கருத்தடைப் பயன்பாடு கட்டாயம் அல்லது சமூக அழுத்தத்தால் அல்லாமல், தனிநபர்களின் விருப்பத் தேர்வாக மாறும் வகையில் இந்தியா கொள்கைகளை உருவாக்க வேண்டும். 18 வயதுக்கு முன் எந்தப் பெண்ணுக்கும் திருமணம் நடக்காமல் இருப்பதை உறுதி செய்தல், கிராமப்புற இடைநிலைக் கல்வியில் முதலீடு செய்தல், மற்றும் மீளக்கூடிய அறிவியல் கருத்தடை முறைகளுக்கான அணுகலை அதிகரித்தல் ஆகியவை இதில் அடங்கும்.
குழந்தைகளைப் பெற வேண்டுமா, எப்போது பெற வேண்டும், எத்தனை குழந்தைகள் பெற வேண்டும் மற்றும் எந்த முறையில் குழந்தைகளைப் பெற வேண்டும் என்பதைக் குறித்து தனிநபர்ளே முடிவு செய்யும் அதிகாரத்தைக் குறிக்கிறது. இது பெண்களுக்கு அதிகாரம் (women’s Empowerment) வழங்கும் முக்கியமான படியாகும். இருப்பினும், வருமானம், கல்வி, நடமாடும் சுதந்திரம் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் ஆகிய அளவீடுகள் பகுப்பாய்வு செய்யப்படும்போது இது பெரும்பாலும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.
2023–24-ஆம் ஆண்டுகளுக்கான தேசிய குடும்ப சுகாதார-6-வது ஆய்வு இந்தியாவின் மக்கள்தொகை சார்ந்த மாற்றம், சுகாதாரக் குறியீடுகளில் ஏற்பட்டுள்ள படிப்படியான மாற்றங்களை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இனப்பெருக்கம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகார வரம்பில் ஏற்பட்டுள்ள ஒரு கட்டமைப்புரீதியான மாற்றத்தையும் சுட்டிக்காட்டுகிறது. ஒரு காலத்தில் முக்கியமானதாக இருந்த மக்கள்தொகைக் கட்டுப்பாட்டிற்கான ஒரு கருவியாகவே பார்க்கப்பட்ட கருத்தடை முறையானது, தற்போதுபெண்களின் இனப்பெருக்கத் தன்னாட்சி அமைப்பில் முக்கிய அடையாளமாக உருவெடுத்து வருகிறது.
கருத்தடை பயன்பாட்டின் (contraceptive use) வரலாறு
இந்தியாவின் கருத்தடை தொடர்பான முயற்சி 1952-ஆம் ஆண்டிலேயே தொடங்கியது. அப்போது, அதிகாரப்பூர்வ குடும்பக் கட்டுப்பாட்டு (Family Planning) திட்டத்தை அறிமுகப்படுத்திய உலகின் முதல் நாடாக இந்தியா இருந்தது. இருப்பினும், இந்த திட்டத்தின் பொறுப்பும் சுமையும் பெரும்பாலும் பெண்கள் மீதே விழுகிறது. கருத்தடை மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் பெண்களே அளவுக்கு அதிகமான பொறுப்பை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
15 முதல் 49 வயதுக்குட்பட்ட, தற்போது திருமணமான பெண்களிடம் நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார-6-வது கணக்கெடுப்பிலிருந்து பெறப்பட்ட பின்வரும் தரவுகள், இந்தியாவின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள இனப்பெருக்கம் மற்றும் கருத்தடை நிலவரத்தை, தேசிய குடும்ப சுகாதார-5 கணக்கெடுப்பின் அடிப்படை அளவோடு ஒப்பிட்டுக் காட்டுகின்றன:
குழந்தை திருமணம், கூட்டு கருவுறுதல் வெளிப்பாடு
தேசிய குடும்ப சுகாதார-6-வது தரவுகளில் காணப்படும் ஒரு முக்கிய கண்டுபிடிப்பு, இளம் வயதில் திருமணம் செய்து கொள்வது தொடர்பானதாகும். தேசிய அளவில், 20-24 வயதுடைய பெண்களில் 20.1% பேர் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்துகொண்டனர். கிராமப்புறங்களில் இந்த எண்ணிக்கை 23.3%-ஆக உள்ளது. இது தேசிய குடும்ப சுகாதார-5-வது தரவுகளிலிருந்து மாறாமல் இருக்கிறது. ஆண்களைப் பொறுத்தவரை, 25-29 வயதுடையோரில் 15.9% பேர் 21 வயதுக்கு முன்பே திருமணம் செய்துகொண்டனர். இந்தப் போக்குகள் சட்டரீதியான தோல்விகள் மட்டுமல்ல, அவை சுகாதாரப் பின்னடைவுகள் ஆகும்.
மேல்நிலைக் கல்வியை முடிக்கவோ அல்லது ஊதியம் பெறும் பணியில் சேரவோ வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பே திருமணம் செய்துகொள்ளும் ஒரு பெண், நீட்டிக்கப்பட்ட இனப்பெருக்கக் காலத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. கருத்தடை வசதிகள் குறைவாக இருந்தால், சுகாதார விழிப்புணர்வு போதிய அளவில் இல்லாவிட்டால் அல்லது குடும்பத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்படவிட்டால், ஆரோக்கியமற்ற கர்ப்பங்கள், தாங்கமுடியாத அளவுக்கு அதிகப் பிரசவ வழிகள் மற்றும் தாய்–சேய் நலனுக்கான அதிக அபாயங்கள் ஏற்படுகின்றன. இதனை புள்ளிவிவரங்களும் உறுதிப்படுத்துகின்றன. கணக்கெடுப்பின்போது 15–19 வயதுடைய பெண்களில் 6.7% பேர் ஏற்கனவே தாய்மார்களாக இருந்தனர் அல்லது கர்ப்பமாக இருந்தனர். கிராமப்புறங்களில் இந்த விகிதம் 7.9%-ஆக உயர்ந்துள்ளது.
பொது சுகாதாரக் கண்ணோட்டத்தில், இளம் வயதுத் திருமணம் என்பது ஒரு சமூகப் பிரச்சனை மட்டுமல்ல, அது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் விளைவுகளைக் கொண்ட ஒரு இனப்பெருக்க சுகாதார அவசரநிலையாகும். இளம் வயதில் திருமணம் செய்துகொள்ளும் பெண்கள், தங்களுக்குரிய கருத்தடை முறைகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவும், அவற்றைப் பயன்படுத்துவது குறித்துப் பேசித் தெளிவுபடுத்திக்கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவும் இருப்பதோடு, கர்ப்பங்களுக்கு இடையே அதிக இடைவெளி இல்லாத நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன. இரத்தசோகை, மகப்பேறு சிக்கல்கள் மற்றும் தாய்வழி இறப்பு ஆகியவற்றின் ஒட்டுமொத்த சுமையானது, துல்லியமாக இந்த மக்கள்தொகையினரிடமே அதிகமாக உள்ளது. இருப்பினும், கருவுறுதல் தொடர்பான கொள்கை விவாதங்களில் இளவயது திருமணங்களின் பங்கு பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது. இதன் விளைவாக, அடிப்படைக் காரணமான இனப்பெருக்கத் தன்னாட்சியின் (reproductive agency) கட்டுப்பாட்டை கவனிக்காமல், அதன் அறிகுறியான அதிக கருவுறுதல் விகிதத்தை மட்டும் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக முயற்சிகள் வெற்றியடைவதில்லை.
இந்தப் புள்ளிவிவரங்களில் கிராமப்புற-நகர்ப்புற வேறுபாடு தெளிவாகத் தெரிகிறது. நகர்ப்புறப் பெண்கள் தாமதமாகத் திருமணம் செய்துகொள்கிறார்கள். அதிகமாகக் கல்வி கற்றுக் கொள்கிறார்கள். மேலும், கருத்தடை முறைகள் குறித்து அதிக விழிப்புணர்வை பெற்றுள்ளனர். கிராமப்புறப் பெண்கள் இதற்கு நேர்மாறான நிலையை எதிர்கொள்கின்றனர். முன்கூட்டியே திருமணம் செய்துகொள்வது, குறைந்த முடிவெடுக்கும் திறன் மற்றும் பொது சுகாதாரத்தில் முதலீடு செய்வதற்குப் பதிலாக, நடைமுறையில் அனைவருக்கும் பொருந்தாத நிரந்தரத் தீர்வுகளையே இயல்பாக நாடும் ஒரு சுகாதாரக் கட்டமைப்பு போன்றவற்றையே அவர்கள் பெற்றுள்ளனர்.
பொது சுகாதாரத் தோல்வி, தனிப்பட்ட சுமை
இந்தியாவில் பெண்கள் கருத்தடை அறுவை சிகிச்சை முறையே முக்கிய கருத்தடை முறையாகத் தொடர்கிறது. இது தேசிய அளவில் மொத்த கருத்தடை பயன்பாட்டில் 36.5% ஆகவும், கிராமப்புறங்களில் 38.1% ஆகவும் உள்ளது. இதற்கு மாறாக, ஆண்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மிகக் குறைவான 0.5% என்ற அளவில் உள்ளது. இது போன்ற அதிகமான ஏற்றத்தாழ்வு, கொள்கை வடிவமைப்பு மற்றும் பாலின அதிகாரமின்மையின் விளைவாகும்.
தேசிய குடும்ப சுகாதார-6-வது தரவுகளும், பெண் கருத்தடை அறுவை சிகிச்சை தேசிய குடும்ப சுகாதார-5-வது தரவு 37.9%-லிருந்து 36.5%-ஆகக் குறைந்திருப்பதையும், அதே சமயம் பாரம்பரிய முறைகளின் பயன்பாடு 10.3%-லிருந்து 16.4%-ஆக அதிகரித்திருப்பதையும், நவீன மீளக்கூடிய முறைகள் 56.4%-லிருந்து 52.7%-ஆக சிறிதளவு குறைந்திருப்பதையும் காட்டுகின்றன. இந்தப் போக்குகளை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, சில பெண்களால் கருத்தடை அறுவை சிகிச்சையிலிருந்து பின்வாங்க முடிகிறது என்பதையும், அவர்கள் இனப்பெருக்க உரிமையை உண்மையாக மேம்படுத்தக்கூடிய மீளக்கூடிய அறிவியல் முறைகளை நோக்கிச் செல்லாமல், முறைசாரா, மருத்துவ ஆதரவு குறைந்த முறைகளை நோக்கிச் செல்கிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றன.
இந்தியாவின் பொது சுகாதார அமைப்பில் பெண்கள் கருத்தடைக்கு (Female sterilisation) ஒரு சிக்கலான வரலாறு உண்டு. 2014-ஆம் ஆண்டு பிலாஸ்பூர் துயரச் சம்பவத்தில், ஒரே நாளில் நடத்தப்பட்ட ஒரு மாபெரும் கருத்தடை இயக்கத்தைத் தொடர்ந்து 13 பெண்கள் உயிரிழந்தனர். இது போன்ற மாபெரும் கருத்தடை முகாம்கள் விதிவிலக்குகள் அல்ல. மாறாக, பெண்களின் இனப்பெருக்கத் திறனை மலிவாக மற்றும் விரைவாகத் தீர்க்கப்பட வேண்டிய ஒரு மக்கள் தொகை மேலாண்மைப் பிரச்சனையாகக் கருதும் ஒரு அமைப்பின் விளைவுகளே ஆகும். கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் கருக்குழாய் கட்டும் அறுவைச் சிகிச்சைகள் (Tubectomy) மற்றும் நிரந்தர கருத்தடை அறுவைச் சிகிச்சைகள் சில நேரங்களில் ஆபத்தானவையாக இருக்கக்கூடும். இது போன்ற மருத்துவமனைகள் பெரும்பாலும் நோயாளிகளின் அதிக நெரிசல், போதுமான பயிற்சி இல்லாத பணியாளர்கள் மற்றும் அறிவியல் அடிப்படையிலான நோயாளர் பராமரிப்பைவிட அதிக எண்ணிக்கையிலான அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்துவது போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன. இந்த அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்ளும் பெண்களுக்கு தொற்றுநோய்கள், தவறாக அளிக்கப்படும் மயக்க மருந்தால் ஏற்படும் சிக்கல்கள் அல்லது அறுவைச் சிகிச்சை தோல்வியடைந்து நீடித்த உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். பெரும்பாலான பெண்கள் தங்களால் பொருளாதாரரீதியாக அணுகக்கூடிய சேவைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். போதிய நிதி ஒதுக்கப்படாத பொது சுகாதார சேவைகளை நம்ப வேண்டிய நிலை உள்ளது. மேலும், இது போன்ற அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்ளும் பல பெண்களுக்கு முழுமையான தகவல்களின் அடிப்படையில் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் அல்லது வாய்ப்பு இருப்பதில்லை. சமூக இனப்பெருக்க மற்றும் சமூக உற்பத்தி (social production) செயல்முறைகளில் அவர்கள் பின்தங்கிய நிலையில் இருப்பதால், இது போன்ற நடைமுறைகளுக்கு ஏற்ப செயல்படும் பெண்களுக்குத் தெளிவான புரிதலுடன் கூடிய முடிவை எடுப்பதற்கான அதிகாரம் இருப்பதில்லை.
தன்னிச்சையாக முடிவு எடுக்கும் இனப்பெருக்க அதிகாரத்தை நோக்கி
தேசிய குடும்ப நல ஆய்வு-6-வது, தரவுகளின் பகுப்பாய்வானது, இந்தியாவில் கருத்தடை என்பது இனி வெறும் பிறப்புகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் கருவியாக மட்டுமல்ல. சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மைகளை கடந்து பெண்களுக்கு இனப்பெருக்க உரிமை மற்றும் முடிவெடுக்கும் அதிகாரத்தை (Reproductive Agency) வழங்கும் ஒரு வழிமுறையாக மாறியுள்ளது என்பதை காட்டுகிறது.
இது பகுப்பாய்விலிருந்து மூன்று கட்டாய கொள்கைகள் உருவாகின்றன. முதலாவதாக, சிறுமிகளைப் பள்ளியில் தக்கவைத்துக்கொள்வதன் மூலமும், குழந்தை திருமணத் தடைச் சட்டத்தை முழுமையாகச் செயல்படுத்துவதன் மூலமும், சிறுமிகளுக்கான கிராமப்புற இடைநிலைக் கல்வியில் முதலீடு செய்வதன் மூலமும், குழந்தைத் திருமணத்தை ஒரு இனப்பெருக்க சுகாதார நெருக்கடியாகக் கருதி அதற்குத் தீர்வு காணப்பட வேண்டும். இரண்டாவதாக,நிரந்தரமான மற்றும் நீடித்துப் பயன்பட முடியாத கருத்தடை முறைகளிலிருந்து கொள்கைகள் விலகி, மாற்றிக்கொள்ளக்கூடிய அறிவியல் அடிப்படையிலான கருத்தடை முறைகளுக்கான அணுகலை அதிகரிக்க வேண்டும். இதற்காக சமூக அடிப்படையிலான பொது சுகாதார சேவைகளை வலுப்படுத்த வேண்டும். மூன்றாவதாக, கருத்தடையில் காணப்படும் பாலின ஏற்றத்தாழ்வைக் குறைப்பது கொள்கையின் முக்கிய செயல்திட்ட முன்னுரிமையாக மாற வேண்டும்.
நிலையான மக்கள்தொகை மாற்றம் (Demographic Transition) பெண்களின் இனப்பெருக்கம் தொடர்பாக தன்னிச்சையாக முடிவு எடுக்கும் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
original article : Contraceptive use in India and the weight women still carry: insights from NFHS-6. -Trishna Sarkar, C. Saratchand