இந்தியாவிற்குப் புத்தொழில் நிறுவனங்கள் மட்டும் போதாது, உலகளாவிய பெரிதாக வளரக்கூடிய நிறுவனங்களும் தேவைப்படுகின்றன. -சச்சிதானந்த் சுக்லா

இந்தியா பல பெரிய நிறுவனங்களை உருவாக்கியுள்ளது. ஆனால், புதுமையான கண்டுபிடிப்புகளால் வழிநடத்தப்பட்டு, உலகப் பொருளாதாரத்தின் மிக அதிக லாபம் தரும் பிரிவுகளில் செயல்படக்கூடிய மற்றும் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய அளவிற்கான நிறுவனங்களை இன்னும் போதுமான எண்ணிக்கையில் உருவாக்கவில்லை.


தற்போது நிலவும் லாப வளர்ச்சி விகிதத்தின்படி பார்த்தால், ‘Samsung’ மற்றும் ‘SK Hynix’ ஆகிய நிறுவனங்கள் அடுத்த மூன்று ஆண்டுகளில் செலுத்தவிருக்கும் வரிகள் மட்டும் சுமார் 430 பில்லியன் டாலர்களை எட்டக்கூடும் என்று பரவலாக விவாதிக்கப்படும் ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இது தென்கொரியாவின் மொத்த தேசியக் கடனில் பாதியளவுக்குச் சமமாகும். இந்தியாவில், பொருளாதார வளர்ச்சி குறித்த கவலைகளுக்கு இடையில், உலகளவில் போட்டியிடக்கூடிய மாபெரும் பெருநிறுவனங்களை உருவாக்குவது குறித்த நம்பிக்கையை இரண்டு முக்கிய நிகழ்வுகள் ஏற்படுத்தியுள்ளன.  ஏப்ரல் மாத தொடக்கத்தில், ‘Amul’ நிறுவனம் 1 லட்சம் கோடி ரூபாய் வருவாயை ஈட்டிய இந்தியாவின் முதல் அதிவேக நுகர்பொருட்கள் (Fast-Moving Consumer Goods (FMCG)) நிறுவனமாக மாறியது. அதற்கு அடுத்தபடியாக, ‘Reliance Industries Limited’ நிறுவனம் 10 பில்லியன் டாலருக்கும் அதிகமான லாபத்தை ஈட்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனையைப் படைத்தது.


2025-ஆம் நிதியாண்டில், 35 இந்திய நிறுவனங்கள் 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாயைப் பதிவு செய்துள்ளன. இருப்பினும், ஒரே ஒரு நிறுவனம் மட்டும்தான் 10 பில்லியன் டாலர் (சுமார் 83,000 கோடி ரூபாய்) லாப வரம்பைக் கடந்துள்ளது. இது இந்திய பெருநிறுவனத் துறையில் ஒரு வரலாற்றுச் சாதனையாகும். இதற்கு நேர்மாறாக, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இதுபோன்ற பல்லாயிரம் கோடி லாபம் ஈட்டும் நிறுவனங்கள் அதிகம் உள்ளன.  மேலும், ஜப்பான் நாட்டிலும் இந்த அளவிலான லாபத்தை இயல்பாக ஈட்டும் பல நிறுவனங்கள் உள்ளன.


இது சில முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. இவ்வளவு பெரிய அளவிலான லாபத்தை ஈட்டும் பிரம்மாண்ட நிறுவனங்கள் ஒரு நாட்டிற்கு எவ்வளவு முக்கியம்? அதிக வருவாய் இருந்தும் அதற்கு நிகரான லாபம் இல்லாமல் போவது, நமது பொருளாதாரத்தில் ஏதேனும் உள்கட்டமைப்பு சார்ந்த சிக்கல் இருப்பதைக் காட்டுகிறதா? மக்கள் லாபத்தை எதிர்மறையாகப் பார்ப்பதற்கு "பொருளாதார ஜனரஞ்சகம்" (Economic populism - எளிய மக்களைக் கவரப் பேசப்படும் பொருளாதாரக் கருத்துக்கள்) அல்லது பெரிய நிறுவனங்களுக்கு எதிரான மனநிலை ஏதேனும் காரணமாக இருக்கிறதா?


பொருளாதார வளர்ச்சியின் வரலாறு, பெரிய மற்றும் சிறப்பாக நிர்வகிக்கப்படும் நிறுவனங்கள், உற்பத்தித்திறன் மற்றும் புத்தாக்கத்தின் மிகவும் நம்பகமான உந்துசக்திகளாக இருந்து, உலக அரங்கில் போட்டியிடவும் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் தேவையான பேரளவு சிக்கனத்தை (Economies of scale) உருவாக்கியுள்ளன என்பதைக் காட்டுகிறது.



முதலில், உற்பத்தித்திறனை எடுத்துக் கொள்வோம். பெரிய நிறுவனங்களால் தங்களின் நிலையான செலவுகளை—அதாவது ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D), சட்ட விதிமுறைகளைப் பின்பற்றுதல் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு போன்றவற்றுக்கான செலவுகளை, அதிக அளவிலான உற்பத்திப் பொருட்களின்மீது பகிர்ந்து பரவலாக்க முடியும். இது ஒரு பொருளுக்கான உற்பத்திச் செலவைக் குறைத்து, செயல்திறனை மேம்படுத்துகிறது. புதிய கண்டுபிடிப்புகளும் பெரும்பாலும் நிறுவனத்தின் அளவை பொறுத்தே அமைகின்றன. பெரிய கண்டுபிடிப்புகளுக்கு நீண்டகால முதலீடு, தோல்விகளைத் தாங்கும் திறன் மற்றும் பல்வேறு திறமையாளர்களைப் பயன்படுத்தும் வாய்ப்பு ஆகியவை தேவை.                                இவை அனைத்தும் பெரிய நிறுவனங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. அமெரிக்காவின் தொழில்நுட்பத் துறை இதற்கு ஒரு தெளிவான உதாரணம் ஆகும்.


முதலீடு செய்யவும், உலகளாவிய சந்தைகளை ஒருங்கிணைக்கவும் கூடிய இந்தத் திறனிலிருந்துதான் உலகளாவிய போட்டித்தன்மை உருவாகிறது. பெரிய நிறுவனங்கள் வலுவான வணிக அடையாளங்களை (brands) உருவாக்குகின்றன, விநியோக வலையமைப்புகளை நிர்வகிக்கின்றன, மற்றும் சர்வதேச விநியோகச் சங்கிலிகளை ஒருங்கிணைக்கின்றன. அவை தொழில்துறை தரநிலைகளில் தங்களின் செல்வாக்கைச் செலுத்துவதோடு, உலகளாவிய சந்தைகளில் அதிக லாபத்தையும் மதிப்பையும் ஈட்டுகின்றன. இந்த நிறுவனங்கள் நேரடியாகப் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதோடு, தங்களது சேவை வழங்குநர்கள் மற்றும் விநியோகர்களின் வலையமைப்பு மூலமாக மறைமுகமாகவும் மிகப்பெரிய பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலும், இவை பொதுவாக அதிக ஊதியமும் வழங்குகின்றன.


கட்டமைப்பு சார்ந்த சிக்கலைப் பொறுத்தவரை, இந்தியாவின் பெருநிறுவன வளர்ச்சியை வெறும் நிறுவனங்களின் வருவாயை மட்டும் வைத்து மதிப்பிடக் கூடாது. அந்த அளவுகோலின்படி பார்த்தால், இந்தியா கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. தற்போது 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் ஈட்டும் நிறுவனங்களின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், பல வருடங்களாகக் கடன்களைக் குறைத்ததன் மூலம், நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கைகள் முன்பைவிட இப்போது மிகவும் வலுவாக உள்ளன. இருப்பினும், இந்த வெற்றிக்கு அடியில் ஒரு முக்கியமான சமநிலையின்மை உள்ளது. இந்தியா பெரிய நிறுவனங்களை உருவாக்கியுள்ளது உண்மைதான், ஆனால் உலகளவில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய, புதிய கண்டுபிடிப்புகளால் வழிநடத்தப்படக்கூடிய மற்றும் உலகப் பொருளாதாரத்தின் மிக உயர்ந்த மதிப்புமிக்க பிரிவுகளில் இடம்பிடித்துள்ள நிறுவனங்களை இன்னும் போதுமான அளவு உருவாக்கவில்லை.


மூன்று முக்கிய அம்சங்கள் இந்த இடைவெளியை வரையறுக்கின்றன 


முதலாவதாக, இந்திய நிறுவனங்கள் பொதுவாக உலகளவில் தங்களது வணிகத்தை விரிவுபடுத்துவதைவிட, உள்நாட்டுச் சந்தைக்குள்ளேயே வளர்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டுச் சந்தை, நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஒரு வலுவான காரணியாக இருந்து வருகிறது.                   இது பல நிறுவனங்கள் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தவும் உதவியுள்ளது. இருப்பினும், தகவல் தொழில்நுட்பச் சேவைகள், மருந்தகத் துறை (Pharmaceuticals) மற்றும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு வாகனத் துறை (Automobiles) மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் ஆகிய சில துறைகளைத் தவிர, மற்ற துறைகளில் உலகளாவிய வருவாய் ஈட்டும் வாய்ப்பு இன்னும் குறைவாகவே உள்ளது.                  இந்தத் துறைகளிலும்கூட, சொந்தமாகப் பொருட்கள், டிஜிட்டல் தளங்கள் அல்லது காப்புரிமைகளைக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, ஏற்றுமதி, உதிரிபாகங்களை இணைத்தல் அல்லது மறு-ஏற்றுமதி ஆகியவற்றின் மூலமே வளர்ச்சி அடைகிறது. இதற்கு நேர்மாறாக, ‘Apple’ மற்றும் ‘Toyota’ போன்ற உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனங்கள், உலகளாவிய சந்தைப் பங்கு, சர்வதேச விநியோகச் சங்கிலிகள் மற்றும் வலுவான பிராண்டுகள் மற்றும் அறிவுசார் சொத்துரிமை ஆகியவற்றின் அடிப்படையில் விலையைத் தீர்மானிக்கும் அதிகாரத்தைப் பெற்று வலுவாக விளங்குகின்றன.


இரண்டாவதாக, இந்தியாவின் பெருநிறுவன லாபம் நிதித் துறை மற்றும் கச்சாப் பொருட்கள் சார்ந்த துறைகளிலேயே இன்னும் அதிகமாகக் குவிந்துள்ளது. மொத்த வரிக்குப் பிந்தைய லாபத்தில் (Profit After Tax (PAT)) நிதி நிறுவனங்கள்              41 சதவீதமும், கச்சாப் பொருட்கள் சார்ந்த நிறுவனங்கள் 19 சதவீதமும் பங்களிக்கின்றன. இந்த முறை இந்தியாவுக்கு மட்டுமே உரியது அல்ல என்றாலும், இங்கு இதன் செறிவு மிக அதிகமாகத் தெரிகிறது. இத்துறைகள் அதிக முதலீடு தேவைப்படுபவை மற்றும் பெரும்பாலும் சுழற்சி முறைக்கு உட்பட்டவை ஆகும்.  அதாவது, இலாபங்கள் தொடர்ச்சியான கண்டுபிடிப்புகளால் வராமல், உலகளாவிய கச்சாப் பொருட்களின் விலை அல்லது கடன் சுழற்சிகளால் மட்டுமே பாதிக்கப்படுகின்றன. வளர்ந்த பொருளாதார நாடுகளில், இலாபத்தின் பெரும்பகுதி தொழில்நுட்பம், மருந்தகத் துறை மற்றும் மேம்பட்ட உற்பத்தித் துறைகளிலிருந்து வருகிறது. அங்கு நிறுவனங்கள் தங்களின் அறிவுசார் சொத்துரிமை மற்றும் வலையமைப்பு விளைவுகள் மூலம் வலுவான லாப வரம்புகளைப் பராமரிக்கின்றன.


மூன்றாவதாக, அதிக லாபம் தரும், கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் இயங்கும் துறைகளில் இந்தியாவின் பங்களிப்பு மிகக் குறைவாகவே உள்ளது. உலகளாவிய தொழில்நுட்பக் கட்டமைப்பின் முக்கியப் பகுதிகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ‘NVIDIA’ நிறுவனம் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு இணையாக இங்கு உள்நாட்டு நிறுவனங்கள் மிகக் குறைவு. இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் வெற்றிகரமான பல தளங்களை உருவாக்கியிருந்தாலும், அவற்றில் பெரும்பாலானவை உள்நாட்டுச் சந்தையை மட்டுமே மையமாகக் கொண்டவை ஆகும். மேலும், அவை கடுமையான போட்டி நிறைந்த, குறைந்த லாப வரம்பு உள்ள சூழலிலேயே இயங்குகின்றன. இதன் விளைவாக, மென்பொருள், குறைமின்கடத்திகள் (Semiconductors) மற்றும் மேம்பட்ட தொழில்முறைத் தொழில்நுட்பங்கள் மூலம் கிடைக்கும் முக்கிய லாபங்கள் தொடர்ந்து வெளிநாடுகளைத் தலைமையிடமாகக் கொண்ட நிறுவனங்களுக்கே சென்றடைகின்றன.


இந்த இடைவெளி என்பது வெறும் அரசாங்கக் கொள்கைகள் அல்லது வணிக உத்திகளால் மட்டுமே ஏற்பட்டது அல்ல. இது இன்னும் ஆழமான உள்கட்டமைப்பு சார்ந்த காரணிகளையும் பிரதிபலிக்கிறது. இந்தியா தனது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product (GDP)) 1%-க்கும் குறைவான தொகையையே ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காகப் பயன்படுத்துகிறது. இது நம்முடன் ஒப்பிடக்கூடிய மற்ற பல நாடுகளைவிட மிகக் குறைவு ஆகும்.                             அதிநவீன தொழில்நுட்பத் தொடக்க நிறுவனங்கள் நீண்டகால முதலீட்டு அபாய நிதித் தொகையைப் பெறுவதற்கு இன்னும் போராடி வருகின்றன.          மேலும், விதிமுறைகளில் இருக்கும் நிலையற்ற தன்மை மற்றும் வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் துறைகளுக்கு இடையே  ஒருங்கிணைக்கப்படாத சந்தை அமைப்புகள் ஆகியவை வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான செலவை அதிகரிக்கின்றன. இந்தியா உலகளாவிய வர்த்தகக் கட்டமைப்புகளில் ஒரு அங்கமாக மாறியிருந்தாலும், சர்வதேச மதிப்புச் சங்கிலிகளின் அதிக லாபம் தரும் முதன்மையான பிரிவுகளில் இன்னும் வலுவான இடத்தைப் பிடிக்கவில்லை.


வேகமாக மாறிவரும் உலகச் சூழலில், இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கிறது. வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் முதலீட்டில் அடுத்த பெரிய பாய்ச்சல் என்பது, படிப்படியான வளர்ச்சியால் மட்டும் வராது; லாபகரமாக இயங்கும் பல நிறுவனங்களை உருவாக்குவதன் மூலமே சாத்தியமாகும். 2017-18-ஆம் ஆண்டின் பொருளாதாரக் கணக்கெடுப்பு (Economic Survey 2017-18) குறிப்பிட்டிருந்த, "நட்புமுறை சோசலிசத்திலிருந்து (Crony socialism) களங்கப்படுத்தப்பட்ட முதலாளித்துவத்தை (Stigmatised capitalism) நோக்கி நகர்தல்" என்ற நிலையைத் தாண்டி இந்தியா இப்போது முன்னேறியிருக்கும் என்று நம்பலாம். இதன் மூலம், 'லாபம்' ஈட்டுவது என்பது இனி ஒரு தவறான விஷயமாகப் பார்க்கப்படாது. மேலும், சீர்திருத்தங்களைத் தடுத்து, முதலீட்டாளர்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் வணிகங்களை எப்போதும் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் நிலையும் மாற வேண்டும்.


இந்தியா ஒரு உயர் வருவாய் பொருளாதாரமாக மாறுவதற்கு ஆதரவளிக்க, 10 பில்லியன் டாலருக்கும் (சுமார் ₹83,000 கோடிக்கும்) மேல் லாபம் ஈட்டும் அளவும், லட்சியமும், திறனும் கொண்ட இன்னும் பல உள்நாட்டு நிறுவனங்கள் நாட்டிற்குத் தேவைப்படுகின்றன. தென்கொரிய நிறுவனங்களின் வளர்ச்சியும், அமெரிக்காவின் ‘Magnificent 7’ நிறுவனங்களின் உதாரணங்களும் இதற்கு என்னென்ன சாத்தியங்கள் உள்ளன என்பதைக் காட்டுகின்றன. இந்தியாவுக்குப் புதிய தொழில்முனைவு நிறுவனங்கள் மட்டும் போதாது; பெரிய அளவில் லாபம் ஈட்டி, உலகளாவிய மாபெரும் நிறுவனங்களாக வளரக்கூடிய "அடுத்த கட்டத்திற்கு விரிவடையும் நிறுவனங்கள்" (Scale-ups) தேவை. கொள்கை வகுப்பாளர்களும் தொழிலதிபர்களும் தங்களுக்குள் கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கியக் கேள்வி இதுதான்: நாம் வெறும் வருவாயை அதிகரிப்பதில் மட்டும்தான் கவனம் செலுத்துகிறோமா, அல்லது நல்ல லாபம் மற்றும் சந்தையில் விலையைத் தீர்மானிக்கும் அதிகாரம் ஆகிய இரண்டின் மூலமும் உலகளாவிய போட்டித் திறனை வளர்க்கப் பாடுபடுகிறோமா?


கட்டுரையாளர், ‘Larsen & Toubro’ நிறுவனத்தின் குழுமத் தலைமைப் பொருளாதார நிபுணர் ஆவார்.


Original Link: India doesn’t just need start-ups, but scale-ups that become global giants.

Share:

பிளாசிப் போர்: இந்தியாவில் ஆங்கிலேயப் பேரரசு உருவாவதற்குக் காரணமான 1757-ஆம் ஆண்டு போரை நினைவுகூர்தல். -சதாக்ஷி சக்லானி

ஆங்கிலேயர்கள் தங்களுடைய வெறும் வணிக நோக்கங்களைத் தாண்டி, முதலில் வங்கத்திலும் (Bengal), அதன் பிறகு இந்தியா முழுவதிலும் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு ஒரு அடித்தளமாக அமைந்த நிகழ்வுகளில் இந்தத் போரும் ஒன்றாகும். இதைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை பின்வருமாறு:


சில மணிநேரங்கள் மட்டுமே நீடித்த ஒரு போர், இந்தியத் துணைக் கண்டத்தின் விதியை ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளுக்கு மாற்றியமைத்தது. இந்தியாவில் ஆங்கிலேய காலனித்துவப் பேரரசின் எழுச்சி, மேற்குவங்கத்தில் உள்ள பிளாசி (Plassey) என்ற ஒரு சிறிய கிராமத்திலிருந்துதான் தொடங்குகிறது.


இந்த ஆண்டு ஜூன் மாதம் 23-ஆம் தேதியுடன், ராபர்ட் கிளைவ் தலைமையிலான ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனம் (English East India Company) மற்றும் நவாப் சிராஜ்-உத்-தவ்லா ஆகியோருக்கு இடையே 1757-ஆம் ஆண்டில் நடந்த புகழ்பெற்ற பிளாசிப் போரின் 269-ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. ராபர்ட் கிளைவின் வெற்றியில் முடிந்த இந்தப் போர், ஆங்கிலேயர்கள் தங்களுடைய வெறும் வணிக நோக்கங்களைத் தாண்டி, முதலில் வங்கத்திலும், பிறகு இந்தியா முழுவதிலும் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு ஒரு அடித்தளமாக அமைந்த மிக முக்கியமான நிகழ்வாகும்.


இந்தப் போர், இதற்கு வழிவகுத்த நிகழ்வுகள் மற்றும் இந்தியாவில் ஆங்கிலேய காலனித்துவத் திட்டத்தில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து அறிந்துகொள்வோம் .






போருக்கு முன்பு வங்கம்


1690-ஆம் ஆண்டில், முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் 'அரச கட்டளை' (Farman) கிழக்கிந்திய நிறுவனத்திற்கு வங்கத்தில் வரி இல்லாத வர்த்தகம் செய்வதற்கான உரிமையை வழங்கியது. அதே ஆண்டில், இந்த நிறுவனம் கல்கத்தாவிற்கு அடிக்கல் நாட்டியதுடன், 1696-ஆம் ஆண்டில் 'வில்லியம் கோட்டை' (Fort William) என்று அழைக்கப்பட்ட தங்களின் குடியிருப்பைச் சுற்றிக் கோட்டை அரண்களையும் அமைத்துக் கொண்டது.


இருப்பினும், 18-ஆம் நூற்றாண்டில், வங்கம் (Bengal) மையப்படுத்தப்பட்ட முகலாய அதிகாரத்தின் வீழ்ச்சியையும், ஏறக்குறைய தன்னாட்சி அதிகாரம் கொண்ட நவாப்களின் (Nawabs) எழுச்சியையும் கண்டது. இதே காலக்கட்டத்தில்தான் கிழக்கிந்திய நிறுவனத்தின் வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியமான ஒரு பகுதியாக வங்கம் மாறியிருந்தது.


நவாப்கள் தங்களது அதிகாரத்தை நிலைநாட்ட முயன்றபோது, அவர்களுக்கும் கிழக்கிந்திய நிறுவனத்திற்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டன.                    இந்த மோதல்கள் 1717-ஆம் ஆண்டு முதல் 1727-ஆம் ஆண்டீல் அவர் இறக்கும் வரை ஆட்சிசெய்த வங்கத்தின் முதல் நவாபான முர்ஷித் குலி கான் காலத்திலிருந்தே தொடங்கின. ஏப்ரல் மாதம் 1756-ஆம் ஆண்டில், சிராஜ்-உத்-தவ்லா வங்கத்தின் நவாப் ஆனார். அவரது ஆட்சிக்காலத்தில் இந்த மோதல்கள் அதிகரித்தன.


இதற்கிடையில், ஐரோப்பாவில் பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்கள் — குறிப்பாக, ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர் (Austrian Succession War, 1740-48) மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த ஏழாண்டுப் போர் (Seven Years War, 1756-63) — ஆங்கிலேய-பிரெஞ்சுப் பகையை இந்தியாவிற்கும் கொண்டு வந்தது. இதனால் இந்தப் பகுதிகளில் வணிக லாபம் ஈட்டுவது நாளுக்கு நாள் பாதுகாப்பற்றதாக மாறியது. இந்தப் பாதுகாப்பற்றத் தன்மையும், பிரெஞ்சுப் படையெடுப்புப் பற்றிய பயமும், கிழக்கிந்திய நிறுவனம் நவாபின் அனுமதியின்றி கல்கத்தாவில் இருந்த தனது கோட்டை அரண்களை வலுப்படுத்தக் காரணமாக அமைந்தது.


மேலும், நவாபினால் பண மோசடி குற்றம்சாட்டப்பட்ட கிருஷ்ண பல்லவ் என்ற நபருக்கு கிழக்கிந்திய நிறுவனம் புகலிடம் அளித்தது. இந்த அத்தனை பிரச்சினைகளும் நவாப் சிராஜ்-உத்-தௌலாவின் அதிகாரம் மற்றும் இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட சவால்களாக அமைந்தன.


கிழக்கிந்திய நிறுவனம் இந்த எச்சரிக்கைகளை மதிக்கத் தவறியபோது, நவாப் 30,000 வீரர்களுடன் காசிம்பஜாரில் (Kasimbazar) இருந்த ஆங்கிலேயர்களின் தொழிற்சாலையை நோக்கிப் படையெடுத்துச் சென்றார். அங்கிருந்த நிறுவன அதிகாரிகளைச் சிறைபிடித்தார், அவர்களின் கிடங்கைப் பூட்டினார், மேலும் அனைத்து ஆங்கிலேயர்களின் ஆயுதங்களையும் பறிமுதல் செய்தார். வில்லியம் கோட்டையின் பொறுப்பாளராக இருந்த ஆங்கிலேய நிர்வாகி ரோஜர் டிரேக், நவாபின் சுமுகமான ராஜதந்திர பேச்சுவார்த்தைக்கான கோரிக்கையைப் புறக்கணித்தார். மேலும் இந்தத் தோல்விக்குப் பழிவாங்க முடியும் என்றும் நம்பினார். இதற்குப் பதிலடியாக, சிராஜ்-உத்-தவ்லா ஜூன் மாதம் 20-ஆம் தேதி, 1756-ஆம் ஆண்டு கல்கத்தாவை நோக்கிப் படையெடுத்து அப்பகுதியைக் கைப்பற்றினார்.


இது ஒரு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது. வரலாற்று ஆய்வாளர் பி. ஜே. மார்ஷல் 1987-ஆம் ஆண்டில் எழுதிய 'Bengal: The British Bridgehead: Eastern India 1740-1828' என்ற புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: "ஏற்கனவே புகழ்பெற்றிருந்த கர்னல் ராபர்ட் கிளைவின் தலைமையில், போர்க்கப்பல்கள்,  ஆங்கிலேயப் படைவீரர்கள் மற்றும் இந்திய வீரர்களைக் கொண்ட ஒரு படை மெட்ராஸிலிருந்து புறப்பட்டு, டிசம்பர் மாதம் 1756-ஆம் ஆண்டில் வங்கக் கடற்கரையை வந்தடைந்தது.


அதன் பிறகு நடந்தவை பெரும்பாலும் "பிளாசி சதி" என்று விவரிக்கப்படுகின்றன. வரலாற்றாசிரியர் சேகர் பந்தோபாத்யாய், தனது 'From Plassey to Partition: A History of Modern India' (2004) என்ற புத்தகத்தில் இவ்வாறு எழுதியுள்ளார்: நவாபின் அவையிலேயே வர்த்தகர்கள், வங்கியாளர்கள், நிதியாளர்கள் மற்றும் சக்திவாய்ந்த ஜமீன்தார்கள் அடங்கிய ஒரு அதிருப்தியுற்ற குழு ஏற்கனவே இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். 



வங்கத்தின் பெரிய ஜமீன்தார்கள் மற்றும் வங்கி நிறுவனங்களிடமிருந்து அதிகாரத்தை தன்வசப்படுத்தவும், வளங்களைச் சுரண்டவும் நவாப் மேற்கொண்ட முயற்சிகள், பொருளாதார மற்றும் அரசியல்ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த உறவில் விரிசல் ஏற்படுத்தியது. அதோடு, இந்த வணிக மற்றும் வங்கி குடும்பங்கள் ஆங்கிலேயர்களுடனும் கணிசமான பொருளாதார உறவுகளை வலுப்படுத்திக் கொண்டிருந்தனர்.


பெரிய வங்கியாளர் குடும்பமான ஜகத் சேத் தலைமை தாங்கிய, நவாப் மீது அதிருப்தியில் இருந்த இந்தத் தரப்பினரிடையே நிலவிய ஏமாற்றத்தை ராபர்ட் கிளைவ் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்.                                            நவாப் சிராஜ்-உத்-தௌலாவிற்குப் பதிலாக அவருடைய தலைமைத் தளபதியான மீர் ஜாஃபரை நவாப் பதவியில் அமர்த்துவதற்கு ஒரு கூட்டுச் சதி அரங்கேறியதாகக் கூறப்படுகிறது.


போர்


ராபர்ட் கிளைவின் படைகள் நவாபின் தலைநகரமான முர்ஷிதாபாத்தை (Murshidabad) நோக்கி முன்னேறிச் சென்றன. நவாபின் படையில் 16,000 குதிரைப்படை வீரர்கள் மற்றும் பிரெஞ்சு அதிகாரிகளின் தலைமையிலான சுமார் 50 பீரங்கிகள் உட்பட மொத்தம் 50,000 வீரர்கள் இருந்தனர். மறுபுறம், கிளைவின் படையில் வெறும் 3,000 வீரர்களும் 10 பீரங்கிகளும் மட்டுமே இருந்தன.


தற்போதைய மேற்குவங்கத்தின் நாடியா (Nadia) மாவட்டத்தில் உள்ள பிளாசி என்ற இடத்திற்கு அருகில் இருநாட்டுப் படைகளும் போரிட்டன.                           ஆரம்பத்தில் இருதரப்பிலும் நடந்த பீரங்கித் தாக்குதல்களால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. ஆனால், திடீரெனப் பெய்த பலத்த மழையானது ஆங்கிலேயர்களுக்குச் சாதகமாக நிலைமையை மாற்றியது. அவர்கள் தங்களது பீரங்கிகளையும் வெடிமருந்துகளையும் தார்பாய்கள் கொண்டு உடனடியாக மூடிப் பாதுகாத்துக் கொண்டனர். நவாபின் படையினர் அவ்வாறு செய்யத் தவறியதால், அவர்களின் பெரும்பாலான ஆயுதங்கள் மற்றும் பீரங்கிகள் பயன்படுத்த முடியாதபடி செயலிழந்து போயின.


நவாபின் படை எண்ணிக்கையில் மிக அதிகமாக இருந்தபோதிலும்,                   மீர் ஜாஃபரின் துரோகத்தால் அது முற்றிலும் பலவீனமடைந்தது. மீர் ஜாஃபர் மற்றும் பிற சதியாளர்களின் தூண்டுதலால், நவாப் படையின் மிகப் பெரிய பிரிவினர் போரில் ஈடுபடாமல் இருந்துவிட்டனர்.


பிளாசிப் போர் ராபர்ட் கிளைவின் வெற்றியுடன் முடிவுக்கு வந்தது. சிராஜ்-உத்-தவ்லா போர்க்களத்தில் இருந்து தப்பியோட முயன்றார்.                           ஆனால், விரைவில் அவர் ஆங்கிலேயப் படையினரால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.


பிளாசி கொள்ளை 


மீர் ஜாபர் வங்கத்தின் புதிய நவாபாக நியமிக்கப்பட்டார். இருப்பினும், அவர் பெரும்பாலும் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஒரு பொம்மை ஆட்சியாளராகவே செயல்பட்டார்.


"இதற்குப் பிறகு நடந்தவை பெரும்பாலும் 'பிளாசி கொள்ளை' என்று குறிப்பிடப்படுகின்றன" என்று பந்தோபாத்யாய் எழுதியுள்ளார். 1757 மற்றும் 1760 ஆண்டுகளுக்கு இடையில், இந்நிறுவனம் மீர் ஜாபரிடமிருந்து 22.5 மில்லியன் ரூபாய் (ரூ. 2.25 கோடி) பெற்றது. ராபர்ட் கிளைவ் உள்ளிட்ட நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், தங்களின் தனிப்பட்ட வர்த்தகத்திற்காக வர்த்தக அனுமதிகளை பெருமளவில் தவறாகப் பயன்படுத்தி, சொந்தமாகப் பெருஞ்செல்வத்தைச் சேர்த்தனர்.


ஆனால், கிழக்கிந்திய நிறுவனத்தின் பணத்தாசையையும் நிதித் தேவைகளையும் பூர்த்தி செய்வது மீர் ஜாபருக்கு விரைவில் கடினமாக இருந்தது. எனவே அக்டோபர் மாதம் 1760-ஆம் ஆண்டில், அவருக்குப் பதிலாக அவருடைய மருமகன் மீர் காசிம் நவாபாக நியமிக்கப்பட்டார். நிறுவன அதிகாரிகளின் வர்த்தகச் சலுகை துஷ்பிரயோகம் காரணமாக மீண்டும் மோதல் வெடித்தது.                          இதனைத் தொடர்ந்து காசிம் மற்றும் அவரது கூட்டாளியான அவத் (Awadh) நவாபிற்கு எதிராக நடந்த போரிலும், 1764-ஆம் ஆண்டில் பக்ஸார் (Buxar) போரில் அவர்கள் அடைந்த தோல்வியும், கிளைவ் வங்கத்தின்மீது முழுமையான கட்டுப்பாட்டைப் பெற வழிவகுத்தது.

பொருளாதாரரீதியாக, முகலாய இந்தியாவின் செல்வ வளமுடைய மாகாணங்களில் ஒன்றான வங்கத்தின் மீதான கட்டுப்பாடு, ஆங்கிலேயர்களுக்கு பெரிய அளவில் நன்மைகளை அளித்தது. ஆங்கிலேய வரலாற்றாசிரியர் சி. ஏ. பெய்லி தனது 'Indian Society and the Making of the British Empire (2008)' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளபடி: "நிலவருவாய் நிர்வாகத்தில் கிழக்கிந்திய நிறுவனத்திற்குக் கிடைத்த லாபமும், நவாபின் சலுகைகளை விலைக்கு வாங்கியதன் மூலம் தனிநபர்கள் சேர்த்த பெருஞ்செல்வமும், இப்போது கேண்டன் (சீனா) மற்றும் லண்டன் (இங்கிலாந்து) வரை பரந்திருந்த ஒரு உலகளாவிய வர்த்தக முறையைத் தக்கவைத்துக் கொள்ளப் பயன்படுத்தப்பட்டன.


1765-ஆம் ஆண்டிற்குள், இந்த நிறுவனம் வங்கத்தின் திவானி (வரி வசூலிக்கும் உரிமை) உரிமையைக் கைப்பற்றியது. இதன் மூலம் வங்கத்தின் வருவாய் முழுமையாகக் கிழக்கிந்திய நிறுவனத்திற்குக் கிடைத்தது. இது இங்கிலாந்திலிருந்து தங்கம், வெள்ளி போன்ற நாணயங்களை (Bullion) இறக்குமதி செய்வதைக் பெருமளவு குறைத்தது. மேலும், 1757-ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்த இறக்குமதி முற்றிலும் நின்றுபோனது.


உள்ளூர் வணிகர்கள் மற்றும் கைவினைஞர்களுடன் கிழக்கிந்திய நிறுவனம் நடத்திய வர்த்தக முறையிலும் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. இதற்கு முன்பு ஐரோப்பிய நாடுகளின் பல வியாபாரிகளுக்கு இடையே இருந்த போட்டியால் லாபமடைந்து வந்த இந்த உள்ளூர் குழுக்கள், இப்போது கிழக்கிந்திய நிறுவனத்தின் முழு ஆதிக்கத்தின்கீழ் செயல்பட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டன.


இந்தப் போரின் முக்கியத்துவம் அதன் அளவைப் பொறுத்தது அல்ல, மாறாக அதன் விளைவுகளைப் பொறுத்தே அமைந்தது. சதி மற்றும் இராணுவத் தலையீட்டின் கூட்டு முயற்சி மூலம், கிழக்கிந்திய நிறுவனம் தனது முந்தைய வணிகப் பங்கையும் கடந்து, ஒரு மிகப்பெரிய அரசியல் செல்வாக்கைப் பெற்றது.                         இது வங்கத்தை (Bengal) இந்தியாவில், அதன் விரிவடைந்து வரும் அதிகாரத்தின் முதல் தளமாக மாற்றியது.


கட்டுரையாளர் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் ஒரு பயிற்சிப் பத்திரிகையாளர் ஆவார்.



Original Link: Plassey: Remembering the 1757 battle that birthed the British empire in India.

Share:

இந்தியாவின் முதியோர் மக்கள்தொகைக்கு, காலநிலை மாற்றம் ஏன் ஒரு பொதுச் சுகாதார அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது? -நேஹல் ஷர்மா & பவ்யா கபூர்

வெப்ப அலைகள் போன்ற காலநிலை மாற்ற அபாயங்களால் முதியவர்கள் மிக எளிதாகப் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய கடுமையான வானிலை நிகழ்வுகள் அடிக்கடி நிகழத் தொடங்கியுள்ளதால், பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள முதியவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான கட்டமைப்புகளை இந்தியா உருவாக்க வேண்டியது அவசியமாகும்.


இந்தியா ஒரு பெரிய மக்கள்தொகை மாற்றத்தின் தொடக்கத்தில் உள்ளது. பிறப்பு விகிதம் குறைந்து, முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், இப்போது ஒரு புதிய கவலை எழுந்துள்ளது. அது முதியவர்கள் மீது காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் தாக்கமாகும். கடுமையான வானிலை மாற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தயார்படுத்திக் கொள்ளும் கொள்கைகளை வகுக்கும்போது, வயதான மக்கள்தொகையின் தேவைகளையும் கண்டிப்பாகக் கணக்கில் கொள்ள வேண்டும்.


காலநிலை மாற்றத்தால் முதியவர்கள் ஏன் குறிப்பாகப் பாதிக்கப்படுகிறார்கள், இந்த அபாயத்தைக் கையாள்வதில் இந்தியாவின் தற்போதைய கட்டமைப்புகள் எவ்வாறு பின்தங்கியுள்ளன, மற்றும் நாடு இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம்.


காலநிலை மாற்றத்தால் முதியவர்களுக்கு ஏன் அதிக பாதிப்பு ஏற்படுகிறது?


இந்திய மக்கள்தொகையில் முதியவர்கள் தற்போது ஏறக்குறைய பத்தில் ஒரு பங்காக (10%) உள்ளனர். ஆனால், 2050-ஆம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து, மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்காக (20%) மாறும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவின் தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் முதியவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது.


மனித உடல் வயதாக ஆக, வெப்பத்தைத் தாங்கி உடலின் வெப்பநிலையைச் சீராக வைக்கும் திறனை இழக்கிறது. நீண்டநேரம் கடுமையான வெப்பத்தில் இருக்கும்போது, உடலின் இந்த பலவீனமான பாதுகாப்புத் திறன் முற்றிலும் செயலிழந்து விடுகிறது. இது உடலில் கடுமையான வெப்ப அழுத்தத்தை ஏற்படுத்தி, ஏற்கனவே இருக்கும் நாள்பட்ட நோய்களை மேலும் மோசமாக்குகிறது. 75 வயதிற்கு மேற்பட்ட, குறிப்பாக இருதய நோய், சர்க்கரை நோய், சிறுநீரக நோய் உள்ளவர்கள் அல்லது உடல் நடமாட்டம் குறைந்த முதியவர்களுக்கு, கடுமையான வெப்ப அலை என்பது ஒரு பெரிய மருத்துவ அவசரநிலையாக மாறிவிடுகிறது.


'HelpAge India' அமைப்பு 2026-ஆம் ஆண்டில் வெளியிட்ட 'காலநிலையைத் தாங்கும் முதுமை' (Climate Resilient Ageing) என்ற அறிக்கை, இந்த காலநிலை ஆபத்தின் தீவிரத்தை நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. இந்த அறிக்கைக்காக பத்து மாநிலங்களைச் சேர்ந்த 2,224 முதியவர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் 78% பேர் கடந்த மூன்று ஆண்டுகளில் குறைந்தது ஒரு காலநிலை சார்ந்த பாதிப்பையாவது எதிர்கொண்டதாகக் கூறியுள்ளனர். குறிப்பாக 45% பேர் கடுமையான வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக வெள்ளம் மற்றும் வறட்சியினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் இத்தகைய பாதிப்புகளைத் தொடர்ந்து எதிர்கொண்டுள்ளனர். இப்படி ஏற்படும் ஒவ்வொரு பாதிப்பும், அவர்கள் அதிலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதை மிகவும் கடினமாக்குகிறது.

பாதிப்புகளைத் தாங்கி வாழ்வதற்கு தடையாக இருப்பவை எவை?


காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்வதற்கும் அதன் பாதிப்புகளில் இருந்து தப்பிப்பதற்கும் பொதுவாகப் பணம் தேவைப்படுகிறது. ‘HelpAge’ அமைப்பின் ஆய்வில் பங்கேற்றவர்களில் 69 சதவீதத்தினர், தங்களின் பாதிப்பில் இருந்து மீண்டுவரும் திறனுக்கு மிகப்பெரிய தடையாக இருப்பது நிதி நெருக்கடிதான் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்தச் சுமை, தனியாக வாழ்வோர், நலிவடைந்த ஆரோக்கியம் கொண்டவர்கள் மற்றும் பாதுகாப்பற்ற வீடுகளில் வசிப்பவர்கள் ஆகியோர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.


இங்கு வெப்பம் மட்டுமே ஒரே ஆபத்து அல்ல. காற்று மாசுபாடு, சுவாசம் மற்றும் இதயம் சார்ந்த நோய்களை மேலும் மோசமாக்குகிறது. முதியவர்களுக்கு இத்தகைய பாதிப்புகளைத் தாங்கும் திறன் பொதுவாகக் குறைவாகவே இருக்கும். பெருவெள்ளம் ஏற்படும் காலங்களில் மருந்துகள், அரசு உதவிகள், போக்குவரத்து மற்றும் மருத்துவச் சேவைகள் போன்றவை தடைபடலாம். வறட்சி போன்ற சூழ்நிலைகள் குடும்ப வருமானத்தைக் குறைத்து, முதியவர்கள் தங்களின் குடும்ப உறுப்பினர்களைச் சார்ந்து வாழும் நிலையை இன்னும் அதிகமாக்கலாம்.


இத்தகைய தீவிரமான காலநிலை மாற்றங்களைச் சமாளிப்பதற்குப் பல வழிகள் உள்ளன: வெப்பக் காலச் செயல்பாட்டுத் திட்டங்கள், குளிர்விக்கப்பட்ட இடங்கள், முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்புகள், பாதுகாப்பான வீடுகள், காலநிலை மாற்ற இழப்பீட்டுக் காப்பீடு மற்றும் மருத்துவ வசதிகள் போன்றவை இதில் அடங்கும். ஆனால், முதியவர்கள் பலர் இன்னும் இந்த வசதிகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் ஆதரவு கிடைக்கப்பெறாமல் உள்ளனர்.                         சிலரால் எச்சரிக்கைச் செய்திகளைப் படிக்கவோ அல்லது சரியான நேரத்தில் பெறவோ முடிவதில்லை. வேறு சிலரால் அடுத்தவர் உதவியின்றி அந்த எச்சரிக்கைகளின்படி உடனடியாகச் செயல்பட முடிவதில்லை. சிலர் வெப்பத்தை அப்படியே தேக்கி வைக்கும் அறைகளில் வாழ்கிறார்கள். இன்னும் சிலரோ மருத்துவ மையத்திற்கோ அல்லது நிவாரண முகாம்களுக்கோ எளிதாகப் பயணம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.

அரசாங்கத்தின் தற்போதைய நடவடிக்கைகள் என்ன, அவை எங்கு பின்தங்குகின்றன?


நிதியுதவி, மருத்துவ வசதி மற்றும் சிறந்த வீட்டு வசதி போன்ற அடிப்படை வசதிகளையே முதியவர்கள் கேட்கின்றனர். அவர்களுக்காக இந்தியாவில் பல நலத்திட்டங்களும் சுகாதார நடவடிக்கைகளும் உள்ளன. ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana (AB PM-JAY)) திட்டம், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குடிமக்களுக்கு ஆண்டுதோறும் 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு வழங்குகிறது. முதியோர்களுக்கான தேசிய சுகாதாரத் திட்டம் (National Programme for Health Care of the Elderly (NPHCE)) பொது சுகாதார அமைப்பின் மூலம் முதியோர் மருத்துவச் சேவைகளை வழங்குகிறது.


அரசாங்கம் 'அடல் வயோ அபியுதய யோஜனா' (Atal Vayo Abhyuday Yojana (AVYAY)) திட்டத்தின்கீழ் முதியோர் இல்லங்கள், பராமரிப்பாளர்களுக்கான பயிற்சி, நடமாடும் மருத்துவச் சேவைகள் மற்றும் சமூகம் சார்ந்த பராமரிப்பு ஆகியவற்றிற்கும் நிதி வழங்குகிறது. 'Elderline' சேவை முதியவர்களுக்கான தேசிய அளவிலான உதவி எண்களை வழங்குகிறது. 'SACRED' (Senior Able Citizens for Re-Employment in Dignity) இணையதளம் முதியவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர முயல்கிறது. 'SAGE' (Seniorcare Ageing Growth Engine) திட்டம் முதியோர் பராமரிப்பில் புதிய கண்டுபிடிப்புகளை ஆதரிக்கிறது.


இந்தத் திட்டங்கள் மிகவும் முக்கியமானவைதான். ஆனால், இவற்றில் பெரும்பாலானவை நலத்திட்டங்கள், சுகாதாரம், வேலைவாய்ப்பு ஆதரவு அல்லது சமூக உள்ளடக்கம் ஆகியவற்றிற்காகவே உருவாக்கப்பட்டன. இவை இன்னும் பேரிடர் மேலாண்மை அல்லது காலநிலை மாற்றத்திற்குத் தகவமைத்துக் கொள்ளுதல் ஆகியவற்றுடன் முழுமையாக இணைக்கப்படவில்லை. ஒரு கடுமையான வெப்ப அலை பாதிப்பின்போது, உடல்நலம் பாதிக்கப்பட்டு நகர முடியாத ஒருவரை வெறும் மருத்துவ அட்டை மட்டுமே மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுவிடாது. ஒரு முதியவருக்கு அப்படி ஓர் உதவி எண் இருப்பது தெரியவில்லை என்றாலோ, அவரிடம் கைப்பேசி இல்லை என்றாலோ அல்லது அருகில் உதவிக்கு யாரும் இல்லை என்றாலோ அந்த உதவி எண்ணால் உதவ முடியாது.                         மிகக் கடுமையான வெயில் காலத்தில், காற்றோட்டம் இல்லாத ஒரு வீட்டை வெறும் முதியோர் இல்லக் கொள்கைகளால் பாதுகாப்பானதாக மாற்றிவிட முடியாது.


பெரும்பாலும் முதியவர்களை ஓய்வூதியம் பெறுபவர்களாக, நோயாளிகளாக அல்லது நலத்திட்டப் பலன்களைப் பெறுபவர்களாக மட்டுமே அரசாங்கம் பார்க்கிறது. ஆனால், காலநிலை மாற்றம் என்பது, முதியவர்களைக் கடுமையான வானிலை பாதிப்புகளுக்கு எளிதில் ஆளாகக்கூடிய ஒரு மக்கள்தொகையாகவும் பார்க்க வேண்டியதை அவசியமாக்குகிறது.


வயதானவர்கள் அதிகம் வாழும் நாடுகள் இந்த ஆபத்தை எவ்வாறு சமாளித்து வருகின்றன?


இதற்கு ஜப்பான் ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. அது முதியவர்கள் அதிகம் வாழும் ஒரு நாடாகும், அதேநேரத்தில் இயற்கை பேரிடர்களுடனேயே வாழப் பழகிய ஒரு சமூகமும் ஆகும். இதன் காரணமாகவே, அவர்கள் முதியோர் பராமரிப்பையும் பேரிடர் காலப் பாதுகாப்பையும் ஒன்றாக இணைக்கத் தொடங்கியுள்ளனர்.


அங்குள்ள உள்ளூர் நிர்வாகங்கள் கடுமையான வெப்ப அலை எச்சரிக்கை அமைப்புகளைப் பயன்படுத்துகின்றன. ஒரு பேரிடர் வருவதற்கு முன்பாகவே, அதனால் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கும் முதியவர்களைப் பேரிடர் திட்டங்கள் மூலம் முன்கூட்டியே கண்டறிகின்றனர். மேலும், அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ நிவாரண உதவிகளுடன், உள்ளூர் மக்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் ஆதரவு அமைப்புகளும் அங்குச் செயல்படுகின்றன.                ஜப்பானின் நீண்டகால முதியோர் பராமரிப்பு அமைப்பானது, ஆபத்தில் இருக்கும் முதியவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உதவ உள்ளூர் நகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுகிறது.


இந்தியாவில் நிலவும் மக்கள்தொகை அளவு, வறுமை, வீட்டு வசதிகள் மற்றும் குடும்பக் கட்டமைப்புகள் முற்றிலும் வேறானவை என்பதால், நம்மால் இந்த ஜப்பான் மாதிரியை அப்படியே முழுமையாகப் பிரதிபலிக்க முடியாது.                                          ஆனால், வெறும் எச்சரிக்கை அமைப்புகள் மட்டும் போதாது என்ற பாடம் நமக்குத் தெளிவாகப் புரிகிறது. பேரிடர் வருவதற்கு முன்பே முதியவர்களைக் கண்டறிய வேண்டும், பாதிப்பின்போது அவர்களைச் சென்றடைய வேண்டும், அதற்குப் பிறகும் அவர்களுக்குத் தேவையான ஆதரவைத் தொடர்ந்து வழங்க வேண்டும்.


இந்தியாவில் உள்ள முதியவர்கள் ஏற்கனவே கடுமையான வெப்ப அலைகள், வெள்ள பாதிப்பு மற்றும் வறட்சிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.                                    பல முதியவர்கள் மிகக் குறைந்த வருமானம், மோசமான வீட்டு வசதி, பலவீனமான ஆரோக்கியம் மற்றும் நிலையற்ற பராமரிப்புச் சூழலில்தான் இவற்றை எதிர்கொள்கின்றனர். இந்தியாவின் முதியோர் மக்கள்தொகை அதிகரித்து வரும் நிலையில், இந்த விஷயம் வெறும் சாதாரணக் சமூக நலக் கவலையாக மட்டும் இருக்கப் போவதில்லை. மாறாக, இது பொது சுகாதாரம், பேரிடர் மேலாண்மைத் திட்டமிடல் மற்றும் மனித கண்ணியம் ஆகியவற்றிற்கான ஒரு முக்கியச் சோதனையாக மாறப்போகிறது.


நேஹால் சர்மா, ‘Gateway Research’ அமைப்பின் துணை தேசிய திட்டத் தலைவராகவும், பவ்யா கபூர், ‘Gateway Research’ அமைப்பின் மூத்த ஆராய்ச்சி மற்றும் கொள்கை இணைப்பாளராகவும் உள்ளனர்.



Original Link: For ageing India, why climate change poses a public health threat.

Share:

வெளிநாட்டு நாணயத்தில் வைக்கப்படும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான (NRI) வங்கிக் கணக்கு வைப்புத்தொகைகள் மற்றும் மாற்றத் திட்டம் (swap scheme) என்பது என்ன? -குஷ்பூ குமாரி

13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ரிசர்வ் வங்கி ஏன் வெளிநாட்டு நாணயத்தில் வைக்கப்படும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான (NRI) வங்கி கணக்கு வைப்புத்தொகை மாற்றுத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தியுள்ளது? வெளிநாட்டு நாணயத்தில் வைக்கப்படும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான (Foreign Currency Non-Resident (Bank) Account (FCNR(B))) வைப்புத்தொகைகள், டாலர்-ரூபாய் மாற்றுகள், பிடித்த வரி மற்றும் இந்தியாவிற்கு வெளிநாட்டு மூலதன வரவை ஈர்ப்பதில் அவற்றின் பங்கு ஆகியவற்றை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.


தற்போதைய செய்தி :


ரிசர்வ் வங்கி ஜூன் 23 அன்று, இந்திய வங்கிகள், அவற்றின் வெளிநாட்டுக் கிளைகள் உட்பட, வெளிநாட்டில் வசிக்கும் கணக்குதாரர்களுக்குக் கடன் வழங்கவும் அல்லது புதிய மாற்று வசதியின்கீழ் திரட்டப்பட்ட வெளிநாட்டு நாணயத்தில் வைக்கப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான (NRI) வங்கி வைப்புத்தொகைகளுக்கு ஈடாக வெளிநாட்டுக் கடன் வழங்குநர்களுக்கு ஆதரவாக காத்திருப்பு கடன் கடிதங்களை (Standby Letters of Credit (SBLC)) வழங்கவும் அனுமதிக்கப்படுகின்றன என்று கூறியது.


முக்கிய அம்சங்கள்:


1. ஜூன் 8, 2026 தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை மூலம், செப்டம்பர் 2026 வரை திரட்டப்படும் 3 முதல் 5 ஆண்டுகள் வரையிலான புதிய வெளிநாட்டு நாணயத்தில் வைக்கப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான (Foreign Currency Non-Resident (Bank) Account (FCNR(B)) வைப்புத்தொகைகளுக்கு, அமெரிக்க டாலர்-ரூபாய் அந்நியச் செலாவணி பரிமாற்ற (forex swap) வசதியை ரிசர்வ் வங்கி  அறிமுகப்படுத்தியது. இது, இந்த வைப்புகளை வங்கிகள் ரிசர்வ் வங்கியுடன் ஒரு சலுகைக் கட்டணத்தில் மாற்றம் செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டு, அதன் மூலம் முழுமையான ஆபத்து மேலாண்மை உத்தி (hedging) செலவு ஈடுசெய்யப்படுகிறது


ஆபத்து மேலாண்மை உத்தி (hedging) செலவு என்பது, நாணய ஏற்ற இறக்கங்கள் போன்ற பாதகமான சந்தை அபாயங்களிலிருந்து ஒரு முதலீட்டைப் பாதுகாப்பதற்கான செலவைக் குறிக்கிறது.


2. ஆபத்து மேலாண்மை உத்தி சுமையை ஏற்றுக்கொள்வதன் மூலம், ரிசர்வ் வங்கி, வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான வைப்புத்தொகைகளை கடன் வழங்குநர்களுக்கு வெளிநாட்டு நிதியுதவிக்கான முக்கிய ஆதாரமாக மாற்றியுள்ளது. ஆபத்து மேலாண்மை உத்திச் சலுகைகளைக் கருத்தில் கொண்டு வங்கிகள் சரியான வட்டி விகிதங்களை வழங்கினால், அறிவிக்கப்பட்ட இந்த நடவடிக்கைகள் இந்தியச் சந்தைகளுக்குக் கூடுதலாக $50 பில்லியன் முதல் $70 பில்லியன் வரையிலான வெளிநாட்டு மூலதனத்தை ஈர்க்கக்கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.


3. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கி கணக்கு வைப்புத்தொகை மாற்ற  திட்டம், வெளிநாட்டு நிதியை இந்தியாவிற்குள் கொண்டுவரும்  மிகப்பெரிய பொறுப்பை ஏற்கும் என்ற நோக்கத்தோடு, 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வசதியானது, வைப்புத்தொகையின் உண்மையான தொகையை மட்டுமே உள்ளடக்கிய (வட்டிப் பகுதியை அல்ல), ரிசர்வ் வங்கியின்  மூலம்  ஒரு சாதாரண 'வாங்குதல்/விற்றல்' (buy/sell) அந்நியச் செலாவணி பரிமாற்ற ஒப்பந்தமாகும்.


4. இந்த முறை வெளிநாட்டு நாணயத்தில் வைக்கப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்கு வைப்புத்தொகை, மாற்ற திட்டம் அதிக முக்கியததுவம் வாய்ந்ததாக உள்ளது. 2013-ல், இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு 3.5% மானியம் வழங்கியது. இப்போது, ​​செப்டம்பர் 30 வரை திரட்டப்படும் புதிய மூன்று முதல் ஐந்தாண்டு வைப்புத்தொகைகளுக்கான வெளிநாட்டு செலாவணி விகித அபாயத்தை அதுவே முழுமையாக ஏற்கும்.




5. ஜூன் 8 அன்று இந்திய ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்களைக் கொண்ட சமீபத்திய வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான  வங்கி கணக்கு வைப்புத்தொகை மாற்ற வசதியானது, உடனடியாக அமலுக்கு வருகிறது. செப்டம்பர் 30 வரை திரட்டப்பட்ட வைப்புத்தொகைகளுக்கு இது அக்டோபர் 16 வரை செயல்முறையில் இருக்கும். வங்கிகள் இந்த வைப்புத்தொகைகளுக்குத் தங்களின் உள் கொள்கையின்படி விலை நிர்ணயம் செய்ய சுதந்திரம் பெற்றிருக்கும்.  ஆனால், அது இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட தற்போதைய வழிகாட்டுதல்களின்படியான ஒட்டுமொத்த உச்சவரம்பிற்குள் இருக்க வேண்டும்.



6. ஒரு வங்கி வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே இந்த மாற்ற வசதியைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று இந்திய ரிசர்வ் வங்கி கூறுகிறது. ஒரு வாரத்தில், ஒரு வங்கி ரிசர்வ் வங்கியுடன் மாற்றிக்கொள்ள தகுதியுடைய அதிகபட்ச அமெரிக்க டாலர் தொகை, அந்த வங்கி முந்தைய வாரம் அல்லது வாரங்களில் திரட்டிய தகுதியுள்ள FCNR(B) வைப்புத் தொகைகளின் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு சமமாக இருக்கும். மேலும், அந்த வைப்புத் தொகைகளுக்கு முன்பு இந்த ஸ்வாப் வசதியை பயன்படுத்தியிருக்கக் கூடாது.


7. வங்கிகள், ரிசர்வ் வங்கிக்கு $1 மில்லியன் மடங்குகளில் அமெரிக்க டாலர்களை விற்கலாம் மற்றும் அதே நேரத்தில், பரிமாற்றக் காலத்தின் முடிவில் அதே அளவு அமெரிக்க டாலர்களைத் திரும்ப வாங்கவும் ஒப்புக்கொள்ளலாம். இந்தப் பரிவர்த்தனையின் முதல் கட்டத்தில், வங்கியானது FBIL குறிப்பு விகிதத்தில்  ரிசர்வ் வங்கிக்கு அமெரிக்க டாலர்களை விற்கும்.


ஃபைனான்சியல் பெஞ்ச்மார்க்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், Financial Benchmarks India Private Limited, (FBIL)) என்பது ஃபைனான்சியல் பெஞ்ச்மார்க்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைக் குறிக்கிறது. இந்நிறுவனம் இந்திய நிதிச் சந்தைக்காக தினசரி பல்வேறு அளவுகோல் வட்டி விகிதங்களையும் வெளிநாட்டு செலாவணி குறிப்பு விகிதங்களையும் வெளியிடுகிறது.


8. இந்தக் கட்டமைப்பின்கீழ், வங்கிகள் ரொக்க இருப்பு விகிதம் (cash reserve ratio (CRR)) மற்றும் சட்டப்பூர்வ பணப்புழக்க விகிதம் (statutory liquidity ratio (SLR)) ஆகியவற்றைப் பராமரிப்பதிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.


ரொக்க இருப்பு விகிதம் (cash reserve ratio (CRR)) என்பது ஒரு வங்கியின் மொத்த வைப்புத்தொகையில், எளிதில் பணமாக்கக்கூடிய ரொக்கமாகப் பராமரிக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச சதவீதமாகும். சட்டப்பூர்வ பணப்புழக்க விகிதம் என்பது, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்குப் பணம் கடன் கொடுப்பதற்கு முன்பு, அதிக பணப்புழக்கம் உள்ள சொத்துக்களில் (ரொக்கம், தங்கம் அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரங்கள் போன்றவை) பராமரிக்க வேண்டிய வைப்புத்தொகையின் குறைந்தபட்ச சதவீதத்தைக் குறிக்கிறது.


வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான (Foreign Currency Non-Resident (Bank) Account (FCNR(B)) வைப்புத்தொகைகள் என்றால் என்ன?


1. வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான வைப்புத்தொகைகள் என்பது வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர் (Persons of Indian Origin (PIO)) மற்றும் வெளிநாட்டு இந்தியக் குடிமக்களுக்காக (Overseas Citizens of India (OCI)) வடிவமைக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட கால வைப்புத்தொகையாகும். இந்த வைப்புத்தொகைகள், கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் வருமானத்தை ரூபாயாக மாற்றவேண்டிய சூழல் இல்லாமல், தடையின்றி மாற்றத்தக்க வெளிநாடுச் செலாவணிகளில் வெளிநாட்டிலேயே வைத்திருக்க அனுமதிக்கின்றன.


2. இந்த வைப்புத்தொகைகள், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் நிதியை இந்திய ரூபாயாக மாற்றுவதற்குப் பதிலாக, அமெரிக்க டாலர், பவுண்ட் ஸ்டெர்லிங், யூரோ, ஜப்பானிய யென், ஆஸ்திரேலிய டாலர் மற்றும் கனடிய டாலர் போன்ற குறிப்பிட்ட வெளிநாட்டு நாணயங்களில் தங்கள் சேமிப்பை வைத்துக் கொள்ள அனுமதிக்கின்றன.



3. இந்திய வரிச் சட்டங்களின்படி, வைப்புத்தொகையாளர் வெளிநாட்டவராகத் தகுதிபெறும் பட்சத்தில், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான  வைப்புத்தொகைகளில் ஈட்டப்படும் வட்டிக்கு இந்தியாவில் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. தற்போதைய கட்டமைப்பின்கீழ், வங்கிகள் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பீட்டு விகிதங்களுடன் இணைக்கப்பட்ட வட்டி விகிதங்களை வழங்கலாம்.


4. இந்திய ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, 1975-ல் அறிமுகப்படுத்தப்பட்டு,   நடைமுறையில் இருந்த வெளிநாட்டு நாணயத்தில் வைக்கப்படும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்கு (Foreign Currency Non-Resident (Account)) திட்டத்திற்குப் பதிலாக, FCNR(B) திட்டம் மே 15, 1993 முதல் அமலுக்கு வந்தது. வெளிநாட்டு நாணயத்தில் வைக்கப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்கு (FCNR(A)) திட்டத்தில், அந்நியச் செலாவணி அபாயத்தை இந்திய ரிசர்வ் வங்கியும், பின்னர் இந்திய அரசும் ஏற்று வந்தன. மத்திய வங்கியின் இருப்புநிலைக் குறிப்பில் அது ஏற்படுத்திய தாக்கங்கள் மற்றும் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட துணை நிதிச் செலவுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, வெளிநாட்டு நாணயத்தில் வைக்கப்படும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்கு திட்டம் ஆகஸ்ட் 1994-ல் திரும்பப் பெறப்பட்டது.


வரி பிடித்தம்  


1. வெளிநாட்டு நிதிகளை ஈர்ப்பதற்கும் ரூபாயை நிலைப்படுத்துவதற்கும் உள்ள சிக்கல்களுக்கு இடையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (Foreign Institutional Investors (FIIs)) அரசுப் பத்திரங்களில் செய்யும் முதலீடுகள் மீதான நீண்ட கால மற்றும் குறுகிய கால வரிப்பிடித்ததையும், இந்தக் கடன் பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்தின்மீது அவர்கள் செலுத்தவேண்டிய வரிப் பிடித்ததையும்  ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது.


2. இந்த வரி விலக்கு முறை (scrapping) வருவதற்கு முன்பு, வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாங்கள் வைத்திருக்கும் அரசாங்கப் பத்திரங்கள் மூலம் பெறும் வட்டிக்கு, 20% பிடித்தம் செய்யும் வரியை செலுத்தி வந்தனர். 2023-ஆம் ஆண்டு வரை 5% என்ற சலுகை வரி விகிதம் நடைமுறையில் இருந்தது. அது முடிந்த பிறகு இந்த 20% வரி விதிக்கப்பட்டது. இது உலகின் அதிகமான வரிகளில் ஒன்றாகும்.


3. கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட கடும் உயர்வு உள்ளிட்ட அதிகரித்து வரும் வெளிப்புற அழுத்தங்களுடன் இந்தியா போராடி வரும் நிலையில், அதிக வரிப் பிடித்தமானது வெளிநாட்டு வரவுக்கு ஒரு தடையாகக் கருதப்படுகிறது.


4. வரிப் பிடித்தம் (Withholding tax (WHT)) என்பது வருமானத்தின் தொடக்க நிலையிலேயே வசூலிக்கப்படும் ஒரு வரியாகும். முதலீட்டாளர் அல்லது வெளிநாட்டு நிறுவனம் நிதியாண்டின் முடிவில் வரி செலுத்த காத்திருக்காமல், வருமானத்தை வழங்குபவர்  அந்த வருமானத்தில் ஒரு பகுதியை முன்கூட்டியே வரியாகக் கழித்துவிட்டு, மீதமுள்ள தொகையை பெறுபவருக்கு அனுப்ப வேண்டும் என்று அரசு கூறுகிறது.



5. வரிப் பிடித்தம் செய்யப்பட்ட தொகை பின்னர் நேரடியாக அரசாங்கத்திடம் செலுத்தப்படுகிறது. எளிமையாக, வேலைவாய்ப்பு, முதலீடுகள், உரிமத்தொகை அல்லது பிற வழிகள் மூலம் வருமானம் வரும் போதெல்லாம், அரசாங்கம் வரிப் பிடித்தம் செய்வதன் மூலம் முன்கூட்டியே வரி வசூலை உறுதி செய்கிறது.



Original Link: What are FCNR (B) deposits and swap scheme?

Share:

இந்திய ரிசர்வ் வங்கியின் சாதனை அளவிலான, ஈவுத்தொகைக்குப் (dividend) பின்னணியில் உள்ள பொருளாதாரம் குறித்து . . . -புஷ்பேந்திர சிங் மற்றும் அர்ச்சனா சிங்

இந்திய ரிசர்வ் வங்கி, 2025-26 ஆம் ஆண்டிற்காக ரூ. 2.87 லட்சம் கோடி என்ற சாதனை அளவிலான உபரித் தொகையை (ஈவுத்தொகையை) மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது. இந்த சாதனை அளவிலான உபரித் தொகைப் பரிமாற்றத்தை, பொதுவாக பொருளாதார சக்தியின் ஒரு எளிய அறிகுறியாகப் பார்க்காமல், பரந்த பேரியல் பொருளாதார நிகழ்வுகளின் பின்னணியில் ஏன் பார்க்க வேண்டும்?


அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தாலும், இடைக்கால அமைதி ஒப்பந்தத்தில் ஏதேனும் சாதகமற்ற நிலை ஏற்பட்டால், பணவீக்கம் குறித்த எதிர்பார்ப்புகள், சீர்குலைந்த முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்பு, தாமதமான முதலீட்டுச் செலவினங்கள், உணவுப் பாதுகாப்பு குறித்த கவலைகள், பலவீனமான நிதி நிலைத்தன்மை தொடர்பான கண்ணோட்டம் மற்றும் கட்டமைப்புரீதியாகக் குறைந்த வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் பொருள்சார் அபாயங்களை மீண்டும் தூண்டிவிடக்கூடும்.


இத்தகைய நிச்சயமற்ற சூழலில், இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த பெரிய உபரி நிதிப் பரிமாற்றம், ஏற்படக்கூடிய பொருளாதார தாக்கங்களைச் சமாளிக்க அரசாங்கத்திற்கு கூடுதல் நிதிச் சுதந்திரத்தை (fiscal space) வழங்குகிறது. கடந்த மாதம், 2025-26 நிதியாண்டிற்காக ரூ. 2.87 லட்சம் கோடி என்ற சாதனை அளவிலான உபரித் தொகையை ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு வழங்கியது. நிதிச் சுதந்திரம் கிடைப்பது கடினமாக இருக்கும் இக்காலத்தில், இது வெறும் ஒரு பரிமாற்றமாக மட்டும் இருக்கவில்லை. இது ஒரு பெரிய நிதிப் பாதுகாப்பு அரணாக அமைந்தது.


இருப்பினும், இந்த முக்கிய புள்ளிவிவரத்திற்குப் பின்னால் ஒரு சிக்கலான சூழல் உள்ளது. உள்நாட்டு நாணயத்தின் மதிப்பு பலவீனமடையும் அதே ஆண்டில் ஒரு மத்திய வங்கி சாதனை அளவிலான லாபத்தை ஈட்டினால் அதன் அர்த்தம் என்ன? இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த உபரித் தொகையை அரசாங்கம் வலிமையின் அடையாளமாகப் பார்க்க வேண்டுமா? அல்லது மத்திய வங்கியின் கணக்குகளில் பிரதிபலிக்கும் ஒரு எச்சரிக்கையாக இதைப் புரிந்துகொள்ள வேண்டுமா?


இந்திய ரிசர்வ் வங்கியின் ஈவுத்தொகை : எதிர்பாராத வரவா அல்லது எச்சரிக்கையா?


புவிசார் அரசியல் நிலைமைகள், உலகளாவிய வர்த்தகத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மை மற்றும் பாதகமான வானிலை நிலவரங்கள் ஆகியவற்றால் உருவாகும் அபாயங்கள் பொருளாதாரக் கண்ணோட்டத்தை குறையச் செய்வதால், இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழு (Monetary Policy Committee), அதன் வளர்ச்சி மற்றும் பணவீக்கக் கணிப்புகள் இரண்டையும் மறுமதிப்பீடு செய்தது. ஜூன் 5 அன்று நடைபெற்ற கூட்டத்தில், இந்திய ரிசர்வ் வங்கி வளர்ச்சிக் கணிப்பை 6.9%-இலிருந்து 6.6%-ஆகக் குறைத்து, பணவீக்கக் கணிப்பை 4.6%-இலிருந்து 5.1%-ஆக உயர்த்தியது.


இத்தகைய சூழலில், மத்திய வங்கி தனது உபரி நிதியை அரசுக்கு மாற்றுவது நிதிரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. பொது நிதியில் நெருக்கடியை எதிர்கொள்ளும் ஒரு அரசாங்கத்திற்கு, இத்தகைய பெரிய நிதிப் பரிமாற்றம் உடனடி நிவாரணத்தை அளிக்கிறது. இது கடன் வாங்கும் அழுத்தத்தைக் குறைக்கலாம், அரசின் நிதி இலக்குகளை ஆதரிக்கலாம், மூலதனச் செலவினங்களுக்கு நிதியளிக்கலாம் அல்லது பிற இடங்களில் உள்ள பற்றாக்குறைகளை ஈடுசெய்யலாம்.


இருப்பினும், இந்த உபரித் தொகையை மட்டும் தனியாகக் கருதிவிட முடியாது. இந்திய ரிசர்வ் வங்கியின் லாபமும் பொருளாதாரத்தின் ஆரோக்கியமும் ஒன்றல்ல. ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவது, மத்திய வங்கியின் வெளிநாட்டுச் சொத்துக்கள் மீதான அந்நியச் செலாவணி சொத்துக்களின் மீதான பரிமாற்ற லாபத்தை அதிகரிக்கக்கூடும். மேலும், கையிருப்பு நிதியைப் பயன்படுத்துவது கணக்கியல்ரீதியான நம்பிக்கையை உருவாக்கக்கூடும். இந்தக் காரணிகள் ரிசர்வ் வங்கியின் இருப்புநிலைக் குறிப்பை (balance sheet) வலுப்படுத்தக்கூடும் என்றாலும், அவற்றை உருவாக்கிய பேரியல் பொருளாதார நெருக்கடியை இவை நீக்கிவிடாது.



இந்த உபரித் தொகையை உருவாக்கிய பேரியல் பொருளாதார நெருக்கடி குறித்தும், இதை ஒரு நிதி வசதியாகக் கொண்டாட வேண்டுமா என்பது குறித்தும் வலுவாக ஆராய்வதற்கு முன், இந்திய ரிசர்வ் வங்கி எவ்வாறு உபரித் தொகையை அரசாங்கத்திற்கு மாற்றுகிறது என்பதைப் புரிந்துகொள்வோம்.


இந்திய ரிசர்வ் வங்கியின் உபரித் தொகை அரசுக்கு எவ்வாறு மாற்றப்படுகிறது?


1934-ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் 47-வது பிரிவின்படி, கையிருப்பு மற்றும் எதிர்பாராத செலவினங்களுக்கான ஒதுக்கீடுகளைச் செய்தபிறகு, மீதமுள்ள உபரித் தொகையை இந்திய ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு மாற்ற வேண்டும். இது மத்திய வங்கியிலிருந்து தன்னிச்சையாக எடுக்கப்படும் தொகை அல்ல, இது ஒரு சட்டப்பூர்வமான பரிமாற்றமாகும்.


2019-ம் ஆண்டு முதல், பிமல் ஜலான் குழுவின் (2018) பரிந்துரைகளைத் தொடர்ந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருளாதார மூலதனக் கட்டமைப்பு (Economic Capital Framework (ECF)) மூலமும் இந்த நிதிப் பரிமாற்றம் வழிநடத்தப்படுகிறது. இக்கட்டமைப்பு நிதி மாற்றும் செயல்முறையை மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்டதாக மாற்றுகிறது. பணவியல் மற்றும் நிதி நிலைத்தன்மையைப் பாதுகாக்க, தனக்கு எவ்வளவு மூலதனம் மற்றும் பற்றாக்குறை ஒதுக்கீடுகள் தேவை என்பதை இந்திய ரிசர்வ் வங்கி முதலில் தீர்மானிக்க வேண்டும். அதன் பிறகு, மீதமுள்ள உபரியை மட்டுமே அரசாங்கத்திற்கு மாற்ற முடியும்.


இதன் காரணமாகவே, ₹2.87 லட்சம் கோடி (₹2.87 trillion) அளவிலான நிதி மாற்றமானது, இந்திய ரிசர்வ் வங்கி தனது கையிருப்பு நிதியை முழுமையாகக் காலி செய்துவிட்டது என்று பொருள்படாது. 2025-26 ஆம் ஆண்டில், முந்தைய ஆண்டில் ரூ. 448.62 மில்லியனாக இருந்த நிலையில், அவசரக்கால நிதியிலும் (contingency fund) ரூ. 1.09 டிரில்லியனையும் பரிமாற்றம் செய்துள்ளது. இது, அரசாங்கம் உபரித் தொகையைப் பெறுவதற்கு முன்பே, இந்திய ரிசர்வ் வங்கி தனது சொந்த பற்றாக்குறை காப்பு நிதியை (own risk buffer) வலுப்படுத்தியுள்ளது என்பதைக் காட்டுகிறது.




எனவே, இவ்வளவு பெரிய அளவிலான ஈவுத்தொகை (dividend) வழங்கப்பட்டிருப்பது, ரிசர்வ் வங்கி வலுவான வருவாயை ஈட்டியுள்ளதையே உணர்த்துகிறது. இதனால், ரிசர்வ் வங்கி எவ்வாறு வருவாயை ஈட்டுகிறது என்பதைப் புரிந்துகொள்வது அவசியமாகிறது.


இந்திய ரிசர்வ் வங்கி எவ்வாறு வருமானம் ஈட்டுகிறது?


இந்திய ரிசர்வ் வங்கியின் 2025-26-ஆம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையின்படி, அதன் மொத்த வருமானம் 2024-25 ஆம் ஆண்டில் ரூ. 3.38 டிரில்லியனிலிருந்து ரூ.4.28 டிரில்லியனாக உயர்ந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி மூன்று முக்கிய வழிகளில் வருமானம் ஈட்டுகிறது. அவை,


1. இது உள்நாட்டுப் பத்திரங்கள் மீது வட்டியை ஈட்டுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி, திறந்த சந்தை நடவடிக்கைகள் மற்றும் பிற பணவியல் நடவடிக்கைகள் மூலம் பெருமளவிலான அரசுப் பத்திரங்களைக் கொண்டுள்ளது. 2025-26-ஆம் ஆண்டில், ரூபாய் பத்திரங்கள் மீதான வட்டி 1.18 டிரில்லியன் ஆக இருந்தது. இது அதன் உள்நாட்டுப் பத்திர இருப்புகளிலிருந்து (securities) கிடைக்கும் வழக்கமான வருமானமாகும்.


2. இந்திய ரிசர்வ் வங்கி வெளிநாட்டுப் பத்திரங்கள் மீது வட்டி வருவாயை ஈட்டுகிறது. தனது அந்நியச் செலாவணி கையிருப்பை நிர்வகிப்பதன் ஒரு பகுதியாக, இந்திய ரிசர்வ் வங்கி அரசுப் பத்திரங்கள் மற்றும் கருவூலக் கருவிகளில் முதலீடு செய்கிறது. 2025-26-ஆம் ஆண்டில் வெளிநாட்டுப் பத்திரங்கள் மூலமான வட்டி வருமானம் ரூ. 1.08 டிரில்லியனாக இருந்தது. இதுவும் வட்டி ஈட்டும் வெளிநாட்டுச் சொத்துக்களிலிருந்து கிடைக்கும் ஒரு சாதாரண வருமானமே ஆகும்.


3. மூன்றாவது வருவாய் ஆதாரம் மற்றும் இந்த ஆண்டில் மிக முக்கியமானது அந்நியச் செலாவணி பரிவர்த்தனைகள் மூலம் கிடைத்த பரிமாற்ற லாபமாகும். "அந்நியச் செலாவணி பரிவர்த்தனைகள் மூலம் கிடைத்த பரிமாற்ற லாபம்/நஷ்டம்" என்பதன்கீழ் இந்திய ரிசர்வ் வங்கி ரூ. 1.69 டிரில்லியனைப் பதிவு செய்தது. இது அதன் இதர வருமானத்தின் ஒரு பெரும் பகுதியாகவும், அரசாங்கத்திற்கு சாதனை அளவிலான உபரித் தொகை மாற்றப்பட்டதற்கான ஒரு முக்கிய காரணமாகவும் அமைந்தது.


வணிக வங்கிகள் வருவாய் ஈட்டும் அதே முறையில் ஒரு மத்திய வங்கி வருவாய் ஈட்டுவதில்லை என்பதைக் கவனத்தில் கொள்வது அவசியம். இந்திய ரிசர்வ் வங்கியின் வருவாய் அதன் தனித்துவமான இருப்புநிலைக் குறிப்புடன் (balance sheet) தொடர்புடையது. அது நாணயம் மற்றும் வங்கிக் கையிருப்பு போன்ற குறைந்த செலவிலான பொறுப்புகளை (liabilities) உருவாக்குகிறது. மேலும், அரசுப் பத்திரங்கள், வெளிநாட்டுப் பத்திரங்கள், தங்கம் மற்றும் அந்நியச் செலாவணிக் கையிருப்பு போன்ற வருமானம் ஈட்டும் சொத்துக்களையும் வைத்திருக்கிறது. இந்தச் சொத்துக்களின் மீதான வருமானத்திற்கும் அதன் பொறுப்புகளின் செலவிற்கும் இடையிலான வேறுபாடு, கையிருப்பு மேலாண்மை மற்றும் அந்நியச் செலாவணிக் கையிருப்பு ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் ஆதாயங்களுடன் சேர்ந்து வருமானத்தை உருவாக்குகிறது.


2025-26 இல், இக்காரணிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டன. வட்டி வருமானம் அதிகரித்ததுடன், அந்நியச் செலாவணி நடவடிக்கைகள் பெரும் ஆதாயங்களை ஈட்டின. இதன் விளைவாக, இந்திய ரிசர்வ் வங்கி ஒரு அசாதாரணமான உபரி நிதியை அறிவித்தது. ஆனால், அது நாணய மதிப்பின் மீதான அழுத்தம் மற்றும் வெளிப்புற நிச்சயமற்ற தன்மை நிலவிய ஒரு ஆண்டில் ஈட்டப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் லாபம் உண்மையில் எதைக் குறிக்கிறது என்பதை தெரிந்துகொள்ள, இந்தச் சூழலைப் புரிந்துகொள்வது அவசியமாகும்.

நெருக்கடியிலிருந்து லாபம் கிடைக்கும்போது


2025-2026 காலகட்டத்தில், ரூபாயின் மதிப்பு கடுமையாகச் சரிந்தது. இந்திய ரிசர்வ் வங்கியின் குறிப்பு அந்நியச் செலாவணி விகிதம், ஜூன் 3, 2025 அன்று ஒரு டாலருக்கு ரூ. 85.46-ஆக இருந்த நிலையில் இருந்து, ஜூன் 2, 2026 அன்று ஒரு டாலருக்கு ரூ. 95.78-ஆக உயர்ந்தது. இது ஒரு கவலைக்கிடமான முரண்பாட்டை உருவாக்குகிறது. ரூபாய் மதிப்பு அழுத்தத்திற்கு உள்ளான நிலையிலும், இந்திய ரிசர்வ் வங்கி தனது அந்நியச் செலாவணி நடவடிக்கைகளிலிருந்து கணிசமான லாபத்தை ஈட்டியது.


இதன் பொருள், பலவீனமான ரூபாயிலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி லாபம் ஈட்ட முயன்றது என்பதல்ல. அதன் அந்நியச் செலாவணி நடவடிக்கைகள், லாபத்தை அதிகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை அல்ல, மாறாக நாணயச் சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை நிர்வகிப்பதை நோக்கமாகக் கொண்டவை ஆகும். இருப்பினும், இந்தச் சாதனை அளவிலான உபரியை (surplus), பொருளாதார வலிமையின் ஒரு எளிய அறிகுறியாகக் கருதிவிட முடியாது. இந்த உபரியை உருவாக்கிய அதே ஆண்டில், பரந்த பேரியல் பொருளாதாரச் சூழலிலும் நெருக்கடிக்கான அறிகுறிகள் காணப்பட்டன.


முதலாவதாக, அந்நிய மூலதன வரத்து குறைவான திருப்திகரமான நிலையிலேயே இருந்தது. 2026-ல் ஜூன் 5 வரை, அந்நியப் பங்கு முதலீட்டாளர்கள் (Foreign Portfolio Investors (FPI)) சுமார் ரூ.2.55 லட்சம் கோடி மதிப்பிலான நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்துள்ளனர். இதில் ஏறக்குறைய ரூ. 2.68 லட்சம் கோடி பங்கு வெளிப்பாய்வுகளே முதன்மையானவை. பிப்ரவரி மாதத்தைத் தவிர, மற்ற எல்லா மாதங்களிலும் நிகர விற்பனையே காணப்பட்டது. இது வழக்கமான சந்தை ஏற்ற இறக்கங்களைக் காட்டிலும், வெளிநாட்டு முதலீட்டாளர்களிடையே நிலவும் தொடர்ச்சியான எச்சரிக்கை உணர்வையே சுட்டிக்காட்டுகிறது.


இரண்டாவதாக, வெளிநோக்கிய வெளிநாட்டு நேரடி முதலீடு (Overseas Direct Investment (ODI)) வலுவாக இருந்து, 2023-24ல் 14.45 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 2024-25ல் 23.66 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது. இது மூலதனம் வெளியேறுவதைக் (capital flight) குறிக்கவில்லை. ஆனால், வெளிநாட்டு மூலதனம் அதிக எச்சரிக்கையுடன் செயல்பட்டபோதும் இந்திய நிறுவனங்கள் தொடர்ந்து வெளிநாடுகளில் முதலீடு செய்தன என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.


மூன்றாவதாக, இந்தியாவின் சரக்கு வர்த்தகப் பற்றாக்குறை (2025-26 நிதியாண்டில் 119.30 பில்லியன் அமெரிக்க டாலர்) அழுத்தத்திற்கான ஒரு கட்டமைப்புரீதியான காரணியாகத் தொடர்ந்தது. இது நாட்டின் வெளிநாட்டு வர்த்தகக் கணக்கில் தொடர்ந்து சுமையை ஏற்படுத்தியது.


எனவே, பணமதிப்பு தொடர்பான அழுத்தம், கையிருப்பு மேலாண்மையில் உள்ள சவால்கள், நிலையற்ற மூலதனப் புழக்கம் மற்றும் வர்த்தக ஏற்றத்தாழ்வு ஆகியவை நிலவிய ஓர் ஆண்டில், இந்திய ரிசர்வ் வங்கி தனது சாதனை அளவிலான லாபத்தை ஈட்டியுள்ளது. இந்த உபரித் தொகை உண்மையானதுதான். ஆனால் அதற்குப் பின்னணியில் உள்ள நிலைமைகள் ஒரு எச்சரிக்கையை விடுக்கின்றன.


இந்த உபரித் தொகையை அரசின் நிதி வருவாயாகக் கருதலாமா?


இது ஒரு முக்கியமான கொள்கைரீதியான கேள்வியை எழுப்புகிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் ரூ. 2.87 டிரில்லியன் தொகையை சாதாரண நிதி வருவாயாகக் கருத வேண்டுமா? மேலோட்டமாகப் பார்க்கையில், இதற்கான பதில் எளிமையானதாகத் தோன்றலாம். இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் 47-வது பிரிவின் கீழ் இந்த நிதிப் பரிமாற்றம் அனுமதிக்கப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் கணக்குகள் சுதந்திரமாகத் தணிக்கை செய்யப்படுகின்றன. மேலும், உபரியை அறிவிப்பதற்கு முன்பே, எதிர்பாராத செலவுகள் மற்றும் நிதி அபாயங்களுக்காக அது போதுமான ஒதுக்கீடுகளைச் செய்துள்ளது. எனவே, அரசு சட்டப்பூர்வமாக இந்தப் பணத்தைப் பெற்றுப் பயன்படுத்த முடியும்.


இருப்பினும், பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது எச்சரிக்கை தேவை. இந்த உபரித் தொகையின் ஒரு பகுதி அந்நியச் செலாவணி மூலம் கிடைத்த லாபமாக இருக்கலாம். இத்தகைய லாபங்கள் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் வெளிப்புற பொருளாதார அழுத்தங்களுடன் தொடர்புடையதாக இருந்தால், அந்தப் பரிமாற்றத்தை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். இந்த வருமானம் என்பது வரி வருவாய் அல்லது பொருளாதார வளர்ச்சியின் மூலம் கிடைக்கும் வருவாயிலிருந்து மாறுபட்டது.


மத்திய வங்கியின் உபரித் தொகைகள் நிலையற்றவை என்பதால் இந்த வேறுபாடு முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு ஆண்டில் அந்நியச் செலாவணி மாற்ற விகிதத்தால் கிடைக்கும் லாபம் கணிசமாக இருக்கலாம். மற்றொரு ஆண்டில், அவை கடுமையாகக் குறையலாம் அல்லது எதிர்மறையாகவும் மாறக்கூடும். அன்றாடச் செலவினங்களுக்காக அரசாங்கம் இதுபோன்ற நிதிப் பரிமாற்றங்களைச் சார்ந்திருக்கத் தொடங்கினால், உபரி நிதி குறையும்போது இது ஒரு தாக்கத்தை எதிர்கொள்ள நேரிடலாம்.


இந்திய ரிசர்வ் வங்கியின் உபரி நிதிப் பரிமாற்றத்தை ஒரு நிரந்தர வருவாய் ஆதாரமாகக் கருதாமல், ஒரு முறை வழங்கப்படும் பாதுகாப்பு வளையமாகக் கருதுவதே பாதுகாப்பான அணுகுமுறையாக இருக்கலாம். அது கடன் வாங்கும் அழுத்தத்தைக் குறைக்கலாம் அல்லது மூலதனச் செலவினங்களுக்கு ஆதரவளிக்கலாம். இருப்பினும், இது நீடித்த வருவாய் திரட்டலுக்கோ அல்லது சிறந்த நிதி மேலாண்மைக்கோ மாற்றாக ஆகிவிடக் கூடாது.


Original Link: The economics behind the RBI’s record dividend.

Share:

இந்தியாவில் விபத்துகளுக்கான உடனடி மருத்துவச் சிகிச்சையைப் (trauma care) பெறுவதற்கான வழிகளைச் சீரமைத்தல். -பியூஷ் திவாரி

நீதித்துறையின் கண்காணிப்பு, விபத்து அல்லது விபத்துகளுக்கான அவசர மருத்துவச் சிகிச்சை (trauma care) குறித்த அரசியலமைப்பு உரிமையைச் செயல்படுத்த உதவக்கூடும்.


2026-ம் ஆண்டு மே 26 அன்று, இந்திய உச்சநீதிமன்றம் பொது சுகாதாரக் கொள்கையில் முக்கியத் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. 2024-ம் ஆண்டு அக்டோபரில் சேவ்லைஃப் அறக்கட்டளை (SaveLIFE Foundation) தாக்கல் செய்த ஒரு ரிட் மனுவை விசாரித்த, நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் அதுல் எஸ். சந்தூர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, சேவ்லைஃப் அறக்கட்டளை மற்றும் பிறர் vs இந்திய யூனியன் மற்றும் பிறர் வழக்கில் (SaveLIFE Foundation & Anr. vs Union of India & Ors), அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ் உள்ள வாழ்வதற்கான உரிமையின் ஒரு ஒருங்கிணைந்த பகுதிதான் விபத்து சிகிச்சைக்கான உரிமை என்று தீர்ப்பளித்தது. இந்த உரிமை, விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்து உறுதியான மருத்துவமனை சிகிச்சை கிடைக்கும் வரை நீட்டிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்த நீதிமன்றம், ஒன்றிய அரசு, மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கு மூன்று முதல் ஆறு மாதங்கள் வரையிலான காலக்கெடுவுடன் ஒன்பது கட்டாய வழிகாட்டுதல்களை வழங்கியது.




தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி, சாலை விபத்துகள், கீழே விழுதல், தீக்காயங்கள், நீரில் மூழ்குதல், தொழிற்சாலை விபத்துகள், தீ விபத்துகள் மற்றும் பேரழிவுகள் போன்ற விபத்துகளால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4.67 லட்சம் இந்தியர்கள் உயிரிழக்கின்றனர். சாலை விபத்துகளால் மட்டும் கிட்டத்தட்ட 1.77 லட்சம் மரணங்கள் நிகழ்கின்றன. 18 முதல் 45 வயதுக்குட்பட்ட இந்தியர்களிடையே, விபத்துகளால் ஏற்படும் மரணங்களே முதன்மையான காரணமாகும். சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதன் மூலம் சாலை விபத்து மரணங்களில் பாதியைத் தடுக்க முடியும் என்று சட்ட ஆணையம் (201-வது அறிக்கை) மதிப்பிட்டுள்ளது. அதேசமயம், 2021-ம் ஆண்டின் நிதி ஆயோக்-எய்ம்ஸ் அவசர மற்றும் விபத்து சிகிச்சை அறிக்கை (NITI Aayog-AIIMS Emergency and Injury Care Report), குறைந்தது 30% மரணங்கள் அவசரகால நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதங்களுடன் தொடர்புடையவை என்று கண்டறிந்துள்ளது. இந்தியாவில் கொள்கைகளுக்கோ வழிகாட்டுதல்களுக்கோ பற்றாக்குறை இல்லை. ஆனால், சீரான, அமல்படுத்தக்கூடிய விபத்து சிகிச்சைக்கான ஒரு கட்டமைப்புதான் இல்லாமல் இருக்கிறது.


உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பளித்துள்ளது?


இந்த அமர்வு முந்தைய சட்டக் கோட்பாடுகளின் அடிப்படையில் தீர்ப்பை வழங்கியது. பர்மானந்த் கட்டாரா vs இந்திய ஒன்றியம்-1989 (Parmanand Katara vs Union of India) வழக்கில், அவசரகால உதவி வழங்குவது மருத்துவர்களின் கடமை என்பதை நீதிமன்றம் அங்கீகரித்தது. பச்சிம் பங்கா கேத் மஸ்தூர் சமிதி vs மேற்கு வங்க அரசு-1996 (Paschim Banga Khet Mazdoor Samiti vs State of West Bengal) வழக்கில், அவசரகால சிகிச்சைக்கான அணுகலை சட்டப்பிரிவின் 21-வது பிரிவில் சேர்த்தது. தற்போதைய உத்தரவில், சட்டப்பிரிவின் 21-வது பிரிவு, காயமடைந்த ஒருவரை மருத்துவ சிகிச்சையுடன் இணைக்கும் முழு தொடர்பையும் உள்ளடக்கியது என்று நீதிமன்றம் கூறியது. இதன் பொருள், அருகில் இருப்பவர், அவசரகால அழைப்பு, அவசர ஊர்தி, துணை மருத்துவர், சிகிச்சை பெறும் வசதி ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த வரையறை, ஒரு ஒருங்கிணைந்த விபத்து சிகிச்சை அமைப்பை உருவாக்கி நிலைநிறுத்துவதற்கான ஒரு நேர்மறையான கடமையை அரசுக்கு விதிக்கிறது.


இது முக்கியமானது, ஏனெனில் அதிர்ச்சிகரமான விபத்துகளில் உயிர் பிழைப்பது என்பது தனிப்பட்ட நிறுவனங்களைவிட, அமைப்புகளையே சார்ந்துள்ளது. நன்கு வசதிகள் கொண்ட ஒரு மருத்துவமனையால், தாமதமாக வரும் ஆம்புலன்ஸை ஈடுசெய்ய முடியாது. அருகில் இருப்பவர் அழைக்கப் பயந்தால், ஆம்புலன்ஸால் உதவ முடியாது. சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு வராத ஒரு நோயாளியை, விபத்து சிகிச்சை நிபுணரால் காப்பாற்ற முடியாது.


ஒரு கூட்டுறவு கூட்டாட்சி அணுகுமுறை


ஏழாவது அட்டவணையில் பொது சுகாதாரம், மருத்துவமனைகள் மற்றும் அவசர ஊர்தி சேவைகள் மாநிலப் பட்டியலில் இடம்பெறுவதால், சீரான விபத்து சிகிச்சைக் கட்டமைப்பிற்கு ஒன்றியத்திற்கும் மாநிலங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பு அவசியமாகிறது. 34 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களால் தாக்கல் செய்யப்பட்ட இணக்க உறுதிமொழிப் பத்திரங்கள் மற்றும் தகவல் குறிப்புகள், ஒன்றியக் கொள்கைகளைச் செயல்படுத்தவும் விபத்து சிகிச்சையைத் தரப்படுத்தவும் உள்ள விருப்பத்தைக் காட்டுகின்றன. மத்திய அரசு ஒரு ஊக்குவிப்பாளராகச் செயல்பட வேண்டும் என்ற தலைமை வழக்கறிஞரின் சமர்ப்பிப்பை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இரு மட்ட அரசாங்கங்களும் "தொடர்ச்சியான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளை" மேற்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தது. இந்த வழிகாட்டுதல்கள் அரசியலமைப்பு அதிகாரப் பிரிவினையை மாற்றுவதில்லை. இவற்றில் பிரதமரின் சாலை விபத்து பாதிக்கப்பட்டோருக்கான மருத்துவமனை அனுமதி மற்றும் உறுதிசெய்யப்பட்ட சிகிச்சை (PM RAHAT), தேசிய ஆம்புலன்ஸ் குறியீடு AIS-125, அவசரகால பதில் ஆதரவு அமைப்பு (ERSS)-112, அவசரகால மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர் (EMT) பாடத்திட்டம், நல்ல சமாரியன் விதிகள் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் அதிர்ச்சி சிகிச்சை வழிகாட்டுதல்கள் ஆகியவை அடங்கும்.


இந்த வழிகாட்டுதல்கள் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தகவல் தொடர்பைப் பொறுத்தவரை, அனைத்து அவசர எண்களும் (100, 101, 102, 108, 1033, 1091 மற்றும் அவற்றின் மாநில எண்கள்) தீவிர ஊடக விளம்பரத்துடன், மூன்று மாதங்களுக்குள் உதவி எண் 112-இல் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். பார்வையாளர் பாதுகாப்பைப் பொறுத்தவரை, ஒவ்வொரு மாநிலமும், மாநில மற்றும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு அதிகாரிகளுடன், நல்ல உள்ளம் கொண்டவர்களுக்கான நேரடி மற்றும் டிஜிட்டல் குறைதீர்ப்பு அமைப்புகளை நிறுவ வேண்டும். மருத்துவமனைக்கு முந்தைய பதிலளிப்பைப் பொறுத்தவரை, பதிவுசெய்யப்பட்ட அனைத்து பொது மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்களும் தேசிய ஆம்புலன்ஸ் நெறிமுறைக்கு (National Ambulance Code) இணங்க வேண்டும். அவை, உதவி எண் 112 உடன் நிகழ்நேரத்தில் (real-time) ஒருங்கிணைக்கப்பட்ட ஜிபிஎஸ் (GPS) வசதியைக் கொண்டிருக்க வேண்டும். மேலும், பதிலளிப்பு நேரங்கள் மற்றும் மருத்துவ விளைவுகளின் கட்டமைக்கப்பட்ட தணிக்கைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். மாநிலங்கள், தேசிய துணை மற்றும் சுகாதாரத் தொழில்கள் ஆணையத்தால் (National Commission for Allied and Healthcare Professions (NCAHP)) அறிவிக்கப்பட்ட 'அவசரகால மருத்துவத் தொழில்நுட்ப வல்லுநர்' (Emergency Medical Technician (EMT)) பாடத்திட்டத்தையும் பின்பற்ற வேண்டும். மருத்துவமனைகளைப் பொறுத்தவரை, அதிர்ச்சிகரமான மருத்துவ சிகிச்சை வசதிகள் தரப்படுத்தப்பட்டு, அவற்றின் திறன்கள் வெளிப்படையாகத் தெரியும்படி வகைப்படுத்தப்பட வேண்டும். நிதியைப் பொறுத்தவரை, சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கான மத்திய அரசின் பணமில்லா சிகிச்சைத் திட்டமான பிஎம் ரஹத் (PM RAHAT) திட்டத்தைச் செயல்படுத்த மாநிலங்களுக்கு எட்டு வாரங்கள் அவகாசம் உள்ளது. செயல்படுத்தப்படாவிட்டால், அது மோட்டார் வாகனச் சட்ட மீறலாகக் கருதப்படும். மேலும், ஒரு தேசிய மருத்துவ மீட்பு நெறிமுறை மற்றும் ஒரு காயப் பதிவேட்டுத் தரவு வடிவத்தை அறிவிக்குமாறும், மாநில காயப் பதிவேடுகள் ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட தேசியப் பதிவேட்டுடன் இணைக்கப்படுமாறும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தொடர்ச்சியாக, சவால்கள்


இந்த உத்தரவின் முக்கியத்துவம், அது அரசியலமைப்புரீதியாக அறிவிக்கப்பட்டிருப்பதில் மட்டுமல்ல, அதனை நடைமுறைப்படுத்தும் கட்டமைப்பிலும் அடங்கியுள்ளது. இந்த உத்தரவின் நகல்கள் ஒவ்வொரு மாநிலத்தின் தலைமைச் செயலாளருக்கும் அனுப்பப்படும். எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கைகள் நீதிமன்றப் பதிவகத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதைக் கண்காணிக்கும் பொறுப்பு இந்தியாவின் அட்டர்னி ஜெனரலிடம் (Attorney General) ஒப்படைக்கப்பட்டுள்ளது. கூடுதல் வழிகாட்டுதல்களுக்காக, இந்த வழக்கு சுமார் நான்கு மாதங்களில் மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

இதைச் செயல்படுத்துவது சவாலாக இருக்கும். மாநிலங்களின் செயல்பாட்டுத் திறனில் பெரும் வேறுபாடுகள் உள்ளன. நாடு முழுவதும் ஆம்புலன்ஸ் சேவைகள் சீரற்று உள்ளன. அவசர உதவி எண்களை ஒருங்கிணைப்பதும் நீண்டகாலமாகத் தாமதமாகி வருகிறது. இருப்பினும், செயலற்ற தன்மைக்கான பொறுப்பு இப்போது மாறியுள்ளது. மாநிலங்கள் இப்போது நீதிமன்றத்தின் முன் தங்கள் முன்னேற்றத்தை நிரூபிக்க வேண்டும். காயமடைந்த ஒரு இந்தியருக்கு, விபத்து அல்லது கீழே விழுந்த பிறகு, எந்த எண்ணை அழைப்பது, உதவி வருமா, அல்லது அருகில் திறமையான மருத்துவமனை உள்ளதா என்பது போன்ற கேள்விகள் இனி எழக்கூடாது. நீதிமன்றம் அரசியலமைப்புச் சட்டப் பிரச்சினையைத் தீர்த்துவிட்டது. சரியான நேரத்தில் மற்றும் திறம்பட அதிர்ச்சிகரமான சிகிச்சை ஒரு யதார்த்தமாக மாறுவதை அரசாங்கங்கள் இப்போது உறுதி செய்ய வேண்டும்.


பியூஷ் திவாரி என்பவர், சாலைப் பாதுகாப்பு மற்றும் அதிர்ச்சி சிகிச்சை மூலம் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான சேவ்லைஃப் ஃபவுண்டேஷனின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.


Original Link: Clearing the road to timely trauma care in India.

Share: