காவலாளியை கண்காணிப்பவர் யார்? அரசு சேகரிக்கும் தரவுகளைப் பாதுகாக்கும் கொள்கை இந்தியர்களுக்கு ஏன் தேவை? -விக்ரம் ராஜ்

ஒரு கண்காணிப்பு அமைப்பைத் தொடங்குவதற்கு முன்பு, அரசாங்கம் முதலில் முறையான சட்ட மற்றும் நிறுவனப் பாதுகாப்புகளை உருவாக்க வேண்டும். தரவுகள் அவற்றின் நோக்கத்தை நிறைவேற்றியபிறகு, அவற்றை நீக்குவதை உறுதிசெய்யும் தரவு சேகரிப்பு விதிகள் நமக்குத் தேவை.


மார்ச் 24 அன்று, மும்பை மேற்கு ரயில்வேயால் நிறுவப்பட்ட கண்காணிப்பு (CCTV cameras) மற்றும் முக அங்கீகார அமைப்புகளை (facial recognition systems (FRS)) பயன்படுத்தி காவல்துறை இரண்டு வழக்குகளை எவ்வாறு தீர்த்தது என்பதை விவரிக்கும் ஒரு அறிக்கை எக்ஸ்பிரஸ் செய்தித்தாளில் வெளியிடப்பட்டது. இதில் ஒரு வழக்கானது, போர்த்துகீசிய பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் துன்புறுத்தப்பட்டது தொடர்பானதும், மற்றொன்று வழக்கு, 14 வயது குழந்தை காணாமல் போனது தொடர்பானது ஆகும். நாடு முழுவதும் எண்ணற்ற வழக்குகளைத் தீர்ப்பதில் சிசிடிவி மற்றும் முக அங்கீகார அமைப்பு (FRS) ஆகியவை பயனுள்ளதாக அமைந்துள்ளது. இருப்பினும், இந்த அமைப்புகளுடன் தொடர்புடைய தரவுகள் மற்றும் பொதுமக்களின் தனியுரிமை என்று வரும்போது, இதற்காக பதிலளிக்கப்படாத பல கேள்விகள் உள்ளன.


செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் அல்காரிதம் அடிப்படையிலான கண்காணிப்பை (algorithm-guided surveillance) நோக்கிய மாற்றம் இனி பெருநகரங்களுக்கு மட்டும் கட்டுப்படுத்தப்படவில்லை. மார்ச் 16 2026 அன்று, கோவாவின் போக்குவரத்து அமைச்சர் மௌவின் கொடின்ஹோ, வாகனங்களை ஊடுகதிராக்கம் (scan) செய்து அந்தத் தகவல்களை அமலாக்கத் தரவுத்தளங்களுடன் இணைப்பதற்காக, தானியங்கி வாகனப் பதிவு எண் அங்கீகார வசதியுடன் (automatic number plate recognition) கூடிய செயற்கை நுண்ணறிவு (AI) கேமராக்களை 92 இடங்களில் நிறுவும் தனது திட்டங்கள் குறித்து சட்டமன்றத்தில் தெரிவித்தார். அவர் இந்த நடவடிக்கையை ஒரு சாலைப் பாதுகாப்பு நடவடிக்கையாகக் குறிப்பிட்டாலும், இந்தத் திட்டம் ஒரு பரந்த போக்கைப் பிரதிபலிக்கிறது.


டெல்லியின் தெருக்கள்கூட மெதுவாக ஒரு செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்பாக மாறிவருகின்றன. இது பொதுப் பாதுகாப்பு மற்றும் திறன் நிர்வாகத்திற்காக என்று அரசாங்கம் கூறுகிறது. இந்தத் திட்டத்தின்கீழ், அது கேமராக்கள், தரவுத்தளங்கள் மற்றும் நிரல் நெறிமுறைகளின் பெரிய வலையமைப்புகளை அமைத்து வருகிறது. இதன் நோக்கமானது, "குற்றங்களுக்கு விரைவான பதில் நடவடிக்கை" (faster crime response) என்பதே இதன் வாக்குறுதியாகும். இந்தச் செயல்பாடுகளைக் கண்காணிக்க விதிமுறைகளோ அல்லது தெளிவான அமைப்புகளோ இல்லாத நிலையில், தொடர்ச்சியான கண்காணிப்பு ஒரு வழக்கமான செயலாக உணரப்படலாம். அரசு பாதுகாப்பு பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது, தனிப்பட்ட இடத்தைப் பாதுகாப்பது கடினமாகி வருகிறது.


இந்தியாவின் பாதுகாப்பான நகரத் திட்டம் (India’s Safe City project) இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். 2018-ல் டெல்லியில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில், ஆயிரக்கணக்கான கேமராக்களை ஒரு மையப்படுத்தப்பட்ட காவல் கட்டுப்பாட்டு அமைப்புடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முதல்கட்டமாக, அக்டோபர் 2025 முதல், சுமார் 3,500 செயற்கை நுண்ணறிவு (AI) திறன் கொண்ட கேமராக்களைப் பொருத்தும் பணியை நகரம் தொடங்கியது. அத்துடன், துப்பாக்கிச் சூடு உணர் கருவிகள் மற்றும் திறன்மிகு எச்சரிக்கை அமைப்புகளையும் நிறுவத் தொடங்கியது. இந்தக் கேமராக்கள் வெறும் காணொளிகளைப் பதிவு செய்வதோடு நின்றுவிடுவதில்லை; அவை ஒலிகளை உடனடியாகப் பகுப்பாய்வு செய்கின்றன. அவற்றால் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களைக் கண்டறிய முடியும். மேலும், ஒருவரின் குரலில் மறைந்திருக்கும் உதவிக்கான கூக்குரல்களையும் அவற்றால் அடையாளம் காண முடியும். இவ்வகையில், டெல்லியின் கண்காணிப்பு அமைப்பு மெல்ல மெல்ல 'முன்கணிக்கும்' தன்மையை அடைந்து வருகிறது. ஒரு ஆபத்து மேலும் பரவுவதற்கு முன்பாகவே, அதை முன்கூட்டியே கண்டறிவதற்கு இது முயல்கிறது.


இனிமேல் கேமராக்களை மட்டும் சார்ந்திருக்காமல், தகவல்களைச் சேகரித்து நிர்வகிப்பதற்காக இப்போது நாம் பெரிய தரவு சேமிப்பு அமைப்புகளை உருவாக்குகிறோம். இதற்கு ஒரு உதாரணம் தேசிய உளவுத்துறை கட்டமைப்பு (National Intelligence Grid(NATGRID)) ஆகும். இந்த அமைப்பு, முன்பு தனித்தனி தரவுத்தளங்களில் வைக்கப்பட்டிருந்த தரவுகளை ஒன்றிணைக்கிறது. 26/11 தாக்குதலுக்குப் பிறகு சிறந்த ஒருங்கிணைப்புக்கான வலுவான தேவை இருந்ததால் இது முதலில் திட்டமிடப்பட்டது. காலப்போக்கில், இது வெவ்வேறு துறைகளிலிருந்து தகவல்களை இணைக்கத் தொடங்கியுள்ளது. 2026-ம் ஆண்டின் தொடக்கத்தில், இது தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுடன் (National Population Register) அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது. இதன் மூலம், சட்ட அமலாக்கத் துறைக்கு "ஏறக்குறைய 119 கோடி குடியிருப்பாளர்களின் குடும்ப அளவிலான மக்கள்தொகைத் தரவுகளுக்கான நேரடி அணுகும் வசதியை" வழங்கியது. நடைமுறையில், இதன் பொருள் என்னவென்றால், அதிகாரப்பூர்வ அனுமதி பெற்ற ஒரு துப்பறிவாளர், ஒரே நேரத்தில் பல தரவுத்தளங்களில் தேடமுடியும். அவர், வெவ்வேறு தரவுத் தொகுப்புகளை ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம், சந்தேக நபர்களின் பயணம், நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் குடும்பத் தொடர்புகளைக் கண்காணிக்க முடியும்.


இந்தக் கருவிகள் அனைத்தும் டிஜிட்டல் துறையின் மாறிவரும் விதிமுறைகளைச் சார்ந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளில், நமது அரசாங்கம் இணையவழி தளங்களுக்கான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. தகவல் தொழில்நுட்ப விதிகள்-2021, இடைத்தரகர்கள்மீது கடுமையான கடமைகளை விதித்துள்ளன. அவர்கள் உரிய கவனத்துடன் செயல்பட்டு, தடயத்தைக் கண்டறியும் தன்மையை உறுதி செய்ய வேண்டும். அதேநேரத்தில், இந்தியாவின் புதிய டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம்-2023 (Digital Personal Data Protection Act), தரவுச் செயலாக்கத்திற்கான ஒரு கட்டமைப்பை வழங்குகிறது மற்றும் மக்களின் தனிப்பட்ட தரவுகளின் சில பயன்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது. இந்தச் சட்டங்கள் குடிமக்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆனால், அவை அரசாங்கத்தின் சொந்தத் தரவு அமைப்புகள் மீது அதிகம் கவனம் செலுத்துவதைக் காட்டிலும், பெரும்பாலும் தளங்கள் மற்றும் வழங்குநர்கள் மீதே கவனம் செலுத்துகின்றன. கேமராக்கள் அல்லது தரவுத்தளங்களிலிருந்து அரசு எவ்வாறு தகவல்களைச் சேகரிக்கிறது, தக்கவைத்துக்கொள்கிறது அல்லது பயன்படுத்துகிறது என்பதில் வெளிப்படைத்தன்மையைக் கோரும் கண்காணிப்புச் சட்டம் தற்போது இல்லை.


அதிகாரப்பூர்வ டிஜிட்டல் அமைப்புகள் குறித்தும் சில கடுமையான குறைபாடுகளைக் காட்டியுள்ளன. 2023-ல், ஒரு முடக்குநரின் தானியங்கி செயலி (hacker’s bot) மூலம், இந்தியாவின் CoWIN தரவுத்தளத்தைப் (CoWIN portal) ரகசியமாகப் பயன்படுத்தினர். அந்த பாட், யார் வேண்டுமானாலும் ஒரு தொலைபேசி எண்ணை உள்ளிட அனுமதித்தது. எண்ணை உள்ளீடு செய்தபிறகு, அந்த நபரின் பெயரையும் பாலினத்தையும் அவர்களால் பார்க்க முடிந்தது. கடவுச்சீட்டு அல்லது ஆதார் விவரங்கள் வழங்கப்பட்டிருந்தால், அவற்றையும் அணுக முடிந்தது. இது, அரசாங்கத்தால் நடத்தப்படும் ஒரு அமைப்பு எவ்வளவு விரைவாகத் தடம் மாறக்கூடும் என்பதை வெளிப்படுத்துகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும்போது, மக்கள் நம்பிக்கையை இழக்கத் தொடங்குகிறார்கள்.


2025-ம் ஆண்டில் லோக்கல்சர்க்கிள்ஸ் (LocalCircles) நிறுவனம் 36,000-க்கும் மேற்பட்ட மக்களிடமிருந்து நடத்திய ஒரு கணக்கெடுப்பில், கிட்டத்தட்ட 87 சதவிகிதத்தினர் தங்களின் தனிப்பட்ட விவரங்கள் ஏற்கனவே அம்பலப்படுத்தப்பட்டுவிட்டதாக நம்புவதாக அது கண்டறிந்தது. இது வெறும் தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல. அதிகாரப்பூர்வ பதிவுகள் கடுமையான கவலைகளைக் காட்டுகின்றன. உதாரணமாக, 2022-ல், தலைமை கணக்குத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General) ஆதார் திட்டத்தின் பாதுகாப்புகளில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்தார்.


இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில், ஒவ்வொரு கண்காணிப்புக் கேமராவும் மற்றும் தரவுத்தளத் தேடலும் மக்களின் தனியுரிமையைப் பாதிக்கக்கூடும். புட்டசாமி vs இந்திய யூனியன் வழக்கில் (Puttaswamy vs Union of India case), அரசால் தனியுரிமைமீது விதிக்கப்படும் எந்தவொரு கட்டுப்பாடும் சட்டப்பூர்வமானதாகவும், அவசியமானதாகவும், விகிதாசாரமானதாகவும் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த அளவுகோலின்படி, இந்தியாவின் கண்காணிப்புத் திட்டத்தில் தற்போது போதுமான பாதுகாப்புகள் இல்லை. காணொளிகள் அல்லது பயோமெட்ரிக் தரவுகள் எவ்வாறு சேமிக்கப்படுகின்றன அல்லது முகத்தை அடையாளம் காணும் அமைப்புகளுக்கு எவ்வாறு பயிற்சி அளிக்கப்பட்டு, பிழைகள் சரிபார்க்கப்படுகின்றன என்பது பற்றி தெளிவாக அறியப்படவில்லை.


அதிகாரிகள் டிஜிட்டல் தீர்வுகளை வலியுறுத்தும் அதேவேளையில், வன்முறை, ஹேக்கிங் அல்லது பிற சட்டவிரோதச் செயல்கள் போன்ற ஆபத்துகளையும் முன்னிலைப்படுத்துகின்றனர். பொதுவாக, காகிதத்தில், இது நியாயமானதாகத் தெரிகிறது. டிஜிட்டல் கருவிகள் சரியாகப் பயன்படுத்தப்படும்போது, அதிகாரிகள் மிகவும் திறமையாகச் செயல்பட உதவும். இருப்பினும், ஏதேனும் தவறு நடந்துவிடுமோ என்ற ஒரே காரணத்திற்காக அனைவரையும் உன்னிப்பாகக் கண்காணிப்பது சிக்கலானது. அந்த அணுகுமுறை வரம்பு மீறியது. தரவுகள் எவ்வாறு சேகரிக்கப்படுகின்றன அல்லது அவற்றை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பது குறித்துத் தெளிவான விளக்கம் இல்லாதபோது, மூடிய கதவுகளுக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்று கேள்வி கேட்கும் திறனை மக்கள் இழக்கிறார்கள். வெளிப்படைத்தன்மை கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனாலும் தெளிவான விதிகள் பாதுகாப்பு முக்கியமானது, ஆனாலும் தெளிவான விதிகள் இல்லாத தொடர்ச்சியான கண்காணிப்பு, அடிப்படை நியாயத்தன்மையைச் சிதைக்கிறது.


ஒரு கண்காணிப்பு அமைப்பைத் தொடங்குவதற்குமுன், அரசாங்கம் முதலில் முறையான சட்ட மற்றும் நிறுவனப் பாதுகாப்புகளை உருவாக்க வேண்டும். இந்தப் பாதுகாப்புகள் இன்றியமையாதவை. தரவுகள் அவற்றின் நோக்கத்தை நிறைவேற்றிய பிறகு அவற்றை நீக்குவதை உறுதிசெய்யும் தரவு சேகரிப்பு விதிகள் (rules on data collection) நமக்குத் தேவை. தரவுகளை எவ்வளவு காலம் வைத்திருக்கலாம் என்பதற்கு கடுமையான வரம்புகள் இருக்க வேண்டும். நிரல்நெறிமுறைகளில் பயன்படுத்தப்படும் நெறிமுறைகள் பொறுப்புக்கூறக்கூடியவையாக இருக்க வேண்டும். அப்போதுதான், ஒன்றிற்காக மற்றொன்றை விட்டுக்கொடுக்காமல், இது பாதுகாப்பானது மற்றும் வெளிப்படைத்தன்மையானது என்று நம்மால் கூற முடியும்.


இந்தக் கட்டுரையாளர் இணைய சுதந்திர அறக்கட்டளையுடன் தொடர்புடையவர்.


Original Link: Who watches the watchman? Why Indians need policy that safeguards data gathered by the government?.

Share: