இந்த மசோதா, நீதிமன்றத்தில் வங்கிப் பதிவேடுகளைச் சான்றுகளாக ஏற்றுக்கொள்ளும் முறையை நிர்வகிக்கும் ஆங்கிலேயக் காலச் சட்டத்தை, டிஜிட்டல் வங்கி யுகத்திற்கு ஏற்றவாறு புதுப்பிக்கிறது? இருப்பினும், தரவு தனியுரிமையைப் பாதுகாப்பதற்கும், வலுவான டிஜிட்டல் பாதுகாப்புகளை வழங்குவதற்கும் இது போதுமானதாக இருக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று மக்களவையில், 2026-ஆம் ஆண்டின் வங்கி புத்தகங்கள் சான்றளிப்பு மசோதா (Bankers’ Books Evidence Bill) நிறைவேற்றப்பட்டது. இது, 1891-ஆம் ஆண்டின் ஆங்கிலேயக் கால வங்கியாளர்களின் கணக்குப் புத்தகச் சான்றுகள் சட்டத்தை முழுமையாக மாற்றி, நிதிச் சான்றுகளை நிர்வகிக்கும் சட்டக் கட்டமைப்பை நவீன, டிஜிட்டல் வங்கி அமைப்புகளுக்கு இணையாகக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மிகவும் தேவையான இந்தத் தொழில்நுட்ப மாற்றத்தை சட்ட நிபுணர்கள் வரவேற்றாலும், பயனர்களின் தரவுத் தனியுரிமை மற்றும் வலுவான டிஜிட்டல் பாதுகாப்பு வழிமுறைகளைச் சேர்ப்பதற்கான நல்ல வாய்ப்பு வீணடிக்கப்பட்டுள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.
சட்டம் ஏன் மாற்றப்படுகிறது?
135 ஆண்டுகள் பழமையான இந்தச் சட்டத்தின் முதன்மை நோக்கம், சட்ட நடவடிக்கைகளில் வங்கிப் பதிவேடுகளின் சான்றளிக்கப்பட்ட நகல்களைச் சான்றுகளாகப் பயன்படுத்த அனுமதிப்பதாகும். இதன் மூலம், வங்கி அதிகாரிகள் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திற்கு நேரில் வந்து உண்மையான வங்கிப் பதிவேடுகளைத் தாக்கல் செய்யும் அலைச்சல் தவிர்க்கப்பட்டது.
இந்த மசோதாவின் நோக்கங்கள் மற்றும் காரணங்கள் பற்றி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, "வங்கிப் பதிவுகள் பெரும்பாலும் காகித வடிவில் பராமரிக்கப்பட்ட" காலத்தில் பழைய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இன்று, "தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் மற்றும் டிஜிட்டல் வங்கிச் சேவையின் வளர்ச்சியால்", வங்கிப் பதிவேடுகள் "சமகாலத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதிகளவில் உருவாக்கப்பட்டு, சேமிக்கப்பட்டு, பராமரிக்கப்படுகின்றன". இதன் காரணமாக, "தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பை நவீனமயமாக்கி வலுப்படுத்துவது" அவசியம் என அரசாங்கம் கருதியது.
சட்ட மசோதா என்ன செய்கிறது?
இந்தச் சட்ட மசோதாவின் மிக முக்கியமான மாற்றம், "வங்கிப் புத்தகங்கள்" (Bankers' books) என்பதற்கான அதன் விரிவுபடுத்தப்பட்ட விளக்கமாகும். பழைய சட்டத்தில், வங்கிப் புத்தகங்கள் என்பது "எழுதப்பட்ட வடிவில், காந்த நாடா (magnetic tape) அல்லது வேறு ஏதேனும் இயந்திர அல்லது மின்னணு தரவு மீட்டெடுப்பு முறையில் வைக்கப்பட்டுள்ள பதிவுகள்" என்று மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்தது. ஆனால், 2026-ஆம் ஆண்டின் இந்த மசோதா, "மின்னணு அல்லது டிஜிட்டல் வடிவில், உள்ளூரிலோ (onsite) அல்லது வேறு ஏதேனும் வெளி இடங்களிலோ (offsite) அல்லது மெய்நிகர் (virtual), மேகக்கணி (cloud) அமைப்புகளிலோ" சேமிக்கப்படும் பதிவுகளையும் அங்கீகரிக்கிறது.
இந்த டிஜிட்டல் பதிவுகள் நீதிமன்றத்தில் எவ்வாறு சமர்ப்பிக்கப்படுகின்றன என்பதை முறைப்படுத்துவதற்காக, இந்த மசோதா குறிப்பிட்ட சான்றிதழ் வடிவங்களையும், நிபந்தனைகளையும் அறிமுகப்படுத்துகிறது. உச்சநீதிமன்றத்தின் பதிவு பெற்ற வழக்கறிஞரும் பட்டயக் கணக்காளருமான தீபக் ஜோஷி, இதை ஒரு பெரிய முன்னேற்றம் என்று குறிப்பிட்டார். மேலும், எது சான்றாகக் கருதப்படும் என்பதை நிர்வகிக்கும் பொதுவான சாட்சியச் சட்டமான பாரதிய சக்ஷ்ய அதினியத்தின்கீழ் (Bharatiya Sakshya Adhiniyam), மின்னணு ஆதாரங்களுக்குத் தேவைப்படும் பிரிவு-63 சான்றிதழுடன் இதை ஒப்பிட்டார். "சான்றளிக்கப்பட்ட நகல்களுடன் சேர்த்து வழங்கப்பட வேண்டிய ஒரு குறிப்பிட்ட படிவத்தையும் உறுதிமொழிகளையும் அவர்கள் வழங்கியுள்ளனர். இதன் மூலம், நகலின் உண்மைத்தன்மை குறித்து நீதிமன்றம் திருப்தி அடைய முடியும்," என்று ஜோஷி கூறினார்.
1891-ஆம் ஆண்டு சட்டத்தின்கீழ், ஒரு "சிறப்புக் காரணத்திற்காக" (special cause) நீதிமன்றம் உத்தரவிடும்போது, வங்கி நேரடியாக ஒரு தரப்பாக இல்லாத வழக்குகளில் ஆவணங்களைச் சமர்ப்பிக்கவோ அல்லது சாட்சிகளாக ஆஜராகவோ வங்கி அதிகாரிகளைக் கட்டாயப்படுத்த முடியாது. இருப்பினும், பழைய சட்டம் "சிறப்பு காரணம்" என்பதற்கான வரையறையை வழங்கவில்லை.
தற்போது இந்த மசோதா "சிறப்புக் காரணம்" என்பதற்கான தெளிவான வரையறையை வழங்குகிறது. ஒரு பதிவேட்டின் துல்லியத்தன்மை சந்தேகத்திற்குரியதாக இருக்கும் நிகழ்வுகள், வழக்கமான பதிவேடு பராமரிப்பு தடைபட்டிருக்கும் நிகழ்வுகள் அல்லது வங்கி ஒரு ஆய்வு உத்தரவை மீறும் நிகழ்வுகள் ஆகியவற்றை "சிறப்புக் காரணம்" என்று வரையறுக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கும் அன்ஷுல் குப்தா, காசோலை மோசடி வழக்குகள் (cheque bounce) போன்ற வணிகரீதியான வழக்குகளை இந்த மாற்றங்கள் கணிசமாக முடிக்க உதவும் என்று சுட்டிக்காட்டினார். வங்கி நேரடியாக வழக்கில் சம்பந்தப்படாதபோது, அசல் பதிவேடுகளைச் சமர்ப்பிக்கவோ அல்லது சாட்சிகளாக ஆஜராகவோ வங்கி அதிகாரிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து வர வேண்டிய அவசியம் இனி இருக்காது என்று அவர் கூறினார். அதற்குப் பதிலாக, "மின்னணுப் பதிவேடுகளை நேரடியாகச் சமர்ப்பிக்க முடியும், அவை ஏற்றுக்கொள்ளப்படும்" என்று கூறிய அவர், இது போன்ற வழக்குகளின் கால அளவைக் குறைக்க உதவும் என்றும் குறிப்பிட்டார்.
காவல்துறையின் அதிகாரங்கள் குறித்த கவலை
இந்த மசோதா தொடர்பாக, முக்கிய விவாதப் பொருளாக பிரிவு-11 ஆனது இருந்து வருகிறது. இப்பிரிவின்படி, விசாரணைகளுக்காக வங்கிக் கணக்குப் பதிவேடுகளைச் சமர்ப்பிக்கக் கட்டாயப்படுத்தும் நீதிமன்ற உத்தரவுகள், "காவல் கண்காணிப்பாளர் (SP) பதவிக்குக் குறையாத" ஒரு அதிகாரியால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளாகக் கருதப்படலாம்.
இருப்பினும், இது ஒரு புதிய அதிகாரம் அல்ல. பழைய சட்டத்தின் பிரிவு 8-ல் இதேபோன்ற ஒரு விதிமுறை இருந்தது. அது, காவல் கண்காணிப்பாளர் (SP) தகுதிநிலையிலான ஒரு அதிகாரி, காவல்துறை விசாரணைகளுக்காகப் பதிவேடுகளைக் கோர அனுமதித்தது. விசாரணைக்குத் தேவைப்படும்போது இத்தகைய அதிகாரங்கள் வழக்கமாக வழங்கப்படுவதால், இதில் "கவலைப்படத் தேவையில்லை," என்று கூறிய ஜோஷி, இந்த விதிமுறை குறித்த கவலையை ஒரு "திசைதிருப்பும் முயற்சி" (red herring) என்று குறிப்பிட்டார்.
ஆனால், பதிவேடுகள் இப்போது மின்னணு வடிவில் இருப்பதால், அவற்றை ஒரு தொலைபேசியில் எளிதாகப் பெறவும் பகிரவும் முடியும் என்றும், இது தரவுக் கசிவுகள் மற்றும் தனியுரிமை குறித்த விதிமீறல்களின் (data leaks and privacy violations) அபாயத்தை அதிகரிக்கிறது என்றும் குப்தா சுட்டிக்காட்டினார். அதேசமயம், காகித வடிவிலான வங்கிப் பதிவேடுகள் அல்லது கணக்குப் புத்தகங்களைப் பொறுத்தவரை, அவற்றைப் பகிர்வதோ அல்லது நகல் எடுப்பதோ கடினமாக இருந்தது. "எனவே, இத்தகைய ஆவணங்களை அணுக அனுமதிக்கும் அதிகாரம் காவல்துறையிடம் இல்லாமல் நீதிமன்றத்திடமே இருக்க வேண்டும் என்று குப்தா வாதிட்டார்.
பிற சிக்கல்களும் தவறவிடப்பட்ட வாய்ப்புகளும்
இந்த மசோதா சட்டத்தை நவீனப்படுத்தினாலும், நடைமுறைப் பாதுகாப்புகளில் இன்னும் குறைபாடுடையதாக இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர். டிஜிட்டல் ஆவணங்களை நிரூபிப்பதற்கோ அல்லது மறுப்பதற்கோ வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் தற்போது சிரமப்படுகிறார்கள் என்று ஜோஷி கூறினார். ஆதாரத்தின் நம்பகத்தன்மையையும் உண்மைத்தன்மையையும் உறுதி செய்வதற்காக, ஒரு மின்னணு கோப்பு சிதைக்கப்படவில்லை என்பதைச் சரிபார்க்கப் பயன்படுத்தப்படும் தனித்துவமான டிஜிட்டல் கைரேகையான ஹாஷ் மதிப்புகள் (hash values) போன்ற நவீன பாதுகாப்புகளை இந்த மசோதா உள்ளடக்கியிருக்கலாம் என்று அவர் பரிந்துரைத்தார்.
மேலும் குப்தா குறிப்பிட்டதாவது, "இந்த மசோதா தரவுப் பாதுகாப்புப் பிரச்சினையைக் கையாளவில்லை," என்று அவர் கூறினார். "தரவுக் கசிவுகள் மற்றும் முறைகேடுகளுக்கு நமது வங்கிகள் தயாராக இருக்கின்றனவா?"
வங்கியியல் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி அகாடமியின் (Banking Education Training Research Academy) தலைவரும் முன்னாள் வங்கியாளருமான தேவிதாஸ் துல்ஜாபுர்கர், வங்கியின் வலையமைப்பு மற்றும் சாதனங்கள் இணைய அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பாக உள்ளன என்பதை ஒரு கிளைத் தலைவர் சான்றளிக்க வேண்டும் என்ற மசோதாவின் தேவை, உள்ளூர் வங்கி ஊழியர்கள் மீது சுமையை ஏற்படுத்தும் என்று கூறினார். "ஒரு மையப்படுத்தப்பட்ட வங்கிச் சூழலில், ஒரு கிளை மேலாளர் பொதுவாக வங்கியின் தரவு மையம், மேகக்கணிமை சேவை வழங்குநர் அல்லது இணையப் பாதுகாப்பு குறித்து தனிப்பட்ட அறிவைக் கொண்டிருப்பதில்லை அல்லது அவற்றைக் கட்டுப்படுத்துவதில்லை," என்று துல்ஜாபுர்கர் கூறினார். அதற்குப் பதிலாக, நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப அதிகாரிகள் அமைப்பு-ஒருங்கிணைப்புச் சான்றிதழ்களைக் கையாளும் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சான்றிதழ் முறையை பரிந்துரைத்தார்.
மேலும், எந்தவொரு நிதி நிறுவனத்திற்கும் வெறும் அறிவிப்பின் மூலம் சட்டத்தின் விதிகளை நீட்டிக்க ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதாவின் 4-வது பிரிவு குறித்தும் அவர் கவலைகளை எழுப்பினார். அவரைப் பொறுத்தவரை, நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல், தளர்வாக ஒழுங்குபடுத்தப்பட்ட டிஜிட்டல் கடன் இடைத்தரகர்கள் (digital lending intermediaries) அல்லது நிதிதொழில்நுட்பத் தளங்கள் (fintech platforms), "ஒரு அட்டவணைப்படுத்தப்பட்ட வணிக வங்கிக்கு வழங்கப்படும் அதே நம்பகத்தன்மையை தானாகவே பெறக்கூடாது".
பழைய சட்டத்திற்குப் பதிலாக முழுமையாகப் புதிய சட்டத்தைக் கொண்டுவருவது சட்ட விளக்கச் சிக்கல்களையும் பல வழக்குகளையும் உருவாக்கக்கூடும். ஏனெனில், புதிய விதிகளும் வரையறைகளும் தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளுக்குப் பொருந்துமா என்பதைத் தரப்பினர் விவாதிப்பார்கள் என்று ஜோஷி கூறினார். "இதன் முதல் பாதிப்பு எப்போதும் நிலுவையில் உள்ள வழக்குகளுக்குத் தான்," என்றும் தெரிவித்துள்ளார்.
Original articles: What is the Bankers’ Books Evidence Bill and why has it raised data concerns? -Vineet Bhalla