செனாப்–பியாஸ் (Chenab–Beas) இணைப்புச் சுரங்கப் பாதைத் திட்டத்தின் சுற்றுச்சூழல் சவால்கள் யாவை? -அபினவ் ராய்

 சிந்து நீர் ஒப்பந்தம் தற்காலிகமாகச்  நிறுத்தப்பட்டு  உள்ள நிலையில், செனாப் ஆற்றின் மேல் பகுதியிலிருந்து உபரி நீரை பியாஸ் ஆற்றுப் படுகைக்குத் திருப்பிவிடும் 'செனாப்-பியாஸ் இணைப்புச் சுரங்கப்பாதைத்’ திட்டத்தை (Chenab–Beas link tunnel project) இந்தியா சில நாட்களுக்கு முன்னர் அறிவித்துள்ளது. இந்தத்திட்டம் நீர்மின்சாரம் மற்றும் நீர் பாதுகாப்பு போன்ற நன்மைகளை அளிப்பதாக இருந்தாலும், திட்டம் எதிர்கொள்ளக்கூடிய சுற்றுச்சூழல் சவால்கள் என்னென்ன?


கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை (Indus Waters Treaty (IWT)) நிறுத்தி வைத்த ஓராண்டுக்குப் பிறகு, இந்தியா சிந்துப் படுகையின் மேற்கு நதிகளில் பல்வேறு நீர்மின் திட்டங்களை விரைவுபடுத்தியுள்ளது.


ஒரு முக்கிய முன்னேற்றமாக, இந்தியா சமீபத்தில் 8.7 கிலோமீட்டர் நீளமுடைய நீர் மாற்றுச் சுரங்கப்பாதை (water-diversion tunnel,) அமைப்பதற்கான முன்னேற்பாடுகளைத் தொடங்கியுள்ளது. ‘செனாப்–பியாஸ் இணைப்புச் சுரங்கத் திட்டம்’ (Chenab–Beas Link Tunnel Project) என்று அழைக்கப்படும் இந்தத்திட்டம், இமாச்சலப் பிரதேசத்தின் லாஹவுல்–ஸ்பிட்டி மாவட்டத்தில் உள்ள பிர் பஞ்சால் மலைத்தொடரைக் கடந்து, மேற்கு நோக்கி பாயும் செனாப் ஆற்றின்   கிளைநதியான சந்திரா ஆற்றை, கிழக்குப் பாயும் பியாஸ் ஆற்றுடன் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


மேற்கு நதிகள் (சிந்து, ஜீலம் மற்றும் செனாப்) மற்றும் கிழக்கு நதிகள் (ராவி, பியாஸ் மற்றும் சட்லஜ்) ஆகியவற்றை கொண்டுள்ள சிந்து நதி அமைப்பின் ஆறு நதிகளில் செனாப் நதியும் ஒன்றாகும். 1960-ஆம் ஆண்டு செப்டம்பர் 19-அன்று இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே கையெழுத்தான சிந்து நதிநீர் ஒப்பந்தம், இந்த இரண்டுநாடுகளின் வழியாகப் பாயும் எல்லை தாண்டிய 6 ஆறுகளின் நீரைப் பகிர்ந்துகொள்வதை முறைப்படுத்தியது.


இந்தச் சூழலில், நதிகளின் புவியியல், திட்ட விவரக்குறிப்புகள் மற்றும் சவால்களைப் புரிந்துகொள்வோம்.


செனாப் மற்றும் பியாஸ் படுகைகளின் புவியியல் அமைப்பு


சந்திரா மற்றும் பாகா நதிகள், இமாச்சலப் பிரதேசத்தின் லாஹௌல் மற்றும் ஸ்பிதி மாவட்டத்தில், மத்திய இமயமலையின் பெரும் இமயமலை மற்றும் பிர்-பஞ்சால் மலைத்தொடர்களுக்கு இடையில் அமைந்துள்ள, அதிக பனிப்பாறைகள் நிறைந்த பகுதியான பரலாச்சா கணவாயின் (உயரம்: 4,850 மீ) தென்கிழக்கு மற்றும் வடமேற்குச் சரிவுகளில் இருந்து உருவாகின்றன.


ஆரம்பத்தில் தென்மேற்கு திசையில் பாயும் சந்திரா நதி, படால் (4,000 மீட்டர் உயரத்தில் உள்ள ஒரு மலைக் குடியிருப்பு) அருகே மேற்கு நோக்கித் திரும்பி, தாண்டி கிராமம் வரை தொடர்கிறது. அங்கு அது பாகா நதியுடன் இணைந்து சந்திரபாகா நதியை உருவாக்குகிறது. பாங்கி பள்ளத்தாக்கைக் கடந்த பிறகு, இந்த நதி ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் கிஷ்வார் மாவட்டத்தில் உள்ள படார் பகுதிக்குள் நுழைகிறது. அங்கு அது செனாப் என்று அழைக்கப்படுகிறது.


ஜம்மு மற்றும் காஷ்மீரின் அக்னூரிலிருந்து செனாப் ஆறு, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சியால்கோட் மாவட்டத்தின் வழியாக சமவெளிப் பகுதிக்குள் நுழைகிறது. அங்கு, செனாப் ஆறு ஜீலம் மற்றும் ராவி நதிகளுடன் சங்கமிக்கிறது. பின்னர், ஏற்கனவே பியாஸ் ஆற்றின் நீரையும் சுமந்து வரும் சட்லெஜ் ஆற்றுடன் இணைந்து, ஐந்து ஆறுகள் என்ற வலிமைமிக்க ஆற்றை உருவாக்குகிறது. அதன்பிறகு, பஞ்ச்நத் ஆறு பாகிஸ்தானின் மிதான்கோட்  பகுதியில் சிந்து ஆற்றுடன் சங்கமிக்கிறது. 974 கிலோமீட்டர் நீளமுடைய செனாப் ஆறு, 67,430 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட நீர்ப்பிடிப்புப் பகுதியை கொண்டுள்ளது. இது சிந்துநதி அமைப்பின் (Indus River System) மிகப்பெரிய துணைநதியாகும் (tributary).


பியாஸ் நதியானது, இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ரோஹ்தாங் கணவாய்க்கு அருகிலுள்ள வியாஸ் குண்ட் என்ற இடத்தில், பிர் பஞ்சால் மலைத்தொடரில் உருவாகிறது. இது 20,303 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவி, ஹரிக்கேவில் சட்லஜ் நதியுடன் சங்கமிப்பதற்கு முன்பு, 470 கிலோமீட்டர் தூரம் பஞ்சாபை நோக்கிப் செல்கிறது. பியாஸ் ஆற்றுப் படுகையில், 5 மெகாவாட்டுக்கு மேற்பட்ட திறன் கொண்ட 51 நீர்மின் திட்டங்கள் அமைக்கப்படுவதற்கான வாய்புள்ளது. இந்தத்திட்டங்களின் மொத்த மின் உற்பத்தித் திறன் 5,000 மெகாவாட் ஆகும். இவற்றில் பர்பதி, டெஹர் மற்றும் பொங் அணை போன்ற முக்கிய நீர்மின் திட்டங்கள் அடங்கும்.


மேற்கு நதிகளில் இந்தியாவின் நீர்மின்சக்தித் திட்ட முன்னெடுப்புகள்


பியாஸ், ராவி மற்றும் சட்லெஜ் ஆகிய மூன்று கிழக்கு நதிகளின் ஆண்டு சராசரி நீர்வரத்து 33 மில்லியன் ஏக்கர்-அடி (Million Acre-Feet (MAF)) ஆகும். அதேவேளையில், சிந்து, ஜீலம் மற்றும் செனாப் போன்ற மேற்கு நதிகள், சிந்து நீர் ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றின் ஆண்டு சராசரி நீர்வரத்து 135 மில்லியன் ஏக்கர்-அடி ஆகும். இது சிந்துநதி அமைப்பின் மொத்த நீர்வரத்தில் 80 சதவீதத்தைக் கொண்டுள்ளது.


இந்த ஒப்பந்தத்தின்படி, கிழக்கு நதிகளின் நீரைப் பயன்படுத்துவதற்கான தடையற்ற உரிமைகள் இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மேற்கு நதிகளின் நீரின் முக்கிய  பயன்பாட்டு உரிமை பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த ஒப்பந்தம், குறிப்பிட்ட நிபந்தனைகளின்கீழ், வேளாண்மை மற்றும் நீர்மின் உற்பத்தி போன்ற நுகர்வற்ற (non-consumptive) பயன்பாடுகளுக்காக, மேற்கு நதிகளில் அதிகபட்சம் 3.6 மில்லியன் ஏக்கர்-அடி வரை நீரைத் தேக்கி வைக்கும் வசதிகளை இந்தியா உருவாக்க அனுமதிக்கிறது.


இது போன்ற அனுமதி இருந்தபோதிலும், மேற்கு நோக்கிப் பாயும் நதிகளில் தனக்கு அனுமதிக்கப்பட்ட நீர்ப் பங்கை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இந்தியா எந்த ஒரு பெரிய சேமிப்பு அணையையும் கட்டவில்லை. கிஷன்கங்கா மற்றும் ராட்லே போன்ற இந்தியாவின் பல 'ஆற்று நீரோட்ட' நீர்மின் திட்டங்கள் (hydroelectric projects (HEPs)), பாகிஸ்தானின் தொடர்ச்சியான மற்றும் திட்டமிட்ட ஆட்சேபனைகள் காரணமாக, பல நிலைகளைக் கொண்டதும் நீண்டகாலம் நீடிக்கக்கூடிய  சர்ச்சைத் தீர்வு நடைமுறையில் சிக்கிக்கொண்டுள்ளன.


நதியின் இயற்கை ஓட்டத்தை அடிப்படையாகக் கொண்ட நீர்மின் திட்டம் (Run-of-River) நீர்மின் திட்டங்கள் என்பது, நதியின் இயற்கையான ஓட்டத்தை அடிப்படையாகக் கொண்ட நீர்மின் திட்டம் இயற்கையான உயர வேறுபாடுகளால் உருவாகும் நீரோட்டத்தின் இயக்க ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் முறையாகும். வழக்கமான அணைகளைப் போல மிகப் பெரிய நீர்த்தேக்கங்களை அமைக்க வேண்டிய நிலை இது போன்றத்திட்டங்களுக்கு தேவை இல்லை.


இருப்பினும், சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா செனாப் படுகையில் உள்ள குறைந்தது நான்கு பெரிய நீர்மின் திட்டங்களின் பணிகளை விரைவுபடுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் கிஷ்வார் பகுதியில் உள்ள பகல் துல் (1,000 மெகாவாட்) மற்றும் கிரு (624 மெகாவாட்) திட்டங்களை 2026-ஆம் ஆண்டு டிசம்பர் மாததிறக்குள் செயல்பாட்டிற்கு கொண்டுவர  முடிவுசெய்துள்ளது. குவார் திட்டத்தை (540 மெகாவாட்) மார்ச் 2028-க்குள்ளும் செயல்பாட்டிற்குக் கொண்டுவருவதும், ரட்லே திட்டத்தின் (850 மெகாவாட்) பணிகளைத் வேகப்படுத்துவதும் இதன் முக்கிய நோக்கமாகும்.


மதிப்பீடுகளின்படி, ஜம்மு-காஷ்மீர் 18,000 மெகாவாட் அளவிலான மொத்த நீர்மின் ஆற்றல் திறனைக் கொண்டுள்ளது. இதில் இதுவரை 3,540.15 மெகாவாட் திறன் மட்டுமே பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும், பாகல் துல்  மற்றும் கிரு ஆகிய நீர்மின் திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்த பிறகு,  இதன் திறன் 2026-ஆம் ஆண்டு டிசம்பர் மாததிற்க்குள் 5,164.15 மெகாவாட்டாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


செனாப்-பியாஸ் இணைப்பு சுரங்கப்பாதை திட்டம்


மற்றொரு முக்கிய முன்னேற்றமாக, இமாச்சலப் பிரதேசத்தின் லாஹௌல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டங்களில், செனாப்-பியாஸ் படுகைகளுக்கு இடையேயான ஒரு பெரிய அளவிலான நீர்த் திசைதிருப்புச் சுரங்கத் திட்டத்தை இந்தியா செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்காக, தேசிய நீர்மின்சாரக் கழகம் (National Hydroelectric Power Corporation (NHPC)) கடந்த மே மாதம் செனாப்–பியாஸ் இணைப்புச் சுரங்கத் திட்டத்திற்கான மின்னணு ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை வெளியிட்டது. இந்தத்திட்டத்தின் மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 2,352.17 கோடியாகும். இந்தத் திட்டம் நான்கு ஆண்டுகள் மற்றும் ஒரு மாத காலத்திற்குள் நிறைவேற்றப்படவுள்ளது.


முன்மொழியப்பட்ட இந்தச் சுரங்கப்பாதை, சந்திரா ஆற்றில் தேங்கியுள்ள உபரி நீரை பியாஸ் படுகையை நோக்கித் செல்லும். முதற்கட்டமாக, லாஹௌல் பள்ளத்தாக்கில் உள்ள கோக்சர் கிராமத்திற்கு (கடல் மட்டத்திலிருந்து 3140 மீட்டர் உயரம்) அருகே சந்திரா ஆற்றின் குறுக்கே 19 மீட்டர் உயரமுள்ள ஒரு தடுப்பணை கட்டப்படும். பின்னர், அந்த உபரி நீர் 8.7 கி.மீ நீளமுள்ள ஒரு நீர் கொண்டுசெல்லும் சுரங்கப்பாதை வழியாக பியாஸ் படுகையை நோக்கித் திருப்பிவிடப்படும்.


தற்போது செனாப் நதியின் ஆண்டு நீர்வரத்து 35 மில்லியன் ஏக்கர்-அடி (MAF) என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத்திட்டத்தின் மூலம் திருப்பிவிடப்படும் நீரின் அளவு 1 MAF-க்கும் குறைவாகவே இருக்கும். இந்தக் கூடுதல் நீர், பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் நிலவும் தண்ணீர் தொடர்பான ஓரளவிற்குத் தீர்க்க உதவும். இந்தக் கூடுதல் நீர், பியாஸ் படுகையில் 4,000 மெகாவாட் நீர்மின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும்.


இருப்பினும், இந்தத் திட்டம் முக்கியமான சுற்றுச்சூழலியல் சார்ந்த கவலைகளை எழுப்புகிறது. குறிப்பாக, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகரித்து வரும் நிலையில், சூழலியல்ரீதியாக எளிதில் பாதிப்படையக்கூடிய இமயமலைப் பகுதியில் இது முக்கியத்துவம் பெறுகிறது.


சுற்றுச்சூழல் அபாயங்கள் மற்றும் சவால்கள்


கடந்த சில ஆண்டுகளில், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய பகுதிகளின் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு, பனிச்சரிவுகள் மற்றும் நிலச்சரிவுகள் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு, இமாச்சலப் பிரதேசத்தில் மட்டும் பருவமழை தொடர்பான பேரிடர்கள் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளையும், காயங்களையும் ஏற்படுத்தியதுடன் சாலைகள் மற்றும் உள்கட்டமைப்புகளையும் கடுமையாகச் சேதப்படுத்தின.


முன்மொழியப்பட்ட செனாப்-பியாஸ் இணைப்புச் சுரங்கப்பாதையானது, ரோஹ்தாங் கணவாய்க்கு அருகே தற்போதுள்ள அடல் சுரங்கப்பாதைக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தப்பகுதியானது நிலநடுக்கங்கள் மற்றும் அது தொடர்பான அபாயங்களுக்கான மிக அதிக அபாய மண்டலம் VI-இல் அமைந்துள்ளதால், ஏற்கனவே உள்ள சுரங்கப்பாதைக்கு அருகில் துளையிடும் நிலை இந்தப்பகுதியை நில அதிர்வு பாதிப்புக்குள்ளாகக்கூடியதாக மாற்றக்கூடும்.


வண்டல் மண் படிவதால் (Siltation) கீழ்நிலை நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு குறைந்து வருவது மற்றொரு சவாலாகும். பக்ரா மற்றும் போங் போன்ற முக்கிய நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு ஏற்கனவே  26 மற்றும் 14 சதவீதமாகக் குறைந்துள்ளது.


மேலும், இந்த உயர் இமயமலைப் பகுதிகளில் கோடைமழையின் போது மாறிவரும் மழைப்பொழிவு முறைகளையும், அதிகரித்துவரும் திரவ மழைப்பொழிவையும் பல ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. கடந்த சில ஆண்டுகளில் பருவமழையின்போது, ​​பியாஸ் நதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே, செனாப் நதியிலிருந்து கூடுதல் நீரை கீழ்நோக்கி கால்வாய் மூலம் கொண்டு செல்வதும் ஒரு கடுமையான சவாலாக இருக்கலாம்.


காலநிலை மாற்றம் மற்றும் சிந்துப் படுகையின் எதிர்காலம்


சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தனக்குக் கிடைக்கும் நீர்ப் பங்கை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளத் தேவையான உள்கட்டமைப்புகளை உருவாக்க இந்தியா முயற்சித்து வருகிறது. இதற்குப் புதிய சுரங்கப் பாதைகள் மற்றும் தடுப்பணைகள் மட்டுமல்லாமல், வண்டல் மண் படிந்துள்ள நீர்த்தேக்கங்களைச் சுத்தம் செய்தல் மற்றும் ஆற்றின் கீழ்நோக்கிய பகுதிகளில் புதிய சேமிப்பு வசதிகளை உருவாக்குவது முக்கியமான நடவடிக்கையாகும்.




இந்த ஒப்பந்தம், மேற்கு நதிகளைக் குறிப்பிட்ட நோக்கங்களுக்காகப் பயன்படுத்த இந்தியாவை அனுமதித்தாலும், அந்த நதிகளின் நீரோட்டத்தை வேறு ஆற்றுப் படுகைக்கு திசைதிருப்ப அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, இது, ஆற்றின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் அமைந்துள்ள நாடுகளுக்கு இடையே ஏற்கனவே மோசமடைந்துள்ள உறவில் மேலும் ஒரு சிக்கலான   உருவாக்கும். 


மேலும், சிந்து நதிப் படுகையில் உள்ள நீரில் 60 சதவீதம் பனி மற்றும் பனிப்பாறைகள் உருகுவதன் மூலம் கிடைக்கிறது. 1960 மற்றும் 2005-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும், இந்தப்பகுதியில் உள்ள பனிப்பாறைகளின் அளவில் 33.3 சதவீதம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. எனவே, பருவநிலை மாற்றம் சார்ந்த நெருக்கடிகள், பனிப்பாறைகள் சுருங்குதல், தீவிர வானிலை நிகழ்வுகளின் அதிகரிப்பு, மக்கள் தொகை  அதிகரிப்பு மற்றும் தூய்மையான ஆற்றலுக்கான தேவை அதிகரிப்பு போன்ற தற்போதைய சவால்கள், 65 ஆண்டுகள் பழமையான இந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன.


நீண்ட கால தொலை நோக்குப் பார்வையில், காலநிலை மாற்றத்தின் உண்மைகளையும், எல்லைகளைத் தாண்டிப் பாயும் நதி அமைப்பின் புவியியல் அமைப்பையும் அங்கீகரிப்பது, இரு நாடுகளுக்கும் இடையே  ஏற்றுக்கொள்ளக்கூடிய சுமுகமான தீர்வு ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.


Original article : What are the environmental challenges of the Chenab–Beas link tunnel project? -Abhinav Rai

Share: