இந்தியாவுக்குத் இப்போது தேவையானது, புள்ளிவிவரங்களை வெளியிடும் அமைப்புகளின் சுதந்திரத்தை மீட்டெடுப்பதாகும். அந்த அமைப்புகள் நாட்டின் நிலைமையை உண்மையான தரவுகளின் மூலம் நேர்மையாக விவரிக்க வேண்டும்.
பல ஆண்டுகளாக, இந்தியர்கள் செய்திகளில் வரும் தலைப்புச் செய்திகளை மட்டுமே நம்புமாறு கூறப்பட்டு வருகின்றனர்: அதாவது இந்தியா "மிக வேகமாக வளரும் பொருளாதாரம்", "உயர்ந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி", மற்றும் "வலுவான வளர்ச்சி வேகம்" என்பதே அந்த செய்திகள் ஆகும். ஆனால் மக்கள், தலைப்புச் செய்திகளில் கூறப்படும் வளர்ச்சிக்கு இணையான நிலையில் வாழ்வதில்லை மாறாக அவர்கள் தங்களின் மாதச் சம்பளம், உயர்ந்துவரும் விலைவாசி, வேலை வாய்ப்பின்மை, பள்ளிக் கட்டணங்கள் மற்றும் உயிர் பிழைத்திருக்கப் போராடும் சிறு தொழில்களுக்கிடையில்தான் வாழ்கிறார்கள்.
எனவே, இந்தியப் பொருளாதாரம் அறிக்கைகளில் மட்டும் சிறப்பாகத் தெரிகிறதா என்பது அல்ல, மாறாக அந்தப் புள்ளிவிவரங்களை இன்னும் நம்ப முடியுமா என்பதுதான் இந்தியாவின் முன் இருக்கும் உண்மையான கேள்வி ஆகும்.
அபிஷேக் ஆனந்த், ஜோஷ் ஃபெல்மேன் மற்றும் அரவிந்த் சுப்ரமணியன் ஆகியோரின் புதிய ஆய்வு, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product (GDP)) வளர்ச்சி கடந்த 20 ஆண்டுகளாகத் தவறாகக் கணக்கிடப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறது. அவர்களின் அறிக்கை (“இந்தியாவின் 20 ஆண்டுகால மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தவறான மதிப்பீடு: புதிய சான்றுகள்”, மார்ச் 2026) (“India’s 20 years of GDP misestimation: New evidence”, March 2026), 2011-ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியாவின் வளர்ச்சி சுமார் 1.5 முதல் 2 சதவீதம் வரை அதிகமாகக் காட்டப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கிறது. இது பார்ப்பதற்கு ஏதோ தொழில்நுட்பரீதியான சிக்கலாகத் தோன்றலாம், ஆனால் உண்மையில் இது அத்தகைய கடினமான விஷயம் அல்ல என்கின்றனர்.
மிகச்சிறிய மாற்றங்கள்கூட ஏற்படுத்தக்கூடிய தாக்கம்
ஒரு பத்தாண்டுக் காலத்தில் பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் வெறும் இரண்டு சதவீத வித்தியாசம் கூட, அந்தப் பொருளாதாரம் எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பதையே பெரிய அளவில் மாற்றிவிடும். இது கொள்கை வகுப்பாளர்கள் தங்களின் வெற்றியை மதிப்பிடுவதிலும், முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதிலும் மற்றும் பொதுமக்கள் தங்கள் அரசாங்கத்தின் செயல்பாட்டைப் புரிந்துகொள்வதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதைவிட முக்கியமாக, இது ஒரு ஆழமான சிக்கலைச் சுட்டிக்காட்டுகிறது: பெரும்பாலான தொழிலாளர்கள் முறைசாரா துறையில் (Informal Sector) இருக்கும் ஒரு பொருளாதாரத்தில், வெறும் முறைசார்ந்த துறை (Formal Sector) தரவுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பீடுகள், சாதாரண இந்தியர்கள் சந்திக்கும் உண்மையான சவால்களைப் புறக்கணித்துவிடக்கூடும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாகக் கொள்கை மாற்றங்கள், சுகாதார நெருக்கடிகள் மற்றும் அன்றாடம் வருமானம் ஈட்டுவதில் உள்ள நிச்சயமற்றத் தன்மைகள் போன்றவற்றுடன் போராடும் சாமானிய மக்களின் நிலையை இந்தத் தரவுகள் சரியாகப் பிரதிபலிப்பதில்லை என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த நடைமுறை மிகவும் எளிமையானது. இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதாரச் செயல்பாடுகளைக் கணக்கிடுவதற்கு, இந்தியா அதிகளவில் முறைசார்ந்த துறையிலிருந்து சேகரிக்கப்படும் தரவுகளையே சார்ந்து இருக்கிறது. ஆனால், முறைசாராத் துறையைவிட முறைசார்ந்த துறையை அளவிடுவது மிகவும் எளிது என்பதால், தேசிய கணக்குத் தரவுகள் (National Accounts Statistics (NAS)) நாட்டின் பொருளாதார நிலையின் உண்மையைப் பிரதிபலிப்பதைவிட, புள்ளிவிவரங்களில் எவை எளிதாகத் தெரிகிறதோ அவற்றை மட்டுமே படிப்படியாகப் பிரதிபலிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இலட்சக்கணக்கான மக்கள் சிறு பணிமனைகள் (Workshops), தெருவோரக் கடைகள், குடும்பத் தொழில்கள் மற்றும் ரொக்கப் பணத்தை அடிப்படையாகக் கொண்ட வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ள ஒரு நாட்டில், இந்த வேறுபாடு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
அதிகாரப்பூர்வ அறிக்கைகள் வலுவான பொருளாதார வளர்ச்சியை (முன்னிலைப்படுத்திய அதேவேளையில், தனியார் முதலீடு குறைவாகவே இருந்தது, உண்மையான ஊதிய வளர்ச்சி மந்தமாக இருந்தது மற்றும் உற்பத்தித் துறை எதிர்பார்த்த வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை. குறிப்பாக வேலைச்சந்தையில் நுழையும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது ஒரு மிகப்பெரிய கவலையாகவே நீடித்தது, இதன் மூலம் கடந்த பத்தாண்டுகள் ஏன் பல இந்தியர்களுக்குக் குழப்பமானதாகத் தோன்றியது என்பதை இந்தக் கருத்தாக்கம் விளக்குகிறது.
தொடரும் நெருக்கடிகள்
அறிக்கைகளில் கூறப்படும் பொருளாதார வளர்ச்சிக்கும், மக்களின் உண்மையான வாழ்க்கை அனுபவத்திற்கும் இடையே உள்ள இடைவெளி பல பொருளாதார அதிர்ச்சிகளுக்குப் பிறகு மேலும் அதிகரித்துள்ளது. 2016-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு (Demonetisation) நடவடிக்கை, முறைசாரா வேலைவாய்ப்புகளை அதிகம் வழங்கும் ரொக்கப் பணத்தைச் சார்ந்திருந்த துறைகளை நிலைகுலையச் செய்ததாகவும் அதன்பின் அறிமுகப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax (GST)), சிறு தொழில்கள் சமாளிக்க முடியாத அளவிற்கு வரி இணக்கச் செலவுகளை (Compliance costs) அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து வந்த கொரோனா (COVID-19) பெருந்தொற்று, முறைசாரா பொருளாதாரத்தை (Informal economy) மிகக் கடுமையாகப் பாதித்ததாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
பொருளாதார வளர்ச்சி மதிப்பீடுகள் பெரும்பாலும் முறைசார்ந்த துறையின் தரவுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும்போது, முறைசாராத் துறையைக் கடுமையாகப் பாதிக்கும் பொருளாதார பாதிப்புகள் புள்ளிவிவர ரீதியாகத் தெரியாமல் மறைந்துவிடக்கூடும் என்கின்றனர். அதாவது, இத்தகைய பாதிப்புகள் வேலைவாய்ப்பு மற்றும் குடும்ப வருமானத்தை முழுமையாக மாற்றியமைத்தாலும், அவை அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரங்களில் பிரதிபலிக்காமல் போய்விடும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆனால், உண்மையான பிரச்சினை வெறும் புள்ளிவிவரக் கணக்கீடுகளுக்கும் அப்பால் ஆழமாக உள்ளது. இந்தியாவின் தற்போதைய வளர்ச்சி மாதிரியில் உள்ள மிக முக்கியமான முரண்பாடாக பல பொருளாதார வல்லுநர்கள் அடையாளம் காட்டும் ஒரு விஷயத்தில்தான் அந்தப் பிரச்சினை அடங்கியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
நாட்டின் செல்வங்களானது ஒரு சிறிய குழுவினரிடமும், குறிப்பாகப் பெரிய நிறுவனங்கள் மற்றும் சில மேல்தட்டு மக்களிடமும் அதிகமாகக் குவிந்து வருகிறது. அதேவேளையில், பொது நலத்திட்டங்களின் சென்றடையும் தன்மையும் செயல்திறனும் குறைந்து வருகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தி போன்ற பொருளாதார வளர்ச்சி நிகழ்ந்தாலும், அதன் நன்மைகள் சுருங்கி, ஏழைகளுக்கான பாதுகாப்பு நிலைகள் பலவீனமடைந்து வருகின்றன. இதன் விளைவாக, மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும்போதும் புள்ளிவிவரங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி போன்ற பொருளாதார வளர்ச்சி எண்கள் உயர்ந்துகொண்டே இருக்கலாம். இச்சூழலில், "முறைப்படுத்துதல்" என்ற சொல் அரசியலுக்கு மிகவும் வசதியாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உண்மையான முன்னேற்றத்தைக் காட்டுவதுபோல் தோன்றினாலும், அதன் பின்னே சிறு தொழில்கள் மறைந்து, பெரிய நிறுவனங்கள் அவற்றைக் கைப்பற்றுகின்றன எனும் ஒரு கடினமான உண்மை மறைந்திருக்கிறது. இந்த மாற்றமானது தேசிய கணக்குத் தரவுகளில் "வளர்ச்சி" எனப் பதிவு செய்யப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
ஒரு பெருநிறுவனத்தின் உணவகத்தையோ அல்லது கடையையோ கணக்கெடுப்பது எளிது என்பதற்காகவே, ஒரு சாதாரண மளிகைக் கடை மூடப்படுவதை நாட்டின் நவீனமயமாகக் கருதிவிட முடியாது. தற்போதைய நிலையில், இந்தப் பிரச்சனை என்பது வெறும் தொழில்நுட்பம் சார்ந்ததாகவோ அல்லது பொருளாதாரக் கணக்கீடு சார்ந்ததாகவோ மட்டும் இல்லை மாறாக, இது மக்களாட்சி மற்றும் ஜனநாயக உரிமை சார்ந்த விஷயமாகவும் உருவெடுத்துள்ளது.
மோசமான தரவுகள்
ஒரு நாட்டின் மிக முக்கியமான பொருளாதாரத் தரவுகள் (Economic Data) தீவிரமான சந்தேகத்திற்கு உள்ளாக்கப்படும்போது, அதற்கு இயல்பான எதிர்வினை வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதாகத்தான் இருக்கவேண்டும், அதைக் குறைப்பதாக இருக்கக் கூடாது. இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவின் புள்ளிவிவர அமைப்பு இதற்கு நேர்மாறான நடவடிக்கைகளையே மேற்கொண்டுள்ளது.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தாமதமானதால், கொள்கை வகுப்பாளர்கள் இன்னும் 2011-ஆம் ஆண்டின் தரவுகளையே நம்பியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 2017–18-ஆம் ஆண்டின் நுகர்வு ஆய்வு (Consumption Survey), குடும்பச் செலவினங்கள் குறைந்திருப்பதைக் காட்டியதால் (இது கொரோனா (COVID-19) பாதிப்பிற்கு முன்பே நடந்திருந்தாலும்), அந்த அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. மேலும், 2019-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்பு, வேலையில்லாத் திண்டாட்டம் பல ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்திருப்பதாகக் காட்டிய தொழிலாளர் வள ஆய்வு (Labour Force Survey (PLFS)), பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, தேசிய புள்ளியியல் ஆணையத்தின் (National Statistical Commission (NSC)) உறுப்பினர்கள் சிலர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இந்த ஒவ்வொரு நிகழ்விற்கும் தனித்தனி விளக்கங்கள் கூறப்படலாம், ஆனால், இவை அனைத்தையும் ஒன்றாகப் பார்க்கும்போது, அரசு தங்களுக்குச் சிக்கலை ஏற்படுத்தும் தரவுகளை ஏற்றுக்கொள்வதில் எந்த அளவிற்கு விருப்பத்துடன் இருக்கிறது என்பது குறித்த ஒரு கேள்வியை எழுப்புகிறது.
ஒரு ஜனநாயக நாட்டில், புள்ளிவிவரங்கள் என்பது வெறும் மேடைப் பேச்சுகளில் காட்டுவதற்காக மட்டும் அல்ல, அவை பொதுமக்களுக்கான அத்தியாவசியக் கருவிகள் ஆகும். குடிமக்கள் அரசின் செயல்பாடுகளை மதிப்பிடவும், பொருளாதார வல்லுநர்கள் கொள்கைகளை வடிவமைக்கவும், அரசாங்கங்கள் பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறியவும் இந்தத் தரவுகள் உதவுகின்றன. இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு, நம்பகமான பொருளாதாரத் தரவுகள் என்பது வெறும் விருப்பத்தேர்வு மட்டுமல்ல அது மிகவும் முக்கியமானதாகிறது. வெறும் முழக்கங்களால் வேலையில்லாத் திண்டாட்டத்தை சரிசெய்யவோ, இணையதள ஹேஷ்டேக் (#Hashtags) மூலம் தேவையை அதிகரிக்கவோ அல்லது போலியான தரவுகள் மூலம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வளர்க்கவோ முடியாது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் பொருளாதார வளர்ச்சி உண்மையானதாக இருந்தால், அது எந்தவொரு கடுமையான ஆய்விற்கும் உட்படும்போது உண்மையை நிரூபிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்தியாவுக்கு இப்போது தேவைப்படுவது சுதந்திரமான புள்ளியியல் நிறுவனங்கள், முறைசாரா தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் (கிராமப்புற மற்றும் நகர்ப்புறம் ஆகிய இரு தரப்பினரின்) உண்மையான நிலையை வெளிப்படுத்தும் தரவுகள் ஆகும். மேலும், பொருளாதாரத்தின் உண்மையான நிலையை மறைக்கும் குறுக்குவழிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.
நாட்டின் உண்மையான நிலவரத்தை தரவுகள் நேர்மையாகப் பிரதிபலிக்க வேண்டும். அவை வெறும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஆதரவாக மட்டும் அமைந்துவிடக் கூடாது என்பதையும் தெளிவுபடுத்துகின்றனர்.
பவன் கேரா, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்புத் துறையின், ஊடக மற்றும் விளம்பரப் பிரிவின் தலைவராக உள்ளார்.
Original Link: India’s growth claims, a clash with data reality