Showing posts with label Reservation Act. Show all posts
Showing posts with label Reservation Act. Show all posts

தேர்தலுக்கு முன்னதாக மேற்கொள்ளப்படும் ஒரு வியூகம். -பி சிதம்பரம்

அரசின் நோக்கம் நேர்மையானதோ அல்லது உண்மையானதோ கிடையாது என்றும் மக்களவையில் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வி அடைந்தாலும் சரி, பாரதிய ஜனதா கட்சி (BJP) பெண்கள் இடஒதுக்கீடு விவகாரத்தை தேர்தல் நேரத்தில் மக்களிடம் கொண்டு செல்லும் என்றும் இந்த மசோதாவை பாஜக நிறைவேற்றினால், பெண்களுக்கான இடஒதுக்கீடு இடங்களின் எண்ணிக்கை 182-லிருந்து 272-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு பெருமிதத்துடன் உரிமை கோரும். 


நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நிதிநிலை கூட்டத்தொடரின் நிதி சார்ந்த பணிகளை முடித்த பிறகு, ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி, 2026 -ஆம் ஆண்டு ஒத்திவைக்கப்பட்டன. அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதியன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருந்ததால், மக்களவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளுக்குத் திரும்பிப் பிரச்சாரம் செய்ய ஒரு வாரம் மட்டுமே அவகாசம் இருந்தது. எனவே, அவையை ஒத்திவைக்க இதுவே சரியான நேரமாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கான தேர்தல் வேட்புமனுத் தாக்கல் மார்ச் மாதம் 30-ஆம் தேதியன்று தொடங்கிவிட்டதாலும், ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதியன்று வாக்குப்பதிவு (மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 29) நடைபெறவிருந்ததாலும், மக்களவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளுக்குச் செல்ல ஆர்வமாக இருந்தனர். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஏப்ரல்மாத இறுதி வரை அவசரமாகக் கையாள வேண்டிய பணிகள் ஏதுமில்லை என்றே பரவலாகக் கருதப்பட்டது.


சிறப்புத் தீவிர திருத்தப் பணியால் ஏற்பட்ட  இடையூறு


அவசரமான காரியம் என்று எதுவுமே இல்லை. நடந்து கொண்டிருக்கும் தேர்தல்களை மேலும் எந்தப் பிரச்சினைகளும் இல்லாமல் சுமுகமாக முடிப்பதே ஒரே பணியாகும். வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம்  (Special Intensive Revision (SIR)) என்பது தற்செயலாக நடந்த விபத்து அல்ல, அது திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு செயலாகும். கோடிக்கணக்கான குடிமக்களின் வாக்குரிமையைப் பறிப்பதே இதன் நோக்கம் என்றம் விமர்சிக்கப்படுகிறது.


ஒரு சில பொறுப்பற்ற அரசியல் பேச்சுகளைத் தவிர, தேர்தல் செயல்முறை சீராகவே நடந்து கொண்டிருந்தது. மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளபடும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (SIR) நடவடிக்கை தொடர்பான விவகாரம் உச்சநீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த சசிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையால் பாதிப்புள்ள மாநிலங்களில், சராசரியாக 10% மக்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு, தங்கள் வாக்குரிமையை இழந்துள்ளனர் என்ற தகவலை எவருமே நீதிமன்றத்திற்கு தெரிவிக்காதது வருத்தத்திற்குறியது. இத்தகைய பாதிப்புக்குள்ளான மாநிலங்கள் கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகியவை ஆகும்.


இது யாருடைய திட்டம்?


பாஜக (BJP) தலைமையிலான மேலிடத் தலைவர்கள், தமிழ்நாடு (234 இடங்கள்) மற்றும் மேற்குவங்கம் (294 இடங்கள்) போன்ற பெரிய மாநிலங்களின் தேர்தலுக்கு முன்னதாக ஏதேனும் ஒரு சர்ச்சையை உருவாக்க வேண்டும் என்று நினைத்ததாகத் தெரிகிறது. இதன் ஒரு பகுதியாக, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரிடம், 106-வது அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தை அமல்படுத்துவது குறித்து மல்லிகார்ஜுன கார்கேவிடம் பேசுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்தச் சட்டத்திருத்தம் செப்டம்பர் மாதம் 2023-ஆம் ஆண்டிலேயே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும், கடந்த 30 மாதங்களாக இதைச் செயல்படுத்தாமல் அலட்சியம் காட்டிய ஒன்றிய அரசு, இப்போது திடீரென இதில் வேகம் காட்டுகிறது. இது தொடர்பாக அமைச்சருக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடிதப் பரிமாற்றங்கள் நடந்தன. ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதிக்குப் பிறகு இது குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தலாம் என்று கார்கே பரிந்துரைத்தார். ஆனால், மார்ச் மாதம் 26-ஆம் தேதியிட்ட தனது கடிதத்தில் அமைச்சர், "இவ்வளவு தாமதம் ஏற்பட்டால் அது மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதைத் தள்ளிப்போடும், மேலும், 2029-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்பாக இதைச் செயல்படுத்துவதைப் பாதிக்கும்" என்று கூறினார். ஆனால், ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதிக்கும் ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதிக்கும் இடையிலான மிகச்சிறிய இடைவெளி பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்பதால், அமைச்சரின் இந்த வாதத்தில் அடிப்படை ஆதாரம் ஏதுமில்லை.


பெண்கள் இடஒதுக்கீட்டை இவ்வளவு அவசரமாகச் செயல்படுத்த வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா கட்சிக்கு (BJP) திடீரென எப்போது ஆர்வம் வந்தது? நிச்சயமாக, செப்டம்பர் மாதம் 2023-ஆம் ஆண்டில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டபோது அந்த ஆர்வம் இல்லை. ஏனெனில், 2029-ஆம் ஆண்டுக்கு முன்பாக இதனைச் செயல்படுத்தவே முடியாத வகையில்தான் இந்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்ட பிறகு எடுக்கப்படும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்து, அதன் தரவுகள் வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்ட பின்னரே இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் என்று சட்டப்பிரிவு-334A தெளிவாகக் குறிப்பிடுகிறது.


இந்த மசோதாவில் "பிறகு" (after) என்ற வார்த்தை ஏன் மூன்று முறை பயன்படுத்தப்பட்டது, அதற்கான காரணம் என்ன? இந்தக் கேள்வி ஏற்கனவே எழுப்பப்பட்டது (செப்டம்பர் மாதம் 24-ஆம் தேதி, 2023-ஆம் ஆண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் வெளியான "Reservation when? After, after, after (இடஒதுக்கீடு எப்போது? பிறகு, பிறகு, பிறகு)" என்ற கட்டுரையில்). இந்தச் சட்டம் எப்படி, எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்று கேள்விகள் கேட்கப்பட்ட போதிலும், அரசாங்கம் அதற்குப் பதிலளிக்கவில்லை. அரசியலமைப்பின் 334A (Article 334A) பிரிவில் கூறப்பட்டுள்ள நடைமுறைகள் மற்றும் கடந்தகால மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைக்கு எடுத்துக்கொண்ட கால அவகாசத்தை (சுமார் ஆறு ஆண்டுகள்) வைத்துப் பார்க்கும்போது, 106-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் (106th Amendment Bill) மிகவும் மெதுவாகச் செயல்படுத்தும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.


வெற்றி அல்லது தோல்வி


திடீரென்று, ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தைக் கூட்ட அரசு அவசரம் காட்டுகிறது. மக்களவை இடங்களை 543-லிருந்து 816-ஆக உயர்த்தவும், அதில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கவும் ஒரு மசோதாவைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமரும் இந்தத் திட்டத்தை உறுதிப்படுத்தியுள்ளார். இத்தகைய மாற்றத்தைச் செய்ய அரசியல் சாசனத் திருத்த மசோதா கட்டாயம் தேவைப்படும் என்கின்றனர். இதற்கு 'சிறப்புப் பெரும்பான்மை' அவசியம் ஆகும். அதாவது, ஒவ்வொரு அவையின் மொத்த உறுப்பினர்களில் பாதிக்கு மேலானோரும், அவைக்கு வந்து வாக்களிப்பவர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களிக்க வேண்டும். பா.ஜ.க (BJP) மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு மக்களவையில் இந்த மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லை, இருப்பினும் அரசாங்கம் இந்த அபாயகரமான முயற்சியை மேற்கொள்வதற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்புகின்றனர். 


ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதால், தமிழ்நாட்டைச் சேர்ந்த 39-எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 28-உறுப்பினர்களும் அவைக்கு வரமாட்டார்கள் என்று அரசு நம்புகிறது. அரசாங்கத்தின் இந்த எண்ணம் சந்தேகத்திற்குரியதாகத் தெரிகிறது. மக்களவையில் இந்த விவகாரத்தில் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வி அடைந்தாலும் சரி, பாஜக தேர்தல் நேரத்தில் இதனை மக்களிடம் கொண்டு செல்லும் என்றும் ஒருவேளை இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை 182-லிருந்து 272-ஆக உயர்த்திய பெருமையை ஒன்றிய பாஜக அரசு எடுத்துக் கொள்ளும் என்றும் ஒருவேளை மசோதா தோல்வியடைந்தால், அதற்கு எதிர்க்கட்சிகள்தான் காரணம் என்று பழி சுமத்தும் என்றும் தெரிவிக்கின்றனர்.


பாஜக அரசு மக்களவையின் உறுப்பினர் எண்ணிக்கையை 816-ஆக அதிகரிப்பதால் ஏற்படும் விளைவுகளை அலட்சியம் செய்கிறது. இந்த மாற்றம் சபையை நிர்வகிப்பதில் சிரமங்களை உருவாக்கலாம். உறுப்பினர்கள் பேசுவதற்கு மிகக் குறைந்த நேரமே கிடைக்கும் என்றும்  மிக முக்கியமாக, அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களுக்கும், மக்கள்தொகையைச் சரியாகக் கட்டுப்படுத்தி நிலைநிறுத்தியுள்ள தென்னிந்திய மாநிலங்களுக்கும் இடையிலான வாக்கு வலிமை இடைவெளி கணிசமாக அதிகரிக்கும். இது பாஜகவின் வழக்கமான 'பிரித்தாளும் சூழ்ச்சி' தந்திரத்தையே பிரதிபலிக்கிறது. 


இந்தக் கருத்து விவாதத்திற்குரியது என்றாலும், இது கொண்டு வரப்பட்ட நேரம் மிகவும் மோசமானதாகும். 


Original Link: An election-eve gambit.


Share:

பாதுகாப்பில்லாத அங்கீகாரம் : இந்தியாவின் பாகுபாடு-எதிர்ப்பு (anti-discrimination) தர்க்கத்திலுள்ள குறைபாடு. -சுமித் பௌத்

சாதி மற்றும் பாலினச் சட்டங்கள் குறித்த சமீபத்திய விவாதங்கள் ஒரு பொதுவான சிக்கலை வெளிப்படுத்துகின்றன. இதில் இந்தியச் சட்டம், பொருத்தமற்ற நேரங்களில்கூட அடையாளத்தை அங்கீகரிக்கிறது. அதேநேரத்தில், பாகுபாடு மிகவும் தீவிரமாக இருக்கும் இடங்களில் அதைப் புறக்கணிக்கிறது.


திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தில் (Transgender Persons (Protection of Rights) Act) செய்யப்பட்ட திருத்தங்கள், தலித் கிறிஸ்தவர்கள் பட்டியல் சாதி (Scheduled Caste (SC)) தகுதிலிருந்து தொடர்ந்து விலக்கப்படுவது மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பாகுபாடு எதிர்ப்பு விதிமுறைகள் (anti-discrimination regulations) ஆகியவை தொடர்பான சமீபத்திய சர்ச்சைகள் மிகவும் மாறுபட்ட பிரச்சினைகள் குறித்து விவாதத்தைத் தூண்டியுள்ளது. இருப்பினும், இந்த சட்டமானது பாகுபாட்டை எவ்வாறு வரையறுக்கிறது என்ற ஒரு பொதுவான சிக்கலால் அவை அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த எல்லாத் துறைகளிலும், சட்டக் கட்டமைப்புகள், பாதுகாக்கப்பட்ட குழுவின் உறுப்பினராக யார் தகுதி பெறுகிறார் என்பதைத் தீர்மானிப்பதில் அதிகக் கவனம் செலுத்துகின்றன. ஆனால், ஒருவரின் அடையாளத்தை அங்கீகரிப்பது என்பது பாகுபாட்டின் யதார்த்தத்துடன் எப்போதும் பொருந்துவதில்லை என்பதால், அடையாளத்தின் மீதான இந்தக் கவனம், விலக்கப்படுவோமோ என்ற அச்சம் முதல் தவறாகப் பயன்படுத்தப்படுவோமோ என்ற கவலைகள் வரை பலவிதமான சங்கடங்களை அடிக்கடி ஏற்படுத்துகிறது.


பாகுபாடு (Discrimination) அங்கீகரிக்கப்படாமல் தொடரும்போது


முதலில், அரசியலமைப்பு (பட்டியல் சாதியினர்) ஆணை-1950 (Constitution (Scheduled Castes) Order) மீதான விவாதத்தைக் கருத்தில் கொள்வோம். இந்தச் சட்டம் பட்டியல் சாதி (SC) அந்தஸ்தை குறிப்பிட்ட மதப் பிரிவுகளுடன் இணைக்கிறது. இதன் காரணமாக தலித் கிறிஸ்தவர்களும் தலித் முஸ்லிம்களும் பட்டியல் சாதி அந்தஸ்திலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். இது வெறும் இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல. இது, 1989-ம் ஆண்டின் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டத்தின் (Scheduled Castes and Scheduled Tribes (Prevention of Atrocities) Act) கீழ் சட்டரீதியான நிவாரணங்களைப் பெறுவதற்கான வாய்ப்பையும் தீர்மானிக்கிறது. இருப்பினும், ஒருவர் மதம் மாறினாலும் சாதி அடிப்படையிலான பாகுபாடு முடிவுக்கு வருவதில்லை என்பதைப் பலர் ஏற்றுக்கொள்கிறார்கள். சட்டம் அவர்களைப் பாதுகாக்கப்பட்ட பிரிவின் உறுப்பினர்களாக அங்கீகரிப்பதை நிறுத்தினாலும், தனிநபர்கள் அதே சமூகக் களங்கத்தையும் வன்முறையையும் தொடர்ந்து எதிர்கொள்ள நேரிடலாம். இந்தச் சூழ்நிலையில், பாகுபாடு தொடர்கிறது. ஆனால், பாதுகாப்பு மறைந்துவிடுகிறது.


அடையாளம் (Identity) முக்கியப் பிரச்சினையாக மாறும்போது


பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) முன்மொழியப்பட்ட பாகுபாடு எதிர்ப்பு விதிமுறைகளின் மீதான விவாதத்தில் ஒரு மாறுபட்ட கவலை தோன்றுகிறது. குறிப்பிட்ட அடையாளப் பிரிவுகளின் மூலம் பாகுபாட்டை வரையறுப்பது, தவறான அல்லது மிகைப்படுத்தப்பட்ட புகார்களுக்கு வழிவகுக்கும் என்று சில விமர்சகர்கள் கவலைப்படுகிறார்கள். இத்தகைய அச்சங்கள் அனுபவப்பூர்வமாக நியாயப்படுத்தப்பட்டவையா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், அடையாளம் எவ்வாறு செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படுகிறது என்பது குறித்த ஒரு நீடித்த கவலையை அவை பிரதிபலிக்கின்றன. ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவரா என்பதில் சட்டம் முக்கியமாகக் கவனம் செலுத்தினால், தகராறுகளின் தன்மை மாறக்கூடும். இதில் வழக்குகள் உண்மையில் என்ன நடந்தது என்பதில் குறைவாகவே கவனம் செலுத்தக்கூடும். மாறாக, இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பதிலும் அதிகக் கவனம் செலுத்தக்கூடும்.


திருநங்கைகள் மீதான சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் மீதான விவாதங்களிலும் இதே போன்ற கவலைகள் எழுகின்றன. இங்கு, அடையாளம் அங்கீகரிக்கப்படும் நிபந்தனைகளே முக்கியப் பிரச்சினையாக உள்ளது. யார் திருநங்கையாகக் கருதப்படுகிறார்கள்? என்பதை வரையறுக்க அல்லது ஒழுங்குபடுத்த முற்படும் விதிகள், திருநங்கைகளுக்குள்ளேயே கவலையை உருவாக்கியுள்ளன. இதில் பலர் தவறாக வகைப்படுத்தப்படலாம் அல்லது குற்றவாளியாக்கப்படலாம் போன்ற அச்சங்களுக்கும் உட்படுத்தப்படுகிறார்கள். மீண்டும் ஒருமுறை, அடையாளமானது (identity) முக்கியப் பிரச்சினையாக அமைகிறது. இம்முறை அரசின் அங்கீகாரம் என்ற வடிவில் சர்ச்சைக்குரிய களமாக மாறுகிறது.


அடையாள அடிப்படையிலான கட்டமைப்புகளின் வரம்புகள்


இந்த எடுத்துக்காட்டுகளை நாம் ஒன்றாகப் பார்க்கும்போது, ஒரு தெளிவான போக்கு புலப்படுகிறது. சில சமயங்களில், அடையாளப் பிரிவுகள் (identity categories) மிகவும் குறுகியவையாக இருப்பதால், பாகுபாட்டை எதிர்கொள்ளும் மக்களைப் புறக்கணித்துவிடுகின்றன. மற்ற சமயங்களில், அவை மிகவும் விரிவானவையாகவோ அல்லது மிகவும் தளர்வாக வரையறுக்கப்பட்டவையாகவோ கருதப்படுவதால், தவறான பயன்பாடு குறித்த கவலைகள் எழுகின்றன. முதலில், இந்தப் பிரச்சினைகள் ஒன்றுக்கொன்று எதிரானவையாகத் தோன்றலாம். இருப்பினும், அவை ஒரே மூலக் காரணத்திலிருந்துதான் உருவாகின்றன. பாகுபாட்டை வரையறுப்பதற்கான முக்கிய வழியாக அடையாளத்தின் மீது அதிகப்படியான சார்புநிலை உள்ளது.


இந்தச் சார்புநிலை ஒரு கட்டமைப்புப் பொருத்தமின்மையை உருவாக்குகிறது. அடையாளப் பிரிவுகள் பொதுவாக எளிமைப்படுத்தப்படுகின்றன. அவை அரசுக்குப் புரியக்கூடியதாகவும், சரிபார்க்கக்கூடியதாகவும், காலப்போக்கில் ஒப்பீட்டளவில் நிலையானதாகவும் இருக்க வேண்டும். ஆனால், பாகுபாடு என்பது பெரும்பாலும் மிகவும் சிக்கலானதாகும். அது, முறையான பிரிவுகளுடன் எப்போதும் நேர்த்தியாகப் பொருந்தாத சமூக நடைமுறைகள், கண்ணோட்டங்கள் மற்றும் சூழல்களால் வடிவமைக்கப்பட்டதாகவும் இருக்கிறது. சட்டம், நிஜ வாழ்க்கை அனுபவங்களை முன்வரையறுக்கப்பட்ட அடையாளங்களுக்குள் பொருத்த வலியுறுத்தும்போது, ​​அது உண்மையான வழக்குகளை விலக்குவதற்கும், சேர்க்கப்பட்ட வழக்குகள்மீது சந்தேகத்தை உருவாக்குவதற்கும் வழிவகுக்கிறது.


அடையாளத்திலிருந்து காரண காரியத்திற்கு


மற்ற நாடுகளைப் பார்ப்பது இந்தப் பிரச்சினையை நாம் நன்கு புரிந்துகொள்ள உதவுகிறது. 1964-ம் ஆண்டின் குடிமை உரிமைகள் சட்டத்தின் (Civil Rights Act) கீழ், இனம், பாலினம் மற்றும் மதம் போன்ற பாதுகாக்கப்பட்ட பண்புகளை மையமாகக் கொண்டு பாகுபாடு எதிர்ப்புச் சட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவரா என்பது மட்டும் இதன் முதன்மைக் கேள்வி அல்ல. மாறாக, அந்தப் பண்பின் காரணமாக அந்த நபர் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டாரா என்பதே உண்மையான கேள்வி. உதாரணமாக, போஸ்டாக் vs கிளேட்டன் கவுண்டி வழக்கில் (Bostock vs Clayton County), பாலியல் நாட்டம் அல்லது பாலின அடையாளத்தின் அடிப்படையிலான பாகுபாடு என்பது ஒரு வகையான பாலினப் பாகுபாடு என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஏனெனில், ஒரு தனிநபரின் பாலினம் 'இல்லாமல்' அத்தகைய நடத்தை நிகழ்ந்திருக்காது என்று நீதிமன்றம் விளக்கியது. இங்கு இதற்கான முக்கியத்துவமானது காரண காரியத் தொடர்பிற்கே அளிக்கப்படுகிறது.


இதன் பொருள் அடையாளம் முக்கியத்துவம் இழந்துவிடுகிறது என்பதல்ல. பாதுகாக்கப்பட்ட பண்புகள், வரலாற்றுரீதியாக வேரூன்றிய பின்தங்கிய நிலையின் அடையாளங்களாக இன்னமும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆனால் அவை, ஒரு வலுவான நுழைவாயிலாகச் செயல்படுவதில்லை. சட்டத்தின், அடையாளத்தைச் சரிபார்ப்பதிலிருந்து, அந்த அடையாளத்திற்கும், கோரப்படும் பாதிப்பிற்கும் இடையே ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதை இது ஆராய்கிறது.


இந்தியச் சட்டத்தில் இதுபோன்ற ஒரு மாற்றம் எளிதானதாக இருக்காது. பல சிக்கல்கள் இன்னும் நீடிக்கும். ஆதார நிரூபணச் சிக்கல்கள், நிர்வாகச் சாத்தியக்கூறுகளில் உள்ள வரம்புகள் மற்றும் நிறுவனத் திறனில் உள்ள இடைவெளிகள் ஆகியவை இதில் அடங்கும். இந்த மாற்றம் தவறான பயன்பாடு குறித்த கவலைகளையும் நீக்காது. ஆனால், முன்வரையறுக்கப்பட்ட பிரிவுகளுக்குள் பொருந்தும் இடங்களில் மட்டும் அல்லாமல், தீங்கு எங்கு நிகழ்ந்தாலும் அதனைக் கையாள்வதேயான பாகுபாடு எதிர்ப்பு கட்டமைப்புகளை அவற்றின் அடிப்படை நோக்கத்துடன் மீண்டும் சீரமைக்க இது உதவும்.


சாதி, பாலின அடையாளம் மற்றும் நிறுவன ஒழுங்குமுறை குறித்த தொடர்ச்சியான சர்ச்சைகள், தற்போதைய அணுகுமுறை அழுத்தத்தில் இருப்பதைக் காட்டுகின்றன. பாதுகாக்கப்பட்ட குழுவின் உறுப்பினராக யார் கருதப்படுகிறார் என்பதைத் தீர்மானிப்பதில் சட்டம் முக்கியமாகக் கவனம் செலுத்தும் வரை, அது பாகுபாட்டின் உண்மையான அனுபவங்களை தொடர்ச்சியாகப் பதிலளிக்கத் தவறிவிடும். மேலும் ஒருங்கிணைந்த ஒரு கட்டமைப்பு, ஒரு மாறுபட்ட கேள்வியுடன் தொடங்க வேண்டும். ஒரு நபர் யார் என்பது மட்டுமல்ல, அவருக்கு நேர்ந்தது அதன் காரணமாக நிகழ்ந்ததா என்றும் கேட்க வேண்டும்.


அந்த மாற்றம் நிகழும் வரை, பாகுபாடு எதிர்ப்புச் சட்டம் தீங்கைத் தவறாகப் புரிந்துகொள்வதைத் தொடரும். இதன் பொருள், முக்கியத்துவம் இல்லாத இடங்களில் அடையாளத்தைக் கண்டு, உண்மையான பாகுபாட்டைப் புறக்கணிக்கும்.


சுமித் பௌத், ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் சட்டப் பேராசிரியர் ஆவார்.


Original Link: Recognition without protection: The flaw in India’s anti-discrimination logic.


Share:

பெண்களுக்கான இடஒதுக்கீட்டைச் செயல்படுத்துவதற்குத் தொகுதி மறுவரையறை ஏன் அவசியமாகிறது? - பிரியா குமாரி சுக்லா

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு (National Democratic Alliance (NDA)), மாநிலங்களுக்கு இடையேயான தற்போதைய விகிதாச்சாரத்தை மாற்றாமல், மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முன்மொழிந்துள்ளது. மேலும், பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தை (Women’s Reservation Act) நடைமுறைப்படுத்துவதற்காக, சமீபத்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்குப் பதிலாக, 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் சட்டப்பேரவை இடங்களை நிர்ணயிக்கவும் திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இந்த நடவடிக்கை சட்டரீதியாகவும், அரசியலமைப்புரீதியாகவும் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.


முக்கிய அம்சங்கள்:


• மக்களவை மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் ‘நாரி சக்தி வந்தன் அதினியம்’ (Nari Shakti Vandan Adhiniyam - Women’s Reservation Act, 2023) சட்டத்தை அமல்படுத்துவதற்கு அனைத்துத் தரப்பு ஒத்துழைப்பைப் பெறுவதற்காக, ஒன்றிய அரசு இந்த யோசனையைச் சில எதிர்க்கட்சிகள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுடனான ஆலோசனைகளின் போது முன்மொழிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.


• இந்தத் திட்டத்தின்கீழ், 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தபிறகு, மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையைத் தற்போதைய 543-லிருந்து 50% உயர்த்தி 816-ஆக அதிகரிக்க அரசு உத்தேசித்துள்ளது. இதில் 273 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படவுள்ளன.




உங்களுக்குத் தெரியுமா?


• இந்திய அரசியலமைப்பின் விதி 81 ஆனது, "ஒரு நபர், ஒரே வாக்கு, ஒரே மதிப்பு" (One Person, One Vote, One Value) என்ற சமத்துவக் கொள்கையை உறுதி செய்கிறது. இதன்படி, ஒவ்வொரு மாநிலத்திற்கும் மக்களவையில் இடங்கள் ஒதுக்கப்படும்போது, இந்த இடங்களின் எண்ணிக்கை அந்த மாநிலத்தின் மக்கள்தொகைக்கு ஏற்ப விகிதாசார அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், முடிந்தவரை அனைத்து மாநிலங்களிலும் இந்த விகிதம் ஒரே சீராகப் பராமரிக்கப்பட வேண்டும் என்பதையும் இந்தச் சட்டப்பிரிவு வலியுறுத்துகிறது.


• இந்திய அரசியலமைப்புச் சட்டம் 81(2)(b)-ன்படி, ஒவ்வொரு மாநிலமும் தொகுதிகளாகப் பிரிக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு பிரிக்கப்படும்போது, ஒரு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும், மக்கள்தொகைக்கும் இடங்களின் எண்ணிக்கைக்குமான விகிதம் முடிந்தவரை சமமாக இருப்பதை உறுதி செய்யவேண்டும் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.


• இந்த விதியானது ஒரு குறிப்பிட்ட விதிவிலக்கை வழங்குகிறது. 60 லட்சத்திற்கும் மிகாத மக்கள் தொகையைக் கொண்ட மிகச்சிறிய மாநிலங்களுக்கு இந்த விதிவிலக்கு பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், அந்த மாநிலங்கள் குறைந்த மக்கள் தொகையைக் கொண்டிருந்தாலும், நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் அதாவது, மக்களவையில் தங்களுக்குரிய முறையான பிரதிநிதித்துவத்தைப் பெறுவதை உறுதி செய்கிறது.


• இந்திய அரசியலமைப்பின் பிரிவு-82-ன்படி, ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்குப் பிறகும், நாடாளுமன்றம் சட்டத்தின் மூலம் தீர்மானிப்பதற்கேற்ப, மக்களவையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்படும் இடங்களின் எண்ணிக்கையும், ஒவ்வொரு மாநிலத்திற்குள்ளும் உள்ள தொகுதிகளின் பிரிவுகளும் மறுசீரமைப்பு செய்யப்படும் என்கின்றனர்.


• தொகுதி மறுவரையறை மீதான தற்போதைய தடையானது 1976 மற்றும் 2001-ஆம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட இரண்டு அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களால் ஏற்பட்டது. 1976-ஆம் ஆண்டு திருத்தத்தின் மூலம், மாநிலங்களுக்கிடையேயான இடஒதுக்கீட்டைத் தீர்மானிக்கும்போது, அரசியலமைப்புச் சட்டப்பிரிவுகள் 81 மற்றும் 82-ல் குறிப்பிடப்பட்டுள்ள "முந்தைய கடைசி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு" என்பது 1971-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பையே குறிக்கும் என 25 ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் 2001-ஆம் ஆண்டில், இந்தச் சட்டப்பிரிவுகள் மீண்டும் திருத்தப்பட்டு, 2026-ஆம் ஆண்டிற்குப் பிறகு எடுக்கப்படும் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் முடிவுகள் வெளியாகும் வரை இந்தத் தடை நீட்டிக்கப்பட்டது. எனவே, புதிய மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகள் வெளியானவுடன் இந்தத் தடை தானாகவே முடிவுக்கு வரும் என்கின்றனர்.


• இந்தச் சட்டத்திருத்தங்களுக்கான ஒரு மிக முக்கியமான காரணம் தென் மாநிலங்களின் கவலையாகும். தென் மாநிலங்களின் மக்கள்தொகை நிலையான அளவை எட்டியிருந்த வேளையில், சில வட மாநிலங்களின் மக்கள்தொகை மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்கு பிறகும் மக்கள்தொகையின் அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டால், மக்களவையில் தங்களின் பிரதிநிதித்துவப் பங்கு குறைந்துவிடும் என்று தென் மாநிலங்கள் கவலை தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது.



Original Link: Why delimitation is required for the implementation of women reservation?


Share:

நாடாளுமன்றத்தில் ஒதுக்கீட்டு மசோதாவிற்காகப் பின்பற்றப்படும் நடைமுறை என்ன? - பிரியா குமாரி சுக்லா

மக்களவையில் புதன்கிழமை அன்று, 2026-27-ஆம் நிதியாண்டிற்கான பல்வேறு அமைச்சகங்களின் மானியக் கோரிக்கைகள், எவ்வித விவாதமும் இன்றி 'கில்லட்டின்' (Guillotine) நடைமுறையைப் பயன்படுத்தி நிறைவேற்றப்பட்டன. இதன் மூலம் 53 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவினங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக, ரயில்வே மற்றும் விவசாய அமைச்சகங்களுக்கான மானியக் கோரிக்கைகள் குறித்து மட்டும் அவையில் விவாதம் நடைபெற்றது.


முக்கிய அம்சங்கள்:


• நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்ட ஒதுக்கீட்டு மசோதா (Appropriation Bill (2), 2026) நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, 2026–27-ஆம் நிதியாண்டிற்கான செலவினங்களுக்காக இந்தியத் தொகுப்பு நிதியத்திலிருந்து குறிப்பிட்டத் தொகையை எடுத்துப் பயன்படுத்துவதற்கான அதிகாரத்தை வழங்குகிறது.


• பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (Minimum Support Price (MSP)) சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று அவை நடவடிக்கைகளின்போது எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதற்குப் பதிலளித்த ஒன்றிய அரசு, சில மாநிலங்கள் ஒன்றிய அரசின் திட்டங்களுக்குப் பிரதமரின் பெயர் சூட்டப்பட்டிருப்பதாலேயே அவற்றைச் செயல்படுத்த  மறுப்பதாகத் தெரிவித்துள்ளது.


உங்களுக்குத் தெரியுமா?


• அரசியலமைப்பின் விதி 113-ன்படி (Article 113), இந்தியத் தொகுப்பு நிதியிலிருந்து பணத்தை எடுப்பதற்கான எந்தவொரு முன்மொழிவும் மக்களவையில் "மானியக் கோரிக்கைகளாக" (Demands for Grants) சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதன் காரணமாக, ஒவ்வொரு அமைச்சகமும் அடுத்த நிதியாண்டிற்கான தங்களது மானியக் கோரிக்கைகளைத் தயார் செய்வதாகவும் இந்த அனைத்துக் கோரிக்கைகளும் ஒன்றாகத் தொகுக்கப்பட்டு, ஒன்றிய நிதிநிலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக மக்களவையில் தாக்கல் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். 


• மானியக் கோரிக்கைகள் என்பது 'கட்டாயச் செலவினம்' (Charged expenditure) மற்றும் 'வாக்கெடுப்பிற்குரிய செலவினம்' (Voted expenditure) ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாயாகும். இதில், கட்டாயச் செலவினம் (Charged Expenditure) என்பது வட்டி செலுத்துதல் போன்ற அரசாங்கத்தின் கட்டாயச் செலவுகளைக் குறிக்கிறது. இதற்கு மக்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவிக்கின்றனர். 


• இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விதி 113(iii)-ன்படி, இந்தியக் குடியரசுத் தலைவரின் முன்அனுமதியின்றி மக்களவையில் எந்தவொரு மானியக் கோரிக்கையையும் தாக்கல் செய்ய முடியாது என்றும் அதேபோல், விதிகள் 117 மற்றும் 274-ன்கீழ், மக்களவையில் ஒரு பண மசோதாவை (Money Bill) அறிமுகப்படுத்துவதற்குக் குடியரசுத் தலைவரின் பரிந்துரை அவசியம் என்றும் கூறப்படுகிறது. ஒன்றிய நிதிநிலைத் திட்டத்துடன் தாக்கல் செய்யப்படும் நிதி மசோதாவிலும் (Finance Bill), குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்ட சான்றிதழ் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றனர். 


• இந்திய அரசியலமைப்பின்படி, சட்டப்பூர்வமான அனுமதியின்றி இந்தியத் தொகுப்பு நிதியத்திலிருந்து எந்த நிதியையும் பயன்படுத்த முடியாது என்கின்றனர்.  எனவே, தேவையான அனைத்துச் செலவுகளையும் மேற்கொள்வதற்குத் தேவையான நிதியை இந்தத் தொகுப்பு நிதியத்திலிருந்து பயன்படுத்த அனுமதி பெறுவதற்காக, ஒதுக்கீட்டு மசோதா (Appropriation Bill) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது:


—மக்களவையில் வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட்ட மானியக் கோரிக்கைகள்.


—இந்தியத் தொகுப்பு நிதியிலிருந்து நேரடியாகச் செலுத்தப்பட வேண்டிய கட்டாயச் செலவுகள்.


• ஒப்புதல் அளிக்கப்பட்ட எந்தவொரு மானியத்தின் தொகையை அல்லது நோக்கத்தை மாற்றும் வகையிலோ, அல்லது இந்தியத் தொகுப்பு நிதியிலிருந்து பயன்படுத்தப்படும் செலவினங்களை மாற்றும் வகையிலோ இருந்தால், ஒதுக்கீட்டு மசோதாவில் (Appropriation Bill) நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எந்தவொரு திருத்தத்தையும் செய்ய முடியாது என்றும் தெளிவுபடுத்துகின்றனர். 


• குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு, ஒதுக்கீட்டு மசோதா (Appropriation Bill) ஒரு ஒதுக்கீட்டுச் சட்டமாக (Appropriation Act) மாறுகிறது. இந்தச் சட்டம் இந்தியத் தொகுப்பு நிதியிலிருந்து பணம் செலுத்துவதற்கு அதிகாரம் அளிக்கிறது. அதாவது, இந்த மசோதா நிறைவேற்றப்படும் வரை அரசாங்கம் அந்த நிதியிலிருந்து பணத்தை எடுக்க முடியாது என்கின்றனர். 


• சட்டமன்ற நடைமுறையில், "கில்லட்டின்" (Guillotine) என்பது நிதி சார்ந்த விவகாரங்களை ஒன்றாகத் தொகுத்து, விவாதமின்றி விரைவாக நிறைவேற்றுவதைக் குறிக்கிறது. இது நிதிநிலை அறிக்கை தொடர்பான கூட்டத்தொடரின் போது மக்களவையில் பின்பற்றப்படும் ஒரு பொதுவான நடைமுறை ஆகும்.


Original Link: What is the Procedure Followed for the Appropriation Bill in Parliament?


Share:

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவினருக்கான (Creamy Layer) அளவுகோலாகப் பெற்றோரின் வருமானம் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு: நீதிமன்றம் கூறியது என்ன? என்னென்ன மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன? - ஷியாம்லால் யாதவ்

பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவினர்களுக்கு, இதர பிற்படுத்தப்பட்ட இடஒதுக்கீடு சலுகைகளைப் பெறுவதற்கான உரிமை இல்லை என்றும் பொதுத்துறை நிறுவனங்கள் (PSU) மற்றும் தனியார் துறையில் வேலை செய்பவர்களின் குழந்தைகள் மற்றும் அரசு துறையில் வேலை செய்பவர்களின் குழந்தைகள் இடையிலான சமத்துவம் (equivalence) குறித்து நீதிமன்றம் கூறியது இதுதான்.



புதன்கிழமை உச்சநீதிமன்றம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடையே (Other Backward Classes (OBCs)) பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவினரை தீர்மானிக்க வருமானம் மட்டுமே அளவுகோலாக இருக்க முடியாது என்று தீர்ப்பளித்தது. மேலும், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்கள் மற்றும் அரசுத் துறையில் உள்ளவர்களுக்கு இடையிலான சமநிலை குறித்த நீண்டகால கேள்வியைத் தீர்த்து வைத்துள்ளது.


பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவில் உள்ளவர்களுக்கு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு சலுகைகள் பெறும் உரிமை இல்லை. நீண்டகாலமாகத் தொடர்ந்து வரும் இந்தப் பிரச்சினை எதைப் பற்றியது என்பதையும், அது ஏற்படுத்தும் விளைவுகளையும் இங்கே காணலாம்.


புதிதாக என்ன தீர்ப்பு  வழங்கப்பட்டுள்ளது ?


புதன்கிழமை, 2025 அக்டோபர் 30 அன்று வழங்கப்பட்டிருந்த (reserved) தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்து. நீதிபதிகள் பி.எஸ். நரசிம்ம மற்றும் நீதிபதி ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய கூடுதல் அமர்வு, “பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவினரை விலக்குவதன் நோக்கம், அதே சமூகத்தில் ஒரே அளவுகோலில் இருக்கும் மக்களுக்குள் செயற்கையான வேறுபாடு உருவாக்குவது அல்ல என்று நீதிமன்றம் கூறியது. ஒரே நிலைமையில் இருக்கும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வேறுபட்ட முறையில் நடந்து கொள்வது சட்ட ரீதியாகவும் அரசியலமைப்புரீதியாகவும் தவறானது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.


பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவினருக்கான அளவுகோல் தொடர்பாக பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (Department of Personnel and Training (DoPT)) அக்டோபர் 14, 2004 அன்று வெளியிட்ட கடிதத்தின் காரணமாக எழும் மனுக்களை அமர்வு விசாரித்தது. இது செப்டம்பர் 1993-ல் நீண்டகாலத்திற்கு முன்பு வெளியிடப்பட்ட நிர்வாக ஆணையை (Official Memorandum (OM) தெளிவுபடுத்தியது.


பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவினருக்கான அளவுகோலைத் தீர்மானிப்பதற்கான வருமானம் அல்லது சொத்து மதிப்பீட்டிலிருந்து, ஊதிய வருமானத்தையும் உழவர்களுக்கான வருமானத்தையும் நிர்வாக ஆணை (OM) விலக்கி வைத்திருந்தபோதிலும், 2004-ஆம் ஆண்டு அக்டோபர் 14 அன்று வெளியிடப்பட்ட கடிதம், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார்துறையில் வேலை செய்பவர்களின் வருமானத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று கூறியது. இதனால் அரசு ஊழியர்களின் குழந்தைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்/தனியார் துறை ஊழியர்களின் குழந்தைகளுக்கு இடையே வேறுபாடு (discrimination) ஏற்பட்டது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.


பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது தனியார்துறையில் வேலை செய்பவர்களின் குழந்தைகளை, பெற்றோரின் சம்பள வருமானத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு இட ஒதுக்கீட்டில் இருந்து நீக்குவது சரியல்ல நடைமுறை அல்ல என்று நீதிமன்றம் கூறியது. அவர்களின் பதவி (Group A, B, C, D போன்ற நிலைகள்) என்ன என்பதையும் கவனிக்க வேண்டும். இதைப் பார்க்காமல் வருமானத்தை மட்டும் வைத்து முடிவு செய்தால், ஒரே நிலைமையில் இருக்கும் மக்களுக்குள் தேவையற்ற வேறுபாடு ஏற்படும். இது அரசியலமைப்பின் சமத்துவக் கொள்கைப் பிரிவு 14, 15, 16-க்கு எதிரானதாக இருக்கும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.




பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவினர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட வேண்டும் என்ற கருத்தின் தோற்றம்


1992-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய முக்கியமான தீர்ப்பான இந்திரா சாஹ்னி எதிர் இந்திய ஒன்றியம் (Indra Sawhney v. Union of India) வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்துக்குள் பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவினரை சேர்க்க வேண்டும் என்ற கருத்து அறிமுகப்படுத்தப்பட்டது.


செப்டம்பர் 8, 1993 அன்று, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (Department of Personnel and Training (DoPT))  ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அதில் யார் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதை வகைப்படுத்தினார்கள். அவர்களில் யார் பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவை சேர்ந்தவர்கள் என்பதை தெளிவுபடுத்தியது.


அரசுப் பணிகளில் இருப்பவர்களுக்கு, 'பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவினர்' என்பது அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் நபர்கள்; அகில இந்திய சேவைகள், ஒன்றிய சேவைகள் மற்றும் மாநில அரசு பணிகளின் குரூப்-ஏ/வகுப்பு-II அதிகாரிகள்; ஒன்றிய மற்றும் மாநிலத்தின் குரூப்-பி/வகுப்பு-II பணிகள்; பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள்; ஆயுதப்படை அதிகாரிகள்; தொழில் வல்லுநர்கள் மற்றும் வர்த்தக, தொழில் துறையைச் சேர்ந்தவர்கள்; சொத்து உரிமையாளர்கள்; மற்றும் வருமானம்/செல்வச் சோதனை போன்ற குழுக்களைக் குறிப்பிடுகிறது.


பெற்றோரில் ஒருவர் Group-A அதிகாரியாக நேரடியாக நியமிக்கப்பட்டவர் அல்லது 40 வயதுக்கு முன் அந்த பதவிக்கு பதவி உயர்வு பெற்றவர் என்றால், அவர்களின் குழந்தைகள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களுக்கான சலுகையை பெறமுடியாது. அதேபோல், அவர்களின் பெற்றோரும் Group-B அதிகாரிகளாக நேரடியாக நியமிக்கப்பட்டவர்கள் என்றால், அவர்களின் குழந்தைகளும் பொருளாதாரத்தில் முன்னேறிய  பிரிவினராக கருதப்படுவர்.


ஆயுதப்படைகளைப் பொறுத்தவரை, லெப்டினன்ட் கர்னல் பதவி வரை உள்ள அதிகாரிகள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களுக்கான ஒதுக்கீட்டைப் பெறலாம். ஆனால், உயர் பதவிகள் பொருளாதாரத்தில் முன்னேறிய வகுப்பில் உள்ளன.


அரசுத் துறையில் இல்லாதவர்களுக்கான அளவுகோல் 1993-ல் ஆண்டுக்கு ரூ.1 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. இது காலப்போக்கில் திருத்தப்பட்டது. 2017-ஆம் ஆண்டு முதல், இந்த வருமான வரம்பு ரூ.8 லட்சமாக உள்ளது.


1993-ஆம் ஆண்டின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை நிர்வாகக் குறிப்பு மற்றும் அக்டோபர் 2004-ஆம் ஆண்டின் விளக்கம் ஆகியவை எவை?


2004 அக்டோபர் 14 அன்று பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, OBC Creamy Layer குறித்து ஒரு விளக்கத்தை வெளியிட்டது. அதன் 9-வது பத்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது: "அரசுப் பணிகளில் உள்ள பதவிகளுக்கு இணையான அல்லது ஒப்பிடக்கூடிய பதவிகள் குறித்த மதிப்பீடு செய்யப்படாத நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களின் மகன் மற்றும் மகள்களின் 'Creamy Layer' அங்கீகாரம் பின்வருமாறு தீர்மானிக்கப்படுகிறது: பெற்றோரின் ஊதியம் வாயிலாக வரும் வருமானம் மற்றும் பிற ஆதாரங்கள் (ஊதியம் மற்றும் விவசாய நிலம் தவிர) வாயிலாக வரும் வருமானம் ஆகியவை தனித்தனியாகக் கணக்கிடப்படுகின்றன. பெற்றோரின் ஊதிய வருமானமோ அல்லது பிற ஆதாரங்கள் (ஊதியம் மற்றும் விவசாய நிலம் தவிர) வாயிலாக வரும் வருமானமோ, தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சம் என்ற வரம்பை மீறினால், அத்தகைய நபர்களின் மகன் மற்றும் மகள்கள் 'Creamy Layer' பிரிவைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுவர்.


ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த வாக்காளர்களைக் கவரும் முயற்சிகளில் ஈடுபட்டது. 2014-ஆம் ஆண்டு வரை, பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் இந்தச் சுற்றறிக்கை கடிதம் போதுமான அளவு செயல்படுத்தப்படவில்லை.


பணியாளர் மற்றும் பயிற்சித் துறை  இந்த விளக்கத்தின் அடிப்படையில் சாதிச் சான்றிதழ்களைச் சரிபார்க்கத் தொடங்கியதன் மூலம், 2015-ஆம் ஆண்டின் குடிமைப் பணித் தேர்வு (Civil Service Examination (CSE)) (2016-ஆம் ஆண்டுத் தொகுதி) முதல் இது திறம்படச் செயல்படுத்தப்படத் தொடங்கியது.

பல்வேறு  ஒன்றிய  மற்றும் மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார்துறை ஊழியர்களிடையே "பதவிச் சமத்துவத்தை" (equivalence) நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு முன்மொழிவை ஒன்றிய அரசு பரிசீலித்து வந்தது. இது குறித்து 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் ஆகஸ்ட் 2025-ல் செய்தி வெளியிட்டிருந்தது. இருப்பினும், அந்த அமைச்சரவைக் குறிப்பின் வரைவு (draft cabinet note) அதிகாரப்பூர்வமாக முன்வைக்கப்படவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் இந்த விளக்கத்தினால் ஏற்பட்ட தாக்கம் என்ன?


2016-ஆம் ஆண்டுத் தொகுதி முதல், 100 இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை தேர்வர்கள் பல்வேறு அதிகாரிகளிடமிருந்து சாதிச் சான்றிதழ்களைப் பெற்று, குடிமைப் பணித் தேர்விலும் (CSE) தேர்ச்சி பெற்றிருந்தபோதிலும், பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் பரிசீலனையின்போது நிராகரிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பிற தேர்வுகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த தேர்வர்களாகத் தகுதி பெற்றிருந்தபோதிலும், குடிமைப் பணித் தேர்வில் இவர்களின் கோரிக்கையை பணியாளர் மற்றும் பயிற்சித் துறை நிராகரித்துவிட்டது.


இதனால் பாதிக்கப்பட்ட தேர்வர்களில் சிலர், சென்னை, டெல்லி மற்றும் கேரளா போன்ற பல்வேறு உயர் நீதிமன்றங்களை அணுகினர்.


இத்தகைய வழக்குகளில் ஒன்று, ரோஹித் நாதன் என்பவரால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இவ்வழக்கை சஷாங்க் ரத்னூ என்பவர் உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடினார்.


நாதன் போலவே, வழக்கறிஞராகப் பணிபுரியும் ரத்னூவும் இந்த விளக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒரு தேர்வர் ஆவார். அவர் 688-வது ரேங்க் பெற்றார். 2016-ஆம் ஆண்டில் இந்திய வருவாய் பணியை (Indian Revenue Service (IRS)) பெற்று விடுவார் என்ற நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால், பொதுப் பிரிவின் விண்ணப்பித்தரராக அறிவிக்கப்பட்டதால் அவர் எந்தப் பணியிலும் சேர முடியவில்லை.


பொருளாதாரரீதியாக நலிவடைந்த பிரிவினர்  ஒதுக்கீடு


செப்டம்பர் 1993 சுற்றறிக்கையில், "சம்பளம்" அல்லது " வேளாண்மை" மூலம் கிடைக்கும் வருமானம் பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவினர் என்ற  நிலையைத் தீர்மானிப்பதற்கான வருமானம் மற்றும் செல்வத்தின் சோதனைக்கு கணக்கிடப்படாது என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டது.


2019-ஆம் ஆண்டு நரேந்திர மோடி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதாரரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான (EWS) இடஒதுக்கீட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் போது, பொருளாதாரரீதியாக நலிவடைந்த பிரிவுகளுக்கும் இதர பிரிப்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களுக்கும் வருமான அளவுகோல் ரூ.8 லட்சமாக ஏன் ஒரே மாதிரியாக உள்ளது என்று உச்சநீதிமன்றம் கேட்டபோது, அப்போதைய வருவாய் செயலாளர் அஜய் பூஷண் பாண்டே தலைமையிலான குழுவின் வழக்கறிஞர், 1993-ஆம் ஆண்டு அதே சுற்றறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, "இதர பிரிப்படுத்தப்பட்ட வகுப்பினர்களில் பொருளாதாரத்தில் முன்னேறிய வகுப்பை சேர்ந்தவர்களுக்கு" வருமானத்தைக் கணக்கிடும்போது, "சம்பளம் அல்லது விவசாய நிலத்திலிருந்து வரும் வருமானம்" அதில் இருந்து "விலக்கப்பட்டிருந்தது" என்றும்; பொருளாதாரரீதியாக நலிவடைந்த பிரிவினரின் வருமானம் "சேர்க்கப்பட்டிருந்தது" என்றும் பூஷன் பாண்டே வாதிட்டார்.


உச்சநீதிமன்ற தீர்ப்பால் யார் பயனடைவார்கள்?


இந்த தீர்ப்பின் பயன் இனி தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் அல்ல; ஏற்கனவே தேர்வு எழுதி அரசு சேவைகளில் பணிபுரிபவர்களுக்கும் கிடைக்கும். தற்போது பல்வேறு சேவைகளில் பணிபுரியும் சிலருக்கு நல்ல  சேவைகள் வழங்கப்படலாம். ஏற்கனவே பல்வேறு அரசு சேவைகளில் பணிபுரிபவர்களில் சிலருக்கு மேலான தரம் கொண்ட சேவைகள் வழங்கப்படலாம். குறிப்பாக அவர்கள் அகில இந்தியப்பணிகளில் இருந்தால் அவர்களில் சிலருக்கு வேறு நிலைகள் வழங்கப்படலாம். முன்பு எந்த பணியையும் பெற முடியாதவர்களுக்கு, இப்போது அவர்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக நிலை மாற்றப்பட்டதால், புதிய நிலைகளின்அடிப்படையில் பணி வழங்கப்படும்.


இந்த தீர்ப்பின்படி பொருளாதாரத்தில் முன்னேறாத பிரிவினர் (non-creamy layer) தகுதி உள்ள விண்ணப்பதாரர்களுக்கு தேவைப்பட்டால், அரசு கூடுதல் பணியிடங்களை (supernumerary posts) உருவாக்க வேண்டும் என்று உத்தரவிடுவதில் எங்களுக்கு எந்த சிரமமும் இல்லை. ஆனால், அவர்கள் மற்ற அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.


Original Link: SC verdict on parental income as OBC creamy layer criterion: What has court said, what changes.


Share:

2029-ஆம் ஆண்டிற்குள் பிரதிநிதித்துவத்தை உண்மையான மாற்றமாக உருமாற்றுதல். -பர்கா தேவா

 2029-ஆம் ஆண்டு அமையவிருக்கும் நாடாளுமன்றம் பெண்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, பெண்கள் தங்களின் முதுமைக் காலத்தில் கண்ணியத்துடன் வாழ்வதற்குத் தேவையான பாதுகாப்பு வழிமுறைகள் என்ன என்பதை அதன் மக்கள் பிரதிநிதிகள் நன்கு உணர்ந்திருக்க வேண்டும்.


2029-ஆம் ஆண்டில், இந்தியா தனது வரலாற்றிலேயே மிகச்சிறந்த பாலினப் பிரதிநிதித்துவம் கொண்ட நாடாளுமன்றத்தைப் பெறும். பெண்கள் இட ஒதுக்கீடு சட்டம் (Women’s Reservation Act) மூலம் மக்களவையில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு (33%) இடங்கள் ஒதுக்கப்படும். இது நாட்டின் அரசியல் பிரதிநிதித்துவ வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய விரிவாக்கமாகும். பல ஆண்டுகால போராட்டங்களுக்குப் பிறகு இந்தத் தருணம் வந்திருக்கிறது. எனவே, வரும் மூன்று ஆண்டுகளை வீணடித்தால், இந்தச் சட்டம் எதற்காகக் கொண்டுவரப்பட்டதோ அந்த நோக்கத்தை முழுமையாக அடைய முடியாமல் போய்விடும் என்கின்றனர். 


ஒரு அவசரத் தேவை உள்ளது


தெளிவான செயல்திட்டம் இல்லாத பிரதிநிதித்துவம் என்பது வெறும் பெயரளவிலான முன்னிலையாக மட்டுமே அமையும் என்கின்றனர். 2029-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்குள் நுழையும் பெண்கள், தங்களுக்கு முக்கியமான விவகாரங்களை இப்போதே கண்டறிந்து, அவற்றுக்காகப் போராடி, அவற்றை அரசியலின் முன்னுரிமைப் பணிகளாக மாற்றினால் மட்டுமே விவாதங்களின் போக்கை மாற்ற முடியும். இந்தப் பணியை 2029-ஆம் ஆண்டில் தொடங்க முடியாது; அது இப்போதே தொடங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். குறிப்பாக, மற்ற அனைத்தையும்விட அவசரமான, அதேசமயம் கவனிக்கப்படாத ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால்: இந்தியாவில் பெண்களின் நிலையைத் தெளிவாகக் கருத்தில் கொள்ளும் 'முதியோர் பராமரிப்பு' தொடர்பான கொள்கை கட்டமைப்பு எதுவும் இல்லை என்றும் அத்தகைய கொள்கையை வலியுறுத்திக் கேட்கும் அரசியல் மரபும் நம்மிடம் இல்லை என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். 


கௌரி என்பவர் இந்தியாவில் கொள்கை முடிவுகளாக மட்டுமே விவாதிக்கப்படும் ஒரு விஷயத்தை நடைமுறை வாழ்க்கையில் அனுபவித்துக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான பெண்களில் ஒருவர் ஆவார். உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் தனியாக வசிக்கும் அவரது 83 வயது தாய், அரசு ஆதரவு ஏதுமின்றி, பல இந்தியப் பெண்களைப் போலவே தனது கண்ணியத்தைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடி, அமைதியாக முதுமையை எதிர்கொண்டு வருகிறார். இரண்டு உலகங்களுக்கு இடையே ஊசலாடும் பல மகள்களையும் மருமகள்களையும் போல, கௌரியும் தன்னால் இயன்றபோதெல்லாம் தாயைப் பார்க்கச் சென்று, அவசரத் தேவைகளைக் கவனித்துவிட்டு மற்ற சிக்கல்களை நினைத்து கவலைப்படுகிறார். கௌரியைத் தூங்கவிடாமல் செய்வது உடல் சோர்வு அல்ல, மாறாக தானும் தனது தாயைப் போலவே முதுமையை எதிர்கொள்ள நேரிடும் என்கிற நிதர்சனமான உண்மைதான்; இனிமேலும் இதனை அமைதியாக ஏற்றுக்கொள்வதற்கு அவர் தயாராக இல்லை.


பெண்கள் தங்களின் முதுமைக் காலத்தைத் கண்ணியத்துடன் கழிப்பதை உறுதிசெய்ய, அரசாங்கம் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று கௌரி விரும்புகிறார். முதியோர் பராமரிப்பு என்பது தனிப்பட்ட குடும்பங்களின் சுமையாகக் கருதப்படாமல், அது ஒரு பொதுக் கட்டமைப்பு வசதியாக மாற்றப்பட வேண்டும் என்பதே அவரது விருப்பம். மேலும், 2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில், நாட்டின் மிகச்சிறந்த மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்காக அவர் வாக்களிக்கும் போது, அந்தப் பிரதிநிதிகள் ஏற்கனவே தனது தேவைகளை நன்கு உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் அவர் எதிர்பார்க்கிறார்.


முதுமையடைந்து வரும் இந்தியா


பொதுவெளியில் விவாதிக்கப்படுவதை விடவும் இந்தியா மிக வேகமாக முதிர்ச்சியடைந்து (வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு) வருகிறது. தற்போதே 10 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் 60 வயதைக் கடந்தவர்களாக உள்ளனர், இந்த எண்ணிக்கை 2040-ஆம் ஆண்டிற்குள் 25 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சராசரியாக ஆண்கள் வாழ்வதைவிட பெண்கள் நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் கூடுதலாக வாழ்கின்றனர். ஆனால், இந்தக் கூடுதல் ஆயுட்காலம் அவர்களுக்குப் பல சவால்களையும் சேர்த்தே கொண்டுவருகிறது: குறைவான வாழ்நாள் சேமிப்பு, தடைபட்ட பணி அனுபவம், தங்கள் பெயரில் சொத்துக்கள் இல்லாமை மற்றும் தங்களுக்கு மிகவும் தேவைப்படும்போது கவனித்துக்கொள்ள ஆள் இல்லாத நிலை போன்றவை இதில் அடங்கும். 'முதியோர்களுக்கான தேசியக் கொள்கை (1999)' (National Policy for Older Persons (1999) மற்றும் 'இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம்' (Indira Gandhi National Old Age Pension Scheme) ஆகியவை முதியோர்களை வறுமை மற்றும் ஆரோக்கியத்தின் கண்ணோட்டத்தில் மட்டுமே அணுகுகின்றனவே தவிர, பாலினரீதியான வேறுபாடுகளைக் கருத்தில் கொள்வதில்லை. இதன் விளைவாக, இந்திய அமைப்புகள் வயதான பெண்களை ஒரு தனிப்பிரிவாக அங்கீகரிக்கத் தவறிவிட்டன.


இந்தியாவில் முதியோர் பராமரிப்புத் திட்டங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் கண்ணுக்குத் தெரியாத புறக்கணிப்பு, புள்ளிவிவரங்களின் மூலம் தெளிவாகத் தெரிகிறது. ‘Alzheimer’s & Dementia’ ஆய்விதழின் 2023-ஆம் ஆண்டு ஆய்வின்படி, 60 வயதிற்கு மேற்பட்ட 8.8 மில்லியன் இந்தியர்கள் மறதி நோயால் (Dementia) பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2036-க்குள் இருமடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஆண்களைவிடப் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, அவர்களின் அறிவுத்திறன் குறையத் தொடங்கும்போது அவர்கள் தனியாக வாழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதோடு, அவர்களைக் கவனித்துக் கொள்ள ஆட்கள் இல்லாத சூழலும் நிலவுகிறது. முதியோர் பராமரிப்புத் திட்டங்களை அரசு வடிவமைக்கும்போது பெண்களின் தேவைகளைக் கருத்தில் கொள்ளாததே இதற்குக் காரணமாகும். நாடாளுமன்றக் கேள்வித் தரவுத்தளத்தில் (Parliamentary Questions database)  வயதான பெண்களைப் பற்றிய கேள்விகளோ, தனிநபர் மசோதாக்களோ அல்லது குழு விவாதங்களோ ஏறக்குறைய இல்லவே இல்லை என்பது இந்த அலட்சியத்தைத் உறுதிப்படுத்துகிறது. இருப்பினும், பெண்களின் உண்மையான தேவைகளை அரசு உணர்ந்தால் எவ்வளவு விரைவாகச் செயல்பட முடியும் என்பதற்கு மகாராஷ்டிரா ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறது. பல ஆண்டு காலப் போராட்டத்திற்குப் பிறகு, ஜனவரி மாதம் 2026-ஆம் ஆண்டில் அந்த மாநிலம் 580 அரசு மையங்களில் மாதவிடாய் நின்ற பெண்களுக்கான சிகிச்சை மையங்களை (Menopause clinics) தொடங்கியது. இதன் விளைவாக, வெறும் ஐந்து வாரங்களில் 31,000-க்கும் மேற்பட்ட பெண்கள் சிகிச்சைக்காக முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 


அவர்கள் தங்கள் வாழ்வின் உண்மை நிலையை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் என்று அவர்கள் மௌனமாகத் காத்திருந்தனர். அதேபோல், முதியோர் பராமரிப்பு மற்றும் கண்ணியமான முறையில் முதுமையைக் கழிப்பது போன்ற விவகாரங்களும் அரசின் அதே முடிவிற்காகவே காத்திருக்கின்றன.


நுண்ணறிவுத் தேவை


அரசியல் கட்சிகள் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலைத் தயார் செய்யத் தொடங்கிவிட்டன. இருப்பினும், வெறும் பெண் வேட்பாளர்களைக் களமிறக்குவது மட்டுமே நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் விவகாரங்களை மாற்றிவிடாது. 2029-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தை அர்த்தமுள்ளதாக மாற்றப்போகும் பெண் மற்றும் ஆண் பிரதிநிதிகள், களநிலவரத்தை ஆழமாகப் புரிந்துகொண்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பாக, பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவது என்பது அவர்களின் உழைப்பு மற்றும் குழந்தைகளை வளர்க்கும் காலத்தை மட்டும் குறிப்பதல்ல, மாறாக அரசு கவனிக்கத் தவறிய இடைவெளிகள் அன்றாட வாழ்வின் அங்கமாக மாறும் அவர்களின் முதுமைக் காலத்தையும் உள்ளடக்கியது என்பதை அவர்கள் உணர வேண்டும். இந்த விழிப்புணர்வு, வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தல் அறிக்கை (Manifesto) ஆகிய மூன்றிலும் பிரதிபலிக்க வேண்டும். குறிப்பாக, வயது மற்றும் பாலின அடிப்படையிலான தரவுகளைச் சேகரிக்கும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, முதியோர் பராமரிப்பிற்கான நிதி ஒதுக்கீட்டைத் தெளிவாகக் காட்டும் நிதிநிலைத்  திட்டங்கள் மற்றும் முதியோருக்கான கண்ணியமான வாழ்வை தேர்தலுக்குப் பின்பு அல்லாமல் முன்பே வாக்குறுதியாக அளிக்கும் அரசியல் கட்சிகள் மூலமாக இது உறுதிசெய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். 


2029-ஆம் ஆண்டு கௌரி தனது வாக்கைப் பதிவு செய்யும்போது, இவை அனைத்தையும் பற்றிச் சிந்திப்பார். குறிப்பாகத் தனது தாயார், தன் நிலை மற்றும் இந்தியாவின் வரலாற்றிலேயே அதிகப் பிரதிநிதித்துவம் கொண்ட இந்த நாடாளுமன்றம், தன்னைப் போன்ற பெண்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின்படி ஒரு சிறந்த நாட்டை உருவாக்குமா என்பதைப் பற்றி அவர் யோசிப்பார். இந்த மாற்றத்தைச் சரியாகச் செய்வதற்கு மூன்று ஆண்டுகள் என்பது போதுமான கால அவகாசமாகும், எனவே, இதில் நாம் தவறிழைக்கவோ அல்லது அலட்சியமாக இருக்கவோ முடியாது.


பர்கா தேவா, முதியோர்கள் கண்ணியமான முறையில் வாழ்வதற்கும் மற்றும் அவர்களுக்கான பராமரிப்பு சேவைகளை மேம்படுத்துவதற்குமான முதியோர் பராமரிப்பு கொள்கைகளை வகுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.


Original article : Transforming representation into real change by 2029 -Barkha Deva

Share: