நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் ஒரு நகரம் எப்படி இருக்க வேண்டும்? இந்தியா அந்த நிலையை எவ்வாறு அடையலாம்? -மனிஷ் துபே, கே.வி. சந்தோஷ் ராகவன்

 டர்பன் (Durban) மற்றும் புவனேஸ்வர் போன்ற நகரங்கள் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு நீர் கிடைப்பதை உறுதி செய்துள்ளன. லாஸ் வேகாஸ் மற்றும் பெங்களூரு நகரங்கள் அதிகப்படியான நீர் பயன்பாட்டைத் தடுக்க அதிக நீர்க் கட்டண முறையை பயன்படுத்துகின்றன. சியோல் மற்றும் குவஹாத்தி நகரங்கள், வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமவெளிப் பகுதிகளை பாதுகாக்கும் வகையில் நகரத்திட்டமிடல் விதிமுறைகளை வலுப்படுத்தியுள்ளன. சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் ஒரு நம்பகமான நீர் ஆதாரமாக மாற முடியும் என்பதை விண்ட்ஹோக் மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களின் நீர மேலாண்மை முறை காட்டுகின்றன.


நகர்ப்புற இந்தியாவில் நிலவும் நீர் நெருக்கடியை, சிறந்த நெருக்கடி மேலாண்மை மூலம் மட்டுமே  சரிசெய்துவிட முடியாது. வரும்  ஆண்டுகளில், இந்திய நகரங்களில் பல கோடி மக்கள் கூடுதலாக வசிக்கவும் பணியாற்றவும் உள்ளனர். இது நகர்ப்புறங்களில் நீருக்கான தேவையை  அதிகரிக்கச் செய்யும். நீர் விநியோக அமைப்புகளை வடிவமைத்தல், அவற்றுக்கான நிதியைத் திரட்டுதல் மற்றும் அவற்றை நிர்வகித்தல் போன்ற  முறைகளை நாம் மாற்றியமைக்காவிட்டால், தற்போதைய நீர் பற்றாக்குறை, வெள்ளப்பெருக்கு மற்றும் நீர் மாசுபாடு போன்ற பிரச்சனைகள் எதிர்காலத்தில் இன்னும் பெரிய அளவில் உருவெடுக்கும்.


இப்போது நமக்கு முன் உள்ள சவால், நகரங்கள் அதிக நீர்ப் பாதுகாப்புடன் செயல்படும் ஒரு மாற்று எதிர்காலத்தை கற்பனை செய்து, அந்த இலக்கை அடைவதற்கான தெளிவான உத்திகளை அடையாளம் காண்பதாகும்.


எதிர்காலத்தைப்பற்றி சிந்திக்க ஒரு பயனுள்ள வழி, திட்டமிடலின் தொடக்கத்திலிருந்தே நீர் மேலாண்மையை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் நகரங்களை திட்டமிடுவதாகும். இது போன்ற நகரங்கள் தங்கள் பகுதிகளில் உள்ள ஆறுகள், ஏரிகள் மற்றும் நிலத்தடி நீர்த்தேக்கங்களை அடிப்படையாகக் கொண்டு வளர வேண்டும். மேலும், மழைநீரைச் சேமித்தல், சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை மறுபயன்படுத்துதல், நவீன நீர்விநியோக வலையமைப்புகள் மூலம் நீர் இழப்பைக் குறைத்தல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். இதனுடன், அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டாலும் இந்த நீண்டகால முன்னேற்றங்களைத் தொடர்ந்து செயல்படுத்தக்கூடிய வலுவான அமைப்புகளும் இருக்க வேண்டும்.


இந்தக் கண்ணோட்டத்தின் பல அம்சங்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. மெல்போர்ன் நகரம் மழைநீரைப் பிடித்து சேமிக்கும் முறைகளை விரிவுபடுத்தியுள்ளதுடன், குடிநீர் அல்லாத தேவைகளுக்குப் பயன்படுத்துவதற்காக ‘மூன்றாவது குழாய்’ (Third-pipe) நீர் விநியோக அமைப்பையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதேபோல், சிங்கப்பூர், தற்போது தனது மொத்த நீர்த் தேவையில் 40% அளவை மறுசுழற்சி செய்யப்பட்ட நீரின் மூலம் பூர்த்தி செய்கிறது. இந்தியாவில் மும்பை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களும் தங்களின் காலநிலை செயல் திட்டங்களில் நீர் மேலாண்மை சார்ந்த அணுகுமுறைகளைச் சேர்க்கத் தொடங்கியுள்ளன.


நீரை மையமாகக் கொண்ட திட்டமிடல்


முதலாவதாக, நகர்ப்புறத் திட்டமிடல் நீரை அடிப்படையாகக்கொண்டு தொடங்க வேண்டும். திட்டம் முடிந்த பிறகு நீரைப் பற்றி சிந்திக்கக் கூடாது. தற்போது, நகர்ப்புறங்களின் பெருந்திட்டங்கள், பெரிய போக்குவரத்துத் திட்டங்கள் அல்லது குடியிருப்புத் திட்டங்கள் ஆகியவற்றில் நீர் எங்கிருந்து கிடைக்கும், எவ்வளவு நீரை நிலையான முறையில் பயன்படுத்த முடியும், வெள்ளநீர் மற்றும் மாசுபட்ட நீரோட்டம் எங்கு செல்லும் போன்ற அம்சங்களுக்கு போதிய முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. மாறாக, ஒவ்வொரு பெருந்திட்டமும் முக்கிய வழித்தடமும், ஆறுகள், ஏரிகள், குளங்கள், வடிகால்கள், நீர் செறிவூட்டும் மண்டலங்கள் மற்றும் வெள்ளச் சமவெளிகளை வரைபடமாக்கும் ஒரு நீர் கட்டமைப்புத் திட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலம் உள்ளூர் நீர்வளங்களை சிறப்பாகப் பயன்படுத்துவதுடன், நீர் மேலாண்மைக்கான செலவையும் குறைக்க முடியும்.


வூஹான் மற்றும் பிலடெல்பியா போன்ற நகரங்கள், புயல்கள் மற்றும் வறட்சி ஆகிய இரண்டையும் நிர்வகிப்பதற்காக, பூங்காக்கள், சதுப்புநிலங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களை வழக்கமான வடிகால்களுடன் இணைத்து, மண்டலப் பிரிப்பு மற்றும் உள்கட்டமைப்பிற்கு வழிகாட்ட நீல-பச்சை கட்டங்களைப் பயன்படுத்தியுள்ளன. இந்தியாவில், சென்னை மற்றும் பெங்களூருவில் நீர் மேலாண்மை திறன் கொண்ட சுற்றுப்புறங்கள் மற்றும் நீர் உறிஞ்சும் நகர்புற (Sponge City) முன்னோடித் திட்டங்கள், இதுபோன்ற கருத்துகளை உள்ளூர் நகரத்திட்டங்களில் எவ்வாறு இணைக்கலாம் என்பதைக் காட்டுகின்றன.


இரண்டாவதாக, நகரங்கள் தொலைவில் உள்ள, எளிதில் பாதிப்படையக்கூடிய மற்றும் அதிக ஆற்றல் தேவைப்படும் நீர் ஆதாரங்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதன் மூலம், முழுமையான தன்னிறைவை அடைவதை  தவிர்த்து, உள்ளூர் நீர் பாதுகாப்பை நோக்கி நகர வேண்டும். இதன் பொருள் ஒவ்வொரு நகரமும் தன்னிறைவு பெற்றதாக இருக்க முடியும் என்பதல்ல. ஒவ்வொரு நகரத்திற்கும் அதன் புவியியல் மற்றும் காலநிலையைப் பொறுத்து வெவ்வேறு வகையான நீர் ஆதாரங்கள் தேவைப்படும். வறட்சி மற்றும் பிற இடையூறுகளைத் தாங்கக்கூடிய, பல்வகைப்பட்ட நீர் விநியோகத்தைப் பராமரிக்கும் அதேவேளையில், உள்ளூர் வளங்களை அதிகபட்சமாகப் பயன்படுத்துவதே இதன் நோக்கமாகும்.


சிங்கப்பூரின் ‘நான்கு தேசிய நீர்க்குழாய்கள்’ (Four National Taps) உத்தி, உள்ளூர் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து கிடைக்கும் நீர், இறக்குமதி செய்யப்பட்ட நீர், கடல்நீரைக் குடிநீராக்குதல் (Desalination), உயர்தர மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. பல்வேறு நீராதாரங்களைப் பயன்படுத்துவது, நீண்டகாலத்தில் நீர்ப் பற்றாக்குறை மற்றும் பிற பாதிப்புகளுக்கு நகரங்கள் எதிர்கொள்ளும் அபாயத்தைக் குறைக்க முடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.



இந்திய நகரங்களைப் பொறுத்தவரை, ஒரு யதார்த்தமான நீண்டகால உத்தியானது  மூன்று முக்கிய தூண்களை வலியுறுத்த வேண்டும்: அவை அதிக அளவில் மழைநீரைச் சேகரித்து நிலத்தடி நீரை மீண்டும் நிரப்புதல்; சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை பொருத்தமான அனைத்து குடிநீர் அல்லாத தேவைகளுக்கும் மறுபயன்படுத்துதல்; மற்றும் நிலத்தடி நீரை நிலையான அளவுகளுக்குள் நிர்வகித்தல் போன்றவையாகும்.


தேசிய வழிகாட்டுதல்கள் ஏற்கனவே நகரங்கள் தாங்கள் பயன்படுத்தும் நீரில் குறைந்தபட்சம் 20% நீரை மறுசுழற்சி செய்து மறுபயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. இந்த சதவீதங்கள், தொழில்துறை தொகுப்புகளுக்கான பிரத்யேக மறுபயன்பாட்டு வலைப்பின்னல்கள், பெரிய வளாகங்கள் மற்றும் வீட்டுவசதி சங்கங்களுக்கான ஊக்கத்தொகைகள் மற்றும் வடிகால்கள் மற்றும் திறந்தவெளிப் பகுதிகளுடன் இணைக்கப்பட்ட முறையான நிலத்தடி நீர் நிரப்பும் பணிகள் ஆகியவை ஆதரவாக இருக்க வேண்டும்.


பெரிய உள்கட்டமைப்புகளுக்கு அப்பாற்பட்ட தீர்வுகள்


மூன்றாவதாக, நீண்டகால நீர்ப் பாதுகாப்பிற்கு முதலீட்டு முடிவுகளில் வேறுபட்ட அணுகுமுறை தேவைப்படுகிறது. பெரிய திட்டங்கள் விரைவான மற்றும் வெளிப்படையாகத் தெரியும் பலன்களை வழங்குவதாலும் முன்னுரிமை பெறுகின்றன. அதேநேரத்தில், நீர்இழப்பைக் குறைத்தல், சதுப்புநிலங்களைப் பாதுகாத்தல் அல்லது பரவலாக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் மறுபயன்பாடு போன்ற நடவடிக்கைகள், நீண்டகாலத்தில் அதிக நன்மைகளை வழங்கினாலும், தேவையான நிதியைப் பெறுவதற்குப் போராட வேண்டியுள்ளது.


இதற்கு வலுவான அணுகுமுறையாக, திட்ட மதிப்பீட்டு செயல்முறைகளில் எளிமையான, ஆனால் கடுமையான ‘மூன்று அம்சச் சோதனை’ (Triple Test) மிகவும் வலுவான அணுகுமுறையாகும். எந்தவொரு பெரிய நீர்வழங்கல் திட்டத்திற்கும் நிதி ஒதுக்குவதற்குமுன், (i) தேவையைக் குறைத்தல் மற்றும் நீர்இழப்பைக் குறைத்தல் போன்ற நியாயமான வழிகள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளனவா (ii) ஆற்றல் செலவுகள் மற்றும் காலநிலை அபாயங்கள் உள்ளிட்ட முழு வாழ்க்கைச்சுழற்சி செலவுகள் கணக்கிடப்பட்டுள்ளனவா (iii) மேல்நிலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளின் சுற்றுச்சூழல் அமைப்புகளின் மதிப்பு அல்லது வெள்ளத்தால் ஏற்படும் சேதச்செலவுகள் போன்ற சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்கங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளனவா என்பவை உறுதி செய்யப்பட வேண்டும்.


ஒருங்கிணைந்த நகர்ப்புற நீர் மேலாண்மையை (Integrated Urban Water Management) ஏற்றுக்கொண்ட நகரங்களின் அனுபவங்கள், இது போன்ற  மதிப்பீடுகள் முதலீடுகளை உள்கட்டமைப்பை புதுப்பித்தல், நீரை மறுபயன்படுத்துதல் போன்ற இயற்கை சார்ந்த தீர்வுகளின் பக்கம் திருப்புகின்றன.


நீர் மேலாண்மை


நான்காவதாக, நிறுவனங்கள்  வரவு செலவு அறிக்கை ஆண்டுகளை மட்டும் கருத்தில் கொள்ளாமல், பத்தாண்டுகள் என்ற கண்ணோட்டத்தில் சிந்திக்கும் திறன் கொண்டிருக்க வேண்டும். இந்தியாவின் நீர் வழங்கல் நிறுவனங்கள்  பல்வேறு நிறுவனங்களுக்கிடையே பிரிக்கப்பட்ட பொறுப்புகள் மற்றும் குறைந்த தொழில்நுட்ப மற்றும் நிதிசார் தன்னாட்சி ஆகியவற்றுடன் செயல்படுகின்றன. மூலப் பாதுகாப்பு, மொத்த விநியோகம், விநியோகம், கழிவுநீர் சேகரிப்பு மற்றும் சுத்திகரிப்பு மற்றும் மறுபயன்பாடு என முழுமையான நகர்ப்புற நீர் சுழற்சிக்கான பொறுப்பை, நிலையான தலைமை மற்றும் தொழில்முறைப் பணியாளர்களின் ஆதரவுடன் பொறுப்புக்கூறக்கூடிய  நிறுவனங்களிடம் ஒருங்கிணைப்பதே ஒரு  நீண்டகாலப் பாதையாகும்.


இணைந்த சீர்திருத்தங்கள் ஒழுங்குமுறை அமைப்புகளையும் வலுப்படுத்த வேண்டும். இதன் மூலம் அவர்கள் சமமான சேவைத்தரங்களை நிர்ணயிக்கவும், ஏழைகளுக்கு தேவையானதை வழங்கவும், பயன்பாட்டு நிறுவனங்களை நிதி நிலைத்தன்மையுடன் வைத்திருக்க உதவும் கட்டணங்களை அங்கீகரிக்கவும், செயல்திறன் மற்றும் அபாயங்கள் குறித்த தரவு வெளிப்படுத்தலை அமல்படுத்தவும் முடியும். இந்தியாவில் மின்விநியோகம் மற்றும் பொதுப்போக்குவரத்து போன்ற துறைகள் மற்றும் உலகளாவிய ஒருங்கிணைந்த நீர் சீர்திருத்தங்களின் அனுபவங்கள், ஒழுங்குமுறையாளர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் நிதியளிப்பவர்கள் தெளிவான, பகிரப்பட்ட இலக்குகள் மற்றும் வெளிப்படையான தரவுகளுடன் இணைந்து செயல்படும்போது, செயல்திறன் மேம்படுகிறது மற்றும் முதலீட்டைத் தக்கவைப்பது எளிதாகிறது என்பதைக் காட்டுகின்றன.


இறுதியாக, நீடித்த மாற்றம் என்பது அரசியல், பொதுமக்களிடையே உருவாக்கப்படும் கருத்தாக்கம் மற்றும் நடைமுறை வாழ்க்கையில் காணப்படும் உதாரணங்களைப் பொறுத்தது அமையும். நீர் என்பது அடையாளம், நிலப்பரப்பு மற்றும் தினசரி வாழக்கை  முறைகளுடன் தொடர்புடையது. எனவே, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சீர்திருத்தங்கள்கூட மேலிருந்து திணிக்கப்படுபவை அல்லது பாரபட்சமானவை என்று கருதப்பட்டால் அவை தோல்வியடையக்கூடும். எதிர்காலத்தை நோக்கிய அணுகுமுறை, உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு அளிக்கும் முக்கியத்துவத்துக்கு இணையாக மக்களின் சமூக ஆதரவையும் நம்பிக்கையையும் உருவாக்குவதற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதன்கீழ், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான அடிப்படை நீர் அணுகலைப் பாதுகாத்தல், அதிகப்படியான நீர் பயன்பாட்டிற்கான கட்டணத்தை அதன் உண்மையான  ஏற்ப  நிர்ணயித்தல், நிலத்தின் விலை அதிகமாக இருந்தாலும் ஏரிகள் மற்றும் வெள்ளப் பரப்புகளைப் பாதுகாத்தல், பாதுகாப்பாகச் சுத்திகரிக்கப்பட்ட மறுசுழற்சி நீர் பயன்பாட்டின் மீது மக்களின் நம்பிக்கையை உருவாக்குதல் ஆகியவை அடங்கும்.

 

டர்பன் மற்றும் புவனேஸ்வர் நகரங்கள், சமூகங்களின் தலைமையிலான அணுகுமுறைகள் மற்றும் நியாயமான கட்டண முறைகள் மூலம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான நீர் அணுகலைப் பாதுகாத்துள்ளன. லாஸ் வேகாஸ் மற்றும் பெங்களூரு நகரங்கள், அதிகப்படியான நீர் பயன்பாட்டைத் தடுப்பதற்காக உயர்ந்த நீர்க்கட்டணங்களைப் பயன்படுத்துகின்றன. சியோல் மற்றும் குவாஹாத்தி நகரங்கள், வெள்ளப் பரப்புகளைப் பாதுகாத்து வெள்ள அபாயங்களைக் குறைப்பதற்காக நகர்புறத் திட்ட விதிமுறைகளை வலுப்படுத்தியுள்ளன. வின்ட்ஹோக் மற்றும் சென்னை நகரங்கள், சரியான உள்கட்டமைப்பு மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையின் ஆதரவுடன், சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் நம்பகமான நீராதாரமாக மாற முடியும் என்பதை எடுத்துக்காட்டுகின்றன.


எனவே, நகர்ப்புற நீருக்கான தொலைநோக்குப்பார்வை என்பது ஒரே ஒரு மிகப்பெரிய திட்டம் அல்லது தொலைதூர இலக்குப்பற்றியது அல்ல. நகரங்களை நீர் மேலாண்மைக்கு ஏற்றதாக மாற்றும் பாதைகளைத் தேர்ந்தெடுப்பதே இதன் நோக்கமாகும். ஆறுகள் மற்றும் ஏரிகளை மையமாகக்கொண்டு தொடங்கும் நகரப் பெருந்திட்டங்கள், விரிவாக்கத் திட்டங்களுக்கு முன்பாக நீர் கசிவுகளைச் சரிசெய்து தேவையைக் குறைக்கும் நடவடிக்கைகள், குறுகியகால காட்சிப்படுத்தக்கூடிய பலன்களைவிட நீண்டகால மதிப்புக்கு முன்னுரிமை அளிக்கும் முதலீடுகள், பல்வேறு ஆட்சிக் காலங்களிலும் ஒரே பாதையில் தொடர்ந்து செயல்படக்கூடிய நீர் வழங்கல் நிறுவனங்கள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள், நீரின் நுகர்வோராக மட்டுமல்லாமல், தங்களைத் தாங்கி நிற்கும் நீர் அமைப்புகளின் பாதுகாவலர்களாகவும் தங்களைக் கருதும் குடியிருப்புப் பகுதிகள் ஆகியவையே இதன் அடிப்படையாகும்.


இது போன்ற நடவடிக்கைகளின் மூலமே, இந்திய நகரங்கள் ஒவ்வொரு கோடைக்காலத்தையும் சமாளித்து, தங்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் நீர்வளத்துடன் இணைந்து வாழவும், அந்த நீர் வளத்தைப் பாதுகாக்கவும் முடியும்.


மனீஷ் துபே, இந்திய மனிதக் குடியிருப்புகள் நிறுவனத்தின் (IIHS) நிர்வாகப் பள்ளியின் தலைவராக உள்ளார். கே. வி. சந்தோஷ் ராகவன், இந்திய மனிதக் குடியிருப்புகள் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் சேவைகள் பிரிவின் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.


Original articles: What a water-wise city would look like – and how India can get there. -Manish Dubey,K.V. Santhosh Ragavan

Share: