பெண்களுக்கான இடஒதுக்கீட்டைச் செயல்படுத்துவதற்குத் தொகுதி மறுவரையறை ஏன் அவசியமாகிறது? - பிரியா குமாரி சுக்லா

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு (National Democratic Alliance (NDA)), மாநிலங்களுக்கு இடையேயான தற்போதைய விகிதாச்சாரத்தை மாற்றாமல், மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முன்மொழிந்துள்ளது. மேலும், பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தை (Women’s Reservation Act) நடைமுறைப்படுத்துவதற்காக, சமீபத்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்குப் பதிலாக, 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் சட்டப்பேரவை இடங்களை நிர்ணயிக்கவும் திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இந்த நடவடிக்கை சட்டரீதியாகவும், அரசியலமைப்புரீதியாகவும் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.


முக்கிய அம்சங்கள்:


• மக்களவை மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் ‘நாரி சக்தி வந்தன் அதினியம்’ (Nari Shakti Vandan Adhiniyam - Women’s Reservation Act, 2023) சட்டத்தை அமல்படுத்துவதற்கு அனைத்துத் தரப்பு ஒத்துழைப்பைப் பெறுவதற்காக, ஒன்றிய அரசு இந்த யோசனையைச் சில எதிர்க்கட்சிகள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுடனான ஆலோசனைகளின் போது முன்மொழிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.


• இந்தத் திட்டத்தின்கீழ், 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தபிறகு, மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையைத் தற்போதைய 543-லிருந்து 50% உயர்த்தி 816-ஆக அதிகரிக்க அரசு உத்தேசித்துள்ளது. இதில் 273 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படவுள்ளன.




உங்களுக்குத் தெரியுமா?


• இந்திய அரசியலமைப்பின் விதி 81 ஆனது, "ஒரு நபர், ஒரே வாக்கு, ஒரே மதிப்பு" (One Person, One Vote, One Value) என்ற சமத்துவக் கொள்கையை உறுதி செய்கிறது. இதன்படி, ஒவ்வொரு மாநிலத்திற்கும் மக்களவையில் இடங்கள் ஒதுக்கப்படும்போது, இந்த இடங்களின் எண்ணிக்கை அந்த மாநிலத்தின் மக்கள்தொகைக்கு ஏற்ப விகிதாசார அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், முடிந்தவரை அனைத்து மாநிலங்களிலும் இந்த விகிதம் ஒரே சீராகப் பராமரிக்கப்பட வேண்டும் என்பதையும் இந்தச் சட்டப்பிரிவு வலியுறுத்துகிறது.


• இந்திய அரசியலமைப்புச் சட்டம் 81(2)(b)-ன்படி, ஒவ்வொரு மாநிலமும் தொகுதிகளாகப் பிரிக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு பிரிக்கப்படும்போது, ஒரு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும், மக்கள்தொகைக்கும் இடங்களின் எண்ணிக்கைக்குமான விகிதம் முடிந்தவரை சமமாக இருப்பதை உறுதி செய்யவேண்டும் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.


• இந்த விதியானது ஒரு குறிப்பிட்ட விதிவிலக்கை வழங்குகிறது. 60 லட்சத்திற்கும் மிகாத மக்கள் தொகையைக் கொண்ட மிகச்சிறிய மாநிலங்களுக்கு இந்த விதிவிலக்கு பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், அந்த மாநிலங்கள் குறைந்த மக்கள் தொகையைக் கொண்டிருந்தாலும், நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் அதாவது, மக்களவையில் தங்களுக்குரிய முறையான பிரதிநிதித்துவத்தைப் பெறுவதை உறுதி செய்கிறது.


• இந்திய அரசியலமைப்பின் பிரிவு-82-ன்படி, ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்குப் பிறகும், நாடாளுமன்றம் சட்டத்தின் மூலம் தீர்மானிப்பதற்கேற்ப, மக்களவையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்படும் இடங்களின் எண்ணிக்கையும், ஒவ்வொரு மாநிலத்திற்குள்ளும் உள்ள தொகுதிகளின் பிரிவுகளும் மறுசீரமைப்பு செய்யப்படும் என்கின்றனர்.


• தொகுதி மறுவரையறை மீதான தற்போதைய தடையானது 1976 மற்றும் 2001-ஆம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட இரண்டு அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களால் ஏற்பட்டது. 1976-ஆம் ஆண்டு திருத்தத்தின் மூலம், மாநிலங்களுக்கிடையேயான இடஒதுக்கீட்டைத் தீர்மானிக்கும்போது, அரசியலமைப்புச் சட்டப்பிரிவுகள் 81 மற்றும் 82-ல் குறிப்பிடப்பட்டுள்ள "முந்தைய கடைசி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு" என்பது 1971-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பையே குறிக்கும் என 25 ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் 2001-ஆம் ஆண்டில், இந்தச் சட்டப்பிரிவுகள் மீண்டும் திருத்தப்பட்டு, 2026-ஆம் ஆண்டிற்குப் பிறகு எடுக்கப்படும் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் முடிவுகள் வெளியாகும் வரை இந்தத் தடை நீட்டிக்கப்பட்டது. எனவே, புதிய மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகள் வெளியானவுடன் இந்தத் தடை தானாகவே முடிவுக்கு வரும் என்கின்றனர்.


• இந்தச் சட்டத்திருத்தங்களுக்கான ஒரு மிக முக்கியமான காரணம் தென் மாநிலங்களின் கவலையாகும். தென் மாநிலங்களின் மக்கள்தொகை நிலையான அளவை எட்டியிருந்த வேளையில், சில வட மாநிலங்களின் மக்கள்தொகை மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்கு பிறகும் மக்கள்தொகையின் அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டால், மக்களவையில் தங்களின் பிரதிநிதித்துவப் பங்கு குறைந்துவிடும் என்று தென் மாநிலங்கள் கவலை தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது.



Original Link: Why delimitation is required for the implementation of women reservation?


Share: