இன்ஸ்டாகிராம் விவகாரத்தில் மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு ஏன் எச்சரிக்கை விடுத்துள்ளது? -தேவேஷ் கே

 குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோக உள்ளடக்கங்களை (Child Sexual Exploitative and Abuse Material (CSEAM)) ஊக்குவிப்பதாக அல்லது அவற்றை அணுகுவதற்கு வழிவகுப்பதாகக் கூறப்படும் இன்ஸ்டாகிராம் (Instagram) விளம்பரங்கள் மற்றும் உள்ளடக்கங்களை முடக்குமாறு மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்கிய அறிவிப்பு குறித்து..


தற்போதைய நிகழ்வு :


குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோக உள்ளடக்கங்களை ((Child Sexual Exploitative and Abuse Material (CSEAM))) ஊக்குவிப்பதாகவோ அல்லது அவற்றை அணுகுவதற்கு வழிவகுப்பதாகவோ கூறப்படும் இன்ஸ்டாகிராம் விளம்பரங்களையும் உள்ளடக்கத்தையும் முடக்குமாறு மெட்டா நிறுவனத்திற்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) உத்தரவிட்டுள்ளது. மேலும், ஏழு நாட்களுக்குள் விரிவான விளக்கத்தைச் சமர்ப்பிக்குமாறும் மெட்டா நிறுவனத்தை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.


இது எப்படி நடந்தது?


இந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான உள்ளடக்கங்களை ஊக்குவிப்பதாகக் கூறப்படும் இன்ஸ்டாகிராம் கட்டண விளம்பரங்கள் குறித்து பிபிசி-ஐ (BBC Eye) நடத்திய விசாரணைக்குப் பிறகு இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.


இந்த விவகாரத்தைக் கவனத்தில் கொண்ட தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இது குறித்து ஆய்வு செய்யுமாறு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், அமைச்சகம் மெட்டா (Meta) நிறுவனத்திற்கு ஓர் அறிவிப்பை அனுப்பி, இதுபோன்ற விளம்பரங்களைத் தடுக்கக் கோரியுள்ளது. மேலும், இந்தத் தளம் எடுத்த நடவடிக்கை குறித்த விவரங்களையும், குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோக உள்ளடக்கங்களுக்கு (CSEAM) எதிரான அதன் கொள்கை பற்றிய தகவல்களையும் அது கேட்டுள்ளது.


பிபிசி விசாரணையில் என்ன குற்றச்சாட்டுகள் எழுந்தன?


இந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான உள்ளடக்கங்களை ஊக்குவிக்கும் கட்டண விளம்பரங்களை இன்ஸ்டாகிராம் வெளியிட்டு வருவதாக பிபிசி-ஐ விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விசாரணையின்படி, இந்த விளம்பரங்கள், பயனர்களை டெலிகிராம் சேனல்களுக்குத் திசைதிருப்பி, அங்கு அத்தகைய உள்ளடக்கங்களை வாங்க முடியும் என்றும் குற்றம் சாட்டியது.


இதுபோன்ற உள்ளடக்கங்கள் குறித்த மெட்டாவின் கொள்கைகள் என்ன?


குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோக உள்ளடக்கங்களை (CSEAM) கோருவதற்கோ அல்லது பகிர்வதற்கோ தங்களிடம் “சமரசமற்ற கொள்கை” இருப்பதாக மெட்டா நிறுவனம் கூறுகிறது. பிபிசியின் அறிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக, அத்தகைய விளம்பரங்களைக் கண்டறிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருப்பதாகவும், ஆனால் தனது 3.5 பில்லியன் பயனர்களிடையே கண்டறியப்படுவதைத் தவிர்க்க முயற்சிக்கும் குற்றவாளிகளுடன் “தொடர்ச்சியான போராட்டத்தில்” ஈடுபட்டு வருவதாகவும் அந்தத் தளம் கூறியது.


மெட்டாவின் விளம்பரக் கொள்கையானது, நிர்வாணம், பாலியல்ரீதியாக வெளிப்படையான படங்கள், பாலியல்ரீதியாகத் தூண்டும் உள்ளடக்கம் அல்லது வயது வந்தோரின் நிர்வாணம் மற்றும் பாலியல் செயல்பாடு குறித்த அதன் சமூகத் தரநிலைகளை மீறும் பொருள்கள் அடங்கிய விளம்பரங்களையும் தடை செய்கிறது.

இது ஏன் இந்தியாவில் ஒரு சட்டப் பிரச்சினையாக உள்ளது?


குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான உள்ளடக்கங்கள் பரவுவதைத் தடுப்பதற்காக, இந்தியாவின் சட்டக் கட்டமைப்பு டிஜிட்டல் தளங்கள்மீது கடுமையான கடமைகளை விதிக்கிறது.


தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்கீழ், ஆபாசமான உள்ளடக்கங்களை அல்லது குழந்தைகளை பாலியல்ரீதியாகத் தூண்டும் செயல்களில் ஈடுபடுவதாகச் சித்தரிக்கும் உள்ளடக்கத்தை மின்னணு வடிவில் வெளியிடுவது அல்லது அனுப்புவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.


தகவல் தொழில்நுட்ப (இடைத்தரகர் வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைகள்) விதிகளின்படி (Information Technology (Intermediary Guidelines and Digital Media Ethics Code) Rules), சமூக ஊடக இடைத்தரகர்கள், உண்மையான தகவல் கிடைத்தவுடனோ அல்லது முறையான புகார் வந்தவுடனோ, அத்தகைய உள்ளடக்கத்தை 24 மணி நேரத்திற்குள் உரிய கவனத்துடன் அகற்ற வேண்டும். இதைக் கடைப்பிடிக்கத் தவறினால், மூன்றாம் தரப்பு உள்ளடக்கத்திற்கான பொறுப்பிலிருந்து இடைத்தரகர்களைப் பாதுகாக்கும் “பாதுகாப்பான புகலிடம்” (safe harbour) என்ற பாதுகாப்பை இழக்க நேரிடலாம்.


பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டம் (Protection of Children from Sexual Offences (POCSO) Act), குழந்தைகளை ஆபாச நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதை ஒரு குற்றமாக ஆக்குகிறது. மேலும், குழந்தைப் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை உருவாக்குதல், வைத்திருத்தல், சேமித்தல், அனுப்புதல், விநியோகித்தல் அல்லது அதற்கு உதவுதல் ஆகியவற்றுக்குத் தண்டனை விதிக்கிறது. குழந்தைகள் சம்பந்தப்பட்ட குற்றங்களைப் புகாரளிப்பதை இது கட்டாயமாக்குகிறது.


இத்தகைய உள்ளடக்கத்தைக் கையாள்வதற்கு அரசாங்கத்திடம் வேறு என்ன வழிமுறைகள் உள்ளன?


மத்திய உள்துறை அமைச்சகத்தால் இயக்கப்படும் தேசிய இணையக் குற்றப் புகாரளிப்பு இணையதளம் (National Cyber Crime Reporting Portal), குடிமக்கள் இணையக் குற்றங்களைப் புகாரளிக்க உதவுகிறது. குறிப்பாகக் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் இது கவனம் செலுத்துகிறது. இந்திய இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (Indian Cyber Crime Coordination Centre (I4C)), குழந்தைகளின் பாலியல் சுரண்டல் உள்ளிட்ட இணையக் குற்றங்களை விசாரிப்பதற்கும் எதிர்த்துப் போராடுவதற்கும் சட்ட அமலாக்க முகமைகளுக்கு இடையேயான முயற்சிகளை ஒருங்கிணைக்கிறது.


இது தவிர, மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) மூலம் இன்டர்போல் (Interpol) பகிரும் பட்டியல்களின் அடிப்படையில், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான உள்ளடக்கங்களைக் கொண்ட இணையதளங்களை அரசாங்கம் அவ்வப்போது முடக்குகிறது. இதுபோன்ற உள்ளடக்கங்களுக்கான அணுகலைத் தடுக்குமாறு இணைய சேவை வழங்குநர்களுக்கு Internet Service Providers (ISP)) அறிவுறுத்தப்பட்டுள்ளது.



பிரிட்டனின் இன்டர்நெட் வாட்ச் ஃபவுண்டேஷன் (Internet Watch Foundation) அல்லது கனடாவின் ப்ராஜெக்ட் அராக்னிட் (Project Arachnid) ஆகியவற்றின் குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோக உள்ளடக்க (CSEAM) இணையதளங்கள் அல்லது வலைப்பக்கங்களின் பட்டியலை மாறும் தன்மையுடன் செயல்படுத்தவும், பயனர்கள் அத்தகைய தளங்களுக்குச் செல்வதைத் தடுக்கவும் இணைய சேவை வழங்குநர்களுக்கு (ISP) அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இணையவழி குழந்தை பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கம் மற்றும் குழந்தைகளை பாலியல் ரீதியாகச் சுரண்டும் உள்ளடக்கம் குறித்த தகவல் வழங்கும் தொலைபேசி வழி அறிக்கைகளைப் பகிர்ந்துகொள்வதற்காக, இந்தியாவின் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்திற்கும் (NCRB), அமெரிக்காவின் காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட குழந்தைகளுக்கான தேசிய மையத்திற்கும் (National Centre for Missing and Exploited Children (NCMEC)) இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த மையத்திடமிருந்து பெறப்படும் அறிக்கைகள், மேலதிக நடவடிக்கைக்காக தேசிய இணையக் குற்றப் புகாரளிப்பு இணையதளம் (National Cybercrime Reporting Portal) வழியாக மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுடன் இணையவழியில் பகிரப்படுகின்றன.


அடுத்து என்ன நடக்கும்?


அரசு அனுப்பிய அறிவிப்புக்கு மெட்டா (Meta) நிறுவனம் ஏழு நாட்களுக்குள் பதிலளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் விளக்கத்தையும் அது எடுத்துள்ள நடவடிக்கைகளையும் ஆய்வு செய்தபிறகு, மேலும் ஏதேனும் ஒழுங்குமுறை அல்லது சட்ட நடவடிக்கை தேவைப்படுகிறதா என்பதை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) முடிவு செய்யும்.


Original article : Why has the Centre issued a notice to Meta over Instagram? -Devesh K

Share: