கட்டுப்பாடற்ற இணையவழிக் குற்றங்களின் அபாயங்கள். -அமிதாப் ரஞ்சன்

தென்கிழக்கு ஆசியாவில் உள்ளது போல, மோசடி வலையமைப்புகளைத் தகர்ப்பதற்கு இந்தியா இருதரப்பு மற்றும் பலதரப்பு கூட்டுப் பேச்சுவார்த்தைகளையும் செயல்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.


2025-ஆம் ஆண்டில், இந்தியாவில் இணையவழிக் குற்றங்களால் சுமார் ₹22,495 கோடி என்ற மிகப்பெரிய அளவிலான பண இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 28.15 லட்சம் இணையவழிக் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 2024-ஆம் ஆண்டைவிட 24 விழுக்காடு கூடுதலான புகாராகும். இதற்கு முந்தைய ஆண்டான 2024-ஆம் ஆண்டில், அதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது இணையவழிக் குற்ற இழப்புகள் 200 விழுக்காட்டிற்கும் மேல் உயர்ந்து ₹22,845 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாடு தனது டிஜிட்டல் பொருளாதாரத்தில் இருந்து ஆண்டுக்கு ₹22,000 கோடிக்கும் மேலாக இழப்பை எதிர்கொண்டு வரும் நிலையில், 2047-ஆம் ஆண்டிற்குள் 'வளர்ச்சியடைந்த இந்தியா' (Viksit Bharat) என்கிற இலக்கை நம்பகத்தன்மையோடு எதிர்பார்க்க முடியுமா?


இந்தியாவின் டிஜிட்டல் மாற்றம் (Digital transformation) ஒரு உண்மையான சாதனையாகும். ஒருங்கிணைந்த பரிவர்த்தனை இடைமுகம் (Unified Payments Interface (UPI)) தளம் மாதந்தோறும் பில்லியன் கணக்கான பணப்பரிவர்த்தனைகளைச் செயல்படுத்துகிறது. ஆதார் (Aadhaar) அடையாள அட்டை, நாட்டின் மிகப்பெரிய அளவிலான மக்கள்தொகைக்கான அடையாளத்தை முற்றிலும் மறுவரையறை செய்துள்ளது. ஆனால், ஒவ்வொரு புரட்சிக்கும் ஒரு பக்கவிளைவு உண்டு; அந்த வகையில் 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்திற்குப் பக்கவிளைவாக உருவெடுத்துள்ளதுதான் பரந்து விரிந்த குற்றவியல் சுற்றுச்சூழல் அமைப்பு. இது தற்போது நாட்டின் வளர்ச்சி இலக்குகளுக்கு மிக முக்கிய அச்சுறுத்தல்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.


மோசடித் தொழிற்சாலைகள் 


இந்த நெருக்கடியின் மிகவும் அதிர்ச்சியூட்டும் ஒரு பரிமாணம் என்னவென்றால், இது பல நாடுகளை உள்ளடக்கிய சர்வதேசப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. மியான்மர், லாவோஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய மூன்று நாடுகளும் சந்திக்கும் எல்லையான 'Golden Triangle' பகுதியிலும், கம்போடியா-தாய்லாந்து எல்லைகளில் உள்ள முகாம்களிலும், சீனப் பின்னணி கொண்ட பல ஒழுங்கமைக்கப்பட்ட மோசடிக் குழுக்கள் தொழில்துறை அளவில் இந்த மோசடித் திட்டங்களை நடத்தி வருகின்றன.


போலியான வேலைவாய்ப்புகளால் ஈர்க்கப்பட்டு ஏமாற்றப்படும் இந்திய இளைஞர்கள், இந்த முகாம்களுக்குள் கடத்திச் செல்லப்படுகிறார்கள். பின்னர் அவர்கள் அங்குக் கட்டாயப்படுத்தப்பட்டு, உலகளவில் உள்ள மக்களைக் குறிவைத்து முதலீட்டு மோசடிகள் மற்றும் 'டிஜிட்டல் கைது' (Digital Arrest) போன்ற மோசடிகளைச் செய்யும் தொலைபேசி அழைப்பாளர்களாகப் பயன்படுத்தப்படுகிறார்கள்.


நிதிசார்ந்த குற்றங்களிலேயே மனரீதியாகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மிகக் கொடூரமான ஒன்றுதான் இந்த டிஜிட்டல் கைது மோசடி ஆகும். சுங்கத்துறை அல்லது போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி போலப் பேசும் ஒரு நபர், பாதிக்கப்பட்டவரிடம் அவரது ஆதார் அடையாள அட்டை (Aadhaar) கடத்தல் அல்லது பணமோசடி நடவடிக்கைகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாகக் கூறி அச்சுறுத்துகின்றனர். பின்னர், அந்த நபரை ஒரு போலி காணொளி அழைப்பு கண்காணிப்பு மூலம் கைது செய்துள்ளது போன்ற மாயையை உருவாக்கி, அவர்களின் வாழ்நாள் சேமிப்புப் பணம் முழுவதையும் திட்டமிட்டுப் பறித்து விடுகின்றனர்.


மத்திய உள்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் 2022-ஆம் ஆண்டில் தோராயமாக 40,000-லிருந்து, 2023-ஆம் ஆண்டில் 60,000-ஆகவும், 2024-ஆம் ஆண்டில் ஏறக்குறைய 1.24 லட்சமாகவும் உயர்ந்தன. மேலும் 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்திற்குள் ஒட்டுமொத்தப் பண இழப்பு 2,600 கோடி ரூபாய் என்கிற அளவைக் கடந்துள்ளது.


2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, பாகிஸ்தானில் இருந்து இயக்கப்பட்டு தைவானுடன் தொடர்புடைய மோசடியில் ஈடுபடும் குழுவினரைக் கண்டுபிடித்து அழித்தது. இந்தக் கும்பல், தங்களை 'பயங்கரவாத எதிர்ப்புப் படை' (Anti-Terrorist Squad (ATS)) அதிகாரிகள் போலக் காட்டிக்கொண்டு, குடிமக்களிடம் இருந்து சுமார் 100 கோடி ரூபாய் மோசடி செய்திருந்தது. சமீபத்தில் நடந்த மற்றொரு சம்பவம் இதன் தீவிரத்தை வெளிப்படுத்தியது. சீனாவைச் சேர்ந்த சில மின்கலன் மேலாண்மை செயலிகள் (Battery management apps), டெல்லியில் ‘E-rickshaw’ இயக்கங்களை முற்றிலும் முடக்கி, போக்குவரத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியதோடு மக்களின் உயிருக்கும் அச்சுறுத்தலாக மாறின. உடனடியாக அந்தச் செயலிகளை செயலிகள் பதிவிறக்கத் தளங்களில் இருந்து நீக்குமாறு அரசாங்கம் உத்தரவிட்டது. இவை ஏதோ திட்டமிடாமல் தற்செயலாக நடக்கும் குற்றங்கள் அல்ல; மாறாக, மிகச்சிறந்த விநியோகச் சங்கிலிகள் மற்றும் புவிசார் அரசியல் ஆதரவாளர்களைக் கொண்டு, எல்லைகளைத் தாண்டி நடத்தப்படும் ஒரு கூட்டுத் தொழில் நிறுவனத்தைப் போன்ற குற்றச் செயலாகும்.


இந்தியாவின் மிக முக்கியமான உள்கட்டமைப்புகள் மீண்டும் மீண்டும் இத்தகைய தாக்குதல்களுக்கு ஆளாகக்கூடிய நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக (AIIMS Delhi) மருத்துவமனைமீது நடத்தப்பட்ட 'ரான்சம்வேர்' (Ransomware) காரணமாக, வெளிநோயாளி, உள்நோயாளி, ஆய்வகம் உள்ளிட்ட சேவைகள் ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்கு முடங்கின. இந்தத் தாக்குதல் ஐந்து சர்வர்களில் (Servers) இருந்த கோப்புகளைப் பாதித்ததோடு, சுமார் 1.3 டெராபைட் (TeraByte (TB)) அளவிலான தரவுகளை முடக்கியது. இதனால் 3 முதல் 4 கோடி நோயாளிகளின் மருத்துவப் பதிவுகள் திருடப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


நாடாளுமன்றத்தில் இந்தத் தாக்குதலை அரசாங்கம் பின்னர் உறுதிப்படுத்தியது. இதற்காக இந்தியக் கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (Indian Computer Emergency Response Team (CERT-In)), டெல்லி காவல்துறை, மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய புலனாய்வு முகமை (National Investigation Agency (NIA)) ஆகியவை விசாரணைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. விசாரணையாளர்கள் இந்த டிஜிட்டல் தடயங்கள் ஹாங்காங் மற்றும் சீனா வரை செல்வதைக் கண்டறிந்தனர். இதற்கிடையில், 2023-ஆம் ஆண்டில் தரவுகள் கசிந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, கோவின் (CoWIN) தளத்தின் பாதுகாப்புத் திறன் குறித்த கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன. உலகளவில் இணையவழித் தாக்குதல்களுக்கு அதிகம் இலக்காகும் நாடுகளில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து இருந்து வருவதாகத் தொழில்முறை இணைய பாதுகாப்பு மதிப்பீடுகள் காட்டுகின்றன.


நான்கு ஆண்டுகளில் நிதி இழப்புகள் சுமார் 41 மடங்கு அதிகரித்துள்ளன.  அதாவது 2021-ஆம் ஆண்டில் ₹551 கோடியாக இருந்த இழப்பு, 2024-ஆம் ஆண்டில் ₹22,800 கோடிக்கும் மேலாக உயர்ந்துள்ளது. இதில் முதலீடு தொடர்பான மோசடிகளால் மட்டுமே, இழந்த ஒட்டுமொத்தப் பணத்தில் 75 விழுக்காட்டிற்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.




ஒவ்வொரு மோசடிப் பணப்பரிமாற்றமும், குடும்பங்களின் சேமிப்பைச் சீரழிக்கிறது. இந்தச் சேமிப்புதான் பொதுவாகச் சந்தையில் பொருட்களை வாங்கும் திறனை ஊக்குவிப்பதாக இருக்கும். ஒவ்வொரு ரான்சம்வேர் (Ransomware) தாக்குதலும் உற்பத்தித் திறனைப் பாதிக்கிறது. ஒவ்வொரு பெரிய தரவுத் திருட்டும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முயலும் நிறுவனங்களுக்கான மூலதனச் செலவை அதிகரிக்கிறது.


இணையவழிக் குற்றங்கள் என்பவை எப்போதாவது பொருளாதாரத்தைப் பாதிக்கின்ற, சட்டம்-ஒழுங்கு சார்ந்த ஒரு சாதாரணப் பிரச்சனை மட்டுமல்ல; அவை நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து முடக்கும் ஒரு பெரிய தடையாகும். சிங்கப்பூர் தனது பொருளாதார அடையாளத்தோடு இந்த இணையப் பாதுகாப்பையும் இணைத்துள்ளது. இஸ்ரேல் இதை ஒரு முக்கியத் தொழில் துறையாகவே மாற்றியிருக்கிறது. அடுத்த தலைமுறை டிஜிட்டல் விநியோகச் சங்கிலிகளுக்கு உலக அளவில் ஒரு முதன்மையான கூட்டணி நாடாக மாற விரும்பும் இந்தியா, இணையப் பாதுகாப்பில் பலவீனமாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.


இந்த இணையக் குற்றங்களின் பாதிப்பு தற்போது ஒரு இணையவழிப் பெருந்தொற்று (Cyberdemic) போலப் பரவி வருகிறது. ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர் வாட்ஸ்அப் செயலியிலுள்ள போலிப் பங்குச்சந்தை ஆலோசனையை நம்பி தனது வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் இழக்கிறார். இளம் பட்டதாரி ஒருவர் மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டு கடத்தப்படுகிறார். மத்திய புலனாய்வுப் பிரிவு (Central Bureau of Investigation (CBI)) அதிகாரியெனப் பேசும் ஒரு மோசடி நபரால் முதியவர் ஒருவர் பல நாட்களாகத் தனது வீட்டிற்குள்ளேயே மனரீதியாகச் சிறைபிடிக்கப்படுகிறார்.


இத்தகைய இணையவழிக் குற்றங்களால் ஏற்படும் பண இழப்பைவிட, அது தரும் மனஉளைச்சலும் பாதிப்பும் மிக அதிகம் என்று நிதி ஆயோக் (NITI Aayog) அமைப்பும் ஒப்புக்கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Generative AI) இந்த அச்சுறுத்தலை மேலும் வேகமாக்கியுள்ளது. குடும்ப உறுப்பினர்கள், நிறுவன அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளைப் போல அவர்களின் குரல் மற்றும் உருவத்தை அப்படியே போலியாக உருவாக்கி (Deepfake) ஏமாற்ற இந்தத் தொழில்நுட்பம் தற்போது பயன்படுத்தப்படுகிறது. இணையத்தைப் பயன்படுத்தத் தெரிந்த ஒருவருக்கு இணையப் பாதுகாப்புப் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்றால், அது மிகவும் ஆபத்தானது. குறிப்பாக, இந்தியாவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் புதிதாக இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளவர்களிடம் இந்த விழிப்புணர்வு மிகவும் குறைவாக உள்ளது.


ஐந்து அம்சத் திட்டம்


இந்தியாவின் நிறுவனரீதியிலான செயல்பாடுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இந்திய இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (Indian Cyber Crime Coordination Centre (I4C)) இதுவரை சுமார் 8,031 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடிப் பரிவர்த்தனைகளை முடக்க உதவியுள்ளது. மேலும், குடிமக்கள் நிதிசார் இணையக் குற்றப் புகாரளிப்பு அமைப்பு (Citizen Financial Cyber Fraud Reporting System) 23 லட்சத்திற்கும் அதிகமான புகார்களின் மூலம் சுமார் 7,130 கோடி ரூபாய்க்கு மேல் நிதிஇழப்பைத் தடுத்துள்ளது. இவை அர்த்தமுள்ள முயற்சிகள் என்றாலும், இந்தச் சவாலின் அளவு மிகப் பெரியதாக இருப்பதால் நமது அடுத்தகட்ட நடவடிக்கை ஒரு பிரம்மாண்ட நடவடிக்கையாக இருக்க வேண்டும்.


முதலாவதாக, இணையப் பாதுகாப்பு என்பது ஒட்டுமொத்த அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமையாக மாற வேண்டும். இதற்கு இந்திய இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C), இந்திய கணினி அவசரக்காலப் பதிலளிப்புக் குழு CERT-In, ரிசர்வ் வங்கி (RBI), உளவு அமைப்புகள் மற்றும் மாநிலக் காவல்துறை ஆகியவற்றுக்கு இடையே உடனுக்குடன் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும்.


இரண்டாவதாக, இணையப் பாதுகாப்புப் பழக்கவழக்கங்கள் (Cyber hygiene) ஒரு தேசிய இயக்கமாக மாற வேண்டும். முன்னொரு காலத்தில் நிதி அறிவு சார்ந்த விஷயங்களுக்கு எந்த அளவு முக்கியத்துவம் தரப்பட்டதோ, அதேபோன்ற அவசரத் தேவையுடன் இது பள்ளிப் பாடத்திட்டங்களிலும், நிறுவனங்களில் சேரும் புதிய ஊழியர்களுக்கான பயிற்சியிலும் சேர்க்கப்பட வேண்டும்.





மூன்றாவதாக, இந்தியா தனது இணையக் குற்றப் புலனாய்வு (Cyber-forensic) துறைக்கான மனிதவளத்தை மிக வேகமாகவும் பெருமளவிலும் அதிகரிக்க வேண்டும். ஏனெனில், தற்போதைய சூழலில் குற்றப் புலனாய்வு நிலைகளில் இதற்கான தகுதிவாய்ந்த நபர்களின் பற்றாக்குறை நீடிக்கிறது.


நான்காவது, இந்தியா தனது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் போலி வங்கிக் கணக்குகள் (Mule accounts) மற்றும் சந்தேகத்திற்கிடமான பணப்பரிவர்த்தனை முறைகளை உடனுக்குடன் கண்டறிய வேண்டும். அதாவது, ஒரு  இணையவழிக் குற்றம் நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பதைவிட, அது நடப்பதற்கு முன்பே கணித்து தடுக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும்.




ஐந்தாவது மற்றும் மிக அவசரமான விஷயம் என்னவென்றால், இந்தியா தனது இருதரப்பு மற்றும் பலதரப்பு நாடுகளுடனான ஒத்துழைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும். இதில் குற்றவாளிகளை நாடுகடத்தும் ஒப்பந்தங்கள், பரஸ்பர சட்ட உதவி, ‘Interpol’ உடனான ஒருங்கிணைப்பு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் செயல்படும் மோசடி மையங்களை அவற்றின் ஆரம்பத்திலேயே கண்டறிந்து ஒழிப்பதற்கான நேரடி ராஜதந்திர முயற்சிகளை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்.


வளர்ச்சியடைந்த இந்தியா (Viksit Bharat) என்ற இலக்கு நம்பிக்கையின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பரிவர்த்தனை இடைமுகம் (UPI) மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகள் பாதுகாப்பானவை என்றும், மருத்துவமனை சர்வர்கள் (server) முடக்கப்படமாட்டாது என்றும், ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள மோசடி மையங்களிலிருந்து இயங்கும் குற்றவாளிகளால் ஆதார் (Aadhaar) மூலம் இணைக்கப்பட்ட அடையாளங்கள் தவறாகப் பயன்படுத்தப்படாது என்றும் மக்களிடையே நம்பிக்கை ஏற்பட வேண்டும்.



தொழில்நுட்பம் எவ்வளவுதான் அதிநவீனமாக இருந்தாலும், நம்பிக்கை இல்லையென்றால் டிஜிட்டல் பொருளாதாரத்தால் அதன் முழுத் திறனை எட்ட முடியாது. இந்த நூற்றாண்டில் இந்தியாவின் எதிரிகள் எப்போதும் ராணுவ சீருடை அணிந்து வரமாட்டார்கள். அவர்கள் கணினித் திரைக்குப் பின்னால் இருந்துகொண்டே டிஜிட்டல் வலையமைப்புகளுக்குள் நுழையலாம், திருடப்பட்ட அடையாளங்களைத் தவறாகப் பயன்படுத்தலாம், மேலும் சாதாரண மக்களின் சேமிப்புப் பணத்தைத் திருடவும் செய்யலாம்.


இந்த டிஜிட்டல் எல்லையைப் பாதுகாப்பது என்பது இனி ஒரு விருப்பத் தேர்வு அல்ல, அது கட்டாயமாகும். நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் தொழிற்சாலைகளைக் கட்டுவதற்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ, அதே அளவிலான முன்னுரிமை இந்த வேகமாக வளர்ந்து வரும் இணையவழிப் பெருந்தொற்று (Cyberdemic) தடுப்புப் பணிகளுக்கும் வழங்கப்பட வேண்டும்.


அமிதாப் ரஞ்சன், புது தில்லியில் உள்ள இந்தியப் பொது நிர்வாகக் கழகத்தின் பதிவாளர் ஆவார்.


Original Link: Perils of unchecked cybercrime.

Share:

2027-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு சாதிகளைப் பதிவுசெய்ய வேண்டுமே தவிர, புதிய சாதிப் பிரிவுகளை உருவாக்கிவிடக் கூடாது. -கௌட் கிரண் குமார்

தரப்படுத்தப்பட்ட குறியீட்டு முறை (Standardised coding) இல்லையென்றால், எழுத்துப்பிழைகள் மற்றும் பெயர்களில் உள்ள வேறுபாடுகள் காரணமாகத் தரவுகளை ஒழுங்கமைப்பதும் பகுப்பாய்வு செய்வதும் கடினமாகிவிடும்.


சமீபத்திய செய்தி அறிக்கைகளின்படி, 2027-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டத்திற்கான மாதிரிப் பயிற்சியில், சாதியைப் பதிவு செய்ய ஒரு "திறந்த பத்தி" (Open column) சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மாதிரிப் பயிற்சியிலிருந்து கிடைக்கும் கருத்துக்களைப் பரிசீலித்த பின்னரே இறுதி முறை முடிவு செய்யப்படும் என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியிருந்தாலும், ஒரு நிலையான குறியீட்டு முறை (Standardised coding system) இல்லாமல் திறந்த உரையாக (Open-text response) சாதியைப் பதிவு செய்வது, சாதி வாரிக் கணக்கெடுப்பின் முக்கிய நோக்கத்தையே வலுவிழக்கச் செய்துவிடும் என்பதை கடந்தகால அனுபவங்கள் காட்டுகின்றன.


இதற்கு 2011-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சமூக-பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பு (Socio-Economic and Caste Census (SECC)) ஒரு தெளிவான உதாரணம் ஆகும். அதில் பயன்படுத்தப்பட்ட திறந்த பத்தியின் காரணமாக, எழுத்துப்பிழைகள், பிராந்தியப் பெயர்கள், உட்பிரிவுகள், ஒரே சாதிக்கான மாற்றுப் பெயர்கள் மற்றும் முறையற்ற பதிவுகள் ஆகியவற்றால் 46 லட்சத்திற்கும் அதிகமான வெவ்வேறு சாதிப் பதிவுகள் உருவாயின. இதன் விளைவாக, அந்தத் தரவுகளைச் சரியாக வகைப்படுத்தவோ அல்லது கொள்கை உருவாக்கத்திற்காக அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தவோ முடியாமல் போனது.


இது முந்தைய காலங்களில் மிகவும் திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்ட கணக்கெடுப்புகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. உதாரணமாக, 1931-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் சுமார் 4,147 சாதிகள் மட்டுமே பதிவாகியிருந்தன. அதேபோல 1951-ஆம் ஆண்டில் இந்திய மானுடவியல் ஆய்வு அமைப்பு (Anthropological Survey of India) சுமார் 6,325 சாதிகளைக் கண்டறிந்தது. சமீபகாலங்களில், ஒரு நிலையான குறியீட்டு முறையைப் பயன்படுத்திய மாநிலங்கள், துல்லியமான மற்றும் நம்பகமான சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளன.


பீகார் சாதி கணக்கெடுப்பு (2023), மொத்தம் 209 சாதிகளைக் கண்டறிந்தது. இதில் மாநிலத்தின் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் உள்ள 112 மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Extremely Backward Classes (EBCs)), 30 இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Other Backward Classes (OBCs)), 22 பட்டியலினத்தவர் (Scheduled Castes (SCs)), 32 பழங்குடியினர் (Scheduled Tribes (STs)), 7 முன்னேறிய வகுப்பினர் (Upper Castes) மற்றும் 2 பிற தொடர்புடைய சாதிகள் (Other Related Castes (ORCs)) அடங்குவர். அதேபோல, தெலுங்கானா சமூக-பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் மற்றும் சாதி கணக்கெடுப்பு (2024), மொத்தம் 242 சாதிகளைக் கண்டறிந்தது. இதில் 133 பிற்படுத்தப்பட்ட வகுப்புகள், 59 பட்டியலினத்தவர், 32 பழங்குடியினர் மற்றும் 18 இதர வகுப்புகள் அடங்கியிருந்தன. இந்த இரண்டு ஆய்வுகளுமே அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சாதிப் பட்டியல்களை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு சாதிக்கும் தரப்படுத்தப்பட்ட குறியீடுகளை (Standardised codes) வழங்கின. இது தரவுகளில் முரண்பாடுகள் ஏற்படுவதைத் தவிர்த்து, ஒரே சாதி மீண்டும் பதிவாவதைக் குறைக்கவும் உதவியது.


ஒன்றிய அரசு 2027-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்கான வழிமுறைகளை இறுதி செய்து வரும் வேளையில், சாதி வாரிக் குறியீடுகளைத் தயாரிப்பதற்கான அதிகாரப்பூர்வ ஆதாரத்தை முடிவு செய்ய ஒரு நிபுணர் குழுவை அமைக்க வேண்டும். இந்தக் குறியீட்டு முறைக் கட்டமைப்பு எதன் அடிப்படையில் அமைய வேண்டும் என்பதை அந்த நிபுணர் குழு ஆராய வேண்டும்: மாநில வாரியான பட்டியல் சாதியினர் (SC), பழங்குடியினர் (ST) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (OBC) பட்டியல்களா; பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையம் பராமரிக்கும் ஒன்றிய அரசின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (OBC) பட்டியலா; இந்திய மானுடவியல் ஆய்வு அமைப்பு பராமரிக்கும் சாதித் தரவுத்தளமா; அல்லது மாநிலங்களுக்கு இடையேயான வேறுபாடுகளை ஏற்கும் வகையில் இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்படும் ஒரு தேசிய முதன்மைப் பட்டியலா என்பதை அக்குழு தீர்மானிக்க வேண்டும்.


உயர்சாதியினரை அடையாளம் காண்பதற்கும் ஒரு தெளிவான கட்டமைப்பு தேவைப்படுகிறது. பட்டியல் சாதியினர் (SC), பட்டியல் பழங்குடியினர் (ST) அல்லது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஆகிய பிரிவுகளில் வராதவர்களுக்கே பொருளாதாரரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான (EWS) சான்றிதழ்கள் வழங்கப்படுவதால், இந்தச் சமூகங்களை அடையாளம் காண்பதற்கான ஒரு நிர்வாக அடிப்படையை அரசாங்கம் ஏற்கனவே கொண்டுள்ளது. இதனை மேலும் மேம்படுத்தி, மக்கள்தொகை கணக்கெடுப்பின் சாதி குறியீட்டு அமைப்பில் (Caste coding system) சேர்த்துக் கொள்ள முடியும்.


விடுபட்ட உண்மையான சாதிப் பெயர்கள், புதிய சாதிப் பெயர்கள் அல்லது பிராந்தியரீதியான வேறுபாடுகளைப் பதிவு செய்வதற்காக மட்டுமே கணக்கெடுப்புப் படிவத்தில் ஒரு தனிப்பகுதி வைக்கப்பட வேண்டும். அதேநேரத்தில், அங்கீகரிக்கப்பட்ட சாதிகள் அனைத்தும் நாடு முழுவதும் ஒரே சீராகப் பதிவு செய்யப்படுவதை உறுதிசெய்ய, கணக்கெடுப்பு நடத்தும் ஒவ்வொரு ஊழியருக்கும் தரப்படுத்தப்பட்ட குறியீட்டுப் பட்டியல் கிடைக்கச் செய்ய வேண்டும்.


சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் முதல் விரிவான சாதிவாரிக் கணக்கெடுப்பை, வழக்கமான மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக நடத்துவதற்கான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளது. 2011-ஆம் ஆண்டின் சமூக-பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பில் (Socio-Economic and Caste Census (SECC) (2011)) இருந்த கணக்கெடுப்பு முறை சார்ந்த குறைபாடுகளை மீண்டும் செய்வதன் மூலம், இந்த வாய்ப்பை வீணடித்துவிடக் கூடாது.



நன்கு திட்டமிடப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது வெறும் சமூகங்களின் எண்ணிக்கையை மட்டும் கணக்கிடுவது அல்ல; மாறாக, அது சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் பின்தங்கியே இருக்கும் சமூகங்களின் பின்தங்கிய நிலையை அடையாளம் காணவும், சமத்துவமின்மையை அளவிடவும், அவர்களுக்கான குறிப்பிட்ட மக்கள்நலக் கொள்கைகளை உருவாக்கவும் தேவையான துல்லியமான தரவுகளை உருவாக்குவதாகும். 2027-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் வெற்றியானது, பதிவு செய்யப்படும் ஒவ்வொரு சாதியையும் ஒரு வெளிப்படையான, தரப்படுத்தப்பட்ட மற்றும் தேசிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட குறியீட்டு முறையின் மூலம் வகைப்படுத்தும் அரசாங்கத்தின் திறனைப் பொறுத்தே அமையும் என்கின்றனர்.


கௌட் கிரண் குமார், அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு (OBC) மாணவர்கள் சங்கத்தின் தேசியத் தலைவர் ஆவார்.


Original Link: Census 2027 must count castes, not create them.

Share:

இந்தியா-இங்கிலாந்து தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் (FTA) நன்மைகள் மற்றும் சவால்கள் - அனிஸ்ரீ சுரேஷ்

புதிய புவிசார்-பொருளாதார உலகின் யதார்த்தம் என்னவென்றால், பரந்த மற்றும் லட்சியம் சார்ந்த தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்களின் (Free Trade Agreements (FTA)) காலம் நடைமுறையில் முடிவுக்கு வந்துவிட்டது.


இங்கிலாந்தில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் கீழ் ஏற்பட்ட சமீபத்திய தலைமை மாற்றங்கள் மற்றும் எஃகுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த கடைசி நேர கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியிலும், இந்தியாவும் இங்கிலாந்தும் இறுதியாகத் தங்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) ஜூலை 15 முதல் செயல்படுத்தத் தொடங்கியுள்ளன. ஜூலை 1 அன்று இங்கிலாந்தின் புதிய எஃகு வர்த்தக நடவடிக்கைகள் அமலுக்கு வருவதற்குச் சில நாட்களுக்கு முன்னதாக, கடைசி நேரத்தில் இந்தியாவின் அடிப்படை ஏற்றுமதிகளுக்கு 85 சதவீத வரிவிலக்கை இந்தியாவால் பெற முடிந்தது. இந்தத் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் கட்டமைப்புரீதியான வரம்புகளை இரண்டு முக்கிய எதார்த்தங்கள் சுட்டிக்காட்டுகின்றன.


முதலாவதாக, இங்கிலாந்துடனான இந்தியாவின் தற்போதைய எஃகு வர்த்தகத்திற்கு 85 சதவீத அளவு விலக்கு பொருந்தினாலும், ஜூலை 1 முதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் குறைக்கப்பட்ட எஃகு இறக்குமதி மீதான கட்டுப்பாடு வரம்புகள் ஒரே நேரத்தில் அமல்படுத்தப்படுவது, ஐரோப்பாவிலிருந்து வெளியேற்றப்படும் இந்திய எஃகு ஏற்றுமதிகளுக்கு இங்கிலாந்து ஒரு கட்டணமில்லா பாதுகாப்பான புகலிடமாகச் செயல்படும் திறனைக் குறைக்கிறது.


இரண்டாவதாக, இங்கிலாந்து கொண்டுவரவுள்ள கார்பன் எல்லைச் சரிசெய்தல் செயல்முறை (CBAM) இந்த தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கியப் பாதுகாப்பு அம்சங்களின் கீழ் வரவில்லை. மேலும், இந்தியாவின் ஒரே தற்காப்பு வழிமுறை, எதிர்-வரிவிதிப்புகளை (counter-tariffs) விதிக்கும் உரிமை மட்டுமே. நவீன தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்களின் சந்தை அணுகல் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் மகத்தானதாக இருந்தாலும், வர்த்தக ஒப்பந்தங்களின் புதிய புவிசார்-பொருளாதார யதார்த்தம் அதீத பரிவர்த்தனை சார்ந்ததாகவும், தற்காப்பு சார்ந்ததாகவும், மற்றும் வரையறுக்கப்பட்டதாகவும் மாறியுள்ளது.


இந்த ஒப்பந்தத்தின் சாதகமான அம்சம் என்னவென்றால், இந்தியா தனது 99 சதவீத வரிவிதிப்பு முறைகளில் உடனடியாக வரி இல்லா சந்தை அணுகலைப் பெற்றுள்ளது. இதன் மூலம் ஜவுளி மற்றும் ஆடைகள் மீதான வரிகள் 12 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தியாவின் மருந்து ஏற்றுமதிகளில் 87 சதவீதம் உடனடியாக வரி இல்லா அணுகலையும் இது வழங்கியது. கூடுதலாக, கடல்சார் ஏற்றுமதிகளில் 21.5 சதவீத வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. அதனுடன், சமூகப் பாதுகாப்புப் பங்களிப்புகள் மீதான ஒப்பந்தம் (இரட்டைப் பங்களிப்பு ஒப்பந்தம்), தற்காலிக இந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் பணியாளர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை இரட்டை சமூகப் பாதுகாப்புப் பங்களிப்புகளைச் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிப்பதன் மூலம் உடனடி நிதி நிவாரணத்தை வழங்குகிறது.


இதற்குப் பதிலாக, இந்தியா தனது 90 சதவீத சுங்க வரி விதிப்பு முறைகளைத் தாராளமயமாக்கும். அதன்படி, முதல் ஆண்டில் 10,000 யூனிட்டுகள் என்ற ஒதுக்கீட்டின்கீழ், உயர் ரக பிரிட்டிஷ் கார்களுக்கான சுங்க வரிகள் 110 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகக் குறைக்கப்படும். மேலும், ஐந்தாம் ஆண்டில், ஆண்டுக்கு 37,000 யூனிட்டுகள் என்ற ஒதுக்கீட்டுடன் இந்தக் கார்களுக்கான சுங்க வரிகள் 10 சதவீதமாகக் குறையும். 2025-ல் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப ஒப்பந்தத்தின் கீழ், எஃகுத் துறை 10 முதல் 18 சதவீதம் வரையிலான சுங்க வரிகளிலிருந்து பயனடையும் நிலையில் இருந்ததுடன், இந்தியாவின் 893 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான எஃகு வர்த்தகத்திற்கு வரி இல்லா அணுகலை நோக்கி நகரும் என்றும் திட்டமிடப்பட்டிருந்தது.


இருப்பினும், இங்கிலாந்தின் எஃகு வர்த்தக நடவடிக்கைகளில் சமீபத்தில் ஏற்பட்ட மாற்றம், சந்தை அணுகலுக்கான விதிகளை மாற்றியமைக்கிறது. உலகளாவிய கட்டணமில்லா இறக்குமதி வரம்புகளை 51 சதவீதம் குறைத்து, ஒதுக்கீட்டை மீறியதற்கான அபராதத்தை 50 சதவீத கட்டணமாக இரட்டிப்பாக்கியதன் மூலம், இங்கிலாந்து தனது எல்லைகளைச் சுற்றி எஃகு மீது ஒரு வலுவான வரித் தடையை உருவாக்கியுள்ளது. இங்கிலாந்தின் எஃகு இறக்குமதிகளில் ஐரோப்பிய ஒன்றியம் மிகப்பெரிய பங்கைக் கொண்டிருந்தாலும், இந்தியா தொடர்ந்து 6 சதவீத சிறிய ஆனால் நிலையான சந்தைப் பங்கைக் கொண்டிருந்தது. இந்த புதிய எஃகு கட்டமைப்பின்கீழ், இந்தியாவின் ஏற்றுமதிகள் இந்தியாவின் உள்நாட்டு ஒதுக்கீட்டிற்குள் இருக்கும் வரை, அவை பூஜ்ஜிய சதவீத வரியில் சுங்க அனுமதி பெறுகின்றன.


இந்தியாவின் எஃகு ஏற்றுமதியில் சுமார் 484 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான தரநிலை வகை 1 சூடான உருளைத் தகடுகள், மூலப்பொருட்கள் மற்றும் சிறப்பு உலோகக் கலவைக் கம்பிகள் அடங்கியுள்ளன. இவற்றை உற்பத்தி செய்யும் திறன் பிரிட்டிஷ் எஃகு ஆலைகளுக்கு இல்லை என்பதால், பிரிட்டன் (இங்கிலாந்து) துருப்பிடிக்காத எஃகுக் கம்பிகள் மற்றும் கம்பிச் சுருள்கள் போன்ற 11 குறிப்பிட்ட சரக்குக் குறியீடுகளைப் பாதுகாப்பு வரம்பிலிருந்து நீக்கி, எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இன்றி இந்தியாவிலிருந்து அத்தகைய ஏற்றுமதிகளை அனுமதித்தது.


இருப்பினும், தரமான வகை-1 கொண்ட சூடான உருளைத் தகடுகள் போன்ற 188 வரி விதிப்புப் பிரிவுகளில் உள்ள மீதமுள்ள 15 சதவீதம், தற்போது ஆண்டுக்கு வெறும் 33,456 டன்கள் என்ற கடுமையான நாட்டுக்குரிய ஒதுக்கீட்டின் (CSQ) கீழ் முடக்கப்பட்டுள்ளது. இந்திய ஏற்றுமதியாளர்கள் இந்தக் காலாண்டிற்கான தங்களின் பிரத்யேக நாட்டுக்குரிய ஒதுக்கீட்டை முழுமையாகப் பயன்படுத்தினால், 50 சதவீத அபராத வரி விதிக்கப்படுவதற்கு முன்பு, கூடுதல் ஏற்றுமதிகளை வரி ஏதுமின்றிப் பெறுவதற்காக, அவர்கள் மற்ற நாடுகளுடன் ஒரு பகிரப்பட்ட உலகளாவிய இருப்புத் தொகுப்பில் போட்டியிட வேண்டியிருக்கும்.


இந்தக் கட்டமைப்பின் கீழ் இந்தியாவின் 85 சதவீத அடிப்படை வர்த்தகம் பாதிக்கப்படவில்லை என்பது ஒரு நல்ல செய்தி என்றாலும், ஜூலை 1 முதல் மொத்த உலகளாவிய இறக்குமதியை 18.3 மில்லியன் டன்களாகக் கட்டுப்படுத்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரே நேரத்தில் விதிக்கப்பட்ட உச்சவரம்புடன் சேர்த்துப் பார்க்கும்போது இது ஒரு சவாலாகிறது. புதிய ஐரோப்பிய ஒன்றிய விதிமுறையின் கீழ், தற்போது 25 சதவீதமாக உள்ள ஒதுக்கீட்டிற்கு அப்பாற்பட்ட சுங்க வரி, 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடு சார்ந்த ஒதுக்கீடு அறிவிப்பின்படி, ஐரோப்பாவிற்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் 3.2 மில்லியன் டன் எஃகு ஏற்றுமதியில், ஹாட் ரோல்டு காயில் (Hot Rolled Coil - வகை 1) எஃகு ஏற்றுமதிக்கான ஒதுக்கீட்டில் 33 சதவீதக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்தியா மாற்று இடங்களைத் தேட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகலாம்.


ஐரோப்பாவிலிருந்து திசை திருப்பப்பட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகக்கூடிய கூடுதல் எஃகுக்கு, இந்தியா-இங்கிலாந்து தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தால் இப்போது ஒரு பாதுகாப்பான புகலிடத்தை வழங்க இயலாமல் உள்ளது. சிறப்பு பொறியியல் உதிரிபாகங்கள் (specialised downstream engineering components) மீது 18 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளதாலும், அமெரிக்காவில் மூலப்பொருட்களுக்கான எஃகு, தளராத 25 சதவீத பிரிவு 232 வரிச்சுவருக்குப் பின்னால் சிக்கியுள்ளதாலும், இந்திய எஃகு ஏற்றுமதியாளர்கள் ஏற்கனவே உலகளாவிய ஏற்றுமதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ​​இந்தியா-இங்கிலாந்து தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் அடிப்படை வர்த்தக அளவைப் பாதுகாக்க முடிந்தது. ஆனால், உலகின் மிகப்பெரிய நுகர்வோர் கூட்டமைப்புகள் ஒரே நேரத்தில் தங்கள் உள்நாட்டுத் தொழில்துறை தளங்களைப் பாதுகாக்க உள்நோக்கித் திரும்பும்போது ஏற்படும் பாதிப்பைத் தணிப்பதற்கு அது போதுமானதாக இருக்காது.


இதற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக, ஐக்கிய ராஜ்ஜியத்தின் கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (Carbon Border Adjustment Mechanism (CBAM)) 2027 ஜனவரி 1 அன்று அமலுக்கு வர உள்ளது. ஐக்கிய ராஜ்ஜியம் கார்பன் வரிகளை விதித்து, அது இந்தியாவைப் பாதிக்கக்கூடிய பட்சத்தில், இந்தியாவும் பதிலுக்கு வரிகளை விதிக்கலாம் என்ற சட்டப்பூர்வமான உத்தரவாதத்தை இந்த தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் (FTA) வழங்குவதால், ஐக்கிய ராஜ்ஜியத்தின் கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (CBAM) ஒப்பந்தம் தொடர்பாகத் தனது கொள்கைகளை வகுக்க இந்தியாவிற்குச் சற்று அவகாசம் கிடைக்கிறது. இருப்பினும், விரிவான மற்றும் இலட்சியவாத தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்களின் நடைமுறையில் முடிவுக்கு வந்துவிட்டது என்பதே இந்தப் புதிய புவிசார்-பொருளாதார உலகின் யதார்த்தமாகும்.


அமெரிக்காவின் சுங்கவரிகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான விதிமுறைகளை பெருமளவில் பின்பற்றி, சுங்கவரி அல்லாத தடைகள் மற்றும் பாதுகாப்புவாதக் கொள்கைகளின் பரவலால் பெருகிய முறையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதன் பொருள், நவீன தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் (FTA) இனி தடையற்ற, விரிவான சந்தை அணுகலுக்கு உத்தரவாதம் அளிப்பதில்லை. மாறாக, அவை அதிக பரிவர்த்தனை சார்ந்தவையாகவும், வரையறுக்கப்பட்ட நோக்கத்தைக் கொண்டவையாகவும் உள்ளன. பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைக்கத் தனது ஏற்றுமதிகளைத் தொடர்ந்து விரிவுபடுத்த வேண்டியுள்ள இந்தியா, இந்தப் புதிய உலக ஒழுங்கில் செழித்து வளர, விலக்குகளையும் நம்பகமான சந்தை அணுகலையும் பெறுவதற்காகத் தனது புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார செல்வாக்கை தீவிரமாக மறுசீரமைக்க வேண்டும்.


எழுத்தாளர் தக்ஷஷிலா நிறுவனத்தில் புவிப் பொருளியல் ஆராய்ச்சிப் பகுப்பாய்வாளராகப் பணியாற்றுகிறார்.


Original Link: The bittersweet realities of the India-UK FTA.

Share:

அமெரிக்க - ரஷ்யா பொருளாதாரத் தடைகள் மசோதா : முன்மொழியப்பட்ட 100% வரி மற்றும் அது இந்தியாவிற்கு ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து... -சுகல்ப் ஷர்மா

ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் தொடர்பான மசோதாவின் திருத்தப்பட்ட பதிப்பு, ரஷ்ய எரிபொருளை (எண்ணெய் மற்றும் எரிவாயு) பெருமளவில் வாங்கும் நாடுகளின்மீது கூடுதல் வரிகளை விதிக்கப் பரிந்துரைக்கிறது. இது இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பு, கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் வாஷிங்டனுடன் நடைபெற்றுவரும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் குறித்துக் கவலைகளை எழுப்பியுள்ளது. 


எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி மூலம் ரஷ்யாவின் வருவாயைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு, மறைந்த அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் (Lindsey Graham) ஆதரித்த மசோதா, தற்போது ஒரு புதிய வடிவத்தைப் பெற்றுள்ளது. கடந்த வாரம் கிரஹாம் திடீரென காலமானதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமையன்று அமெரிக்க செனட் சபையைச் சேர்ந்த இரு கட்சிகளையும் (ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகள்) சார்ந்த செனட்டர்கள் குழு ஒன்று, ரஷ்யா மீதான தடைகள் மசோதாவின் திருத்தப்பட்ட கட்டமைப்பை அறிமுகப்படுத்தியது. ரஷ்ய கச்சா எண்ணெயின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி சந்தையான இந்தியா உட்பட, ரஷ்யாவின் எரிபொருளை அதிக அளவில் வாங்கும் நாடுகளின்மீது கடுமையான வரிகளை விதிப்பதற்கான அம்சங்கள் இந்தத் திருத்தப்பட்ட மசோதாவில் இடம்பெற்றுள்ளன.


இந்த அசல் மசோதா ஒரு வருடத்திற்கும் மேலாக ஆரம்பக் கட்டங்களைத் தாண்டத் தவறியதைக் கருத்தில் கொண்டு, இந்த மசோதா அதன் தற்போதைய வடிவத்தில் சட்டமாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றாலும், முன்மொழியப்பட்ட இந்தச் சட்டம் நிச்சயமாக இந்தியாவுக்குக் கவலையளிக்கும் ஒரு காரணமாக அமையும்.


குறிப்பாக, இந்தப் புதிய மசோதா அசல் மசோதாவின் நீர்த்துப்போன பதிப்பாகும். மேலும், இது வாஷிங்டனிடமிருந்து சில மாற்று வழிகளுக்கும் சலுகைகளுக்கும் இடமளிக்கிறது. ஒருவேளை இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், இந்தியா அவற்றுக்காக அழுத்தம் கொடுக்கும் எனத் தொழில்துறை வல்லுநர்களும் ஆய்வாளர்களும் எதிர்பார்க்கின்றனர்.

புதிய மசோதாவின் பரிந்துரைகள் 


நிலுவையில் இருந்த அசல் மசோதாவில், ரஷ்ய எரிபொருளை வாங்கும் அனைத்து நாடுகளின் மீதும் 500% என்ற அளவில் பொதுவான வரியை விதிக்கும் முன்மொழிவுக்கு மாறாக, இந்த மசோதாவின் புதிய பதிப்பு, ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை வாங்கும் முதல் ஐந்து பெரிய நாடுகளின்மீது 100% வரை வரிகளை விதிக்கப் பரிந்துரைக்கிறது.

முன்மொழியப்பட்ட இந்த வரிக்குறைப்பு எழுத்துப்பூர்வமாக அர்த்தமுள்ளதாகத் தோன்றினாலும், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ள இந்தியாவிற்கு இந்த உச்சவரம்பு இன்னும் மிக அதிகமாகவே உள்ளது. முக்கியமாக, இந்தியாவின் பார்வையில், இந்த புதிய மசோதா அதன் விதிகளைப் பயன்படுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கும் அதிகாரத்தை அமெரிக்க அதிபருக்கு வழங்குகிறது.


மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி விநியோகப் பற்றாக்குறை சூழ்நிலையில், இந்தியாவைப் பொறுத்தவரை ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை அர்த்தமுள்ள வகையில் குறைப்பது என்பது ஒரு சாத்தியமான வழி அல்ல. மேற்கு ஆசியாவிலிருந்து எரிசக்தி வரத்து தடைபட்டுள்ள நிலையில், உலகச் சந்தையிலிருந்து மில்லியன் கணக்கான பீப்பாய் ரஷ்ய எண்ணெயை அகற்றுவது வாஷிங்டனுக்குக் கூட விவேகமானதாக இருக்காது. அது ஏற்கனவே கவலைக்குரியதாக உள்ள விநியோகச் சூழலை மேலும் மோசமாக்குவதுடன், நிச்சயமாக எண்ணெய் விலையைகளை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தும். இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் இடைக்காலத் தேர்தல்களுக்கு முன்னதாக, டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் இதை நிச்சயமாக விரும்பமாட்டாது.


இந்த மசோதாவை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என சில அமெரிக்க சட்டமியற்றுபவர்கள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், டிரம்ப் நிர்வாகம் இதற்கு ஆதரவாக இருப்பதாகக் கூறப்பட்டாலும், தற்போது நிலவும் எரிசக்தி சந்தை நிலவரங்களும் மேற்கு ஆசிய மோதலும் எதிர்பார்க்கப்படும் காலக்கெடு குறித்து நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்துகின்றன. இருப்பினும், இந்தியா தனது எரிசக்தி தொடர்பான கவலைகளை வாஷிங்டனிடம் எடுத்துரைக்க நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும். கடந்த ஆண்டு இந்த மசோதா முதன்முதலில் முன்மொழியப்பட்டபோதும் இந்தியா அவ்வாறே செய்தது.


இந்தியாவின் சவால்


"இந்தியா நிச்சயமாக இதற்கான விலக்கு கோரி வலியுறுத்தும். மேலும், இந்தியாவுக்கு நிலைமை எவ்வளவு தீவிரமாக இருக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு, அமெரிக்கா ஒரு நட்புரீதியான சலுகையாக இதற்கு ஒப்புக்கொள்வது அர்த்தமுள்ளதாக இருக்கும்," என்று அபுதாபியைச் சேர்ந்த எரிசக்தி ஆய்வாளர் நடாலியா கடோனா 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்'ஸிடம் கூறினார்.


இந்த மசோதா இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்கு முட்டுக்கட்டையாக அமையக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆரம்பக்கட்ட பின்னடைவுகள் மற்றும் தடைகளுக்குப் பிறகு பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் கண்டுள்ள வாஷிங்டன் (அமெரிக்கா) மற்றும் புது தில்லி (இந்தியா) ஆகிய இரு தரப்பினருக்கும் இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். முன்மொழியப்பட்ட சட்டத்தின்கீழ் வரிவிதிப்புகளை (tariffs), ஒரு பேராயுதமாக வாஷிங்டன் பயன்படுத்தக்கூடும் என்பதையும் மறுக்க முடியாது. அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கை இந்தியாவின் மீது கூடுதல் அழுத்தத்தை உருவாக்கும். ஏனெனில், எண்ணெய் மீது தடைகளுக்கு உட்படாத வரையில், யார் சிறந்த விலையை வழங்கினாலும் அதனிடமிருந்து எண்ணெயை வாங்குவதற்குத் தனக்குச் சுதந்திரம் உண்டு என்று இந்தியா தொடர்ந்து கூறிவருகிறது.


"ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கும் நாடுகள்மீது அமெரிக்கா விதிக்க முன்மொழிந்துள்ள வரிகளை, இன்றைய மிகவும் நிலையற்ற உலகளாவிய எண்ணெய் சந்தையின் பின்னணியில் பார்க்க வேண்டும். இந்தியாவின் கண்ணோட்டத்தில், குறிப்பாக ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் ஏற்பட்ட இடையூறுகளுக்குப் பிறகு, ரஷ்ய கச்சா எண்ணெய் நாட்டின் மிக வலிமையான எரிசக்திப் பாதுகாப்பு அரணாக மாறியுள்ளது. ரஷ்ய கச்சா எண்ணெய், இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் அதிக சுத்திகரிப்பு இயக்க விகிதங்களைப் பராமரிக்கவும், தடையற்ற எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்யவும், மேலும் பல ஆசிய சுத்திகரிப்பு அமைப்புகள் சந்தித்த இடையூறுகளைத் தவிர்க்கவும் உதவியுள்ளது," என்று கச்சாப் பொருள் சந்தை பகுப்பாய்வு நிறுவனமான 'கேப்லர்' (Kpler) -ன் மாதிரி உருவாக்கம் மற்றும் சுத்திகரிப்பு மேலாளர் சுமித் ரிடோலியா கூறினார்.






அதே அளவு, நம்பகத்தன்மை மற்றும் பொருளாதாரரீதியாக ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு இணையாகச் செயல்படக்கூடிய, வேறு எந்த மாற்று விநியோகர்களும் இல்லை. இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ரஷ்ய கச்சா எண்ணெயே மிகவும் நடைமுறைக்கு உகந்த மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த விநியோக ஆதாரமாக உள்ளது. தற்போதைய சந்தை நிலவரப்படி, இவ்வளவு பெரிய அளவிலான ரஷ்ய எண்ணெய் சந்தையிலிருந்து விரைவில் வெளியேறிவிடும் என்று கருத இடமில்லை என்று ரிடோலியா கூறினார்.


மேற்கு ஆசிய நெருக்கடிக்கு மத்தியில், வளைகுடாப் பகுதியிலிருந்து எண்ணெய் விநியோகம் வெகுவாகக் குறைவதால், ரஷ்ய கச்சா எண்ணெய் இந்தியாவின் மிக வலிமையான எரிசக்திப் பாதுகாப்பு அரணாக உருவெடுத்தது. கேப்ளர் (Kpler) தரவுகளின்படி, ஜூன் மாதத்தில் இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி ஒரு நாளைக்கு சுமார் 2.6 மில்லியன் பீப்பாய்களாக (bpd) உயர்ந்தது. இது இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் பாதிக்கும் மேலாகும். மேலும் மதிப்பீடுகளின்படி, ஜூலை மாத இறக்குமதி அளவை சமன் செய்துள்ளதுடன், ஜூன் மாத அளவுகளுக்குச் சமமாகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ இருக்கலாம்.


இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைகளில் 88%-க்கும் மேலானவற்றை இறக்குமதியையே சார்ந்துள்ளது. மேலும், கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிக்கு ரஷ்யாவே முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது. 2022 பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததைத் தொடர்ந்து, மேற்கத்திய நாடுகளில் பெரும்பாலானவை ரஷ்ய கச்சா எண்ணெயைப் புறக்கணித்த நிலையில், ரஷ்யா தனது எண்ணெயை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்குத் தள்ளுபடிகளை வழங்கத் தொடங்கியது. இந்திய சுத்திகரிப்பாளர்கள் இந்த வாய்ப்பை விரைவாகப் பயன்படுத்திக்கொண்டனர். இதன் விளைவாக, முன்னர் இந்தியாவிற்கு ஒரு சிறிய அளவிலான எண்ணெய் விநியோகராக இருந்த ரஷ்யா, பாரம்பரிய மேற்கு ஆசிய விநியோகர்களைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஆதாரமாக உருவெடுத்தது.




மேற்கு ஆசியப் போர் தொடங்குவதற்கு முந்தைய மாதங்களில், ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் (Rosneft) மற்றும் லுகோயில் (Lukoil) மீது அமெரிக்கா தடைகளை விதித்ததாலும், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாலும், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் குறைந்திருந்தது. இந்தியா மீதான தனது 25% கூடுதல் தண்டனை வரியை ரத்து செய்வதற்கு, ரஷ்ய எண்ணெய் இறக்குமதியில் ஒரு குறிப்பிடத்தக்க குறைப்பை அமெரிக்கா ஒரு முன்நிபந்தனையாக வைத்தது. ஆனால், ஹார்முஸ் நீரிணை திறம்பட மூடப்பட்டதால் மேற்கு ஆசியாவிலிருந்து விநியோகம் குறைந்தபோது, ​​ரஷ்ய எண்ணெய் இந்தியாவுக்கு ஒரு முக்கியமான மாற்று ஆதாரமாக அமைந்தது. மேலும், அதன் அளவு வரலாற்று உச்சத்தை எட்டியது.


திருத்தப்பட்ட ரஷ்யா மீதான பொருளாதாரத் தடை மசோதாவின் சாத்தியக்கூறு


தற்போதுள்ள முக்கிய கேள்வி என்னவென்றால், முன்மொழியப்பட்ட பொருளாதாரத் தடை மசோதா அதன் தற்போதைய வடிவிலேயே நிறைவேற்றப்படுமா என்பதுதான். அப்படியானால் அது எப்போது சட்டமாக மாறும் என்பதும் மற்றொரு கேள்வியாக உள்ளது. குறிப்பாக, ஹார்முஸ் நீரிணை நெருக்கடியால் ஏற்பட்ட சந்தையின் ஏற்ற இறக்கம் மற்றும் நெருக்கடியின் பின்னணியில், முன்மொழியப்பட்ட இந்தச் சட்டத்தின் எதிர்காலம் குறித்து எரிசக்தி சந்தை வல்லுநர்கள் ஐயத்துடன் உள்ளனர். மேலும், இந்த மசோதா சட்டமானாலும் கூட, அதிபரின் விலக்கு அளிக்கும் அதிகாரம் (presidential waiver) மற்றும் மசோதாவில் உள்ள பிற மாற்றங்கள், அமெரிக்க அரசாங்கம் விதிவிலக்குகளை அளிப்பதற்கும், நிலவும் சூழ்நிலையை மிகவும் நடைமுறைக்கு ஏற்றவாறு கையாள்வதற்கும் போதுமான வாய்ப்பை வழங்குகின்றன.


"இந்த மசோதா பொருளாதாரரீதியாக உண்மையானதா என்பதே கேள்வி. இந்த மசோதா நிறைவேறும் என்றோ அல்லது அதன் தற்போதைய வடிவத்தில் நீடிக்கும் என்றோ நான் நினைக்கவில்லை. முதலாவதாக, ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் எதிரான 500% வரிவிதிக்கும் அச்சுறுத்தலிலிருந்து, மிகப்பெரிய ஐந்து நிறுவனங்களுக்கு மட்டுமே அதிகபட்சம் 100% வரியாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு வரி விலக்குகள் மற்றும் அமெரிக்க அதிபரின் தள்ளுபடிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. அரசியல் முழக்கம் ஏற்கனவே பொருளாதார யதார்த்தத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டு வருகிறது என்பதை இது காட்டுகிறது," என்று கடோனா கூறினார்.


"இரண்டாவதாக, இந்த மசோதா கொண்டுவரப்படும் நேரம் மிகவும் மோசமானது. வளைகுடாப் பகுதியில் மீண்டும் ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில், ரஷ்ய எண்ணெய் விநியோகத்தைக் குறைக்க முயற்சிப்பது மிகுந்த ஆபத்தானது. பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை ஏற்கனவே ஒரு பேரலுக்கு 85 டாலருக்கும் அதிகமாக வர்த்தகமாகிறது. அதே நேரத்தில், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் போக்குவரத்து கடுமையாகக் குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில், ஒரு நாளைக்கு பல மில்லியன் பேரல்கள் ரஷ்ய விநியோகத்தை அகற்றுவது அல்லது அச்சுறுத்துவது மற்றொரு விலை உயர்வுக்கு வழிவகுக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.


ரிட்டோலியா இதை ஆமோதித்து, ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை கணிசமாகக் குறைக்கும் வகையில் 100% இரண்டாம் நிலை வரிவிதிப்புகள் அமல்படுத்தப்பட்டால், சந்தை முதலில் ஒரு எளிய கேள்விக்கு பதிலளிக்க வேண்டியிருக்கும். அதற்கான மாற்று எண்ணெய் எங்கிருந்து வரும்? உபரி உற்பத்தித் திறன் குறைவாக இருப்பதாலும், ஹார்முஸ் நீரிணை அபாயங்கள் இன்னும் அதிகமாக இருப்பதாலும், மாற்று விநியோகங்கள் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாலும், எண்ணெய் விலைகளில் கடுமையான உயர்வைத் தூண்டாமல், ரஷ்யாவின் அளவுகளைப் பெருமளவில் ஈடுசெய்வது மிகவும் சவாலாக இருக்கும் என்று கூறினார்.


முன்னாள் வர்த்தக அதிகாரியும், ஜி.டி.ஆர்.ஐ (GTRI) சிந்தனைக் குழுவின் தலைவருமான அஜய் ஸ்ரீவஸ்தவாவின் கூற்றுப்படி, அசல் மசோதா 15 மாதங்களுக்கும் மேலாக அமெரிக்க செனட்டில் எந்த நடவடிக்கையும் இன்றி கிடப்பில் இருந்ததால், இந்தியா கவலைப்பட அதிகக் காரணம் இல்லை. இது, இத்தகைய பரந்த சுங்கவரி அதிகாரங்களுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆதரவு குறைவாகவே இருப்பதைக் காட்டுகிறது. திருத்தப்பட்ட மசோதாவும் இதே போன்றதொரு நிலையைச் சந்திக்கக்கூடும் என்று அவர் ஒரு குறிப்பில் கூறினார். மேலும், பரஸ்பர சுங்கவரி முறை மற்றும் பிரிவு 122 சுங்கவரிகள் ஆகிய இரண்டையும் ரத்து செய்த சமீபத்திய அமெரிக்க உச்சநீதிமன்றத் தீர்ப்புகள், நிறுவப்பட்ட வர்த்தகச் சட்டங்களுக்கு வெளியே சுங்கவரிகளைப் பயன்படுத்துவதில் உள்ள சட்ட வரம்புகளை அடிக்கோடிட்டுக் காட்டுவதால், அதன் வெற்றி வாய்ப்புகள் மேலும் பலவீனமடைந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.


“இந்தியா தனது எரிசக்தி கொள்கையைத் தொடர்ந்து தேசிய நலன் மற்றும் எரிசக்தி பாதுகாப்பின் அடிப்படையில் அமைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். ரஷ்ய எண்ணெய், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், நிலையான எரிசக்தி விநியோகத்தைப் பாதுகாக்கவும் உதவியுள்ளது. இந்த மசோதா சட்டமாவதற்கும், அமல்படுத்தப்படுவதற்கும் உள்ள வாய்ப்புகள் குறைவாகவே தெரிகின்றன. அப்படியே சட்டமானாலும், வெளிப்புற அரசியல் அழுத்தம் தனது எரிசக்தி கொள்கையைத் தீர்மானிக்க அனுமதிப்பதற்குப் பதிலாக, சீனாவைப் போலவே இந்தியாவும் ரஷ்ய எண்ணெயைத் தொடர்ந்து வாங்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.


Original Link: US Russia sanctions bill: The proposed 100% tariff and what it could mean for India.

Share:

"ஒரே நாடு, ஒரே தேர்தல்" முறை, சிதைந்து போனதை சரிசெய்யாது. -விஜய் கேல்கர், அஜித் ரானடே

தேர்தல்களின் உண்மையான குறைபாடுகள் கண்டுகொள்ளப்படாமல் உள்ளன. வரம்பற்ற கட்சிச் செலவுகள், வாக்காளர்களுக்குப் பண விநியோகம், அரசியலைக் குற்றமயமாக்குதல் மற்றும் அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவை முக்கியமானவை. இதுபோன்ற குறைபாடுகளைக் குறைக்க  குறிப்பிட்ட சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன.


இந்தியாவில், மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதை நோக்கமாகக் கொண்ட அரசியலமைப்பின் 129-ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வரவுள்ளது. இந்த மசோதா, புதிய 82A-வது அரசியலமைப்புச் சட்டப்பிரிவை சேர்ப்பதுடன், 83 மற்றும் 172-வது சட்டப்பிரிவுகளிலும் திருத்தங்களை மேற்கொள்ள முன்வைக்கிறது. இந்த மசோதா நிறைவேறுவதற்கு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு பெறவேண்டும். மேலும், குறைந்தபட்சம் பாதி மாநிலங்களின் சட்டப்பேரவைகளின் ஒப்புதலும் (Ratification)  முக்கியமான ஒன்றாகும். முன்னாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழுவின் (High-Level Committee (HLC)) பரிந்துரையைத் தொடர்ந்து, அரசு இந்த முன்னெடுப்பை மேற்கொள்ளவதற்கு உறுதியாக உள்ளது. இது போன்ற பெரிய அளவிலான அரசியலமைப்புச் சட்டத் தலையீடு மேற்கொள்ளப்படுவதால், அதனால் கிடைக்கும் எனக் கூறப்படும் நன்மைகள் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியது முக்கியமான ஒரு நடவடிக்கையாகும்.


உயர்மட்டக் குழுவின் அறிக்கை நான்கு தூண்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது: செலவு சேமிப்பு, மாதிரி நடத்தை விதிகள் (Model Code of Conduct) காரணமாக ஏற்படும் 'கொள்கையை பற்றி முடிவெடுப்பதில்  உள்ள தேக்க' (policy paralysis) நிலையிலிருந்து விடுதலை, அரசு ஊழியர்கள் மீதான பணிச்சுமை குறைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிப் பலன் ஆகியவை ஆகும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்திற்கு பொருளாதார அடிப்படையாக முன்வைக்கப்படும் முக்கிய வாதம் என்னவெனில், பிராச்சி மிஸ்ரா, என். கே. சிங் மற்றும் அவர்களுடன் பணியாற்றி வரும் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின்படி, ஒரேநேரத்தில் தேர்தல்கள் நடைபெறும் காலகட்டங்களுக்குப் பிறகு, நாட்டின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 1.5 சதவீதப் புள்ளிகள் அதிகமாக உள்ளது என்பதாகும். இருப்பினும், இந்த ஒரு ஆய்வின் முடிவை மட்டும் அடிப்படையாகக் கொண்டு எந்த முடிவையும் எடுக்காமல், அதனை மிகுந்த கவனத்துடனும் ஆழமான ஆய்வுடனும் பரிசீலிக்க வேண்டும்.


இந்த ஆய்வு, ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடைபெற்ற காலகட்டமான 1952–1967 (ஓரளவு 1980-களின் நடுப்பகுதி வரை) மற்றும் அதற்குப் பிறகு வெவ்வேறு காலங்களில் தேர்தல்கள் நடைபெற்ற காலகட்டத்தை ஒப்பிடுகிறது. ஆனால், புள்ளியியல் ஆய்வுகளுக்குச் செல்லும் முன், வரலாற்று உண்மைகளைப் பார்க்க வேண்டும். ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடைபெற்ற அந்தக் காலகட்டமே, பொருளாதார வல்லுநர்கள் “இந்து வளர்ச்சி விகிதம்” (Hindu Rate of Growth)  என்று குறிப்பிடும் காலமாக இருந்தது. அப்போது இந்தியாவின் ஆண்டு பொருளாதார வளர்ச்சி  3.5% மட்டுமே இருந்தது. மேலும், அது உரிமம்–அனுமதி ஆட்சி (Licence Raj), இறக்குமதி மாற்றுக் கொள்கை (Import Substitution) மற்றும் மூடிய பொருளாதாரம் (Closed Economy) ஆகியவற்றின் காலமாகவும் இருந்தது. மாறாக, இந்தியா உண்மையான அதிக பொருளாதார வளர்ச்சியை அடைந்த காலம், வெவ்வேறு காலங்களில் தேர்தல்கள் நடைபெற்ற  காலகட்டத்தில்தான் வந்தது. 2003 முதல் 2011 வரை, ஆண்டுக்கு 8%–9% என்ற உயர்ந்த பொருளாதார வளர்ச்சி பதிவானது. அந்தக் காலத்தில், மாநிலத் தேர்தல்கள் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு மாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருந்தன. எனவே, ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்படுவதால்தான் பொருளாதார வளர்ச்சி ஏற்படுகிறது என்ற வாதத்தை இந்த வரலாற்று உண்மைகள் எளிதில் ஏற்க முடியாத நிலையை உருவாக்குகின்றன. மேலும், வர்த்தக தாராளமயமாக்கல் (Trade Liberalisation), தகவல் தொழில்நுட்பத் துறையின் (IT) வளர்ச்சி, உலகளாவிய மூலதனப் பரிமாற்றங்கள் (Global Capital Flows), நிதி தொடர்பான ஆழப்படுத்தல் (Financial Deepening) மற்றும் 1991-ஆம் ஆண்டு பொருளாதாரச் சீர்திருத்தங்கள் போன்ற மிகப் பெரிய காரணிகளை புறக்கணித்து, தேர்தல் முறையை மட்டும் பொருளாதார வளர்ச்சிக்கான காரணமாகக் கூறமுடியாது. அதுமட்டுமல்லாமல், அந்த ஆய்வின் முடிவுகளிலேயே, பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதற்கான ஒரு காரணமாக அதிக நிதிப் பற்றாக்குறை (Higher Fiscal Deficits) மற்றும் அரசின் அதிக செலவினங்கள்  இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இது உண்மையான கட்டமைப்புரீதியான பொருளாதார முன்னேற்றமா? அல்லது அரசியல் நோக்கத்திற்காக தேர்தலை முன்னிட்டு அரசுச் செலவுகள் அதிகரிக்கும் ‘அரசியல் வணிகச் சுழற்சியா என்பதன் ஒரு சுருக்கப்பட்ட வடிவமா என்ற கேள்வி எழுகிறது. இந்தியாவின் சொந்த வரலாற்று அனுபவத்திற்கே முரணாக இருக்கும் வெறும் தொடர்பு (Correlation) அடிப்படையிலான ஆய்வு முடிவுகளை வைத்து, இது போன்ற மிகப் பெரிய அரசியலமைப்புச் சட்ட மாற்றத்தை நியாயப்படுத்த முடியாது.


தேர்தல் செலவினங்களைக் குறைக்கும் என்ற வாதமும், ஒரு எளிய கேள்வியை எழுப்பும்போது பலவீனமடைகிறது. உண்மையில் தேர்தலுக்காக அதிகமாகச் செலவிடுவது யார்? தேர்தல் ஆணையத்தின் கணக்குகளின்படி, அரசின் தேர்தல் செலவு, அதன் மொத்த பட்ஜெட்டில் 0.1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. எனவே, "அதிகப்படியான தேர்தல் செலவு" (excessive) வேட்பாளர்களாலும் கட்சிகளாலும் செய்யப்படுகிறது, அரசால் செய்யப்படவில்லை. ஆனால், இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் என்னவெனில், தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தணிக்கை செய்யப்பட்ட (Audited) கணக்குகளின்படி, வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாகக் காட்டும் தேர்தல் செலவு, அனுமதிக்கப்பட்ட உச்சவரம்பில் (Permissible Ceiling) சராசரியாக 50% மட்டுமே ஆகும். ஆவணங்களின் அடிப்படையில் பார்த்தால், வேட்பாளர்கள் அதிகமாகச் செலவிடவில்லை. மாறாக, குறைவாகவே செலவிட்டதாகக் காட்டுகின்றனர். இதிலிருந்து தவிர்க்க முடியாத ஒரு முடிவு வெளிப்படுகிறது. உண்மையான தேர்தல் செலவினம் அதிகாரப்பூர்வ கணக்குகளில் இடம்பெறவில்லை. அது கணக்கில் வராத, கண்காணிக்க முடியாத கறுப்புப் பணமாக (Black Money) செலவிடப்படுகிறது. சென்டர் ஃபார் மீடியா ஸ்டடீஸ் (Centre for Media Studies (CMS)) மதிப்பீட்டின்படி, 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மட்டும் ரூ.1,00,000 கோடிக்கும் அதிகமான கறுப்புப் பணம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிய வருகிறது. இது போன்ற பிரச்சினையை தேர்தல் கால அட்டவணையை (Electoral Calendar) மாற்றுவதன் மூலம் தீர்க்க முடியாது. ஏனெனில், பணம், அரசியல் ஆதரவு மற்றும் சலுகை வழங்கும் நடைமுறை (Patronage), வெளிப்படைத்தன்மையின்மை (Opacity) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட அதே அரசியல்–பொருளாதார அமைப்பு, தேர்தல்கள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்றாலும் அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்றாலும் மாறுவதில்லை. எனவே, "ஒரே நாடு, ஒரே தேர்தல்"   தேர்தல் செலவினத்தைக் குறைப்பதில்லை. மாறாக, அந்தச் செலவினத்தை ஒரே காலகட்டத்தில் குவிப்பதற்கே வழிவகுக்கிறது.

தேர்தல் நடத்தை விதிகள் குறித்து: தேர்தல் நடத்தை விதிகள், ஒவ்வொரு தேர்தலுக்கும் 45 முதல் 60 நாட்கள் வரை அரசாங்கம் புதிய அறிவிப்புகளை வெளியிட கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. இந்தியாவில் மாநிலத் தேர்தல்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதால், ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் சில பகுதிகள்  நான்கு மாதங்களுக்கு தேர்தல் நடத்தை விதிகளின்கீழ் இருப்பதாக நிதி ஆயோக் மதிப்பிடுகிறது. தேர்தல் அல்லாத தேர்தல் விதிகளின்கீழ், அந்தத் தொடர்ச்சியான கட்டுப்பாடு ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒரு தேசிய கட்டுப்பாடக மாறுகிறது. இது ஒவ்வொரு மாநிலத்திலும் வளர்ச்சித் திட்ட அறிவிப்புகளை ஒரே நேரத்தில் நிறுத்துகிறது. இந்த இடையூறு முற்றிலுமாக நீக்கப்படுவதில்லை. அது தேசிய அளவில்  நிகழும்போது,  கடுமையானதாக உள்ளது. இதை "கொள்கைக் கட்டுப்பாடு" என்று அழைப்பது, ஜனநாயகக் கட்டுப்பாட்டை நிர்வாகச் செயலிழப்புடன் குழப்பிக்கொள்வதாகும்.


ஆழமான ஆட்சேபனைகள் அரசியலமைப்பு தொடர்பானவையாகும். கேசவானந்த பாரதி வழக்கில், நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் சுதந்திரமான, நியாயமான தேர்தல்கள் ஆகியவை இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாகும் என்றும், அரசியலமைப்புத் திருத்தங்கள்கூட இந்த அடிப்படை கட்டமைப்பை மீற முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில், மூன்று குறிப்பிட்ட முரண்பாடுகள் எழுகின்றன. முதலாவதாக, நாடாளுமன்ற ஆட்சிமுறை என்பது கூட்டுப் பொறுப்புக் கொள்கையின்  அடிப்படையில் செயல்படுகிறது.  சட்டமன்றத்தின் நம்பிக்கையை பெற்றிருக்கும் வரை மட்டுமே ஒரு அரசு தொடரமுடியும். ஆனால், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையில் ஒரு அரசு தனது பெரும்பான்மையை இழந்தால், அதற்கு மக்கள் அளித்த சட்டபூர்வமான ஆணையின்றி (Legitimate Mandate) தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டிய நிலை அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சியை (President’s Rule) அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம். இந்த இரண்டுமே ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். எந்தவொரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்துடனும், அதற்கு மாற்றாக மற்றொரு கட்சிக்கு ஆதரவாக ஒரே நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றுக் கூறப்படும் ஒரு கூற்று, உயர் சட்ட மன்றத்தின் முன்மொழியப்பட்ட “கட்டமைப்பு நம்பிக்கையில்லாத் தீர்மானம்” (constructive no-confidence motion), ஜெர்மனியிலிருந்து பெறப்பட்டதாகும். மேலும் இது இந்தியாவின் நாடாளுமன்ற மரபைச் சிதைக்கிறது. விதி சட்டக் கொள்கை மையத்தின் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுவது போல, இது மக்கள் ஆதரவு இல்லாத நிலையிலும், சிறுபான்மை அரசுகள் பதவியில் தொடர  ஊக்கமளிக்கும்.


இரண்டாவதாக, முதல் ஒருங்கிணைந்த தேர்தல் சுழற்சியை  நடைமுறைப்படுத்துவதற்கு, பல மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கவோ அல்லது குறைக்கவோ வேண்டியிருக்கும். ஆனால், அரசியலமைப்பின் 83 மற்றும் 172-வது சட்டப்பிரிவுகளில் வேண்டுமென்றே  ஐந்து ஆண்டுகளுக்கு மேல் இல்லை (no longer) என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அரசியலமைப்புச் சபை, எந்த அரசின் பதவிக்காலமும் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கப்படக்கூடாது என்பதை உறுதிப்படுத்தவே இந்த வார்த்தைகளைச் சேர்த்தது. எனவே, புதிய மக்கள் ஆணை பெறாமல் பதவிக்காலத்தை நீட்டிப்பது, வாக்காளர்களுடன் செய்யப்பட்ட ஜனநாயக ஒப்பந்தத்தை (Voters’ Contract) மீறுவதாகும். அதேபோல், பதவிக்காலத்தைக் குறைப்பது, வாக்காளர்கள் வழங்கிய காலவரையறையை அவர்களிடமிருந்து பறிப்பதாகும். எந்த வழியிலும், மக்களின் விருப்பமே (Electorate’s Will) புறக்கணிக்கப்படுகிறது.


மூன்றாவதாக, ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்படுவது, மாநில அரசியல் கட்சிகளுக்கும், இந்தியாவின் கூட்டாட்சித் தன்மைக்கும் (Federal Character) கட்டமைப்புரீதியாக பாதகமானதாக அமையும். ஆய்வுகள், தேசிய மற்றும் மாநிலத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடைபெறும்போது “அலை விளைவு” (Wave Effect) தொடர்ந்து ஏற்படுவதை காட்டுகின்றன. வாக்காளர்கள் தேசிய மற்றும் மாநில அளவிலும் ஒரே அரசியல் கட்சிக்கே வாக்களிக்கும் போக்கு அதிகரிக்கிறது. இதன் விளைவாக, பெரிய தேசியக் கட்சிகள் குறிப்பிடத்தக்க முன்னிலை பெறுகின்றன. விதர்பாவின் வேளாண் நெருக்கடி, கேரளாவின் கடலோர மக்களின் வாழ்வாதாரம், அசாமின் வெள்ள மேலாண்மை போன்ற மாநில பிரச்சினைகள், மாநிலக் கட்சிகள் மூலமாகவே நாடாளுமன்றத்தில் வலுவாகக் குரல் பெறுகின்றன. தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது, இது போன்ற மாநிலக் கட்சிகளின் குரல்களை தேசிய அளவிலான தேர்தல் பிரச்சாரத்தின்கீழ் மறைத்துவிடும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.




ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கட்டமைப்பு, இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்பட்ட மூன்றாம் அடுக்கு அரசாங்கத்திற்கான தேர்தல்களையும் புறக்கணிக்கிறது. 73-வது மற்றும் 74-வது திருத்தங்கள், பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை இந்தியத் தேர்தல் ஆணையத்தின்கீழ் அல்லாமல், மாநிலத் தேர்தல் ஆணையங்களின்கீழ் கொண்டு வந்து, அவற்றின் தன்னாட்சிக்கு உத்தரவாதம் அளித்தன. இவை சாதாரணப் போட்டிகள் அல்ல. மும்பை, புனே மற்றும் பெங்களூரு ஆகியவை பல இந்திய மாநிலங்களைவிட பெரிய நிதிநிலை அறிக்கைகளைக் கொண்டுள்ளன. மேலும், அவற்றின் தேர்தல்கள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் போர்களாகும். அவற்றை ஒரே நாடு ஒரே தேர்தலிற்குள் இணைப்பது இந்தத் திருத்தங்களின் நோக்கத்தை மீறுவதாகும். அவற்றை தனியாக வைத்திருப்பது ஒரே நாடு ஒரே தேர்தலின் நியாயத்தன்மையையே பலவீனப்படுத்துகிறது. ஒவ்வொரு ஊராட்சி மற்றும் நகராட்சி தேர்தலின்போது, கணிசமான தேர்தல் செலவுகள், பாதுகாப்புப் படையினரைப் பணியில் ஈடுபடுத்துதல்மற்றும் நிர்வாகப் பணிகளில் ஏற்படும் இடையூறுகள் தொடர்ந்து இருக்கும். எனவே, ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் அதிக அளவில் செலவு சேமிக்கப்படும் என்ற வாதம், பெரும்பாலும் மாயை தோற்றம் (Illusory) கொண்ட ஒன்றாகவே இருந்து விடுகிறது.


தேர்தல் முறையில் உள்ள உண்மையான அடிப்படை குறைபாடுகள் எதுவும் தீர்க்கப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளின் வரம்பற்ற தேர்தல் செலவுகள், வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்தல், அரசியலின் குற்றமயமாக்கல் மற்றும் அரசின் நிர்வாக இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் போன்ற பிரச்சினைகளுக்குத் துல்லியமான தேர்தல் சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. அனைத்து நன்கொடைகளையும் கட்டாயமாக தெரிவித்தல், நடைமுறையில் கண்டிப்பாக அமல்படுத்தக்கூடிய தேர்தல் செலவு வரம்புகள், குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களைத் தேர்தலில் போட்டியிடத் தகுதி நீக்கம் செய்தல் மற்றும் உண்மையான தன்னாட்சி கொண்ட தேர்தல் ஆணையத்தை   உருவாக்குதல் போன்ற சீர்திருத்தங்கள் முக்கியமானதாகின்றன. இவை அனைத்தையும் இந்திய அரசியலமைப்பின் கூட்டாட்சி (Federalism) மற்றும் நாடாளுமன்ற ஆட்சிமுறைகளை மாற்றாமலேயே நடைமுறைப்படுத்த முடியும்.


ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா, இந்திய ஜனநாயகத்தின் தேர்தல்கால அட்டவணையை (Democratic Calendar) மறுசீரமைக்கிறது. ஆனால், தேர்தல் முறையில் உண்மையாக உள்ள அடிப்படை குறைபாடுகளை அது சரிசெய்யவில்லை.


இந்தக்கட்டுரையை எழுதியவர்கள் முறையே, புனே சர்வதேச மையத்தின் துணைத் தலைவர் மற்றும் மூத்த ஆய்வாளர் ஆவர்.


Original Link: One Nation, One Election will not fix what is broken.


Share:

டிஜிட்டல் முகமை, பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை (Women-led Development) எவ்வாறு முன்னெடுத்து செல்லமுடியும்? -ரிதுபர்ணா பட்கிரி

இணையத்தைப் பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய இரண்டுமடங்காக அதிகரித்திருந்தாலும், டிஜிட்டல் அணுகல் நிலையிலிருந்து அதிகாரத்தை நோக்கிய மாற்றம் இன்னும் முழுமையடையாமலே உள்ளது. சமூக-கலாச்சாரத் தடைகள் எவ்வாறு பெண்களின் டிஜிட்டல் அதிகாரமளித்தலுக்குத் தடையாக அமைகின்றன? இது பெண்கள் தங்களுக்கான முடிவுகளை மேற்கொள்ளும் திறனையும், பெண்களின் தலைமையிலான மேம்பாடு குறித்த தொலைநோக்குப் பார்வையையும் எவ்வாறு பாதிக்கிறது?


பாலின சமத்துவத்தை அடைவதையும், அனைத்துப் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிகாரம் அளிப்பதையும் நோக்கமாகக் கொண்ட நிலையான வளர்ச்சி இலக்கு 5-ஐ அடைவதற்கு, பாலின அடிப்படையிலான டிஜிட்டல் சமத்துவம் மையமானது. 6-வது தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பின்படி (National Family Health Survey (NFHS-6)), இணையப் பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய இரண்டுமடங்காகியுள்ளது. இருப்பினும், கட்டமைப்புரீதியான சமத்துவமின்மையின் காரணமாக, டிஜிட்டல் அணுகலிலிருந்து அதிகாரம் பெறுவதற்கான மாற்றம் முழுமையடையாமல் உள்ளது.


2023-24-ஆம் ஆண்டுகளின் 6-வது தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு தரவுகளின்படி, தற்போது 64.3% பெண்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இது 2019-21-ஆம் ஆண்டுகளின் 5-வது தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு காலகட்டத்தில் 33.3%-ஆக இருந்தது. தொழில்நுட்பம், பொருளாதாரம், சமூகம் மற்றும் கொள்கை சார்ந்த காரணிகளின் ஒருங்கிணைந்த தாக்கத்தால் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. குறைவான விலையில் கிடைக்கும் அலைபேசிகளின் பரவலான பயன்பாடு மற்றும் மேம்பட்ட இணைய இணைப்பு வசதிகள் ஆகியவை அதிக எண்ணிக்கையிலான பெண்கள் இணையத்தை பயன்படுத்துவதற்க்கு   வழிவகுத்துள்ளன. இணையமானது பொருளாதார வாய்ப்புகள், சேவைகள் மற்றும் கல்வியை அணுகுவதற்கும், சமூகத் தொடர்புகளை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கிய வழியாகக் கருதப்படுகிறது.

கல்வி, வேலைவாய்ப்பு, வணிகம் மற்றும் அரசு சேவைகள் இணையம் சார்ந்த செயல்பாடுகளாக மாறியதால், கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பப் பயன்பாடு வேகபடுத்தப்பட்டது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அனைவரும் அணுகுவதை உறுதிசெய்ய அரசு மேற்கொண்ட முயற்சிகள், பெண்களுக்கான இணைய பயன்பாட்டையும் விரிவுபடுத்தியுள்ளன. இதன் விளைவாக, தினசரித் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் வகையில் பல பெண்கள் முதன்முறையாக இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். இருப்பினும்,  இடைவெளிகள் தொடர்ந்து இருந்து வருகின்றன.


தொடரும் தடைகள்


பெண்களின் இணையப் பயன்பாடு அதிகரித்திருந்தாலும், டிஜிட்டல் தொழில்நுட்பங்களால் யார் பயனடைகிறார்கள் என்பதைத் தீர்மானிப்பதில் கட்டமைப்புரீதியான ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதால், டிஜிட்டல் அணுகலிலிருந்து உண்மையான அதிகாரமளித்தலை நோக்கிய மாற்றம் முழுமையடையாமல் உள்ளது.


உதாரணமாக, இணையப் பயன்பாட்டில் குறிப்பிடத்தக்க பாலின இடைவெளி தொடர்ந்து இருந்துவருகிறது. ஆண்களில் 80.5% பேர் இணையத்தைப் பயன்படுத்தும் நிலையில், பெண்களில் 58.6% பேர் மட்டுமே அதைப் பயன்படுத்துகின்றனர். அதேபோல, நகர்ப்புறங்களில் 77.3% பெண்கள் இணையத்தைப் பயன்படுத்தும் நிலையில், கிராமப்புறங்களில் 58.6% பெண்கள் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்துவதால், கிராம-நகர்ப்புற இடைவெளியும் கணிசமாக உள்ளது.


பெண்களின் டிஜிட்டல் அதிகாரமளித்தலுக்கு நீண்டகாலமாக தடையாக இருப்பவை பாலின அடிப்படையிலான சமூக நெறிமுறைகள், வர்க்க வேறுபாடு, சாதி, மதம், இனப்பிரிவு, மாற்றுத்திறனாளித்தன்மை, கிராம–நகர்ப்புற வேறுபாடு (Rural–Urban Divide) மற்றும் நிதி தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தில் உள்ள சமத்துவமின்மை (Unequal Control over Financial Decision-making) ஆகியவையாகும்.



டிஜிட்டல் பாலின இடைவெளிக்குப் பின்னால் உள்ள கட்டமைப்பு காரணிகள்


டிஜிட்டல் பாலின இடைவெளியானது சமூக மற்றும் கட்டமைப்புரீதியான பாலின சமத்துவமின்மைகளில் ஆழமாக உள்ளது. மொபைல் இணையத்தைப் பற்றி அறிந்தவர்களிடையே, அதனைப் பயன்படுத்துவதில் உள்ள முக்கியத் தடைகளாகக் கட்டுப்படியாகும் விலை, எழுத்தறிவு, பாதுகாப்பு குறித்த கவலைகள் மற்றும் டிஜிட்டல் திறன்கள் ஆகியவை அமைகின்றன. சமூக நெறிமுறைகள் மற்றும் குறைந்த கல்வி மற்றும் வருமானம் போன்ற கட்டமைப்புரீதியான ஏற்றத்தாழ்வுகள் காரணமாக, இது போன்றத்தடைகளால் பெண்கள் விகிதாச்சார அளவிற்கு அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.


பெண்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பெரும்பாலும் ஆணாதிக்க (Patriarchal) சமூகத்தின் ஒழுக்கநெறி சார்ந்த எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. இதனால் அது பல நேரங்களில் எதிர்மறையாகப் பார்க்கப்படுகிறது. உதாரணமாக, 2014-ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் (Right to Information (RTI)) மூலம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளித்த உத்தரப் பிரதேச காவல்துறை அதிகாரிகள், மொபைல் போன்களின் தவறான பயன்பாடே பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதற்கான காரணங்களில் ஒன்றாக இருப்பதாகக் குறிப்பிட்டனர்.


பெண்களின் மொபைல்  பயன்பாடு, குறிப்பாக கிராமப்புறங்களில், அவர்களது குடும்பத்தினரால் கண்காணிக்கப்படுகிறது அல்லது கட்டுப்படுத்தப்படுகிறது. மொபைல் தகவல் தொடர்புக்கான உலகளாவிய அமைப்பின் (Global System for Mobile Communications Association (GSMA)) 2025-ஆம் ஆண்டு மொபைல் பாலின இடைவெளி அறிக்கை, இந்தியாவில் அலைபேசி இணையத்தைப் பயன்படுத்துவோருக்குப் பாதுகாப்பு சார்ந்த அம்சங்கள் ஒரு முக்கியத் தடையாக உள்ளனஎன்பதை காட்டுகிறது. மேலும், லட்சுமி லிங்கம் மற்றும் ஈஷா பல்லமுடி ஆகியோர், "Good Girls" and "Smart Boys": Mobile Phones and the Social Reproduction of Gender (2025) என்ற தங்கள் நூலின் அத்தியாயத்தில், அலைபேசிகளை அணுகுவதிலும் பயன்படுத்துவதிலும் பாலினம், சாதி மற்றும் வர்க்கம் சார்ந்த தடைகள் உள்ளன என்று குறிபிடுகின்றனர்.


மேலும், சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான பாரம்பரியக் கட்டுப்பாட்டு முறைகளை டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் சீர்குலைப்பது குறித்து ஒருவிதமான  பதற்றம் நிலவி வருகிறது. பாதுகாப்பு தொடர்பான பாலின அடிப்படையிலான விதிமுறைகள், டிஜிட்டல் தொழில்நுட்பங்களை அணுகுதல், பயன்படுத்துதல் மற்றும் அதன் மூலம் அதிகாரமடைதல் ஆகியவற்றில் பெண்களின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கட்டுப்படுத்துகின்றன. இதுபோன்ற கட்டுப்பாடுகள் தகவல் தொடர்பு மற்றும் தகவல்களைப் பெறுதல் ஆகியவற்றைத் தாண்டி, பெண்களின் பொருளாதாரப் பங்கேற்பு மற்றும் நிதிச் சுதந்திரத்தையும்  குறைத்துவிடுகின்றன.


நிதி சார்ந்த டிஜிட்டல் இடைவெளி


தனிப்பட்ட மின்னணு சாதனங்கள் மூலம், வணிகம் மற்றும் நிதி சார்ந்த முடிவுகளில் பெண்களின் பங்கேற்பை சிறப்பாக ஊக்குவிக்க முடியும். சந்தைகளுக்கான அணுகலை வழங்குவதோடு தொழில்முனைவு முயற்சிகளையும் ஊக்குவிப்பதால், டிஜிட்டல் இணைப்பு வசதியானது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (Micro, Small, and Medium Enterprises) பயனளிக்கும்.


சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (International Telecommunication Union (ITU)) 2018-ஆம் ஆண்டு ஆய்வின்படி, வளரும் நாடுகளில் மொபைல் பிராட்பேண்ட் பயன்பாடு 1% அதிகரிப்பது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product (GDP)) 0.20% அதிகரிப்புடன் தொடர்புடையதாக உள்ளது. ஆனால், குறைந்த கல்வியறிவு, குறைந்த வருமானம், கிராமப்புறப் பின்னணி அல்லது மாற்றுத்திறனாளி பெண்களுக்கு, மொபைல் போன்கள், மொபைல் பணப் பரிவர்த்தனை, மொபைல் இணையம் மற்றும் பிற மொபைல் சேவைகளுக்கான அணுகல் குறைவாக இருப்பதால், வணிகம் மற்றும் தொழில் முன்னேற்றத்திற்காக டிஜிட்டல் தொழில்நுட்பங்களை திறமையாகப் பயன்படுத்தும் அவர்களின் திறன் கட்டுப்படுத்தப்படுகிறது.


பெண்கள் நிதி தொடர்பான முடிவுகளை எடுக்கும் திறன் கொண்டவர்களாக   நம்பப்படுவதில்லை. மேலும், அவர்கள் தாங்களே சம்பாதித்த பணத்தைச் செலவிடுவதற்கும் பல நேரங்களில் ஊக்குவிக்கப்படுவதில்லை. இதன் தாக்கம் பெண் தொழில் முனைவோர் மற்றும் வணிக மேலாளர்களை மட்டுமல்லாமல், நேரடி பணப் பரிமாற்ற (Direct Benefit Transfer/Direct Cash Transfer (DBT)) திட்டங்களின் பயனாளிகளையும் பாதிக்கிறது. இதற்கான முக்கியக் காரணம் அவர்கள் பெறும் நிதியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் அவர்களுக்கு முழுமையான கட்டுப்பாடு இருப்பதில்லை என்பதாகும்.


ஷரோன் புட்டோ, பிரீத்தி ராவ் மற்றும் ஃபேப்ரிசியோ வாலெண்டி ஆகியோர் 2021-ல் மேற்கொண்ட 'நிதிச் சேர்க்கையில் டிஜிட்டல் தீர்வுகள் மூலம் கிடைக்கும் புதிய நுண்ணறிவுகள்' (Emerging insights from digital solutions in financial inclusion) என்ற ஆய்வில், ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கைவினைத்துறை சார்ந்த 874 பெண் கைவினைக் கலைஞர்களில் 50 சதவீதத்தினரிடம் தொழில் பயன்பாட்டிற்கான தனிப்பட்ட வங்கிக் கணக்கு இல்லை என்றும், மூன்றில் ஒரு பகுதியினரிடம் அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் கணக்கு இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.


பெண்களின் டிஜிட்டல் நிதி இடைவெளி (Digital Financial Gap) என்பது, பெண்களுக்கு நிதி அறிவு குறைவாக உள்ளது என்ற சமூகப் பார்வையுடனும், அவர்கள் நிதி முடிவுகளை எடுக்கத் தகுதியற்றவர்கள் என்ற நம்பிக்கையுடனும் நேரடியாக தொடர்புடையதாக உள்ளது. பெண்கள் தாங்களே வருமானம் ஈட்டினாலும், அவர்களுக்குப் பதிலாக குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக ஆண் உறுப்பினர்களே நிதி தொடர்பான முடிவுகளை எடுக்கின்றனர். எனவே, இந்த இடைவெளியைப் குறைக்க, பெண்களுக்கு டிஜிட்டல் சாதனங்களின் உரிமையையும், அவற்றை சுயமாகப் பயன்படுத்தும் முழுமையான கட்டுப்பாட்டையும் உறுதி செய்வது  முக்கியமான ஒரு நடவடிக்கையாகும்.


டிஜிட்டல் சாதனங்களின் உரிமை


டிஜிட்டல் தன்னாட்சியை (digital autonomy) உறுதி செய்வதற்கு டிஜிட்டல் சாதனங்களின் உரிமை மிகவும் முக்கியமானது. ஏனெனில், சாதன உரிமை இல்லாமல் டிஜிட்டல் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது எளிதாகிறது. ஜிங்ஜிங் சென் எழுதிய, 'கைபேசிகள் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கின்றனவா? கிராமப்புற இந்தியாவின் ஒரு கண்ணோட்டம்' என்ற 2021-ஆம் ஆண்டு கட்டுரை, கைபேசி உரிமையானது முடிவெடுக்கும் செயல்முறைகளில் பெண்களின் அதிகரித்thu டன் தொடர்புடையது என்பதை எடுத்துக்காட்டுகிறது.


ஒரே மொபைல் சாதனத்தைப் பகிர்ந்து பயன்படுத்துவது, மாதவிடாய் கண்காணிப்பு செயலிகள் (Period Trackers), தாய்மை நலச் செயலிகள் (Maternal Health Apps) போன்ற தனியுரிமை தேவைப்படும் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு போதுமான தனியுரிமையை வழங்காது. இதனால், பெண்கள் பகிர்ந்து பயன்படுத்தப்படும் மொபைல் போன்களில் தங்களின் தனிப்பட்ட உடல்நலம் மற்றும் பிறருடன் பகிர விரும்பாத விவகாரங்களை அணுகுவதில் தயக்கம் காட்டக்கூடும்.


அப்துல்ரஷீத் ஏ இலியா மற்றும் சிடி ஒனோனிவு ஆகியோரின் 2020-ஆம் ஆண்டு ஆய்வான, 'அதிகாரமளிப்பதில் கைபேசி பயன்பாட்டிற்கான வழிமுறைகள்: நைஜீரியாவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் குறித்த ஒரு விமர்சன யதார்த்தவாத ஆய்வு', துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தொடர்பான அணுகல்த்தன்மை மற்றும் ஏற்புத்தன்மை ஆகியவை கைபேசிகளால் எவ்வாறு எளிதாக்கப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது.


இந்த மாற்றுத்திறனாளிப்பெண்களுக்கு  அதிகமாகப் பொருந்துகிறது. ஏனெனில், மொபைல் போன் அவர்களுக்கு சுகாதாரச் சேவைகள் மற்றும் அவர்களின் சிறப்புத் தேவைகள் தொடர்பான பிற சேவைகளை (Self-sufficiently) சார்ந்து இருக்காமல் சுயமாகப் பயன்படுத்தும் வாய்ப்பை வழங்குகிறது. மேலும், தாய்மை நலம், ஊட்டச்சத்து உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்டங்களும் கொள்கைகளும் இன்று டிஜிட்டல் தளங்கள் வழியாக செயல்படுத்தப்படுவதால், அவற்றின் பயன்களைப் பெறுவதற்கு பெண்கள் சொந்தமாக மொபைல் போன் வைத்திருப்பது மிகவும் முக்கியமானதாகும்.


டிஜிட்டல் உள்ளடக்கத்திற்கான முயற்சிகள்


2015-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட டிஜிட்டல் இந்தியாவின் முன்முயற்சியானது, டிஜிட்டல் அரசாங்க சேவைகளை வழங்குவதோடு, கிராமப்புறங்களை பிராட்பேண்ட் வலையமைப்புகளுடன் இணைக்கிறது. 2017-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி கிராமின் டிஜிட்டல் சாக்ஷர்தா அபியான் (Pradhan Mantri Gramin Digital Saksharta Abhiyan (PMGDISHA)), இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற குடிமக்களுக்கு அடிப்படை டிஜிட்டல் கல்விப் பயிற்சியை வழங்குவதன் மூலம் டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்க முயற்சிகிறது. இது முக்கியமாக பெண்கள் உட்பட விளிம்புநிலை சமூகத்தினரை இலக்காகக் கொண்டுள்ளது.


2022-ஆம் ஆண்டு மக்களவையின் நட்சத்திரக்குறியிடப்படாத கேள்வி எண் 3080-இன் படி, பிரதான் மந்திரி கிராமின் டிஜிட்டல் சாக்ஷர்தா அபியான் (PMGDISHA) திட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட பயனாளிகளில் 52% பேர் பெண்கள் ஆவர். இந்தத் திட்டங்கள் அணுகலையும் அடிப்படை டிஜிட்டல் திறன்களையும் விரிவுபடுத்தியுள்ளன. ஆனால், பயனுள்ள டிஜிட்டல் அதிகாரமளித்தலுக்கு, சமூகச் சூழலுக்கு ஏற்ப செயல்படக்கூடிய, பாலினப் பாகுபாடு இல்லாத நடவடிக்கைகள் கூடுதலாக தேவைப்படுகின்றன.


அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல் மாற்றத்திற்கான நடவடிக்கைகள்


எனவே, டிஜிட்டல் உள்ளடக்கம் என்பது வெறும் தொழில்நுட்பத்தை அணுகுவது மட்டுமல்ல. அது 'டிஜிட்டல் செயல் திறன்' (digital agency) எனும் திறனை வளர்க்க வேண்டும். தொழில்நுட்பத்தை சுயமாகப் பயன்படுத்தி, தங்களின் முடிவுகளைத் தாங்களே எடுக்கும் திறனையும், தங்களுக்குரிய உரிமைகளைச் செயல்படுத்தும் ஆற்றலையும் பெண்களுக்கு வழங்க வேண்டும். பெண்கள் மற்றும் சிறுமிகள் மட்டுமின்றி, அவர்களின் பெற்றோர் மற்றும் சமூகத் தலைவர்கள் போன்றோரையும் உள்ளடக்கிய, பாலின உணர்திறன் கொண்ட டிஜிட்டல் எழுத்தறிவுத் திட்டங்களை ஊக்குவிக்க வேண்டியது முக்கியமான  நடவடிக்கையாகும்.


பாதுகாப்பு தொடர்பான கவலைகளை நிவர்த்தி செய்ய, பள்ளிப் பாடத்திட்டங்கள் மற்றும் சமூக விழிப்புணர்வுத் திட்டங்களில் டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் இணையப் பாதுகாப்பு (cybersecurity) குறித்த கல்வியை இணைக்கலாம். டிஜிட்டல் பயிற்சி, விழிப்புணர்வு மற்றும் மற்ற உறுப்பினர்களின் ஆதரவு ஆகியவற்றிற்கு உள்ளூர் சுயஉதவிக் (Local self-help groups) குழுக்கள் மற்றும் இணைந்து செயல்படும் அமைப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.




குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், தனியாக வாழும் பெண்கள், மாற்றுத்திறனாளிப் பெண்கள் மற்றும் கைம்பெண்கள் போன்றோருக்கு முன்னுரிமை வழங்கி, மொபைல் போன் வாங்குவதற்கான மானியங்கள் மற்றும் செலவுச் சீட்டுகளை வழங்குவதன் மூலம் பெண்களிடையே மொபைல் போன் உரிமையை ஊக்குவிக்கலாம். மொபைல் போன்களை வாங்குவதற்கு எளிதான கடன் மற்றும் நுண்நிதி (microfinance) வசதிகள் கிடைப்பது, பெண்கள் தொழில்நுட்பத்தை சிறப்பாக அணுக உதவும். மொபைல் போன் உரிமையை ஏற்கனவே உள்ள நலத்திட்டங்களுடனும் இணைக்க வேண்டும்.


அனைவருக்கும் ஏற்ற செயலி வடிவமைப்பு, உதவித் தொழில்நுட்பங்கள் மற்றும் குறிப்பிட்ட ஆதரவு மற்றும் விழிப்புணர்வுத் திட்டங்கள் மூலம் பெண்களுக்கு அணுகக்கூடிய டிஜிட்டல் நிதிச் சேவைகளை உருவாக்க வேண்டும். 'ஆப்பிரிக்க மக்கள் தொகை மற்றும் சுகாதார ஆராய்ச்சி மையம்' (African Population and Health Research Centre (APHRC)) மேற்கொண்ட, 2024-ஆம் ஆண்டு 'டிஜிட்டல் நிதிச் சேவைகள், பெண்களின் பொருளாதார அதிகாரமளித்தல் மற்றும் தாய்மைக்கால மன அழுத்தம்: கிராமப்புற கென்யாவில் ஒரு தரமான ஆய்வு', பெண்களுக்கான மொபைல் நிதிச் சேவைகள் சக-ஆதரவுக் குழுக்கள் மற்றும் சமூகம் சார்ந்த கல்வியுடன் இணைக்கப்படும்போது மட்டுமே பயனுள்ளதாக அமைகின்றன என்பதை வெளிக் காட்டுகிறது. இது போன்ற அணுகுமுறை இந்தியாவிலும் பயனுள்ளதாக இருக்கக்கூடும்.


பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு டிஜிட்டல் உள்ளடக்கம் முக்கியமானது.


இருப்பினும், பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் முக்கிய அங்கமாக டிஜிட்டல் உள்ளடக்கம் அங்கீகரிக்கப்படும்போது மட்டுமே இது போன்ற நடவடிக்கைகள் முழுமையான பலனைத்தரும். டிஜிட்டல் துறையில் நிலவும் பாலின இடைவெளியைக் குறைப்பது ஒரு சமூகப் பிரச்சினையாகும். பயனுள்ள டிஜிட்டல் உள்ளடக்கத்திற்கு அணுகல் வசதி மட்டும் போதுமானதாக இருக்காது. அதனுடன் உரிமை, டிஜிட்டல் எழுத்தறிவு, நிதிச்சுதந்திரம் மற்றும் சுயமான முடிவெடுக்கும் திறன்  போன்றவை முக்கியமான ஒன்றாகும். பெண்களை அதிகாரப்படுத்துவதற்கும், பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை முன்னெடுத்து செல்வதற்கும் இது போன்ற நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானவை.


அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல் மாற்றம் (Inclusive Digital Transformation) ஏற்பட வேண்டுமெனில், பெண்கள் தொழில்நுட்பத்தை  பயன்படுத்துபவர்களாக (Passive Users) மட்டும் இருக்கக் கூடாது. மாறாக, பெண்கள் தாங்களாக டிஜிட்டல் சாதனங்களை வைத்திருப்பதையும், நிதி தொடர்பான முடிவுகளை தாங்களாக எடுப்பதையும், டிஜிட்டல் பொருளாதாரத்தில் முழுமையாகப் பங்கேற்பதையும் உறுதிசெய்ய வேண்டும். டிஜிட்டல் அணுகல் மட்டுமே போதுமானதாக இருக்காது. சுதந்திரமாக செயல்படும்  டிஜிட்டல் அணுகல் மட்டுமே, பெண்கள் தலைமையிலான (women-led development) வளர்ச்சிக் கனவை உண்மையாகவே முன்னெடுத்துச் செல்ல முடியும்.


Original Link: How digital agency can advance women-led development.

Share: