மும்பையின் நெரிசலைக் குறைக்க நவி மும்பை தவறிவிட்டது : 'மூன்றாவது மும்பை' (Third Mumbai) அதைச் செய்ய முடியுமா? - சபா விரானி

 'மூன்றாவது மும்பை' (Third Mumbai) அல்லது கர்னாலா-சாய் சிர்னர் புதிய நகரம் (Karnala-Sai Chirner (KSC) New Town) என்பது ராய்காட் மாவட்டத்தில் உள்ள 124 கிராமங்களை உள்ளடக்கிய 323.44 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமையவுள்ளது. இப்பகுதி அடல் சேது (Atal Setu) மற்றும் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் (Navi Mumbai International Airport (NMIA)) முக்கிய மண்டலத்திற்குள் (influence zone) அமைந்துள்ளது.


1975-ல் மும்பை பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையம் (Mumbai Metropolitan Region Development Authority (MMRDA)) உருவாக்கப்பட்டபோது, ​​பரந்த மும்பை பெருநகரப் பகுதிக்கான (Mumbai Metropolitan Region (MMR)) திட்டமிடலை வழிநடத்தும் பொறுப்பு இந்த ஆணையத்திற்கு வழங்கப்பட்டது. இன்று இப்பகுதி 9 மாநகராட்சிகள், 9 நகராட்சிகள் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கியதாக விரிவடைந்துள்ளது. ஆனால், பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் (MMRDA) தற்போதைய நிலையை அடைய பல ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. பல ஆண்டுகளாகச் சிறிய அளவிலான திட்டங்களைச் செயல்படுத்தி வந்த நிலையில், இப்போது ஒரு முழு நகரத்தையே திட்டமிடும் மிகப்பெரிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது. ராய்காட் மாவட்டத்தின் உரன், பென் மற்றும் பன்வெல் தாலுகாக்களில் உள்ள 124 கிராமங்களை உள்ளடக்கிய 323.44 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான 'மூன்றாவது மும்பை' (Third Mumbai) அல்லது கர்னாலா-சாய் சிர்னர் புதிய நகரத்திற்கான (Karnala-Sai Chirner (KSC) New Town) பணிகளை சூழலை ஏற்படுத்தியுள்ளது.


அடல் சேது மற்றும் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் (NMIA) பிரபல முக்கிய மண்டலத்தில் அமைந்திருப்பதால், இப்பகுதிக்காகப் பல லட்சியத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றின் மூலம் தயாரிக்கப்படும் முதன்மைத் திட்டம் (masterplan) முதல் டாவோஸ் (Davos) மாநாட்டில் அறிவிக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான முதலீடுகளும் இதில் அடங்கும்.

இந்த யோசனை எப்படி உருவானது?, தற்போதைய மேம்பாட்டுப் பணிகள் எந்த நிலையில் உள்ளன? மற்றும் இதன் சாத்தியக்கூறுகள் குறித்து நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள்? என்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.


'மூன்றாவது மும்பை' (Third Mumbai) குறித்த யோசனை


தெற்கு மும்பையையும், நவி மும்பையையும் இணைக்கும் 21.8 கி.மீ நீளமுள்ள கடல் பாலமான 'அடல் சேது' (Atal Setu), 2024-ன் தொடக்கத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படவிருந்த சமயத்தில், 'மூன்றாவது மும்பை' (Third Mumbai) குறித்த யோசனையின் வடிவம் பெறத் தொடங்கியது. இந்தப் பாலமும் (அடல் சேது), நவி மும்பை சர்வதேச விமான நிலையமும் (Navi Mumbai International Airport (NMIA)) ராய்காட் பகுதியின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று கருதப்பட்டது. பொது உள்கட்டமைப்பு வசதிகளால் உருவாகும் நிலத்தின் மதிப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கும், ரூ. 17,000 கோடி மதிப்பிலான இத்திட்டத்தை பொருளாதாரரீதியாகச் சாத்தியமாக்குவதற்கும், இத்தகைய உள்கட்டமைப்பால் ஈர்க்கப்படவுள்ள வளர்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் திட்டமிடுவதற்கும் 'மூன்றாவது மும்பை' (Third Mumbai) ஒரு கருவியாக அமையும் என்று கருதப்பட்டது.


மார்ச் 2024-ல், மகாராஷ்டிராவின் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை, கர்னாலா-சாய் சிர்னர் புதிய நகரத்தின் (Karnala-Sai Chirner (KSC) New Town) வரைவுத் திட்டங்கள் குறித்த ஆலோசனைகளையும் கருத்துக் கணிப்புகளையும் பொதுமக்களிடமிருந்து கோரியது. இதனைத் தொடர்ந்து, இப்பகுதியை முழுமையாகப் புதிதாக உருவாக்கும் பொறுப்புடன், பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் (MMRDA) அமைப்பை 'புதிய நகர மேம்பாட்டு ஆணையம்' (New Town Development Authority (NTDA)) என நியமித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. 2013-ல் அறிவிக்கப்பட்ட 'நவி மும்பை விமான நிலையத் தாக்கம் கொண்ட அறிவிக்கப்பட்ட பகுதி' (Navi Mumbai Airport Influence Notified Area(NAINA)) மற்றும் 'கோப்டா புதிய நகர அறிவிக்கப்பட்ட பகுதி' (Khopta New Town Notified Area) ஆகியவற்றின் சில பகுதிகள் இந்த புதிய நகரத் திட்டத்தில் இணைக்கப்பட்டன.




தற்போதைய நிலை


இக்கருத்தாக்கத்தை ஒரு திட்டமாகவும், பின்னர் அத்திட்டத்தை நிஜமாகவும் மாற்றுவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


முதலாவதாக, நிலப் பயன்பாட்டுத் திட்டம் (land use plan) உருவாக்கப்படுகிறது. இது அப்பகுதியில் தற்போது என்னென்ன உள்ளன என்பதை விவரிக்கும் ஒரு விரிவான வரைபடமாகும். இப்பகுதியின் பெரும்பகுதி கிராமங்கள், காடுகள் மற்றும் பசுமைப் பகுதிகளாக இருப்பதால், அவை அப்படியே தக்கவைக்கப்படும். இதனால், மேம்பாட்டிற்கு உகந்த நிலப்பரப்பு சுமார் 104 சதுர கிலோமீட்டராகக் குறைகிறது. அடுத்ததாக, விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான திட்டங்களும் பரிசீலனையில் உள்ளன. மேலும், ஜவஹர்லால் நேரு துறைமுக அறக்கட்டளைக்கு (உரான் அருகே உள்ள நவா ஷேவாவில் அமைந்துள்ளது) அருகாமையில் இருப்பதால் அங்கு பல கிடங்குகள் (warehouses) உள்ளன. கொள்கைரீதியான முடிவு எடுக்கப்படும் வரை இவை இப்போதைக்கு மாற்றப்படமாட்டாது.


நிலம் கையகப்படுத்தும் செயல்முறை (land acquisition process) மார்ச் 2026-ல் தொடங்கப்பட்டு, அதற்கான இழப்பீட்டு வழிமுறைகள் வகுக்கப்பட்டன. கிராம மக்கள் இழப்பீடு பெறுவதற்குப் பல விருப்பத் தேர்வுகள் உள்ளன. மேம்படுத்தப்பட்ட நிலத்தில் 22.5% பங்கு, பணமாக இழப்பீடு பெறலாம் அல்லது 'மாற்றத்தக்க மேம்பாட்டு உரிமைகள்' (Transferable Development Rights (TDR)) அல்லது 'தளப் பரப்பு குறியீடு' (Floor Space Index (FSI)) வடிவில் இழப்பீடு பெறுதல் ஆகியவை இதில் அடங்கும். தளப் பரப்பு குறியீடு (FSI) வடிவிலான இழப்பீடு அதே நிலத்தில் கூடுதல் கட்டிட உரிமைகளை நேரடியாக வழங்குகிறது. அதே சமயம், மாற்றத்தக்க மேம்பாட்டு உரிமைகள் (TDR) என்பது சான்றிதழ் மூலம் FSI உரிமைகளை (credits) வழங்குகிறது. இதனை வேறொரு நிலத்தில் பயன்படுத்தலாம் அல்லது திறந்த சந்தையில் விற்கலாம்.


ஏப்ரல் மாதத்தில், நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிரான தங்கள் கருத்துக்களை அல்லது கருத்துகணிப்புகளைச் சமர்ப்பிக்குமாறு விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களை அழைப்பதன் மூலம் பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையம் (MMRDA) முதற்கட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியது. இத்திட்டத்தை "நில அபகரிப்பு" (land grab) என்று கூறி பல கிராமங்கள் எதிர்ப்பதால், இந்தச் செயல்முறை மந்தமாகவே உள்ளது.


நிலப் பயன்பாட்டுத் திட்டத்தின் (land use plan) இறுதிப் பணிகளில் கள ஆய்வு (அதாவது "ground truthing" எனப்படும் நிலத்தின் தற்போதைய நிலையை நேரில் சரிபார்த்தல்) அடங்கியுள்ளதால், எதிர்ப்பு தெரிவிக்கும் கிராம மக்களால் இத்திட்டம் தாமதமடைந்துள்ளது. இருப்பினும், ஆகஸ்ட் மாத இறுதிக்குள் நிலப் பயன்பாட்டுத் திட்டம் (land use plan) தயாராகிவிடும் என்றும், அதைத் தொடர்ந்து திட்டமிடல் பணிகள் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


மேம்படுத்தப்படக்கூடிய பகுதிகளுக்கான பிரம்மாண்டமான திட்டத்தை உருவாக்க, பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையம் (MMRDA) சிங்கப்பூரைச் சேர்ந்த நகர்ப்புற மேம்பாட்டு ஆலோசனை நிறுவனமான 'சுர்பானா ஜூரோங்' (Surbana Jurong) நிறுவனத்தை நியமித்துள்ளது. இந்நிறுவனம் 'மூன்றாவது மும்பை'யின் (Third Mumbai) வரைபடத் திட்டத்தை (layout) வடிவமைப்பதோடு, போக்குவரத்து உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் திட்டமிடும். இப்பணிகள் தொடங்கப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் நிறைவடையும்.




இப்பகுதிக்கான தொலைநோக்கு பார்வை


கடந்த காலங்களில், நவி மும்பை போன்ற திட்டமிடப்பட்ட மையங்கள் மூலம் மும்பையின் நெரிசலைக் குறைக்க அரசாங்கமும் நகரத் திட்டமிடுபவர்களும் முயன்றனர். விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்தும் நோக்கில் 'நைனா-(நவி மும்பை விமான நிலையத் தாக்கம் கொண்ட அறிவிக்கப்பட்ட பகுதி)' (Navi Mumbai Airport Influence Notified Area(NAINA)) திட்டமும் உருவாக்கப்பட்டது.


நவி மும்பையில் தற்போது கணிசமான மக்கள் வசித்து வந்தாலும், அது உருவான விதம் குறித்து நகர்ப்புறத் திட்டமிடுபவர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். 1970-களின் முற்பகுதியில் ஷிரிஷ் படேல் மற்றும் சார்லஸ் கொரியா போன்ற நகர்ப்புறத் திட்டமிடல் நிபுணர்களால் நவி மும்பைக்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. போக்குவரத்து மையங்களுக்கு அருகில் அதிக தளப் பரப்பு குறியீடு (FSI) மற்றும் தொலைதூரப் பகுதிகளில் குறைந்த தளப் பரப்பு குறியீடு (FSI) கொண்ட ஒரு கட்டமைக்கப்பட்ட நகரத்தை அவர்கள் கற்பனை செய்திருந்தனர். இருப்பினும், இந்தத் திட்டம் எதிர்பார்த்தபடி செயல்படவில்லை. நவி மும்பை தன்னை நிலைநிறுத்திக்கொள்ள பல ஆண்டுகள் தேவைப்பட்டன. சமீபத்திய ஆண்டுகளில்தான் அங்கு குடியிருப்பு விற்பனையும், விலையும் சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.


"நவி மும்பைக்கான திட்டமிடல் ஆர்வத்தில், 'விரைவுப் பொதுப் போக்குவரத்து' (mass rapid transport) என்ற மிக முக்கியமான அம்சம் விடுபட்டுவிட்டது," என்று ரியல் எஸ்டேட் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனமான 'நைட் ஃபிராங்க்'கைச் (Knight Frank) சேர்ந்த குலாம் ஜியா கூறினார். "இன்று அங்கு மக்கள் வசித்தாலும், அவர்களில் பெரும்பாலோர் வேலைக்காக மும்பை நகருக்குச் செல்ல உள்ளூர் இரயில்களையே நம்பியுள்ளனர். ஏனெனில், நவி மும்பையில் வேலைவாய்ப்புகள் போதுமான அளவு அதிகரிக்கவில்லை."


1990-களில்தான் உள்ளூர் இரயில் கட்டமைப்பு நவி மும்பை வரை நீட்டிக்கப்பட்டது. ஜியாவின் கூற்றுப்படி, இதுவும் போதுமானதாக இல்லை. "மக்கள் தினமும் நீண்டதூரப் பயணத்தை வசதியாக மேற்கொள்ள, மணிக்கு சுமார் 200 கி.மீ வேகத்தில் செல்லும் விரைவுப் பொதுப் போக்குவரத்து அமைப்பு தேவை," என்று அவர் கூறினார். 'அடல் சேது' (Atal Setu) பாலமும் பல ஆண்டுகள் தாமதமாகவே வந்துள்ளது. மேலும், அதைப் பயன்படுத்தும் வசதி ஒரு சிலருக்கு மட்டுமே உள்ளது.


ஒரு துணை நகரம் (satellite city) வெற்றிகரமாகச் செயல்பட வேண்டுமானால், அங்கு வசிக்கும் மக்களுக்கு முதன்மை நகரத்துடனான (mainland) இணைந்திருப்பார்கள் என்பதை உணரும்போதுதான் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று ஜியா கூறினார். மக்கள் தொடர்ந்து மும்பையில் வேலை செய்யவும் குடும்பத்துடன் வசிக்கவும் செய்வார்கள். ஆனால், சிறந்த வாழ்க்கை முறை மற்றும் குறைந்த வாடகை காரணமாக மக்கள் தொலைதூரப் பகுதிகளில் குடியேற விரும்பினால், அவர்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை வழங்க விரைவான பொதுப் போக்குவரத்து வசதி அவசியம். இன்றும் கூட, பன்வேல் (Panvel) பகுதிக்கு செல்லும் உள்ளூர் இரயில்கள் குறைவான எண்ணிக்கையிலேயே இயக்கப்படுகின்றன. மேலும், பயண நேரமும் அதிகமாக உள்ளது. மக்கள் அங்கு குடியேறத் தொடங்கினால், அலுவலகங்களும் அப்பகுதியைத் தங்கள் செயல்பாடுகளுக்குப் பரிசீலிக்கத் தொடங்கும். மறுபுறம், 'நைனா' (NAINA) திட்டப்பகுதி இப்போதுதான் வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைத்துள்ளது. இத்திட்டத்திற்கான மாநில அரசுக்குச் சொந்தமான திட்டமிடல் அமைப்பான 'சிட்கோ-நகரம் மற்றும் தொழில்துறை வளர்ச்சிக் கழகம்' (City and Industrial Development Corporation(CIDCO)), நகரின் ஒரு பகுதிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் சாலைப் பணிகளைத் தொடங்க சமீபத்தில் ரூ.8,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தப்புள்ளியை (tender) கோரியுள்ளது.


முதலீட்டாளர்களின் மனநிலை


'மூன்றாவது மும்பையில்’ (Third Mumbai) வீடு வாங்க ஆர்வமுள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களை ஈர்க்கும் முயற்சியில் ஆரம்பக்கட்ட முதலீட்டாளர்கள் ஏற்கனவே இறங்கிவிட்டனர். தற்போதைய நிலையில், சிறந்த விலைக்குப் பேரம் பேசும் நம்பிக்கையில், முதலீட்டாளர்கள் நில உரிமையாளர்களுடன் நேரடியாகவே பரிவர்த்தனை செய்ய வேண்டியுள்ளது. ஒருமுறை பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையம் (MMRDA) நிலத்தைக் கையகப்படுத்திய பிறகு, முதலீட்டாளர்கள் தங்கள் உரிமைகோரல்களை முன்வைக்க பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையத்தை (MMRDA) அணுகுவார்கள்.


ஜியா (Zia) கூறுகையில், "அடிப்படை வசதிகள் மற்றும் சிறந்த பொதுப் போக்குவரத்து வசதிகளை உறுதி செய்வதற்கான முன்னெடுப்புகளை பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையம் (MMRDA) மேற்கொண்டால், இப்பகுதி இயல்பாகவே வளர்ச்சியடையும்," என்று குறிப்பிட்டார். மும்பைக்கும் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கும் (NMIA) இடையே மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன. மேலும், முன்மொழியப்பட்ட மும்பை-ஹைதராபாத் அதிவேக ரயில் பாதையில் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தை (NMIA) ஒரு நிறுத்தமாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.


பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணைய (MMRDA) அதிகாரிகள் கூறுகையில், "நாங்கள் இப்போது 'மூன்றாவது மும்பை' பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால், ஒரு நகரத்தை உருவாக்குவது என்பது நீண்டகாலத் திட்டமாகும். அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் உடனடி பலன்கள் ஏதும் கிடைக்காது. ஆனால், அதற்குப் பிறகு, அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் முழுமையாக அமைக்கப்பட்டதும், அதற்கான பலன்கள் பெருமளவில் கிடைக்கத் தொடங்கும்," என்று தெரிவித்தனர்.


Original articles: Navi Mumbai couldn’t decongest Mumbai. Can Third Mumbai do so? -Sabah Virani

Share: