வு செய்யப்பட வேண்டும்.
4. உணவு வீணாவதைக் கவனத்திற்குக் கொண்டு வாருங்கள், சேமிப்பைப் பலனளிப்பதாக மாற்றுங்கள் : இந்தியாவில் தற்போது சில்லறை மற்றும் விருந்தோம்பல் நிலையில் உணவு வீணாவதைக் கண்காணிக்கும் ஒருங்கிணைந்த தேசிய தரவுத்தளம் எதுவும் இல்லை. பெரிய உணவு வணிகங்கள், திருமண உணவு வழங்குநர்கள் மற்றும் நிறுவன சமையலறைகளுக்கு, ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) உணவு வீணாவதைக் குறியீட்டு வழிமுறையின் அடிப்படையில், கட்டாய உணவு வீணாவதை அளவிடுதல் மற்றும் பொது அறிக்கையிடல் மூலம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
5. ‘அன்னத்தை (உணவை)’ புனிதமாகப் போற்றும் நெறியை மீட்டெடுங்கள் : இந்தத் துணைக்கண்டத்தில் உள்ள ஒவ்வொரு கலாச்சாரமும், உணவைப் போற்றத்தக்க ஒன்றாகக் கருதி வந்துள்ளது. அது பெரும்பாலும் புனிதமானதாகக் கருதப்பட்டது. இதன் பொருள், “அன்ன பிரம்மம்”, உணவு கடவுளுக்குச் சமம் என்று போற்றப்பட்டுள்ளது. இந்தக் கருத்து வெறும் பாரம்பரியம் அல்லது கடந்தகால நினைவுகளைப் பற்றியது மட்டுமல்ல. இதுவரையில் வகுக்கப்பட்டதிலேயே மிகவும் நீடித்த உணவுத் தத்துவம் இதுவே. பள்ளிகள், சமூகங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் இந்த நெறியை, மத போதனையாக அல்லாமல் ஒரு குடிமைப் பொறுப்பாக மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். விழிப்புணர்விலிருந்து கூட்டு நடவடிக்கைக்கு நகர்ந்து, உணவு வீணாவதைக் குறைப்பதை ஒரு பொதுவான தேசிய முன்னுரிமையாக மாற்றுவோம்.
ஏ.எஸ். மிட்டல், பஞ்சாப் பொருளாதாரக் கொள்கை மற்றும் திட்டமிடல் வாரியத்தின் துணைத் தலைவராகவும், சோனாலிகா ஐடிஎல் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் உள்ளார்.
Original Link: Food worth ₹1.55 lakh crore wasted annually.