தேசிய பாதுகாப்பை பெரிதும் வலுப்படுத்தும் ஒரு காரணி.
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டியுள்ள 2026-27 நிதியாண்டிற்கான பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டத்தின் (Defence Budget) பகுப்பாய்வானது, மாறிவரும் புவிசார் அரசியல் சூழல் மற்றும் 'ஆபரேஷன் சிந்துர்' (Operation Sindoor) நடவடிக்கைக்குப் பிந்தைய விளைவுகளுக்கு ஏற்ப அரசின் ராஜதந்திரரீதியிலான முன்னுரிமைகளைத் தெளிவாகக் காட்டுகிறது. பாதுகாப்பு அமைச்சகத்தால் "சீர்திருத்தங்களின் ஆண்டு" என அறிவிக்கப்பட்ட 2025-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய சீர்திருத்தங்களின் விளைவாகவே, இந்த பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டத்தில் குறிப்பிடத்தக்க நிதி அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பாதுகாப்புத்துறை கொள்முதல்களை விரைவாகவும் எளிமையாகவும் மாற்றுவதற்காக, அமைச்சகம் வருவாய்க் கொள்முதல் தொடர்பான பாதுகாப்பு கொள்முதல் கையேட்டை (Defence Procurement Manual (DPM)) திருத்தியுள்ளதுடன், மூலதனக் கையகப்படுத்துதலுக்கான பாதுகாப்பு கையகப்படுத்தல் செயல்முறையை (Defence Acquisition Process (DAP)) திருத்தும் பணிகளையும் தொடங்கியுள்ளது. திருத்தப்பட்ட இந்த பாதுகாப்பு கையகப்படுத்தல் செயல்முறை (DAP) வரைவு, சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவிப்பதற்காகப் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளது.
தனியார் துறையின் பங்களிப்பை அதிகரிப்பதற்காகப் பரிசீலிக்கப்படும் பிற சீர்திருத்தங்களில், சீரான கால இடைவெளியில் கொள்முதல் நடைபெறுவதை உறுதிசெய்ய நீண்டகால கையகப்படுத்தும் திட்டங்களைத் தயாரித்தல், பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களுக்கு (Defence Public Sector Undertakings (DPSUs)) வழங்கப்பட்டு வரும் சிறப்புக் கொள்முதல் முன்னுரிமைகள் மற்றும் தயாரிப்பு ஒதுக்கீடுகளை நீக்கி அனைத்துத் தரப்பினருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்குதல், மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்தி சரியான நேரத்தில் விநியோகத்தை உறுதிசெய்ய ஒட்டுமொத்தத் தொழில்முறை அணுகுமுறையைக் கையாளுதல் ஆகியவை அடங்கும். மேலும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மானியங்களின்கீழ் தனியார் தொழில்துறையினர் மற்றும் கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ளும் செலவினங்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை (GST) திரும்ப வழங்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இவற்றுடன், பல புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக 2025–26 நிதிநிலை மதிப்பீட்டில் (Budget Estimates (BE)) ₹1 லட்சம் கோடி மதிப்பிலான 'புதிய கண்டுபிடிப்புகளுக்கான நிதி' (Innovation Fund) அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சந்தை நுண்ணறிவு
உயர்மட்ட முடிவெடுப்பதற்குக் கூடுதல் பயனுள்ள மற்றும் செயல்பாட்டுக்கு ஏற்ற தகவல்களை வழங்கவும், பாதுகாப்புச் செலவினங்களைப் பகுப்பாய்வு செய்யவும் பாதுகாப்பு அமைச்சகம் சந்தை நுண்ணறிவு அறிக்கையை (Market Intelligence Report (MIR)) தயாரிக்கத் தொடங்கியது. இந்த அறிக்கையானது (MIR), பாதுகாப்புச் செலவினங்கள் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து விரிவான விவரங்களை வழங்குகிறது; குறிப்பாக அதன் விளைவு, வேலைவாய்ப்பு உருவாக்கம், பல்வேறு மாநிலங்களில் விற்பனையாளர்களின் (vendors) வளர்ச்சி மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (GST) பங்களிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், வெறும் பாதுகாப்பு நிதி மேலாண்மை என்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், பாதுகாப்பு நிதியோடு பொருளாதாரத்தையும் இணைத்து நோக்கும் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சம்பூர்ணா (System Automation for Procurement, Payment and Uniform Raksha Accounting (SAMPURNA)) என்ற திட்டம் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இது வருவாய் கொள்முதல் தொடர்பான பெரிய அளவிலான பாதுகாப்பு நிதித் தரவுகளை நிர்வகிக்கவும், பயனுள்ளத் தகவல்களை உருவாக்கவும் கூடிய ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த சீர்திருத்த அமைப்பாகும். இது நடைமுறைக்கு வந்தவுடன், கொள்முதல் செயல்முறை முழுவதையும் தொடக்கம் முதல் முடிவு வரை தானியக்கமாக்கி (Automate), இத்துறையை மிகவும் வெளிப்படையானதாகவும் வேகமானதாகவும் மாற்றும்; மேலும், பணம் செலுத்துவதில் ஏற்படும் சிக்கல்களை உடனுக்குடன் (Real-time) தீர்க்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறையில் புதுமைகளை ஊக்குவிக்கும் ஒரு திட்டமான பாதுகாப்புச் சிறப்பிற்கான கண்டுபிடிப்பு (Innovation for Defence Excellence (iDEX)), அதன் நிதி கையேட்டை திருத்தி அமைப்பதன் மூலமும், அதை நடைமுறைப்படுத்துவதன் மூலமும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பாதுகாப்புத் தேவைகளைக் கருத்தில்கொண்டு, உரிமம் பெற்ற பாதுகாப்புத் தொழில்துறைக்கான புதிய பாதுகாப்பு கையேடு 2025 (Security Manual for Licensed Defence Industry 2025) அறிவிக்கப்பட்டுள்ளதோடு, புதிய பாதுகாப்பு ஏற்றுமதி-இறக்குமதி இணையதளமும் (Defence Exim Portal) தொடங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்றுமதிக்கான அனுமதிகளை முறைப்படுத்துவதற்காக எளிமைப்படுத்தப்பட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறை (Standard Operating Procedure (SOP)) ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், ‘Srijan DEEP’ (Defence Establishments and Entrepreneurs Platform) என்ற சிறப்பு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இது இந்தியப் பாதுகாப்புத் தொழில்துறைகள் மற்றும் அவற்றின் தயாரிப்புகள் பற்றிய தரவுத்தளத்தைக் கொண்டுள்ளது, இது பாதுகாப்பு கொள்முதல் முடிவுகளை மேம்படுத்தவும் உற்பத்தியாளர்களிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும் உதவுகிறது.
பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் (Defence Public Sector Undertakings (DPSUs)) முக்கிய உற்பத்திப் பிரிவுகளில் தரம் உறுதி 4.0 (Quality Assurance 4.0 (QA 4.0) மற்றும் தொழில்துறை 4.0 (Industry 4.0) ஆகியவற்றைச் செயல்படுத்துவதற்கான ஒரு வரைவுத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் செயல்முறையின்போது, தொழில்துறை 4.0 மற்றும் உற்பத்திப் பிரிவுகளில் தரம் உறுதி 4.0 முறைகளை ஏற்றுக்கொள்வதற்காக 461 தயாரிப்புகள் நெறிப்படுத்தப்படுகின்றன. இது 1,131 உற்பத்தி செயல்முறைகளையும் மற்றும் 4,171 தர உறுதி செயல்முறைகளையும் உள்ளடக்கியது. மேலும், பல்வேறு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (Defence Research and Development Organisation (DRDO)) ஆய்வகங்களில் உள்ள சோதனை வசதிகளைப் பாதுகாப்புத் துறையினர் எளிதாகப் பயன்படுத்துவதற்கு உதவ, 'பாதுகாப்பு சோதனை இணையதளம்' (Defence Testing Portal) என்ற இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது.
சீர்திருத்தங்களின் பட்டியல் இத்துடன் முடிவடைந்துவிடவில்லை. இருப்பினும், இவ்வளவு சிக்கலான பாதுகாப்பு அமைச்சகத்தில் மேற்கொள்ளப்படும் இத்தகைய பெரிய அளவிலான சீர்திருத்தங்கள், தேசிய பாதுகாப்பு இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளைப் பெருமளவில் வலுப்படுத்தும் என்பதையே இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன.
மாயங்க் சர்மா, முன்னாள் நிதி ஆலோசகர் (பாதுகாப்பு சேவைகள்) மற்றும் தற்போது பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார்.
Original Link: Holistic defence reforms.