2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா அதிக வருமானம் கொண்ட நாடாக மாற விரும்புகிறது. இதைச் செய்ய, அதன் பொருளாதாரம் அடுத்த 20 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 7.8% என்ற விகிதத்தில் வளர வேண்டும் என்று உலகவங்கி தெரிவித்துள்ளது. இந்த வளர்ச்சியின் பெரும்பகுதி இந்தியாவின் 63 மில்லியன் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (MSMEs) சார்ந்துள்ளது. இந்த வணிகங்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 30% மற்றும் அதன் ஏற்றுமதியில் 50% பங்களிக்கின்றன. இருப்பினும், அவற்றின் முழு திறனும் பயன்படுத்தப்படவில்லை.
MSME துறையில் தெளிவான பிளவு உள்ளது. சிலர் உலகளவில் வளரவும் போட்டியிடவும் டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். அதே நேரத்தில் பலர் பின்தங்கியுள்ளனர். முக்கியமான வணிக முடிவுகளை எடுக்க MSMEs-ல் 12% மட்டுமே டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. பெரும்பாலானவை பணமின்மை, கொள்கைகள் குறித்த குறைந்த அறிவு மற்றும் போதுமான திறமையான தொழிலாளர்கள் இல்லாதது போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன. இது அவர்களின் உற்பத்தித்திறனைக் குறைக்கிறது, கடன்களைப் பெறுவதை கடினமாக்குகிறது மற்றும் அவர்களை லாபகரமான உலகளாவிய சந்தைகளில் இருந்து விலக்கி வைக்கிறது.
இதற்கு நேர்மாறாக, டிஜிட்டல் மயமாக்கப்பட்ட MSME-களின் விற்பனை 80% வரை அதிகரித்துள்ளது, உற்பத்தித்திறன் 40% அதிகரித்துள்ளது, மேலும் பொருளாதார சவால்களைத் தாங்கும் திறன் சிறப்பாக உள்ளது. இது, இந்தியா எவ்வாறு அதிக MSME-களை டிஜிட்டல் மயமாக்கவும் உலகப் பொருளாதாரத்தில் சேரவும் உதவ முடியும்? என்ற முக்கியமான கேள்வியை எழுப்புகிறது.
மற்ற நாடுகள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளன. டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்துவதற்கான சிறு வணிகங்களின் செலவில் 50% வரை சிங்கப்பூர் ஈடுகட்டுகிறது. மேலும், AI அடிப்படையிலான கருவிகள் மற்றும் பயிற்சியையும் வழங்குகிறது. தென் கொரியா முக்கியமான தொழில்நுட்பங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான ஆதரவை 38% இலிருந்து 50% ஆக அதிகரித்துள்ளது. சீனா தனது சிறு வணிகங்களை மின் வணிகக் கொள்கைகள் மூலம் டிஜிட்டல் மயமாக்கத் தள்ளியுள்ளது, இது அவர்களின் உலகளாவிய வர்த்தகத்தை 68% அதிகரிக்க உதவியது. டிஜிட்டல் மயமாக்கல் வணிகங்கள் வளரவும், சர்வதேச அளவில் போட்டியிடவும், நீண்ட காலத்திற்கு செலவுகளைக் குறைக்கவும் உதவுகிறது என்பதை இந்த எடுத்துக்காட்டுகள் காட்டுகின்றன.
இந்தியாவில், டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்தும் சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் (MSMEs) நல்ல பலன்களைக் கண்டுள்ளன. இதன் மூலம் அவை 65% தங்கள் விற்பனையை அதிகரித்தன மற்றும் 54% அதிக லாபம் ஈட்டின. Google-KPMG ஆய்வில், டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்தும் வணிகங்கள் பயன்படுத்தாத வணிகங்களைவிட இரண்டு மடங்கு வேகமாக வளர்கின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறைக்கு மாறுவது செலவுகளைக் குறைக்கவும், பங்கு மற்றும் விநியோகங்களை சிறப்பாக நிர்வகிக்கவும், வாடிக்கையாளர் தேவைகளைப் புரிந்துகொள்ளவும், வேகமாக விற்கவும் உதவுகிறது. இது வணிகங்கள் கடன்களை எளிதாகப் பெறவும், பணப்புழக்கத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இருப்பினும், 57% MSMEs மட்டுமே AI-ஐ ஒரு நன்மையாகக் கருதுகின்றன. மேலும், அதை முறையாகப் பயன்படுத்துவதற்கான திறன்களைக்கூட குறைவாகவே கொண்டுள்ளன.
டிஜிட்டல் கருவிகள் காகித வேலைகளைக் குறைக்கின்றன, கடன் செயலாக்கத்தை விரைவுபடுத்துகின்றன. மேலும், வணிகங்கள் வரி மற்றும் அரசாங்க விதிகளைப் பின்பற்ற உதவுகின்றன. ஆனால், இந்த தெளிவான நன்மைகள் இருந்தபோதிலும், பல MSMEs டிஜிட்டல் முறைக்கு மாறுவதில் சவால்களை எதிர்கொள்கின்றன.
இதில் செலவு என்பது மிகப்பெரிய தடையாக உள்ளது. 30% MSMEs டிஜிட்டல் அமைப்புகளை அமைப்பது மிகவும் விலை உயர்ந்தது என்றும், 36% புதிய தொழில்நுட்பத்தை மாற்றவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ தயங்குகின்றன என்றும் கூறுகின்றன. ஒரு முக்கிய பிரச்சினை டிஜிட்டல் திறன்கள் இல்லாதது. NASSCOM-Meta ஆய்வு, 65% MSME-கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான அறிவு அல்லது ஆதரவு இல்லாததால் அவற்றைத் தவிர்க்கின்றன என்பதைக் காட்டுகிறது.
இணைய பாதுகாப்பு என்பது மற்றொரு கவலையாகும். இது 40% MSME-களைப் பாதிக்கிறது. இதனால் அவர்கள் மோசடிக்கு ஆளாகிறார்கள். டிஜிட்டல் வளர்ச்சியை ஆதரிக்கும் அரசாங்கத் திட்டங்கள் குறித்தும் பலருக்குத் தெரியாது.
இதைச் சரிசெய்ய, இந்தியாவிற்கு வலுவான, கூட்டு முயற்சி தேவை. MSME-கள் தங்கள் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் செலவுகளைக் குறைக்கவும் அரசாங்கம் சிறப்புக் கடன்களை வழங்க வேண்டும். வர்த்தக செயல்படுத்தல் மற்றும் சந்தைப்படுத்தல் திட்டம் (Trade Enablement & Marketing Scheme (TEAM)) மற்றும் தொழில்நுட்ப மேம்படுத்தல் திட்டங்கள் போன்ற திட்டங்கள் மூலம் இது ஏற்கனவே செய்து வருகிறது.
திறன்களை மேம்படுத்த, அரசாங்கம் தனியார் நிறுவனங்களுடன் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்க முடியும். உள்ளூர் உதவி மையங்களில் உள்ள முன்னாள் வணிக உரிமையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களை ஈடுபடுத்துவதன் மூலம் MSME-களுக்கு அவர்களின் தொழில்துறைக்கு ஏற்ற ஆலோசனைகளை வழங்க முடியும். அதே நேரத்தில், டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் அரசாங்க ஆதரவு திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கப்பட வேண்டும்.
இந்தியாவின் எதிர்கால பொருளாதாரம் MSME-கள் டிஜிட்டல் மயமாக்கப்படுவதைப் பொறுத்தது. மேலும், இவை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு வழிவகுக்கும். எனவே, அரசாங்கம் மற்றும் பிற கூட்டாளர்களிடமிருந்து விரைவான நடவடிக்கை தேவை என்பதை இது காட்டுகிறது.
அனுப் வாதவன், இந்திய அரசின் முன்னாள் வர்த்தகச் செயலாளர்; அரவிந்த் சிங், Quest OntheFRONTIER நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.