செலவு என்பது வருமானத்திற்கும் கடனுக்கும் ஒரு பிரதிநிதியாகும். கீழே உள்ள 10% மக்களின் செலவு ஒரு நாளைக்கு ரூ. 50-100 ஆக உள்ளது. ஒரு நாளைக்கு ரூ. 50-100 உடன் ஒரு நபர் எந்த வகையான உணவை உண்ண முடியும்? எந்த வகையான வீட்டில் வசிக்க முடியும்? எந்த வகையான மருத்துவ பராமரிப்பு அல்லது மருந்துகளை அந்த நபரால் வாங்க முடியும்? என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
இது கடந்த வாரத்தின் கட்டுரையின் தொடர்ச்சியாகும். நான் துல்லியமான மற்றும் சரிபார்க்கக்கூடிய தரவுகளை விரும்புகிறேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலான வாசகர்கள் அவ்வாறு இல்லை. படித்த நபர்களும்கூட எண்களைக் கண்டால் பயந்து விலகிவிடுகின்றனர். வார்த்தைகளை விட எண்கள் (ஒரு பொருளாதாரத்தின்) காட்சியை உண்மையாகப் விளக்குகின்றன என்று நான் நம்புகிறேன்.
நல்ல ஆளுமையின் இறுதி சோதனை மக்களின் நல்வாழ்வு என்றால், கேள்வி இதுதான்: ‘ஒரு நபருக்கு உணவு, வீடு, கல்வி, மருத்துவம், போக்குவரத்து, குடும்ப ஒன்றுகூடல்கள் மற்றும் பொழுதுபோக்கு போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு போதுமான வருமானம் உள்ளதா?’ (கால மாற்றத்தால் அத்தியாவசியமாகக் கருதப்படக்கூடிய பிற செலவுகளை நான் விட்டுவிட்டேன்). கிடைக்கக்கூடிய சிறந்த அதிகாரப்பூர்வ தரவுகள் வீட்டு நுகர்வு செலவு ஆய்வில் (HCES) உள்ளன. என் பார்வையில், வருமானத்தைவிட நுகர்வு அளவீடு, சராசரி குடும்பத்தின் வாழ்க்கைத் தரத்தையும் தரத்தையும் அளவிடுகிறது. கடைசி HCES 2023-24-ல் நடத்தப்பட்டது, நாடு முழுவதையும் உள்ளடக்கியது, மற்றும் 2,61,953 வீடுகளிடமிருந்து (1,54,357 கிராமப்புறம் மற்றும் 1,07,596 நகர்ப்புறம்) தகவல்கள் சேகரிக்கப்பட்டன. குறிப்பாக, நரேந்திர மோடியின் அரசு 2023-24இல் பத்து ஆண்டுகளை நிறைவு செய்தது. HCES தரவு விரிவானது.
நுகர்வு: உறுதியான தரவுகள்
ஆய்வின் மையம், சராசரி மாதாந்திர தனிநபர் நுகர்வு செலவு (MPCE) பற்றிய தரவுகளாகும். ஒரு நபரின் மாதாந்திர நுகர்வு செலவு, அவர் பணக்காரராகவோ, ஏழையாகவோ, அல்லது நடுத்தர வர்க்கமாகவோ இருந்தாலும், அவரது வாழ்க்கையின் தரத்தையும் சுருக்கமாகக் கூறுகிறது. அதிர்ஷ்டவசமாக, மக்கள் தொகையின் பிரிவு வகுப்புகளின் அடிப்படையில், அதாவது மக்கள் தொகையை ஒவ்வொரு 10 சதவீதமாகப் பிரித்து, தரவுகள் கிடைக்கின்றன. இதோ தரவுகள்:
மக்கள் தொகையில் பத்து சதவீதம் என்பது ஒரு சிறிய எண்ணிக்கை அல்ல: அது 14 கோடி மக்கள்தொகை ஆகும். அவர்கள் ஒரு தனி நாடாக இருந்தால், மக்கள்தொகையில் உலகில் 10-வது இடத்தைப் பிடிப்பார்கள். ஆனாலும், நீதி ஆயோக் மற்றும் அரசு ‘ஏழைகள்' மொத்த மக்கள்தொகையில் 5 சதவீதம் அல்லது அதற்கும் குறைவு மட்டுமே என்று கூறுகின்றனர். இந்தக் கூற்று நேர்மையற்றது.
மிகவும் பொருத்தமான ஒப்பீடு, மேல் 5 சதவீதத்தினருக்கும் கீழ் 5 சதவீதத்தினருக்கும் இடையிலான தனிநபர் செலவின விகிதமாகும். 12 ஆண்டுகளுக்கு முன்பு இது தோராயமாக 12 மடங்காக இருந்தது; 2023-24-ஆம் ஆண்டில் இது தோராயமாக 7.5 மடங்காக இருந்தது.
விவசாயிகள் & உணவு: மோசமான தரவுகள் (Farmers & food: dismal data)
வேளாண் வளர்ச்சி வலுவானது என்று அரசு கூறியுள்ளது. ஆனால், விவசாயியின் வாழ்க்கை வலுவானதா? 2021-22-ஆம் ஆண்டு தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி (National Bank for Agriculture and Rural Development (NABARD)) தரவுகள் 55 சதவீத வேளாண் குடும்பங்கள் கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டுகின்றன. ஒரு குடும்பத்திற்கு சராசரி நிலுவையில் உள்ள கடன் ரூ.91,231 ஆகும். பிப்ரவரி 3, 2025 அன்று மக்களவையின் தரவுகளின்படி, 13.08 கோடி விவசாயிகள் வணிக வங்கிகளுக்கு ரூ.27,67,346 கோடி கடன்பட்டுள்ளனர்; 3.34 கோடி விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.2,65,419 கோடி கடன்பட்டுள்ளனர் மற்றும் 2.31 கோடி விவசாயிகள் பிராந்திய கிராமப்புற வங்கிகளுக்கு ரூ.3,19,881 கோடி கடன்பட்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டியது.
பிரதம மந்திரி கிசான் திட்டம் (PM Kisan scheme) திட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. உச்ச பதிவு ஏப்ரல்-ஜுலை 2022-ல் 10.47 கோடி இருந்தது. இது 2023-ல் 8.1 கோடியாக (15-வது தவணை) குறைந்தது மற்றும் பிப்ரவரி 2025–ல் (19வது தவணை) 9.8 கோடியாக உயர்ந்துள்ளதாக அரசு கூறியது. இந்த ஏற்ற இறக்கங்கள் விளக்க முடியாதவை. நியாயமற்ற முறையில், குத்தகை விவசாயிகள் தகுதியற்றவர்களாக உள்ளனர்.
பயிர்க் காப்பீட்டுத் திட்டம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் மேம்படுத்தப்பட்டு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் இந்தத் திட்டத்தை 'இலாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை' என்ற அடிப்படையில் நடத்த அரசு அறிவுறுத்தியது. மறுபுறம், தேசிய ஜனநாயகக் கூட்டணி அமல்படுத்திய பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா (Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY)), ஒரு கொள்ளைத் திட்டமாக மாறிவிட்டது: மொத்த காப்பீடு வசூலுக்கு செலுத்தப்பட்ட உரிமைகோரல்கள் 2019-20-ல் 87 சதவீதத்திலிருந்து 2023-24-ல் 56 சதவீதமாக குறைந்துள்ளன.
முக்கியமான சமூக பாதுகாப்புத் திட்டம் — மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS)) கடந்த மூன்று ஆண்டுகளில் நிதி ஒதுக்கீடு தேக்கமடைந்துள்ளது. 1.5 கோடிக்கும் மேற்பட்ட செயலில் உள்ள பணி அட்டைகள் நீக்கப்பட்டுள்ளன. வாக்குறுதியளிக்கப்பட்ட 100 நாட்களுக்கு எதிராக சராசரி வேலை 51 நாட்களாக உள்ளது. தேவை சார்ந்த திட்டமாக இருப்பதற்குப் பதிலாக, இது நிதிப் பற்றாக்குறை திட்டமாக மாறியுள்ளது.
80 கோடி நபர்களுக்கு நபர் ஒருவருக்கு 5 கிலோ இலவச தானியம் 10 கோடி தகுதியுள்ள குடிமக்களை விட்டுவிடுகிறது. இலவச உணவு வழங்கல் மற்றும் மதிய உணவுத் திட்டம் இருந்தபோதிலும், குழந்தைகளில் வளர்ச்சி குன்றுதல் (stunting) 35.5 சதவீதம் மற்றும் குழந்தைகளில் மெலிவு (wasting) 19.3 சதவீதம் ஆகும். உலகளாவிய பசி குறியீட்டில் (Global Hunger Index), இந்தியா 127 நாடுகளில் 105-வது இடத்தில் உள்ளது.
உற்பத்தித்துறை: வலிமை இருந்தும் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் பலவீனம் (Manufacturing: The Achilles' Heel)
மொத்த மதிப்புக் கூட்டலில் உற்பத்தித் துறையின் பங்கு 2011-12-ல் 17.4 சதவீதத்திலிருந்து 2024-25-ல் 13.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டம் (Production-Linked Incentive scheme) என்று கூறப்படும் இந்தத் திட்டம் ஒரு மிகப்பெரிய தோல்வியாகும்: 14 துறைகளுக்கு ரூ.1,96,409 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், ரூ.14,020 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இருப்பது, இந்தியப் பொருளாதாரம் ஆரோக்கியமாக உள்ளது அல்லது வறுமையை ஒழிக்கும் அல்லது இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் என்று அர்த்தமல்ல. ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கும், இந்தியாவுக்கு மற்றொரு கட்டமைப்பு சீர்திருத்தங்கள், மாநிலங்களுக்கு அதிகாரப் பகிர்மானம், மகத்தான ஒழுங்குமுறை நீக்கம், அதிக போட்டி மற்றும் அரசு ‘பின்வாங்குவது’ ஆகியவற்றின் தேவை உள்ளது.