பல்வேறு புதிய தயாரிப்புகளுடன் வேளாண் இரசாயனங்களின் பொறுப்பான பயன்பாடு நாட்டின் விவசாய உற்பத்தியில் ஒரு தாக்கத்தை ஊக்குவிக்கும்.
1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியா, வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்ய அதன் உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். 2023-ஆம் நிதியாண்டில், இந்தியா 329 மில்லியன் மெட்ரிக் டன்களுக்கும் உணவு தானியங்களை உற்பத்தி செய்தது. இருப்பினும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், தேவைப்படுபவர்களுக்கு மானிய விலையில் உணவை வழங்குவதற்கும் நாடு கிட்டத்தட்ட 400 மில்லியன் மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்ய வேண்டும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
தவறான புரிதல்களும் கள யதார்த்தமும்
இந்த சூழலில், பெரும்பாலும் பூச்சிக்கொல்லிகள் என்று அழைக்கப்படும் வேளாண் இரசாயனங்களின் பங்கு புரிந்து கொள்ளப்பட வேண்டும். "பூச்சிக்கொல்லிகள்" என்ற சொல் உணவு உற்பத்தியை அதிகரிப்பதிலும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதிலும் முக்கிய பங்கு வகித்தாலும், எதிர்மறையான கருத்துக்களைக் கொண்டுவருகிறது. வேளாண் இரசாயனங்கள் என்பது விவசாயத்தின் வளர்ச்சி மற்றும் உயிர்வாழ்விற்கு அவசியமான பல்வேறு பயிர் பாதுகாப்பு இரசாயனங்களை உள்ளடக்கியது.
வேளாண் வேதியியல் தொழில்துறை சரியான சூழலுடன் ஆதரிக்கப்பட்டால், அது இந்தியாவை உலகளாவிய உணவு வழங்குனராக மாற்றும் திறனைக் கொண்டுள்ளது. வாய்ப்புகள் இருந்தபோதிலும், கடுமையான விதிமுறைகள் போன்ற சவால்கள் இந்த இலக்கை கடினமாக்குகின்றன. ஆனாலும், பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கிற ஆயிரக்கணக்கான பூச்சிகள், களைகள், நோய்களுக்கு எதிராக விவசாய இரசாயனங்கள் சக்திவாய்ந்த கருவிகளாக இருக்கின்றன.
இயற்கை விவசாயத்தில் இலங்கையின் அனுபவம்
வேளாண் வேதிப்பொருட்களுக்கு பதிலாக இயற்கை வேளாண்மை பயன்படுத்தப்பட வேண்டும் என்ற தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. இயற்கை விவசாயம் சிறிய பண்ணைகளுக்கு ஏற்றது என்றாலும், இந்தியா போன்ற பெரிய நாட்டிற்கு உணவளிக்க முடியாது. இயற்கை விவசாயத்தில் இலங்கையின் தோல்வி ஒரு பாடம்.
2021-ஆம் ஆண்டில், இலங்கை அரசாங்கம் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை தடை செய்தது. இரண்டு மில்லியன் விவசாயிகளை கரிம பொருட்களுக்கு மாற கட்டாயப்படுத்தியது. ஆறு மாதங்களுக்குள், இலங்கை 450 மில்லியன் டாலர் மதிப்புள்ள அரிசியை இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. உள்நாட்டு அரிசி விலையும் சுமார் 50% அதிகரித்துள்ளது. பூச்சிக்கொல்லிகள் மீதான தடை இலங்கையின் முக்கிய ஏற்றுமதி மற்றும் அந்நிய செலாவணி ஆதாரமாக இருந்த தேயிலை பயிரையும் பாதித்தது.
இயற்கை விவசாயத்தில் இந்தியா இதுபோன்ற சோதனையை செய்ய முடியாது. வேளாண் இரசாயனங்களின் தீங்கு விளைவிக்கும் விளைவுகள் குறித்த பிரச்சனைகள் புதிய கண்டுபிடிப்புகளால் தீர்க்கப்படுகின்றன. இதன் விளைவாக, பாதுகாப்பான நச்சுத்தன்மை அளவு இப்போது ஹெக்டேருக்கு 10 கிராம் வரை குறைவாக உள்ளது. மேலும், இந்தியா பயிர்களில் குறைந்தபட்ச எச்ச வரம்புகளை பராமரிக்க முடியும்.
சவால்கள் மற்றும் வாய்ப்புகள்
இந்த நன்மைகள் இருந்தபோதிலும், வேளாண் இரசாயனங்கள் மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட தொழிலாகும். தயாரிப்பு பாதுகாப்பில் அதிகரித்த கவனம் புதிய மூலக்கூறுகளைக் கண்டுபிடிப்பதற்கும் உருவாக்குவதற்கும் செலவையும் நேரத்தையும் உயர்த்தியுள்ளது.
ஒரு புதிய மூலக்கூறை சந்தையில் அறிமுகப்படுத்த ₹2,000 கோடி ரூபாய்க்கு மேல் மற்றும் 10-12 ஆண்டுகள் ஆகும். வேலை செய்யும் ஒன்றைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு விஞ்ஞானிகள் 1.6 லட்சத்துக்கும் மேற்பட்ட வெவ்வேறு மூலக்கூறுகளை சோதிக்க வேண்டும்.
வேளாண் இரசாயனங்கள் பயிர் இழப்பைத் தடுப்பதற்கு மட்டுமல்லாமல், நிலையான வேளாண்மையை மேம்படுத்துவதற்கும் முக்கியமானவை. உலகளவில் பயிர்களைத் தாக்கும் சுமார் 67,000 பூச்சிகள் உள்ளன. சாத்தியமான பயிர் விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கு அறுவடைக்கு முந்தைய பூச்சிகள், களைகள் மற்றும் நோய்க்கிருமிகளால் இழக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சில இழப்புகள் கிட்டத்தட்ட 100% ஐ எட்டுகின்றன.
இந்தியாவில், 30,000 இனங்கள், 10,000 தாவர உண்ணும் பூச்சிகள் மற்றும் 3,000 நூற்புழுக்களால் சேதம் ஏற்படுவதால் ஒவ்வொரு ஆண்டும் விவசாய விளைபொருட்களில் 1.48 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று அரசாங்கம் மதிப்பிடுகிறது.
பயிர்களைத் தாக்கும் பூஞ்சை நோய்க்கிருமிகளும் மனித ஆரோக்கியத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. இந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் பயிர்களை பாதுகாக்க வேளாண் இரசாயனங்கள் சிறந்த தீர்வாகும். அவை திறமையானவை, பயன்படுத்த எளிதானவை, பரவலாகக் கிடைக்கின்றன மற்றும் செலவு குறைந்தவை. தயாரிப்புகளின் அடுக்கு ஆயுளை மேம்படுத்துகின்றன மற்றும் முதலீட்டில் அதிக வருமானத்திற்கு வழிவகுக்கின்றன.
இந்தியா உலகின் நான்காவது பெரிய வேளாண் வேதியியல் உற்பத்தியாளராகவும், நிகர ஏற்றுமதியாளராகவும் உள்ளது. 2025-ஆம் ஆண்டில், இந்தியாவில் வேளாண் வேதியியல் சந்தை 8.1 பில்லியன் டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்தியாவில் வேளாண் இரசாயனங்களின் தற்போதைய பயன்பாடு மிகக் குறைவு, ஒரு ஹெக்டேருக்கு சுமார் 0.27 கிலோ மட்டுமே.
சில தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்வுகள்
குறிப்பிட்டுள்ளபடி, ஒரு சவாலான ஆராய்ச்சி மற்றும் நாட்டின் மேம்பாட்டிற்கான நீண்ட செயல்முறை ஆகும். புதிய மூலக்கூறுகளுக்கான மெதுவான பதிவு செயல்முறையால் இது மோசமடைகிறது. வேளாண் இரசாயனத் தொழிலை மேலும் நிலையானதாக மாற்ற, ஒழுங்குமுறை அதிகாரிகள் பதிவு செயல்முறையை ஒரு வருடத்திற்குள் முடிக்க உறுதி செய்ய வேண்டும்.
இந்தியா தனது தொழில்நுட்ப தர தேவைகளில் பாதியை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதால் அதிகரித்து வரும் மூலப்பொருள் செலவுகள் மற்றொரு சவாலாகும். இது பொருளாதார காரணிகள் மற்றும் பருவகால தேவை காரணமாக ஏற்படும் அதிக சரக்கு காரணமாக இலாப வரம்புகளை பாதிக்கிறது. "இந்தியாவில் தயாரிப்போம்" (Make in India) முன்முயற்சியின் மூலம் தொழில்நுட்ப தர மூலப்பொருட்களை உற்பத்தி செய்ய வேளாண் வேதியியல் நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட பகுதிகளை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பூச்சிக்கொல்லிகளை பாதுகாப்பாக கையாள்வதையும் பயன்படுத்துவதையும் ஊக்குவிக்க விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட வேண்டும். உள்ளூர் விற்பனையாளர்களால் முறையற்ற கையாளுதல் மற்றும் பயிற்சி பெறாத விவசாயிகளால் தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவை பெரும்பாலும் சுகாதார பிரச்சினைகளுக்கு வழிவகுக்கின்றன. இது தொழில்துறைக்கு அவ பெயரை அளிக்கிறது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்தியாவின் குறைந்த வேளாண் வேதியியல் பயன்பாடு மற்றும் வரையறுக்கப்பட்ட தயாரிப்பு வரம்பு ஆகியவை மாற வேண்டும். சுற்றுச்சூழல் அக்கறைகளுடன் வேளாண் வேதியியல் கண்டுபிடிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையேயான சமநிலை அவசியம். கொள்கை சீர்திருத்தங்கள் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்க வேண்டும்,. மேலும், ஊக்கத்தொகைகள் வேளாண் இடுபொருட்களின் தரத்தை மேம்படுத்த வேண்டும்.
விவசாய இரசாயனங்களின் பொறுப்பான பயன்பாட்டை அதிகரிப்பதுடன், புகழ்பெற்ற உற்பத்தியாளர்களால் விற்கப்படும் புதிய தயாரிப்புகளின் வரம்பையும் அதிகரிப்பது இந்தியாவின் விவசாய உற்பத்தித்திறனில் தாக்கத்தை ஏற்படுத்தும். விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவது ஒரு அடிப்படை யதார்த்தமாக மாறும்.