13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ரிசர்வ் வங்கி ஏன் வெளிநாட்டு நாணயத்தில் வைக்கப்படும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான (NRI) வங்கி கணக்கு வைப்புத்தொகை மாற்றுத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தியுள்ளது? வெளிநாட்டு நாணயத்தில் வைக்கப்படும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான (Foreign Currency Non-Resident (Bank) Account (FCNR(B))) வைப்புத்தொகைகள், டாலர்-ரூபாய் மாற்றுகள், பிடித்த வரி மற்றும் இந்தியாவிற்கு வெளிநாட்டு மூலதன வரவை ஈர்ப்பதில் அவற்றின் பங்கு ஆகியவற்றை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
தற்போதைய செய்தி :
ரிசர்வ் வங்கி ஜூன் 23 அன்று, இந்திய வங்கிகள், அவற்றின் வெளிநாட்டுக் கிளைகள் உட்பட, வெளிநாட்டில் வசிக்கும் கணக்குதாரர்களுக்குக் கடன் வழங்கவும் அல்லது புதிய மாற்று வசதியின்கீழ் திரட்டப்பட்ட வெளிநாட்டு நாணயத்தில் வைக்கப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான (NRI) வங்கி வைப்புத்தொகைகளுக்கு ஈடாக வெளிநாட்டுக் கடன் வழங்குநர்களுக்கு ஆதரவாக காத்திருப்பு கடன் கடிதங்களை (Standby Letters of Credit (SBLC)) வழங்கவும் அனுமதிக்கப்படுகின்றன என்று கூறியது.
முக்கிய அம்சங்கள்:
1. ஜூன் 8, 2026 தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை மூலம், செப்டம்பர் 2026 வரை திரட்டப்படும் 3 முதல் 5 ஆண்டுகள் வரையிலான புதிய வெளிநாட்டு நாணயத்தில் வைக்கப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான (Foreign Currency Non-Resident (Bank) Account (FCNR(B)) வைப்புத்தொகைகளுக்கு, அமெரிக்க டாலர்-ரூபாய் அந்நியச் செலாவணி பரிமாற்ற (forex swap) வசதியை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. இது, இந்த வைப்புகளை வங்கிகள் ரிசர்வ் வங்கியுடன் ஒரு சலுகைக் கட்டணத்தில் மாற்றம் செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டு, அதன் மூலம் முழுமையான ஆபத்து மேலாண்மை உத்தி (hedging) செலவு ஈடுசெய்யப்படுகிறது
ஆபத்து மேலாண்மை உத்தி (hedging) செலவு என்பது, நாணய ஏற்ற இறக்கங்கள் போன்ற பாதகமான சந்தை அபாயங்களிலிருந்து ஒரு முதலீட்டைப் பாதுகாப்பதற்கான செலவைக் குறிக்கிறது.
2. ஆபத்து மேலாண்மை உத்தி சுமையை ஏற்றுக்கொள்வதன் மூலம், ரிசர்வ் வங்கி, வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான வைப்புத்தொகைகளை கடன் வழங்குநர்களுக்கு வெளிநாட்டு நிதியுதவிக்கான முக்கிய ஆதாரமாக மாற்றியுள்ளது. ஆபத்து மேலாண்மை உத்திச் சலுகைகளைக் கருத்தில் கொண்டு வங்கிகள் சரியான வட்டி விகிதங்களை வழங்கினால், அறிவிக்கப்பட்ட இந்த நடவடிக்கைகள் இந்தியச் சந்தைகளுக்குக் கூடுதலாக $50 பில்லியன் முதல் $70 பில்லியன் வரையிலான வெளிநாட்டு மூலதனத்தை ஈர்க்கக்கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
3. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கி கணக்கு வைப்புத்தொகை மாற்ற திட்டம், வெளிநாட்டு நிதியை இந்தியாவிற்குள் கொண்டுவரும் மிகப்பெரிய பொறுப்பை ஏற்கும் என்ற நோக்கத்தோடு, 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வசதியானது, வைப்புத்தொகையின் உண்மையான தொகையை மட்டுமே உள்ளடக்கிய (வட்டிப் பகுதியை அல்ல), ரிசர்வ் வங்கியின் மூலம் ஒரு சாதாரண 'வாங்குதல்/விற்றல்' (buy/sell) அந்நியச் செலாவணி பரிமாற்ற ஒப்பந்தமாகும்.
4. இந்த முறை வெளிநாட்டு நாணயத்தில் வைக்கப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்கு வைப்புத்தொகை, மாற்ற திட்டம் அதிக முக்கியததுவம் வாய்ந்ததாக உள்ளது. 2013-ல், இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு 3.5% மானியம் வழங்கியது. இப்போது, செப்டம்பர் 30 வரை திரட்டப்படும் புதிய மூன்று முதல் ஐந்தாண்டு வைப்புத்தொகைகளுக்கான வெளிநாட்டு செலாவணி விகித அபாயத்தை அதுவே முழுமையாக ஏற்கும்.
5. ஜூன் 8 அன்று இந்திய ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்களைக் கொண்ட சமீபத்திய வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான வங்கி கணக்கு வைப்புத்தொகை மாற்ற வசதியானது, உடனடியாக அமலுக்கு வருகிறது. செப்டம்பர் 30 வரை திரட்டப்பட்ட வைப்புத்தொகைகளுக்கு இது அக்டோபர் 16 வரை செயல்முறையில் இருக்கும். வங்கிகள் இந்த வைப்புத்தொகைகளுக்குத் தங்களின் உள் கொள்கையின்படி விலை நிர்ணயம் செய்ய சுதந்திரம் பெற்றிருக்கும். ஆனால், அது இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட தற்போதைய வழிகாட்டுதல்களின்படியான ஒட்டுமொத்த உச்சவரம்பிற்குள் இருக்க வேண்டும்.
6. ஒரு வங்கி வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே இந்த மாற்ற வசதியைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று இந்திய ரிசர்வ் வங்கி கூறுகிறது. ஒரு வாரத்தில், ஒரு வங்கி ரிசர்வ் வங்கியுடன் மாற்றிக்கொள்ள தகுதியுடைய அதிகபட்ச அமெரிக்க டாலர் தொகை, அந்த வங்கி முந்தைய வாரம் அல்லது வாரங்களில் திரட்டிய தகுதியுள்ள FCNR(B) வைப்புத் தொகைகளின் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு சமமாக இருக்கும். மேலும், அந்த வைப்புத் தொகைகளுக்கு முன்பு இந்த ஸ்வாப் வசதியை பயன்படுத்தியிருக்கக் கூடாது.
7. வங்கிகள், ரிசர்வ் வங்கிக்கு $1 மில்லியன் மடங்குகளில் அமெரிக்க டாலர்களை விற்கலாம் மற்றும் அதே நேரத்தில், பரிமாற்றக் காலத்தின் முடிவில் அதே அளவு அமெரிக்க டாலர்களைத் திரும்ப வாங்கவும் ஒப்புக்கொள்ளலாம். இந்தப் பரிவர்த்தனையின் முதல் கட்டத்தில், வங்கியானது FBIL குறிப்பு விகிதத்தில் ரிசர்வ் வங்கிக்கு அமெரிக்க டாலர்களை விற்கும்.
ஃபைனான்சியல் பெஞ்ச்மார்க்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், Financial Benchmarks India Private Limited, (FBIL)) என்பது ஃபைனான்சியல் பெஞ்ச்மார்க்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைக் குறிக்கிறது. இந்நிறுவனம் இந்திய நிதிச் சந்தைக்காக தினசரி பல்வேறு அளவுகோல் வட்டி விகிதங்களையும் வெளிநாட்டு செலாவணி குறிப்பு விகிதங்களையும் வெளியிடுகிறது.
8. இந்தக் கட்டமைப்பின்கீழ், வங்கிகள் ரொக்க இருப்பு விகிதம் (cash reserve ratio (CRR)) மற்றும் சட்டப்பூர்வ பணப்புழக்க விகிதம் (statutory liquidity ratio (SLR)) ஆகியவற்றைப் பராமரிப்பதிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.
ரொக்க இருப்பு விகிதம் (cash reserve ratio (CRR)) என்பது ஒரு வங்கியின் மொத்த வைப்புத்தொகையில், எளிதில் பணமாக்கக்கூடிய ரொக்கமாகப் பராமரிக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச சதவீதமாகும். சட்டப்பூர்வ பணப்புழக்க விகிதம் என்பது, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்குப் பணம் கடன் கொடுப்பதற்கு முன்பு, அதிக பணப்புழக்கம் உள்ள சொத்துக்களில் (ரொக்கம், தங்கம் அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரங்கள் போன்றவை) பராமரிக்க வேண்டிய வைப்புத்தொகையின் குறைந்தபட்ச சதவீதத்தைக் குறிக்கிறது.
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான (Foreign Currency Non-Resident (Bank) Account (FCNR(B)) வைப்புத்தொகைகள் என்றால் என்ன?
1. வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான வைப்புத்தொகைகள் என்பது வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர் (Persons of Indian Origin (PIO)) மற்றும் வெளிநாட்டு இந்தியக் குடிமக்களுக்காக (Overseas Citizens of India (OCI)) வடிவமைக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட கால வைப்புத்தொகையாகும். இந்த வைப்புத்தொகைகள், கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் வருமானத்தை ரூபாயாக மாற்றவேண்டிய சூழல் இல்லாமல், தடையின்றி மாற்றத்தக்க வெளிநாடுச் செலாவணிகளில் வெளிநாட்டிலேயே வைத்திருக்க அனுமதிக்கின்றன.
2. இந்த வைப்புத்தொகைகள், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் நிதியை இந்திய ரூபாயாக மாற்றுவதற்குப் பதிலாக, அமெரிக்க டாலர், பவுண்ட் ஸ்டெர்லிங், யூரோ, ஜப்பானிய யென், ஆஸ்திரேலிய டாலர் மற்றும் கனடிய டாலர் போன்ற குறிப்பிட்ட வெளிநாட்டு நாணயங்களில் தங்கள் சேமிப்பை வைத்துக் கொள்ள அனுமதிக்கின்றன.
3. இந்திய வரிச் சட்டங்களின்படி, வைப்புத்தொகையாளர் வெளிநாட்டவராகத் தகுதிபெறும் பட்சத்தில், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான வைப்புத்தொகைகளில் ஈட்டப்படும் வட்டிக்கு இந்தியாவில் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. தற்போதைய கட்டமைப்பின்கீழ், வங்கிகள் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பீட்டு விகிதங்களுடன் இணைக்கப்பட்ட வட்டி விகிதங்களை வழங்கலாம்.
4. இந்திய ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, 1975-ல் அறிமுகப்படுத்தப்பட்டு, நடைமுறையில் இருந்த வெளிநாட்டு நாணயத்தில் வைக்கப்படும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்கு (Foreign Currency Non-Resident (Account)) திட்டத்திற்குப் பதிலாக, FCNR(B) திட்டம் மே 15, 1993 முதல் அமலுக்கு வந்தது. வெளிநாட்டு நாணயத்தில் வைக்கப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்கு (FCNR(A)) திட்டத்தில், அந்நியச் செலாவணி அபாயத்தை இந்திய ரிசர்வ் வங்கியும், பின்னர் இந்திய அரசும் ஏற்று வந்தன. மத்திய வங்கியின் இருப்புநிலைக் குறிப்பில் அது ஏற்படுத்திய தாக்கங்கள் மற்றும் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட துணை நிதிச் செலவுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, வெளிநாட்டு நாணயத்தில் வைக்கப்படும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்கு திட்டம் ஆகஸ்ட் 1994-ல் திரும்பப் பெறப்பட்டது.
வரி பிடித்தம்
1. வெளிநாட்டு நிதிகளை ஈர்ப்பதற்கும் ரூபாயை நிலைப்படுத்துவதற்கும் உள்ள சிக்கல்களுக்கு இடையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (Foreign Institutional Investors (FIIs)) அரசுப் பத்திரங்களில் செய்யும் முதலீடுகள் மீதான நீண்ட கால மற்றும் குறுகிய கால வரிப்பிடித்ததையும், இந்தக் கடன் பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்தின்மீது அவர்கள் செலுத்தவேண்டிய வரிப் பிடித்ததையும் ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது.
2. இந்த வரி விலக்கு முறை (scrapping) வருவதற்கு முன்பு, வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாங்கள் வைத்திருக்கும் அரசாங்கப் பத்திரங்கள் மூலம் பெறும் வட்டிக்கு, 20% பிடித்தம் செய்யும் வரியை செலுத்தி வந்தனர். 2023-ஆம் ஆண்டு வரை 5% என்ற சலுகை வரி விகிதம் நடைமுறையில் இருந்தது. அது முடிந்த பிறகு இந்த 20% வரி விதிக்கப்பட்டது. இது உலகின் அதிகமான வரிகளில் ஒன்றாகும்.
3. கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட கடும் உயர்வு உள்ளிட்ட அதிகரித்து வரும் வெளிப்புற அழுத்தங்களுடன் இந்தியா போராடி வரும் நிலையில், அதிக வரிப் பிடித்தமானது வெளிநாட்டு வரவுக்கு ஒரு தடையாகக் கருதப்படுகிறது.
4. வரிப் பிடித்தம் (Withholding tax (WHT)) என்பது வருமானத்தின் தொடக்க நிலையிலேயே வசூலிக்கப்படும் ஒரு வரியாகும். முதலீட்டாளர் அல்லது வெளிநாட்டு நிறுவனம் நிதியாண்டின் முடிவில் வரி செலுத்த காத்திருக்காமல், வருமானத்தை வழங்குபவர் அந்த வருமானத்தில் ஒரு பகுதியை முன்கூட்டியே வரியாகக் கழித்துவிட்டு, மீதமுள்ள தொகையை பெறுபவருக்கு அனுப்ப வேண்டும் என்று அரசு கூறுகிறது.
5. வரிப் பிடித்தம் செய்யப்பட்ட தொகை பின்னர் நேரடியாக அரசாங்கத்திடம் செலுத்தப்படுகிறது. எளிமையாக, வேலைவாய்ப்பு, முதலீடுகள், உரிமத்தொகை அல்லது பிற வழிகள் மூலம் வருமானம் வரும் போதெல்லாம், அரசாங்கம் வரிப் பிடித்தம் செய்வதன் மூலம் முன்கூட்டியே வரி வசூலை உறுதி செய்கிறது.