முன்பு பிரிவினைவாதிகள், குண்டர்கள் மற்றும் தீவிர போதகர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டம் (National Security Act (NSA), பொது ஒழுங்கு அல்லது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் நபர்களுக்கு எதிராக அரசாங்கங்கள் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க அதிகாரம் அளிக்கிறது.
லடாக்கிற்கு மாநில அங்கீகாரம் மற்றும் 6-வது அட்டவணையின் கீழ் (Sixth Schedule) பாதுகாப்புகளைக் கோரும் இயக்கத்தின் முன்னணியில் இருக்கும் காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக், கடந்த வெள்ளிக்கிழமை அன்று லேயில் உள்ள காவல்துறையினரால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். சோனம் வாங்சுக் ஜோத்பூரில் உள்ள சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவரது மனைவி தெரிவித்தார்.
புதன்கிழமை லேயில் வெடித்த வன்முறைப் போராட்டங்களைத் தூண்டியதற்கு அவர் மீது ஒன்றிய அரசு முன்னதாக குற்றம் சாட்டியிருந்தது. அந்த வன்முறையில் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் நான்கு நபர்கள் உயிரிழந்தனர். மேலும், 50 பேர் காயமடைந்தனர்.
குற்றங்களைத் தடுக்க மக்களைத் தடுத்து வைக்க அனுமதிக்கும் இந்தியாவின் கடுமையான சட்டங்களில் ஒன்றின்மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்துவது பற்றிய கவனத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது. முன்பு பிரிவினைவாதிகள், குண்டர்கள் மற்றும் தீவிர போதகர்களுக்கு (radical preachers) எதிராகப் பயன்படுத்தப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டம், பொது ஒழுங்கு அல்லது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் நபர்களுக்கு எதிராக அரசாங்கங்கள் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க அதிகாரம் அளிக்கிறது.
இந்தியாவில் தடுப்புக்காவல் சட்டம் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. காலனித்துவ காலம் முதல் போர்களின்போது எதிர்ப்புகளைக் கட்டுப்படுத்த இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு, நாடாளுமன்றத்தால் 1950ஆம் ஆண்டின் தடுப்புக்காவல் சட்டம் இயற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து 1971ஆம் ஆண்டின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம் (Maintenance of Internal Security Act (MISA)) இயற்றப்பட்டது. இது அவசரநிலையின்போது தவறாகப் பயன்படுத்தப்பட்டதற்காக பெயர் பெற்றது. MISA சட்டம் 1978ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டது. பின்னர், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது.
1980ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டம் (National Security Act), ‘இந்தியாவின் பாதுகாப்பு, வெளிநாட்டு அதிகாரங்களுடனான உறவுகள், பொது ஒழுங்கு அல்லது அத்தியாவசிய பொருட்கள் வழங்கலைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு விரோதமான முறையில் செயல்படுவதைத் தடுக்க ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு தனிநபர்களைத் கைது செய்ய அதிகாரம் அளிக்கிறது. அதிகாரம் வழங்கப்படும்போது மாவட்ட ஆட்சியர்கள் (District Magistrates) மற்றும் காவல்துறை ஆணையர்களும் (Police Commissioners) இந்த அதிகாரங்களைப் பயன்படுத்தலாம். குற்றவியல் சட்டத்தின்கீழ் கைது செய்வது போலல்லாமல், தேசிய பாதுகாப்புச் சட்டம் தடுப்புக்காவல் என்பது தண்டனைக்குரியது அல்ல. அது ஒரு தடுப்பு நடவடிக்கையாகும் - இது ஒரு தனிநபர் தீங்கு விளைவிக்கும் செயலைச் செய்பவரைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க அரசாங்கத்திற்கு பரந்த அளவிலான அதிகாரங்களை வழங்குவதும், சில நடைமுறைப் பாதுகாப்புகளை உருவாக்குவதும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் நோக்கமாகும்.
தேசிய பாதுகாப்புச் சட்டம் எதை உள்ளடக்குகிறது?
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவல் உத்தரவு கைது வாரண்ட் போல் செயல்படுத்தப்படலாம். ஒருமுறை தடுப்பு காவலில், ஒரு நபரை குறிப்பிட்ட இடங்களில் வைத்திருக்கலாம். மாநிலங்கள் முழுவதும் அந்த நபரை நகர்த்தலாம். மேலும், அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்படுத்தலாம்.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதற்கான காரணத்தை ஐந்து நாட்களுக்குள் தெரிவிக்கப்பட வேண்டும். அதிகபட்சம் 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று சட்டம் கட்டாயப்படுத்துகிறது. மேலும், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவருக்கு அரசாங்கத்திற்கு மனுத் தெரிவிக்கும் உரிமை உண்டு என்றும், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஆலோசனைக் குழு (Advisory Board) 3 வாரங்களுக்குள் வழக்கை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சட்டம் கூறுகிறது. போதுமான காரணம் இல்லை என்று அந்தக் குழு கண்டறிந்தால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட நபரை விடுவிக்க வேண்டும். தடுப்புக் காவல் பொதுவாக 12 மாதங்களுக்குமேல் இருக்கக்கூடாது. இருப்பினும், தடுப்புக் காவல் முன்னதாகவே ரத்து செய்யப்படலாம்.
இருப்பினும், கடுமையான வரம்புகள் உள்ளன. ஆலோசனைக் குழுவின் முன் தடுத்து வைக்கப்பட்டவருக்கு சட்ட பிரதிநிதித்துவ உரிமை இல்லை. மேலும், அரசாங்கம் ‘மக்களின் நலனுக்காக’ (public interest) உண்மைகளை மறைக்கலாம். இந்த விதிகள் அதிகாரிகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க நிறைய சுதந்திரத்தை அளிக்கின்றன.
வாங்சுக்கின் விருப்பங்கள்
சட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ளபடி, வாங்சுக் அரசாங்கத்திற்கு ஒரு பிரதிநிதித்துவத்தை தாக்கல் செய்வதன் மூலம் தடுப்புக்காவல் உத்தரவை சவால் செய்யலாம் அல்லது மூன்று வாரங்களுக்குள் ஆலோசனைக் குழுவின் மறுஆய்வுக்காக காத்திருக்கலாம். ஆலோசனைக் குழு போதுமான காரணத்தைக் கண்டறியவில்லை என்றால், அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.
இதற்கு மாற்றாக, அவர் தனது தடுப்புக்காவலின் சட்டப்பூர்வத்தன்மையை எதிர்த்து உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தை (அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 226/32-ஐ) பயன்படுத்தி அணுகலாம். எந்தவொரு கட்டத்திலும் தடுப்புக்காவல் தேவையற்றது என்று அரசாங்கமே முடிவு செய்தால், அவர் தடுப்புக்காவலை ரத்து கோரி மனுதாக்கல் செய்யலாம்.
இருப்பினும், இந்த தீர்வுகள் நடைமுறைக்கு வரும் வரை, தேசிய பாதுகாப்புச் சட்டம் அதிகாரிகளுக்கு முறையான குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்யாமல் அல்லது திறந்த நீதிமன்றத்தில் ஆதாரங்களை சமர்ப்பிக்காமல் அவரை தடுப்புக்காவலில் வைத்திருக்க அனுமதிக்கிறது.
தேசிய பாதுகாப்புச் சட்டம் முன்பு எவ்வாறு பயன்படுத்தப்பட்டது?
இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்ட புதிய முக்கியமான வழக்கு வாங்சுக் ஆகும். சமீபத்திய ஆண்டுகளில், பல முக்கிய வழக்குகளில் இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2023-ல், 'வாரிஸ் பஞ்சாப் தே' அமைப்பின் தலைவரான தீவிர சீக்கிய போதகர் அம்ரித்பால் சிங் (Amritpal Singh), தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு அசாமின் திப்ருகர் சிறைக்கு மாற்றப்பட்டார்.
2017ஆம் ஆண்டில், பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் ராவணன் மீது உத்தரபிரதேசத்தில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தை விசாரணைக்கு வந்த பிறகு அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு, செப்டம்பர் 2018-ல் அவர் விடுவிக்கப்பட்டார். மேலும், 2020ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்ட (Citizenship Amendment Act (CAA)) எதிர்ப்பு போராட்டங்களின்போது, உத்தரபிரதேசத்தில் பல போராட்டக்காரர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
குடிமை உரிமை குழுக்கள் மற்றும் நீதிமன்றங்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் தவறான பயன்பாட்டை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளன.
2020ஆம் ஆண்டில், குழந்தைகள் மருத்துவர் டாக்டர் கஃபீல் கான் ஒரு தூண்டுதல் பேச்சு என்று குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச அரசாங்கத்தால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டார். அலகாபாத் உயர் நீதிமன்றம் தடுப்பு காவலுக்கான காரணங்களைக் கேள்வி எழுப்பி அவரை விடுவிக்க உத்தரவிட்டபிறகு அவரது வழக்கு பரவலான கவனத்தைப் பெற்றது.
மத்தியப் பிரதேசத்தில், ‘லவ் ஜிஹாத்’ வழக்குகளில் இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உத்தரப் பிரதேசத்தில், இது வகுப்புவாத வன்முறை சம்பவங்களின் போது இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்புச் சட்டம் பசுவதை அல்லது பழக்கமான குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகவும் மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ‘தேசிய பாதுகாப்பு’ (national security) அச்சுறுத்தல் என்ற வரையறையை நீட்டிக்கிறது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
2012-ஆம் ஆண்டில், மண்ணெண்ணெய் கறுப்புச் சந்தை (black-marketing kerosene) வணிகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபரின் தேசிய பாதுகாப்புச் சட்டக் காவலை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. காரணங்கள் நியாயமற்றவை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஒன்றாக, இந்த நிகழ்வுகள் மீண்டும் நிகழும் ஒரு வடிவத்தை எடுத்துக்காட்டுகின்றன: அரசாங்கங்கள் இந்தச் சட்டத்தை பாதுகாப்புக்குத் தேவையான கருவி என்று பாதுகாக்கின்றன. அதே, வேளையில் விமர்சகர்கள் இந்த சட்டம் மிகவும் கடுமையானதாகவும் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் கருதுகின்றனர்.