கிறித்தவ விவாகரத்துச் சட்டத் திருத்தம் (Christian Divorce Act amendment): கிறித்தவப் பெண்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நீதிமன்றத்திலேயே விவாகரத்து மனுக்களைத் தாக்கல் செய்யும் வகையில், 1869-ஆம் ஆண்டின் விவாகரத்துச் சட்டத்தில் உள்ள சட்ட இடைவெளியைச் சரிசெய்ய திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் நாடாளுமன்றத்தை வலியுறுத்தியுள்ளது.
மற்ற விவாகரத்துச் சட்டங்களைப் போலல்லாமல், 1869-ஆம் ஆண்டின் விவாகரத்துச் சட்டம் கிறித்தவப் பெண்கள் தாங்கள் வாழும் இடத்தில் இருந்துகொண்டே விவாகரத்து மனுக்களைத் தாக்கல் செய்ய அனுமதிப்பதில்லை என்பதை கேரள உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, இந்தச் சட்டத்தைத் திருத்துவதன் மூலம் இந்த வேறுபாட்டை நீக்கவேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜூன் மாதம் 30-ஆம் தேதி, நீதிபதி பெச்சு குரியன் தாமஸ் தலைமையிலான தனி நீதிபதி அமர்வு ஒரு முக்கியக் கருத்தைத் தெரிவித்தது. அந்தச் சட்டத்தில், ஒரு பெண் (மனைவி) தான் தற்போது வசிக்கும் பகுதியில் உள்ள நீதிமன்றத்திலேயே விவாகரத்து மனுவைத் தாக்கல் செய்வதற்கு அனுமதிக்கும் எந்தவொரு விதியும் இல்லை என்று நீதிபதி குறிப்பிட்டார். எனவே, இந்தச் சட்டத்தின்கீழ் வரும் பெண்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக, இத்தகைய ஒரு விதியைச் சேர்ப்பது குறித்து நாடாளுமன்றம் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.
மேலும், இந்தச் சட்டத்தில் இப்படி ஒரு விதி விடுபட்டிருப்பதற்கு எந்தவொரு நியாயமான காரணமும் இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இருப்பினும், இத்தகைய புதிய விதியைச் சட்டத்தில் கொண்டு வருவது நாடாளுமன்றத்தின் பொறுப்பு என்றும், அது நீதித்துறையின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
விவகாரம் என்ன?
மனுதாரருக்கு (வழக்குத் தொடர்ந்த பெண்) 2011-ஆம் ஆண்டு காசர்கோடு பகுதியில் திருமணம் நடந்தது. தான் கடுமையான குடும்ப வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டிய அந்தப் பெண், இது குறித்து 2023-ஆம் ஆண்டில் தொண்டர்நாடு காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (FIR) ஒன்றைப் பதிவு செய்தார். அதன் பிறகு அந்தப் பெண் கணவர் வீட்டை விட்டு வெளியேறி, வயநாடு பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வாழத் தொடங்கினார்.
அவர் கல்பேட்டாவில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்தபோது, விவாகரத்து சட்டத்தின் பிரிவு 3(3)-ன்படி அந்த நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை விசாரிக்கும் பிராந்திய எல்லை அதிகாரம் இல்லை என்று கூறி நீதிமன்றம் அவரது மனுவைத் திருப்பி அனுப்பியது. இதனால், அந்தப் பெண் உயர்நீதிமன்றத்தை நாடினார். விவாகரத்து சட்டத்தின் பிரிவு 3(3)-ன் விளக்கத்தில், மனைவி தற்போது வசிக்கும் மாவட்டம் எதுவோ அதுவும் உள்ளடங்கும் வகையில் அதற்குப் புதிய விளக்கம் அளிக்குமாறு உயர்நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
சட்டம் என்ன சொல்கிறது?
இந்துக்கள், பௌத்தர்கள், சமணர்கள் மற்றும் சீக்கியர்கள் ஆகியோர் 1955-ஆம் ஆண்டின் 'இந்து திருமணச் சட்டத்தின்படி' (Hindu Marriage Act) நிர்வகிக்கப்படுகிறார்கள். வெவ்வேறு மதத்தினருக்கு இடையேயான திருமணங்கள் மற்றும் பதிவுத் திருமணங்கள் ஆகியவை 1954-ஆம் ஆண்டின் 'சிறப்புத் திருமணச் சட்டத்தின்படி' (Special Marriage Act) நிர்வகிக்கப்படுகின்றன. பார்சி சமூகத்தினர் 1936-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட அவர்களது சொந்தச் சட்டத்தைப் பின்பற்றுகிறார்கள். இஸ்லாமியர்கள் இஸ்லாமியச் சட்டத்தைப் பின்பற்றுகிறார்கள்; அதே நேரத்தில் கிறிஸ்தவர்கள், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்துச் சட்டமான 1869-ஆம் ஆண்டின் 'விவாகரத்துச் சட்டத்தின்படி' (Divorce Act) நிர்வகிக்கப்படுகிறார்கள். 2001-ஆம் ஆண்டில், இந்த விவாகரத்துச் சட்டத்தின் பிரிவு 10-ன்கீழ், விவாகரத்து கோருவதற்கான காரணங்களில் இருந்த பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் சட்டத் திருத்தம் மூலம் நீக்கப்பட்டன. இருப்பினும், பிரிவு 3-ன்கீழ் உள்ள நீதிமன்ற எல்லை தொடர்பான விதி மாற்றப்படவில்லை.
பிரிவு 3(3)-ன்படி, மாவட்ட நீதிமன்றம் என்பது எந்த மாவட்ட நீதிபதியின் எல்லைக்குட்பட்ட பகுதியில் அல்லது இந்தச் சட்டத்தின்கீழ் உள்ள அதிகார வரம்பிற்குள் திருமணம் நடைபெற்றதோ, அல்லது கணவனும் மனைவியும் வசிக்கிறார்களோ அல்லது கடைசியாக ஒன்றாக வசித்தார்களோ, அந்தப் பகுதிக்கான மாவட்ட நீதிமன்றத்தைக் குறிக்கும்.
திருமணப் பதிவு அல்லது விவாகரத்து தொடர்பான மனுவை, அந்தத் திருமணம் எங்கு நடந்ததோ அல்லது அந்தத் தம்பதியினர் கடைசியாக எங்கு இணைந்து வாழ்ந்தார்களோ அந்த மாவட்டத்தில் மட்டும்தான் தாக்கல் செய்ய முடியும். இந்த வழக்கைப் பொறுத்தவரை, அந்தப் பெண் தனது மனுவைத் தங்களுக்குத் திருமணம் நடந்த மாவட்டத்திலோ அல்லது தம்பதியராக அவர்கள் கடைசியாக இணைந்து வாழ்ந்த மாவட்டத்திலோதான் தாக்கல் செய்ய வேண்டியிருக்கும். நாடாளுமன்றம் இந்தச் சட்ட இடைவெளியை இந்து திருமணங்கள் மற்றும் சிறப்புத் திருமணங்களுக்கு கடந்த 2003-ஆம் ஆண்டிலேயே திருத்திவிட்டது; ஆனால், கிறிஸ்தவர்களுக்கான விவாகரத்துச் சட்டத்தில் (Divorce Act) இந்தத் திருத்தம் செய்யப்படாமல் விடுபட்டுப் போனது.
நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கியது?
நீதிபதி தாமஸ், இந்தச் சட்டவிதி மிகவும் எளிமையானது, தெளிவானது மற்றும் எந்தவொரு குழப்பமும் இல்லாதது என்றும், நீதிமன்றங்களால் அதனை மாற்றி எழுத முடியாது என்றும் கூறினார். ஒரு சட்டத்தின் வார்த்தைகள் தெளிவாகவும், ஒரே ஒரு அர்த்தத்தைத் தருவதாகவும் இருக்கும்போது, அதன் விளைவுகள் எப்படி இருந்தாலும் நீதிமன்றங்கள் அதே அர்த்தத்தையே பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார். ஏனெனில், சட்டம் இயற்றுபவர்களின் உண்மையான நோக்கம் அந்தச் சட்டத்தின் வார்த்தைகளிலேயே பிரதிபலிக்கிறது. சட்டத்தின் வரிகள் தெளிவாக இருந்து, அதில் எந்தக் குழப்பமும் இல்லாதபோது, அதை நடைமுறைப்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி நீதிமன்றம் கவலைப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.
பல்வேறு மதச் சமூகங்களின் தனிநபர் சட்டங்கள் வெவ்வேறாக இருக்கலாம் என்று குறிப்பிட்ட நீதிபதி, இந்தச் சட்ட இடைவெளியை 'அரசியலமைப்புக்கு முரணான பாகுபாடு' என்று வாதிடுவதை நிராகரித்தார். மேலும், உரிமையியல் நடைமுறைச் சட்டத்தின் (Civil Procedure Code (CPC)) பிரிவு-24-ன்கீழ், ஒரு வழக்கைத் தனக்கு வசதியான வேறொரு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி மனுதாரர் விண்ணப்பிக்கலாம் என்று நீதிமன்றம் தெரிவித்தது. ஏனெனில், பிரிவு-3(3) என்பது ஒரு வழக்கை முதலில் எங்கு பதிவுசெய்ய வேண்டும் என்பதை மட்டுமே தீர்மானிக்கிறது, அந்த வழக்கு இறுதிவரை அதே நீதிமன்றத்தில்தான் நடக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை.
2024-ஆம் ஆண்டு நடந்த எல்டோ வர்கீஸ் vs லியா ஜோஸ் (Eldho Varghese vs Liya Jose) என்ற வழக்கில், கேரள உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒரு முக்கிய விவகாரத்தை ஆராய்ந்தது. விவாகரத்துச் சட்டத்தின்கீழ் தாக்கல் செய்யப்பட்ட ஒரு விவாகரத்து மனுவை, பிரிவு 3(3)-ன்கீழ் உள்ள பிராந்திய எல்லை அதிகார வரம்பிற்குள் வராத மற்றொரு குடும்ப நீதிமன்றத்திற்கு மாற்ற முடியுமா என்பதே அந்த விவகாரம் ஆகும். இதனை விசாரித்த நீதிமன்றம், பிரிவு 3(3) என்பது ஒரு விவாகரத்து மனுவை முதன்முதலில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் போது மட்டுமே பொருந்தும் என்று தீர்ப்பளித்தது. அந்த மனு தாக்கல் செய்யப்பட்டபிறகு, உரிமையியல் நடைமுறைச் சட்டத்தின் (CPC) பிரிவு 24-ன்கீழ், அந்த வழக்கை வேறு எந்த நீதிமன்றத்திற்கும் மாற்றுவதற்கான முழு அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு உள்ளது என்று தெளிவுபடுத்தியது.
தற்போதைய வழக்கில், நீதிபதி தாமஸ் இந்த முந்தைய தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டார். குறிப்பிட்ட நீதிமன்றத்தில் தனது வழக்கைத் தொடரமுடியாத ஒரு கிறித்தவப் பெண்ணுக்குத் தீர்வு இல்லாமல் போகாது என்று அவர் கூறினார். ஏனெனில், உரிமையியல் சட்டத்தின்கீழ் தனது வழக்கை வேறொரு நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு அவர் உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்க முடியும்.
Original article : Kerala HC urges Parliament to let Christian women file for divorce where they live. -Amaal Sheikh