வறண்ட, அரேபிய தீபகற்ப நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை பெய்வது என்பது வழக்கத்திற்க்கு மாறானது. இருப்பினும், குளிர்கால மாதங்களில் கனமழை பொழிவு எப்போதாவது இப்பகுதியில் நிகழ்கின்றன. இந்த முறை என்ன நடந்தது?
ஐக்கிய அரபு அமீரகத்தில் (United Arab Emirates (UAE)) திங்கள்கிழமை ஏப்ரல் 15 நள்ளிரவு கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்தது. இதில் ஒருவர் பலியானார். வீடுகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு சேதம் ஏற்பட்டது. துபாயில் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அரசின் வாம் (WAM) செய்தி நிறுவனத்தின் செய்தியின்படி, துபாயில் பெய்த மழையானது ஒரு வரலாற்று வானிலை நிகழ்வாகும். 1949-ல் பெய்த கனமழையைவிட இந்த முறை அதிக அளவு மழை பெய்துள்ளது - இந்த மழைப்பொழிவு, 1971-ல் ஐக்கிய அரபு அமீரகம் நிறுவப்படுவதற்கு முன்பு நிகழ்ந்தது.
வறண்ட அரேபிய தீபகற்ப நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை பெய்வது என்பது வழக்கத்திறு மாறானது. இருப்பினும், குளிர்கால மாதங்களில் கனமழை பொழிவு எப்போதாவது இப்பகுதியில் நிகழ்கின்றன.
என்ன நடந்தது, ஐக்கிய அரபு அமீரகத்தில் இவ்வளவு அதிக மழைப் பொழிவுக்கு காலநிலை மாற்றமே காரணம் என்பதை இங்கே பார்க்கலாம்.
என்ன நடந்தது?
இடியுடன் கூடிய மழைப்பொழிவு திங்கள்கிழமை 15.04.2024 இரவு தொடங்கியது மற்றும் செவ்வாய்க்கிழமை 16.04.2024 மாலை வரை 142 மில்லிமீட்டர் மி.மீ மழையை பாலைவன நகரமான துபாயில் கொட்டியது. வழக்கமாக, ஒன்றரை ஆண்டுகளில் இந்த அளவுக்கு மழை பெய்யும். 2023-ம் ஆண்டில் 80 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பதிவு செய்த உலகின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமான துபாய் சர்வதேச விமான நிலையத்தில் சராசரியாக ஆண்டுக்கு 94.7 மில்லிமீட்டர் மழை பெய்யும்.
கனமழை காரணமாக விமானங்கள் திருப்பி விடப்பட்டதாலும் விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாலும் விமான போக்குவரத்து தடைபட்டது. விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 25 நிமிடங்களுக்கு நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் கனமழை ஓய்ந்தாலும், புதன்கிழமை வரை இடையூறுகள் தொடர்ந்தன என்று தெரிவித்தனர்.
அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் பேசிய, பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு தம்பதியர், விமான நிலையத்தின் நிலைமையை முழுமையான முடக்கம் என்று குறிப்பிட்டனர். “ஒரு டாக்ஸி கூட கிடைக்கவில்லை, மெட்ரோ ரயில் நிலையத்தில் மக்கள் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். விமான நிலையத்தில் மக்கள் தூங்குகிறார்கள்” என்று அந்த நபர் கூறினார்.
துபாய் முழுவதும், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது மற்றும் வாகனங்கள் சாலையோரங்களில் அடித்து செல்லப்பட்டன. துபாய் மால் (Dubai Mall), மால் ஆஃப் தி எமிரேட்ஸ் (Mall of the Emirates) போன்ற பிரபல ஷாப்பிங் இடங்களும் வெள்ளத்தில் மூழ்கின. தண்ணீரை வெளியேற்றுவதற்காக டேங்கர் லாரிகள் அனுப்பப்பட்டன.
துபாயிலிருந்து கிட்டத்தட்ட 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ‘அல் ஐன்’ (Al Ain) நகரில் 254 மிமீ மழை பெய்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள புஜைராவில் (Fujairah) செவ்வாய்க்கிழமை 145 மி.மீ மழை பெய்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை பள்ளிகள் மூடப்பட்டன. துபாயில், அரசாங்கம் தனது ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அண்டை நாடான ஓமனிலும் கடுமையான மழை பெய்தது, “இதில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும் பள்ளி வாகனம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதில் 10 பள்ளி குழந்தைகள் பலியாயினர் என்று ஏ.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கனமழைக்கு காரணம் என்ன?
அரேபிய தீபகற்பத்தை கடந்து ஓமன் வளைகுடாவை கடக்கும் புயல் அமைப்புதான் இந்த கனமழைக்கு முக்கிய காரணம்.
ஏ.பி. செய்தி நிறுவனத்தின் மற்றொரு செய்தியின்படி, மேக விதைப்பு (cloud-seeding) மூலம் மழையை அதிகப்படுத்தியிருக்கலாம், ”மேகங்களில் உப்பு கலவைகளை தெளிக்கும் செயல்முறை மேகத்தின் ஒடுக்கம் மற்றும் இறுதியில் மழையை ஏற்படுத்தும்” என்று குறிப்பிட்டுள்ளது.
வானியல் ஆய்வுக்கான தேசிய மையத்தின் வானிலை ஆய்வாளர்கள், “மழைக்கு முன் 6 முதல் 7 மேக விதைப்பு விமானங்கள் பறந்தன” என்று கூறியதைக் பல அறிக்கைகள் மேற்கோள் காட்டியுள்ளது.
காலநிலை மாற்றம் இந்த நிகழ்விற்கு காரணமா?
சில வல்லுநர்கள், அதிகரிக்கும் உலகளாவிய வெப்பநிலையும் காரணமாக இருக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளனர். அதிக வெப்பநிலை நிலத்திலிருந்து மட்டுமல்ல, பெருங்கடல்கள் மற்றும் பிற நீர்நிலைகளிலிருந்தும் நீரை ஆவியாக்குகிறது. அதாவது, வெப்பமான வளிமண்டலத்தில் அதிக ஈரப்பதம் இருக்கும். சராசரி வெப்பநிலையில் ஒவ்வொரு 1 டிகிரி செல்சியஸ் உயர்வுக்கும், வளிமண்டலம் சுமார் 7% அதிக ஈரப்பதத்தை வைத்திருக்கும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இது புயல்களை மிகவும் ஆபத்தானதாக ஆக்குகிறது. ஏனெனில், இது மழைப்பொழிவின் அளவை அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது. இது இறுதியில் கடுமையான வெள்ளத்தை ஏற்படுத்தும்.
இந்தியாவின் தார் பாலைவனம் மற்றும் ஆஸ்திரேலியாவின் பாலைவனப் பகுதிகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகள், காலநிலை மாற்றம் இந்தப் பகுதிகளில் அதிக மழைப்பொழிவுக்கு வழிவகுக்கும் என்பதைக் காட்டுகிறது.
1850-ல் இருந்து பூமியின் சராசரி புவி வெப்பம் குறைந்தது 1.1 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில், கடந்த 60 ஆண்டுகளில் வெப்பநிலை கிட்டத்தட்ட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. தொழில்துறை புரட்சிக்குப் பின்னர் வெப்பத்தைப் பிடிக்கும் பசுமை இல்ல வாயு (greenhouse gas (GHG)) உமிழ்வுகளின் அதிகரிப்பால் வெப்பநிலை அதிகரிப்பு முக்கியமாக ஏற்படுகிறது.
இருப்பினும், எந்தவொரு குறிப்பிட்ட தீவிர வானிலை நிகழ்வையும் காலநிலை மாற்றத்திற்குக் காரணம் கூறுவது மிகவும் கடினம். எல் நினோ (El Niño) மற்றும் லா நினா (La Niña) போன்ற இயற்கை காலநிலை மாறுபாட்டின் வடிவங்கள் போன்ற பல காரணிகள் இத்தகைய நிகழ்வுகளுக்கு பங்களிக்கின்றன.