Showing posts with label growth. Show all posts
Showing posts with label growth. Show all posts

சீர்திருத்தங்கள் 3.0 : 'இந்தியாவின்' வளர்ச்சி விகிதத்தை நோக்கி . . . - ஸ்ரீவத்ச கிருஷ்ணா

'சீர்திருத்தங்கள் 3.0', செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த நாட்டை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த வாய்ப்பை இந்தியா தவறவிடக் கூடாது.


சுதந்திரத்திற்குப் பிந்தைய 45 ஆண்டுகளில், இந்தியாவின் வளர்ச்சி வெறும் 3% என்ற குறைவான விகிதத்திலேயே இருந்தது. இது 'இந்து வளர்ச்சி விகிதம்' (Hindu rate of growth) என்று பரவலாக விமர்சிக்கப்பட்டது. 1991-ல், இந்தியா ஒரு 'செலுத்துச் சமநிலை நெருக்கடியை' (balance-of-payments crisis) எதிர்கொண்டது. இந்த நெருக்கடி நாட்டைப் பொருளாதார தாராளமயமாக்கல் நடவடிக்கைகளை மேற்கொள்ள கட்டாயப்படுத்தியது. ஒரு பத்தாண்டிற்குள்ளேயே, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) வளர்ச்சி வெகுவாக அதிகரித்தது. இதிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால், நெருக்கடிகள் பெரும்பாலும் சீர்திருத்தங்களுக்கு வழிவகுக்கின்றன. இந்தச் சீர்திருத்தங்கள் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. 1991-ல் தாராளமயமாக்கல் ஏற்படுத்திய அதே போன்றதொரு பெரும் மாற்றத்தை உருவாக்கும் ஆற்றலை இன்று செயற்கை நுண்ணறிவு (AI) வழங்குகிறது. இந்தியா இதில் முதலீடு செய்ய முடியுமா என்பது கேள்வியல்ல; மாறாக, முதலீடு செய்யாமல் இருக்க இந்தியாவுக்கு முடியுமா என்பதே கேள்வி. பிரதமர் நரேந்திர மோடியின் 12 ஆண்டுகால தலைமைக்குப் பிறகு, சீர்திருத்த நடவடிக்கைகளில் இந்தியா மற்றொரு முக்கிய மைல்கல்லை (WhatsApp போன்றதொரு புரட்சிகரமான தருணத்தை) எட்டியுள்ளது. அதாவது, 'இந்து வளர்ச்சி விகித' (Hindu rate of growth) நிலையிலிருந்து 'இந்தியா வளர்ச்சி விகித' (Bharat rate of growth) நிலைக்கு — அதாவது அடுத்த பத்தாண்டுகளில் 8% மற்றும் அதற்கும் மேலான வளர்ச்சிக்கு இந்தியாவை உயர்த்துவதற்கான தருணமாக உள்ளது.


செயற்கை நுண்ணறிவு (AI) அணுகலை (AI tokens) இலவசமாக்குவதற்கான அவசியம்


புத்தாக்கத்தின் மூலம் உள்கட்டமைப்பில் பல தலைமுறை வளர்ச்சிகளை ஒரே நேரத்தில் கடந்து செல்ல முடியும் என்பதை இந்தியா ஏற்கனவே நிரூபித்துள்ளது. உலகின் மிகப்பெரிய பயோமெட்ரிக் (உயிரியல் அடையாள) அமைப்பான 'ஆதார்' (Aadhaar) திட்டத்தில் 138 கோடி மக்கள் பதிவு செய்துள்ளனர். உலகின் நிகழ்நேர டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் (real-time digital payments) 50%-ஐக் கையாளும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI), தற்போது ஆண்டுக்கு 250 பில்லியன் பரிவர்த்தனைகளை (மதிப்பு $3.4 டிரில்லியன்) மேற்கொள்கிறது. 2016-ல் தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), வெறும் ஐந்து மாதங்களில் 10 கோடி சந்தாதாரர்களை இணைத்ததுடன், இணைய வசதியையும் கிட்டத்தட்ட இலவசமாக்கியது. திறந்தநிலை AI மாதிரிகளை (open AI models) ஏற்றுக்கொள்வது, கணினி வன்பொருள் (compute hardware) தேர்வுகளைப் பன்முகப்படுத்துவது மற்றும் 'டேட்டா'வைப் போலவே 'AI அணுகலையும்' இலவசமாக்குவது ஆகியவற்றின் மூலம், ஆதார் மற்றும் UPI போன்ற சாதனைகளை செயற்கை நுண்ணறிவு (AI) காலகட்டத்திலும் இந்தியா எவ்வாறு மீண்டும் நிகழ்த்த முடியும்?


இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில், வெறும் 0.65%-ஐ மட்டுமே ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு (R&D) செலவிடுகிறது. இது சீனா (2.4%), அமெரிக்கா (3.5%), தென் கொரியா (4.9%) மற்றும் இஸ்ரேல் (5.4%) ஆகிய நாடுகளின் செலவினங்களைவிட மிகக் குறைவு. 1947 முதல் 1991 வரை ஆட்சியில் இருந்த சோசலிசக் கொள்கை கொண்ட காங்கிரஸ் அரசாங்கங்கள், நாட்டின் நிதி நிலைமை காரணமாக அதிகச் செலவு செய்ய முடியாது என்று வாதிட்டன. அந்த வாதம் இன்று பொருந்தாது; இனிமேலும் அது பொருந்தவும் கூடாது. இப்போது எழும் முக்கிய கேள்வியானது, செயற்கை நுண்ணறிவு (AI) அணுகல்களை இலவசமாக்குவதற்கான நேரம் வந்துவிட்டதா? அப்படியென்றால், அதை நாம் எவ்வாறு செயல்படுத்தப் போகிறோம்? நாட்டின் முதல் 100 தேசிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களுக்கும், 5,000 பள்ளிகளுக்கும் அணுகல்களை இலவசமாக்குவதன் மூலம், செயற்கை நுண்ணறிவை விஞ்ஞானிகளுக்கும் மாணவர்களுக்கும் ஒரு பயனுள்ள கூட்டமைப்பாக மாற்ற முடியுமா?


இந்தியா ஒவ்வொரு ஆண்டும் கலோரிகள், இரசாயனங்கள் மற்றும் கார்பன் ஆகியவற்றிற்கு மானியம் வழங்க சுமார் 49 பில்லியன் டாலர்களைச் செலவிடுகிறது. இப்போது அது அறிவாற்றலுக்கு மானியம் வழங்கத் தயாராக இருக்கிறதா என்பதுதான் கேள்வி. அதற்கான பதில் 'ஆம்' என்பதாகும். இந்தியாவால் ஏற்கனவே இதற்கான செலவை மேற்கொள்ள முடியும். தற்போது பிற மானியங்களுக்குச் செலவிடப்படும் தொகையுடன் ஒப்பிடுகையில், இதற்கான செலவு மிகச் சிறிய அளவே ஆகும். நாட்டின் முதல் 100 பல்கலைக்கழகங்கள் மற்றும் தேசிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள், அத்துடன் 5,000 உயர்நிலைப் பள்ளிகளுக்கான முழுமையான செயற்கை நுண்ணறிவு அணுகல் மானியத்திற்கு ஆண்டுக்கு சுமார் 2 பில்லியன் டாலர் செலவாகும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தோராயமாக 0.06% ஆகும். இந்த செயற்கை நுண்ணறிவு முதலீடு, இந்தியாவின் உணவு மானியத்தில் சுமார் பதினான்கில் ஒரு பங்காகவும், அதன் உர மானியத்தில் பத்தில் ஒரு பங்காகவும், மேலும் ஒரே காலாண்டில் எல்பிஜி வருவாய் இழப்புகளுக்காக எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையைவிடக் குறைவாகவும் உள்ளது. இது மிகப்பெரிய அல்லது நடைமுறைக்குச் சாத்தியமற்ற நிதித்தொகை அல்ல. இது இந்தியாவின் தற்போதைய நலத்திட்டச் செலவினங்களில் இது மிகச்சிறிய ஒரு பகுதியே ஆகும். ஆனால், இது மாற்றத்தை உருவாக்கும், கூட்டுவட்டி வருமானத்தை ஈட்டும் ஆற்றலைக் கொண்டுள்ளது.


இந்தியாவுக்கு கூடுதல் நிதி தேவையில்லை. அதற்குத் தேவைப்படுவது புதிய முன்னுரிமைகள், புதிய கொள்கை கட்டமைப்புகள் மற்றும் தற்போதுள்ள வளங்களைச் சிறப்பாக மறுபகிர்வு செய்தல் ஆகியவைதான். முதலாவதாக, தற்போதுள்ள பயனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளில் ஒரு ரூபாயைக்கூட குறைக்காமலேயே 'AI அணுகலுக்கு' (செயற்கை நுண்ணறிவுச் சேவைக்கான அலகுகள்) நிதியளிக்க முடியும். மானியத் தொகையின் வளர்ச்சியை ஓராண்டுக்கு மட்டும் நிறுத்தி வைப்பதன் மூலம் இதைச் சாத்தியமாக்கலாம். கடந்த பத்தாண்டுகளில் உரமானியம் மட்டுமே ஆண்டுக்கு 11% கூட்டு வளர்ச்சி விகிதத்தில் (CAGR) அதிகரித்துள்ளது. இரண்டாவதாக, AWS, Google மற்றும் Microsoft போன்ற மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் (hyperscalers) இந்தியா பொது-தனியார் கூட்டாண்மையை உருவாக்க வேண்டும். இதன் மூலம், தரவு மையங்களுக்கான நிலம், மின்சார மானியங்கள் மற்றும் தரவு குறித்த உத்தரவாதங்களை, அரசு வழங்கலாம். அதற்குப் பதிலாக, இந்நிறுவனங்கள் இலவச AI செயலாக்கத் திறனை (AI inference capacity) வழங்க முடியும். இந்தியாவின் 1.4 பில்லியன் பயனர் சந்தை, சில நாடுகளால் மட்டுமே ஈடுசெய்யக்கூடிய ஒரு பேரம்பேசும் (bargaining) ஆற்றலை அதற்கு வழங்குகிறது. இருப்பினும், புவிசார் அரசியல் மற்றும் நிச்சயமற்ற தன்மையால் வடிவமைக்கப்படும் இத்தகைய தொழில்நுட்ப-வணிகப் பேச்சுவார்த்தைகளுக்குக் கணிசமான திறமை தேவைப்படும். மூன்றாவதாக, தேவைப்பட்டால், கட்டணம் செலுத்தும் பெருநிறுவனங்களுக்கான செயற்கை நுண்ணறிவு (AI) சேவைகள் மூலம் பள்ளிகள் பள்ளிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கான இலவச அணுகலை வழங்க நிதியளிக்க முடியும்.


இலவசத் தரவு (data) சேவையானது இந்தியாவை மாற்றியமைத்தது போலவே, இலவச செயற்கை நுண்ணறிவு (AI) அணுகல்களும் அதே மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். மாறாக, அரசு 'ஜியோ' (Jio) நிறுவனத்திற்கு நேரடியாக மானியம் வழங்கவில்லை; மாறாக, அதற்கான சரியான ஒழுங்குமுறைச் சூழலை உருவாக்கியது. அலைக்கற்றை ஏலங்கள், இணைய நடுநிலைமை (net neutrality), உள்கட்டமைப்புப் பகிர்வு மற்றும் நீண்டகால முன்னோட்டத் திட்டம் (pilot programme) ஆகியவற்றின் மூலம் அரசு இதைச் சாதித்தது.


இதன் விளைவாக, மூன்றாண்டுகளுக்கும் குறைவான காலத்தில், இணைய அணுகலின் விலை ஒரு ஜிபிக்கு சுமார் $3-லிருந்து $0.10 ஆகக் குறைந்தது. இதே உத்தியை செயற்கை நுண்ணறிவு (AI) அணுகலுக்கும் பயன்படுத்தலாம். இதனால், சரியான சூழலை உருவாக்குவதன் மூலம், சந்தை வளர்ச்சியை ஏற்படுத்தலாம். இந்தியாவின் பங்கு காசோலையை எழுதுவது அல்ல, மாறாக அதைத் தேவைப்படாத நிலையை உருவாக்குவதே அதன் பணியாகும்.


மாதிரிகளை வழங்குதல்


சான் பிரான்சிஸ்கோ அல்லது பெய்ஜிங்கிலிருந்து பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (Application Programming Interface(API)) மூலம் பெரிய மொழி மாதிரிகளைப் (LLMs) பயன்படுத்துவது மட்டுமல்லாமல், அவற்றை தெளிவுப்படுத்தி இயக்குவதற்கான திறனை இந்தியா உருவாக்க வேண்டும். சர்வம் (Sarvam) மூலம், முன்னணி மாதிரிகளை இந்திய மண்ணிலேயே பயிற்றுவிக்க முடியும் என்பதை அது ஏற்கனவே காட்டியுள்ளது. அடுத்த கட்டமாக, சில திறந்த-வள மாதிரிகள் (open-source model) சீனாவிலிருந்து வந்தாலும், க்வென் (Qwen), டீப்ஸீக் (DeepSeek), கிமி (Kimi), லாமா (Llama) மற்றும் சர்வம் (Sarvam) போன்ற மாதிரிகளை இறையாண்மைக் கொண்ட உள்கட்டமைப்பில் வெளிப்படுத்த வேண்டும். மாதிரிகள் இலவசமாக இருக்கலாம். இருப்பினும், அவற்றை பெரிய அளவில் நிறுவுவதற்குத் தேவையான நிபுணத்துவமும் உள்கட்டமைப்பும் இலவசமானவை அல்ல. விண்வெளி மற்றும் அணுசக்தித் திட்டங்களுக்கு அரசாங்கம் ஏற்கனவே செய்ததைப் போலவே, செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பையும் ஒரு உத்திசார் தேசியத் திறனாகக் கருதவேண்டும். எந்தவொரு தனிப்பட்ட சூழலமைப்பையும் சார்ந்திருப்பதைத் தவிர்க்க, இறையாண்மை மற்றும் திறந்த மூல மாதிரிகளை இணைக்கும் ஒரு கலப்பின உத்தியை இந்தியா பின்பற்ற வேண்டும். திறந்த மூல மாதிரிகள் நான்கு முக்கிய நன்மைகளை வழங்குகின்றன. ஒரே இரவில் கட்டுப்படுத்தப்படக்கூடிய வெளிநாட்டு பயன்பாட்டு நிரலாக்க இடைமுகங்களைச் (API) சார்ந்திருப்பதைக் குறைப்பதன் மூலம் அவை இறையாண்மையை மேம்படுத்துவதன் மூலம், ஒரு அணுகலுக்கான உரிமக் கட்டணங்களை நீக்குவதன் மூலம் குறைந்த செலவுகள், அதன்மூலம் இலவசக் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பயன்பாடுகளைச் சாத்தியமாக்குதல்; இந்திய மொழிகள் மற்றும் கலாச்சாரச் சூழல்களுக்கு ஏற்ப தனிப்பயனாக்குதல் மற்றும் அரசாங்கம் மற்றும் பாதுகாப்புப் பயன்பாடுகளுக்கான தணிக்கை செய்யக்கூடிய மாதிரிகளின் தன்மை மூலம் வெளிப்படைத்தன்மையை வழங்குகின்றன.


தேசிய அளவில் பெரிய மொழி மாதிரிகளை (LLMs) நிறுவுவது என்பது ஒரு மென்பொருள் கொள்கலனை நிறுவுவது போல் எளிமையானது அல்ல. இந்தியா பின்வரும் அம்சங்களில் ஆழ்ந்த நிபுணத்துவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். பல பிராந்திய மிகைத்தன்மை மூலம் அதிகளவு கிடைப்பதை அது உறுதி செய்ய வேண்டும். மேலும், முக்கிய அரசு சேவைகளுக்கு 99.99% செயல்பாட்டு நேரத்தை அது வழங்க வேண்டும். அது தாமதத்தைக் குறைக்க வேண்டும். அடுக்கு-2 மற்றும் அடுக்கு-3 நகரங்களில் கூட, அணுகல் பதிலளிப்பு நேரங்கள் 200 மில்லி விநாடிகளுக்குக் குறைவாக இருக்க வேண்டும். செயல்திறன் (தொகுப்பு அட்டவணைப்படுத்தல் போன்ற நுட்பங்களைப் பயன்படுத்தி, நுகரப்படும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கும் உருவாக்கப்படும் செயற்கை நுண்ணறிவு அணுகலின் எண்ணிக்கை); பாதுகாப்பு (தரவு இருப்பிட இணக்கத்தை உறுதிசெய்து, உடனடி ஊடுருவல் தாக்குதல்களிலிருந்து தற்காத்து, விரிவான தணிக்கைப் பதிவுகள்) பராமரிக்க வேண்டும்.


இந்தியா தனது செயற்கை நுண்ணறிவு கணினி எதிர்காலத்திற்காக ஒரே ஒரு விற்பனையாளரின் ஏகபோகத்தில் சிக்கிக்கொள்ள முடியாது. என்விடியாவின் (NVIDIA) ஆதிக்கம், நிதி மற்றும் உத்திரீதியான என அசாதாரணமான விலையில் வருகிறது. என்விடியா 80%-க்கும் மேற்பட்ட செயற்கை நுண்ணறிவு பயிற்சி வன்பொருளைக் கட்டுப்படுத்துகிறது. ஆனால் வன்பொருளைத் தாண்டியும் நீண்டு செல்லும் ஒரு ஆழமான விற்பனையாளர் பிணைப்பை உருவாக்குகிறது. 140 கோடி மக்களுக்காக இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டுமானால், என்விடியாவின் விலை நிர்ணய முறையை மட்டுமே சார்ந்திருப்பது நிதிரீதியாகச் சாத்தியமானதல்ல.


ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) உருவாக்க இந்தியா ஒப்பீட்டளவில் குறைவாகவே செலவிட்டது. என்விடியா ஜிபியூக்களுக்காக (GPU) 50 பில்லியன் டாலர் செலவிட இந்தியாவால் முடியாது. இந்த மாற்று வன்பொருள் சூழலமைப்பு குறைந்த செலவில் கிடைப்பது மட்டுமல்லாமல், உத்திரீதியாகவும் முக்கியமானது. ஒரே ஒரு விற்பனையாளரைச் சார்ந்திருப்பதற்குப் பதிலாக, இந்தியா 40:30:30 என்ற விகிதத்திலான வன்பொருள் கலவையை (hardware mix) பின்பற்ற வேண்டும். கட்டமைப்பில் சுமார் 40% பகுதி AWS Trainium மற்றும் AMD ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும். இந்தியாவில் கிடைக்கக்கூடிய, செலவு குறைந்த 'இன்ஃபெரன்ஸ்' (inference - AI மாதிரியின் செயல்பாட்டுப் பயன்பாடு) பணிகளுக்கு இவை ஏற்றவை. மேலும் 30% ஆராய்ச்சி, மாதிரிப் பயிற்சி மற்றும் கல்விசார் கூட்டாண்மைகளுக்காக கூகிள் டென்சர் ப்ராசசிங் யூனிட்-களைப் (TPU) பயன்படுத்த வேண்டும். மீதமுள்ள 30% சிறப்புப் பயிற்சி, பழைய தொழில்நுட்ப இணக்கத்தன்மை மற்றும் உள்நாட்டு சிலிக்கான் பாதுகாப்புக்காக என்விடியாவை (NVIDIA) சார்ந்திருக்க வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு (AI) அணுகல் கொள்கை, செயல்படுத்தும் காலவரிசை


இந்தியா ஒரு தேசிய செயற்கை நுண்ணறிவு (AI) அணுகல் கொள்கையை அறிவித்து, அடுத்த 24 மாதங்களில் அதைச் செயல்படுத்த வேண்டும். பல விற்பனையாளர்களைக் கொண்ட ஒரு இறையாண்மை கணினி கட்டமைப்பை நிறுவுவதற்காக, AWS, கூகிள் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகியவற்றுடன் பொது-தனியார் கூட்டமைப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதன் மூலம் இது தொடங்கப்பட வேண்டும். முதல் முன்னோட்டத் திட்டமானது, முதல் 20 ஐஐடி-க்கள் மற்றும் ஐஐஎஸ்சி-க்கு வரம்பற்ற ஆராய்ச்சி அணுகல்களை வழங்க வேண்டும். ஹைப்பர்ஸ்கேலர் (hyperscaler) அளவிலான அனுமானத் திறன் செயல்பாட்டிற்கு வரும்போது, இந்தியா 500 புத்தொழில் நிறுவனங்களுக்கு ஒரு பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (API) சாண்ட்பாக்ஸைத் திறக்க வேண்டும். 100 பல்கலைக்கழகங்களுக்கு அணுகலை விரிவுபடுத்த வேண்டும், மேலும் 10 மாநிலங்களில் உள்ள 500 உயர்நிலைப் பள்ளிகளில் AI எழுத்தறிவு முன்னோட்டத் திட்டத்தைத் தொடங்க வேண்டும். இந்தத் திட்டம் நாட்டின் முதல் இறையாண்மை கொண்ட இந்திய மொழி AI மாதிரி அளவுகோல்களை (Indic AI model benchmarks) வெளியிடுவதன் மூலம் இத்திட்டம் நிறைவடைய வேண்டும்.


இதன்பிறகு, முன்பு பரிந்துரைக்கப்பட்டபடி, குறுக்கு மானியங்கள் (cross-subsidies) மூலம் இந்தச் சூழலமைப்பை விரிவுபடுத்தி, சுகாதாரம், விவசாயம், நீதித்துறை மற்றும் கல்வி ஆகிய துறைகளில் செம்மைப்படுத்தப்பட்ட மாதிரிகளைச் செயல்படுத்த வேண்டும். இதைத் தொடர்ந்து 5,000 உயர்நிலைப் பள்ளிகளில் முழுமையாகச் செயல்படுத்துதல் மற்றும் அனைத்து 22 அதிகாரப்பூர்வ மொழிகளுக்கும் ஆதரவளித்தல் ஆகியவை மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் மூலம் இந்தியாவின் அணுகல் நுகர்வு உலக அளவில் முதல் ஐந்து இடங்களுக்குள் வரக்கூடும். இரண்டு ஆண்டுகளில், இந்தியாவில் பயிற்சி பெற்ற மாதிரிகள் சர்வதேச அளவுகோல்களில் போட்டித்தன்மை வாய்ந்தவையாக மாறும். மேலும், 10,000-க்கும் மேற்பட்ட செயற்கை நுண்ணறிவு சார்ந்த புத்தொழில் நிறுவனங்கள் உருவாகி, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை அதிக வேகத்தில் உயர்த்தும்.




முடிவாக, நாட்டின் மாற்றத்திற்கு இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு-துறை சார்ந்த முன்னேற்றம் மிக அவசியமாகும். டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பில் (DPI) இந்தியா பெற்ற வெற்றியை, செயற்கை நுண்ணறிவு காலகட்டத்தில் இந்தியா மீண்டும் நிலைநாட்ட வேண்டும். திறந்த மாதிரிகளை ஏற்றுக்கொள்வதன் மூலமும், கணினி வன்பொருட்களைப் பன்முகப்படுத்துவதன் மூலமும், அணுகல்களைத் தரவைப் போலவே இலவசமாக்குவதன் மூலமும், இந்தியா தனது டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI) தனித்துவத்தை செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மீண்டும் நிகழ்த்த வேண்டும். செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடுகளில் உலகளாவிய தலைவராக மாறுவதற்குத் தேவையான அனைத்து நிலைமைகளும், சாதகமான கொள்கைகள், நிலையான பேரியல் பொருளாதாரம், அபாரமான திறமையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவிடம் உள்ளன. இந்தியாவின் தீர்க்கமான, தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையே போதுமான நிபந்தனையாகும். இந்த மாற்றத்தை அடைவதற்கு மூன்று முக்கிய நடவடிக்கைகள், ஒரு பத்தாண்டு காலம் மற்றும் செயற்கை நுண்ணறிவால் (AI) இயங்கும் ஒரு தேசத்தை உருவாக்குதல் ஆகியவை அவசியமாகும்.


ஸ்ரீவத்ஸா கிருஷ்ணா ஒரு ஐஏஎஸ் அதிகாரி.


Original Link: Reforms 3.0 — towards the Bharat rate of growth 

Share:

இந்தியாவின் வளர்ச்சி குறித்த உரிமைகோரல்கள், தரவுகளின் உண்மை நிலைக்கு முரணாக உள்ளன. -பவன் கேரா

இந்தியாவுக்குத் இப்போது தேவையானது, புள்ளிவிவரங்களை வெளியிடும் அமைப்புகளின் சுதந்திரத்தை மீட்டெடுப்பதாகும். அந்த அமைப்புகள் நாட்டின் நிலைமையை உண்மையான தரவுகளின் மூலம் நேர்மையாக விவரிக்க வேண்டும்.


பல ஆண்டுகளாக, இந்தியர்கள் செய்திகளில் வரும் தலைப்புச் செய்திகளை மட்டுமே நம்புமாறு கூறப்பட்டு வருகின்றனர்: அதாவது இந்தியா "மிக வேகமாக வளரும் பொருளாதாரம்", "உயர்ந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி", மற்றும் "வலுவான வளர்ச்சி வேகம்" என்பதே அந்த செய்திகள் ஆகும். ஆனால் மக்கள், தலைப்புச் செய்திகளில் கூறப்படும் வளர்ச்சிக்கு இணையான நிலையில் வாழ்வதில்லை மாறாக அவர்கள் தங்களின் மாதச் சம்பளம், உயர்ந்துவரும் விலைவாசி, வேலை வாய்ப்பின்மை, பள்ளிக் கட்டணங்கள் மற்றும் உயிர் பிழைத்திருக்கப் போராடும் சிறு தொழில்களுக்கிடையில்தான் வாழ்கிறார்கள்.


எனவே, இந்தியப் பொருளாதாரம் அறிக்கைகளில் மட்டும் சிறப்பாகத் தெரிகிறதா என்பது அல்ல, மாறாக அந்தப் புள்ளிவிவரங்களை இன்னும் நம்ப முடியுமா என்பதுதான் இந்தியாவின் முன் இருக்கும் உண்மையான கேள்வி ஆகும். 


அபிஷேக் ஆனந்த், ஜோஷ் ஃபெல்மேன் மற்றும் அரவிந்த் சுப்ரமணியன் ஆகியோரின் புதிய ஆய்வு, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product (GDP)) வளர்ச்சி கடந்த 20 ஆண்டுகளாகத் தவறாகக் கணக்கிடப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறது. அவர்களின் அறிக்கை (“இந்தியாவின் 20 ஆண்டுகால மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தவறான மதிப்பீடு: புதிய சான்றுகள்”, மார்ச் 2026) (“India’s 20 years of GDP misestimation: New evidence”, March 2026), 2011-ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியாவின் வளர்ச்சி சுமார் 1.5 முதல் 2 சதவீதம் வரை அதிகமாகக் காட்டப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கிறது. இது பார்ப்பதற்கு ஏதோ தொழில்நுட்பரீதியான சிக்கலாகத் தோன்றலாம், ஆனால் உண்மையில் இது அத்தகைய கடினமான விஷயம் அல்ல என்கின்றனர். 


மிகச்சிறிய மாற்றங்கள்கூட ஏற்படுத்தக்கூடிய தாக்கம்


ஒரு பத்தாண்டுக் காலத்தில் பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் வெறும் இரண்டு சதவீத வித்தியாசம் கூட, அந்தப் பொருளாதாரம் எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பதையே பெரிய அளவில் மாற்றிவிடும். இது கொள்கை வகுப்பாளர்கள் தங்களின் வெற்றியை மதிப்பிடுவதிலும், முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதிலும் மற்றும் பொதுமக்கள் தங்கள் அரசாங்கத்தின் செயல்பாட்டைப் புரிந்துகொள்வதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதைவிட முக்கியமாக, இது ஒரு ஆழமான சிக்கலைச் சுட்டிக்காட்டுகிறது: பெரும்பாலான தொழிலாளர்கள் முறைசாரா துறையில் (Informal Sector) இருக்கும் ஒரு பொருளாதாரத்தில், வெறும் முறைசார்ந்த துறை (Formal Sector) தரவுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பீடுகள், சாதாரண இந்தியர்கள் சந்திக்கும் உண்மையான சவால்களைப் புறக்கணித்துவிடக்கூடும்  என்றும் கூறப்படுகிறது. குறிப்பாகக் கொள்கை மாற்றங்கள், சுகாதார நெருக்கடிகள் மற்றும் அன்றாடம் வருமானம் ஈட்டுவதில் உள்ள நிச்சயமற்றத் தன்மைகள் போன்றவற்றுடன் போராடும் சாமானிய மக்களின் நிலையை இந்தத் தரவுகள் சரியாகப் பிரதிபலிப்பதில்லை என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.


இந்த நடைமுறை மிகவும் எளிமையானது. இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதாரச் செயல்பாடுகளைக் கணக்கிடுவதற்கு, இந்தியா அதிகளவில் முறைசார்ந்த துறையிலிருந்து சேகரிக்கப்படும் தரவுகளையே சார்ந்து இருக்கிறது. ஆனால், முறைசாராத் துறையைவிட முறைசார்ந்த துறையை அளவிடுவது மிகவும் எளிது என்பதால், தேசிய கணக்குத் தரவுகள் (National Accounts Statistics (NAS)) நாட்டின் பொருளாதார நிலையின் உண்மையைப் பிரதிபலிப்பதைவிட, புள்ளிவிவரங்களில் எவை எளிதாகத் தெரிகிறதோ அவற்றை மட்டுமே படிப்படியாகப் பிரதிபலிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


இலட்சக்கணக்கான மக்கள் சிறு பணிமனைகள் (Workshops), தெருவோரக் கடைகள், குடும்பத் தொழில்கள் மற்றும் ரொக்கப் பணத்தை அடிப்படையாகக் கொண்ட வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ள ஒரு நாட்டில், இந்த வேறுபாடு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.


அதிகாரப்பூர்வ அறிக்கைகள் வலுவான பொருளாதார வளர்ச்சியை (முன்னிலைப்படுத்திய அதேவேளையில், தனியார் முதலீடு குறைவாகவே இருந்தது, உண்மையான ஊதிய வளர்ச்சி மந்தமாக இருந்தது மற்றும் உற்பத்தித் துறை எதிர்பார்த்த வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை. குறிப்பாக வேலைச்சந்தையில் நுழையும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது ஒரு மிகப்பெரிய கவலையாகவே நீடித்தது, இதன் மூலம் கடந்த பத்தாண்டுகள் ஏன் பல இந்தியர்களுக்குக் குழப்பமானதாகத் தோன்றியது என்பதை இந்தக் கருத்தாக்கம் விளக்குகிறது.


தொடரும் நெருக்கடிகள்


அறிக்கைகளில் கூறப்படும் பொருளாதார வளர்ச்சிக்கும், மக்களின்  உண்மையான வாழ்க்கை அனுபவத்திற்கும் இடையே உள்ள இடைவெளி பல பொருளாதார அதிர்ச்சிகளுக்குப் பிறகு மேலும் அதிகரித்துள்ளது. 2016-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு (Demonetisation) நடவடிக்கை, முறைசாரா வேலைவாய்ப்புகளை அதிகம் வழங்கும் ரொக்கப் பணத்தைச் சார்ந்திருந்த துறைகளை நிலைகுலையச் செய்ததாகவும் அதன்பின் அறிமுகப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax (GST)), சிறு தொழில்கள் சமாளிக்க முடியாத அளவிற்கு வரி இணக்கச் செலவுகளை (Compliance costs) அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து வந்த கொரோனா (COVID-19) பெருந்தொற்று, முறைசாரா பொருளாதாரத்தை (Informal economy) மிகக் கடுமையாகப் பாதித்ததாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.


பொருளாதார வளர்ச்சி மதிப்பீடுகள் பெரும்பாலும் முறைசார்ந்த துறையின் தரவுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும்போது, முறைசாராத் துறையைக் கடுமையாகப் பாதிக்கும் பொருளாதார பாதிப்புகள் புள்ளிவிவர ரீதியாகத் தெரியாமல் மறைந்துவிடக்கூடும் என்கின்றனர். அதாவது, இத்தகைய பாதிப்புகள் வேலைவாய்ப்பு மற்றும் குடும்ப வருமானத்தை முழுமையாக மாற்றியமைத்தாலும், அவை அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரங்களில் பிரதிபலிக்காமல் போய்விடும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர்.


ஆனால், உண்மையான பிரச்சினை வெறும் புள்ளிவிவரக் கணக்கீடுகளுக்கும் அப்பால் ஆழமாக உள்ளது. இந்தியாவின் தற்போதைய வளர்ச்சி மாதிரியில் உள்ள மிக முக்கியமான முரண்பாடாக பல பொருளாதார வல்லுநர்கள் அடையாளம் காட்டும் ஒரு விஷயத்தில்தான் அந்தப் பிரச்சினை அடங்கியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.


நாட்டின் செல்வங்களானது ஒரு சிறிய குழுவினரிடமும், குறிப்பாகப் பெரிய நிறுவனங்கள் மற்றும் சில மேல்தட்டு மக்களிடமும் அதிகமாகக் குவிந்து வருகிறது. அதேவேளையில், பொது நலத்திட்டங்களின் சென்றடையும் தன்மையும் செயல்திறனும் குறைந்து வருகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தி போன்ற பொருளாதார வளர்ச்சி நிகழ்ந்தாலும், அதன் நன்மைகள் சுருங்கி, ஏழைகளுக்கான பாதுகாப்பு நிலைகள் பலவீனமடைந்து வருகின்றன. இதன் விளைவாக, மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும்போதும் புள்ளிவிவரங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி போன்ற பொருளாதார வளர்ச்சி எண்கள் உயர்ந்துகொண்டே இருக்கலாம். இச்சூழலில், "முறைப்படுத்துதல்" என்ற சொல் அரசியலுக்கு மிகவும் வசதியாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உண்மையான முன்னேற்றத்தைக் காட்டுவதுபோல் தோன்றினாலும், அதன் பின்னே சிறு தொழில்கள் மறைந்து, பெரிய நிறுவனங்கள் அவற்றைக் கைப்பற்றுகின்றன எனும் ஒரு கடினமான உண்மை மறைந்திருக்கிறது. இந்த மாற்றமானது தேசிய கணக்குத் தரவுகளில் "வளர்ச்சி" எனப் பதிவு செய்யப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.


ஒரு பெருநிறுவனத்தின் உணவகத்தையோ அல்லது கடையையோ கணக்கெடுப்பது எளிது என்பதற்காகவே, ஒரு சாதாரண மளிகைக் கடை மூடப்படுவதை நாட்டின் நவீனமயமாகக் கருதிவிட முடியாது. தற்போதைய நிலையில், இந்தப் பிரச்சனை என்பது வெறும் தொழில்நுட்பம் சார்ந்ததாகவோ அல்லது பொருளாதாரக் கணக்கீடு சார்ந்ததாகவோ மட்டும் இல்லை மாறாக, இது மக்களாட்சி மற்றும் ஜனநாயக உரிமை சார்ந்த விஷயமாகவும் உருவெடுத்துள்ளது.


மோசமான தரவுகள்


ஒரு நாட்டின் மிக முக்கியமான பொருளாதாரத் தரவுகள் (Economic Data) தீவிரமான சந்தேகத்திற்கு உள்ளாக்கப்படும்போது, அதற்கு இயல்பான எதிர்வினை வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதாகத்தான் இருக்கவேண்டும், அதைக் குறைப்பதாக இருக்கக் கூடாது. இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவின் புள்ளிவிவர அமைப்பு இதற்கு நேர்மாறான நடவடிக்கைகளையே மேற்கொண்டுள்ளது.


மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தாமதமானதால், கொள்கை வகுப்பாளர்கள்  இன்னும் 2011-ஆம் ஆண்டின் தரவுகளையே நம்பியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 2017–18-ஆம் ஆண்டின் நுகர்வு ஆய்வு (Consumption Survey), குடும்பச் செலவினங்கள் குறைந்திருப்பதைக் காட்டியதால் (இது கொரோனா (COVID-19) பாதிப்பிற்கு முன்பே நடந்திருந்தாலும்), அந்த அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. மேலும், 2019-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்பு, வேலையில்லாத் திண்டாட்டம் பல ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்திருப்பதாகக் காட்டிய தொழிலாளர் வள ஆய்வு (Labour Force Survey (PLFS)), பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, தேசிய புள்ளியியல் ஆணையத்தின் (National Statistical Commission (NSC)) உறுப்பினர்கள் சிலர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.


இந்த ஒவ்வொரு நிகழ்விற்கும் தனித்தனி விளக்கங்கள் கூறப்படலாம், ஆனால், இவை அனைத்தையும் ஒன்றாகப் பார்க்கும்போது, அரசு தங்களுக்குச் சிக்கலை ஏற்படுத்தும் தரவுகளை ஏற்றுக்கொள்வதில் எந்த அளவிற்கு விருப்பத்துடன் இருக்கிறது என்பது குறித்த ஒரு கேள்வியை எழுப்புகிறது.


ஒரு ஜனநாயக நாட்டில், புள்ளிவிவரங்கள் என்பது வெறும் மேடைப் பேச்சுகளில் காட்டுவதற்காக மட்டும் அல்ல, அவை பொதுமக்களுக்கான அத்தியாவசியக் கருவிகள் ஆகும். குடிமக்கள் அரசின் செயல்பாடுகளை மதிப்பிடவும், பொருளாதார வல்லுநர்கள் கொள்கைகளை வடிவமைக்கவும், அரசாங்கங்கள் பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறியவும் இந்தத் தரவுகள் உதவுகின்றன. இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு, நம்பகமான பொருளாதாரத் தரவுகள் என்பது வெறும் விருப்பத்தேர்வு மட்டுமல்ல அது மிகவும்  முக்கியமானதாகிறது. வெறும் முழக்கங்களால் வேலையில்லாத் திண்டாட்டத்தை சரிசெய்யவோ, இணையதள ஹேஷ்டேக் (#Hashtags) மூலம் தேவையை  அதிகரிக்கவோ அல்லது போலியான தரவுகள் மூலம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வளர்க்கவோ முடியாது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் பொருளாதார வளர்ச்சி உண்மையானதாக இருந்தால், அது எந்தவொரு கடுமையான ஆய்விற்கும் உட்படும்போது உண்மையை நிரூபிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர்.


இந்தியாவுக்கு இப்போது தேவைப்படுவது சுதந்திரமான புள்ளியியல் நிறுவனங்கள், முறைசாரா தொழிலாளர்கள்  மற்றும் ஏழைகளின் (கிராமப்புற மற்றும் நகர்ப்புறம் ஆகிய இரு தரப்பினரின்) உண்மையான நிலையை வெளிப்படுத்தும் தரவுகள் ஆகும். மேலும், பொருளாதாரத்தின் உண்மையான நிலையை மறைக்கும் குறுக்குவழிகளுக்கு  முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர். 


நாட்டின் உண்மையான நிலவரத்தை தரவுகள் நேர்மையாகப் பிரதிபலிக்க வேண்டும். அவை வெறும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஆதரவாக மட்டும் அமைந்துவிடக் கூடாது என்பதையும் தெளிவுபடுத்துகின்றனர். 


பவன் கேரா, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்புத் துறையின், ஊடக மற்றும் விளம்பரப் பிரிவின் தலைவராக உள்ளார்.


Original Link: India’s growth claims, a clash with data reality 


Share:

குழந்தை பராமரிப்பு என்பது வெறும் சமூகப் பாதுகாப்பு வலை மட்டுமல்ல. அது வளர்ச்சிக்கு ஒரு உந்துசக்தி. -ஆர்த்தி அஹுஜா, உத்சவ் கெரியா

குழந்தை பராமரிப்பு செலவு மிக்கதாகவோ அல்லது கிடைக்காத நிலையிலோ இருக்கும்போது, பல தாய்மார்கள் வேலை நேரத்தைக் குறைத்துக்கொள்வது அல்லது வேலையைவிட்டு வெளியேறுவதால் உற்பத்தித்திறன் குறைகிறது.


இந்தியாவின் வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு நீண்டகாலமாகவே முதுகெலும்பாக இருந்து வருகிறது. இருப்பினும், பணியாளர்களின் எண்ணிக்கையில் பாதியளவு இருப்போரின் நேரத்தையும் திறமையையும் விடுவிக்கும் "மென்மையான" உள்கட்டமைப்பை நாம் புறக்கணித்தால், 8-10 சதவிகித வளர்ச்சி இலக்கு தடைபடும் வாய்ப்புள்ளது. குழந்தைப் பராமரிப்பு என்பது வெறும் "பாதுகாப்பு வலை" என்று பார்க்கப்படாமல், வளர்ச்சி, உற்பத்தித்திறன் மற்றும் மனித மூலதனத்திற்கான ஒரு "ஊன்றுகோலாக” மாற வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.


உற்பத்தித்திறனில் ஏற்படும் சுமையானது வெளிப்படையாகத் தெரிகிறது. ஏனெனில், பல இலட்சக்கணக்கான தாய்மார்கள் குழந்தைப் பராமரிப்புக்கான வசதிகள் செலவு மிகுந்ததாகவோ அல்லது அணுக முடியாததாகவோ இருப்பதால், வேலையைவிட்டு வெளியேறுகின்றனர் அல்லது தங்களது வேலை நேரத்தைக் குறைத்துக்கொள்கின்றனர். நம்பகமான குழந்தைப் பராமரிப்பு வசதிகள், பெண்கள் தங்கள் திறமைகள் மற்றும் லட்சியங்களுக்கு ஏற்ற வேலைகளில் தொடர்ந்து பணியாற்ற வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது. 


சில மாநிலங்கள் சாத்தியக் கூறுகளைத் தெளிவாகக் காட்டுகின்றன. உற்பத்தித் துறையில் உள்ள பெண்களில் ஏறக்குறைய நான்கில் மூன்று பங்கு பேர் ஐந்து தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் குழந்தை பராமரிப்பு, விடுதிகள் மற்றும் இலவச பொதுப் போக்குவரத்து உட்பட, பெண்கள் வேலை செய்ய உதவும் சமூக ஆதரவில் முதலீடு செய்துள்ளனர்.


உலகளாவிய எடுத்துக்காட்டுகள் குழந்தை பராமரிப்பு வசதி எவ்வாறு பெண்களின் வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்கிறது என்பதைக் காட்டுகின்றன. வியட்நாமில் ஏற்கெனவே பாலின சமத்துவம் இருந்தாலும், நல்ல குழந்தை பராமரிப்பு வசதி இருப்பதால் பெண்கள் சிறந்த, முறையான வேலைகளில் சேர்ந்து நீண்டகாலம் பணியாற்ற முடிகிறது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவின் குடிசைப் பகுதிகளில் இலவச குழந்தை பராமரிப்பு அளிக்கப்பட்டபோது, தாய்மார்கள் தங்கள் வேலை நேரத்தை அதிகரித்து, பகல்நேர பராமரிப்பு நேரத்துக்கு ஏற்ப வேலை செய்ய முடிந்தது என்கின்றனர்.


எதிர்காலத் திட்டமானது ஒரு கலப்பின (hybrid) மாதிரியாக இருக்க வேண்டும் : ஆரம்பகால தூண்டுதலை வீடுகளுக்குள் நீட்டிக்க, மின்னணு தொழில்நுட்பத்தால் ஆதரிக்கப்படும் நேரடி மையங்கள். குறிப்பாகத் தொழில்துறைப் பகுதிகள், சேவை மையங்கள் மற்றும் உழைக்கும் பெண்கள் நிறைந்த நகர்ப்புற வார்டுகளில், அங்கன்வாடி மையங்கள் மற்றும் குழந்தைக் காப்பகங்கள் மூலம் முழுநாள் குழந்தை பராமரிப்பு மையங்கள் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகிறது. தமிழ்நாட்டில், பகுதிநேர பள்ளிப் பணியாளரைச் சேர்த்தது ஊட்டச்சத்து விளைவுகளைப் பராமரிக்கும் அதே வேளையில் கற்பித்தல் நேரத்தை இருமடங்காக அதிகரித்தது. சுய உதவிக் குழுக்கள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அல்லது உள்ளூர் இளைஞர்களைக் கொண்டு துணைப் பணியாளர்களை (para-professionals) நியமித்தால் அங்கன்வாடி ஊழியர்களுக்கு உதவ முடியும் — இது மேகாலயாவிலும் சண்டிகரிலும் வெற்றிகரமாக நடந்திருக்கிறது. தெலுங்கானா மாநிலத்தைப் போல ஊழியர்களின் உதவித்தொகையைச் சற்று அதிகரித்தாலே குறைந்த செலவில் அங்கன்வாடி மையங்களை முழுநாள் சேவையாக மாற்ற முடியும் என்று கூறப்படுகிறது. 


குழந்தையின் முதல் 1,000 நாட்கள் மிகவும் முக்கியமானவை. இந்தக் காலத்தில் மூளை வளர்ச்சியில் 80% நிகழ்கிறது. பெரும்பாலான நேரத்தை குழந்தைகள் வீட்டிலேயே பெற்றோருடன் செலவிடுவதால், அன்றாட எளிய தொடர்புகளே வாழ்நாள் முழுவதுக்குமான கற்றலின் அடித்தளமாக அமைகின்றன. திரையில் செலவிடும் நேரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றாலும், டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்தி சமையல் செய்முறை சொல்வது, நடக்கும்போது வண்ணங்களைக் காட்டுவது போன்ற தினசரி விஷயங்களைக் கற்றல் வாய்ப்புகளாக மாற்றலாம். வாட்ஸ்அப் குழுக்கள் போன்ற டிஜிட்டல் சமூக குழுக்களில் பெற்றோர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். ஒடிசாவில் நடத்திய ஆய்வில், வாரந்தோறும் நடக்கும் தாய்மார்கள் குழு அமர்வுகள் (வாட்ஸ்அப் வழியாகவும்) குழந்தைகளின் அறிவாற்றல் மற்றும் மொழித் திறனை வீட்டுக்கு வந்து கற்பிப்பது போலவே மேம்படுத்துவதாகக் கண்டறிந்தனர். அதாவது, டிஜிட்டல் மூலமான சக பெற்றோர்களின் கற்றல் (peer learning) மிகவும் பயனுள்ளதாகவும், செலவு குறைவாகவும் உள்ளது. ஊட்டச்சத்து கண்காணிப்புக் கருவி (Poshan Tracker) மூலம் அரசாங்கம் ஆரம்பகால கற்றல் வழிகாட்டுதலை வழங்குகிறது.


குழந்தைப் பராமரிப்பை முக்கியமான, சந்தையை வடிவமைக்கும் முன்னுரிமையாக மாற்ற, இந்தியாவிற்கு ஒரு வலுவான நிறுவனத் தலைமை (institutional anchor) தேவைப்படுகிறது. ஆரம்பகால குழந்தைப் பராமரிப்புக்கான ஒரு தேசிய பணி மூலம் (National Mission on Early Childhood Care), மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, தொழிலாளர், கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில் அமைச்சகங்களை ஒன்றிணைத்து, குழந்தை நலனை குழந்தை பராமரிப்புத் திட்டங்களுடன் இணைக்க முடியும், இது பணியிடத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் என்கின்றனர்.


மக்கள்தொகை அம்சத்தில், இப்போதுதான் சரியான நேரம். பல மாநிலங்களில் கருத்தரிப்பு விகிதம் இடமாற்று நிலைக்குக் கீழே உள்ளது. 2050-ஆம் ஆண்டுக்குள் ஐந்தில் ஒரு இந்தியர் 60 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பார். பெண்களின் தொழிலாளர் பங்களிப்புக்கும் குழந்தைகளின் கற்றலுக்கும் வலுவான ஆதரவு இல்லாவிட்டால், மக்கள்தொகை நன்மை (demographic dividend) பற்றாக்குறையாக (deficit) மாறிவிடும்: குறைவான குழந்தைகள், மோசமான திறன்களுடன், மற்றும் உற்பத்தித் திறனுள்ள தொழிலாளர்கள் மிகக் குறைவாக இருப்பர்.


அரசாங்கம் வழிகாட்டுதலையும், வணிகம் புதுமைகளையும், குடிமைச் சமூகம் கடைக்கோடி மக்களைச் சென்றடைவதையும் உறுதி செய்வதன் மூலம், இந்தியா பெண்களின் முழுத் திறனையும் வெளிக்கொணர்ந்து, ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தை பாதுகாப்பாக, பராமரிக்கப்பட்டு, கற்றுக் கொள்கிறது என்பதை உறுதிப்படுத்த முடியும் என்கின்றனர்.


அஹுஜா, முன்னாள் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலாளர் ஆவார். கேரியா, ராக்கெட் லேர்னிங்கின் (Rocket Learning) இணை நிறுவனர் ஆவார்.

Original link:

Childcare isn’t just a social safety net. It’s a lever for growth.


Share: