இந்தியாவும் வங்கதேசமும் ஒரு ஒப்படைப்பு ஒப்பந்தத்தைக் (extradition treaty) கொண்டுள்ளன. அதன் விதிகளின் கீழ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை ஒப்படைக்க வங்கதேசம் கோரலாம். ஆனால், இது அவர் தனது சொந்த நாட்டிற்கு நாடு கடத்தப்பட வேண்டும் என்று அர்த்தமல்ல.
வியாழக்கிழமை, அக்டோபர் 17 அன்று, வங்கதேசத்தின் சர்வதேச குற்றங்கள் தீர்ப்பாயம் (International Criminal Tribunal (ICT)) முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கைது ஆணை ஒன்றை பிறப்பித்தது. சமீபத்திய மக்களின் போராட்டங்களின் போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது இறுதியில் அவர் பதவியில் இருந்து அகற்றப்படுவதற்கு வழிவகுத்தது.
நாட்டை விட்டு தப்பியோடிய உயர்மட்ட அவாமி தலைவர்கள் (Awami leaders) உட்பட மொத்தம் 46 கைது ஆணைகளை சர்வதேச குற்றங்கள் தீர்ப்பாயம் பிறப்பித்தது. இந்த குற்றச்சாட்டுகள் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் நடந்த படுகொலைகள், கொலைகள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை உள்ளடக்கியது. வங்கதேசத்தின் இடைக்கால சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, கோடை மாதம் நடந்த வன்முறையில் 1,000 க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
77 வயதான ஷேக் ஹசீனா கடைசியாக புதுடெல்லிக்கு அருகிலுள்ள ஹிண்டன் விமான தளத்தில் காணப்பட்டார். ஆரம்பத்தில் அவர் இந்தியாவில் சிறிது காலம் தங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், பிற நாடுகளில் தஞ்சம் கோருவதற்கான அவரது முயற்சிகள் தோல்வியடைந்தன. இப்போது ஒரு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், ஹசினாவை ஒப்படைக்குமாறு டாக்கா கோர முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவும் வங்கதேசமும் ஒப்படைப்பு ஒப்பந்தத்தைக் (extradition treaty) கொண்டுள்ளனவா?
ஆம், இந்தியாவும் வங்கதேசமும் 2013-ஆம் ஆண்டில் ஒரு ஒப்படைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது தப்பியோடியவர்களை ஒப்படைக்கும் செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக 2016-ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது. இந்தியர்கள், குறிப்பாக வடகிழக்கில் உள்ள கிளர்ச்சிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் வங்கதேசத்தில் மறைந்திருந்ததால் இந்த ஒப்பந்தம் முதலில் உருவாக்கப்பட்டது. இதேபோல், மேற்கு வங்கம் மற்றும் அசாம் போன்ற இந்திய மாநிலங்களில் பதுங்கியிருந்த ஜமாத்-உல்-முஜாஹிதீன் பங்களாதேஷ் (Jamaat-ul-Mujahideen Bangladesh (JMB)) போன்ற குழுக்களிடமிருந்து வங்கதேசம் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி (United Liberation Front of Assam (ULFA)) கட்சியின் உயர்மட்ட தலைவரான அனுப் சேத்தியாவை 2015-ஆம் ஆண்டில் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு வெற்றிகரமாக ஒப்படைத்தது. அதன் பின்னர் தப்பியோடிய மேலும் ஒருவரை வங்கதேசம் ஒப்படைத்துள்ளது. அதே நேரத்தில் இந்தியா ஒரு சில நபர்களை வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளது.
ஒப்பந்தம் என்ன சொல்கிறது?
இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவும் வங்கதேசமும் ஒரு நாட்டில் நீதிமன்றத்தால் ஒப்படைக்கக்கூடிய குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்ட, குற்றவாளியாகக் கண்டறியப்பட்ட அல்லது தேடப்படும் நபர்களை ஒப்படைக்க வேண்டும். ஒப்படைக்கக்கூடிய குற்றத்திற்கு நிதிக் குற்றங்கள் உட்பட குறைந்தபட்சம் ஒரு வருட சிறைத்தண்டனை இருக்க வேண்டும். நாடுகடத்தல் நிகழ, குற்றம் இரு நாடுகளிலும் தண்டனைக்குரியதாக இருக்க வேண்டும். இது இரட்டை குற்றவியல் என்று அறியப்படுகிறது.
குற்றத்தில் ஈடுபடுதல், உதவுதல், உடந்தையாக இருத்தல், தூண்டுதல் அல்லது உடந்தையாக பங்கேற்கும் செயல்களை நாடு கடத்தும் இந்த ஒப்பந்தம் அனுமதிக்கிறது.
இந்த விதிகளுக்கு விதிவிலக்குகள் உள்ளனவா?
ஆம், குற்றம் அரசியல் இயல்புடையதாகக் கருதப்பட்டால் ஒப்படைப்பு கோரிக்கைகளை நிராகரிக்க இந்த ஒப்பந்தம் அனுமதிக்கிறது. எவ்வாறாயினும், கொலை, மனிதப் படுகொலை, தாக்குதல், வெடிகுண்டுகளை வைத்திருத்தல், துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல், சொத்துக்களை சேதப்படுத்துதல், கடத்தல் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான குற்றங்கள் உள்ளிட்ட அரசியல் குற்றங்களாகக் கருத முடியாத குற்றங்களின் நீண்ட பட்டியல் உள்ளது.
ஹசீனாவை வங்கதேசத்திடம் ஒப்படைக்க முடியுமா?
ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் கோரலாம். எவ்வாறாயினும், கொலை, வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்குதல் மற்றும் சித்திரவதை போன்ற அவருக்கு எதிரான சில குற்றச்சாட்டுகள் ஒப்பந்தத்தின் கீழ் அரசியல் குற்றங்களாக வகைப்படுத்தப்படவில்லை.
ஆகஸ்ட் 13 அன்று, கடந்த மாதம் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இறந்த மளிகைக் கடை உரிமையாளரைக் கொலை செய்ததாக ஹசீனா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அடுத்த நாளே, 2015-ஆம் ஆண்டு ஒரு வழக்கறிஞரை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது வலுக்கட்டாயமாக காணாமல் போன வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆகஸ்ட் 15 அன்று, மூன்றாவது வழக்கில் கொலை, சித்திரவதை மற்றும் இனப்படுகொலை ஆகிய குற்றச்சாட்டுகள் ஹசீனா மீது சுமத்தப்பட்டன.
ஒப்பந்தத்தின் 10 (3) பிரிவில் 2016-ஆம் ஆண்டு திருத்தம் நடைபெற்றதால் இந்த நிலைமை சிக்கலானது. இந்த திருத்தத்தின் படி, குற்றத்திற்கான ஆதாரங்களை வழங்க வேண்டிய அவசியத்தை நீக்கியது. இப்போது, ஒப்படைப்பு நடவடிக்கையை தொடர தகுதிவாய்ந்த நீதிமன்றத்திலிருந்து கைது ஆணை மட்டுமே தேவைப்படுகிறது.
ஹசீனாவை இந்தியா திருப்பி அனுப்ப வேண்டுமா?
ஹசீனாவை திரும்ப அனுப்புவதற்கு அவசியமில்லை. ஒப்படைப்பு ஒப்பந்தத்தின் பிரிவு 7, அந்த குற்றத்திற்காக அந்த நபரை இந்தியாவில் விசாரிக்க முடியுமானால், அவரை ஒப்படைப்பதை மறுக்க இந்தியாவை அனுமதிக்கிறது. ஆனால், இது ஹசினாவுக்கு பொருந்தாது. பிரிவு 8 மறுப்பதற்கான கூடுதல் காரணங்களை வழங்குகிறது. அதாவது, நீதியின் நலன்களில் நல்ல நம்பிக்கையுடன் குற்றம் சாட்டப்படாத வழக்குகள் அல்லது பொது குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றம் இல்லாத இராணுவக் குற்றங்கள் உட்பட, மறுப்புக்கான பல காரணங்களை பிரிவு 8 பட்டியலிடுகிறது.
ஹசினாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நல்லெண்ணத்துடன் கூறப்படவில்லை என்று வாதிடுவதன் மூலம் இந்தியா அவரை ஒப்படைப்பதை மறுக்க முடியும். இருப்பினும், இது வங்கதேசத்தின் புதிய அரசாங்கத்துடனான இந்தியாவின் உறவுகளை பாதிக்கும்.
இந்தியா என்ன செய்ய வேண்டும்?
வங்கதேசத்தில் இந்தியா அதன் நீண்டகால இராஜதந்திர மற்றும் பொருளாதார நலன்களை ஒரு நீண்டகால நண்பரான ஷேக் ஹசீனாவுடனான அதன் உறவுடன் சமநிலைப்படுத்த வேண்டும். ஹசீனாவை ஒப்படைப்பது இந்தியாவின் முக்கிய நலன்களுக்கு சேவை செய்யாது என்று சிலர் வாதிடுகின்றனர். ஒரு முன்னாள் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (Research and Analysis Wing (RAW)) அதிகாரி, ஒப்பந்தத்தின் சட்ட விவரங்கள் இரண்டாம் பட்சமானவை என்றும், வங்கதேசத்துடனான இந்தியாவின் உறவுகள் ஹசீனாவுக்கு அப்பால் செல்கின்றன என்றும் குறிப்பிட்டார்.
எந்தவொரு நாடும் அதன் தேசிய நலனுக்கு எதிராக, உடன்படிக்கை அல்லது ஒப்பந்தம் இல்லாமல் தப்பியோடியவர்களை நாடு கடத்தல் செய்வதில்லை. இறுதியில், எது நடந்தாலும் அது அரசியல் காரணங்களுக்காகவே இருக்கும்.