கென்-பெட்வா திட்டத்தை எதிர்ப்பவர்கள் எழுப்பிய பிரச்சினைகளை ஒன்றிய அரசு ஏன் மாநில அரசுகளுக்குத் திருப்பி அனுப்புகிறது? - அபினய் லக்ஷ்மன்

வன உரிமைச் சட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மாநில அரசே பொறுப்பு என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.


தற்போதைய செய்தி: மத்தியப் பிரதேசத்தில் செயல்படுத்தப்படவுள்ள கென்–பெட்வா நதிநீர் இணைப்புத் திட்டம் தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகம், திட்டத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள “இடம்பெயர்வு தொடர்பான பிரச்சினைகள்” (issues of displacement) குறித்து பல புகார்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக கடந்த வியாழக்கிழமை தெரிவித்தது. ஆனால், அந்தப் புகார்கள் அனைத்தும் மத்தியப் பிரதேச அரசு மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், வன உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது மாநில அரசின் பொறுப்பு என்றும் அமைச்சகம் கூறியது.


மத்தியப் பிரதேசத்தில் உள்ளூர் மக்கள் பல மாதங்களாக இந்தத் திட்டத்திற்கு எதிராகப் போராடி வருகின்றனர். சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள பரானா ஆற்றின் நீரில், சில ஆண்களும் பெண்களும் தங்கள் கழுத்தில் தூக்குக்கயிற்றை மாட்டிக்கொண்டும், சிலர் அடையாளப் பொருளாக அமைக்கப்பட்ட சிதைகளில் படுத்துக்கொண்டும் போராட்டம் நடத்திய காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி, தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தன. முதலில் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டம், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஜூலை மாதத்தில் மீண்டும் தொடங்கியது.


போராட்டங்கள் மீண்டும் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, ஜூலை மாதம் 19-ஆம் தேதி காவல்துறையினர் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர். 'ஜெய் கிசான் சங்கதன்' அமைப்பைச் சேர்ந்த உள்ளூர் செயற்பாட்டாளர் அமித் பட்நாகரை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதுடன், அப்பகுதியிலிருந்து   150 போராட்டக்காரர்களையும் அப்புறப்படுத்தினர். அப்போது அமித் பட்நாகர் 14 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.


திட்டம் குறித்த விவரங்கள்:


1980-ஆம் ஆண்டில் மத்திய நீர்ப்பாசன அமைச்சகம் மற்றும் மத்திய நீர் ஆணையத்தால் உருவாக்கப்பட்ட 'தேசிய தொலைநோக்குத் திட்டத்தின்கீழ்' ((National Perspective Plan (NPP)), நீர்வள மேம்பாடு மற்றும் உபரி நீர் கொண்ட நதிகளைப் பற்றாக்குறை உள்ள நதிகளுடன் இணைக்கும் 30 திட்டங்களில் கென்-பெட்வா நதிநீர் இணைப்புத் திட்டமும் ஒன்றாக இருந்தது. இந்தத் திட்டத்தின்கீழ், கென் ஆற்றில் தௌதன் அணை கட்டப்பட்டு, அதில் இருந்து கிடைக்கும் உபரி நீர் என அறிவிக்கப்பட்ட நீரை 221 கி.மீ நீளமுள்ள கால்வாய், 2 கி.மீ நீளமுள்ள சுரங்கப்பாதை மூலம் பெட்வா ஆற்றுக்கு மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர, இந்தத் திட்டத்தின் மூலம் 103 மெகாவாட் நீர்மின்சாரமும், 27 மெகாவாட் சூரிய மின்சாரமும் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தினால் 7,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர வேண்டிய சூழல் உள்ள நிலையில், உள்ளூர் மக்கள் இந்தத் திட்டத்திற்கு எதிராகப் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பியுள்ளனர். இதில் கூடுதல் இழப்பீடு கோருதல், இழப்பீடு மற்றும் மறுவாழ்வுத் திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டதில் உள்ள முறைகேடுகள் மற்றும் இந்தியாவின் வனஉரிமைச் சட்டத்தின்கீழ் இந்தத் திட்டத்திற்கு கிராம சபையின் ஒப்புதல் பெறும் நடைமுறையில்  குறைபாடுகள்  உள்ளன.




என்ன கேட்கப்பட்டது? ஒன்றிய அரசு என்ன கூறியது?


மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகம் திட்டம் தொடர்பான பிரச்சினைகளை மாநில அரசிடம் அனுப்பிய நிலையில், அது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜேந்திர சிங் லோதி ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தது.


திட்டத்தால் பாதிக்கப்பட்ட மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை, அவர்களில் பழங்குடியினத்தைச் சேர்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை, விதிமுறைகளின்படி பகுதி மற்றும் முழு இழப்பீட்டுத் தொகையைப் பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை ஆகியவை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. மேலும், திட்டத்திற்கு ஒப்புதல் வழங்குவதற்காக எத்தனை கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதில்  எத்தனை பேர் கலந்து கொண்டனர், அந்தக் கூட்டங்களில் என்னென்ன குறைகள் மற்றும் புகார்கள் முன்வைக்கப்பட்டன என்றும் ராகுல்காந்தியும் லோதியும் கேட்டிருந்தனர்.


மேலும், முழுமையான இழப்பீடு வழங்கப்படுவதற்கு முன்பே குடும்பங்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவங்கள் குறித்து அரசுக்குத் தெரியுமா, போராட்டங்கள் குறித்து அரசு கவனத்தில் எடுத்துள்ளதா என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.


கேள்விகளில் பெரும்பாலானவை, திட்டத்தால் பாதிக்கப்படும் உள்ளூர் மக்களுக்கான இழப்பீடு, மறுவாழ்வு மற்றும் மறுகுடியேற்றத் திட்டங்கள்,  2006-ஆம் ஆண்டின் இந்திய வனஉரிமைச் ((Recognition of Forest Rights) Act) சட்டத்தின்கீழ் பெற வேண்டிய ஒப்புதல் நடைமுறைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருந்தன. இழப்பீடு மற்றும் மறுவாழ்வு தொடர்பான விவகாரங்களிலும், வனஉரிமைச் சட்டத்தின்கீழ் ஒப்புதல் பெறும் நடைமுறைகளிலும், இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது மாநில அரசின் பொறுப்பு என்று மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.




ஒன்றிய அரசு ஏன் பிரச்சினைகளை மாநில அரசிடம் ஒப்படைக்கிறது?


மக்களவையில் அளித்த பதிலில், மத்திய இணை அமைச்சர் துர்காதாஸ் உய்கே குறிப்பிடுகையில், நிலம் கையகப்படுத்துதல், இழப்பீடு வழங்குதல், மறுவாழ்வு மற்றும் மறுகுடியேற்றம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் 2013-ஆம் ஆண்டின் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத் தன்மைக்கான நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறுகுடியேற்ற உரிமைச் சட்டத்தின்கீழ் மாநில அரசால் மேற்கொள்ளப்படுகின்றன என்று தெரிவித்தார். 'பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகள் (வன உரிமைகளை அங்கீகரித்தல்) சட்டம், 2006'-ன்கீழ் (Scheduled Tribes and Other Traditional Forest Dwellers (Recognition of Forest Rights) Act, 2006) மாநில அரசே அதனைச் செயல்படுத்தும் அமைப்பாக உள்ளதாக ஒன்றிய அரசு  சுட்டிக்காட்டியது.


இருப்பினும், இந்தத் திட்டம் மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் தலைமையில் செயல்படுத்தப்படுகிறது. மேலும், வனஉரிமைச் சட்டம் தொடர்பான அனைத்து விவகாரங்களுக்கும் மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகமே ஒருங்கிணைப்பு அமைச்சகமாக செயல்பட வேண்டும் என்று சட்டம் குறிப்பிடுகிறது. கென்–பெட்வா நதிநீர் இணைப்புத் திட்டத்தின் வழிகாட்டுதல் மற்றும் கண்காணிப்புக் குழுக்களில் (Steering and Monitoring Committees) அமைச்சகத்தின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளதாக பழங்குடியினர் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையிலும் இது போன்ற குறிப்பு வந்துள்ளது. இந்தக் குழு, திட்டத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான (Project Affected Families (PAFs)) மறுவாழ்வு மற்றும் மறுகுடியேற்ற செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னேற்றத்தைக் கண்காணிக்கிறது.


கென்–பெட்வா திட்டம் தொடர்பாக போராட்டக்காரர்கள் எழுப்பும் பிரச்சினைகள் மாநில அரசே கையாள வேண்டியவை என்று குறிப்பிட்டதுடன், இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறுகுடியேற்ற உரிமைச் சட்டத்தின் மற்றும் (வன உரிமைகளை அங்கீகரித்தல்) சட்டம் போன்ற சட்டங்களின் விதிமுறைகளை மாநில அரசுகள் மிகுந்த கவனத்துடன் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் பழங்குடியினர் விவகார அமைச்சகம் தொடர்ந்து மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதி வருவதாக வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக, மக்களின் வனஉரிமைக் கோரிக்கைகள் முறையாகப் பரிசீலிக்கப்பட்டு முடிவு செய்யப்படுவதற்கு முன்பு, அவர்களை அவர்களது வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்றக்கூடாது என்று மாநில நிர்வாகங்களுக்கு அமைச்சகம்  எச்சரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

 

Original articles: Why the Centre is passing on issues raised by Ken-Betwa protesters to State governments -Abhinay Lakshman

Share: