இந்தியாவின் கைத்தறி வரலாறு: சுதேசி இயக்கம் முதல் 'சேலை ராஜதந்திரம்' வரை - ரவீனா பனேட்டா

 12-வது தேசிய கைத்தறி தினம்: நேர்த்தியான சேலைகள் மற்றும் நுணுக்கமான நெசவு வேலைகளை தாண்டி, எதிர்ப்புணர்வு, சுயசார்பு மற்றும் கலாச்சாரம் தொடர்பான ஒரு வரலாறு இதில்  இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம், கலாச்சாரம் ஆகியவற்றில் கைத்தறித் துறை ஏன் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது?


தற்போதைய செய்தி?


ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு 12-வது தேசிய கைத்தறி தினம் (National Handloom Day) கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் வளமான கைத்தறி பாரம்பரியத்தையும், நாட்டின் பொருளாதாரம் மற்றும் கலாச்சார அடையாளத்தில் கைத்தறி நெசவாளர்களின் பங்களிப்பையும் பறைசாற்றும் வகையில் நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. உள்நாட்டுத்துணி வகைகளை ஊக்குவிக்கும் நோக்கில், ஜவுளி அமைச்சகம் மற்றும் மாநில அரசுகள் கண்காட்சிகள், கைத்தறிச் சந்தைகள், விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மற்றும் வாங்குவோர்-விற்போர் சந்திப்புகளை ஏற்பாடு செய்துள்ளன.


முக்கிய அம்சங்கள்:


1. சுதேசி இயக்கத்தின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில், 2015-ஆம் ஆண்டு முதல் இந்திய அரசு ஆகஸ்ட் 7-ஆம் தேதியை 'தேசிய கைத்தறி தினமாக' (National Handloom Day) கொண்டாடி வருகிறது. நாட்டின் வளமான கலாச்சாரத்திற்கு கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்கள் ஆற்றிய பங்களிப்பைப் போற்றும் நாளாக தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது.


2. சுதேசி இயக்கத்தின்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அழைப்பை நினைவுபடுத்தும் நாளாகவும் விளங்குகிறது. 1905-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி, வங்கப் பிரிவினைக்கு (partition of Bengal) எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வெளிநாட்டுப் பொருட்களைப் புறக்கணித்து, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற முறையான அறிவிப்பு கொல்கத்தா டவுன் ஹாலில் வெளியிடப்பட்டது.


3. ஆங்கிலேயர்களின் 'பிரித்தாளும்' கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கைத்தறி நெசவு ஆங்கிலேய அதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்பின் வலிமையான குறியீடாக மாறியது. இந்தியக் கைவினைத் தொழில்களை ஊக்குவிப்பதன் மூலமும் உள்ளூர் கைவினைஞர்களை வலுப்படுத்துவதன் மூலமும், இது இந்தியப் பண்பாடு மற்றும் மரபுகளை மீட்டெடுப்பதிலும், இந்திய மொழிகள், கலைகள் மற்றும் கைவினைத் தொழில்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்தியது.                    


4. உள்நாட்டுத் தயாரிப்புகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலமும், உள்ளூர் தொழில்களைப் பாதித்த ஆங்கிலேய அரசின் இறக்குமதிகளை எதிர்ப்பதன் மூலமும், சுயசார்பை அதிகரிக்கவும் ஆங்கிலேயர்களின் பொருட்களின் மீதான சார்ந்திருத்தலைக் குறைக்கவும் முயன்றது.  இதன் விளைவாக, கைத்தறித் துறையானது நாட்டின் சுதந்திரத்துடன் பிரிக்க முடியாத வகையில் பிணைக்கப்பட்டது.


5. எனவே, இந்தத் தினம் கைத்தறி நெசவாளர்களின் திறன்கள் மற்றும் கைவினைத் திறனைக் கொண்டாடுவதோடு, உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கைத்தறித் தயாரிப்புகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நெசவாளர்களுக்கு அதிகாரமளித்து அவர்களின் சமூக-பொருளாதார நலனை உறுதிசெய்வதோடு, இந்தியாவின் தனித்துவமான கைத்தறி பாரம்பரியத்தைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டையும் வலியுறுத்துகிறது.


கைத்தறி என்றால் என்ன?


6. 1985-ஆம் ஆண்டின் கைத்தறி (உற்பத்திக்கான ஒதுக்கீடு மற்றும் பொருட்கள்) சட்டத்தில் (Handloom (Reservation and Articles for Production) Act) 'கைத்தறி' என்பது "விசைத்தறி அல்லாத எந்தவொரு தறியையும்" குறிப்பதாக வரையறுக்கப்பட்டிருந்தது. ஆனால், காலப்போக்கில் இதற்கான வரையறைகள் விரிவடைந்துள்ளன.


7. 2012-ஆம் ஆண்டில் ஒரு புதிய வரையறை முன்மொழியப்பட்டது: "கைத்தறி என்பது விசைத்தறி அல்லாத எந்தவொரு தறியையும் குறிக்கும் ஒன்றாகும்.  மேலும், உற்பத்தியின்போது நெசவுச் செயல்முறையின் ஒரு பகுதிக்காவது மனித ஆற்றல் அல்லது கைகளின் செயல்பாடு தேவைப்படும் கலப்புத் தறிகளும் (hybrid loom) இதில் அடங்கும். அடிப்படையில், இது விசைத்தறி நெசவாளர்கள் இந்தத் துறையில் எளிதாக நுழைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியது.


இந்தியாவில் கைத்தறித் துறையின் நிலை என்ன?



8. இந்தியாவின் கைத்தறி பாரம்பரியம் உலகின் மிகப்பழமையான பாரம்பரியங்களில் ஒன்றாகும். இது உள்ளூர் கலாச்சாரம், காலநிலை மற்றும் சமூகத்துடன் ஆழமாக இணைந்துள்ளது. ஒவ்வொரு பிராந்தியமும் தனக்கே உரித்தான நெசவுநுட்பங்கள், வடிவங்கள் மற்றும் துணி வகைகளைக் கொண்டுள்ளது.  இவை பல நூற்றாண்டுகளாகத் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வந்த தொழில்சார் திறன்களை காட்டுகின்றன.


9. தமிழ்நாட்டின் புகழ்பெற்ற காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள், அசாமின் முகா (பொன்னிறப் பட்டு) மெகேலா சாதோர்கள், மகாராஷ்டிராவின் பைத்தானி நெசவுகள் அல்லது உத்தரப் பிரதேசத்தின் பனாரசி ஜரிகை வேலைப்பாடுகள் கொண்ட துணிகள் என எதுவாக இருந்தாலும், இந்தியா உலகின் மிகப்பெரிய மற்றும் பரந்து விரிந்த நெசவுத்தொழிலைக் கொண்டுள்ளது. உலகளவில் கையால் நெய்யப்படும் துணிகளில் 95 சதவீதம் இந்தியாவில் இருந்தே கிடைக்கின்றன என்று பத்திரிகை தகவல் அலுவலகம் 2017-ஆம் ஆண்டில் தெரிவித்தது. 


10. சாதாரண தறிகள் முதல், நெசவுக்குப் பிந்தைய அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட புடவைகள், சால்வைகள், தூரிகள், கம்பளங்கள், துண்டுகள், அங்கோச்சா/கமச்சா, பாரம்பரிய தோளில் அணியும் பாரம்பரியத் துணிகள் (Angavastrams) மற்றும் ஆடைக்கான துணிகள் வரை பல்வேறு தயாரிப்புகளை உள்ளடக்கிய இந்தியாவின் ஜவுளி மற்றும் கைத்தறித்துறை, வேளாண்மைக்கு அடுத்தபடியாக மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் 2-வது மிகப்பெரிய துறையாகத் இருந்து வருகிறது. 4-வது அகில இந்திய கைத்தறி கணக்கெடுப்பின்படி, 31.45 லட்சம் குடும்பங்கள் கைத்தறி, நெசவு மற்றும் நெசவு சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளன. 

கைவினைப் பொருட்கள் (மற்றும் கைத்தறி) துறையில் புவிசார் குறியீடு மற்றும் அறிவுசார் சொத்துரிமை:


11. உலக வர்த்தக அமைப்பின் (World Trade Organization (WTO)) உறுப்பினராக உள்ள இந்தியா, 'பொருட்களின் புவிசார் குறியீடுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 1999'-ஐ இயற்றியது; இச்சட்டம் 2003-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.


12. புவிசார் குறியீடு (Geographical Indication (GI)) என்பது ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியிலிருந்து உருவாகும் மற்றும் அந்தப் பகுதிக்குரிய தனித்துவமான பண்புகள் அல்லது நற்பெயரைக் கொண்ட தயாரிப்புகளுக்கு வழங்கப்படும் ஒரு குறியீடாகும். இந்தக் குறியீடு அந்தப் பொருளின் தனித்துவமான அடையாளத்தையும் உண்மைத்தன்மையையும் உறுதி செய்கிறது. மேலும், இது நுகர்வோர் இடையே விழிப்புணர்வையும் நம்பிக்கையையும் ஏற்படுத்த உதவுகிறது.















13. ஒரு பொருள் இக்குறியீட்டைப் பெற்றுவிட்டால், வேறு எந்த நபரோ அல்லது நிறுவனமோ அதேபெயரில் அதுபோன்ற போலியான பொருளை விற்க முடியாது. இந்த புவிசார் குறியீடு 10 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும்; அதற்குப் பிறகு இதைப் புதுப்பித்துக் கொள்ளலாம். அப்பொருளுக்குச் சட்டப்பூர்வ பாதுகாப்பு அளிப்பது, மற்றவர்கள் முறைகேடாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிப்பது ஆகியவை இப்பதீவின் பிற நன்மைகளாகும். அங்கீகரிக்கப்பட்ட வணிகர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான புவிசார் குறியீட்டு எண் (GI Number) வழங்கப்படும்.


14. இந்தியாவில், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின்கீழ் உள்ள 'தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்கான துறை' (Department for Promotion of Industry and Internal Trade) புவிசார் குறியீடுகளை வழங்குகிறது.


15. கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறிப் பொருட்கள் இந்தச் சட்டத்தின் பிரிவு 2(f)-ன்கீழ்  வருகின்றன. இந்தப் பிரிவின்படி, “பொருட்கள்” என்பதில் வேளாண் பொருட்கள், இயற்கைப் பொருட்கள், உற்பத்திப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், கைத்தறிப் பொருட்கள் மற்றும் தொழில்துறைப் பொருட்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களும்  இடம்பெறும்.


16. பதிவு செய்யப்பட்ட புவியியல் குறியீடுகளுக்கு, கைவினைக் கலைஞர்கள் மற்றும் நெசவாளர்கள் சட்டத்தின் பிரிவு 7(3)-ஐ பிரிவு  17-உடன் இணைத்துப்பார்க்கும் வகையில், அங்கீகரிக்கப்பட்ட பயனர்களாகப் பதிவு செய்யப்படலாம். 2004-ஆம் ஆண்டில், 'போச்சம்பள்ளி இக்கத்' (Pochampally Ikat) இந்தியாவில் புவிசார் குறியீடு பெற்ற முதல் கைத்தறிப் பொருள் என்ற வரலாற்றைப் படைத்தது.


இந்திய கைத்தறித் துறையை மேம்படுத்துவதற்கான அரசின் நடவடிக்கைகள்


— 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2026–27-ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கையைத் தாக்கல் செய்தார். இதில் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சிக்கான முக்கிய துறையாக ஜவுளித்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.


— இதன் முக்கிய பகுதிகளாக தேசிய நார் திட்டம் (National Fibre Scheme), ஜவுளி விரிவாக்கம் மற்றும் வேலைவாய்ப்புத் திட்டம் (Textile Expansion and Employment Scheme), ஒருங்கிணைந்த தேசிய கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள்திட்டம், ‘Text-ECON’ முன்முயற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்கான மேம்படுத்தப்பட்ட ‘Samarth 2.0’ ஆகிய ஐந்து திட்டங்கள் உள்ளன. இவை அனைத்தும் சேர்ந்து, நிலையான மூலப்பொருள் விநியோகத்தை உருவாக்குதல், உற்பத்திக் குழுமங்களை நவீனப்படுத்துதல், பாரம்பரிய கைவினைகளை ஆதரித்தல் மற்றும் உலகளாவிய போட்டித்திறனை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களைக் கொண்டுள்ளன.

— அதேபோல், மகாத்மா காந்தி கிராம சுயராஜ் முன்முயற்சி (Mahatma Gandhi Gram Swaraj Initiative) தொடங்கப்பட்டதும் முக்கியமான ஒரு நடவடிக்கையாகும். இதன் மூலம் காதி, கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் துறைகளுக்கு மேம்பட்ட சந்தை வாய்ப்புகள், சிறந்த வர்த்தகப் பெயர் உருவாக்கம் (Branding) மற்றும் பயிற்சி வழங்கப்படுகின்றன. இதன் மூலம் இந்தியாவின் ஜவுளித் துறையின் வலிமை இயந்திரமயமாக்கப்பட்ட ஆலைகளில் மட்டுமல்லாமல், கோடிக்கணக்கான கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் பாரம்பரிய கைவினை மற்றும் கலாச்சார அமைப்புகளிலும் உள்ளது என்பது அங்கீகரிக்கப்படுகிறது.


— இந்தத் திட்டங்களை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஜவுளித்துறை தொடர்பான அரசின் கொள்கையில் ஒரு முக்கியமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக ஜவுளித் துறைக்கான அரசின் ஆதரவு தனித்தனி பிரச்சினைகளைத் தீர்க்கும் பல்வேறு திட்டங்களாக இருந்தது. ஆனால், 2026–27-ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கை, நார் உற்பத்தி, உற்பத்தித் திறன், கைவினைக் கலைஞர்களின் வாழ்வாதாரம், திறன் மேம்பாடு மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைக்கும் ஒரு முழுமையான திட்டத்தை முன்வைக்கிறது.


இந்தியாவின் கலாச்சார தூதரகத்தின் மையப்புள்ளியாகக் கைத்தறித் துறை


1. கலை மற்றும் கைவினைப் பொருட்கள் துறையில் உள்ள பிற கலாச்சார அடையாளங்களுடன் சேர்த்து, இந்தியாவின் மென்மையான சக்தியை  வெளிக்காட்டுவதில் கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் நீண்டகாலமாக முக்கியப் பங்கு வகித்து வருகின்றன. 18-ஆம் நூற்றாண்டு முதல், அழகியல் நினைவுப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், கலைப் பொருட்கள் மற்றும் கையால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் ஆகியவை தூதரக உறவுகளின் முக்கிய அங்கங்களாக இருந்து வருகின்றன.


2. பிரெஞ்சு பயணி டாவர்னியர் கூறியதன்படி, பாரசீக ஷாவின் தூதர் (கி.பி. 1628–1641) இந்தியாவிலிருந்து திரும்பியபோது, தனது அரசருக்கு நகைகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு தேங்காய் ஓட்டினுள் வைக்கப்பட்ட, 30 கெஜம் நீளமுள்ள மஸ்லின் தலைப்பாகையை பரிசாக வழங்கினார். அந்த மஸ்லின் துணி மிகவும் நுணுக்கமாகவும் மென்மையாகவும் இருந்ததால், அதைத் தொடும்போதுகூட உணர முடியாத அளவுக்கு மென்மையானதாக இருந்தது என்று குறிப்பிடுகிறார். 


3. சேலை இராஜதந்திரம்' (Saree diplomacy) மற்றும் 'கதர் இராஜதந்திரம்' (Khadi diplomacy) ஆகியவை இந்திய அரசாங்கத்தால் பல்வேறு தளங்களில் முன்னெடுக்கப்படும் இது போன்ற முயற்சிகளுக்குச் சில எடுத்துக்காட்டுகளாகும். கலாச்சார வெளிப்பாட்டின் இந்த அடையாளங்கள் மூலம், உலகளாவிய பார்வையாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் ஆகியோருடன் தொடர்புகொள்வதும், இந்திய நெசவாளர்களின் கலைத்திறனை உலக அரங்கில் முன்னிறுத்துவதும் இதன் அடிப்படை நோக்கமாகும்.


4. உதாரணமாக, சிந்துவெளி நாகரிகக் காலத்திலிருந்தே பருத்தி மற்றும் ஜவுளிப் பொருட்களின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. கிழக்கிந்திய நிறுவனம் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் நடைபெற்ற வெளிநாட்டு வர்த்தகத்தில், இந்தியாவின் 'மஸ்லின்' மற்றும் 'பருத்தி' ஆடைகள் மிகச் சிறந்த தரத்தைக் கொண்டிருந்தன என்றும், ஆங்கிலேயர்கள் இவற்றைப் பயன்படுத்திப் பெருமளவில் லாபம் ஈட்டினர் என்றும் வரலாறு கூறுகிறது.




5. அரசின் ‘தற்சார்பு இந்தியா’ (Atmanirbharta) திட்டம், ‘உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம்’ (Vocal for Local) பிரச்சாரம் மற்றும் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ (Make in India) ஆகியவை கைத்தறித்துறைக்கு மிகப்பெரிய வாய்ப்பை வழங்குகின்றன. இது போன்ற திட்டங்களின் மூலம் உலகளாவிய ஜவுளித்துறையில் இந்தியாவின் நிலையை  வலுப்படுத்தவும், இந்திய கைத்தறிப் பொருட்களின் உலகளாவிய போட்டித்திறனை உயர்த்தவும் முடியும்.


Original articles: India’s handloom story: From Swadeshi to ‘Saree diplomacy’ -Raveena Baneta

Share:

 

      கோபர்தன் திட்டம் (GOBARdhan Scheme) என்பது கிராமப்புறங்களில் உள்ள கால்நடை சாணம் மற்றும் கசடு போன்ற மக்கும் கழிவுகளை பயனுள்ள உயிரிவாயு  (Biogas) மற்றும் இயற்கை உரங்களாக மாற்றும் ஒரு தேசியத் திட்டமாகும். இது கிராமங்களைச் சுத்தமாக வைத்திருக்கவும், வேளாண் தொழிலாளர்களின் வருமானத்தை உயர்த்தவும் உதவுகிறது.



தற்போதைய நிகழ்வு என்ன? : கோபர்தன் திட்டம் நாட்டில் அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (compressed biogas (CBG)) உற்பத்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்தும் வகையில், மத்திய அமைச்சரவை வியாழக்கிழமையன்று ‘'கோபர்தன்' (GOBARdhan) எனும் தேசிய வட்டார உயிரி எரிசக்தி திட்டத்திற்கு (National Circular Bioenergy Scheme) ஒப்புதல் அளித்தது. இத்திட்டம் 2026-27-ஆம் ஆண்டு முதல் 2035-36-ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு ரூ. 23,731 கோடியாகும்.


முக்கிய அம்சங்கள் :


நகர எரிவாயு விநியோக நிறுவனங்களின் கொள்முதல் உத்தரவாதம், நிலையான நிர்ணயிக்கப்பட்ட விலை, மூலதன மானியங்கள், கடன் உதவி மற்றும் குழாய்வழி உள்கட்டமைப்பு ஆகியவற்றின் மூலம், உள்நாட்டு அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (CBG) உற்பத்தியை ஏறக்குறைய 10 மடங்கு அதிகரிப்பதையும், இத்துறையில் பெரிய அளவிலான தனியார் முதலீட்டை ஈர்ப்பதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.


உற்பத்தியாளர்களுக்கு நம்பகமான மற்றும் கணிக்கக்கூடிய சந்தையை வழங்க, ‘கோபர்தன்’ திட்டம் ஒரு பிரத்யேக அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (CBG) கொள்முதல் உத்தரவாதக் கட்டமைப்பைக் கொண்டிருக்கும். அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) மற்றும் வீட்டு உபயோக குழாய்வழி இயற்கை எரிவாயு (piped natural gas (PNG)) பிரிவுகளில், அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (CBG) கலப்புக்கான கட்டாய இலக்குகளை (2026-27-ல் 3%, 2027-28-ல் 4% மற்றும் 2028-29 முதல் 5%) பூர்த்தி செய்ய நகர எரிவாயு விநியோக (city gas distribution (CGD)) நிறுவனங்கள் மூலம் இந்தக் கொள்முதல் மேற்கொள்ளப்படும். அரசின் கூற்றுப்படி, இந்தக் கட்டமைப்பு கலப்புக்கான கட்டாயத்தை "தொழில்துறைக்குத் தெளிவான, நீண்டகாலத் தேவைக்கான குறியீடாக" மாற்றுகிறது. மேலும், நகர எரிவாயு விநியோக (CGD) வலையமைப்புகள் முழுவதும் சீரான அமலாக்கம் திட்டங்களின் வங்கி நிதியுதவி பெறும் திறனை மேம்படுத்தி, உற்பத்தித் திறன் பயன்பாட்டை ஆதரிக்கும். இது நீண்டகால தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும்.



இத்திட்டத்தின்கீழ், தகுதியுள்ள புதிய அழுத்தப்பட்ட உயிரி-எரிவாயு (CBG) திட்டங்களுக்கு, உற்பத்தித் திறனில் ஒரு நாளைக்கு 1 டன் திறனுக்கு 2 கோடி ரூபாய் வரை மூலதன உதவித் தொகை வழங்கப்படும். இந்த உதவி ஆலை இயந்திரங்களுக்கு மட்டுமின்றி, மூலப்பொருட்களைச் சேகரித்தல், இயற்கை உரத்தைச் பதப்படுத்துதல் மற்றும் கூடுதல் பயன்பாடுகளுக்கான உபகரணங்களுக்கும் நீட்டிக்கப்படும். மேலும், தங்கள் உற்பத்தித் திறனை விரிவாக்கும் பழைய திட்டங்களுக்கும் இது பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.


அரசாங்கத்தின் கூற்றுப்படி, இந்த நிதி உதவி புதிய திட்டங்களின் ஆரம்ப முதலீட்டுச் சுமையைக் குறைக்கும், கடன் மற்றும் நிதி நடவடிக்கைகளை விரைவுபடுத்தும். மேலும், தனியார் அமைப்பாளர்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கிராமப்புற தொழில்முனைவோரின் பங்கேற்பை அதிகரிக்கும்.


அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (CBG) ஆலைகளை முக்கிய குழாய்வழிகள் மற்றும் நகர எரிவாயு விநியோக வலையமைப்புகளுடன் இணைக்கும் குழாய் வழித்தட திட்டங்களுக்கு இத்திட்டம் ஆதரவளிக்கும். இந்தக் குழாய் இணைப்பு வசதி எரிவாயுவை விநியோகிக்கும் செலவைக் கணிசமாகக் குறைக்கும், விநியோகத்தின் நம்பகத்தன்மையை உயர்த்தும், சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்தும் மற்றும் எரிவாயுவின் பயன்பாட்டை அதிகரிக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.


உங்களுக்குத் தெரியுமா? 


அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (CBG) என்பது சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மற்றும் சுத்திகரிக்கப்பட்ட ஒரு வகை உயிர்வாயு ஆகும். இது வாகன மற்றும் தொழில்துறை எரிபொருளாகப் பயன்படுத்த உயர் அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகிறது. இது அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவின் (CNG) பண்புகளையும் ஆற்றல் உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது. இதன் பொருள், இதை அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) உடன் கலக்கலாம் அல்லது வாகன, தொழில்துறை மற்றும் வணிகத் துறைகளில் மாற்று எரிபொருளாகப் பயன்படுத்தலாம். ஒழுங்கற்ற மூலப்பொருள் விநியோகச் சங்கிலிகள், அதிக ஆரம்ப மூலதனச் செலவு, போதுமான உள்ளூர் விநியோக உள்கட்டமைப்பு இல்லாமை மற்றும் குறைந்த கொள்முதல் ஆகியவை அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (CBG) பிரிவில் உள்ள முக்கிய சவால்கள் மற்றும் தடைகளில் அடங்கும். இத்திட்டம் அவற்றைச் சமாளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


இந்தியா தனது இயற்கை எரிவாயுத் தேவையில் சுமார் பாதியை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்ய வேண்டியுள்ள நிலையில், அழுத்தப்பட்ட உயிரி-வாயு (CBG) உற்பத்தியையும் பயன்பாட்டையும் அதிகரிப்பது இறக்குமதியைக் குறைக்கவும், நாட்டின் தூய எரிசக்தி மாற்றத்தை வலுப்படுத்தவும் உதவும். மேலும், ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் தற்போதைய நெருக்கடி போன்ற சர்வதேச சந்தையின் விநியோகம் மற்றும் விலை தொடர்பான பெரும் பாதிப்புகளிலிருந்து உள்நாட்டுச் சந்தையைப் பாதுகாக்கவும் இது உதவும்.


அரசின் தகவலின்படி, 'பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படவுள்ள கோபர்தன் (GOBARdhan) திட்டம், நாட்டில் பெருமளவில் கிடைக்கும் வேளாண் கழிவுகள், மாட்டுச் சாணம், சர்க்கரை ஆலைக் கழிவுகள் (Press mud), நகராட்சி கரிமக் கழிவுகள் மற்றும் இதர உயிரிப் பொருட்களைத் தூய்மையான எரிபொருளாகவும், இயற்கை உரமாகவும், கிராமப்புற வருமானமாகவும் மற்றும் நாட்டின் பொருளாதார மதிப்பாகவும் மாற்றும் திறனைக் கொண்டுள்ளது.


கோபர்தன் திட்டம், அழுத்தப்பட்ட உயிரி-வாயு (CBG) மதிப்புச் சங்கிலி முழுவதும் ஒரு ஒருங்கிணைந்த தளத்தை உருவாக்குவதன் மூலம் அழுத்தப்பட்ட உயிரி-வாயு (CBG) சார்ந்த சூழலமைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது திட்டங்களை விரைவாகச் செயல்படுத்தவும், வலுவான பொருளாதாரச் சாத்தியக்கூறுகளை உறுதிப்படுத்தவும், அத்துடன் முதலீட்டாளர்கள், கடன் வழங்குநர்கள் மற்றும் திட்ட உருவாக்குநர்களுக்கு அதிக நம்பிக்கையையும் உறுதியையும் அளிக்க உதவும்.


Original articles: What is the purpose of the GOBARdhan scheme? -Priya Kumari Shukla

Share:

கடன் தவணை செலுத்தத் தவறினால் வங்கிகள் உங்கள் தொலைபேசியை முடக்க முடியுமா? - இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் கூறுவது என்ன? - ஜார்ஜ் மேத்யூ

 திறன்பேசிகள் அல்லது மடிக்கணினிகளுக்குக் கடன் வழங்கும் வங்கிகள், கடன் தவணை செலுத்தப்படாத சூழலில் சில செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த தொழில்நுட்ப அடிப்படையிலான வழிமுறைகளைப் பயன்படுத்தலாம். இருப்பினும், இதை மிகக் கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட்டும், படிப்படியாகவும் மட்டுமே மேற்கொள்ள முடியும்.


வணிக வங்கிகள் நிலுவையில் உள்ள கடன்களை எவ்வாறு வசூலிக்க வேண்டும் என்பது குறித்த விரிவான விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது. இது வங்கிகள் மற்றும் வெளிமுகமை மூலம் செயல்படும் கடன் வசூல் முகவர்கள் (recovery agents) கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை கணிசமாக மாற்றியமைக்கிறது. ஜனவரி மாதம் 1-ஆம் தேதி, 2027-ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் இந்த புதிய கட்டமைப்பு, வங்கிக் கடன் மூலம் வாங்கப்பட்ட திறன்பேசிகளின் செயல்பாடுகளைத் தொழில்நுட்பம் மூலம் கட்டுப்படுத்துவதற்கான இந்தியாவின் முதல் விரிவான ஒழுங்குமுறை விதிகளையும் அறிமுகப்படுத்துகிறது.


கடன் வசூல் முகவர்களால் (recovery agents) ஏற்படும் துன்புறுத்தல், கடுமையான வசூல் முறைகள் மற்றும் கடன் அடிப்படையில் வாங்கப்பட்ட திறன்பேசிகளை டிஜிட்டல் கடன் வழங்குநர்கள் தொலைதூரத்திலிருந்தே முடக்குவது குறித்த புகார்கள் பல ஆண்டுகளாக எழுந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு அறிவுறுத்தல்களை நீக்கிவிட்டு ஒரே மாதிரியான விதிமுறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், நிலுவைத் தொகையை வசூலிப்பதற்கான வங்கிகளின் உரிமையையும், கடன் வாங்கியவர்களின் கண்ணியம், தனியுரிமை மற்றும் நியாயமான நடத்தையைப் பெறும் உரிமையையும் சமநிலைப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.



இனி வங்கிகள் உங்கள் திறன்பேசியினை முடக்க முடியுமா?


ஆம், ஆனால் மிகக் கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட்டும், படிப்படியாகவும் மட்டுமே அவ்வாறு செய்ய முடியும். திறன்பேசிகள் மடிக்கணினிகளுக்குக் கடன் வழங்கும் வங்கிகள், கடன் வாங்கியவர் தவணை செலுத்தத் தவறினால் அந்தச் சாதனத்தின் சில செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த தொழில்நுட்ப வழிமுறைகளைப் பயன்படுத்தலாம் என்பதை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முறைப்படி அங்கீகரித்துள்ளது. இருப்பினும், குறிப்பிட்ட அந்தச் சாதனத்தை வாங்குவதற்காகவே கடன் வழங்கப்பட்டிருந்தால் மட்டுமே இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.


கடன் ஒப்பந்தத்தில் இந்த வாய்ப்பு, வசூல் செயல்முறை மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படக்கூடிய நிலைகள் ஆகியவை தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். கடன் வாங்கியவருக்கு அறிவிப்புகள் அனுப்பப்பட்டிருந்தாலும், கடன் தவணை செலுத்தும் காலம் முடிந்து 30 நாட்கள் கடக்கும் வரை எந்தக் கட்டுப்பாடுகளையும் செயல்படுத்த முடியாது. அதன்பிறகும் கூட, கட்டுப்பாடுகள் படிப்படியாகவே அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கூறுகிறது.


கடன் ஒப்பந்தத்தின்கீழ் அனுமதிக்கப்பட்ட முழுமையான கட்டுப்பாடுகளை, கடன்தொகை செலுத்தப்படாமல் 60 நாட்கள் கடந்த பின்னரே விதிக்க முடியும். இந்தக் காலக்கெடு முடிவதற்கு முன்பாக வெளிச்செல்லும் அழைப்புகளை (outgoing calls) கூடத் தடுக்க முடியாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


திறன்பேசியின் எந்தெந்த அம்சங்களை முடக்க முடியாது?


இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கிகளால் உள்வரும் அழைப்புகள் (incoming calls), குறுஞ்செய்தி (SMS) சேவைகள் அல்லது அவசரக்கால SOS செயல்பாடுகள் ஆகியவற்றை முடக்க முடியாது. கடன் வாங்கியவரின் வேலை அல்லது பணிக்குத் தேவையான செயல்பாடுகளில் இந்தக் கட்டுப்பாடுகள் இடையூறு விளைவிப்பதாகவும் இருக்கக்கூடாது.


கடன் வாங்கியவர்கள் தங்கள் சாதனத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் நிலையை எப்போது வேண்டுமானாலும் சரிபார்க்கும் வசதி இருக்க வேண்டும். நிலுவைத் தொகை செலுத்தப்பட்டவுடன், வங்கிகள் ஒரு மணி நேரத்திற்குள் சாதனத்தின் செயல்பாடுகளை மீண்டும் முழுமையாகச் செயல்படுத்த வேண்டும். இந்தச் செயல்பாட்டை மீட்டெடுப்பதில் தாமதம் ஏற்பட்டால், சேவை மீண்டும் கிடைக்கும் வரை மணிக்கு ரூ. 250 வீதம் இழப்பீடு வங்கி தரப்பில் வழங்கப்பட வேண்டும் என்று ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த மொத்த இழப்பீட்டுத் தொகையானது கடன் தொகையைவிட அதிகமாக இருக்கக் கூடாது என உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


மேலும், இந்த வழிகாட்டுதல்கள் கடுமையான தனியுரிமைப் பாதுகாப்புகளையும் விதிக்கின்றன. கடன் பெறுபவர்களின் சாதனங்களில் சேமிக்கப்பட்டுள்ள தனிப்பட்ட தரவுகளை — அதாவது தொடர்புகள் (contacts), புகைப்படங்கள், குறுஞ்செய்திகள், அழைப்பு விவரங்கள் அல்லது இருப்பிட வரலாறு (location history) போன்றவற்றை — வங்கிகளோ அல்லது மூன்றாம் தரப்புத் தொழில்நுட்பச் சேவை வழங்குநர்களோ அணுகுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று ஒழுங்குமுறை ஆணையம் கூறியுள்ளது.


வங்கிகள் எவ்வாறு பொறுப்பாக்கப்படும்?


கடன் வசூல் தொடர்பான அழைப்புகளை வங்கிகள் பதிவு செய்ய வேண்டும். குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு பதிவுகளை பராமரிக்க வேண்டும் மற்றும் உரையாடல்கள் பதிவு செய்யப்படுவதை கடன் வாங்குபவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். வசூல் இலக்குகள் மற்றும் ஊக்கத்தொகை முறைகள் ஆகியவை கடுமையான அல்லது அத்துமீறிய நடத்தையை ஊக்குவிக்கும் வகையில் இருக்கக்கூடாது.


கடன் வசூல் தொடர்பான புகார்களைக் கையாள்வதற்கு ஒவ்வொரு வங்கியும் ஒரு பிரத்யேக குறைதீர்ப்பு அமைப்பைக் கொண்டிருக்க வேண்டும். குறைதீர்ப்பு அதிகாரியின் தொடர்பு விவரங்கள் கடன் ஆவணங்களிலும், வசூல் தொடர்பான அனைத்து தகவல்தொடர்புகளிலும் சேர்க்கப்பட வேண்டும். இதன்மூலம், ஒரு வெளிநிறுவனத்தின் மூலம் வசூல் செய்யும்போதுகூட, விதிமீறல்களுக்கு வங்கியே பொறுப்பாகிறது.

இப்போது ரிசர்வ் வங்கி ஏன் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது? 


டிஜிட்டல் கடன்கள், பிணையற்ற தனிநபர் கடன், இப்போதே வாங்கி பின்னர் செலுத்தும் (Buy Now Pay Later (BNPL)) திட்டங்கள் மற்றும் திறன்பேசிகள் மற்றும் பிற நுகர்வோர் மின்னணுப் பொருட்களுக்கான நிதியுதவி ஆகியவற்றால் கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் சில்லறை கடன் சந்தை வேகமாக விரிவடைந்துள்ளது. இந்த வளர்ச்சியுடன், கடன் வசூல் நடைமுறைகள் தொடர்பான புகார்களும் அதிகரித்துள்ளன.


கடனைத் திரும்பச் செலுத்தக் கோரி அடிக்கடி தொலைபேசியில் அழைப்பது, மிரட்டுவது, அநாவசிய நேரங்களில் நேரில் வந்து தொந்தரவு செய்வது, சமூக வலைத்தளங்கள் மூலம் அவமானப்படுத்துவது மற்றும் குடும்பத்தினரை துன்புறுத்துவது போன்ற செயல்களில் கடன் வழங்கியவர்கள் ஈடுபடுவதாகக் கடன் வாங்கியவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். அதேநேரத்தில்,  திறன்பேசிகளுக்குக் கடன் வழங்கும் சில நிறுவனங்கள், கடனுக்கான தவணைத் தொகையைச் செலுத்தத் தவறும்போது, அந்த திறன்பேசியின் பயன்பாட்டைத் முடக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.


இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) சமீபத்திய திருத்தம்; கடன் வசூல் முகவர்கள், கடன் வசூல் முகமைகள், வங்கிகளின் உள்கொள்கைகள், குறைதீர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் கடன் வசூலில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு விரிவான வழிகாட்டுதலின் மூலம் இந்த மாற்றங்களை முறைப்படுத்த முயல்கிறது. இந்த உத்தரவுகள் அனைத்து வணிக வங்கிகளுக்கும் பொருந்தும்.


முக்கியமாக, கடன் வசூல் முகமைகளுக்கான விளக்கத்தை  ரிசர்வ் வங்கி விரிவுபடுத்தியுள்ளது. இனி, கடன் நிலுவைகளை வசூலிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படும் எந்தவொரு வெளிநபர் அல்லது தனியார் நிறுவனம் — கடன் வசூல் பணிகளைச் செய்யும் 'வங்கித் தொடர்பாளர்கள்’ உட்பட — கடன் வசூல் முகமைகளாகவே கருதப்படுவர். கடன் வாங்கியவர்களிடம் நேரில் அல்லது தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் அவர்களின் பிரதிநிதிகள் 'கடன் வசூல் முகவர்கள்' என வரையறுக்கப்பட்டுள்ளனர். வெவ்வேறு ஒப்பந்தங்களின் அடிப்படையில் கடன் வசூல் பணிகள் வெளிப்படைத்தன்மையின்றி ஒப்படைக்கப்பட்டு வந்த நீண்டகாலக் கட்டுப்பாட்டு இடைவெளியை இந்த நடவடிக்கை சரிசெய்கிறது.


வங்கிகளுக்கான மாற்றங்கள் என்ன?


இந்திய ரிசர்வ் வங்கி, கடன் வசூல் பணிகளை வெறும் செயல்பாட்டுப் பணியாகக் கருதாமல், இயக்குநர்கள் குழுவால் நிர்வகிக்கப்படும் ஒரு செயல்முறையாக மாற்றியுள்ளது. வங்கிகள் ஒரு விரிவான கடன் வசூல் கொள்கையை வகுக்க வேண்டும். அது, கடன் வசூல்  நடவடிக்கைகள் எப்போது தொடங்கும், வசூல்  நடவடிக்கைகளின் வரிசைமுறை, மேல்நிலைப்படுத்தும் வழிமுறைகள், மற்றும் ஊழியர்கள் மற்றும் வெளிப்பணியமர்த்தப்பட்ட கடன் வசூல்  முகவர்கள் பின்பற்ற வேண்டிய நடத்தை விதிகள் ஆகியவற்றைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.


உண்மையான நிதி நெருக்கடியில் இருக்கும் கடனாளிகளைக் கையாள்வதற்கான நடைமுறைகளை இந்தக் கொள்கை தெளிவாக வரையறுக்க வேண்டும். இதில், தீவிரமான கடன் வசூல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முன்பு கடனாளியுடன் முறையாகத் தொடர்புகொண்டு பேசியதற்கான ஆவணப் பதிவுகளும் அடங்கும். மேலும், கடனாளி இறந்துவிட்டால் கடனை எவ்வாறு திரும்பப் பெறுவது என்பது குறித்தும், வங்கி வசூல் நடவடிக்கைகள் ரிசர்வ் வங்கியின் (RBI) விதிகளை மீறும்பட்சத்தில் கடனாளிக்கு இழப்பீடு வழங்குவது குறித்தும் இக்கொள்கை குறிப்பிட வேண்டும். அதுமட்டுமின்றி, வெளிமுகமை கடன் வசூல் முகவர்களைத் தேர்வு செய்யும்முன் முறையான தகுதிப் பரிசீலனை செய்வதும், அவர்களைத் தொடர் தணிக்கை மற்றும் செயல்முறை ஆய்வுகள் மூலம் கண்காணிப்பதையும் வங்கிகள் பலப்படுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

கடன்தாரர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் யாவை?


மிகப்பெரிய மாற்றம் என்னவென்றால், மரியாதையான முறையில் கடனைத் திரும்பப் பெறும் நடைமுறைகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவம்தான். கடன்தாரர் தனியாகக் கேட்டுக்கொண்டால் தவிர, கடன் வசூல் முகவர்கள் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே கடன்தாரர்களைத் தொடர்புகொள்ள முடியும். அவர்கள் தங்களின் அடையாள அட்டை (ID Card) மற்றும் அதிகாரப்பூர்வக் கடிதம் மூலமாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், வங்கி வழங்கிய அறிவிப்புகளின் நகல்களையும் கையோடு வைத்திருக்க வேண்டும்.


கடன் வசூல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கடன் வாங்கியவர் அல்லது பிணையாளருடன் மட்டுமே நடத்தப்பட வேண்டும். நிலுவையில் உள்ள கடன் குறித்து அண்டை வீட்டாரோடோ, உடன் பணிபுரிபவர்களுடனோ அல்லது சம்பந்தமில்லாத நபர்களுடனோ வசூல் முகவர்கள் பேசுவதற்கு வங்கிகள் அனுமதிக்கக் கூடாது. ஏற்றுக்கொள்ள முடியாததாகக் கருதப்படும் நடைமுறைகளையும் ரிசர்வ் வங்கி பட்டியலிட்டுள்ளது. இதில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துதல், அடையாளம் தெரியாத அல்லது மிரட்டும் அழைப்புகள், தொடர்ச்சியான குறுஞ்செய்திகள் அனுப்புதல், உறவினர்களைத் துன்புறுத்துதல், அச்சுறுத்தல், பொதுவெளியில் அவமானப்படுத்துதல், மற்றும் கடன் வாங்கியவரின் தகவல்கள் அல்லது பதிவுகளை சமூக ஊடகங்களில் வெளியிடுதல் ஆகியவை அடங்கும். துக்க நிகழ்வுகள், மருத்துவ அவசரநிலைகள், திருமண விழாக்கள் அல்லது அதுபோன்ற மன உளைச்சலை ஏற்படுத்தும் சூழ்நிலைகளின்போது நேரில் சென்று சந்திப்பதைத் தவிர்க்குமாறு கடன் வசூல்  முகவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


ரிசர்வ் வங்கி கடன் வசூல் முகவர்கள் மீது கவனம் செலுத்துவது ஏன்?


வங்கிப் பணிகளைச் செய்யும் வெளிமுகமை கடன் வசூல் முகவர்களின் நடத்தைகளுக்கு, அந்தந்த வங்கிகளே நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும் என ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கியுள்ளது. கடன் வசூல் முகவர்களை நியமிப்பதற்கு முன்னரும், அதன் பிறகும் அவ்வப்போதும் வங்கிகள் அவர்களின் பின்னணியைச் சரிபார்க்க வேண்டும். இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தின் 'கடன் வசூல் முகவர்' பயிற்சித் திட்டத்திலோ அல்லது அதற்கு நிகரான அங்கீகரிக்கப்பட்ட பயிற்சித் திட்டங்களிலோ சான்றிதழ் பெற்ற நபர்கள் மட்டுமே கடன் வசூல் பணியில் ஈடுபட முடியும்.


மேலும், தங்களின் பட்டியலில் உள்ள கடன் வசூல் முகமைகளின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலை வங்கிகள் தங்களது வலைத்தளங்களில் வெளியிட வேண்டும். கடன் வாங்கியவரை முதன்முறையாக வசூலுக்காகச் சந்திப்பதற்கு முன்பு அவருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். முகமை மாற்றப்பட்டாலோ அல்லது முகமையின் சேவைகள் நிறுத்தப்பட்டாலோ அதுபற்றி அவருக்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட வேண்டும். வங்கியைப் பிரதிநிதித்துவப்படுத்த யாருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்பதை கடன் வாங்கியவர்கள் எப்போதும் தெளிவாக அறிந்திருப்பதை உறுதிசெய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.


Original articles: Can banks lock your phone for loan default? What RBI’s new rules say -George Mathew

Share:

உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் ஏழை எளிய மக்களைப் பாதிக்கும். - ஜீன் டிரேஸ், முகமது ஜமீர்

 அந்த்யோதயா (Antyodaya) பிரிவுக்குள் நபர்வாரி உரிமைகளில் காணப்படும் வேறுபாடுகளைக் குறைப்பதே இதற்கான வாதமாக வைக்கப்படுகிறது. ஆனால், இது அலுவலக உதவியாளர்கள் (peons) மற்றும் காவலாளிகள் (chowkidars) ஆகியோருக்கு இடையிலான ஊதிய இடைவெளியைக் குறைப்பதற்காக, அலுவலக உதவியாளர்களின் ஊதியத்தைக் குறைப்பதற்கு ஒப்பானதாகும்.


"அந்த்யோதயா" (Antyodaya) என்ற சொல்லுக்கு "ஏழைகளின் எழுச்சி" அல்லது "கடைக்கோடி மக்களின் முன்னேற்றம்" என்று பொருள். சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள கடைசி மனிதனுக்கும் அரசின் பலன்கள் சென்றடைய வேண்டும் என்ற தத்துவத்தை குறிக்கிறது.


சமூகத்தின் கடைக்கோடியில் உள்ள ஒருவரின் நலனை முன்னிறுத்தியே நமது செயல்களை மதிப்பிட வேண்டும் என்று மகாத்மா காந்தி வலியுறுத்தினார். அந்த வகையில் பார்க்கும்போது, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தம் பல குறைபாடுகளைக் கொண்டுள்ளது. மேலும், இது மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மக்களின் உணவு உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாகும்.


குறிப்பாக, இந்தத் திருத்தம் 'அந்த்யோதயா' பிரிவைச் (Antyodaya category) சேர்ந்த சுமார் இரண்டு கோடிக்கும் அதிகமான குடும்பங்களின் உரிமைகளைப் பாதிக்கிறது. ஏழ்மையானவர்களுக்குச் சிறப்புப் பாதுகாப்பு அளிப்பதற்காக, அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கத்தால் 2000-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் 'அந்த்யோதயா அன்ன யோஜனா' (Antyodaya Anna Yojana (AAY)) திட்டம் தொடங்கப்பட்டது. உள்ளூர் சமூகங்களின் மூலமாகவே மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்கள் அடையாளம் காணப்பட வேண்டும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. இக்குடும்பங்களுக்கு ஆரம்பத்தில் பெயரளவிலான விலையில் மாதந்தோறும் 25 கிலோ உணவு தானியம் வழங்கப்பட்டது. பின்னர் இது 35 கிலோவாக உயர்த்தப்பட்டது. தற்போது, ​​'பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா' (Pradhan Mantri Garib Kalyan Anna Yojana) திட்டத்தின்கீழ் அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.


தொடக்கத்தில், மிகவும் ஏழ்மையான அல்லது ஆதரவற்ற குடும்பங்களை அடையாளம் காண்பதற்கான குறிப்பிட்ட அளவுகோல்கள் எதுவும் இருக்கவில்லை. இருப்பினும், மிகவும் பாதிக்கப்படக்கூடிய சில குழுக்களை உச்சநீதிமன்றம் தெளிவாக வரையறுத்தது. உதாரணமாக, 'குறிப்பாகப் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுக்கள்' (Particularly Vulnerable Tribal Groups (PVTG)) எதிர்கொள்ளும் தீவிரமான பாதுகாப்பற்ற நிலையை நீதிமன்றம் அங்கீகரித்ததுடன், அவர்கள் அனைவரையும் அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்தின்கீழ் கொண்டுவருமாறும் உத்தரவிட்டது. இது பெருமளவுக்குச் செயல்படுத்தப்பட்டது. அப்போதிருந்து, பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுக்கள் (PVTG) குடும்பங்களுக்கு அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) அட்டை ஒரு மிக முக்கியமான ஆதாரமாகத் திகழ்கிறது.



அதேபோல், வருமானம் ஈட்டும் உறுப்பினர்கள் இல்லாத காரணத்தால் பெரும்பாலான குடும்பங்கள் வறுமையின் விளிம்பில் இருப்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. முதிய தம்பதிகள், சிறு குழந்தையோடு வாழும் விதவைகள், ஆதரவற்ற மாற்றத்திறனாளிகள் போன்றோர் இதற்குச் சில உதாரணங்களாவர். மே மாதம் 2-ஆம் தேதி, 2003-ஆம் ஆண்டு வெளியான உத்தரவில், இதுபோன்ற அனைத்துக் குடும்பங்களையும் அந்தியோதயா திட்டத்தின்கீழ் சேர்க்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த உத்தரவைச் செயல்படுத்துவதில் மாநிலங்களுக்கு இடையே வேறுபாடுகள் இருந்தாலும், ஆதரவற்ற குடும்பங்களுக்குச் சிறப்பு உணவு உதவி வழங்குவதற்கான ஒரு பயனுள்ள வழிகாட்டுதலை இந்த உத்தரவு வழங்கியது.


தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (National Food Security Act(NFSA)), பெரும்பாலான குடும்ப அட்டைதாரர்களைக் கொண்ட (ration-card holders) 'முன்னுரிமை' (priority) குடும்பங்களுக்கு, குடும்ப அடிப்படையிலான உரிமைகளிலிருந்து தனிநபர் அடிப்படையிலான உரிமைகளுக்கு மாறுவதை அறிமுகப்படுத்தியது. இருப்பினும், 'அந்த்யோதயா' (Antyodaya) குடும்பங்களுக்குக் குடும்ப அடிப்படையிலான முறையே தொடர்ந்து பின்பற்றப்பட்டது. இதற்குக் காரணம், வருமானம் ஈட்டும் உறுப்பினர் எவரும் இல்லாத குடும்பங்கள் (எ.கா., தனியாக வசிக்கும் விதவைகள் மற்றும் முதிய தம்பதிகள்) மீது அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) திட்டம் செலுத்தும் சிறப்பு கவனம் ஆகும். இத்தகைய சிறிய குடும்பங்கள், தனிநபர் அடிப்படையிலான முறைக்கு மாறும்போது தங்கள் பொருளாதாரப் பாதுகாப்பின் முக்கிய ஆதாரத்தை இழக்கும் அபாயத்தில் இருந்தன. அவர்களில் பலர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) ரேஷன் பொருட்களை பெரிதும் நம்பியிருந்தனர். எனவே, ஏற்கனவே உள்ள நடைமுறையை மாற்றாமல் இருப்பதே சிறந்தது எனக் கருதப்பட்டது.


வேறு விதமாகச் சொன்னால், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் (NFSA) தனிநபர் பங்கீடு முறைக்கு மாறியது, பொருளாதார ரீதியாகப் பின்னடைவைத் தாங்கும் திறன் இல்லாத சிறிய குடும்பங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்தது. ஆனால், அந்த்யோதயா திட்டத்தையும், அதன்கீழ் வழங்கப்படும் 'குடும்பத்திற்கான பங்கீடு' முறையையும் அப்படியே தக்கவைத்துக்கொண்டதால், அந்தச் சிறிய குடும்பங்களைப் பாதுகாக்க முடிந்தது.


இருப்பினும், முன்மொழியப்பட்ட தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத் (NFSA) திருத்தத்தின்படி, அந்த்யோதயா குடும்பங்களுக்கான மாதந்தோறும் வழங்கப்படும் 35 கிலோ ரேஷன் பொருட்களுக்குப் பதிலாக, ஒரு நபருக்கு 7 கிலோ வீதம் (ஆனால் ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சம் 35 கிலோ வரை மட்டுமே) வழங்கப்படும் முறை கொண்டுவரப்படவுள்ளது. ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு இதனால் எந்த மாற்றமும் ஏற்படாது. ஆனால், சிறிய குடும்பங்கள் தங்கள் தற்போதைய உரிமைகளில் 20 முதல் 80 சதவீதம் வரை இழக்க நேரிடும். நாடு தழுவிய 'குடும்ப நுகர்வுச் செலவு ஆய்வு 2023-24'-ன்படி, பெரும்பாலான அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) குடும்பங்கள் (துல்லியமாகச் சொன்னால் 53 சதவீதம்) ஐந்துக்கும் குறைவான உறுப்பினர்களைக் கொண்டவை. எனவே, இந்த முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தால் யாருக்கும் எவ்விதப் பயனும் இல்லை; இழப்பு மட்டுமே மிஞ்சும் என்கின்றனர்.


தனியாக வசிக்கும் பெண்களே இதனால் மிக மோசமாகப் பாதிக்கப்படுவார்கள். அந்த்யோதயா (Antyodaya) பிரிவின்கீழ் இத்தகைய பெண்கள் சுமார் பத்து லட்சம் பேர் உள்ளனர். குடும்ப உபயோகச் செலவுக் கணக்கெடுப்பு (HCES) தரவுகளின்படி, இவர்களில் 85 சதவீதம் பேர் விதவைகள் மற்றும் 74 சதவீதம் பேர் கல்வியறிவு பெறாதவர்கள் ஆவர். எஸ்தர் டுஃப்லோ (Esther Duflo) மற்றும் பிறரின் சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டுவது போல, இவர்கள் வறுமையுடன் சேர்த்து மன உளைச்சலையும் சமூக அவமதிப்பையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்த முன்மொழியப்பட்ட திருத்தத்தால், இவர்களின் மாதாந்திர உணவு தானிய ஒதுக்கீடு 35 கிலோவிலிருந்து 7 கிலோவாகக் குறையும் என்று கூறப்படுகிறது, அதாவது 80 சதவீத அளவிற்கு சரிவு ஏற்படும் என்கின்றனர்.


நிச்சயமாக, மாதத்திற்கு 35 கிலோ என்பது பல சிறிய குடும்பங்களின் உணவுத் தேவையைவிட அதிகமாக இருக்கலாம். இருப்பினும், அந்த உபரியான தானியத்தை பொதுவாக பணமாக மாற்றலாம் அல்லது பிற பொருட்களுடன் மாற்றிக் கொள்ளலாம். அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) மாதாந்திர உணவுப் பங்கீட்டை வெறும் உணவு என்று மட்டும் கருதாமல், ஒரு பொருளாதார ஆதாரமாகவே கருத வேண்டும்.



மேலும், நாட்டின் மிக ஏழ்மையான குடும்பங்களுக்கான இந்தச் சலுகைக் குறைப்பு, 'சமத்துவம்' என்ற பெயரில் நியாயப்படுத்தப்படுகிறது. அந்த்யோதயா பிரிவுக்குள் தனிநபர் அடிப்படையில் வழங்கப்படும் சலுகை அளவுகளில் உள்ள ஏற்றத்தாழ்வைக் குறைக்கவே இது உதவும் என்பது இதற்கான வாதம். இது, அலுவலக உதவியாளர்கள் (peons) மற்றும் காவலாளிகள் (chowkidars) இடையிலான ஊதிய வேறுபாட்டைக் குறைப்பதாகக் கூறி, அலுவலக உதவியாளர்களின் ஊதியத்தைக் குறைப்பதற்கு ஒப்பானதாகும்.


இந்தத் திருத்தத்தின் உண்மையான நோக்கம் பணத்தை மிச்சப்படுத்துவதாகவே இருக்கக்கூடும். ஆனால், இதன் மூலம் கிடைக்கக்கூடிய சேமிப்பு மிகக் குறைவுதான். 2023-24-ஆம் ஆண்டில், அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்திற்கான உணவு தானிய ஒதுக்கீடு 10 மில்லியன் டன்களாக இருந்தது. அதில் 8.8 மில்லியன் டன்கள் விநியோகிக்கப்பட்டன. குடும்ப அளவு குறித்த குடும்ப உபயோகச் செலவுக் கணக்கெடுப்பு (HCES) தரவுகளைக் கொண்டு கணக்கிட்டால், முன்மொழியப்பட்ட முறையின்கீழ் அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்திற்கான உணவு தானியத் தேவை 7.6 மில்லியன் டன்கள் மட்டுமே என்பது தெளிவாகிறது. அதிகபட்சமாக, இந்தத் திருத்தத்தின் மூலம் ஆண்டுக்கு சுமார் 2 மில்லியன் டன் உணவு தானியம் மட்டுமே மிச்சமாகும். ஏற்கனவே தன்னிடம் இருக்கும் அளவுக்கு அதிகமான தானியக் கையிருப்பைச் சமாளிக்கப் அரசாங்கம் போராடி வரும் நிலையில், இந்தச் சேமிப்பால் பெரிய பலன் எதுவுமில்லை. ஆனால் ஏழைகளுக்கு ஒவ்வொரு தானியமும் மிக முக்கியமானது.


ஏழைகளின் நலனைப் பாதிக்கும் வகையில் சிறிய அளவிலான சேமிப்பைத் தேடுவதற்குப் பதிலாக, அரசு அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்தை முழுமையாகச் சீரமைக்க வேண்டும். அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்தின் பயனாளிகளின் பட்டியல் மிகவும் பழையவை. இதில் தகுதியற்றவர்கள் சேர்க்கப்பட்டிருப்பதும், தகுதியுள்ளவர்கள் விடுபட்டிருப்பதும் போன்ற பிழைகள் ஏராளமாக இருக்கக்கூடும். எந்தவொரு ரேஷன் அட்டையையும் ரத்து செய்யாமலேயே, வசதி படைத்த குடும்பங்களை 'முன்னுரிமைப் பிரிவு'க்கு (priority category) மாற்றுவதன் மூலம், அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்தில் நியாயமற்ற முறையில் விடுபட்டவர்களுக்கு இடமளிக்க முடியும். வறுமையில் வாடும் அனைத்துக் குடும்பங்களையும் இத்திட்டத்தின்கீழ் முழுமையாகக் கொண்டுவர, அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) ஒதுக்கீட்டை அதிகரிப்பதும் பயனுள்ளதாக இருக்கும். சில மாநிலங்கள் அவ்வப்போது செய்து வருவது போல, 'அந்த்யோதயா' குடும்பங்களுக்கு வழங்கப்படும் பொது விநியோகத் திட்டப் (PDS) பொருட்களுடன் பருப்பு மற்றும் சமையல் எண்ணெயையும் சேர்ப்பது இன்னும் பயனுள்ளதாக இருக்கும். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் (NFSA) முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தைப் பொறுத்தவரை, அதை முழுமையாக நிராகரிப்பதே சிறந்தது.


டிரேஸ், ராஞ்சி பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையில் வருகைதரு பேராசிரியராக (பணியாற்றுகிறார். ஜமீர், ராஞ்சியைத் தளமாகக் கொண்டு செயல்படும் ஒரு ஆராய்ச்சியாளர் ஆவார்.


Original articles: Food Security Act amendments will hurt the poorest -Jean Drèze, Mohammad Zameer

Share:

கென்-பெட்வா திட்டத்தை எதிர்ப்பவர்கள் எழுப்பிய பிரச்சினைகளை ஒன்றிய அரசு ஏன் மாநில அரசுகளுக்குத் திருப்பி அனுப்புகிறது? - அபினய் லக்ஷ்மன்

வன உரிமைச் சட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மாநில அரசே பொறுப்பு என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.


தற்போதைய செய்தி: மத்தியப் பிரதேசத்தில் செயல்படுத்தப்படவுள்ள கென்–பெட்வா நதிநீர் இணைப்புத் திட்டம் தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகம், திட்டத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள “இடம்பெயர்வு தொடர்பான பிரச்சினைகள்” (issues of displacement) குறித்து பல புகார்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக கடந்த வியாழக்கிழமை தெரிவித்தது. ஆனால், அந்தப் புகார்கள் அனைத்தும் மத்தியப் பிரதேச அரசு மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், வன உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது மாநில அரசின் பொறுப்பு என்றும் அமைச்சகம் கூறியது.


மத்தியப் பிரதேசத்தில் உள்ளூர் மக்கள் பல மாதங்களாக இந்தத் திட்டத்திற்கு எதிராகப் போராடி வருகின்றனர். சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள பரானா ஆற்றின் நீரில், சில ஆண்களும் பெண்களும் தங்கள் கழுத்தில் தூக்குக்கயிற்றை மாட்டிக்கொண்டும், சிலர் அடையாளப் பொருளாக அமைக்கப்பட்ட சிதைகளில் படுத்துக்கொண்டும் போராட்டம் நடத்திய காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி, தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தன. முதலில் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டம், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஜூலை மாதத்தில் மீண்டும் தொடங்கியது.


போராட்டங்கள் மீண்டும் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, ஜூலை மாதம் 19-ஆம் தேதி காவல்துறையினர் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர். 'ஜெய் கிசான் சங்கதன்' அமைப்பைச் சேர்ந்த உள்ளூர் செயற்பாட்டாளர் அமித் பட்நாகரை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதுடன், அப்பகுதியிலிருந்து   150 போராட்டக்காரர்களையும் அப்புறப்படுத்தினர். அப்போது அமித் பட்நாகர் 14 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.


திட்டம் குறித்த விவரங்கள்:


1980-ஆம் ஆண்டில் மத்திய நீர்ப்பாசன அமைச்சகம் மற்றும் மத்திய நீர் ஆணையத்தால் உருவாக்கப்பட்ட 'தேசிய தொலைநோக்குத் திட்டத்தின்கீழ்' ((National Perspective Plan (NPP)), நீர்வள மேம்பாடு மற்றும் உபரி நீர் கொண்ட நதிகளைப் பற்றாக்குறை உள்ள நதிகளுடன் இணைக்கும் 30 திட்டங்களில் கென்-பெட்வா நதிநீர் இணைப்புத் திட்டமும் ஒன்றாக இருந்தது. இந்தத் திட்டத்தின்கீழ், கென் ஆற்றில் தௌதன் அணை கட்டப்பட்டு, அதில் இருந்து கிடைக்கும் உபரி நீர் என அறிவிக்கப்பட்ட நீரை 221 கி.மீ நீளமுள்ள கால்வாய், 2 கி.மீ நீளமுள்ள சுரங்கப்பாதை மூலம் பெட்வா ஆற்றுக்கு மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர, இந்தத் திட்டத்தின் மூலம் 103 மெகாவாட் நீர்மின்சாரமும், 27 மெகாவாட் சூரிய மின்சாரமும் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தினால் 7,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர வேண்டிய சூழல் உள்ள நிலையில், உள்ளூர் மக்கள் இந்தத் திட்டத்திற்கு எதிராகப் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பியுள்ளனர். இதில் கூடுதல் இழப்பீடு கோருதல், இழப்பீடு மற்றும் மறுவாழ்வுத் திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டதில் உள்ள முறைகேடுகள் மற்றும் இந்தியாவின் வனஉரிமைச் சட்டத்தின்கீழ் இந்தத் திட்டத்திற்கு கிராம சபையின் ஒப்புதல் பெறும் நடைமுறையில்  குறைபாடுகள்  உள்ளன.




என்ன கேட்கப்பட்டது? ஒன்றிய அரசு என்ன கூறியது?


மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகம் திட்டம் தொடர்பான பிரச்சினைகளை மாநில அரசிடம் அனுப்பிய நிலையில், அது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜேந்திர சிங் லோதி ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தது.


திட்டத்தால் பாதிக்கப்பட்ட மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை, அவர்களில் பழங்குடியினத்தைச் சேர்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை, விதிமுறைகளின்படி பகுதி மற்றும் முழு இழப்பீட்டுத் தொகையைப் பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை ஆகியவை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. மேலும், திட்டத்திற்கு ஒப்புதல் வழங்குவதற்காக எத்தனை கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதில்  எத்தனை பேர் கலந்து கொண்டனர், அந்தக் கூட்டங்களில் என்னென்ன குறைகள் மற்றும் புகார்கள் முன்வைக்கப்பட்டன என்றும் ராகுல்காந்தியும் லோதியும் கேட்டிருந்தனர்.


மேலும், முழுமையான இழப்பீடு வழங்கப்படுவதற்கு முன்பே குடும்பங்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவங்கள் குறித்து அரசுக்குத் தெரியுமா, போராட்டங்கள் குறித்து அரசு கவனத்தில் எடுத்துள்ளதா என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.


கேள்விகளில் பெரும்பாலானவை, திட்டத்தால் பாதிக்கப்படும் உள்ளூர் மக்களுக்கான இழப்பீடு, மறுவாழ்வு மற்றும் மறுகுடியேற்றத் திட்டங்கள்,  2006-ஆம் ஆண்டின் இந்திய வனஉரிமைச் ((Recognition of Forest Rights) Act) சட்டத்தின்கீழ் பெற வேண்டிய ஒப்புதல் நடைமுறைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருந்தன. இழப்பீடு மற்றும் மறுவாழ்வு தொடர்பான விவகாரங்களிலும், வனஉரிமைச் சட்டத்தின்கீழ் ஒப்புதல் பெறும் நடைமுறைகளிலும், இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது மாநில அரசின் பொறுப்பு என்று மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.




ஒன்றிய அரசு ஏன் பிரச்சினைகளை மாநில அரசிடம் ஒப்படைக்கிறது?


மக்களவையில் அளித்த பதிலில், மத்திய இணை அமைச்சர் துர்காதாஸ் உய்கே குறிப்பிடுகையில், நிலம் கையகப்படுத்துதல், இழப்பீடு வழங்குதல், மறுவாழ்வு மற்றும் மறுகுடியேற்றம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் 2013-ஆம் ஆண்டின் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத் தன்மைக்கான நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறுகுடியேற்ற உரிமைச் சட்டத்தின்கீழ் மாநில அரசால் மேற்கொள்ளப்படுகின்றன என்று தெரிவித்தார். 'பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகள் (வன உரிமைகளை அங்கீகரித்தல்) சட்டம், 2006'-ன்கீழ் (Scheduled Tribes and Other Traditional Forest Dwellers (Recognition of Forest Rights) Act, 2006) மாநில அரசே அதனைச் செயல்படுத்தும் அமைப்பாக உள்ளதாக ஒன்றிய அரசு  சுட்டிக்காட்டியது.


இருப்பினும், இந்தத் திட்டம் மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் தலைமையில் செயல்படுத்தப்படுகிறது. மேலும், வனஉரிமைச் சட்டம் தொடர்பான அனைத்து விவகாரங்களுக்கும் மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகமே ஒருங்கிணைப்பு அமைச்சகமாக செயல்பட வேண்டும் என்று சட்டம் குறிப்பிடுகிறது. கென்–பெட்வா நதிநீர் இணைப்புத் திட்டத்தின் வழிகாட்டுதல் மற்றும் கண்காணிப்புக் குழுக்களில் (Steering and Monitoring Committees) அமைச்சகத்தின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளதாக பழங்குடியினர் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையிலும் இது போன்ற குறிப்பு வந்துள்ளது. இந்தக் குழு, திட்டத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான (Project Affected Families (PAFs)) மறுவாழ்வு மற்றும் மறுகுடியேற்ற செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னேற்றத்தைக் கண்காணிக்கிறது.


கென்–பெட்வா திட்டம் தொடர்பாக போராட்டக்காரர்கள் எழுப்பும் பிரச்சினைகள் மாநில அரசே கையாள வேண்டியவை என்று குறிப்பிட்டதுடன், இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறுகுடியேற்ற உரிமைச் சட்டத்தின் மற்றும் (வன உரிமைகளை அங்கீகரித்தல்) சட்டம் போன்ற சட்டங்களின் விதிமுறைகளை மாநில அரசுகள் மிகுந்த கவனத்துடன் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் பழங்குடியினர் விவகார அமைச்சகம் தொடர்ந்து மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதி வருவதாக வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக, மக்களின் வனஉரிமைக் கோரிக்கைகள் முறையாகப் பரிசீலிக்கப்பட்டு முடிவு செய்யப்படுவதற்கு முன்பு, அவர்களை அவர்களது வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்றக்கூடாது என்று மாநில நிர்வாகங்களுக்கு அமைச்சகம்  எச்சரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

 

Original articles: Why the Centre is passing on issues raised by Ken-Betwa protesters to State governments -Abhinay Lakshman

Share:

வங்கி பதிவேடுகள் சான்றளிப்பு மசோதா என்றால் என்ன? ஏன் இது தரவு தொடர்பான கவலைகளை எழுப்பியுள்ளது? -வினீத் பல்லா

 இந்த மசோதா, நீதிமன்றத்தில் வங்கிப் பதிவேடுகளைச் சான்றுகளாக ஏற்றுக்கொள்ளும் முறையை நிர்வகிக்கும் ஆங்கிலேயக் காலச் சட்டத்தை, டிஜிட்டல் வங்கி யுகத்திற்கு ஏற்றவாறு புதுப்பிக்கிறது? இருப்பினும், தரவு தனியுரிமையைப் பாதுகாப்பதற்கும், வலுவான டிஜிட்டல் பாதுகாப்புகளை வழங்குவதற்கும் இது போதுமானதாக இருக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


கடந்த செவ்வாய்க்கிழமையன்று மக்களவையில், 2026-ஆம் ஆண்டின் வங்கி புத்தகங்கள் சான்றளிப்பு மசோதா (Bankers’ Books Evidence Bill) நிறைவேற்றப்பட்டது. இது, 1891-ஆம் ஆண்டின் ஆங்கிலேயக் கால வங்கியாளர்களின் கணக்குப் புத்தகச் சான்றுகள் சட்டத்தை முழுமையாக மாற்றி, நிதிச் சான்றுகளை நிர்வகிக்கும் சட்டக் கட்டமைப்பை நவீன, டிஜிட்டல் வங்கி அமைப்புகளுக்கு இணையாகக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


மிகவும் தேவையான இந்தத் தொழில்நுட்ப மாற்றத்தை சட்ட நிபுணர்கள் வரவேற்றாலும், பயனர்களின் தரவுத் தனியுரிமை மற்றும் வலுவான டிஜிட்டல் பாதுகாப்பு வழிமுறைகளைச் சேர்ப்பதற்கான நல்ல வாய்ப்பு வீணடிக்கப்பட்டுள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.


சட்டம் ஏன் மாற்றப்படுகிறது?


135 ஆண்டுகள் பழமையான இந்தச் சட்டத்தின் முதன்மை நோக்கம், சட்ட நடவடிக்கைகளில் வங்கிப் பதிவேடுகளின் சான்றளிக்கப்பட்ட நகல்களைச் சான்றுகளாகப் பயன்படுத்த அனுமதிப்பதாகும். இதன் மூலம், வங்கி அதிகாரிகள் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திற்கு நேரில் வந்து உண்மையான வங்கிப் பதிவேடுகளைத் தாக்கல் செய்யும் அலைச்சல் தவிர்க்கப்பட்டது.


இந்த மசோதாவின் நோக்கங்கள் மற்றும் காரணங்கள் பற்றி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, "வங்கிப் பதிவுகள் பெரும்பாலும் காகித வடிவில் பராமரிக்கப்பட்ட" காலத்தில் பழைய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இன்று, "தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் மற்றும் டிஜிட்டல் வங்கிச் சேவையின் வளர்ச்சியால்", வங்கிப் பதிவேடுகள் "சமகாலத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதிகளவில் உருவாக்கப்பட்டு, சேமிக்கப்பட்டு, பராமரிக்கப்படுகின்றன". இதன் காரணமாக, "தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பை நவீனமயமாக்கி வலுப்படுத்துவது" அவசியம் என அரசாங்கம் கருதியது.


சட்ட மசோதா என்ன செய்கிறது?


இந்தச் சட்ட மசோதாவின் மிக முக்கியமான மாற்றம், "வங்கிப் புத்தகங்கள்" (Bankers' books) என்பதற்கான அதன் விரிவுபடுத்தப்பட்ட விளக்கமாகும். பழைய சட்டத்தில், வங்கிப் புத்தகங்கள் என்பது "எழுதப்பட்ட வடிவில், காந்த நாடா (magnetic tape) அல்லது வேறு ஏதேனும் இயந்திர அல்லது மின்னணு தரவு மீட்டெடுப்பு முறையில் வைக்கப்பட்டுள்ள பதிவுகள்" என்று மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்தது. ஆனால், 2026-ஆம் ஆண்டின் இந்த மசோதா, "மின்னணு அல்லது டிஜிட்டல் வடிவில், உள்ளூரிலோ (onsite) அல்லது வேறு ஏதேனும் வெளி இடங்களிலோ (offsite) அல்லது மெய்நிகர் (virtual), மேகக்கணி (cloud) அமைப்புகளிலோ" சேமிக்கப்படும் பதிவுகளையும் அங்கீகரிக்கிறது.


இந்த டிஜிட்டல் பதிவுகள் நீதிமன்றத்தில் எவ்வாறு சமர்ப்பிக்கப்படுகின்றன என்பதை முறைப்படுத்துவதற்காக, இந்த மசோதா குறிப்பிட்ட சான்றிதழ் வடிவங்களையும், நிபந்தனைகளையும் அறிமுகப்படுத்துகிறது. உச்சநீதிமன்றத்தின் பதிவு பெற்ற வழக்கறிஞரும் பட்டயக் கணக்காளருமான தீபக் ஜோஷி, இதை ஒரு பெரிய முன்னேற்றம் என்று குறிப்பிட்டார். மேலும், எது சான்றாகக் கருதப்படும் என்பதை நிர்வகிக்கும் பொதுவான சாட்சியச் சட்டமான பாரதிய சக்ஷ்ய அதினியத்தின்கீழ் (Bharatiya Sakshya Adhiniyam), மின்னணு ஆதாரங்களுக்குத் தேவைப்படும் பிரிவு-63 சான்றிதழுடன் இதை ஒப்பிட்டார். "சான்றளிக்கப்பட்ட நகல்களுடன் சேர்த்து வழங்கப்பட வேண்டிய ஒரு குறிப்பிட்ட படிவத்தையும் உறுதிமொழிகளையும் அவர்கள் வழங்கியுள்ளனர். இதன் மூலம், நகலின் உண்மைத்தன்மை குறித்து நீதிமன்றம் திருப்தி அடைய முடியும்," என்று ஜோஷி கூறினார்.


1891-ஆம் ஆண்டு சட்டத்தின்கீழ், ஒரு "சிறப்புக் காரணத்திற்காக" (special cause) நீதிமன்றம் உத்தரவிடும்போது, வங்கி நேரடியாக ஒரு தரப்பாக இல்லாத வழக்குகளில் ஆவணங்களைச் சமர்ப்பிக்கவோ அல்லது சாட்சிகளாக ஆஜராகவோ வங்கி அதிகாரிகளைக் கட்டாயப்படுத்த முடியாது. இருப்பினும், பழைய சட்டம் "சிறப்பு காரணம்" என்பதற்கான வரையறையை வழங்கவில்லை.


தற்போது இந்த மசோதா "சிறப்புக் காரணம்" என்பதற்கான தெளிவான வரையறையை வழங்குகிறது. ஒரு பதிவேட்டின் துல்லியத்தன்மை சந்தேகத்திற்குரியதாக இருக்கும் நிகழ்வுகள், வழக்கமான பதிவேடு பராமரிப்பு தடைபட்டிருக்கும் நிகழ்வுகள் அல்லது வங்கி ஒரு ஆய்வு உத்தரவை மீறும் நிகழ்வுகள் ஆகியவற்றை "சிறப்புக் காரணம்" என்று வரையறுக்கிறது.


உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கும் அன்ஷுல் குப்தா, காசோலை மோசடி வழக்குகள் (cheque bounce) போன்ற வணிகரீதியான வழக்குகளை இந்த மாற்றங்கள் கணிசமாக முடிக்க உதவும் என்று சுட்டிக்காட்டினார். வங்கி நேரடியாக வழக்கில் சம்பந்தப்படாதபோது, ​​அசல் பதிவேடுகளைச் சமர்ப்பிக்கவோ அல்லது சாட்சிகளாக ஆஜராகவோ வங்கி அதிகாரிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து வர வேண்டிய அவசியம் இனி இருக்காது என்று அவர் கூறினார். அதற்குப் பதிலாக, "மின்னணுப் பதிவேடுகளை நேரடியாகச் சமர்ப்பிக்க முடியும், அவை ஏற்றுக்கொள்ளப்படும்" என்று கூறிய அவர், இது போன்ற வழக்குகளின் கால அளவைக் குறைக்க உதவும் என்றும் குறிப்பிட்டார்.


காவல்துறையின் அதிகாரங்கள் குறித்த கவலை


இந்த மசோதா தொடர்பாக, முக்கிய விவாதப் பொருளாக பிரிவு-11 ஆனது இருந்து வருகிறது. இப்பிரிவின்படி, விசாரணைகளுக்காக வங்கிக் கணக்குப் பதிவேடுகளைச் சமர்ப்பிக்கக் கட்டாயப்படுத்தும் நீதிமன்ற உத்தரவுகள், "காவல் கண்காணிப்பாளர் (SP) பதவிக்குக் குறையாத" ஒரு அதிகாரியால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளாகக் கருதப்படலாம்.


இருப்பினும், இது ஒரு புதிய அதிகாரம் அல்ல. பழைய சட்டத்தின் பிரிவு 8-ல் இதேபோன்ற ஒரு விதிமுறை இருந்தது. அது, காவல் கண்காணிப்பாளர் (SP)  தகுதிநிலையிலான ஒரு அதிகாரி, காவல்துறை விசாரணைகளுக்காகப் பதிவேடுகளைக் கோர அனுமதித்தது. விசாரணைக்குத் தேவைப்படும்போது இத்தகைய அதிகாரங்கள் வழக்கமாக வழங்கப்படுவதால், இதில் "கவலைப்படத் தேவையில்லை," என்று கூறிய ஜோஷி, இந்த விதிமுறை குறித்த கவலையை ஒரு "திசைதிருப்பும் முயற்சி" (red herring) என்று குறிப்பிட்டார்.


ஆனால், பதிவேடுகள் இப்போது மின்னணு வடிவில் இருப்பதால், அவற்றை ஒரு தொலைபேசியில் எளிதாகப் பெறவும் பகிரவும் முடியும் என்றும், இது தரவுக் கசிவுகள் மற்றும் தனியுரிமை குறித்த விதிமீறல்களின் (data leaks and privacy violations) அபாயத்தை அதிகரிக்கிறது என்றும் குப்தா சுட்டிக்காட்டினார். அதேசமயம், காகித வடிவிலான வங்கிப் பதிவேடுகள் அல்லது கணக்குப் புத்தகங்களைப் பொறுத்தவரை, அவற்றைப் பகிர்வதோ அல்லது நகல் எடுப்பதோ கடினமாக இருந்தது. "எனவே, இத்தகைய ஆவணங்களை அணுக அனுமதிக்கும் அதிகாரம் காவல்துறையிடம் இல்லாமல் நீதிமன்றத்திடமே இருக்க வேண்டும் என்று குப்தா வாதிட்டார்.



பிற சிக்கல்களும் தவறவிடப்பட்ட வாய்ப்புகளும்


இந்த மசோதா சட்டத்தை நவீனப்படுத்தினாலும், நடைமுறைப் பாதுகாப்புகளில் இன்னும் குறைபாடுடையதாக இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர். டிஜிட்டல் ஆவணங்களை நிரூபிப்பதற்கோ அல்லது மறுப்பதற்கோ வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் தற்போது சிரமப்படுகிறார்கள் என்று ஜோஷி கூறினார். ஆதாரத்தின் நம்பகத்தன்மையையும் உண்மைத்தன்மையையும் உறுதி செய்வதற்காக, ஒரு மின்னணு கோப்பு சிதைக்கப்படவில்லை என்பதைச் சரிபார்க்கப் பயன்படுத்தப்படும் தனித்துவமான டிஜிட்டல் கைரேகையான ஹாஷ் மதிப்புகள் (hash values) போன்ற நவீன பாதுகாப்புகளை இந்த மசோதா உள்ளடக்கியிருக்கலாம் என்று அவர் பரிந்துரைத்தார்.


மேலும் குப்தா குறிப்பிட்டதாவது, "இந்த மசோதா தரவுப் பாதுகாப்புப் பிரச்சினையைக் கையாளவில்லை," என்று அவர் கூறினார். "தரவுக் கசிவுகள் மற்றும் முறைகேடுகளுக்கு நமது வங்கிகள் தயாராக இருக்கின்றனவா?"


வங்கியியல் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி அகாடமியின் (Banking Education Training Research Academy) தலைவரும் முன்னாள் வங்கியாளருமான தேவிதாஸ் துல்ஜாபுர்கர், வங்கியின் வலையமைப்பு மற்றும் சாதனங்கள் இணைய அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பாக உள்ளன என்பதை ஒரு கிளைத் தலைவர் சான்றளிக்க வேண்டும் என்ற மசோதாவின் தேவை, உள்ளூர் வங்கி ஊழியர்கள் மீது சுமையை ஏற்படுத்தும் என்று கூறினார். "ஒரு மையப்படுத்தப்பட்ட வங்கிச் சூழலில், ஒரு கிளை மேலாளர் பொதுவாக வங்கியின் தரவு மையம், மேகக்கணிமை சேவை வழங்குநர் அல்லது இணையப் பாதுகாப்பு குறித்து தனிப்பட்ட அறிவைக் கொண்டிருப்பதில்லை அல்லது அவற்றைக் கட்டுப்படுத்துவதில்லை," என்று துல்ஜாபுர்கர் கூறினார். அதற்குப் பதிலாக, நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப அதிகாரிகள் அமைப்பு-ஒருங்கிணைப்புச் சான்றிதழ்களைக் கையாளும் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சான்றிதழ் முறையை பரிந்துரைத்தார்.


மேலும், எந்தவொரு நிதி நிறுவனத்திற்கும் வெறும் அறிவிப்பின் மூலம் சட்டத்தின் விதிகளை நீட்டிக்க ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதாவின் 4-வது பிரிவு குறித்தும் அவர் கவலைகளை எழுப்பினார். அவரைப் பொறுத்தவரை, நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல், தளர்வாக ஒழுங்குபடுத்தப்பட்ட டிஜிட்டல் கடன் இடைத்தரகர்கள் (digital lending intermediaries) அல்லது நிதிதொழில்நுட்பத் தளங்கள் (fintech platforms), "ஒரு அட்டவணைப்படுத்தப்பட்ட வணிக வங்கிக்கு வழங்கப்படும் அதே நம்பகத்தன்மையை தானாகவே பெறக்கூடாது".


பழைய சட்டத்திற்குப் பதிலாக முழுமையாகப் புதிய சட்டத்தைக் கொண்டுவருவது சட்ட விளக்கச் சிக்கல்களையும் பல வழக்குகளையும் உருவாக்கக்கூடும். ஏனெனில், புதிய விதிகளும் வரையறைகளும் தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளுக்குப் பொருந்துமா என்பதைத் தரப்பினர் விவாதிப்பார்கள் என்று ஜோஷி கூறினார். "இதன் முதல் பாதிப்பு எப்போதும் நிலுவையில் உள்ள வழக்குகளுக்குத் தான்," என்றும் தெரிவித்துள்ளார்.


Original articles: What is the Bankers’ Books Evidence Bill and why has it raised data concerns? -Vineet Bhalla

Share:

நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் ஒரு நகரம் எப்படி இருக்க வேண்டும்? இந்தியா அந்த நிலையை எவ்வாறு அடையலாம்? -மனிஷ் துபே, கே.வி. சந்தோஷ் ராகவன்

 டர்பன் (Durban) மற்றும் புவனேஸ்வர் போன்ற நகரங்கள் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு நீர் கிடைப்பதை உறுதி செய்துள்ளன. லாஸ் வேகாஸ் மற்றும் பெங்களூரு நகரங்கள் அதிகப்படியான நீர் பயன்பாட்டைத் தடுக்க அதிக நீர்க் கட்டண முறையை பயன்படுத்துகின்றன. சியோல் மற்றும் குவஹாத்தி நகரங்கள், வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமவெளிப் பகுதிகளை பாதுகாக்கும் வகையில் நகரத்திட்டமிடல் விதிமுறைகளை வலுப்படுத்தியுள்ளன. சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் ஒரு நம்பகமான நீர் ஆதாரமாக மாற முடியும் என்பதை விண்ட்ஹோக் மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களின் நீர மேலாண்மை முறை காட்டுகின்றன.


நகர்ப்புற இந்தியாவில் நிலவும் நீர் நெருக்கடியை, சிறந்த நெருக்கடி மேலாண்மை மூலம் மட்டுமே  சரிசெய்துவிட முடியாது. வரும்  ஆண்டுகளில், இந்திய நகரங்களில் பல கோடி மக்கள் கூடுதலாக வசிக்கவும் பணியாற்றவும் உள்ளனர். இது நகர்ப்புறங்களில் நீருக்கான தேவையை  அதிகரிக்கச் செய்யும். நீர் விநியோக அமைப்புகளை வடிவமைத்தல், அவற்றுக்கான நிதியைத் திரட்டுதல் மற்றும் அவற்றை நிர்வகித்தல் போன்ற  முறைகளை நாம் மாற்றியமைக்காவிட்டால், தற்போதைய நீர் பற்றாக்குறை, வெள்ளப்பெருக்கு மற்றும் நீர் மாசுபாடு போன்ற பிரச்சனைகள் எதிர்காலத்தில் இன்னும் பெரிய அளவில் உருவெடுக்கும்.


இப்போது நமக்கு முன் உள்ள சவால், நகரங்கள் அதிக நீர்ப் பாதுகாப்புடன் செயல்படும் ஒரு மாற்று எதிர்காலத்தை கற்பனை செய்து, அந்த இலக்கை அடைவதற்கான தெளிவான உத்திகளை அடையாளம் காண்பதாகும்.


எதிர்காலத்தைப்பற்றி சிந்திக்க ஒரு பயனுள்ள வழி, திட்டமிடலின் தொடக்கத்திலிருந்தே நீர் மேலாண்மையை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் நகரங்களை திட்டமிடுவதாகும். இது போன்ற நகரங்கள் தங்கள் பகுதிகளில் உள்ள ஆறுகள், ஏரிகள் மற்றும் நிலத்தடி நீர்த்தேக்கங்களை அடிப்படையாகக் கொண்டு வளர வேண்டும். மேலும், மழைநீரைச் சேமித்தல், சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை மறுபயன்படுத்துதல், நவீன நீர்விநியோக வலையமைப்புகள் மூலம் நீர் இழப்பைக் குறைத்தல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். இதனுடன், அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டாலும் இந்த நீண்டகால முன்னேற்றங்களைத் தொடர்ந்து செயல்படுத்தக்கூடிய வலுவான அமைப்புகளும் இருக்க வேண்டும்.


இந்தக் கண்ணோட்டத்தின் பல அம்சங்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. மெல்போர்ன் நகரம் மழைநீரைப் பிடித்து சேமிக்கும் முறைகளை விரிவுபடுத்தியுள்ளதுடன், குடிநீர் அல்லாத தேவைகளுக்குப் பயன்படுத்துவதற்காக ‘மூன்றாவது குழாய்’ (Third-pipe) நீர் விநியோக அமைப்பையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதேபோல், சிங்கப்பூர், தற்போது தனது மொத்த நீர்த் தேவையில் 40% அளவை மறுசுழற்சி செய்யப்பட்ட நீரின் மூலம் பூர்த்தி செய்கிறது. இந்தியாவில் மும்பை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களும் தங்களின் காலநிலை செயல் திட்டங்களில் நீர் மேலாண்மை சார்ந்த அணுகுமுறைகளைச் சேர்க்கத் தொடங்கியுள்ளன.


நீரை மையமாகக் கொண்ட திட்டமிடல்


முதலாவதாக, நகர்ப்புறத் திட்டமிடல் நீரை அடிப்படையாகக்கொண்டு தொடங்க வேண்டும். திட்டம் முடிந்த பிறகு நீரைப் பற்றி சிந்திக்கக் கூடாது. தற்போது, நகர்ப்புறங்களின் பெருந்திட்டங்கள், பெரிய போக்குவரத்துத் திட்டங்கள் அல்லது குடியிருப்புத் திட்டங்கள் ஆகியவற்றில் நீர் எங்கிருந்து கிடைக்கும், எவ்வளவு நீரை நிலையான முறையில் பயன்படுத்த முடியும், வெள்ளநீர் மற்றும் மாசுபட்ட நீரோட்டம் எங்கு செல்லும் போன்ற அம்சங்களுக்கு போதிய முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. மாறாக, ஒவ்வொரு பெருந்திட்டமும் முக்கிய வழித்தடமும், ஆறுகள், ஏரிகள், குளங்கள், வடிகால்கள், நீர் செறிவூட்டும் மண்டலங்கள் மற்றும் வெள்ளச் சமவெளிகளை வரைபடமாக்கும் ஒரு நீர் கட்டமைப்புத் திட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலம் உள்ளூர் நீர்வளங்களை சிறப்பாகப் பயன்படுத்துவதுடன், நீர் மேலாண்மைக்கான செலவையும் குறைக்க முடியும்.


வூஹான் மற்றும் பிலடெல்பியா போன்ற நகரங்கள், புயல்கள் மற்றும் வறட்சி ஆகிய இரண்டையும் நிர்வகிப்பதற்காக, பூங்காக்கள், சதுப்புநிலங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களை வழக்கமான வடிகால்களுடன் இணைத்து, மண்டலப் பிரிப்பு மற்றும் உள்கட்டமைப்பிற்கு வழிகாட்ட நீல-பச்சை கட்டங்களைப் பயன்படுத்தியுள்ளன. இந்தியாவில், சென்னை மற்றும் பெங்களூருவில் நீர் மேலாண்மை திறன் கொண்ட சுற்றுப்புறங்கள் மற்றும் நீர் உறிஞ்சும் நகர்புற (Sponge City) முன்னோடித் திட்டங்கள், இதுபோன்ற கருத்துகளை உள்ளூர் நகரத்திட்டங்களில் எவ்வாறு இணைக்கலாம் என்பதைக் காட்டுகின்றன.


இரண்டாவதாக, நகரங்கள் தொலைவில் உள்ள, எளிதில் பாதிப்படையக்கூடிய மற்றும் அதிக ஆற்றல் தேவைப்படும் நீர் ஆதாரங்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதன் மூலம், முழுமையான தன்னிறைவை அடைவதை  தவிர்த்து, உள்ளூர் நீர் பாதுகாப்பை நோக்கி நகர வேண்டும். இதன் பொருள் ஒவ்வொரு நகரமும் தன்னிறைவு பெற்றதாக இருக்க முடியும் என்பதல்ல. ஒவ்வொரு நகரத்திற்கும் அதன் புவியியல் மற்றும் காலநிலையைப் பொறுத்து வெவ்வேறு வகையான நீர் ஆதாரங்கள் தேவைப்படும். வறட்சி மற்றும் பிற இடையூறுகளைத் தாங்கக்கூடிய, பல்வகைப்பட்ட நீர் விநியோகத்தைப் பராமரிக்கும் அதேவேளையில், உள்ளூர் வளங்களை அதிகபட்சமாகப் பயன்படுத்துவதே இதன் நோக்கமாகும்.


சிங்கப்பூரின் ‘நான்கு தேசிய நீர்க்குழாய்கள்’ (Four National Taps) உத்தி, உள்ளூர் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து கிடைக்கும் நீர், இறக்குமதி செய்யப்பட்ட நீர், கடல்நீரைக் குடிநீராக்குதல் (Desalination), உயர்தர மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. பல்வேறு நீராதாரங்களைப் பயன்படுத்துவது, நீண்டகாலத்தில் நீர்ப் பற்றாக்குறை மற்றும் பிற பாதிப்புகளுக்கு நகரங்கள் எதிர்கொள்ளும் அபாயத்தைக் குறைக்க முடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.



இந்திய நகரங்களைப் பொறுத்தவரை, ஒரு யதார்த்தமான நீண்டகால உத்தியானது  மூன்று முக்கிய தூண்களை வலியுறுத்த வேண்டும்: அவை அதிக அளவில் மழைநீரைச் சேகரித்து நிலத்தடி நீரை மீண்டும் நிரப்புதல்; சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை பொருத்தமான அனைத்து குடிநீர் அல்லாத தேவைகளுக்கும் மறுபயன்படுத்துதல்; மற்றும் நிலத்தடி நீரை நிலையான அளவுகளுக்குள் நிர்வகித்தல் போன்றவையாகும்.


தேசிய வழிகாட்டுதல்கள் ஏற்கனவே நகரங்கள் தாங்கள் பயன்படுத்தும் நீரில் குறைந்தபட்சம் 20% நீரை மறுசுழற்சி செய்து மறுபயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. இந்த சதவீதங்கள், தொழில்துறை தொகுப்புகளுக்கான பிரத்யேக மறுபயன்பாட்டு வலைப்பின்னல்கள், பெரிய வளாகங்கள் மற்றும் வீட்டுவசதி சங்கங்களுக்கான ஊக்கத்தொகைகள் மற்றும் வடிகால்கள் மற்றும் திறந்தவெளிப் பகுதிகளுடன் இணைக்கப்பட்ட முறையான நிலத்தடி நீர் நிரப்பும் பணிகள் ஆகியவை ஆதரவாக இருக்க வேண்டும்.


பெரிய உள்கட்டமைப்புகளுக்கு அப்பாற்பட்ட தீர்வுகள்


மூன்றாவதாக, நீண்டகால நீர்ப் பாதுகாப்பிற்கு முதலீட்டு முடிவுகளில் வேறுபட்ட அணுகுமுறை தேவைப்படுகிறது. பெரிய திட்டங்கள் விரைவான மற்றும் வெளிப்படையாகத் தெரியும் பலன்களை வழங்குவதாலும் முன்னுரிமை பெறுகின்றன. அதேநேரத்தில், நீர்இழப்பைக் குறைத்தல், சதுப்புநிலங்களைப் பாதுகாத்தல் அல்லது பரவலாக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் மறுபயன்பாடு போன்ற நடவடிக்கைகள், நீண்டகாலத்தில் அதிக நன்மைகளை வழங்கினாலும், தேவையான நிதியைப் பெறுவதற்குப் போராட வேண்டியுள்ளது.


இதற்கு வலுவான அணுகுமுறையாக, திட்ட மதிப்பீட்டு செயல்முறைகளில் எளிமையான, ஆனால் கடுமையான ‘மூன்று அம்சச் சோதனை’ (Triple Test) மிகவும் வலுவான அணுகுமுறையாகும். எந்தவொரு பெரிய நீர்வழங்கல் திட்டத்திற்கும் நிதி ஒதுக்குவதற்குமுன், (i) தேவையைக் குறைத்தல் மற்றும் நீர்இழப்பைக் குறைத்தல் போன்ற நியாயமான வழிகள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளனவா (ii) ஆற்றல் செலவுகள் மற்றும் காலநிலை அபாயங்கள் உள்ளிட்ட முழு வாழ்க்கைச்சுழற்சி செலவுகள் கணக்கிடப்பட்டுள்ளனவா (iii) மேல்நிலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளின் சுற்றுச்சூழல் அமைப்புகளின் மதிப்பு அல்லது வெள்ளத்தால் ஏற்படும் சேதச்செலவுகள் போன்ற சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்கங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளனவா என்பவை உறுதி செய்யப்பட வேண்டும்.


ஒருங்கிணைந்த நகர்ப்புற நீர் மேலாண்மையை (Integrated Urban Water Management) ஏற்றுக்கொண்ட நகரங்களின் அனுபவங்கள், இது போன்ற  மதிப்பீடுகள் முதலீடுகளை உள்கட்டமைப்பை புதுப்பித்தல், நீரை மறுபயன்படுத்துதல் போன்ற இயற்கை சார்ந்த தீர்வுகளின் பக்கம் திருப்புகின்றன.


நீர் மேலாண்மை


நான்காவதாக, நிறுவனங்கள்  வரவு செலவு அறிக்கை ஆண்டுகளை மட்டும் கருத்தில் கொள்ளாமல், பத்தாண்டுகள் என்ற கண்ணோட்டத்தில் சிந்திக்கும் திறன் கொண்டிருக்க வேண்டும். இந்தியாவின் நீர் வழங்கல் நிறுவனங்கள்  பல்வேறு நிறுவனங்களுக்கிடையே பிரிக்கப்பட்ட பொறுப்புகள் மற்றும் குறைந்த தொழில்நுட்ப மற்றும் நிதிசார் தன்னாட்சி ஆகியவற்றுடன் செயல்படுகின்றன. மூலப் பாதுகாப்பு, மொத்த விநியோகம், விநியோகம், கழிவுநீர் சேகரிப்பு மற்றும் சுத்திகரிப்பு மற்றும் மறுபயன்பாடு என முழுமையான நகர்ப்புற நீர் சுழற்சிக்கான பொறுப்பை, நிலையான தலைமை மற்றும் தொழில்முறைப் பணியாளர்களின் ஆதரவுடன் பொறுப்புக்கூறக்கூடிய  நிறுவனங்களிடம் ஒருங்கிணைப்பதே ஒரு  நீண்டகாலப் பாதையாகும்.


இணைந்த சீர்திருத்தங்கள் ஒழுங்குமுறை அமைப்புகளையும் வலுப்படுத்த வேண்டும். இதன் மூலம் அவர்கள் சமமான சேவைத்தரங்களை நிர்ணயிக்கவும், ஏழைகளுக்கு தேவையானதை வழங்கவும், பயன்பாட்டு நிறுவனங்களை நிதி நிலைத்தன்மையுடன் வைத்திருக்க உதவும் கட்டணங்களை அங்கீகரிக்கவும், செயல்திறன் மற்றும் அபாயங்கள் குறித்த தரவு வெளிப்படுத்தலை அமல்படுத்தவும் முடியும். இந்தியாவில் மின்விநியோகம் மற்றும் பொதுப்போக்குவரத்து போன்ற துறைகள் மற்றும் உலகளாவிய ஒருங்கிணைந்த நீர் சீர்திருத்தங்களின் அனுபவங்கள், ஒழுங்குமுறையாளர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் நிதியளிப்பவர்கள் தெளிவான, பகிரப்பட்ட இலக்குகள் மற்றும் வெளிப்படையான தரவுகளுடன் இணைந்து செயல்படும்போது, செயல்திறன் மேம்படுகிறது மற்றும் முதலீட்டைத் தக்கவைப்பது எளிதாகிறது என்பதைக் காட்டுகின்றன.


இறுதியாக, நீடித்த மாற்றம் என்பது அரசியல், பொதுமக்களிடையே உருவாக்கப்படும் கருத்தாக்கம் மற்றும் நடைமுறை வாழ்க்கையில் காணப்படும் உதாரணங்களைப் பொறுத்தது அமையும். நீர் என்பது அடையாளம், நிலப்பரப்பு மற்றும் தினசரி வாழக்கை  முறைகளுடன் தொடர்புடையது. எனவே, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சீர்திருத்தங்கள்கூட மேலிருந்து திணிக்கப்படுபவை அல்லது பாரபட்சமானவை என்று கருதப்பட்டால் அவை தோல்வியடையக்கூடும். எதிர்காலத்தை நோக்கிய அணுகுமுறை, உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு அளிக்கும் முக்கியத்துவத்துக்கு இணையாக மக்களின் சமூக ஆதரவையும் நம்பிக்கையையும் உருவாக்குவதற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதன்கீழ், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான அடிப்படை நீர் அணுகலைப் பாதுகாத்தல், அதிகப்படியான நீர் பயன்பாட்டிற்கான கட்டணத்தை அதன் உண்மையான  ஏற்ப  நிர்ணயித்தல், நிலத்தின் விலை அதிகமாக இருந்தாலும் ஏரிகள் மற்றும் வெள்ளப் பரப்புகளைப் பாதுகாத்தல், பாதுகாப்பாகச் சுத்திகரிக்கப்பட்ட மறுசுழற்சி நீர் பயன்பாட்டின் மீது மக்களின் நம்பிக்கையை உருவாக்குதல் ஆகியவை அடங்கும்.

 

டர்பன் மற்றும் புவனேஸ்வர் நகரங்கள், சமூகங்களின் தலைமையிலான அணுகுமுறைகள் மற்றும் நியாயமான கட்டண முறைகள் மூலம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான நீர் அணுகலைப் பாதுகாத்துள்ளன. லாஸ் வேகாஸ் மற்றும் பெங்களூரு நகரங்கள், அதிகப்படியான நீர் பயன்பாட்டைத் தடுப்பதற்காக உயர்ந்த நீர்க்கட்டணங்களைப் பயன்படுத்துகின்றன. சியோல் மற்றும் குவாஹாத்தி நகரங்கள், வெள்ளப் பரப்புகளைப் பாதுகாத்து வெள்ள அபாயங்களைக் குறைப்பதற்காக நகர்புறத் திட்ட விதிமுறைகளை வலுப்படுத்தியுள்ளன. வின்ட்ஹோக் மற்றும் சென்னை நகரங்கள், சரியான உள்கட்டமைப்பு மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையின் ஆதரவுடன், சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் நம்பகமான நீராதாரமாக மாற முடியும் என்பதை எடுத்துக்காட்டுகின்றன.


எனவே, நகர்ப்புற நீருக்கான தொலைநோக்குப்பார்வை என்பது ஒரே ஒரு மிகப்பெரிய திட்டம் அல்லது தொலைதூர இலக்குப்பற்றியது அல்ல. நகரங்களை நீர் மேலாண்மைக்கு ஏற்றதாக மாற்றும் பாதைகளைத் தேர்ந்தெடுப்பதே இதன் நோக்கமாகும். ஆறுகள் மற்றும் ஏரிகளை மையமாகக்கொண்டு தொடங்கும் நகரப் பெருந்திட்டங்கள், விரிவாக்கத் திட்டங்களுக்கு முன்பாக நீர் கசிவுகளைச் சரிசெய்து தேவையைக் குறைக்கும் நடவடிக்கைகள், குறுகியகால காட்சிப்படுத்தக்கூடிய பலன்களைவிட நீண்டகால மதிப்புக்கு முன்னுரிமை அளிக்கும் முதலீடுகள், பல்வேறு ஆட்சிக் காலங்களிலும் ஒரே பாதையில் தொடர்ந்து செயல்படக்கூடிய நீர் வழங்கல் நிறுவனங்கள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள், நீரின் நுகர்வோராக மட்டுமல்லாமல், தங்களைத் தாங்கி நிற்கும் நீர் அமைப்புகளின் பாதுகாவலர்களாகவும் தங்களைக் கருதும் குடியிருப்புப் பகுதிகள் ஆகியவையே இதன் அடிப்படையாகும்.


இது போன்ற நடவடிக்கைகளின் மூலமே, இந்திய நகரங்கள் ஒவ்வொரு கோடைக்காலத்தையும் சமாளித்து, தங்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் நீர்வளத்துடன் இணைந்து வாழவும், அந்த நீர் வளத்தைப் பாதுகாக்கவும் முடியும்.


மனீஷ் துபே, இந்திய மனிதக் குடியிருப்புகள் நிறுவனத்தின் (IIHS) நிர்வாகப் பள்ளியின் தலைவராக உள்ளார். கே. வி. சந்தோஷ் ராகவன், இந்திய மனிதக் குடியிருப்புகள் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் சேவைகள் பிரிவின் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.


Original articles: What a water-wise city would look like – and how India can get there. -Manish Dubey,K.V. Santhosh Ragavan

Share: