இந்தியாவில், வாக்களிக்கும் உரிமை என்பது சட்டப்பூர்வ உரிமையாக மட்டுமே இருந்துவிட முடியாது -எஸ் ஒய் குரைஷி

 வாக்களிக்காமல் இருப்பதற்கான உரிமைக்கு அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பு உள்ளது. முரண்பாடாக, வாக்களிப்பதற்கான உரிமைக்கே அது போன்ற அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பு இல்லை.


சமீபத்தில், காங்கிரஸ் தலைவர் ஒருவர் வாக்களிக்கும் உரிமையை ஓர் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தன் மூலம், அரசியலமைப்பு சார்ந்த ஒரு பழைய விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளார். மேலோட்டமாகப் பார்க்கையில், இந்தக் கோரிக்கை மிகவும் நியாயமானதாகவே தோன்றுகிறது. ஒரு ஜனநாயகத்தில், நாட்டை ஆள்பவர்களைத் தேர்ந்தெடுக்கும் குடிமகனின் உரிமையைவிட அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த வேறு ஏதும் உரிமை இருக்க முடியும்? இருப்பினும், கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக, வாக்களிக்கும் உரிமை என்பது ஓர் அடிப்படை உரிமை அல்ல. மாறாக, அது ஒரு சட்டப்பூர்வமான உரிமை மட்டுமே என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புகளின் மூலம் தொடர்ந்து கூறி வருகிறது.

நீதிமன்றத்தின் இந்த நிலைப்பாடு நீண்டகாலமாக நிலைபெற்று பின்பற்றப்பட்டு வந்தாலும், நீதிமன்றத்தின் மாறிவரும் சட்டக் கோட்பாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது நாளுக்கு நாள் கடினமாகி வருகிறது. பல வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளில், நீதிமன்றம் வாக்காளரை வெறும் சட்டத்தால் உருவாக்கப்பட்ட செயலற்ற நபராகக் கருதும் அணுகுமுறையிலிருந்து முற்றிலுமாக விலகி, அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் உரிமைகளையும் பொறுப்புகளையும் கொண்ட செயலில் ஈடுபடும் குடிமகனாகப் படிப்படியாக மாற்றியுள்ளது.


இதன் விளைவாக ஒரு முரண்பாடு உருவாகிறது: வாக்களிக்கும் உரிமை என்பது சட்டப்பூர்வமானது என்று தொடர்ந்து விவரிக்கப்பட்டாலும், அதன் முக்கிய அம்சங்கள் ஏற்கனவே அரசியலமைப்புப் பாதுகாப்பைப் பெற்றுவிட்டன.


வாக்களிக்கும் உரிமையும் தேர்தலில் போட்டியிடும் உரிமையும் அனைவருக்குமானச் சட்டத்தின் (common law) கீழ் அமைந்த உரிமைகள் அல்ல. மாறாகச், சட்டத்தால் உருவாக்கப்பட்ட உரிமைகள் என்று 1952-ஆம் ஆண்டு  'என்.பி. பொன்னுசாமி vs  தேர்தல் நடத்தும் அதிகாரி' (N.P. Ponnuswami vs Returning Officer) வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுவே இதுக்குறித்த பாரம்பரியமான சட்ட நிலைப்பாடாகும். 1982-ஆம் ஆண்டு  'ஜோதி பாசு மற்றும் பிறர் vs தேபி கோசல் மற்றும் பிறர்' (Jyoti Basu & Others vs Debi Ghosal & Others)  வழக்கிலும் இந்தக்கோட்பாடு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி ஓ. சின்னப்ப ரெட்டி, வாக்களிக்கும் உரிமையானது "ஜனநாயகத்திற்கு அடிப்படையானதாக இருந்து வந்தாலும், அது ஒரு அடிப்படை உரிமையோ அல்லது அனைவருக்குமானச் சட்ட உரிமையோ அல்ல. மாறாக, முற்றிலும் ஒரு சட்டரீதியான உரிமை என்று குறிப்பிட்டார். 2006-ஆம் ஆண்டு குல்தீப் நய்யார் vs இந்திய ஒன்றியம்' வழக்கிலும் (Kuldip Nayar vs Union of India) அரசியலமைப்பு அமர்வு இந்தக்கருத்தை மீண்டும் வலியுறுத்தியது. ஜனநாயகம் அரசியலமைப்பின் அடிப்படை அமைப்பின் ஒரு பகுதியாக இருந்தாலும், தனிநபர் வாக்களிக்கும் உரிமையானது சட்டத்தின் மூலமே, குறிப்பாக 'மக்கள் பிரதிநிதித்துவச் சட்டங்களின்' (Representation of the People Acts) மூலமே பெறப்படுகிறது என்று தீர்ப்பளித்தது.



இந்த அணுகுமுறையின் பின்னணியில் உள்ள அடிப்படை புரிந்துகொள்ளத்தக்கதாகும். அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி III-ல் இடம்பெற்றுள்ள அடிப்படை உரிமைகளில், வாக்களிக்கும் உரிமை வெளிப்படையாகப் பட்டியலிடப்படவில்லை. எனவே, தேர்தல்களை ஒழுங்குபடுத்தும் தகுதிகள், தகுதி இழப்புகள் மற்றும் நடைமுறைகளை நிர்ணயிப்பதில் நாடாளுமன்றத்திற்கு முக்கிய சட்டமியற்றும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.


தேர்தல் செயல்முறைக்கு அரசியலமைப்பு  அங்கீகாரம் அளித்தல்


இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், தேர்தல் செயல்முறைக்கு அரசியலமைப்பு அங்கீகாரத்தை அளிக்கும் நடவடிக்கையை நீதிமன்றம் தொடங்கியது. 2002-ஆம் ஆண்டு 'யூனியன் ஆஃப் இந்தியா vs அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ரீஃபார்ம்ஸ்' (Union of India vs Association for Democratic Reforms) வழக்கில், வேட்பாளர்களின் குற்றப் பின்னணி, கல்வித் தகுதி மற்றும் நிதிச் சொத்துக்கள் குறித்த விவரங்களை அறிந்துகொள்ள வாக்காளர்களுக்கு உரிமை உண்டு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த உரிமை, பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையான அரசியலமைப்பின் பிரிவு 19(1)(a)-ன்கீழ் நேரடியாக வரையறுக்கப்பட்டது. வாக்காளர்களுக்குப் தேவையான தகவல்கள் கிடைக்கப்பெறாத சூழலில், ஜனநாயகத்தில் பயனுள்ள பங்கேற்பு சாத்தியமில்லை என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.


ஓராண்டுக்குப் பிறகு, 2003-ஆம் ஆண்டு 'பீப்பிள்ஸ் யூனியன் ஆஃப் சிவில் லிபர்டீஸ் vs யூனியன் ஆஃப் இந்தியா' (People’s Union of Civil Liberties vs Union of India) வழக்கில், நீதிமன்றம் ஒரு முக்கியமான வேறுபாட்டைச் சுட்டிக்காட்டியது. வாக்களிக்கும் உரிமை என்பது ஒரு சட்டரீதியான உரிமை என்பதை மீண்டும் உறுதிப்படுத்திய அதே வேளையில், வாக்களிப்பதற்கான சுதந்திரம், தகவலறிந்த முடிவை எடுப்பதற்கான சுதந்திரம் என்பது பிரிவு 19(1)(a)-ன் கீழ் பாதுகாக்கப்படும் ஒரு அடிப்படை உரிமை என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


மிகவும் முக்கியமான ஒரு மாற்றம் 2013-ல் அறிமுகப்படுத்தப்பட்ட 'யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை' (None of the Above (NOTA)) என்ற தீர்ப்பின் மூலம் ஏற்பட்டது. யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற விருப்பத் தேர்வை அங்கீகரித்த நீதிமன்றம், அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும் வாக்காளரின் முடிவானது பிரிவு 19(1)(a)-ன் கீழ் பாதுகாக்கப்படும் ஒரு வகையான அரசியல் நிலைப்பாடு என்று தீர்ப்பளித்தது. மேலும், எந்த ஒரு வேட்பாளருக்கும் வாக்களிக்க வேண்டாம் என்று முடிவு செய்யும் நபர்களுக்கும் வாக்களிக்கும் ரகசியத்தைக் காக்கும் உரிமை பொருந்தும் என்றும் நீதிமன்றம் கூறியது.


இது அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரு கடுமையான முரண்பாட்டை உருவாக்குகிறது. தகவலறியும் உரிமை அடிப்படை உரிமை என்றும், முழுமையான தகவல்களின் அடிப்படையில் அறிவுபூர்வமான தேர்வை மேற்கொள்ளும் சுதந்திரம் அடிப்படை உரிமை என்றும், இரகசிய வாக்குரிமை அடிப்படை உரிமை என்றும்,   அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமைக்கும்  அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பு உண்டு என்றும் உச்சநீதிமன்றம் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், வாக்களிக்கும் உரிமையானது வெறும் சட்டரீதியான உரிமையாகவே தொடர்ந்து கருதப்படுகிறது.


ஒரு கேள்வி இயல்பாகவே எழுகிறது: யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற உரிமையை அரசியலமைப்பு பாதுகாக்கும்போது, ​​ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அது ஏன் பாதுகாப்பதில்லை?


சில ஆண்டுகளுக்கு முன்னர் அரசியலமைப்புச் சட்ட முன்னுதாரணங்களும் இது போன்ற நடைமுறையே சுட்டிக்காட்டுகின்றன. 2023-ஆம் ஆண்டு 'அனூப் பரன்வால் vs யூனியன் ஆஃப் இந்தியா' வழக்கில், நீதிபதி அஜய் ரஸ்தோகி தனது தனிப்பட்ட கருத்தின் மூலம், வாக்களிப்பதை ஒரு அடிப்படை உரிமையாக அங்கீகரிப்பதை வெளிப்படையாக ஆதரித்தார். இந்தக் கருத்துக்குப் பெரும்பான்மை ஆதரவு கிடைக்கவில்லை என்றாலும், அரசியலமைப்பு அமர்வு வாக்களிப்பதை வெறும் சட்டரீதியான உரிமையாகக் கருதாமல், ஒரு அரசியலமைப்பு உரிமையாகவே பலமுறை குறிப்பிட்டது. இது நீதித்துறை புரிதலில் ஏற்பட்டுள்ள ஒரு முக்கியமான மாற்றத்தைக் குறிக்கிறது. வாக்களிக்கும் உரிமைக்கு அடிப்படை உரிமை என்ற அங்கீகாரத்தை நீதிமன்றம் இதுவரை வழங்கவில்லை. இருப்பினும், முந்தைய தீர்ப்புகளில் இருந்து வந்த, வாக்களிக்கும் உரிமை என்பது வெறும் சட்டப்பூர்வ உரிமை மட்டுமே என்ற குறுகிய பார்வையிலிருந்து நீதிமன்றம் தெளிவாக முன்னேறியுள்ளது.


அரசியலமைப்பின் 'அடிப்படை அமைப்பு' (basic structure) கோட்பாட்டின் அடிப்படையில் பார்க்கும்போது, ​​இந்த முரண்பாடு இன்னும் தெளிவாகத் தெரிகிறது. 1973-ஆம் ஆண்டு கேசவானந்த பாரதி vs கேரள அரசு (Kesavananda Bharati vs State of Kerala) வழக்கிலிருந்து, ஜனநாயகம் என்பது அரசியலமைப்பின் அடிப்படை அமைப்பின் ஒரு பகுதி என்று நீதிமன்றம் தொடர்ந்து கூறி வந்துள்ளது. 1975-ஆம் ஆண்டு இந்திரா நேரு காந்தி vs ஸ்ரீ ராஜ் நரேன் மற்றும் பிறர் (Indira Nehru Gandhi vs Shri Raj Narain & Anr) வழக்கில், சுதந்திரம் மற்றும் நியாயமான தேர்தல்கள் ஜனநாயகத்தின் முக்கியமான அம்சம் என்பதை நீதிமன்றம் அடிக்கோடிட்டுக் காட்டியது. அதனைத் தொடர்ந்து வந்த தீர்ப்புகளும் இந்தக்கோட்பாட்டை தொடர்ந்து உறுதிப்படுத்தியுள்ளன


ஜனநாயகம் வாக்குகளிலிருந்து தொடங்குகிறது.


இருப்பினும், ஜனநாயகம் என்பது ஒரு கருத்தியல் ரீதியான அமைப்பு அல்ல. அது தேர்தல்கள் மூலமாகவே செயலப்பட்டு வருகிறது. மேலும் தேர்தல்கள், குடிமக்கள் வாக்குச்சீட்டின் மூலம் பங்கேற்பதன் மூலமே தங்களது சட்டப்பூர்வ கடமையைப் பெறுகின்றன. மக்கள் இறையாண்மை செயல்படுத்தப்படும் மிக அடிப்படையான கருவியே வாக்கு ஆகும். நாம், மக்கள் (We, the People) என்ற அரசியலமைப்பின் அடிப்படை கருத்து, வாக்கின் மூலமாகவே ஆண்டுகள்தோறும் அரசின் சட்டப்பூர்வத்தன்மையை மீண்டும் உறுதிப்படுத்தி, அரசங்கங்களுக்கு பொறுப்புடன் செயலப்படும்  தன்மையை வழங்குகிறது.


ஜனநாயகம் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாகவும், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் ஜனநாயகத்திற்கு முக்கியமானததாகவும் இருக்கும் பட்சத்தில், குடிமக்களின் வாக்குரிமை ஏன் அரசியலமைப்பின் கருத்திற்கு வெளியே இருக்க வேண்டும் என்பதை விளக்குவது கடினமாக உள்ளது. ஜனநாயகம் அரசியலமைப்பிற்கு அடிப்படையானது என்றும், குடிமக்களின் வாக்குரிமை வெறும் சட்டப்பூர்வமான உரிமை மட்டுமே என்றும் கூறுவது தவறான கூற்றாக தோன்றுகிறது. வாக்காளர்கள் இல்லாத ஒரு ஜனநாயகத்தை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.



வாக்களிக்கும் உரிமையின் அனைத்து அம்சங்களும் எந்தவித சட்ட ஒழுங்குமுறையிலிருந்தும் விலக்கப்பட்ட முழுமையான அடிப்படை உரிமையாகக் கருதப்பட வேண்டும் என்று அர்த்தமில்லை. தேர்தல்களை முறையாக நடத்துவதற்குத் தேவையான தகுதிகள், தகுதியிழப்புகள் மற்றும் நடைமுறைகளை நிர்ணயிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திடமே தொடர்ந்து இருக்க வேண்டும். வயது வரம்பு, வாக்காளர் பட்டியல், குடியிருப்பு தொடர்பான நிபந்தனைகள், ஊழல் தேர்தல் நடைமுறைகளுக்கான தகுதியிழப்புகள் மற்றும் பிற ஒழுங்குமுறை விதிகள் அனைத்தும் நேர்மையான தேர்தல் முறைக்கு  முக்கியமானவை .


அரசியலமைப்புச் சட்ட அங்கீகாரம் பெற வேண்டியது, தேர்தல் நடைமுறையின் ஒவ்வொரு விதிமுறைக்கும் அல்ல. மாறாக, தகுதியுடைய ஒவ்வொரு குடிமகனும் ஜனநாயகச் செயல்முறையில் பங்கேற்கும் அடிப்படை உரிமைக்கே ஆகும்.


அரசியலமைப்பின் 326-வது பிரிவை ஆராயும்போது இது தெளிவாகத் தெரிகிறது. மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள், வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமையின் அடிப்படையில் நடைபெற வேண்டும் என்று அந்தப்பிரிவு கூறுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனும்,  துல்லியமாக வரையறுக்கப்பட்ட தகுதி நீக்கங்களுக்கு ஏற்ப, வாக்காளராகப் பதிவு செய்துகொள்ள அரசியலமைப்பு ரீதியான உரிமை பெற்றுள்ளார். இந்த உரிமைக்கான ஆதாரம் சட்டமியற்றல் அல்ல. மாறாக, அரசியலமைப்புச் சட்டமே ஆகும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டங்கள் அந்த அரசியலமைப்பு ஆணையைச் செயல்படுத்தும் வழிமுறைகளாக மட்டுமே அமைகின்றன.


இருப்பினும், வாக்களிக்கும் நடைமுறைகள் சட்டப்பூர்வமானவையாக இருந்தாலும், வாக்காளராக இருப்பதற்கான குடிமகனின் உரிமை அரசியலமைப்பு சட்டத்திலிருந்து  நேரடியாகப் பெறப்படுகிறது. எனவே, அரசியலமைப்புச் சட்டத்தின் படி அனுமதிக்கப்பட்ட வரம்புகளை தவிர, வாக்காளர் பட்டியலிலிருந்து ஒருவரை நீக்குவது என்பது, அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு உத்தரவாதத்தையே நீக்குவதாகும்.




நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டிய ஒரு விவகாரம்


சட்டப்பூர்வ உரிமைக்கும் அரசியலமைப்புச் சட்ட உரிமைக்கும் இடையிலான வேறுபாடு, குடியரசின் தொடக்க ஆண்டுகளில், தேர்தல் தொடர்பான கோட்பாடுகள் ஆரம்ப நிலையில் இருந்தபோது பயனுள்ள நோக்கத்தை நிறைவேற்றியிருக்கலாம். இருப்பினும், வாக்களிக்கும் உரிமையின் பல்வேறு பரிமாணங்களுக்கு அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பை படிப்படியாக விரிவுபடுத்தியதன் மூலம், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளே அந்த வேறுபாட்டை மெல்ல மெல்ல குறைத்துள்ளன.


ஒருவேளை, நீதிமன்றம் ஒரு பழைய கோட்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்திருக்கலாம். ஜனநாயகம் மற்றும் சுதந்திரமான, நியாயமான தேர்தல்கள் அடிப்படைக் கட்டமைப்பாக இருந்துவரும் ஒரு அரசியலமைப்பில், குடிமகனின் வாக்குரிமை அரசியலமைப்பின் ஆதரவற்ற உரிமையாக (constitutional orphan) தொடர்ந்து இருக்க முடியாது. வாக்குச்சீட்டு என்பது பாராளுமன்றத்தால் வழங்கப்படும் ஒரு சட்டப்பூர்வ சிறப்புரிமை மட்டுமல்ல. அது, மக்கள் இறையாண்மையை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகும். மேலும், குடியரசு தனது ஜனநாயகத்தன்மையை வருடங்கள்தோறும் புதுப்பித்துக் கொள்ளும் வழிமுறையாகவும் விளங்குகிறது.


அனைத்திற்கும் மேலாக, ஒவ்வொரு வேட்பாளரையும் நிராகரிக்கும் உரிமையை அரசியலமைப்பு பாதுகாக்கும்போது, ​​ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமைக்கான பாதுகாப்பை அதனால் மறுக்க முடியாது.


எஸ்.ஒய். குரேஷி, இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 'ஆவணப்படுத்தப்படாத ஓர் அற்புதம்: மாபெரும் இந்தியத் தேர்தலின் உருவாக்கம்'  (An Undocumented Wonder) என்ற நூலின் ஆசிரியர் ஆவார்.


Original article : In India, voting cannot remain merely a statutory right. -S Y  Quraishi

Share: