இணைப்புத் திறன், பாதுகாப்பு மற்றும் சீனா ஆகிய மூன்று காரணிகளே மியான்மருடனான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை தீர்மானிக்கின்றன.
மியான்மர் நாட்டின் அதிபர் உ மின் ஆங் ஹ்லைங், மே மாதம் 30-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு பீகாரில் உள்ள புத்த கயாவிற்கு (Bodh Gaya) வந்திறங்கியபோது, அதன் குறியீட்டு செய்தி மிகத் தெளிவாக இருந்தது. அவர் புது டெல்லிக்குச் சென்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகியோரைச் சந்தித்துப் பேசுவதற்கு முன்பாக, ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பின் (United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)) உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றானதும், பௌத்த மதத்தின் மிக முக்கியமான புனிதத் தலங்களில் ஒன்றானதுமான மகாபோதி கோயிலுக்குச் சென்றார். இந்த வருகை முக்கியாமான செய்தியை வெளிப்படுத்தியது. இந்தியா, மியான்மர் தலைவரை வெறும் ராஜதந்திரரீதியாக மட்டும் வரவேற்கவில்லை. மாறாக, இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பொதுவான நாகரிக மற்றும் கலாச்சார பிணைப்புகள் மூலமாகவும் அவரை வரவேற்றது.
மின் ஆங் ஹ்லைங் அதிபராக இந்தியாவிற்கு மேற்கொண்ட முக்கியமான ராஜதந்திரரீதியான பயணமாகும் (மே 30 முதல் ஜூன் 3, 2026 வரை). தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் மாறிவரும் புவிசார் அரசியல் சூழலில், இந்தியா-மியான்மர் இடையிலான உறவு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவருகிறது என்பதை இந்த வருகை பிரதிபலித்தது. இந்திய அரசுக்கு, இந்த வருகை நிகழ்ந்த காலகட்டமும் அதன் தன்மையும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.
இப்போது ஏன்?
பிப்ரவரி மாதம் 2021-ஆம் ஆண்டில் ஆங் சான் சூகி தலைமையிலான தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை அகற்றிவிட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து, உலகின் பெரும்பாலான ஜனநாயக நாடுகள் மியான்மரின் தலைநகரான நெய்பிடாவ் (Naypyidaw) உடனான தங்களது உறவை துண்டித்துக் கொண்டுள்ளன. மேற்கத்திய நாடுகள் மியான்மர்மீது பொருளாதாரத் தடைகளை விதித்து, அந்த ராணுவ ஆட்சியைத் தனிமைப்படுத்த முயன்றன. இருப்பினும், இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவின் கொள்கையானது, மியான்மரின் உள்நாட்டு அரசியல் ஏற்பாடுகள் குறித்த ஒரு விமர்சனமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், தொடர்ந்து இணக்கமாகச் செயல்படுவதுதான் சிறந்த அணுகுமுறை என்று இந்தியா நம்புவதாகவும் கூறினார்.
இது இந்தியாவின் ஒரு நடைமுறைச் சாத்தியமான உத்தி சார்ந்த அணுகுமுறையைக் காட்டுகிறது. மியான்மர் என்பது தென்கிழக்கு ஆசியாவிற்கான இந்தியாவின் நுழைவாயிலாகும். மேலும், இது இந்தியாவின் 'Act East Policy' மற்றும் 'Neighbourhood First Policy' ஆகிய கொள்கைகளின் மிக முக்கியமான பகுதியாகும். இந்தியாவின் நான்கு வடகிழக்கு மாநிலங்களுடன் மியான்மர் 1,643 கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்து கொள்வதால், அங்கு நிலவும் அரசியல் நிலையற்றதன்மை அந்த பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்பு நலன்களை நேரடியாகப் பாதிக்கிறது.
இதற்கு மற்றொரு முக்கியக் காரணி சீனா ஆகும். மியான்மரில் ராணுவப் புரட்சி ஏற்பட்டதில் இருந்து, மேற்கத்திய நாடுகள் அந்நாட்டைப் புறக்கணித்ததால் ஏற்பட்ட இடைவெளியைச் சீனா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. உள்கட்டமைப்பு நிதி, ஆயுதங்கள் மற்றும் ராஜதந்திர ஆதரவை வழங்குவதன் மூலம் சீன அரசாங்கம் மியான்மரின் ராணுவ அரசுடன் தனது உறவை வலுப்படுத்தியுள்ளது. ஒருவேளை இந்தியா, மியான்மரை முழுமையாகச் சீனாவின் ஆதிக்கத்திற்குள் விட்டுவிட்டால், அது இந்தப் பகுதிகளில் இந்தியாவின் பாதுகாப்பை பலவீனப்படுத்திவிடும் என்றும் கூறப்படுகிறது.
உள்கட்டமைப்புக்கான முதலீட்டு அபாயங்கள் மற்றும் சவால்கள்
மியான்மரில் இந்தியாவின் வலுவான உத்திசார் முதலீட்டை, கலாடன் பல்துறைப் போக்குவரத்துத் திட்டம் (Kaladan Multi-Modal Transit Transport Project (KMMTTP)) மற்றும் இந்தியா-மியான்மர்-தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலை (India-Myanmar-Thailand Trilateral Highway (IMT)) ஆகிய இரு முக்கிய இணைப்புத் திட்டங்களைவிட வேறு எந்தவொரு திட்டமும் இவ்வளவு சிறப்பாகக் காட்டிவிட முடியாது. இந்த இரண்டு திட்டங்களும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மியான்மர் ராணுவத் தளபதி மின் ஆங் ஹ்லைங் ஆகியோரின் பேச்சுவார்த்தையில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தன.
கலாடன் திட்டம் கொல்கத்தாவை கடல் வழியாக சித்வே (Sittwe) துறைமுகத்துடன் இணைக்கிறது, அங்கிருந்து கலாடன் நதி வழியாக பலேத்வா (Paletwa) பகுதிக்குச் சென்று, இறுதியாக சாலை வழியாக மிசோரமில் உள்ள ஜோரின்புயுடன் (Zorinpui) இணைகிறது. இதன் கடல் மற்றும் நதி வழிப் பாதைகள் ஏற்கனவே செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. மேலும், மே மாதம் 2023-ஆம் ஆண்டில் முதல் சரக்குக் கப்பல் சித்வே துறைமுகத்தை வந்தடைந்தது. இருப்பினும், மலைப்பாங்கான மற்றும் வெள்ள அபாயம் அதிகம் உள்ள சின் மாநிலம் (Chin State) வழியாகச் செல்லும் மிக முக்கியமான 109 கிலோமீட்டர் நீள பலேத்வா-ஜோரின்புய் சாலை இன்னும் முடிவடையாமல் உள்ளது. இந்தத் திட்டம் 2027-ஆம் ஆண்டிற்குள் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் என்று இந்தியாவின் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் 2025-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த முத்தரப்பு நெடுஞ்சாலை (IMT Trilateral Highway) இன்னும் ஒரு பெரிய இலக்கைக் கொண்டுள்ளது. இது மணிப்பூரில் உள்ள மோரே (Moreh) பகுதியை மியான்மர் வழியாக தாய்லாந்தில் உள்ள மே சோட் (Mae Sot) பகுதியுடன் சுமார் 1,360 கி.மீ தூரத்திற்கு இணைக்கிறது. எதிர்காலத்தில் கம்போடியா, லாவோஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கும் இதை நீட்டிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் முடிவடைந்தால், கடலோரப் பகுதிகள் இல்லாத இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான ஒரு முக்கிய நுழைவாயிலாக மாற்றமுடியும். இந்தத் திட்டம் 2019-ஆம் ஆண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டது, ஆனால் இன்னும் முழுமையடையாமல் உள்ளது.
மியான்மர் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுப் போர்தான் இந்த இரண்டு திட்டங்களும் தாமதமாவதற்கு முக்கியக் காரணமாகும். ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள் இந்த வழித்தடங்களில் உள்ள பெரிய பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால், கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது கடினமாகவும் ஆபத்தானதாகவும் மாறியுள்ளது. இந்தத் திட்டங்களை முடிப்பதற்கு மியான்மர் அரசாங்கம் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று மியான்மர் ராணுவத் தலைவர் மற்றும் அதிபர் மின் ஆங் ஹ்லைங், பிரதமர் நரேந்திர மோடியிடம் உறுதியளித்தார். அதேநேரத்தில் பாதுகாப்பு சவால்கள் இருந்தாலும், இத்திட்டங்கள் தங்களுக்கு மிக முக்கியமான முன்னுரிமையாகவே தொடர்கிறது என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார். மியான்மர்-இந்தியா வர்த்தகம் மற்றும் முதலீட்டு மாநாட்டில் (Myanmar-India Trade and Investment Conclave), ஆங் ஹ்லைங் இத்திட்டங்களை தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு ஆசியான்-இந்தியா பொருளாதார வழித்தடத்தின் (Association of Southeast Asian Nations(ASEAN)-India economic corridor) அத்தியாவசியப் பகுதிகள் என்று விவரித்தார். ஆனால், இப்போதுள்ள முக்கியக் கேள்வி என்னவென்றால், இந்த வாக்குறுதிகள் உண்மையில் களத்தில் வேலைகள் நடக்க வழிவகுக்குமா என்பதுதான். இந்த உச்சிமாநாடு பிற முக்கியமான விஷயங்களையும் உள்ளடக்கியதாக இருந்தது. 2025-26-ஆம் நிதியாண்டில் இருநாடுகளுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் 1.95 பில்லியன் டாலர்களை எட்டியது. இந்த வர்த்தகத்தை ‘Rupee-Kyat settlement mechanism’ எனப்படும் இந்திய ரூபாய் மற்றும் மியான்மர் கியாட் நாணயங்களை நேரடியாகப் பயன்படுத்தி வர்த்தகம் செய்யும் முறை மூலம், மேலும் அதிகரிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. அதோடு, முக்கியமான கனிமங்கள் மற்றும் அரிய வகை மண் தனிமங்கள் ஆகியவற்றில் கூட்டு ஒத்துழைப்பு குறித்தும் விவாதித்தனர்.
பாதுகாப்பு குறித்துப் பேசிய மியான்மர் ராணுவத் தளபதி ஆங் ஹ்லைங், மியான்மரின் நிலப்பரப்பு இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படாது என்ற நாட்டின் உறுதியை மீண்டும் வலியுறுத்தினார். இந்தியாவின் கிளர்ச்சியாளர் குழுக்களும் (Indian insurgent groups), இணையக் குற்ற வலையமைப்புகளும் (Cybercrime networks) நீண்டகாலமாக மியான்மரின் எல்லைப் பகுதிகளில் செயல்பட்டு வருவதால் இந்த உறுதிமொழி மிக முக்கியமானதாகும். இருதரப்பு ஒத்துழைப்பின் மூலம், கடந்த 18-மாதங்களில் இணையவழி மோசடி மையங்களில் சிக்கியிருந்த 2,400-க்கும் மேற்பட்ட இந்தியக் குடிமக்கள் மீட்கப்பட்டுள்ளனர். இருப்பினும், பலர் இன்னும் அங்கு தவித்து வருகின்றனர். கல்வித்துறையைப் பொறுத்தவரை, மியான்மர் மாணவர்களுக்கான மேகாங்-கங்கா இந்திய கலாச்சார உறவுகளுக்கான கூட்டமைப்பு (Indian Council for Cultural Relations (ICCR)) கல்வி உதவித்தொகைகளின் எண்ணிக்கை, 2026-ஆம் ஆண்டு முதல் ஆண்டிற்கு 36-லிருந்து 100-ஆக உயர்த்தப்படும் என்று இந்தியா அறிவித்துள்ளது.
பெரிய அளவிலான கணக்கீடு
மியான்மரின் அதிபராக ஆங் ஹ்லைங் அவர்களை வரவேற்பதன் மூலம், மியான்மரில் மாறிவரும் அரசியல் சூழ்நிலையை இந்தியா ஒரு குறிப்பிட்ட அளவிற்கு ஏற்றுக்கொண்டுள்ளதைக் காட்டுகிறது. இதன் பொருள் ராணுவ ஆதரவு பெற்ற அரசாங்கத்தை இந்தியா முழுமையாக ஆதரிக்கிறது என்பது அல்ல, மாறாக மியான்மருடன் பயனுள்ள முறையில் தொடர்பு ள்ள வேண்டுமென்றால், தற்போது அதிகாரத்தில் இருக்கும் தலைவர்களுடன்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற நிலையைப் பிரதிபலிக்கிறது. மியான்மர் நாட்டைப் பொறுத்தவரையிலும் இந்தப் பயணம் மிக முக்கியமானதாகும். ஆங் ஹ்லைங் கடைசியாக 2019-ஆம் ஆண்டு மியான்மரின் ராணுவத் தளபதியாக இந்தியாவுக்கு வந்திருந்தார். இப்போது அவர் நாட்டின் தலைவராக மீண்டும் வந்திருப்பதும், வெளிநாடுகளில் தனது முதல் முக்கிய இருதரப்புப் பேச்சுவார்த்தைக்கான இடமாக இந்தியாவைத் தேர்ந்தெடுத்திருப்பதும், ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்துகிறது. ராஜதந்திரரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் சீனா மீது மியான்மர் வைத்துள்ள அதிகப்படியான சார்புநிலையைக் குறைக்க, அண்டை நாடான இந்தியாவுடன் உறவை வலுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த முடிவு புவியியல் மற்றும் நாட்டின் பாதுகாப்பு சார்ந்த காரணங்களால் எடுக்கப்பட்டதாகும். அதோடு, ஒரு நாட்டுடனான உறவைத் துண்டித்துக் கொள்வது எப்போதும் நல்ல பலனைத் தராது என்ற புரிதலும் இதற்குப் பின்னணியில் உள்ளது. இதன் மூலம் சொல்ல வரும் செய்தி மிகவும் தெளிவானது. பல சவால்கள் இருந்தபோதிலும், மியான்மர் தொடர்பான பிராந்திய அளவிலான அணுகுமுறைகளில், வரும் ஆண்டுகளில் நடைமுறைரீதியான கூட்டு ஒத்துழைப்பு மிக முக்கியப் பங்கு வகிக்கப் போகிறது.
ஹர்ஷ் வி. பந்த், ‘Observer Research Foundation’ அமைப்பின் துணைத் தலைவர் ஆவார். ஸ்ரீபர்ணா பானர்ஜி, ‘Observer Research Foundation’ அமைப்பின் உத்திசார் ஆய்வுகள் திட்டத்தின் இணை ஆய்வாளர் ஆவார்.
original article : India’s road through Myanmar is one of engagement. -Harsh V. Pant, Sreeparna Banerjee