தொகுதி மறுவரையறை தொடர்பாக அரசியலமைப்புத் திருத்தம் எதுவும் இல்லையென்றால் என்ன நடக்கும்? -வர்கீஸ் கே ஜார்ஜ்

 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புத்தரவுகள் வெளியிடப்பட்ட பிறகு, அரசியலமைப்பின் 81 மற்றும் 82-வது பிரிவுகளில் திருத்தம் செய்யப்படாவிட்டால், அந்தப்பிரிவுகளில் உள்ள தற்போதைய விதிகளின் அடிப்படையில் புதிய தொகுதி மறுவரையறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகைக்கணக்கெடுப்பின் அடிப்படையில், மக்களவைத்தொகுதிகள் மாநிலங்களுக்கு மறு அளவீடு  செய்யப்படும்.


தற்போதைய செய்தி: மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்யும் நடவடிக்கையைத் புதிதாகத் தொடங்க பாரதிய ஜனதா கட்சி ஆர்வமாக உள்ளது. இதற்கான அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற அந்த  கட்சி முயற்சித்து வருகிறது. 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தத்திருத்த மசோதாவைக்கொண்டுவந்தபோதிலும், அதை நிறைவேற்ற முடியவில்லை. மத்திய அரசு தனது துல்லியமான முன்மொழிவுகளை இதுவரை வெளியிடவில்லை. முந்தைய கூட்டத்தொடரில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் முன்வைத்த முன்மொழிவுகள் பின்வருமாறு:


1) மக்களவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையை அதிகபட்சமாக 850 ஆக அதிகரித்தல்; 2) 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், நாடு முழுவதும் தொகுதிகளைப் புதிதாக மறுவரையறை செய்து, இந்த இடங்களை மாநிலங்களுக்கு இடையே பகிர்ந்தளித்தல் மற்றும் 3) மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கை பெண்களுக்கு ஒதுக்குதல்


தற்போதைய அரசியலமைப்பு விதிகளின்படி, 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகள் வெளியிடப்பட்ட பின்னரே புதிய தொகுதி மறுவரையறைக்கான பணிகளை மேற்கொள்ள முடியும். அதனுடன் சேர்த்து பெண்களுக்கான இடஒதுக்கீட்டையும் நடைமுறைப்படுத்த முடியும்.


தொகுதி வரையறை தொடர்பான அரசியலமைப்புத் திருத்தம் எதுவும் செய்யப்படாவிட்டால் என்ன நடக்கும்?


புதிய தொகுதி வரையறை நடைபெறுவதற்கு அரசியலமைப்புத் திருத்தம் தேவையில்லை. 2027-ஆம் ஆண்டு  மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் தரவுகள் வெளியிடப்பட்ட உடனேயே புதிய தொகுதி வரையறை தொடங்கும். அடுத்த தொகுதி மறுவரையறைக்கான விதிமுறைகள் ஏற்கனவே அரசியலமைப்பில் உள்ள  81 மற்றும் 82-வது பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன. தொகுதி மறுவரையறை தொடர்பான தற்போதைய அரசியலமைப்பு விதிகளில் மாற்றம் செய்யப்பட வேண்டிய சூழலில் மட்டுமே, அரசியலமைப்புத் திருத்தம் தேவைப்படும்.


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 81 மற்றும் 82-வது பிரிவுகளின்படி, 2026-ஆம் ஆண்டிற்குப்பிறகு நடக்கும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் தரவுகள் வெளியிடப்பட்டதும் இரண்டு நிகழ்வுகள் கட்டாயமாக நடைபெறும்.


முதலாவது, நடத்தப்பட்ட மக்கள் தொகைக்கணக்கெடுப்பில் பதிவாகும் மக்கள் தொகையின் அடிப்படையில், தற்போதைய மக்களவை உறுப்பினர் இடங்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையே மறுபங்கீடு செய்வதாகும்.   அது 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பாக இருக்கும். இரண்டாவது, ஒவ்வொரு மாநிலத்திற்குள்ளும் தனித்தனி மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்வதாகும்.


அரசியலமைப்புச் சட்டத்தில் எந்தத் திருத்தமும் செய்யப்படாவிட்டால், 2027-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் தரவுகள் வெளியிடப்பட்ட பின்னரே தொகுதி மறுவரையறைப் பணி தொடங்கப்பட வேண்டும்.


2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் புதிய தொகுதி மறுவரையறைப் பணிகளை, 2029-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே நிறைவு செய்ய முடியுமா?


நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம். கடந்த காலங்களில், தொகுதி மறுவரையறை பணிகள் பல ஆண்டுகள் நீடித்தன. 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப்பிறகு, உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி குல்தீப் சிங் தலைமையில், 2002-ஆம் ஆண்டு ஜூலை 12-அன்று கடைசியாக தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆணையத்தின் பரிந்துரைகள் 2008-ஆம் ஆண்டில்  நடைமுறைக்கு வந்தன. அதனைத் தொடர்ந்து, புதிதாக வரையறுக்கப்பட்ட தொகுதிகளின் அடிப்படையில் 2009-ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தல்கள் நடத்தப்பட்டன.


கடைசியாக மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையறையின்போது, ​​ மாநிலங்களுக்கான தனி இடங்கள் மறுபகிர்வு செய்யப்படவில்லை. மாறாக, ஒவ்வொரு மாநிலத்திற்குள்ளும் இருந்த தொகுதிகளின் எல்லைகள் மட்டுமே மாற்றியமைக்கப்பட்டன. மாநிலங்களுக்கிடையிலான மக்களவை இடங்கள் கடைசியாக 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் 1973-ல் மறுபகிர்வு (reallocated) செய்யப்பட்டன. அந்த விகிதாச்சாரம் இன்றும் தொடர்கிறது.


2027-ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், தரவு சேகரிப்புப் பணிகள் முழுமையாக மின்னணுமயமாக்கப்பட்டுள்ளன. கோட்பாட்டளவில், மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவுப் பகுப்பாய்வு மற்றும் தொகுதி மறுவரையறை செயல்முறை போன்றவை முன்பைவிட விரைவாக நடைபெற வாய்ப்புள்ளது. 2029-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக இந்தப் பணிகள் நிறைவடையாவிட்டால், பணிகள் அடுத்த மக்களவை மற்றும் அடுத்த அரசாங்கத்தின் பதவிக்காலத்திலும் தொடரக்கூடும்.


கடைசி தொகுதி மறுவரையறை ஆணையம் ஏ. பி. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அமைக்கப்பட்டது. பணிகள், 2004-ஆம் ஆண்டு மக்களவைத்தேர்தல் இடையில் நடைபெற்ற நிலையில், மன்மோகன் சிங் தலைமையிலான அரசின் முதல் பதவிக்காலத்தில் நிறைவடைந்தன. அடுத்த தொகுதி மறுவரையறை ஆணையத்தின் விவகாரத்திலும் இதே நிலை ஏற்படலாம்.


அரசியலமைப்புத் திருத்தம் இல்லாத பட்சத்தில், அடுத்த தொகுதி மறுவரையறை ஆணையத்தின் அதிகாரம் என்னவாக இருக்கும்?




பிரிவுகள் 81 மற்றும் 82-ன் தற்போதுள்ள விதிகளின்கீழ் ஒரு புதிய தொகுதி மறுவரையறை தொடங்கப்பட்டால், பின்வரும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது.


தற்போது, ​​மாநிலங்களுக்கிடையேயான 543 மக்களவைத் தொகுதிகளின் பங்கீடு, 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்த அடிப்படை அளவுகோல் 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகையிலிருந்து, 2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறும் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பதிவாகும் மக்கள்தொகைக்கு மாற்றப்படும்போது, தொகுதிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.


பொதுவாகப் பார்த்தால், தென் மாநிலங்கள்  தங்களிடம் உள்ள தொகுதிகளை இழக்கக்கூடும். அதேவேளையில், இந்தி பேசும் மாநிலங்களான உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் கூடுதல் தொகுதிகளைப் பெறக்கூடும். மக்களவையின் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 550 வரை அதிகரிக்கக்கூடும். நாடு முழுவதும் உள்ள மக்களவைத் தொகுதிகளில் மூன்றில் ஒரு பங்கும், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தொகுதிகளில் மூன்றில் ஒரு பங்கும் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.


எனவே, எந்தவொரு அரசியலமைப்பு திருத்தமும் இல்லாத பட்சத்தில், பின்வரும் படிநிலைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது: முதலாவதாக, மாநிலங்களுக்கு இடையே மக்களவை இடங்களை மறுஒதுக்கீடு செய்தல்; இரண்டாவதாக, மாநிலங்களுக்குள் தொகுதிகளை மறுவரையறை (delimitation) செய்தல் மற்றும் மூன்றாவதாக, பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்துதல், இவை அனைத்தும் 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்போடு இணைக்கப்பட்டுள்ளன.


ஒவ்வொரு மாநிலத்திற்குமான இட ஒதுக்கீடு எவ்வாறு நிர்ணயம் செய்யப்படுகிறது?


இந்தியாவை ஒரு பெரிய கூட்டுக் குடும்பமாகவும், மாநிலங்களை அந்தக் கூட்டுக் குடும்பத்தின் அங்கங்களாக உள்ள தனித்தனி குடும்ப அலகுகளாகவும் கற்பனை செய்து பாருங்கள். அந்தக் கூட்டுக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு தனிநபருக்கும் ஒரு ஏக்கர் நிலம் சொந்தம் என்று வைத்துக்கொள்வோம். ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஐந்து ஏக்கர், ஏழு உறுப்பினர்களைக்கொண்ட மற்றொரு குடும்பத்திற்கு ஏழு ஏக்கர்களையும் என அந்தந்தக் குடும்பங்கள் நிலத்தைப் பெற்றன. ஒவ்வொரு குடும்பமும் தனது பங்கை அதன் உறுப்பினர்களிடையே பிரித்துக் கொண்டது. அந்த நிலையில், அனைவருக்கும் ஏறக்குறைய சமமான பங்கு கிடைத்தது. அரசியல்ரீதியாக, ஒவ்வொரு வாக்கும் ஏறக்குறைய சமமான மதிப்பைக் கொண்டிருந்தது. ஆனால், காலம் கடந்தது. சில குடும்பங்கள் மற்ற குடும்பங்களைவிட மிக வேகமாக வளர்ந்தன. பெரிய குடும்பங்களில், அதே நிலத்தை அதிக எண்ணிக்கையிலான நபர்கள் பகிர்ந்துகொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதே சமயம், சிறிய குடும்பங்களில் குறைவான நபர்களே அந்த நிலத்தைப் பகிர்ந்துகொண்டனர். இதன் விளைவாக, ஒவ்வொரு நபருக்கும் கிடைத்த நிலப் பங்கீட்டின் அளவில் வேறுபாடுகள் ஏற்படத் தொடங்கின.


இந்தியாவில் வாக்குகள் மற்றும் பிரதிநிதித்துவம் தொடர்பான விவகாரத்தில் ஒரு வகையில் இதுதான் நிகழ்ந்துள்ளது. 1967-ஆம் ஆண்டில், பெரும்பாலான முக்கிய மாநிலங்களில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் 4 முதல் 5 லட்சம் வாக்காளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். ஆனால் இன்று, கேரளாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் 14 லட்சம் வாக்காளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அதேவேளையில் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் இந்த எண்ணிக்கை 19 லட்சமாக உள்ளது.


மக்கள்தொகையைக் கட்டுக்குள் கொண்டுவந்து நிலைப்படுத்திய மாநிலங்களைத் தண்டித்துவிடக் கூடாது என்ற நோக்கத்துடன், 1976 மற்றும் 2001 ஆகிய ஆண்டுகளில் அனைத்துக்கட்சிகளும் எடுத்த திட்டமிட்ட முடிவின் விளைவே இந்த வேறுபாடாகும். அரசியலமைப்புச் சட்டம் இது போன்ற நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கிறது. மக்களவைத் தொகுதிகளின் அளவு, ஒரு தொகுதிக்கு 18 லட்சம் வாக்காளர்கள் என்ற தேசிய சராசரியை அடிப்படையாகக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. 81-வது பிரிவு, மாநிலங்களுக்கு இடையே "முடிந்தவரை" (so far as practicable), ஒரு தேசிய சராசரியின் அடிப்படையில் (national average) இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறது.


இத்தகைய நெகிழ்வுத்தன்மை, ஒன்றுக்கொன்று முரண்படக்கூடிய இரண்டு கோட்பாடுகளுக்கு இடையே சமநிலையைப் பாதுகாக்க உதவுகிறது: அவை கூட்டாட்சி அல்லது மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மற்றும் மக்களாட்சி அல்லது 'ஒரு வாக்கு, ஒரு மதிப்பு' என்ற கொள்கையாகும்.


மேலும் அதுதான், தொகுதி மறுவரையறை குறித்த தற்போதைய விவாதம் தீர்க்க வேண்டிய முக்கிய முரண்பாடாகும்.


'அரசியல் ஆதாயத்திற்கான தொகுதி எல்லை மறுவரையறை' (Gerrymandering) என்றால் என்ன, அது தேர்தல் முடிவுகளை எவ்வாறு பாதிக்கக்கூடும்?


'ஒரு நபர், ஒரு வாக்கு, ஒரு மதிப்பு' என்ற ஜனநாயகக் கொள்கையைப் பற்றிப் பேசும்போது, ​​ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் ஏறக்குறைய சமமான எண்ணிக்கையிலான வாக்காளர்கள் இருக்க வேண்டும் என்பது முதல் தேவையாகும். ஆனால், வாக்காளர்களின் எண்ணிக்கை சமமாக இருப்பது மட்டுமே ஒவ்வொரு வாக்கிற்கும் சமமான மதிப்பை உறுதி செய்துவிடாது. ஏன்? ஏனெனில், தொகுதிகளில் சமமான எண்ணிக்கையிலான வாக்காளர்கள் இருந்தாலும், அந்த வாக்காளர்கள் தொகுக்கப்படும் விதம் தேர்தல் முடிவுகளைப் அதிக அளவில் பாதிக்கக்கூடும்.


ஒரு எளிய உதாரணத்தைக் கருத்தில் கொள்வோம் படம் 2-ன் மூலம் தெரிந்து கொள்வோம். மொத்தம் 50 வாக்காளர்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இதில் 'கட்சி A'-க்கு 20 ஆதரவாளர்களும், 'கட்சி B'-க்கு 30 ஆதரவாளர்களும் உள்ளனர். தலா 10 வாக்காளர்களைக் கொண்ட ஐந்து தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் ஒரு பிரதிநிதி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.


முதல் நிலையில், ஐந்து தொகுதிகளிலும் வாக்காளர்கள் நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படுகிறார்கள். இதன் முடிவு, ஒட்டுமொத்த வாக்குப் பங்கைப் பொதுவானதாகக் காட்டுகிறது. கட்சி A மற்றும் கட்சி B ஆகியவை தங்களுக்கு உள்ள ஆதரவின் விகிதத்திற்கு ஏற்றவாறு தொகுதிகளில் வெற்றி பெறுகின்றன.


இரண்டாவது சூழ்நிலையில், கட்சி A-வின் வாக்காளர்கள் பல்வேறு தொகுதிகளில் பரவலாகவும், குறைந்த எண்ணிக்கையிலும் பிரிக்கப்படுகிறார்கள். இது சிதறடித்தல் (Cracking) எனப்படுகிறது. கட்சி A-க்கு மொத்த வாக்காளர்களில் 40% ஆதரவு இருந்தாலும், ஒரு தொகுதியைக்கூட வெல்லத் தேவையான அளவுக்கு ஆதரவு கிடைக்காமல் போகலாம். இதனால், 40% வாக்காளர்களுக்கு எந்தவிதப் பிரதிநிதித்துவமும் கிடைக்காமல் போகும் நிலை ஏற்படலாம்.


மூன்றாவது சூழ்நிலையில், 'கட்சி B'-யின் வாக்காளர்கள் ஒரு சில தொகுதிகளில்  அதிக அளவில் குவிந்துள்ளனர். இது 'குவித்தல் (packing) என்று அழைக்கப்படுகிறது. 'கட்சி B' அத்தொகுதிகளில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், அதன் வாக்குகள் வீணடிக்கப்படுகின்றன. இதனால், ஒட்டுமொத்த ஆதரவாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தபோதிலும் 'கட்சி A'-யால் அதிக இடங்களைக் கைப்பற்ற முடிகிறது.


தொகுதி எல்லைகள் வரையறுக்கப்படும் விதம், ஜனநாயகப்பிரதிநிதித்துவத்தையும் (democratic representation) தேர்தல் முடிவுகளையும் ஆழமாகத் தீர்மானிக்கக்கூடியாதகும்.


Original articles: What happens if there is no Constitutional Amendment on Delimitation? -Varghese K  George

Share: