Showing posts with label UNESCO. Show all posts
Showing posts with label UNESCO. Show all posts

மியான்மருடனான இந்தியாவின் கொள்கை என்பது கூட்டு ஒத்துழைப்பு சார்ந்த பாதையாகும். -ஹர்ஷ் வி. பந்த், ஸ்ரீபர்ணா பானர்ஜி

 இணைப்புத் திறன், பாதுகாப்பு மற்றும் சீனா ஆகிய மூன்று காரணிகளே மியான்மருடனான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை தீர்மானிக்கின்றன.


மியான்மர் நாட்டின் அதிபர் உ மின் ஆங் ஹ்லைங், மே மாதம் 30-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு பீகாரில் உள்ள புத்த கயாவிற்கு (Bodh Gaya) வந்திறங்கியபோது, அதன் குறியீட்டு செய்தி மிகத் தெளிவாக இருந்தது. அவர் புது டெல்லிக்குச் சென்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகியோரைச் சந்தித்துப் பேசுவதற்கு முன்பாக, ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பின் (United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)) உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றானதும், பௌத்த மதத்தின் மிக முக்கியமான புனிதத் தலங்களில் ஒன்றானதுமான மகாபோதி கோயிலுக்குச் சென்றார். இந்த வருகை முக்கியாமான செய்தியை வெளிப்படுத்தியது.  இந்தியா, மியான்மர் தலைவரை வெறும் ராஜதந்திரரீதியாக மட்டும் வரவேற்கவில்லை. மாறாக, இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பொதுவான நாகரிக மற்றும் கலாச்சார பிணைப்புகள் மூலமாகவும் அவரை வரவேற்றது. 


மின் ஆங் ஹ்லைங் அதிபராக இந்தியாவிற்கு மேற்கொண்ட முக்கியமான ராஜதந்திரரீதியான பயணமாகும் (மே 30 முதல் ஜூன் 3, 2026 வரை). தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் மாறிவரும் புவிசார் அரசியல் சூழலில், இந்தியா-மியான்மர் இடையிலான உறவு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவருகிறது என்பதை இந்த வருகை பிரதிபலித்தது. இந்திய அரசுக்கு, இந்த வருகை நிகழ்ந்த காலகட்டமும் அதன் தன்மையும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.


இப்போது ஏன்?


பிப்ரவரி மாதம் 2021-ஆம் ஆண்டில் ஆங் சான் சூகி தலைமையிலான தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை அகற்றிவிட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து, உலகின் பெரும்பாலான ஜனநாயக நாடுகள் மியான்மரின் தலைநகரான நெய்பிடாவ் (Naypyidaw) உடனான தங்களது உறவை துண்டித்துக் கொண்டுள்ளன. மேற்கத்திய நாடுகள் மியான்மர்மீது பொருளாதாரத் தடைகளை விதித்து, அந்த ராணுவ ஆட்சியைத் தனிமைப்படுத்த முயன்றன. இருப்பினும், இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவின் கொள்கையானது, மியான்மரின் உள்நாட்டு அரசியல் ஏற்பாடுகள் குறித்த ஒரு விமர்சனமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், தொடர்ந்து இணக்கமாகச் செயல்படுவதுதான் சிறந்த அணுகுமுறை என்று இந்தியா நம்புவதாகவும் கூறினார்.


இது இந்தியாவின் ஒரு நடைமுறைச் சாத்தியமான உத்தி சார்ந்த அணுகுமுறையைக் காட்டுகிறது. மியான்மர் என்பது தென்கிழக்கு ஆசியாவிற்கான இந்தியாவின் நுழைவாயிலாகும்.  மேலும், இது இந்தியாவின் 'Act East Policy' மற்றும் 'Neighbourhood First Policy' ஆகிய கொள்கைகளின் மிக முக்கியமான பகுதியாகும். இந்தியாவின் நான்கு வடகிழக்கு மாநிலங்களுடன் மியான்மர் 1,643 கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்து கொள்வதால், அங்கு நிலவும் அரசியல் நிலையற்றதன்மை அந்த பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்பு நலன்களை நேரடியாகப் பாதிக்கிறது.


Act East Policy (கிழக்கில் செயல்படும் கொள்கை) : இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான பொருளாதார, ராஜதந்திரரீதியான உறவுகளை வலுப்படுத்துவதற்கான இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை.


Neighbourhood First Policy (அண்டைநாடுகளுக்கு முன்னுரிமை கொள்கை) : தனது அண்டை நாடுகளுடன் (இலங்கை, மாலத்தீவு, மியான்மர் போன்ற நாடுகள்) சுமுகமான மற்றும் நல்லுறவை பேணுவதற்கு இந்தியா வழங்கும் முன்னுரிமைக் கொள்கை.


இதற்கு மற்றொரு முக்கியக் காரணி சீனா ஆகும். மியான்மரில் ராணுவப் புரட்சி ஏற்பட்டதில் இருந்து, மேற்கத்திய நாடுகள் அந்நாட்டைப் புறக்கணித்ததால் ஏற்பட்ட இடைவெளியைச் சீனா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. உள்கட்டமைப்பு நிதி, ஆயுதங்கள் மற்றும் ராஜதந்திர ஆதரவை வழங்குவதன் மூலம் சீன அரசாங்கம் மியான்மரின் ராணுவ அரசுடன் தனது உறவை வலுப்படுத்தியுள்ளது. ஒருவேளை இந்தியா, மியான்மரை முழுமையாகச் சீனாவின் ஆதிக்கத்திற்குள் விட்டுவிட்டால், அது இந்தப் பகுதிகளில் இந்தியாவின் பாதுகாப்பை பலவீனப்படுத்திவிடும் என்றும் கூறப்படுகிறது.


உள்கட்டமைப்புக்கான முதலீட்டு அபாயங்கள் மற்றும் சவால்கள் 


மியான்மரில் இந்தியாவின் வலுவான உத்திசார் முதலீட்டை, கலாடன் பல்துறைப் போக்குவரத்துத் திட்டம் (Kaladan Multi-Modal Transit Transport Project (KMMTTP)) மற்றும் இந்தியா-மியான்மர்-தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலை (India-Myanmar-Thailand Trilateral Highway (IMT)) ஆகிய இரு முக்கிய இணைப்புத் திட்டங்களைவிட வேறு எந்தவொரு திட்டமும் இவ்வளவு சிறப்பாகக் காட்டிவிட முடியாது. இந்த இரண்டு திட்டங்களும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மியான்மர் ராணுவத் தளபதி மின் ஆங் ஹ்லைங் ஆகியோரின் பேச்சுவார்த்தையில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தன.


கலாடன் திட்டம் கொல்கத்தாவை கடல் வழியாக சித்வே (Sittwe) துறைமுகத்துடன் இணைக்கிறது, அங்கிருந்து கலாடன் நதி வழியாக பலேத்வா (Paletwa) பகுதிக்குச் சென்று, இறுதியாக சாலை வழியாக மிசோரமில் உள்ள ஜோரின்புயுடன் (Zorinpui) இணைகிறது. இதன் கடல் மற்றும் நதி வழிப் பாதைகள் ஏற்கனவே செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. மேலும், மே மாதம் 2023-ஆம் ஆண்டில் முதல் சரக்குக் கப்பல் சித்வே துறைமுகத்தை வந்தடைந்தது. இருப்பினும், மலைப்பாங்கான மற்றும் வெள்ள அபாயம் அதிகம் உள்ள சின் மாநிலம் (Chin State) வழியாகச் செல்லும் மிக முக்கியமான 109 கிலோமீட்டர் நீள பலேத்வா-ஜோரின்புய் சாலை இன்னும் முடிவடையாமல் உள்ளது. இந்தத் திட்டம் 2027-ஆம் ஆண்டிற்குள் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் என்று இந்தியாவின் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் 2025-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.



இந்த முத்தரப்பு நெடுஞ்சாலை (IMT Trilateral Highway) இன்னும் ஒரு பெரிய இலக்கைக் கொண்டுள்ளது. இது மணிப்பூரில் உள்ள மோரே (Moreh) பகுதியை மியான்மர் வழியாக தாய்லாந்தில் உள்ள மே சோட் (Mae Sot) பகுதியுடன் சுமார்     1,360 கி.மீ தூரத்திற்கு இணைக்கிறது. எதிர்காலத்தில் கம்போடியா, லாவோஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கும் இதை நீட்டிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் முடிவடைந்தால், கடலோரப் பகுதிகள் இல்லாத இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான ஒரு முக்கிய நுழைவாயிலாக மாற்றமுடியும். இந்தத் திட்டம் 2019-ஆம் ஆண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டது, ஆனால் இன்னும் முழுமையடையாமல் உள்ளது.


மியான்மர் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுப் போர்தான் இந்த இரண்டு திட்டங்களும் தாமதமாவதற்கு முக்கியக் காரணமாகும். ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள் இந்த வழித்தடங்களில் உள்ள பெரிய பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால், கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது கடினமாகவும் ஆபத்தானதாகவும் மாறியுள்ளது. இந்தத் திட்டங்களை முடிப்பதற்கு மியான்மர் அரசாங்கம் தங்களால்  முடிந்த அனைத்தையும் செய்யும் என்று மியான்மர் ராணுவத் தலைவர் மற்றும் அதிபர் மின் ஆங் ஹ்லைங், பிரதமர் நரேந்திர மோடியிடம் உறுதியளித்தார். அதேநேரத்தில் பாதுகாப்பு சவால்கள் இருந்தாலும், இத்திட்டங்கள் தங்களுக்கு மிக முக்கியமான முன்னுரிமையாகவே தொடர்கிறது என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.    மியான்மர்-இந்தியா வர்த்தகம் மற்றும் முதலீட்டு மாநாட்டில் (Myanmar-India Trade and Investment Conclave), ஆங் ஹ்லைங் இத்திட்டங்களை தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு ஆசியான்-இந்தியா பொருளாதார வழித்தடத்தின் (Association of Southeast Asian Nations(ASEAN)-India economic corridor) அத்தியாவசியப் பகுதிகள் என்று விவரித்தார். ஆனால், இப்போதுள்ள முக்கியக் கேள்வி என்னவென்றால், இந்த வாக்குறுதிகள் உண்மையில் களத்தில் வேலைகள் நடக்க வழிவகுக்குமா என்பதுதான். இந்த உச்சிமாநாடு பிற முக்கியமான விஷயங்களையும் உள்ளடக்கியதாக இருந்தது. 2025-26-ஆம் நிதியாண்டில் இருநாடுகளுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் 1.95 பில்லியன் டாலர்களை எட்டியது. இந்த வர்த்தகத்தை ‘Rupee-Kyat settlement mechanism’ எனப்படும் இந்திய ரூபாய் மற்றும் மியான்மர் கியாட் நாணயங்களை நேரடியாகப் பயன்படுத்தி வர்த்தகம் செய்யும் முறை மூலம், மேலும் அதிகரிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. அதோடு, முக்கியமான கனிமங்கள் மற்றும் அரிய வகை மண் தனிமங்கள் ஆகியவற்றில் கூட்டு ஒத்துழைப்பு குறித்தும் விவாதித்தனர்.


பாதுகாப்பு குறித்துப் பேசிய மியான்மர் ராணுவத் தளபதி ஆங் ஹ்லைங், மியான்மரின் நிலப்பரப்பு இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படாது என்ற நாட்டின் உறுதியை மீண்டும் வலியுறுத்தினார். இந்தியாவின் கிளர்ச்சியாளர் குழுக்களும் (Indian insurgent groups), இணையக் குற்ற வலையமைப்புகளும் (Cybercrime networks) நீண்டகாலமாக மியான்மரின் எல்லைப் பகுதிகளில் செயல்பட்டு வருவதால் இந்த உறுதிமொழி மிக முக்கியமானதாகும். இருதரப்பு ஒத்துழைப்பின் மூலம், கடந்த 18-மாதங்களில் இணையவழி மோசடி மையங்களில் சிக்கியிருந்த 2,400-க்கும் மேற்பட்ட இந்தியக் குடிமக்கள் மீட்கப்பட்டுள்ளனர். இருப்பினும், பலர் இன்னும் அங்கு தவித்து வருகின்றனர். கல்வித்துறையைப் பொறுத்தவரை, மியான்மர் மாணவர்களுக்கான மேகாங்-கங்கா இந்திய கலாச்சார உறவுகளுக்கான கூட்டமைப்பு (Indian Council for Cultural Relations (ICCR)) கல்வி உதவித்தொகைகளின் எண்ணிக்கை, 2026-ஆம் ஆண்டு முதல் ஆண்டிற்கு 36-லிருந்து 100-ஆக உயர்த்தப்படும் என்று இந்தியா அறிவித்துள்ளது.


பெரிய அளவிலான கணக்கீடு


  மியான்மரின் அதிபராக ஆங் ஹ்லைங் அவர்களை வரவேற்பதன் மூலம், மியான்மரில் மாறிவரும் அரசியல் சூழ்நிலையை இந்தியா ஒரு குறிப்பிட்ட அளவிற்கு ஏற்றுக்கொண்டுள்ளதைக் காட்டுகிறது. இதன் பொருள் ராணுவ ஆதரவு பெற்ற அரசாங்கத்தை இந்தியா முழுமையாக ஆதரிக்கிறது என்பது அல்ல, மாறாக மியான்மருடன் பயனுள்ள முறையில் தொடர்பு ள்ள வேண்டுமென்றால், தற்போது அதிகாரத்தில் இருக்கும் தலைவர்களுடன்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற நிலையைப் பிரதிபலிக்கிறது. மியான்மர் நாட்டைப் பொறுத்தவரையிலும் இந்தப் பயணம் மிக முக்கியமானதாகும். ஆங் ஹ்லைங் கடைசியாக 2019-ஆம் ஆண்டு மியான்மரின் ராணுவத் தளபதியாக இந்தியாவுக்கு வந்திருந்தார். இப்போது அவர் நாட்டின் தலைவராக மீண்டும் வந்திருப்பதும், வெளிநாடுகளில் தனது முதல் முக்கிய இருதரப்புப் பேச்சுவார்த்தைக்கான இடமாக இந்தியாவைத் தேர்ந்தெடுத்திருப்பதும், ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்துகிறது. ராஜதந்திரரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் சீனா மீது மியான்மர் வைத்துள்ள அதிகப்படியான சார்புநிலையைக் குறைக்க, அண்டை நாடான இந்தியாவுடன் உறவை வலுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த முடிவு புவியியல் மற்றும் நாட்டின் பாதுகாப்பு சார்ந்த காரணங்களால் எடுக்கப்பட்டதாகும். அதோடு, ஒரு நாட்டுடனான உறவைத் துண்டித்துக் கொள்வது எப்போதும் நல்ல பலனைத் தராது என்ற புரிதலும் இதற்குப் பின்னணியில் உள்ளது. இதன் மூலம் சொல்ல வரும் செய்தி மிகவும் தெளிவானது. பல சவால்கள் இருந்தபோதிலும், மியான்மர் தொடர்பான பிராந்திய அளவிலான அணுகுமுறைகளில், வரும் ஆண்டுகளில் நடைமுறைரீதியான கூட்டு ஒத்துழைப்பு மிக முக்கியப் பங்கு வகிக்கப் போகிறது.


ஹர்ஷ் வி. பந்த், ‘Observer Research Foundation’ அமைப்பின் துணைத் தலைவர் ஆவார். ஸ்ரீபர்ணா பானர்ஜி, ‘Observer Research Foundation’ அமைப்பின் உத்திசார் ஆய்வுகள் திட்டத்தின் இணை ஆய்வாளர் ஆவார்.


original article : India’s road through Myanmar is one of engagement. -Harsh V. Pant, Sreeparna Banerjee

Share:

இந்தியா தனது 100-வது ராம்சார் தளத்தைச் சேர்த்துள்ளது — சதுப்பு நிலங்கள் ஏன் முக்கியமானவை? -குஷ்பூ குமாரி

 தற்போதைய செய்தி :


உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேசத்தின் பல்லியாவில் உள்ள இந்தியாவின் 100-வது ராம்சார் தளமான ஜெய் பிரகாஷ் நாராயண் பறவைகள் சரணாலயம் (சுர்ஹா தால்) என்ற சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களின் பட்டியலில் சேர்ப்பதாக அறிவித்தார். இந்தப் பட்டியலில் ஒரு சதுப்பு நிலம் சேர்க்கப்பட்டிருப்பது, அதன் சூழலியல் தன்மையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அரசின் உறுதியான நிலைப்பாட்டைக் காட்டுகிறது.


இந்தச் சாதனை, சதுப்பு நிலப் பாதுகாப்பில் இந்தியாவின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. ஆனால், இந்தச் சூழல் அமைப்புகளை இவ்வளவு முக்கியமானதாக ஆக்குவது எது?


முக்கிய அம்சங்கள்:


1. 1991-ல், பல்லியா நகரப் பகுதியிலுள்ள பான்ஸ்திஹ் கிராமத்தைச் சேர்ந்த 45 கிராமங்களின் நிலப்பரப்புகள் ஒன்றிணைக்கப்பட்டு, மொத்தமாக 3432.93 ஹெக்டேர் பரப்பளவில் ‘சுர்ஹா தால்’ (Surha Taal) உருவாக்கப்பட்டது. 2002-ல், இதன் பெயர் “ஜெய் பிரகாஷ் நாராயண் பறவைகள் சரணாலயம்” என்று  மாற்றப்பட்டது.


2. இது பல்லியா நகரப் பகுதியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சரணாலயத்திறக்கு  மேற்கில் பிக்கம்பூர் கிராமம் வரையிலும், வடகிழக்கில் சிங்ஹௌலி வரையிலும், தென்கிழக்கில் துல்வாரா கிராமம் வரையிலும் பரவியுள்ளது. இது பல்லியா மற்றும் பான்ஸ்திஹ் நகரப்பகுதியின் கட்டுப்பாட்டிற்குள்  வருகிறது.


3. சுராஹ்தால் என்பது இயற்கையாக உருவான, ஆண்டு முழுவதும் நீர் கொண்டிருக்கும் வளைவு ஏரி (Oxbow Lake) ஆகும். இது மத்திய ஆசிய பறவை இடம்பெயர்வு பாதையில் (Central Asian Flyway) பயணம் செய்யும் பல்வேறு பறவை இனங்களுக்கு முக்கியமான குளிர்கால தங்குமிடமாக விளங்குகிறது.  உத்தரப் பிரதேச சூழல் சுற்றுலாவின் கூற்றுப்படி, சரணாலயம் வனவிலங்குகளுக்கும் அருகிலுள்ள வேளாண்  நிலங்களுக்கும் ஆதரவளிக்கிறது. பருவமழையின் போது, ​​ஏறக்குறைய 25,000 ஹெக்டேர் நிலம் நீரில் மூழ்குகிறது. இது, இந்தியாவில் உள்ள மிகச் சில சதுப்பு நிலங்களால் மட்டுமே ஈடுசெய்யக்கூடிய பரந்த அளவிலான இயற்கையான வாழ்விடத்தை உருவாக்குகிறது.


சதுப்பு நிலங்கள் என்றால் என்ன?


1. ராம்சார் ஈரநிலங்கள் ஒப்பந்தம் (Ramsar Convention on Wetlands) ஈரநிலங்களை பின்வருமாறு வரையறுக்கிறது: சதுப்பு நிலங்கள் (marsh), சேற்று நிலங்கள், கரிமண் நிலங்கள் அல்லது நீர்நிலைகள் ஆகியவை இயற்கையானவையாக இருந்தாலும் செயற்கையானவையாக இருந்தாலும், நிரந்தரமானவையாக இருந்தாலும் தற்காலிகமானவையாக இருந்தாலும், தேங்கியோ ஓடியோ இருக்கும் நன்னீர், உவர்நீர் அல்லது உப்புநீரைக் கொண்ட பகுதிகள், மேலும் குறைந்த நேரத்தில் ஆறு மீட்டருக்கு கீழ் ஆழமுள்ள கடல் நீர் பகுதிகளை கொண்டவையே சதுப்பு நிலங்கள் எனப்படுகின்றன.


2. இருப்பினும், இந்திய அரசின் சதுப்பு நில வரையறையானது ஆற்றுப் பாதைகள், நெல் வயல்கள் மற்றும் வணிக நடவடிக்கைகள் நடைபெறும் பிற பகுதிகளை உள்ளடக்கவில்லை. ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட சதுப்பு நிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள், 2017-ன் படி, சதுப்பு நிலங்களின் வரையறையானது, ஆற்றுப் பாதைகள், நெல் வயல்கள், குடிநீர் தேவைகளுக்காக பிரத்யேகமாக கட்டப்பட்ட மனிதனால் உருவாக்கப்பட்ட நீர்நிலைகள்/குளங்கள் மற்றும் மீன் வளர்ப்பு, உப்பு உற்பத்தி, பொழுதுபோக்கு மற்றும் நீர்ப்பாசன நோக்கங்களுக்காக பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டமைப்புகளை உள்ளடக்கவில்லை.


ராம்சார் உடன்படிக்கை (Ramsar Convention) எவ்வாறு உருவானது?


3. ராம்சார் உடன்படிக்கை 1971-ஆம் ஆண்டு ஈரானின் ராம்சார் நகரில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1975-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இது சதுப்பு நிலங்களை மட்டுமே மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அரசுகளுக்கிடையேயான  முதல் (Intergovernmental) சர்வதேச ஒப்பந்தமாகும்.


உங்களுக்குத் தெரியுமா?


பூமியின் மிக முக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றான சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2-ஆம் தேதி உலக சதுப்பு நில தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள், “ஈரநிலங்களும் பாரம்பரிய அறிவும்: பண்பாட்டுப் பாரம்பரியத்தைக் கொண்டாடுதல்” (Wetlands and traditional knowledge: Celebrating cultural heritage) என்பதாகும்.


4. இந்த உடன்படிக்கையானது, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களைப் பாதுகாத்தல், ஒரு நாட்டின் எல்லைக்குள் உள்ள அனைத்து சதுப்பு நிலங்களையும் விவேகத்துடன் பயன்படுத்துவதை ஊக்குவித்தல் மற்றும் வலசைக்கு செல்லும் உயிரினங்கள் குறித்த சர்வதேச ஒத்துழைப்பு போன்ற மூன்று அடிப்படைக் கொள்கைகளை கொண்டுள்ளது.

5. இந்த மாநாட்டில் 172 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. சதுப்பு நிலக் காப்பகங்களை உருவாக்குவதற்கும், சதுப்பு நில வாழ்விடங்களின் விவேகமான பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கும் அவை கடமைப்பட்டுள்ளன. இந்தியா 1982-ல் இதில் இணைந்தது. இந்தியாவின் முதல் ராம்சார் தளங்களாக, ஒடிசாவில் உள்ள சிலிகா ஏரி மற்றும் ராஜஸ்தானில் உள்ள கியோலாடியோ தேசிய பூங்கா ஆகியவை அறிவிக்கப்பட்டன.


6. இந்தத் தளங்கள் “சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்கள்” என்று அங்கீகரிக்கப்படுகின்றன. அவை அமைந்துள்ள நாடுகளுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் குறிப்பிடத்தக்க மதிப்பு வாய்ந்தவையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஒரு சதுப்புநிலம் ராம்சார் பட்டியலில் சேர்க்கப்படுவது, அதன் சூழலியல் தன்மையைப் பாதுகாப்பதை உறுதிசெய்வதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசின் உறுதிப்பாட்டைப் காட்டுகிறது.


சதுப்பு நிலங்களின் முக்கியத்துவம் என்ன?


7. சதுப்பு நிலங்கள் புவியின் மிகவும் வளமான சூழல் அமைப்புகளில் ஒன்றாகும். அவை நிலச் சூழல்களுக்கும் நீர்ச் சூழல்களுக்கும் இடையிலான இடைநிலைச் சூழல் அமைப்புகளாகும். இங்கு நிரந்தரமாகவோ அல்லது பருவகாலமாகவோ நீர் இருப்பதுடன், பல்வேறு தாவர மற்றும் விலங்கு வாழ்வு ஆதரிக்கப்படுகிறது. அவை பல்லுயிர் வளம் கொண்டவை மற்றும் சூழலியல் சமநிலையைப் பாதுக்காப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன.


பூமியின் நிலப்பரப்பில் சதுப்பு நிலங்கள் 6 சதவீதம் மட்டுமே இருந்தாலும், அவை 40 சதவீத தாவர மற்றும் விலங்குகளுக்கு வாழ்விடத்தையும் இனப்பெருக்கத்திற்கு தேவையான இடங்களையும் வழங்குகின்றன.


மேலும், சதுப்பு நிலங்கள் புயல் அலைகள், சூறாவளிகள் மற்றும் சுனாமிகளின் தாக்கத்தைத் குறைப்பதன் மூலம், கடற்கரையோரங்களில் வாழும் உலக மக்கள்தொகையில் 60 சதவீத்தினருக்கு இயற்கைப் பாதுகாப்பை வழங்குகின்றன.


சதுப்பு நிலங்கள் மனிதர்களுக்கு உணவு மற்றும் கால்நடைக்கு தேவையான   தீவனத்தை, முக்கியமாக அரிசி மற்றும் மீன் போன்றவற்றை வழங்குவதோடு, மீன்வளம், வேளாண்மை மற்றும் சூழல் சுற்றுலா மூலம் வாழ்வாதாரத்தையும் ஆதரவளிக்கின்றன.


அவை இயற்கையான கடற்பஞ்சுகள் போலச் செயல்பட்டு, அதிகப்படியான மழைநீரை உள்வாங்குவாதன்  மூலம் வெள்ள அபாயத்தைக் குறைக்கின்றன.


திறமையான கார்பன் சேமிப்பு இடங்களாக, சதுப்பு நிலங்கள் மண்ணிலும் உயிரிப் பொருளிலும் (biomass) கார்பனைச் சேமிக்கின்றன.


மாசுபடுத்தும் பொருட்களை வடிகட்டி நீக்குதல், நீரை சுத்திகரித்தல் மற்றும் நீரின் தரத்தைப் பாதுகாத்தல் போன்ற திறன்கள் காரணமாக, சதுப்பு நிலங்கள்    “நிலப்பரப்பை சுத்திகரிக்கும் சிறுநீரகங்கள்” (Kidneys of the Landscape) என்று அழைக்கப்படுகின்றன.


சதுப்பு நிலங்களுக்கு என்னென்ன அச்சுறுத்தல்கள் உள்ளன?


8. அவற்றின் முக்கியத்துவம் இருந்தபோதிலும், சதுப்பு நிலங்கள் பூமியின் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளான சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாகவும் இருக்கின்றன. 2025-ஆம் ஆண்டின் ராம்சார் மாநாட்டின் உலகளாவிய சதுப்பு நிலக் கண்ணோட்டத்தின்ப்படி, 1970-ஆம் ஆண்டு முதல் குறைந்தது 400 மில்லியன் ஹெக்டேர் சதுப்பு நிலங்கள் அழிந்துள்ளன. அவற்றில் கால் பகுதி மோசமான நிலையில் உள்ளது.


9. 2025-ஆம் ஆண்டின், உலகளாவிய சதுப்புநிலக் கண்ணோட்ட அறிக்கையின்படி, “சதுப்பு நிலங்கள் ஒவ்வொரு ஆண்டும் சமூகத்திற்கு $39 டிரில்லியன்  வரையிலான நன்மைகளை வழங்குகின்றன. ஆனால், நாம் அவற்றை ஆண்டுக்கு 0.52% என்ற விகிதத்தில் தொடர்ந்து இழந்து வருகிறோம்.


சதுப்பு நில இழப்பு என்பது, சதுப்பு நிலத்தின் சூழலியல் தன்மையை கணிசமாக மாற்றும் மனிதச் செயல்பாடுகளால், சதுப்பு நில உயிரினங்கள்  மற்றும் துணை உயிரினங்கள் தங்குவதற்கும், உணவருந்துவதற்கும், ஓய்வெடுப்பதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும் போதுமான தரத்துடன் நீர் கிடைக்கும் இடத்தின் அளவு குறைவதாகும். இயற்கை சதுப்பு நிலங்களை வேளாண்மை, மீன் வளர்ப்பு, வனவியல், நகரமயமாக்கல், தொழில்மயமாக்கல் மற்றும் அதிகரித்து வரும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் போன்ற பிற நிலப் பயன்பாடுகளுக்காக மாற்றுவதால் சதுப்பு நில இழப்பு ஏற்படுகிறது.


2025-ஆம் ஆண்டின், உலகளாவிய சதுப்புநிலக் கண்ணோட்ட அறிக்கை


10. வேளாண்மைக்காக நிலங்களை மாற்றுதல், நகரமயமாக்கல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை சதுப்புநிலப் பகுதிகள் குறைவதற்கான முக்கியக் காரணிகளாகும். மேலும், தொழிற்சாலை மற்றும் வீட்டுக் கழிவுகள் நீர்நிலைகளை மாசுபடுத்துகின்றன, மற்றும் நிலையற்ற வேளாண் முறைகள் நீரியல் அமைப்பைச் சீர்குலைக்கின்றன. பருவநிலை மாற்றம், மழைப்பொழிவு முறைகளை மாற்றுவதன் மூலமும் தீவிர நிகழ்வுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலமும் இந்தச் சவால்கள் மேலும் அதிகரிக்கிறது.


அலையாத்தி சதுப்புநிலங்கள்


1. அலையாத்தி சதுப்புநிலங்கள் என்பவை வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படும் கடலோர சதுப்புநிலங்கள் ஆகும். 2025-ஆம் ஆண்டின், உலகளாவிய சதுப்புநிலக் கண்ணோட்ட அறிக்கை, அலையாத்தி சதுப்புநிலங்களை உள்ளடக்கிய 11 பரந்த சதுப்புநில வகைகளை மதிப்பீடு செய்துள்ளது. உலகளாவிய அலையாத்தி சதுப்புநில கண்காணிப்பின்படி, 15.11 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு அலையாத்தி சதுப்புநிலங்ளின்கீழ் உள்ளது.


2. அலையாத்தி சதுப்புநிலங்கள் உப்புத்தன்மையைத் தாங்கக்கூடிய மரங்கள் மற்றும் புதர்களாகும். இவை பொதுவாக ஆற்றுமுகப் பகுதிகள் (Estuaries) மற்றும் அலைக்கற்றைப் பகுதிகளில் (Intertidal Regions) காணப்படுகின்றன. நன்னீரும் உப்புநீரும் சந்திக்கும் பகுதிகளில் இவை வளர்கின்றன. அலையாத்தி சதுப்புநிலங்கள் பொதுவாக காற்றில் மிதக்கும், சுவாசிக்கக்கூடிய வேர்களையும், மெழுகு போன்ற, சதைப்பற்றுள்ள இலைகளையும் கொண்டிருக்கும். மேலும், இவை பூக்கும் தாவரங்களாகும். 26°C முதல் 35°C வரையிலான வெப்பநிலை நிலவும், அதிக மழைப்பொழிவு உள்ள (1,000–3,000 மி.மீ) பகுதிகளில் இவை அதிகமாக வளர்கின்றன.


உங்களுக்குத் தெரியுமா?


ஜூலை 26-ஆம் தேதி 'அலையாத்தி சதுப்புநிலங்கள் சூழல் மண்டலப் பாதுகாப்பிற்கான சர்வதேச நாள்' ஆகக் கொண்டாடப்படுகிறது. 2015-ல் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனத்தின் (United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)) பொது மாநாட்டின் 38-வது கூட்டத்தொடரில் இந்நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


3. அலையாத்தி சதுப்புநிலத் தாவரங்களின் தனித்துவமான பண்பு, அவற்றின் விதைகள் முளைக்கும் விதமாகும். விதைகள் மரத்திலேயே முளைத்து, பின்னர் மரத்திலிருந்து தண்ணீரில் விழுகின்றன; சேறு மற்றும் வண்டல் மண்ணில் படியும்போது மட்டுமே அவை வேரூன்றி வளர்கின்றன. இது அலையாத்தி சதுப்புநிலத் தாவரங்களில் உள்ள ஒரு தனித்துவமான தகவமைப்பு ஆகும்.இது கடுமையான உப்புத்தன்மை கொண்ட சூழல்களிலும் அவை நிலைத்து வளர உதவுகிறது. இந்த நிகழ்வு அறிவியல் ரீதியாக 'கனியிலேயே விதை முளைத்தல்' (vivipary) என்று அழைக்கப்படுகிறது.



4. 2023-ஆம் ஆண்டில், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் ‘கடற்கரை வாழ்விடங்கள் மற்றும் உறுதியான வருமானங்களுக்கான அலையாத்தி சதுப்புநில முன்முயற்சி (Mangrove Initiative for Shoreline Habitats & Tangible Incomes (MISHTI))’-ஐத் தொடங்கியது. இது, ஒரு உயிர் கவசமாகச் செயல்படுவதோடு மட்டுமல்லாமல், மிக அதிக உயிரியல் உற்பத்தித்திறன் மற்றும் கார்பன் பிரித்தெடுப்புத் திறனைக் கொண்ட ஒரு தனித்துவமான, இயற்கைச் சூழல் அமைப்பாக சதுப்புநிலங்களை மேம்படுத்துவதையும் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


5. குஜராத் முதல் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் வரை, மீண்டும் வளர்ச்சியடையும் வாய்ப்பை கொண்ட கடற்கரைகள், சூழலியல் மறுசீரமைப்பு, சிறந்த வாழ்வாதார வாய்ப்புகள், பல்லுயிர் பாதுகாப்பு, நீலப் பொருளாதார வளர்ச்சி மற்றும் பருவநிலை நடவடிக்கை ஆகிய பொதுவான தொலைநோக்குப் பார்வையின்கீழ், MISHTI அமைப்பானது 13 கடலோர மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் ஒன்றிணைக்கிறது.


Original article : India adds its 100th Ramsar site — Why are wetlands important? -Khushboo Kumari

Share:

பிளாசி போர் முதல் அவசரநிலை அறிவிப்பு வரை: ஜூன் மாதத்தின் 5 முக்கிய இந்திய வரலாற்று நிகழ்வுகள். -குஷ்பூ குமாரி

 தற்போதைய செய்தி :


கடந்த காலத்தைச் சேர்ந்த முக்கிய ஆளுமைகள், போர்கள் மற்றும் நிகழ்வுகளின் வரலாற்று நினைவுகள், ஒரு தேசத்தின் பயணத்தை வடிவமைப்பதில் அவற்றின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன. சந்தால் கலகம் மற்றும் பிளாசி போர் முதல் சத்ரபதி சிவாஜி மகாராஜின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிசூட்டு விழா, மவுண்ட்பேட்டன் திட்டம் மற்றும் அவசரநிலை பிரகடனம் வரை ஜூன் மாதம் பல வரலாற்று நிகழ்வுகள் அதற்கு முக்கிய சாட்சியாக அமைந்துள்ளன.  


ஜூன் 6, 1674 — மராத்தா வரலாறு


ராய்கட் கோட்டையில் முடிசூட்டு (Coronation) விழா


சத்ரபதி சிவாஜி மகாராஜ், ராய்கட் கோட்டையில் மராத்தியப் பேரரசின் முதல் அரசராக அரியணை ஏற்றார். அவருக்கு அதிகாரப்பூர்வ வழங்கப்பட்ட பட்டம் "ஸ்ரீ ராஜா சிவ சத்ரபதி" (Shri Raja Shiva) என்பதாகும். அவர் தனக்கென ஒரு ஆட்சிக்காலத்தைத் தொடங்கினார். இது 'முடிசூட்டு (Coronation) விழா' (Rājyābhiṣheka shaka) என்று அழைக்கப்பட்டது. முகலாய மற்றும் சுல்தான் ஆட்சிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட, மராத்தியர்களுக்கான ஒரு தனித்துவமான இறையாண்மை அடையாளத்தை அவர் உருவாக்கினார்.


1630-சத்ரபதி சிவாஜி பிறந்தார்.


1680-ஆம் ஆண்டு சத்ரபதி சிவாஜி இறந்தபோது, அவரது கட்டுப்பாட்டில் 300-க்கும் மேற்பட்ட கோட்டைகள் இருந்தன.


2025-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு (United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)) நிறுவனத்தால் உலக பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்டது.


சிவாஜி மகாராஜா பங்கேற்ற முக்கியப் போர்கள்


1659-ஆம் ஆண்டு பிரதாப்கர் போர்:


-மராத்தியர்கள் மற்றும் அடில்ஷாஹி படைகளுக்கு இடையிலான போரில், மராத்தியர்களின் முதல் முக்கியமான வெற்றி இதுவாகும்.


1664-ஆம் ஆண்டு சூரத் போர்:


- 1664-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், சத்ரபதி சிவாஜி மகாராஜின் படைகள் முகலாயர்களின் முக்கியத் துறைமுகமான சூரத் நகரின் மீது தாக்குதல் நடத்தின.


1665-ஆம் ஆண்டு புரந்தர் போர்:


- மராட்டியர்களுக்கும் முகலாயப் பேரரசுக்கும் இடையிலான போர் புரந்தர் உடன்படிக்கைக்கு வழிவகுத்தது.


1679-ஆம் ஆண்டு சங்கமநேர் போர்:


இது சிவாஜி கலந்து கொண்ட கடைசி போர் ஆகும். இந்தப் போர் முகலாய  மற்றும் மராத்தா பேரரசுக்கு இடையே நடைபெற்றது.


முக்கிய அம்சங்கள்:





நிகழ்வுகள் 


தேதி

சிவாஜி மகாராஜாவின் முடிசூட்டு விழா          

   

ஜூன் 6, 1674

பிளாஸ்ஸி போர்   

ஜூன் 23, 1757

சந்தால் கிளர்ச்சி  

ஜூன் 30, 1855

மவுண்ட்பேட்டன் திட்டம்   

ஜூன் 3, 1947

அவசரநிலை அறிவிப்பு  

ஜூன் 25, 1975



 1. 1674-ஆம் ஆண்டு  சத்ரபதி சிவாஜி மகாராஜின் முடிசூட்டு விழா 


ஜூன் 6, 1674, மராட்டிய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இதே தேதியில், ராய்கட் கோட்டையில் சிவாஜி மகாராஜாவுக்கு முடிசூட்டப்பட்டது. அவர் மராட்டியப் பேரரசின் முதல் அரசரானார். முடிசூட்டு விழாவிற்குப் பிறகு அவரது அதிகாரப்பூர்வப் பட்டம் 'ஸ்ரீ ராஜா சிவ சத்ரபதி' என்பதாகும். மேலும், சில முற்கால மன்னர்களின் மரபைப் பின்பற்றி, அவர் தனது முடிசூட்டு விழாவை அடிப்படையாகக் கொண்டு “ராஜ்யாபிஷேக காலம்” என்ற புதிய ஆண்டுக் கணக்கை அறிமுகப்படுத்தினார்.


சத்ரபதி சிவாஜி 1630 முதல் 1680-ஆம் ஆண்டு வரை 17-ஆம் நூற்றாண்டில் பல்வேறு தக்காண அரசுகளை ஒன்றிணைத்து ஒரு சுதந்திரமான மராத்திய அரசை உருவாக்கினார். அவர், தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு தக்காண சுல்தான்களுக்குப் பணியாற்றிய ஒரு தளபதியின் மகனாகப் பிறந்தார்.


1650-களில் அவுரங்கசீப்பின் தக்காணப் படையெடுப்புகளின்போதுதான் முகலாயர்களுடனான அவரது முதல் நேரடி மோதல் நிகழ்ந்தது. முகலாய அரியணைக்காகப் போரிட அவுரங்கசீப் வடக்கு நோக்கிச் சென்றபோது, ​​சிவாஜியால் பல பகுதிகளைக் கைப்பற்ற முடிந்தது. அவர் இறந்த சமயத்தில், சூரத் முதல் கோவாவிற்கு அருகிலுள்ள பகுதி வரை கொங்கணக் கடற்கரையோரமாக விரிந்து, முக்கியத்துவம் வாய்ந்த மேற்குத் தொடர்ச்சி மலைகளின் கண்காணிப்பின் கீழ் அமைந்திருந்த ஒரு நிலப்பரப்பில், அவர் 300 கோட்டைகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.


மராட்டியர்களின் மலைக்கோட்டைகள் இராணுவ வியூகத்திற்கு இன்றியமையாதவையாக இருந்தன. 2025-ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகப் பாரம்பரியக் குழுவின் (World Heritage Committee (WHC)) 47-வது அமர்வில், 'மராட்டியப் போர் நிலப்பரப்புகள்' (Maratha Military Landscapes) யுனெஸ்கோ உலகப் பாரம்பரியப் பட்டியலில் இடம்பெற்றன.

போர்கள்

விளக்கம்

பிரதாப்கர் போர் (1659)

மராத்தியர்களுக்கும் ஆதில்ஷாஹி படைகளுக்கும் இடையே நடைபெற்ற போர்.

கோலாப்பூர் போர் (1659)

மராட்டிய மன்னர் சிவாஜிக்கும் ஆதில்ஷாஹி படைகளுக்கும் இடையே நடைபெற்ற போர்.

சூரத் போர் (1664) 

மராட்டிய ஆட்சியாளர் சத்ரபதி சிவாஜி மகாராஜுக்கும், முகலாய கேப்டனான இனாயத் கானுக்கும் இடையே போர் நடந்தது.

புரந்தர் போர் (1665)

மராட்டியர்களுக்கும் முகலாயப் பேரரசுக்கும் இடையே நடந்த போர்.

சால்ஹெர் போர் (1672)

மராத்தா பேரரசுக்கும் முகலாயப் பேரரசுக்கும் இடையே நடந்த போர்.

சங்கமனேர் போர் (1679)

முகலாயப் பேரரசுக்கும் மராத்தாப் பேரரசுக்கும் இடையே நடைபெற்ற போர். இது சிவாஜி போரிட்ட கடைசிப் போராகும்.





2. 1757-ஆம் ஆண்டு பிளாசிப் போர்: இந்தியாவில் பிரிட்டிஷ் அரசியல் அதிகாரத்தின் தொடக்கம்


1757-ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி, வங்கத்தில் ஹூக்ளி நதிக்கரையில் ஆங்கிலேயர்களுக்கும் வங்காள நவாப் சிராஜ்-உத்-தௌலாவுக்கும் இடையே நடந்த போர், நவீன இந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்தியத் துணைக்கண்டத்தின் மீது ஆங்கிலேயர்கள் ஆதிக்கம் செலுத்திய தருணமாக பிளாசிப் போர், வரலாற்றுப் நிகழ்வுகள் மற்றும் பண்பாட்டு, இலக்கியப் பிரதிநிதித்துவங்கள் மூலம் நினைவுப்படுத்த்ப்படுகிறது.


1717-ஆம் ஆண்டில், கிழக்கிந்திய கம்பெனி முகலாயப் பேரரசரிடமிருந்து அரச அதிகாரம் பெற்றது. அது, வங்கத்தில் தங்கள் பொருட்களை வரிகள் செலுத்தாமல் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதற்கும், பொருட்களின் போக்குவரத்திற்காக அனுமதிச் சீட்டுகள் அல்லது வரிவிலக்கு வணிக அனுமதிச் சீட்டுகளை (dastaks) வழங்குவதற்கும் அவர்களுக்குச் சுதந்திரத்தை அளித்தது. வழங்கப்பட்ட அரச அதிகாரம், கம்பெனிக்கும் வங்காள நவாப்களுக்கும் இடையே ஒரு தொடர்ச்சியான மோதலுக்குக் காரணமாக அமைந்தது. முர்ஷித் குலி கான் முதல் அலிவர்தி கான் வரையிலான வங்காள நவாபுகள், அரச அதிகாரம் தொடர்பாக ஆங்கிலேயர் வழங்கிய விளக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.


1756-ல், சிராஜ்-உத்-தௌலா தனது தாத்தாவான அலிவர்தி கானுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தபோது, ​​முர்ஷித் குலி கானின் காலத்தில் வர்த்தகம் செய்த அதே அடிப்படையில் ஆங்கிலேயர்கள் வர்த்தகம் செய்ய வேண்டும் என்று கூறினார். இருப்பினும், தென்னிந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களை வென்றதால் வலிமை பெற்றிருந்த ஆங்கிலேயர்கள், அந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர்.


கல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டையில் இருந்த தங்கள் கோட்டைகளை இடிக்குமாறு நவாப் இட்ட உத்தரவை கிழக்கிந்திய கம்பெனி ஏற்க மறுத்தபோது, ​​இந்த நெருக்கடி உச்சக்கட்டத்தை அடைந்தது. பிரெஞ்சு கம்பெனி இதேபோன்ற ஒரு உத்தரவுக்கு ஏற்ப, சந்தர்நகூரில் இருந்த தங்கள் கோட்டையை இடித்தது. இந்த உத்தரவை ஏற்காததன் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக, சிராஜ்-உத்-தௌலா கல்கத்தாவை நோக்கிப் படையெடுத்துச் சென்று, 1756 ஜூன் 20-அன்று வில்லியம் கோட்டையைக் கைப்பற்றினார்.

ஒரு வருடத்திற்குள், கெரியாவில் இருந்த மராத்தா கோட்டையைக் கைப்பற்றிய பின்னர் மெட்ராஸிலிருந்து வந்த, இளம் மற்றும் லட்சியம் மிக்க ராபர்ட் கிளைவின் இராணுவ அதிகாரத்தின்கீழ் கம்பெனி பதிலடி கொடுத்தது. அவர் நவாபை ஆங்கிலேயர்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்கும் படி கட்டாயப்படுத்தினார்.



இருப்பினும், ஆங்கிலேயர்கள் திருப்தியடையவில்லை. அவர்கள் உயர்ந்த இலக்குகளைக் கொண்டிருந்தனர். சிராஜ்-உத்-தௌலா ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், தங்களுக்கு முழுமையான சலுகைகள் கிடைக்காது என்பதை அவர்கள் விரைவிவாக உணர்ந்தனர். நவாபை வீழ்த்துவதற்கு உதவுவதாக ஒப்புக்கொண்டு, அதற்குப் பிரதிபலனாக நிதிச் சலுகைகளைப் பெற்றுக்கொண்டு, அந்நிறுவனம் மிர் ஜாஃபருடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.


இது, 1757 ஜூன் 23 அன்று நடைபெற்ற பிளாசிப் போருக்கு வழிவகை செய்தது. இந்தப் போரில், ராபர்ட் கிளைவ் தலைமையில் செயல்பட்ட கம்பெனிப் படைகள், மிர் ஜாஃபர் மற்றும் ராய் துர்லப் ஆகியோரின் ஆதரவைப் பெற்று, சிராஜ்-உத்-தௌலாவின் படைகளைத் தோற்கடித்தன. நவாப் தப்பி ஓடவேண்டிய சூழல் உருவானது. பின்னர், அவர் சிறைபிடிக்கப்பட்டு, மிர் ஜாஃபரின் மகனான மீரனால் கொல்லப்பட்டார்.


பிபின் சந்திராவின் கூற்றுப்படி, பிளாசிப் போர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அது வங்கத்தின் மீதும், இறுதியில் ‘இந்தியாவின் அனைத்துப்  பகுதிகளின்’ மீதும் ஆங்கிலேயர்கள் ஆதிக்கம் செலுத்த வழி வகை செய்தது. அது ஆங்கிலேயரின் செல்வாக்கை உயர்த்தியதுடன், ஒரே அடியில் அவர்களை இந்தியப் பேரரசுக்கான ஒரு முக்கியப் போட்டியாளர் என்ற நிலைக்கு உயர்த்தியது.


3. 1855-ஆம் ஆண்டுசந்தால் கலகம் : காலனித்துவச் சுரண்டலுக்கு எதிரான சந்தால் ஹுல்


1855-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி, வருவாய் அதிகாரிகள், ஜமீன்தார்கள் மற்றும் அதிக ஊழல் நிறைந்த வட்டித்தொழில் செய்பவர்களின் அடக்குமுறைக்கு எதிராகக் கிழக்கிந்திய கம்பெனியைக் கிளர்ச்சி செய்வதற்காக, கன்ஹோ முர்மு, சந்த் முர்மு, பைரப் முர்மு மற்றும் சித்தோ முர்மு ஆகிய தங்களின் தலைவர்களால் 10,000-க்கும் மேற்பட்ட சந்தால்கள் அணி திரட்டப்பட்டனர். சந்தால் ஹுல் என்று குறிப்பிடப்படும் பழங்குடியினர் வரலாற்றின் இந்த நிகழ்வு, இன்றைய ஜார்க்கண்டில் உள்ள போக்நாடிஹ் (Bhognadih) கிராமத்தில் நடைபெற்றது.

சந்தால்கள் யார்?


இன்றைய சாந்தால்கள் பர்கானா பகுதியில் உள்ள தும்கா, பாகூர், கோடா, சாஹிப்கஞ்ச், தேவ்கர் மற்றும் ஜம்தாராவின் சில பகுதிகளின் முதற்குடியினராக   இருக்கவில்லை. அவர்கள் 18-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இருந்து, தற்போதைய மேற்கு வங்கத்தின் பகுதிகளான பீர்பூம் மற்றும் மன்பூம் பகுதிகளிலிருந்து இந்தப்பகுதிக்கு குடிபெயர்ந்தனர்.


பெரும் ஆவி (the great spirit) தங்களைச் சந்தித்து, தங்கள் நிலப்பகுதியிலிருந்து வெளியாட்கள் (dikus) அனைவரையும் வெளியேற்றிவிட்டு, அந்தப்பிராந்தியத்தில் சந்தால் ஆட்சியை நிறுவ வேண்டும் என்று தங்களுக்கு அறிவுறுத்தியதாக கன்ஹோ மற்றும் சிதோ ஆகியோர் கூறினர்.


சந்தால் கிளர்ச்சி அல்லது புரட்சி (‘Hul’) என்பதற்கான விதைகள், 1832-ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனி உருவாக்கியபோது விதைக்கப்பட்டன. டாமின்-இ-கோ பகுதிராஜ்மஹால் மலையில் உள்ள வனப்பகுதியில், வங்க மாகாணத்தின் பகுதிகளான பீர்பூம், முர்ஷிதாபாத், பகல்பூர், பரபூம், மன்பூம், பலாமு மற்றும் சோட்டாநாக்பூர் ஆகிய இடங்களிலிருந்து இடம்பெயர்ந்த சந்தால்களுக்கு இப்பகுதி ஒதுக்கப்பட்டது.


சந்தால்களுக்கு டாமின்-இ-கோவில் குடியேற்றமும் வேளாண்மையும் வாக்குறுதியளிக்கப்பட்ட போதிலும், அதைத் தொடர்ந்து நில அபகரிப்பு மற்றும் இரண்டு வகையான பெகாரி (கொத்தடிமைத் தொழில்) போன்ற அடக்குமுறை  அரங்கேறின: பல ஆண்டுகளாக, ஆங்கிலேயர்களின் உதவியுடன் நடந்த சுரண்டல் நடைமுறைகளால் சந்தால்கள் பாதிக்கப்பட்டனர்.santhal revolt, upsc

 — முர்மு சகோதரர்கள்  60,000 சந்தால்களைத் திரட்டி கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராகப் போராடினர். ஏறக்குறைய ஆறு மாதங்களுக்குத் தொடர்ந்த அவர்கள் நடத்திய கொரில்லாப் போர், இறுதியாக 1856-ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி அன்று முழுமையாக ஒடுக்கப்பட்டது. இந்தப் போரில் 15,000-க்கும் மேற்பட்ட சந்தால்கள் கொல்லப்பட்டனர். 10,000 கிராமங்கள் சூறையாடப்பட்டன.

 1855-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி சித்தோவை ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டனர். அவரைத் தொடர்ந்து, 1856-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கன்ஹுவும் தூக்கிலிடப்பட்டார். இந்தக்கிளர்ச்சி முடிவுக்கு வந்தபோதிலும், அது ஏற்படுத்திய தாக்கம் தற்போது வரை நிலைத்திருக்கிறது. 1876-ஆம் ஆண்டின் 'சந்தால் பர்கானா குத்தகைச் சட்டம்' (Santhal Pargana Tenancy Act (SPT)) மற்றும் 1908-ஆம் ஆண்டின் 'சோட்டாநாக்பூர் குத்தகைச் சட்டம்' (Chhotanagpur Tenancy Act (CNT Act)) ஆகியவை இந்தக் கிளர்ச்சியின் முக்கியக்  காரணமாக உருவாகின.

 4. 1947-ஆம் ஆண்டு மவுண்ட்பேட்டன் திட்டம்: சுதந்திரம் மற்றும் பிரிவினைக்கான பாதை

இந்தியாவின் சுதந்திரப் பாதையானது, அதிக சவால்கள் நிறைந்த பேச்சுவார்த்தைகள், அரசியல் குறுக்கீடுகள் மற்றும் ஆழமடைந்து வந்த இந்து-முஸ்லிம் பிளவு ஆகியவற்றால் நிறைந்திருந்தது. அனைத்திற்குமான தீர்வாக மவுண்ட்பேட்டன் திட்டம் அமைந்தது.


1947-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், வேவலுக்குப் பதிலாக லார்ட் மவுண்ட்பேட்டன் வைஸ்ராய் ஆனார். மவுண்ட்பேட்டன் கடைசிச் சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், பேச்சுவார்த்தையும் முடிவடையாததால், பிரிட்டிஷ் இந்தியா விடுவிக்கப்படும். ஆனால், பிரிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.


பஞ்சாப் மற்றும் வங்கத்தின் சட்டமன்றங்கள், இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் எனத் தனித்தனி குழுக்களாகக் கூடி, மாகாணப் பிரிவினை குறித்து வாக்களிக்க வேண்டும் என்பது மவுண்ட்பேட்டன் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இந்த இரண்டு குழுக்களில் ஏதேனும் ஒன்றில், பிரிவினைக்கு ஆதரவாக எளிய பெரும்பான்மை வாக்குகள் பதிவானால், அந்தந்த மாகாணங்கள் பிரிக்கப்படும். பிரிவினை ஏற்படும் பட்சத்தில், இரண்டு தன்னாட்சிப் பிரதேசங்களும் (Dominions), இரண்டு அரசியல் நிர்ணய சபைகளும் நிறுவப்படும். சிந்து மாகாணம் தனது முடிவைத் தானே எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. மேலும், வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (North-West Frontier Province (NWFP)) மற்றும் வங்காளத்தின் சில்ஹெட் மாவட்டம் ஆகியவற்றின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க, அங்கு பொதுவாக்கெடுப்புகள் நடத்தப்பட இருந்தன.


மவுண்ட்பேட்டன் திட்டம் (மவுண்ட்பேட்டன் திட்டம்), முஸ்லிம் லீக் முன்வைத்த பாகிஸ்தான் தனிநாடு கோரிக்கையை அடிப்படையில் ஏற்றுக்கொண்டதுடன், இந்தியாவின் ஒற்றுமையை முடிந்தவரை பாதுகாக்க முயன்றது. 1947-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி, மவுண்ட்பேட்டன் திட்டத்தின் அடிப்படையில், பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இந்தியச் சுதந்திரத்திற்க்கான சட்டத்தை நிறைவேற்றியது. இந்தச் சட்டத்திற்கு 1947-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி அரச ஒப்புதல் கிடைத்தது. இந்தச்சட்டம் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது.


5 அவசரநிலை பிரகடனம் (1975): இந்திய ஜனநாயகத்தின் ஒரு திருப்புமுனை


 1975 ஜூன் 25 அன்று, பிரதமரின் ஆலோசனையின் பேரில், ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி அகமது, அரசியலமைப்பின் 352(1) பிரிவின் கீழ் அவசரநிலைப் பிரகடனத்தை வெளியிட்டார். இது நவீன இந்திய வரலாற்றில்  முக்கியமான ஒன்றாக அமைந்தது.


‘அவசர நிலை' என்பது ஜூன் 25, 1975 முதல் மார்ச் 21, 1977 வரையிலான காலப்பகுதியைக் குறிக்கிறது. இக்காலகட்டத்தில், பிரதமர் இந்திரா காந்தி அரசியலமைப்பில் உள்ள சிறப்பு விதிகளைப் (special provisions) பயன்படுத்தி, நாட்டின்மீது விரிவான நிர்வாக மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகளை அமல்படுத்தினார்.


1974 மற்றும் 1975-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் நிலவிய பல்வேறு அரசியல் மற்றும் சமூகச் சூழ்நிலைகள் தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவதற்கு வழிவகுத்தன. இந்த நிகழ்வுகளில் சில: ஜெயப்பிரகாஷ் நாராயண் இயக்கம், ராஜ் நாராயண் வழக்கு மீதான அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் 1974-ஆம் ஆண்டின் இரயில்வே வேலைநிறுத்தம் ஆகும்.


1977-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நெருக்கடி நிலை நீக்கப்பட்டது. ஜனசங், காங்கிரஸ் (ஒ), சோசலிஸ்டுகள் மற்றும் பாரதிய லோக் தல் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து உருவான ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததுடன், மொரார்ஜி தேசாய் இந்தியாவின் முதல் காங்கிரஸ் அல்லாத பிரதமரானார்.

 ஜூன்டீந்த் (Juneteenth)


இந்தியாவில் ஜூன் மாதம் பல முக்கிய வரலாற்று நிகழ்வுகளுக்காக நினைவுகூரப்பட்டாலும், இந்த மாதம் உலகளாவிய வரலாற்று முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. அத்தகைய ஒரு நிகழ்வுதான் அமெரிக்காவில் கொண்டாடப்படும் ஜூன்டீன்த் ஆகும். இது அடிமைத்தனம் முடிவுக்கு வந்ததை நினைவுப்படுத்துகிறது.


1. “ஜூன்” மற்றும் “பத்தொன்பதாம் (nineteenth)” ஆகிய சொற்களின் இணைப்பால் உருவான ஜூன்டீன்த், அமெரிக்காவில் அடிமைத்தனம் முடிவுக்கு வந்ததை நினைவுபடுத்தும் மிகப் பழமையான தேசிய நிகழ்வாகும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 19 அன்று அனுசரிக்கப்படும் இது, அமெரிக்க வரலாற்றில் ஒரு திருப்புமுனையான தருணத்தைக் குறிக்கிறது.


2. ஜனவரி 1, 1863 அன்று, ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன், கிளர்ச்சி செய்த மாநிலங்களுக்குள் இருந்த அனைத்து அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கும் சுதந்திரம் அளிக்கும் விடுதலைப் பிரகடனத்தை வெளியிட்டார். இருப்பினும், இந்தப் பிரகடனம் உடனடியாக அனைத்து அடிமைப்படுத்தப்பட்டவர்களையும் விடுவிக்கவில்லை. ஏனெனில், கூட்டமைப்புப் பிரதேசங்களான டெக்சாஸ், ஆர்கன்சாஸ், லூசியானா, டென்னசி, மிசிசிப்பி, அலபாமா, ஜார்ஜியா, புளோரிடா, தென் கரோலினா, வட கரோலினா மற்றும் வர்ஜீனியா ஆகிய இடங்களில் இருந்த பல உரிமையாளர்கள் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர்.


3. 1865-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி, மாகாணங்களில் அடிமைப்படுத்தப்பட்டிருந்த கடைசி ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் விடுவிக்கப்பட்டனர். மேஜர் ஜெனரல் கார்டன் கிரேஞ்சர் டெக்சாஸின் கால்வெஸ்டனுக்கு வந்து, டெக்சாஸில் அடிமைத்தனம் முடிவுக்கு வந்ததாக அறிவித்து, அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் அனைவரும் சுதந்திரம் அடைந்துவிட்டதாகப் பிரகடனப்படுத்தும் பொது ஆணை எண் 3-ஐப் பிறப்பித்தார். அடிமை விடுதலைப் பிரகடனத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வந்த இந்தத் தேதி, ஜூன்டீன்த் என்று அறியப்பட்டது.


original article:  From Plassey to Emergency: 5 key june events in Indian history. -Khushboo Kumari

Share:

சோழப் பேரரசின் மாமன்னர்களைப் பற்றி... - ரோஷ்னி யாதவ்

முக்கிய அம்சங்கள்:


— 30 கிலோ எடை கொண்ட சோழர் காலத்துச் செப்புப்பட்டயங்கள் (Chola Plates) மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவது, அவை இந்தியாவிற்குச் சொந்தமானவை என்பதற்கான வலுவான ஆதாரங்களை இந்தியா வழங்கியதாலும், காலனித்துவ காலத்தில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களைத் திருப்பித் தருவதற்கான நெதர்லாந்து (டச்சு) அரசாங்கத்தின் கொள்கையினாலும் சாத்தியமாகியுள்ளது. கடந்த 1862-ஆம் ஆண்டு முதல் லைடன் பல்கலைக்கழகத்தில் (Leiden University) வைக்கப்பட்டிருந்த இந்த செப்புப்பட்டயங்கள், நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களால் முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவை இன்னும் சில வாரங்களில் இந்தியாவை வந்தடையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


— இந்தியப் பண்பாட்டு அமைச்சகத்தின் 2023-ஆம் ஆண்டின் கோரிக்கையை ஏற்று, நெதர்லாந்தின் தேசியக் காலனித்துவ சேகரிப்புக் குழுவின் (Colonial Collections Committee) ஆலோசனையின் பேரில் இந்த மீட்பு நடவடிக்கை ஒப்புக்கொள்ளப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்தச் சோழர் காலத்துச் செப்புப்பட்டயங்கள் இந்தியாவிற்குச் சொந்தமானவை என்றும், நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு புத்த வழிபாட்டுத் தலம் மற்றும் பல மடாலயங்களுக்குக் கிராம வருவாயை வழங்குவது தொடர்பான உரிமைகள் குறித்த முக்கியப் பதிவுகள் இதில் அடங்கியுள்ளன என்றும் அக்குழு தெரிவித்துள்ளது.




— இது அனைத்து இந்தியர்களுக்கும் பெருமையான மற்றும் மகிழ்ச்சியான தருணம் என்று ‘X’ தளத்தின் சமூக ஊடகப் பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதில் அவர், "...சோழர் காலச் செப்புப்பட்டயங்களில் (Chola Copper Plates) 21 பெரிய பட்டயங்களும், 3 சிறிய பட்டயங்களும் அடங்கும். இவை பெரும்பாலும் உலகின் மிக அழகான மொழிகளில் ஒன்றான தமிழில் எழுதப்பட்டுள்ளன. மாமன்னர் முதலாம் ராஜராஜ சோழன் முன்பு அளித்த வாக்குறுதியை, அவரது மகனான முதலாம் ராஜேந்திர சோழன் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்துவதை இவை விவரிக்கின்றன. மேலும், சோழப் பேரரசின் பெருமையையும் இவை பிரதிபலிக்கின்றன. சோழர்கள், அவர்களின் பண்பாடு மற்றும் கடல்சார் வலிமை குறித்து இந்தியா மிகுந்த பெருமிதம் கொள்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார். இதற்காக அவர் நெதர்லாந்து அரசுக்கும், லைடன் பல்கலைக்கழகத்திற்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.


— கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் முதலாம் இராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த, ஒரு வெண்கல வளையத்தால் ஒன்றாக இணைக்கப்பட்ட 21 செப்புப்பட்டயங்கள் இந்த வரலாற்றுப் பொருளில் (இதன் தோற்றம்: கி.பி. 1687) அடங்கியுள்ளன. அந்த வெண்கல வளையத்தில் இராஜேந்திர சோழரின் அதிகாரப்பூர்வ முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது. இந்த 21 பட்டயங்களில், ஐந்து பட்டயங்கள் சமஸ்கிருத மொழியிலும், மீதமுள்ள பட்டயங்கள் தமிழ் மொழியிலும் கல்வெட்டு எழுத்துக்களாகப் பொறிக்கப்பட்டுள்ளன.


— மற்றொரு வரலாற்றுப் பொருள் (கி.பி. 1688-ஐச் சேர்ந்தது) மூன்று செப்புப்பட்டயங்களைக் (Copper plates) கொண்டுள்ளது. இதில் தமிழ் கல்வெட்டுகள் (Tamil inscriptions) செதுக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று பட்டயங்களும் முதலாம் குலோத்துங்க சோழ மன்னரின் முத்திரையைக் கொண்ட ஒரு வெண்கல வளையத்தால் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.

— லைடன் பல்கலைக்கழகத்தின் அறிக்கையின்படி, இந்த செப்புப்பட்டயங்களின் தொல்லியல் பின்னணி குறித்த ஆய்வு, இவை 1687 மற்றும் 1700-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கண்டெடுக்கப்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. டச்சு கிழக்கிந்திய நிறுவனத்தால் (Vereenigde Oostindische Compagnie) நாகப்பட்டினத்தில் ‘Fort Vijf Sinnen’ கோட்டை கட்டப்பட்டபோதும் மற்றும் அங்கிருந்த 'சீனப் பாகோடா' (Chinese Pagoda) தளம் மறுசீரமைப்பு செய்யப்பட்டபோதும் இவை கண்டறியப்பட்டிருக்க அதிக வாய்ப்புள்ளது. அந்த காலகட்டத்தில், நாகப்பட்டினம் டச்சு கிழக்கிந்திய நிறுவனத்தின் (VOC) கட்டுப்பாட்டின்கீழ் இருந்தது.


உங்களுக்குத் தெரியுமா?


— சென்னை சுங்கத்துறை அளித்துள்ள தகவலின்படி, ஆனைமங்கலம் செப்பேடுகளில் 21 பெரிய தகடுகளும், மூன்று சிறிய தகடுகளும் உள்ளன. தமிழ்நாட்டின் சோழர்காலத் துறைமுக நகரமான நாகப்பட்டினத்தில் இருந்த ஒரு புத்த விகாரத்திற்கு (Buddhist monastery), புகழ்பெற்ற சோழப் பேரரசர் முதலாம் ராஜராஜன் வழங்கிய நிலக்கொடைகளைக் குறிக்கும் வகையில் இவை வெளியிடப்பட்டன. இந்த விகாரமானது, தென்கிழக்கு ஆசியாவின் சைலேந்திர வம்சத்து மன்னரான சூளாமணிவர்மனால் (Chulamanivarman) கட்டப்பட்டது.

— சோழப் பேரரசு தற்போதைய தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகாவின் சில பகுதிகள் வரை பரவியிருந்தது.


— கி.பி 947-ஆம் ஆண்டில் இரண்டாம் பராந்தக சோழ மன்னருக்கு மகனாகப் பிறந்த முதலாம் ராஜராஜன், சோழ வம்சத்தின் மிகச் சக்திவாய்ந்த பேரரசராகக் கருதப்படுகிறார். செப்பேட்டு கல்வெட்டுகளின்படி, இவருக்குப் பிறப்பின்போது வைக்கப்பட்ட பெயர் 'அருள்மொழிவர்மன்' என்பதாகும். கி.பி 985-ஆம் ஆண்டில் அரியணை ஏறிய பிறகு, அவர் "அரசர்களுக்கெல்லாம் அரசன்" என்ற பொருள்படும் 'ராஜராஜன்' என்ற பட்டப் பெயரைப் சூடிக்கொண்டார்.


— கடந்த ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ராஜேந்திர சோழனின் வடஇந்திய வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஒரு நினைவு நாணயத்தை வெளியிட்டு, அது தொடர்பான ஒரு கண்காட்சியையும் தொடங்கி வைத்தார். சோழ வம்சத்தின் புகழ்பெற்ற கடற்படைத் தலைவரான முதலாம் ராஜேந்திரன், தனது தந்தை முதலாம் ராஜராஜனிடமிருந்து ஒரு வலிமையான ராஜ்யத்தை மரபாகப் பெற்றார். அவரது ஆட்சியின்போதும் சோழப் பேரரசின் விரிவாக்கம் தொடர்ந்து நீடித்தது.


— கி.பி. 11 மற்றும் 12-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்ட தஞ்சை பிரகதீஸ்வரர், கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் தாராசுரம் ஐராவதேஸ்வரர் ஆகிய மூன்று அரசக் கோயில்களும் சோழர்களின் கலைச்சிறப்பிற்கு மிகச்சிறந்த சான்றுகளாகத் திகழ்கின்றன. ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)) இந்த மூன்று கோயில்களையும் 1987-ஆம் ஆண்டில் "அழிவில்லா மாபெரும் சோழர் காலக் கோயில்கள்" (Great Living Chola Temples) என்ற பெயரில் உலக பாரம்பரிய தளமாக அறிவித்தது.


Original Link: about the Emperors of the Chola Kingdom. 


Share: