நிலத்தடி நீர் எடுப்பின் நிலையை அடிப்படையாகக் கொண்டு - ‘அதிக சுரண்டப்பட்ட’ (Over-exploited), ‘முக்கியமான’ (Critical), ‘அரை-முக்கியமான’ (Semi-critical) மற்றும் ‘பாதுகாப்பான’ (Safe) - தொகுதி மட்டத்தில் குறைந்தபட்ச செலவினத்தை விதிமுறைகள் குறிப்பிட்டுள்ளன.
கிராமப்புற தொகுதிகள் அல்லது துணைப்பிரிவுகளில் நீர் பாதுகாப்பு மற்றும் அறுவடை பணிகளுக்கு குறைந்தபட்ச தொகை செலவிடப்படும் வகையில், 2005ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MG-NREGA)) முதலாவது அட்டவணையை ஒன்றிய அரசு திருத்தியுள்ளது. ஊரக மேம்பாட்டு அமைச்சகம் (Ministry of Rural Development (MoRD)) செப்டம்பர் 23 அன்று அதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
இப்போது இந்த மாற்றத்தைத் தூண்டியது எது, எந்த மாநிலங்கள் இதனால் பயனடைய வாய்ப்புள்ளது?
MGNREGA-வின் அட்டவணை-I என்றால் என்ன?
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்ட விதிமுறைகளின்படி, ஒவ்வொரு மாநில அரசும் ஊரக பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு தேவையின் அடிப்படையில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 100 நாட்கள் உத்தரவாத வேலைவாய்ப்பை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.
திட்டத்தின் குறைந்தபட்ச அம்சங்கள் சட்டத்தின் அட்டவணை-I-ல் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், வேலை வழங்குவதற்காக மேற்கொள்ளக்கூடிய அனுமதிக்கப்பட்ட பொதுப் பணிகளின் பட்டியலும் இதில் உள்ளது. சட்டத்தில் எந்த திருத்தமும் செய்ய நாடாளுமன்ற ஒப்புதல் தேவைப்படும் அதே வேளையில், அரசாங்கம் ஒரு அறிவிப்பு மூலம் அட்டவணையில் மாற்றங்களைச் செய்யலாம். இன்றுவரை, அட்டவணை சுமார் 24 முறை திருத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் என்ன?
பத்தி 4-ன் கீழ் உள்ள துணைப்பத்தி (2)-க்குப் பிறகு புதிய விதிப்பிரிவை சேர்க்க ஊரக மேம்பாட்டு அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. துணைப்பத்தி (2) பணிகளின் முன்னுரிமை வரிசை (order of priority of works) ஒவ்வோர் கிராம பஞ்சாயத்தாலும் கிராம சபை கூட்டங்களில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. இது உள்ளூர் பகுதியின் சாத்தியக்கூறுகள், தேவைகள் மற்றும் வளங்களை கருத்தில் கொண்டு செய்யப்பட வேண்டும். கிராம சபைகள் என்பது கிராமப்புறத்தில் உள்ள அனைத்து பெரியவர்களையும் உள்ளடக்கிய ஒரு உள்ளூர் சபை ஆகும்.
மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளில் குறைந்தபட்சம் 60 சதவீதம் செலவின் அடிப்படையில் நிலம், நீர் மற்றும் மரங்களின் வளர்ச்சி மூலம் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகளுடன் நேரடியாக இணைக்கப்பட்ட உற்பத்தி சொத்துக்களை உருவாக்குவதற்கு இருக்க வேண்டும் என்பதை மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் (District Programme Coordinator) உறுதி செய்ய வேண்டும் என்று ஜூலை 2024ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (National Democratic Alliance (NDA) அரசாங்கத்தால் சேர்க்கப்பட்ட விதிமுறை கூறுகிறது.
நீர் தொடர்பான பணிகளுக்கு செலவிடப்பட வேண்டிய பணத்தின் விகிதத்தை ஒன்றிய அரசு இப்போது குறிப்பிட்டுள்ளது. தற்போதுள்ள, விதிமுறை மாவட்ட அளவில் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகளின் சொத்துக்களுக்கு செலவிடுவதை கட்டாயமாக்கியுள்ள நிலையில், புதிய விதிமுறைகள் நிலத்தடி நீர் பிரித்தெடுக்கும் நிலையின் அடிப்படையில் தொகுதி அளவில் குறைந்தபட்ச செலவினத்தை குறிப்பிட்டுள்ளன அவை அதிக சுரண்டப்பட்ட, முக்கியமான, அரை-முக்கியமான மற்றும் பாதுகாப்பானது போன்ற காரணிகளாகும்.
புதிய விதிமுறைகளின்படி, ஒன்றிய நிலத்தடி நீர் வாரியத்தால் (Central Ground Water Board (CGWB)) "அதிக சுரண்டப்பட்ட" மற்றும் "முக்கியமான" என்று வகைப்படுத்தப்பட்ட கிராமப்புற பகுதிகளில், குறைந்தபட்சம் 65 சதவீத MGNREGS பணிகள் (செலவின் அடிப்படையில்) நீர் பாதுகாப்பு, நீர் சேகரிப்பு மற்றும் பிற நீர் தொடர்பான பணிகளுக்காக மேற்கொள்ளப்பட வேண்டும். அரை-முக்கியமான மற்றும் பாதுகாப்பான தொகுதிகளுக்கு, குறைந்தபட்ச விகிதம் முறையே 40 சதவீதம் மற்றும் 30 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
"மேலும், ஒன்றிய நிலத்தடி நீர் வாரியத்தால் (CGWB) கிடைக்கக்கூடிய சுழற்சி நிலையான நிலத்தடி நீர்வள மதிப்பீட்டு அறிக்கையில் 'அதிகப்படியான சுரண்டல்', 'முக்கியமான', 'அரை-முக்கியமான' மற்றும் 'பாதுகாப்பான' என வகைப்படுத்தப்பட்ட மதிப்பீட்டு அலகுகள் (தொகுதிகள்) தலையீட்டிற்கான முன்னுரிமைப் பகுதிகளாகக் கருதப்படும்" என்று விதிமுறை கூறுகிறது.
தொகுதிகள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?
ஜல் சக்தி அமைச்சகத்தின்கீழ் உள்ள ஒன்றிய நிலத்தடி நீர் வாரியம், நிலத்தடி நீர் பயன்பாட்டின் அடிப்படையில் பகுதிகளை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கிறது. 'அதிகமாக சுரண்டப்படும்' (Over-exploited) பகுதிகளில், இயற்கையாகவே மாற்றக்கூடியதைவிட அதிகமான நிலத்தடி நீர் வெளியேற்றப்படுகிறது, பிரித்தெடுத்தல் 100% விட அதிகமாகும்.
90-100% நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் பகுதிகள் 'முக்கியமானவை' (critical) என்று அழைக்கப்படுகின்றன. 70-90% பயன்படுத்தும் பகுதிகள் 'அரை-முக்கியமானவை' (semi-critical) என்று அழைக்கப்படுகின்றன. 70% அல்லது அதற்கும் குறைவாகப் பயன்படுத்தும் பகுதிகள் 'பாதுகாப்பானவை' (safe) என்று அழைக்கப்படுகின்றன.
அமைச்சகம் ஏன் இந்த முடிவை எடுத்தது?
பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரத்தில் தனது ‘எதிர்பார்ப்புகளை’ வெளிப்படுத்தியதை அடுத்து, அமைச்சகம் இந்த முடிவை எடுத்ததாக ஒன்றிய ஊரக மேம்பாட்டு அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MG-NREGA)) கீழ் நீருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை நாம் செலவிட வேண்டும் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் தனது எதிர்பார்ப்பை தெரிவித்தார். எனவே, இன்று, ஊரக தேவைகளுக்கு அமைச்சகம் நீர் பாதுகாப்புக்கான புதிய விதிமுறையை உருவாக்கியுள்ளது. நீர் தொடர்பான பணிகளுக்கான குறைந்தபட்ச செலவினம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று சவுஹான் வியாழக்கிழமை ஒரு நிகழ்வில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
2025-26 நிதியாண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் மொத்த ஒதுக்கீடு ரூ. 86,000 கோடி ஆகும். இந்த தொகையில் எவ்வளவு நீர் தொடர்பான பணிகளுக்கு கிடைக்கும் என்பது தெளிவாக இல்லை. இருப்பினும், ஒன்றிய ஜல் சக்தி அமைச்சர் சி.ஆர். படேல், புதிய விதிமுறைகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் கீழ் நீர் தொடர்பான பணிகளுக்கு ரூ.35,000 கோடி கிடைக்கும் என்று தெரிவித்தார்.
எந்த மாநிலங்கள் அதிகம் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது?
ஒன்றிய நிலத்தடி நீர் வாரியத்தின் (Central Ground Water Board (CGWB)) இந்திய சுழற்சி நிலையான நிலத்தடி நீர் வளங்கள் குறித்த தேசிய தொகுப்பு, 2024-ன் படி, நாட்டில் உள்ள மொத்த 6,746 தொகுதிகளில், 751 (11.13%) 'அதிகப்படியான சுரண்டல்' ஏற்பட்டுள்ளது என்றும், 206 தொகுதிகள் (3.05%) 'முக்கியமானவை' என்றும், 711 தொகுதிகள் (10.54%) 'அரை-முக்கியமானவை' என்றும், 4,951 தொகுதிகள் (73.39%) 'பாதுகாப்பானவை' என்றும் 2024ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்டது. மீதமுள்ள 127 தொகுதிகள் உப்புத்தன்மை (salinity) கொண்டவை என மதிப்பிடப்பட்டன.
புதிய விதிமுறைகளின்படி, 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 'அதிகமாக சுரண்டப்பட்ட' பகுதிகளில் எவ்வளவு பணம் செலவிடப்படலாம் என்பதற்கான வரம்புகளை நிர்ணயிக்கின்றன. பெரும்பாலானவை ராஜஸ்தான் (214), பஞ்சாப் (115), தமிழ்நாடு (106), ஹரியானா (88) மற்றும் உத்தரபிரதேசம் (59) ஆகிய மாநிலங்களில் உள்ளன. இந்த மாநிலங்களிலும் பல 'முக்கியமான' தொகுதிகள் உள்ளன. இதன் காரணமாக, புதிய விதிகளின் கீழ் நீர் திட்டங்களுக்கு அவர்களுக்கு அதிக நிதி கிடைக்கும்.