இந்தியாவின் கைத்தறி வரலாறு: சுதேசி இயக்கம் முதல் 'சேலை ராஜதந்திரம்' வரை - ரவீனா பனேட்டா

 12-வது தேசிய கைத்தறி தினம்: நேர்த்தியான சேலைகள் மற்றும் நுணுக்கமான நெசவு வேலைகளை தாண்டி, எதிர்ப்புணர்வு, சுயசார்பு மற்றும் கலாச்சாரம் தொடர்பான ஒரு வரலாறு இதில்  இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம், கலாச்சாரம் ஆகியவற்றில் கைத்தறித் துறை ஏன் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது?


தற்போதைய செய்தி?


ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு 12-வது தேசிய கைத்தறி தினம் (National Handloom Day) கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் வளமான கைத்தறி பாரம்பரியத்தையும், நாட்டின் பொருளாதாரம் மற்றும் கலாச்சார அடையாளத்தில் கைத்தறி நெசவாளர்களின் பங்களிப்பையும் பறைசாற்றும் வகையில் நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. உள்நாட்டுத்துணி வகைகளை ஊக்குவிக்கும் நோக்கில், ஜவுளி அமைச்சகம் மற்றும் மாநில அரசுகள் கண்காட்சிகள், கைத்தறிச் சந்தைகள், விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மற்றும் வாங்குவோர்-விற்போர் சந்திப்புகளை ஏற்பாடு செய்துள்ளன.


முக்கிய அம்சங்கள்:


1. சுதேசி இயக்கத்தின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில், 2015-ஆம் ஆண்டு முதல் இந்திய அரசு ஆகஸ்ட் 7-ஆம் தேதியை 'தேசிய கைத்தறி தினமாக' (National Handloom Day) கொண்டாடி வருகிறது. நாட்டின் வளமான கலாச்சாரத்திற்கு கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்கள் ஆற்றிய பங்களிப்பைப் போற்றும் நாளாக தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது.


2. சுதேசி இயக்கத்தின்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அழைப்பை நினைவுபடுத்தும் நாளாகவும் விளங்குகிறது. 1905-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி, வங்கப் பிரிவினைக்கு (partition of Bengal) எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வெளிநாட்டுப் பொருட்களைப் புறக்கணித்து, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற முறையான அறிவிப்பு கொல்கத்தா டவுன் ஹாலில் வெளியிடப்பட்டது.


3. ஆங்கிலேயர்களின் 'பிரித்தாளும்' கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கைத்தறி நெசவு ஆங்கிலேய அதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்பின் வலிமையான குறியீடாக மாறியது. இந்தியக் கைவினைத் தொழில்களை ஊக்குவிப்பதன் மூலமும் உள்ளூர் கைவினைஞர்களை வலுப்படுத்துவதன் மூலமும், இது இந்தியப் பண்பாடு மற்றும் மரபுகளை மீட்டெடுப்பதிலும், இந்திய மொழிகள், கலைகள் மற்றும் கைவினைத் தொழில்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்தியது.                    


4. உள்நாட்டுத் தயாரிப்புகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலமும், உள்ளூர் தொழில்களைப் பாதித்த ஆங்கிலேய அரசின் இறக்குமதிகளை எதிர்ப்பதன் மூலமும், சுயசார்பை அதிகரிக்கவும் ஆங்கிலேயர்களின் பொருட்களின் மீதான சார்ந்திருத்தலைக் குறைக்கவும் முயன்றது.  இதன் விளைவாக, கைத்தறித் துறையானது நாட்டின் சுதந்திரத்துடன் பிரிக்க முடியாத வகையில் பிணைக்கப்பட்டது.


5. எனவே, இந்தத் தினம் கைத்தறி நெசவாளர்களின் திறன்கள் மற்றும் கைவினைத் திறனைக் கொண்டாடுவதோடு, உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கைத்தறித் தயாரிப்புகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நெசவாளர்களுக்கு அதிகாரமளித்து அவர்களின் சமூக-பொருளாதார நலனை உறுதிசெய்வதோடு, இந்தியாவின் தனித்துவமான கைத்தறி பாரம்பரியத்தைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டையும் வலியுறுத்துகிறது.


கைத்தறி என்றால் என்ன?


6. 1985-ஆம் ஆண்டின் கைத்தறி (உற்பத்திக்கான ஒதுக்கீடு மற்றும் பொருட்கள்) சட்டத்தில் (Handloom (Reservation and Articles for Production) Act) 'கைத்தறி' என்பது "விசைத்தறி அல்லாத எந்தவொரு தறியையும்" குறிப்பதாக வரையறுக்கப்பட்டிருந்தது. ஆனால், காலப்போக்கில் இதற்கான வரையறைகள் விரிவடைந்துள்ளன.


7. 2012-ஆம் ஆண்டில் ஒரு புதிய வரையறை முன்மொழியப்பட்டது: "கைத்தறி என்பது விசைத்தறி அல்லாத எந்தவொரு தறியையும் குறிக்கும் ஒன்றாகும்.  மேலும், உற்பத்தியின்போது நெசவுச் செயல்முறையின் ஒரு பகுதிக்காவது மனித ஆற்றல் அல்லது கைகளின் செயல்பாடு தேவைப்படும் கலப்புத் தறிகளும் (hybrid loom) இதில் அடங்கும். அடிப்படையில், இது விசைத்தறி நெசவாளர்கள் இந்தத் துறையில் எளிதாக நுழைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியது.


இந்தியாவில் கைத்தறித் துறையின் நிலை என்ன?



8. இந்தியாவின் கைத்தறி பாரம்பரியம் உலகின் மிகப்பழமையான பாரம்பரியங்களில் ஒன்றாகும். இது உள்ளூர் கலாச்சாரம், காலநிலை மற்றும் சமூகத்துடன் ஆழமாக இணைந்துள்ளது. ஒவ்வொரு பிராந்தியமும் தனக்கே உரித்தான நெசவுநுட்பங்கள், வடிவங்கள் மற்றும் துணி வகைகளைக் கொண்டுள்ளது.  இவை பல நூற்றாண்டுகளாகத் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வந்த தொழில்சார் திறன்களை காட்டுகின்றன.


9. தமிழ்நாட்டின் புகழ்பெற்ற காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள், அசாமின் முகா (பொன்னிறப் பட்டு) மெகேலா சாதோர்கள், மகாராஷ்டிராவின் பைத்தானி நெசவுகள் அல்லது உத்தரப் பிரதேசத்தின் பனாரசி ஜரிகை வேலைப்பாடுகள் கொண்ட துணிகள் என எதுவாக இருந்தாலும், இந்தியா உலகின் மிகப்பெரிய மற்றும் பரந்து விரிந்த நெசவுத்தொழிலைக் கொண்டுள்ளது. உலகளவில் கையால் நெய்யப்படும் துணிகளில் 95 சதவீதம் இந்தியாவில் இருந்தே கிடைக்கின்றன என்று பத்திரிகை தகவல் அலுவலகம் 2017-ஆம் ஆண்டில் தெரிவித்தது. 


10. சாதாரண தறிகள் முதல், நெசவுக்குப் பிந்தைய அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட புடவைகள், சால்வைகள், தூரிகள், கம்பளங்கள், துண்டுகள், அங்கோச்சா/கமச்சா, பாரம்பரிய தோளில் அணியும் பாரம்பரியத் துணிகள் (Angavastrams) மற்றும் ஆடைக்கான துணிகள் வரை பல்வேறு தயாரிப்புகளை உள்ளடக்கிய இந்தியாவின் ஜவுளி மற்றும் கைத்தறித்துறை, வேளாண்மைக்கு அடுத்தபடியாக மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் 2-வது மிகப்பெரிய துறையாகத் இருந்து வருகிறது. 4-வது அகில இந்திய கைத்தறி கணக்கெடுப்பின்படி, 31.45 லட்சம் குடும்பங்கள் கைத்தறி, நெசவு மற்றும் நெசவு சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளன. 

கைவினைப் பொருட்கள் (மற்றும் கைத்தறி) துறையில் புவிசார் குறியீடு மற்றும் அறிவுசார் சொத்துரிமை:


11. உலக வர்த்தக அமைப்பின் (World Trade Organization (WTO)) உறுப்பினராக உள்ள இந்தியா, 'பொருட்களின் புவிசார் குறியீடுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 1999'-ஐ இயற்றியது; இச்சட்டம் 2003-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.


12. புவிசார் குறியீடு (Geographical Indication (GI)) என்பது ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியிலிருந்து உருவாகும் மற்றும் அந்தப் பகுதிக்குரிய தனித்துவமான பண்புகள் அல்லது நற்பெயரைக் கொண்ட தயாரிப்புகளுக்கு வழங்கப்படும் ஒரு குறியீடாகும். இந்தக் குறியீடு அந்தப் பொருளின் தனித்துவமான அடையாளத்தையும் உண்மைத்தன்மையையும் உறுதி செய்கிறது. மேலும், இது நுகர்வோர் இடையே விழிப்புணர்வையும் நம்பிக்கையையும் ஏற்படுத்த உதவுகிறது.















13. ஒரு பொருள் இக்குறியீட்டைப் பெற்றுவிட்டால், வேறு எந்த நபரோ அல்லது நிறுவனமோ அதேபெயரில் அதுபோன்ற போலியான பொருளை விற்க முடியாது. இந்த புவிசார் குறியீடு 10 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும்; அதற்குப் பிறகு இதைப் புதுப்பித்துக் கொள்ளலாம். அப்பொருளுக்குச் சட்டப்பூர்வ பாதுகாப்பு அளிப்பது, மற்றவர்கள் முறைகேடாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிப்பது ஆகியவை இப்பதீவின் பிற நன்மைகளாகும். அங்கீகரிக்கப்பட்ட வணிகர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான புவிசார் குறியீட்டு எண் (GI Number) வழங்கப்படும்.


14. இந்தியாவில், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின்கீழ் உள்ள 'தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்கான துறை' (Department for Promotion of Industry and Internal Trade) புவிசார் குறியீடுகளை வழங்குகிறது.


15. கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறிப் பொருட்கள் இந்தச் சட்டத்தின் பிரிவு 2(f)-ன்கீழ்  வருகின்றன. இந்தப் பிரிவின்படி, “பொருட்கள்” என்பதில் வேளாண் பொருட்கள், இயற்கைப் பொருட்கள், உற்பத்திப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், கைத்தறிப் பொருட்கள் மற்றும் தொழில்துறைப் பொருட்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களும்  இடம்பெறும்.


16. பதிவு செய்யப்பட்ட புவியியல் குறியீடுகளுக்கு, கைவினைக் கலைஞர்கள் மற்றும் நெசவாளர்கள் சட்டத்தின் பிரிவு 7(3)-ஐ பிரிவு  17-உடன் இணைத்துப்பார்க்கும் வகையில், அங்கீகரிக்கப்பட்ட பயனர்களாகப் பதிவு செய்யப்படலாம். 2004-ஆம் ஆண்டில், 'போச்சம்பள்ளி இக்கத்' (Pochampally Ikat) இந்தியாவில் புவிசார் குறியீடு பெற்ற முதல் கைத்தறிப் பொருள் என்ற வரலாற்றைப் படைத்தது.


இந்திய கைத்தறித் துறையை மேம்படுத்துவதற்கான அரசின் நடவடிக்கைகள்


— 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2026–27-ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கையைத் தாக்கல் செய்தார். இதில் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சிக்கான முக்கிய துறையாக ஜவுளித்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.


— இதன் முக்கிய பகுதிகளாக தேசிய நார் திட்டம் (National Fibre Scheme), ஜவுளி விரிவாக்கம் மற்றும் வேலைவாய்ப்புத் திட்டம் (Textile Expansion and Employment Scheme), ஒருங்கிணைந்த தேசிய கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள்திட்டம், ‘Text-ECON’ முன்முயற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்கான மேம்படுத்தப்பட்ட ‘Samarth 2.0’ ஆகிய ஐந்து திட்டங்கள் உள்ளன. இவை அனைத்தும் சேர்ந்து, நிலையான மூலப்பொருள் விநியோகத்தை உருவாக்குதல், உற்பத்திக் குழுமங்களை நவீனப்படுத்துதல், பாரம்பரிய கைவினைகளை ஆதரித்தல் மற்றும் உலகளாவிய போட்டித்திறனை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களைக் கொண்டுள்ளன.

— அதேபோல், மகாத்மா காந்தி கிராம சுயராஜ் முன்முயற்சி (Mahatma Gandhi Gram Swaraj Initiative) தொடங்கப்பட்டதும் முக்கியமான ஒரு நடவடிக்கையாகும். இதன் மூலம் காதி, கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் துறைகளுக்கு மேம்பட்ட சந்தை வாய்ப்புகள், சிறந்த வர்த்தகப் பெயர் உருவாக்கம் (Branding) மற்றும் பயிற்சி வழங்கப்படுகின்றன. இதன் மூலம் இந்தியாவின் ஜவுளித் துறையின் வலிமை இயந்திரமயமாக்கப்பட்ட ஆலைகளில் மட்டுமல்லாமல், கோடிக்கணக்கான கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் பாரம்பரிய கைவினை மற்றும் கலாச்சார அமைப்புகளிலும் உள்ளது என்பது அங்கீகரிக்கப்படுகிறது.


— இந்தத் திட்டங்களை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஜவுளித்துறை தொடர்பான அரசின் கொள்கையில் ஒரு முக்கியமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக ஜவுளித் துறைக்கான அரசின் ஆதரவு தனித்தனி பிரச்சினைகளைத் தீர்க்கும் பல்வேறு திட்டங்களாக இருந்தது. ஆனால், 2026–27-ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கை, நார் உற்பத்தி, உற்பத்தித் திறன், கைவினைக் கலைஞர்களின் வாழ்வாதாரம், திறன் மேம்பாடு மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைக்கும் ஒரு முழுமையான திட்டத்தை முன்வைக்கிறது.


இந்தியாவின் கலாச்சார தூதரகத்தின் மையப்புள்ளியாகக் கைத்தறித் துறை


1. கலை மற்றும் கைவினைப் பொருட்கள் துறையில் உள்ள பிற கலாச்சார அடையாளங்களுடன் சேர்த்து, இந்தியாவின் மென்மையான சக்தியை  வெளிக்காட்டுவதில் கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் நீண்டகாலமாக முக்கியப் பங்கு வகித்து வருகின்றன. 18-ஆம் நூற்றாண்டு முதல், அழகியல் நினைவுப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், கலைப் பொருட்கள் மற்றும் கையால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் ஆகியவை தூதரக உறவுகளின் முக்கிய அங்கங்களாக இருந்து வருகின்றன.


2. பிரெஞ்சு பயணி டாவர்னியர் கூறியதன்படி, பாரசீக ஷாவின் தூதர் (கி.பி. 1628–1641) இந்தியாவிலிருந்து திரும்பியபோது, தனது அரசருக்கு நகைகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு தேங்காய் ஓட்டினுள் வைக்கப்பட்ட, 30 கெஜம் நீளமுள்ள மஸ்லின் தலைப்பாகையை பரிசாக வழங்கினார். அந்த மஸ்லின் துணி மிகவும் நுணுக்கமாகவும் மென்மையாகவும் இருந்ததால், அதைத் தொடும்போதுகூட உணர முடியாத அளவுக்கு மென்மையானதாக இருந்தது என்று குறிப்பிடுகிறார். 


3. சேலை இராஜதந்திரம்' (Saree diplomacy) மற்றும் 'கதர் இராஜதந்திரம்' (Khadi diplomacy) ஆகியவை இந்திய அரசாங்கத்தால் பல்வேறு தளங்களில் முன்னெடுக்கப்படும் இது போன்ற முயற்சிகளுக்குச் சில எடுத்துக்காட்டுகளாகும். கலாச்சார வெளிப்பாட்டின் இந்த அடையாளங்கள் மூலம், உலகளாவிய பார்வையாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் ஆகியோருடன் தொடர்புகொள்வதும், இந்திய நெசவாளர்களின் கலைத்திறனை உலக அரங்கில் முன்னிறுத்துவதும் இதன் அடிப்படை நோக்கமாகும்.


4. உதாரணமாக, சிந்துவெளி நாகரிகக் காலத்திலிருந்தே பருத்தி மற்றும் ஜவுளிப் பொருட்களின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. கிழக்கிந்திய நிறுவனம் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் நடைபெற்ற வெளிநாட்டு வர்த்தகத்தில், இந்தியாவின் 'மஸ்லின்' மற்றும் 'பருத்தி' ஆடைகள் மிகச் சிறந்த தரத்தைக் கொண்டிருந்தன என்றும், ஆங்கிலேயர்கள் இவற்றைப் பயன்படுத்திப் பெருமளவில் லாபம் ஈட்டினர் என்றும் வரலாறு கூறுகிறது.




5. அரசின் ‘தற்சார்பு இந்தியா’ (Atmanirbharta) திட்டம், ‘உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம்’ (Vocal for Local) பிரச்சாரம் மற்றும் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ (Make in India) ஆகியவை கைத்தறித்துறைக்கு மிகப்பெரிய வாய்ப்பை வழங்குகின்றன. இது போன்ற திட்டங்களின் மூலம் உலகளாவிய ஜவுளித்துறையில் இந்தியாவின் நிலையை  வலுப்படுத்தவும், இந்திய கைத்தறிப் பொருட்களின் உலகளாவிய போட்டித்திறனை உயர்த்தவும் முடியும்.


Original articles: India’s handloom story: From Swadeshi to ‘Saree diplomacy’ -Raveena Baneta

Share: